Advertisement

அத்தியாயம் இருபத்தி ஐந்து :
விமலன் வேகமாய் சென்று விஷாலை தூக்கி விட்டான். ஜெயந்தி பயந்து “அடிக்க வேண்டாம்” என்றாள்.
எழுந்து நின்ற விஷால் “என்னண்ணா?” என்றான் மீண்டும் ஒரு பதட்டத்தோடு. ஏதோ தப்பாய் நடந்து விட்டது என்று உள்ளுணர்வு சொல்லியது.  
விஷாலை முறைத்து பார்த்து நின்றான் மருது. கூடவே பார்வை குற்றம் சாட்டியது. ஒரு வார்த்தை கூட பேசவில்லை பார்த்து நின்றான்.
“மேம்க்கு என்னாச்சு?” என்றான் விமலனிடம்.
கார் கம்பனி பெயர் சொல்லிய விமலன், “அங்க இருந்த ஒருத்தன் இவளை தள்ளி விட்டுடான்” என்று சொல்ல,  
“எவன் அவன்? எங்க மச்சான் கூட அங்க தான் இருக்கான். யார்ன்னு இப்போ ஒரு கை பார்க்கலாம்” என்று விஷால் கோபப்பட்டான்.
“அவன் தாண்டா செஞ்சது” என்றான் மருது.
“அவனா சே சே இருக்காது”
“அப்போ நான் பொய் சொல்றேனா?” என்றாள் கலங்கிய கண்களோடு ஜெயந்தி.
“இல்லை மேம், நான் அப்படி சொல்லலை” என்று பதறினான் விஷால்.
“நம்ம வேன் டிரைவர்க்கு ஃபோனை போட்டு, அந்த நாய அவன் கம்பனில வீசி எறிஞ்சிட்டு வந்திருக்கேன். அவனை அள்ளி நம்ம குடோன்ல போட சொல்லு” என்றான் மருது விஷாலை பார்த்து.
விஷால் என்ன ஏதென்று கேட்காமல் அவன் சொன்னதை அப்படியே டிரைவரிடம் சொன்னான்.
பின் மருது விஷாலிடம் “நான் இவளை போன்னு சொன்னது உன்னை தவிர வெளி ஆள் வேற யாருக்கும் தெரியாது. இப்போ உன் மச்சான் அதை சொல்லி தான் இவளை பேசியிருக்கான். அப்போ விஷயம் உன் மூலமா தான் போயிருக்கு”
“என் வாழ்க்கையை விமர்சிக்கற அளவுக்கு நீ பெரிய ஆளா, ஒருத்தன் உன்னை கழட்டி விட்டுட்டான்னு அடுத்தவனை பிடிக்கறையான்னு கேட்டிருக்கான். இந்த வார்த்தை அவளை பார்த்து கேட்கறான்னா எங்க விஷயம் வெளிய போயிருக்கு, அதையும் விட இதை ஜெயந்தியை பார்த்து கேட்கற தைரியத்தை அவனுக்கு யார்டா குடுத்தா?” என மருது பேசப் பேச
பயந்து பதறி விட்டவன், “அய்யோ அண்ணா, எனக்கு ஒன்னும் தெரியாது. நான் எதுவும் பண்ணலை?” என்று அவனின் காலில் தடால் என்று விழுந்து விட்டான்.
“நம்புனேண்டா உன்னை, வேற ஆளா நான் பார்க்கலையே” என்று சொல்லிய மருது நகர்ந்து நின்று விட்டான்.
“அண்ணா சத்தியமா நான் யார் கிட்டயும் பேசலை” என்று சொல்லிக் கொண்டே யோசித்தவன், ஞாபகம் வந்தவனாக “அண்ணியை நீங்க ஹாஸ்பிடல்ல இருந்து போக சொன்ன அன்னைக்கு என் பெண்டாட்டி கிட்ட சொன்னேன். அதுவும் கவலையா தான் சொன்னேன் அண்ணனுக்கு அண்ணியோட அருமை தெரியலை, போன்னு சொல்லிட்டாங்க, அண்ணன் கிட்ட யார் பேச முடியும்? ஏன் இப்படி செய்யறாங்கன்னு தெரியலைன்னு உங்க மேல உள்ள அக்கறையில மட்டும் தான் சொன்னேன். வேற எதுவும் பேசலை”
ஜெயந்தி மருதுவை முறைத்து பார்த்து இருந்தாள்.  
“அப்போ நீதான் விஷயத்தை வெளில விட்டிருக்க இல்லையா? ஏன் எனக்கு என்னை பார்க்க தெரியாதா இல்லை என் பொண்டாட்டியை பார்க்க தெரியாதா? என் வாழ்க்கையை பத்தி நீ கவலைப்பட வேண்டிய அவசியமென்ன?” என்று மருது கோபமாய் பேசினான்.
“அண்ணா, சத்தியமா எனக்கு இப்படி ஆகும்னு தெரியாதுன்னா லக்ஷ்மி கூட வேணும்னு எல்லாம் அவன் கிட்ட சொல்லியிருக்க மாட்டா. ஏதாவது பேசி விஷயத்தை வாங்கியிருப்பான். திருந்திட்டான்னு தானே அண்ணா நினைச்சோம். இப்படி பண்ணுவான்னு நினைச்சிருக்க மாட்டா?” என்று மீண்டும் காலை பிடிக்க போக,
“டேய், தூரப் போடா” என்றவன் கோபத்தை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல், “ஒரு ரெண்டு நிமிஷம் வர்றேன்” என்று பொதுவாய் விமலனையும் ஜெயந்தியையும் பார்த்து சொல்லிவிட்டு வெளியில் சென்று விட்டான்.
எப்போதும் அவன் செய்வது தானே!
இப்போது ஜெயந்தியிடம் வந்து நின்ற விஷால் “சாரி” என்றான் கையெடுத்து கும்பிட்டு,
“சாரி கேட்டு என்ன ஆகப் போகுது. எங்க விஷயத்தை நீங்க வெளில சொல்லியிருக்கக் கூடாது இல்லையா? என் அண்ணாவை கூட வேண்டாம் சொல்லிட்டு நீங்க ஹெல்ப் பண்ணப்போ நான் அக்சப்ட் பண்ணினேன் தானே. ஒரு நம்பிக்கை தானே நீங்க எங்க பிரச்னையை வெளில சொல்ல மாட்டீங்கன்னு” என்று சொல்லிய போது அவளின் கண்களில் கண்ணீர் வந்தது.
“நான் கல்யாணம் பண்ணாம, மருதாச்சலமூர்த்தின்ற ஒருத்தர் என் வாழ்க்கைல இல்லாத போது கூட நான் இந்த மாதிரி வார்த்தைகளை கேட்டதில்லை. இப்படி பட்ட சூழல்களை சந்திச்சதில்லை. சொல்லப் போனா இதுக்கு காரணம் உங்க சொந்தக்காரன் கிடையாது, என் வீட்டுக்காரர் தான்” என்று வார்த்தைகள் தொண்டையை அடைக்க நிறுத்தினாள்.           
விமலன் எதுவுமே பேசவில்லை. விஷாலினால் பதில் பேச இயலவில்லை.
மருதுவின் கடல் கடந்த வாணிபம் என்ற ஒன்று மட்டுமே விஷாலிற்கு தெரியாது. மற்ற எல்லாம் அத்துபடி. அவனின் ப்ளாக் அண்ட் ஒயிட் மணி. அவனின் சொத்துக்கள், என்று பண வரவு முழுவதும் அவனுக்கு தான் தெரியும்.  அவ்வளவு நம்பிக்கை விஷாலின் மீது மருதுவிற்கு , ஏன் ஜெயந்திக்கு கூட அவள் இருக்கும் வீடு மருதுவினது என்றே தெரியாதே.
விஷால் மீது மருதுவிற்கு அளவு கடந்த நம்பிக்கை.  
“நான் வேணும்னு எதுவும் பண்ணலை. அண்ணன் இப்படி பண்ணறாரேன்னு ஒரு ஆதங்கம். லக்ஷ்மி கிட்ட பேசிட்டேன். அது எப்படி இப்படி திரிஞ்சதுன்னு தெரியலை” என்றான் மிகுந்த குற்றவுணற்சியோடு.
“என்ன பிரச்சனை? அவன் ஏன் என்னை இப்படி பேசினான்?”
“அவன் லக்ஷ்மியோட அண்ணன். ஒரு பொண்ணை காதலிச்சு புள்ளையும் குடுத்துட்டான். பின்ன இங்க வீட்ல வசதியா ஒரு இடம் பார்க்கவும் அவளை ஏமாத்த பார்த்தான். பிரச்சனை அண்ணன் கிட்ட போச்சு. அண்ணன் தான் மிரட்டி அவனுக்கு கல்யாணம் பண்ணி வெச்சார், வசதியான இடம் இவர்னால தட்டி போய்டுச்சுன்னு ஒரு வன்மம். அந்த புள்ள பொறந்து இப்ப ரெண்டாவது முறை கூட இவன் பெண்டாட்டி கர்ப்பமா இருக்கா, இப்ப எதுவும் அவன் காட்டிக்கலை. பெண்டாட்டி புள்ளைன்னு சந்தோஷமா தான் இருக்கான், திருந்திட்டான்னு நினைச்சோம்”
“அவன் பொண்டாட்டிக்கு இந்த வாரத்துக்குள்ள புள்ள பொறந்துடும்ன்னே சொல்லியிருக்காங்க”
“என்னை மன்னிச்சிடுங்க” என்றான் மீண்டும்.
ஜெயந்தி எதுவும் பேசவில்லை,
அப்போது சிஸ்டர் இருவர் ட்ரிப்ஸ் போடுவதற்காக வந்தனர்.
“அண்ணா நீங்க இவரோட வெளில இருங்க” என்று சொல்ல,
விமலன் வெளியே வர அப்போது தான் மருது வந்தான்.
“என்ன?” என்பது போல பார்க்க, “நர்ஸ் ட்ரிப்ஸ் போட வந்தாங்க, எங்களை வெளில நிக்க சொன்னாங்க” என்றான்.
உள்ளே நர்சிடம் தனக்கு இருக்கும் உடல் உபாதைகளை சொல்லி “ரொம்பவுமே வயிறு வலிக்குது” பெண்களை பார்க்கும் மருத்துவரை பார்க்க வேண்டும் என்று சொன்னாள்.
அவரும் சரி என்று ட்ரிப்சை போட்டு விட்டு வெளியே வந்தார்கள்,   “உள்ள போகலாம்” என்று சொல்லிச் செல்ல,
விஷாலிடமும் விமலனிடமும் “நீங்க கிளம்புங்க, நான் பார்த்துக்கறேன்” என்று உள்ளே போகப் போக,
விஷால் அப்படியே நிற்க, விமலன் “நான் சொல்லிட்டு போறேன்” என்றான்.
“சரி போ” என்று தலையசைத்து அவனும் உள்ளே செல்ல,
“ண்ணா நான் கடைக்கு தான் போவேன்” என்று மருதுவிடம் விஷால் சொன்னான்.
மருது “போ” என்றும் சொல்லவில்லை, “வேண்டாம்” என்றும் சொல்லவில்லை.
விமலன் சென்று “நான் கடைக்கு போறேன்” என்று ஜெயந்தியிடம் சொல்ல, அவள் விழி உயர்ந்தும் போதே “மாமா உன்னோட இருப்பார்” என்றான் கூடவே.
“சரி” என்பது போல சோர்வாய் கண்களை மூடிக் கொண்டவள், அவசரமாய் கண்களை திறந்து “அம்மா, அப்பா, கமலன் யார் கிட்டயும் சொல்லாத, ஒரு ரெண்டு நாள் பார்க்க வராத மாதிரி பார்த்துக்கோ. நான் வீட்டுக்கு போன பிறகு சும்மா கீழ விழுந்துட்டேன்னு சொல்லிக்கலாம்”
“மனசு கஷ்டப்படுவாங்க சொல்லாதண்ணா” என்றாள் மீண்டும்
“அப்போ ராத்திரி யார் உன்னோட இருப்பா?” என்ற கேள்வி தொண்டை வரை வந்த போதும், அதனை கேட்கும் தைரியமற்றவனாக மருதுவிற்கு தெரியாமல் “ஃபோன் பண்ணு” என்ற சைகை காண்பித்து வெளியே சென்றான்.
விமலன் சென்ற பிறகு ஜெயந்தி கண்மூடிக் கொள்ள, மருது ஓய்ந்து அமர்ந்தான். ஜெயந்தி தாக்கப்பட்டது அவனால் தாள இயலவில்லை. அவனுக்கு வெளிப்படுத்த தெரியாது. ஆனால் அவனின் மனம் படும் பாடு அவனுக்கு தான் தெரியும்.      
ஜெயந்தி யாரென்று தெரியாத போதே, அவனுக்கு மனைவியாகாத போதே, அவளை எதுவும் அணுக விடாமல் கண்ணுக்குள் வைத்து தாங்க யத்தனித்தவன் மருது. இன்று என்ன நடந்து விட்டது.     
அமர்ந்திருந்தவன் படுத்திருந்த ஜெயந்தியை தான் பார்த்திருந்தான். “இதோ இவளை பார்க்க தினமும் காலையில் தவம் கிடப்பேனே, நானே இவளை சித்திரவதை செய்து விட்டேனோ?” என தோன்ற பார்த்திருந்தான்.
குடும்பம் எனும் அமைப்பில் வளராததால் எனக்கு யாரையும் பொருத்து போக முடியவில்லையோ எனத் தோன்றியது. 
இருவருமே விழித்து தான் இருந்தனர். ஆனால் பேசிக் கொள்ளவில்லை.  
சிறிது நேரத்தில் வந்த வேறொரு நர்ஸ் “எக்ஸ்ரேக்கு எழுதிக் கொடுத்திருக்கார் டாக்டர், இப்போ போகலாமா?” என்று அவர் கேட்க,
“எங்கே எங்கே எழுதிக் கொடுத்திருக்கார்” என்றாள்.
“தலையில, இடுப்புல, கால்ல” என்றவரிடம்,  
“தலையில கால்லா வேணா எடுக்கலாம். இடுப்புல வேண்டாம்” என்றாள்.
“ஏன் வேண்டாம்?” என்றார் அவர்.
“எனக்கு பீரியட்ஸ் அதனால இப்போ வேண்டாம்” என்று அவள் சொல்லிவிட,
உள்ளுக்குள் நொறுங்கி தான் போனான் மருது.
பின் அந்த நர்ஸ் ட்ரிப்ஸ் எடுத்து விட்டு அவளை எக்ஸ்ரே விற்கு அழைக்க, மெதுவாக இறங்கி நிற்க முயன்றாள்.
“இடுப்புல கால்ல எக்ஸ்ரே எடுக்க சொல்லியிருக்காங்க, நடத்தி கூட்டிட்டு போவீங்களா?” என்றான் அந்த சிஸ்டரை பார்த்து கடுமையான குரலில்.
அதில் பயந்து போன அவர் “வீல் சேர் கொண்டு வர சொல்லியிருக்கேன்” என்றார் அவசரமாக.
“வரலைல்ல, அதுக்குள்ளே நிற்க வெப்பீங்களா?” என்றான்.
அவர் வேகமாய் வெளியே போக, குற்றவுணர்சியில் ஜெயந்தியை பார்க்க இயலாமல் வேறு எங்கோ பார்த்தான் மருது. ஆனால் ஜெயந்தி அவனையே தான் பார்த்தாள். “ஏன் தங்களின் வாழ்க்கை நன்றாக இல்லாமல் போனது?” என்ற பார்வையோடு. 

Advertisement