Advertisement

சுற்றும் பார்வையை ஓட்டியவள் “எனக்கு தாகமா இருக்கு தண்ணி வேணும்?” என
அங்கே இருந்தது அவர்கள் இருவர் மட்டுமே, பின் சில மருந்துகள் அவர்களை வேடிக்கை பார்த்தது.  
ஜெயந்தியின் குரலில் அவளின் மீது பார்வையை வீசினான். உடையில் ரத்தம், அவளின் வெள்ளை சட்டையில் ரத்தம் துளிகள் அங்காங்கே. 
“ட்ரெஸ் கூட மாத்தணுமே, என்ன எடுத்துட்டு வரட்டும்?” என்றான் மெல்லிய குரலில். பார்வை அவளை பார்த்தாலும் அவளின் கண்களை சந்திக்கவில்லை. அது அவளுக்கு ஒரு ஆதங்கத்தை கொடுக்க,
“உங்களுக்கு வேலை இருந்தா போங்க, எனக்கு என்னை பார்த்துக்க முடியும்” என்றாள் ரோஷமாக.
வேகமாக அவளின் கண்களை சந்தித்தவன் “நான் வேலை இருக்குன்னு சொன்னேனா?” என்றான் அதையும் விட வேகமான குரலில். 
“என்னை பார்த்து கூட பேசலைன்னா நான் என்ன நினைப்பேன்? உங்களுக்கு இருக்க இஷ்டமில்லைன்னு தானே, அப்போ போங்க!” என்றாள் சொல்லும் போது திரும்ப அழுகை முட்டியது
மருது அவளின் அருகில் செல்ல அடியெடுத்து வைக்க, அதற்குள் வீல் சேர் வந்து விட்டது. இரு நர்ஸ்களும் வர, வெளிவந்த கண்ணீரை துடைத்துக் கொண்டாள் வேகமாய், மருதுவும் அமைதியாகினான்.
ஆனால் மனம் நிலை கொள்ளாமல் தவித்தது, தனக்கு நிஜமாக எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரியவில்லையோ என்று. எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு கோபம் வருகிறது என்று அவனுக்கு அவனே நிந்தித்து கொண்டான்.
பின்பு எக்ஸ்ரே எடுத்து அவர்கள் ரூம் வர அரைமணி நேரம் ஆகியது. மருது முழுவதும் ஜெயந்தியுடன் தான். ரிசப்ஷனில் இருந்த அவனுக்கு தெரிந்தவன் வந்து பணம் கட்டுவது, தண்ணீர் பாட்டில் வாங்கிக் கொடுப்பது என்று எல்லாம் செய்தான்.
அவர்கள் ரூம் வரவும், அவளின் பார்க்க பெண் மருத்துவர் வந்து விட, அவர் வயிற்றில் ஸ்கேன் எடுக்க வேண்டும் என்று கூறினார்.
இதோ மீண்டும் அதற்காய் சென்றனர். மருது வெளியில் அமர்ந்திருந்தான்.
ஸ்கேன் முடித்து மீண்டும் இதோ அந்த மருத்துவரை பார்க்க இருவரும் அமர்ந்திருந்தனர். ஜெயந்தியை அழைக்க அவள் மட்டும் எழுந்து உள்ளே செல்லப் போக, “நானும் வருவேன்” என்று சொல்லி மருதுவும் உடன் சென்றான்.
இவனை கேள்வியாக பார்க்கவும் “என்னோட ஹஸ்பன்ட்” என்று சொல்ல,
“உங்க கர்ப்பப்பை ஹெல்தியா தான் இருக்கு, மே பீ இப்போ அடிபட்டதால அந்த ஸ்ட்ரெஸ்ல கூட இருக்கலாம், போன முறையும் உங்களுக்கு அடி பட்டு இருந்தது சொன்னீங்க. கவனமா இருங்க. அஸ் ஸச் யூ ஆர் ஃபைன். டேக் கேர். நான் எந்த மருந்து மாத்திரையும் குடுக்கலை, ஏன்னா இன்னும் உங்களுக்கு குழந்தை பிறக்கலை. இப்போதைக்கு எதுவும் தேவையில்லை. நல்லா ரெஸ்ட் எடுங்க, அடுத்த முறையும் இப்படி இருந்தா வாங்க” என்று அவர் சொல்லிவிட, பின்பு ரூமிற்கு வந்து விட்டார்கள்.
“டிரஸ் மாத்திக்கோ” என்றவன் “என்ன கொண்டு வர சொல்லட்டும்” என்றான்.
“யார் கிட்ட சொல்வீங்க?” 
“நம்ம கடையில இருந்து” 
“என்கிட்டே நைட்டி கிடையாது, நைட்டி போட்டா பெட்டர். நீங்க அதை மட்டும் கடையில இருந்து கொண்டு வர சொல்லுங்க. வேற உள்ள போடறது எல்லாம் உங்க வீட்ல இருக்கும். போய் நீங்களே எடுத்துட்டு வாங்க. இல்லைன்னா அம்மா கிட்ட தான் சொல்லணும், அப்புறம் அம்மாக்கு விஷயம் தெரிய வரும், அதனால் வேண்டாம். அதையெல்லாம் எடுத்துட்டு வர வேற யார் கிட்ட சொல்ல வேண்டாம், நீங்க போங்க” என்றாள்.
“உங்க வீடு” என்ற வார்த்தை, அவளின் வாய்மொழியாய் வர அப்படி சொல்லாதே என்று அவனால் சொல்லக் கூட முடியவில்லை. போக மாட்டேன் என்று சொன்னவளை விரட்டி தான் விட்டானே. 
“இங்க யார் இருப்பா உன் கூட” என்று அவன் கேட்டுக் கொண்டு இருக்கும் போதே கதவு லேசாய் தட்டப்பட்டது.  
“யார்?” என்று எழுந்து சென்று பார்த்தான்
லக்ஷ்மி நின்றிருந்தாள், பின்னால் அந்த ஜெயராஜின் மனைவி, விஷால் லக்ஷ்மியை ஒரு பிடி பிடித்து இருந்தான். “எல்லாம் உன்னால் தான்” என்று குற்றமும் சொல்லியிருக்க, இதோ அவள் ஜெயராஜின் மனைவியை அழைத்துக் கொண்டு வந்து விட்டாள்.   
மருதுவின் முகம் அவர்களை பார்க்க விரும்பாத விருப்பமின்மையை காண்பித்தது.
கதவை சிறிதாய் திறந்து வைத்து நின்றிருக்க வெளியே யார் என்று தெரியவில்லை, ஒரு வேளை தன் வீட்டினர் யாரும் இருப்பார்களோ என்று என்று நினைத்தவள் “யாருங்க?” என்றாள்.
“நீங்க கிளம்புங்க” என்று சொல்ல நினைத்தவனுக்கு சொல்ல முடியவில்லை அந்த கர்ப்பிணிப் பெண்ணை பார்த்து. ஏகத்திற்கும் வயிறு பெரிதாய் இருக்க, நடந்த வந்த மூச்சு வாங்க நின்றிருந்தாள். அவளின் கையை பிடித்தபடி ஒரு பெண்பிள்ளை இரண்டு வயது இருக்கும். ஒரு பழைய கவுனை போட்டு அசங்களாய் நின்றிருந்தது. உறங்கிய பிள்ளையை எழுப்பி அழைத்து வந்திருக்க வேண்டும் என்று பார்த்த உடனே தெரிந்தது.
“அண்ணா” என்றாள் லக்ஷ்மி.
அந்த குரல் கேட்கவும் “யாருங்க?” என்றாள் மீண்டும் ஜெயந்தி.
கதவை முழுதாய் திறந்து வழிவிட உள்ளே வந்தனர்.
“அண்ணா நான் வேணும்னு எதுவும் பண்ணலை. தப்பா எதுவும் பேசலை.  எனக்கு இப்படி ஆகும்னு தெரியாது” என்று லக்ஷ்மி பதைப்போடு பேச,
அந்த ஜெயராஜின் மனைவி காலில் விழ வந்து விட்டாள்.
“மா என்ன பண்ற நீ” என்று அவன் நகர்ந்து நின்று கொண்டு, “லக்ஷ்மி அவளைப் பிடி” என்று லக்ஷ்மிக்கு ஒரு அதட்டல் வைக்க அவள் பிடித்து நிறுத்திக் கொண்டாள்.  
இவன் வேகமாய் சென்று ஜெயந்தியின் பக்கம் நின்று கொண்டான். ஜெயந்தியும் படுத்து இருந்தவள் எழுந்து அமர,
நெற்றியில் கட்டு, இன்னும் ரத்தம் படிந்த வெள்ளை சட்டை அப்படியே இருக்க, அவளை பார்ததும் பயந்து விட்ட அந்த பெண், கண்களில் நீரோடு “எங்களை மன்னிச்சிடுங்க” என்று அவளின் காலில் விழப் போக,  
“அச்சோ பிடிங்க இவங்களை” என்று ஜெயந்தியும் பதறி சொன்னாள்.
இதையெல்லாம் பார்த்திருந்த அந்த சிறு குழந்தை என்ன ஏதென்று தெரியாமல் அம்மா அழுவதை பார்த்து அம்மாவின் முந்தானையை பிடித்துக் கொண்டு அழ,
“குழந்தை அழறா பாருங்க, முதல்ல குழந்தையை தூக்குங்க” என்று ஜெயந்தி சொல்ல,
“அவர் செஞ்சது ரொம்ப தப்பு, அவரை மன்னிச்சிடுங்க” என்று அந்த பெண் குலுங்கி குலுங்கி அழுதாள்.
மருது திரும்பி ஜெயந்தியை தான் பார்த்தான், பார்வை சொன்னது “நீ பேசு” என்று, அவனின் கைகள் தானாய் அழுத குழந்தையை தூக்கிக் கொண்டது.   
“அழாதீங்க” என்றாள் ஜெயந்தி.
“அண்ணா இல்லைன்னா இன்னைக்கு எனக்கு வாழ்க்கையே இல்லை, என்னை புதைச்ச இடத்துல செடி முளைச்சிருக்கும்” என்று சொல்லிக் கொண்டே அழ,
அதற்குள் அந்த பெண்ணிற்கு வலி எடுக்க ஆரம்பித்தது போல, இடுப்பை பிடித்தது அவளின் ஒரு கை, மற்றொரு கை அவளின் வயிற்றை தாங்கியது.  
“என்ன பண்ணுது?” என்று லக்ஷ்மி பதறி அவளை பிடிக்க,
“அண்ணி வலிக்குது” என்று அந்த பெண் சொல்லும் போதே அவசரமாய் சேரை இழுத்துப் போட்டான் மருது.
அவள் அமரவும் “போய் நர்சை கூட்டிட்டு வா” என்று லக்ஷ்மியை அனுப்ப,
அவர் வரவும் “இது பிள்ளை வலி போல” எனச் சொல்ல ,
“அட்மிட் பண்ணிடுங்க” என்றான் மருது.
“அண்ணா நாங்க வேற ஆசுபத்திரி போறோம்னா, இங்க செலவு பார்க்க முடியாது” என்று லக்ஷ்மி சொல்ல,
“சொல்றதை மட்டும் செய்” என்று அதட்டலிட்டான் மருது. மருதுவிற்கு பதட்டம் வந்து ஒட்டிக் கொண்டது. என்னவோ ஒரு கர்ப்பிணி பெண் வலியில் துடிக்கும் போது மனது கலங்கி விட்டது. அவனின் அம்மா அவனை பெற்றுப் போட்டு தானே இறந்து போனார்.
மருதுவின் முகத்தை பார்த்த ஜெயந்தி, நர்சை தன் கைகளில் இருந்த ட்ரிப்சை எடுத்து விட சொல்லி அந்த பெண்ணின் உடன் அவளும் சென்றாள்.
ஆம்! காலில் பிராக்சர் எதுவுமில்லை என்று சொல்லப்பட்டிருக்க வலி இருந்த போதும் மெதுவாய் நடந்து வந்து விட்டாள்.
“நீ எதுக்கு வேண்டாம்” என்று மருது சொன்ன போதும் “நான் வருவேன்” என்று சொல்லி பிடிவாதமாய் வந்து விட்டாள்.
அவளிற்குமே பயம் அந்த பெண்ணிற்கு எதுவும் ஆகிவிடுமோ என்று.  
இதோ பிரசவ அறைக்குள் அந்த பெண், கூட லக்ஷ்மி ,
வெளியில் மருது அமர்ந்திருக்க அவனின் மடியில் அந்த குழந்தை உறங்கியிருந்தது. ஜெயந்தியின் கையில் ட்ரிப்ஸ் போடுவதற்காக ஊசி இருந்ததால் அவள் “நான் வைத்திருக்கவா” என்று கேட்ட போதும் மருது குழந்தையை கொடுக்கவில்லை.
அலைபேசியில் அழைத்து விஷாலிடம் சொல்லியிருந்தான் “டேய், அவனுக்கு சாப்பிட கொடுத்து பட்டி டிங்கரிங் பண்ணி கூட்டிட்டு வாடா, அந்த பொண்ணை உள்ள கூட்டிட்டு போயிருக்காங்க, எப்போவேணா குழந்தை பொறக்கும்” என்று.
கிட்ட தட்ட ஒரு மணி நேரம் அமர்ந்திருந்தனர், பிள்ளையும் பிறந்ததாக காணோம், யாரும் வந்ததாக காணோம், மருதுவின் பொறுமை பறக்க ஆரம்பித்தது.
“என்னடா பண்ற இன்னும்?” என்று விஷாலிற்கு அழைக்க,
“அண்ணா வந்துட்டண்ணா” என்று அவனின் முன் நிற்க, காலை தாங்கி தாங்கி ஜெயராஜ் நடந்து வந்து கொண்டிருந்தான். அவனோடு அவனின் அப்பா அம்மா எல்லாம் வந்து கொண்டிருந்தனர். 
ஜெயராஜ் பார்த்தது அவனின் குழந்தை மருதுவின் மடியில் உறங்கிக் கொண்டு இருக்க, பக்கத்தில் ஜெயந்தி. காலையில் அவன் பார்த்த அதே உடையில், ஆனால் காலையில் வெள்ளை சட்டை கருப்பு பேண்டில் அவ்வளவு கம்பீரமாய் நடந்து வந்தவளை தான் காலில் தட்டினான்.
இப்போதும் அதே வெள்ளை சட்டை தான், ஆனால் ஆங்காங்கே ரத்த துளிகள் தலையில் கட்டு, காரணம் அவன். ஆனாலும் அவனின் பிள்ளையை மடி தாங்கி, மனைவியை அனுமதித்து.
பக்கம் சென்றதும் “அண்ணா” என காலில் விழ,
“டேய், தூக்குடா இவனை” என்று பதறினான் மருது.
“ஏன்டா எல்லோரும் கால்ல விழுந்து விழுந்து என்னை பாவியாக்கறீங்க, என்ன பாவம் செஞ்சேனோ எப்பவும் ஒத்தையில தனியா நிக்கறேன். என் கண் முன்னால யாரும் வரக் கூடாது. ஒழுங்கா குழந்தை பொறந்த பிறகு அந்த பிள்ளையை வீட்டுக்கு கூட்டிட்டு போற வழியை பாருங்க” என்று சிடுசிடுத்தவன்,  
“பிடிங்க குழந்தையை” என்று ஜெயராஜின் அம்மாவிடம் குடுத்தவன்,
“செலவு என்னோடதுடா, என்னவோ பார்த்து கட்டிடு” என்று விஷாலிடம் சொல்லி ஜெயந்தியை “வா” என்பது போல அழைத்துக் கொண்டு நடக்க எத்தனிக்க,
ஜெயந்தியின் முகத்தில் ஜெயராஜை பார்த்த கோபம் இருந்தது.
அதனை உணர்ந்தவன் அவளை திசை திருப்பும் பொருட்டு “வா” என்று அவளை அழைத்து “வீல் சேர் கொண்டு வர சொல்லவா?” என்றான்.
“வேண்டாம்” என்று மெதுவாய் அவள் நடக்க,
“அண்ணி, என்னை மன்னிச்சிடுங்க அண்ணி” என்று அப்போதும் ஜெயராஜ் வந்து நிற்க,
“நீ என்னை தள்ளி விட்டது கூட பரவாயில்லை, மன்னிசிடுவேன். ஆனா எனக்கு உன் மேல கண்ணுன்னு சொன்ன பார்த்தியா? உன் முகத்துல காரி துப்பணும் போல இருக்கு” என்று அப்படி ஒரு ஆத்திரத்தோடு பேசினாள்.
சற்று தள்ளி வந்து விட்டனர். அதுவும் மெதுவாய் தான் பேசினாள். அதனால் மற்றவர்களுக்கு கேட்கவில்லை, மருதுவிற்கு மட்டும் கேட்டது.
“ஷ், என்ன ஜெயந்தி இது இப்படி பேசற? இப்படி பேசறது உனக்கு மரியாதை கிடையாது” என்று ஜெயந்தியை அதட்டியவன், “டேய், முன்னாடி நிக்காத போடா, திரும்ப அடிச்சிடப் போறேன்” என்று அவனை மிரட்டி விரட்டினான்.
அவன் சென்றதும் “நான் பக்கா லோக்கல் ஜெயந்தி, ஆனா அப்படி ஒரு வார்த்தை உன் வாயில இருந்து வர்றதை கூட நான் விரும்ப மாட்டேன். இனி நீ இப்படி பேசக் கூடாது” என்றான் கறாராய்.
மருதுவின் வார்த்தையை காதில் வாங்காமல் “ஆளும் அவனும் மூஞ்சியும்” என்று திட்டிக் கொண்டே வந்தாள்.
அந்த பெண்ணுக்கு உதவியது, அந்த குழந்தையை எந்த முக சுளிப்பும் இன்றி தூக்கி வைத்துக் கொண்டது, மருதுவை இன்னும் இன்னும் பிடித்தது.  
அப்போதும் அந்த ஜெயராஜை வசை பாடிக் கொண்டே வந்தாள் “தோடா, வீட்டுக்கு ஒரு ரௌடி போதும், ஒழுங்கா ரெஸ்ட் எடு” என்று அவளை படுக்க சொல்ல,
“எல்லாம் உங்களால” என அவனையும் பேசினாள்.
“ஆமா என்னால தான்” என்றவன் “இனி இப்படி நடக்காது” என்றான் கூடவே.
“இனி இப்படி நடக்காது வேற, ஆனா நடந்த எதையும் மாத்த முடியாது இல்லையா?” என்று சொன்னவள் படுத்து கண் மூடிக் கொண்டாள்.
பின் உடனே கண் திறந்து “யார்னே தெரியாத போது எனக்கு ஹெல்ப் பண்ணுனீங்க. இப்போ அந்த பொண்ணோட புருஷன் என்னை தள்ளி விட்டான், பேசினான், அப்போவும் அவங்களுக்கு ஹெல்ப் பண்றீங்க”
“ஆனா என்னை வீட்டை விட்டு துரத்துற அளவுக்கு, இன்னொரு வார்த்தையில சொல்லணும்னா அடிச்சு துரத்துற அளவுக்கு என்ன பண்ணினேன்?” என்று சொல்லி தேம்பி தேம்பி அழுதாள்.
அவளருகில் வந்து அவளை தூக்கி அணைத்துக் கொள்ள அவனை பிடித்துக் கொண்டு அழுது கொண்டே இருந்தாள். “அதெல்லாம் என்னோட கோபத்துல பண்ணினது” என்றான்.   
ஜெயந்தியின் கேள்விக்கு மருதுவிடம் பதில் இருக்கிறது, ஆனால் சொல்லவில்லை, மறக்க மன்னிக்க எல்லாம் முடியும், ஏனென்றால் அவர்கள் அடுத்தவர்கள்!
“ஆனால் மறந்து மன்னித்து ஒரு வாழ்க்கை துணை அவனுக்கு வேண்டாம், எல்லாம் எல்லாம் அவனாய் தானே வேண்டும்!”
இது உரிமையோடு கூடிய உணர்வுகளின் போராட்டம்!!      

Advertisement