Advertisement

அத்தியாயம் இருபத்தி மூன்று :
இதோ அதோ என்று நாட்கள் பறக்க, தன்னுடைய உடல் நிலையை காரணம் காண்பித்து ஒரு மாத விடுமுறையை மூன்று மாதமாக விண்ணப்பித்து இருந்தாள் ஜெயந்தி.  
ஜெர்மனி கம்பனியும் ஒத்துக்கொண்டு, குறிப்பிட்ட காலக் கெடுவிற்குள் சேரவில்லை என்றால் பணி நீக்கம் செய்யப்படுவாள் என்று அனுப்பி இருந்தது.
அவளுக்கு வேண்டியதும் அதுதானே!
இதோ அவள் இந்தியா வந்து ஒரு மாதம் ஆகிற்று. மருதுவின் வீட்டை விட்டு வந்து இருபது நாட்கள். எல்லாம் அதன் போக்கில் செல்ல மருதுவை எப்படி அணுகுவது என்று தெரியவில்லை, அவனும் அழைக்கவில்லை.
அதனால் இப்படி ஒரு மெயில் அனுப்பி அனுமதி வாங்கி இருந்தாள்.
இரண்டு மாதம் பார்ப்போம் இல்லை கிளம்பி விடுவோம் இல்லை இங்கு சரியாகி விட்டால் நான் குறிப்பிட்ட காலக் கெடுவிற்குள் சேராவிட்டால் ஜெர்மனி கம்பனியே வேண்டாம் என்று சொல்லி விடும் தானே! இப்படி ஒரு யோசனை அவளுக்குள் ஓடியது.
ஆனால் இரண்டு மாதம் என்ன செய்வது என்றும் தெரியவில்லை.
முன்பானால் வேம்புலியம்மன் கோவிலுக்கு மருது வரும் போது பார்க்க சந்தர்ப்பம் இருக்கும், இப்போது அதுவும் இல்லை.
இங்கே அபார்ட்மென்ட்சில் தனியான வாழ்க்கை, அம்மா அப்பா விமலன் கமலன் என நால்வரில் யாராவது தினம் ஒருவர் சிறிது நேரம் வந்து செல்வர்.
கலைச்செல்வி நொச்ச ஆரம்பித்தார் “நாங்க போய் மருது தம்பி கிட்ட பேசவா?” என்று.
விமலனை சந்தர்ப்பம் கிடைக்கும் போது “நீயாவது பேசு” என்றார்.
எங்கே விமலன் மருதுவின் கண்ணில் படாமல் தான் தன் வேலைகளை பார்க்க வேண்டும். அவனுக்கு மருதுவை பார்க்க அனுமதியில்லை. மீண்டும் சேர்ந்த போதே அவனுக்கு சொல்லப்பட்டு விட்டது.
ஆம்! ஜெயந்தியை சேர்ந்த எதுவும் அவனின் கண்ணில் கூட பட்டுவிடக் கூடாது என்பதில் கவனமாய் இருந்தான்.
கண்ணில் படாதது கருத்தில் நில்லாது என்ற நினைப்பு அல்ல.
எப்படியும் அவனால் ஜெயந்தியை நினைக்காமல் இருக்க முடியாது என்று மருதுவிற்கே தெரியும்.
ஆனால் அவள் கண்ணில் பட்டால் தான் மனது உருகுகிறதே. அதை தடுக்கவே இது!
இன்னும் எத்தனை நாட்களுக்கு தனியாய் இருப்பாய். மனைவியை அழைத்துக் கொள் என்று அவனுக்கு சொல்லக் கூடியவர் யார்?
இன்னும் அவனை தெரிந்தவர் நிறைய பேருக்கு ஜெயந்தி இந்தியா வந்து விட்டதே தெரியாது! அவள் இன்னும் ஜெர்மனியில் தான் இருக்கிறாள் என்று நினைத்திருந்தனர்.
எதுவாகினும் அவனிடம் சகஜமாய் பேசுபவரோ, புத்தி சொல்பவரோ யார்?
ஜெயந்திக்கு இப்படி தனியாய் இருந்தால் பைத்தியமே பிடித்துக் கொள்ளும் என்று தோன்ற, அவளுடன் படித்த சிநேகிதன் ஒருவன் சென்னையில் புகழ் பெற்ற கார் நிறுவனம் ஒன்றில் வேலையில் இருந்தான்.
“ஒரு, ஒரு மாசம் ஜஸ்ட் ட்ரைனீயா வர்றேன். குடுக்கறதை குடுங்க, இல்லை குடுக்கக் கூட வேண்டாம், ரெண்டு மாசத்துல ஜெர்மனி போயிடுவேன்” என்று கேட்டாள்.  
அவளுடைய ப்ரோபைல் அவ்வளவு நன்றாக இருக்க, அந்த கம்பனியில் சர்விஸ் செக்க்ஷனில் ஸ்பெஷல் மேற்பார்வையாளாராய் சேர்ந்தாள்.
சொல்லப் போனால் தேவையே கிடையாது, வேண்டுமென்றால் உடனே கூட ஜெர்மனி கிளம்பிவிடலாம். ஆனால் மனதில்லை, உண்மையில் மருதுவை விட்டு செல்ல மனதில்லை. “என்ன தப்புன்னு சொல்லுங்க, திருத்திக்கறேன்” என்று கெஞ்சிக் கூட கேட்டாயிற்று, அவன் மனம் இளகவில்லை எனும் போது அதற்கு மேல் என்ன செய்வது எனப் புரியவில்லை.
ஏதாவது நடந்து தானும் அவனும் சேர்ந்து விட மாட்டோமா என்று அவளுக்கு அவளே சந்தர்ப்பம் கொடுக்க நினைத்து இந்த கால அவகாசத்தை நீட்டித்தாள்.    
இந்தியன் வொர்கிங் சிஸ்டம் வேறு, ஜெர்மனி வொர்கிங் சிஸ்டம் வேறு அல்லவா?
ஜெயந்தி பல புதிய விஷயங்களை புகுத்த சொல்ல, கச்சிதமாய் வேலை செய்பவர்களுக்கு ஒன்றுமில்லை, ஓபி அடிப்பவர்களுக்கு கோபமாய் வந்தது.
அதையும் விட ஒரு பெண் வந்து சொல்வதா என்பது அங்கிருந்த சிலரின் எண்ணமாயும் இருக்க, அது ஜெயந்திக்கு நன்கு புரிந்தாலும் கண்டு கொள்ள மாட்டாள்.
அங்கு வேலை பார்க்கும் சர்விஸ் எஞ்சினியர் ஒருவன், பெயர் ஜெயராஜ், இவளை பார்த்த நாளில் இருந்தே அவளின் மீது வன்மம் தான்.
ஆம்! மருதுவின் மனைவி அல்லவா அவள்?
வந்த நாளே கண்டு கொண்டான். பின்னே திருமணத்தின் போது பிளக்ஸ் அது இது என்று தூள் பரப்பி இருக்க, அவளின் முகம் அந்த ஏரியாவில் நன்கு தெரியும். அவளை தான் தெரியாது. இப்போது அவளின் தோற்றம் வெகுவாய் மாறி இருந்த போதும் அவன் கண்டு கொண்டான்.
இவள் எப்படி இங்கே வெளிநாட்டில் இருக்கிறாள் என்றல்லவா சொன்னார்கள் என்று தோன்ற, அன்றே சில வேலைகளை செய்ய, இருவருக்குள் பிரச்சனை என்பதும் அவனுக்கு தெரிய வந்தது. இப்போது எப்படியோ மருதாச்சலமூர்த்தியின் மனைவி என்பதே அவனுக்கு வன்மம் வைக்க போதுமானதாய் இருந்தது.
ஆம்! மருதாச்சலமூர்த்தியின் பஞ்சாயத்து அவன் வாழ்க்கையில் விளையாடி இருந்தது. அந்த பகை இப்போது ஜெயந்தியை பார்க்கவும் கொழுந்து விட்டு எரிந்தது. மருதாச்சலமூர்த்தியை அவனால் நெருங்க கூட முடியாது, ஆனால் இவளை நெருங்கலாமே!   
ஜெயந்தி சேர்ந்து நான்கு நாட்களான நிலையில், அன்று ஒரு கஸ்டமர் சர்விஸ் திருப்தியில்லை என்று வந்து நின்றார். பில் அதிகம் போடப்பட்டு இருக்க, அதற்கான வேலை சரிவர செய்யப்படவில்லை.
ஜெயராஜ் அப்படி தான் வேலையை சரி வர செய்யாமல் பில்லை மட்டும் ஏற்றிவிடுவான்.
கஸ்டமர் வந்து கேட்க, “என்ன தெரியும் உங்களுக்கு காரை பத்தி? கார் ஒட்டுனா எல்லாம் தெரியுமா?” என்று அலட்சியமாய் அவரிடம் பேசிக் கொண்டிருந்தான்.
அங்கே ஜெயந்தி வந்தவள் “அவருக்கு தெரியாது சரி, எனக்கு தெரியும் தானே! என்கிட்டே சொல்லுங்க!” என்று அதிகாரமாய் சொன்னாள்.
“உன் கிட்ட எல்லாம் சொல்ல முடியாது” என்று அவன் பேச,
“வா போன்னு எல்லாம் பேசாதீங்க, மரியாதையா பேசுங்க” என்று ஜெயந்தி சொல்ல,
“இன்னா மரியாதை உனக்கு, எத்தனை வருஷ சர்வீஸ் தெரியுமா எனக்கு இங்க? நாலு நாள் முன்ன வேலைக்கு வந்துட்டு என்னை கேள்வி கேட்பியா நீ?” என்று சத்தமாய் பேசினான்.
ஆங்காங்கே இருந்தவர்கள் வேடிக்கை பார்த்தனர், ஆனால் யாரும் உதவிக்கு வரவில்லை. அவளின் ஏரியா ஆட்கள் சில பேர் இருந்தனர். ஆனால் அவள் மருதுவின் மனைவி என்று தெரியவில்லை.
இப்படி கருப்பு பேன்ட் வெள்ளை சட்டையில் , முடியை தூக்கி உயரப் போட்ட குதிரை வால் ஸ்டைல் , சின்ன பொட்டு, காதில் இருக்கும் சிறு தோடு தவிர வேறு எந்த அணிகலனும் தெரியவில்லை, வேறு எந்த ஒப்பனையும் இல்லாத போதும், ஒரு மேல்தட்டு தோற்ற பொலிவுடன், நிறமும் மெருகேறி வடக்கத்திய பெண்ணோ எனும்படி இருக்க, இரண்டு வருடத்திற்கு முன்பு ப்ளக்சில் பார்த்திருந்தாலும் இப்போது சத்தியமாய் தெரியாது.   
மருதுவின் மனைவி என்று தெரிந்திருந்தால் ஜெயராஜை அவர்களே துவைத்து எடுத்திருப்பர்.  
உடனே ஜெயந்தி சர்விஸ் மேனேஜரை அழைத்து சொல்ல,
அவனோ ஏற்கனவே பயத்தில் இருந்தான். “இவள் ஃபாரினில் வேலை செய்து வந்திருக்கிறாள், என்னை அனுப்பி இவளை வைத்துக் கொள்வார்களோ” என்று.
“சொல்லுங்க” என்று வந்து நின்றவன்,
அவள் சொன்னதும், “ஏதாவது கம்ப்ளைன்ட் இருந்தா என்கிட்டே சொல்லுங்க, நான் கேட்கறேன். நீங்க ஏன் கேள்வி கேட்கறீங்க?” என்று அவள் கேள்வி கேட்டது தப்பு என்பது போல பேசினான்.
அந்த கஷ்டமரிடம் “நீங்க வாங்க சர், அவங்க புதுசு, அவங்களுக்கு ஒன்னும் தெரியலை” என்று ஜெயந்தியை குறை சொல்லி “நான் பில் என்னன்னு பார்த்து குறைக்கிறேன்” என்று கஸ்டமரை அழைத்துக் கொண்டு சென்றான். 
“என்னடா நடக்குது இங்கே?” என்று நினைத்த ஜெயந்தி அவளின் நண்பனுக்கு அழைத்துச் சொல்ல, அவனோ சேல்ஸ் செக்ஷனில் இருந்தவன், அங்கிருந்த சீஃப் எக்ஸ்க்சிகியுடிவ் மேனேஜரிடம் சொல்லிவிட,
அவர் வந்து உடனே சரி பார்த்து ஜெயராஜையும் சர்விஸ் மேனேஜருக்கும் வார்னிங் கொடுத்தார்.
அவர் அந்த புறம் சென்றதுமே ஜெயராஜ் அவளிடம் “என்ன ஒருத்தன் உன்னை கழட்டி விட்டுட்டான்னு அடுத்தவனை பிடிக்கறியா?” என்றான் எல்லோருக்கும் கேட்கும் விதமாக.
அதுவரையிலும் மரியாதை கைவிடாமல் பேசிக் கொண்டிருந்தவள், “என்ன பேசற நீ?” என்று கை நீட்டி மிரட்ட,   
“என்ன உண்மையை தான் பேசினேன்?” என்றான் அலட்சியமாய்.
“என்னோட பெர்சனல் எல்லாம் பேசாதே” என்று ஜெயந்தி அதீத டென்ஷன் ஆகிவிட்டாள். இப்படி எல்லாம் யாரும் அவளை பேசக் கூடும் என்று கனவிலும் நினைக்கவில்லை.
உடனே எண்ணங்கள் அலையாய் எழ “அன்னைக்கு கூட ஏரியால ஒருத்தன் இப்படி தானே பேசினான். அண்ணன் அடிச்சா இவங்க என்ன பண்ணினாங்களோன்னு” என்று நினைக்கும் போதே கண்களில் நீர் நிறைய இருந்தது.
முயன்று சமன் செய்தவள் “ஒழுங்கா பேசு, யார் என்னை கழட்டி விட்டாலும், யாரை நான் பிடிச்சாலும், அதை நீ பேச வேண்டிய அவசியமில்லை. உன் வேலை என்னவோ அதை மட்டும் பாரு” என்று அவனை மிரட்டி பேசி அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.
“தோடா, உண்மையை சொன்னா ஓவரா எகிறுது இது” என்று பக்கம் இருந்தவனிடம் சொன்னான்.
பக்கம் நின்ற சிலர் சிரிக்க, ஜெயந்திக்கு மிகவும் அவமானமாய் போக என்ன செய்ய என்றே தெரியவில்லை.
அமைதியாய் அவளின் இடம் சென்று அமர்ந்து கொண்டாள். அழுகை பொங்கிய போதும் ஒருவாறு சமாளித்து கொண்டாள். வந்து நான்கு நாட்களே ஆகியிருக்க இன்னும் யாரும் அவளிடம் அதிகம் பழகவில்லை.
அங்கே சுத்தம் செய்யும் வேலை பார்க்கும் பெண்மணி ஒருவர் தான் “விடுங்க மேடம், டீ கொண்டாரேன் குடிங்க. அதுங்கள்லாம் பெரிய கஸ்மாலங்க” என்று கெட்ட வார்த்தையில் திட்டி அவளுக்கு டீ கொண்டு வந்தாள்.
அதை குடித்தும் சற்று தெம்பாய் உணர்ந்தவள் “தேங்க்ஸ் அக்கா” என்றாள்.
உடனே அந்த பெண்மணி “உனக்கு கண்ணாலம் ஆச்சா” என
“ம்ம்” என்று ஜெயந்தி தலையாட்டினாள்.
“இன்னா பண்றான் உன் வூட்டுக்காரன்?” என்று கேட்க,
“என்ன பண்றார் உன் வீட்டுக்காரர்ன்னு கேளுங்க?” என்று மரியாதை பன்மையை எடுத்து குடுக்க,
“த பாரு, எனக்கே கிளாஸ் எடுக்கறியா நீ, என் எச்சுபீரியன்ஸ் இருக்குமா உன் வயசு?” என்றார் அவரும்.
“அம்மாடி இது ஆகாது” என்று உணர்ந்தவள் எழுந்து ரௌண்ட்ஸ் சென்று விட்டாள்.
“ம்ம் நல்லதுக்கே காலமில்லை” என்று அந்த பெண்மணி சலித்துக் கொண்டே, பக்கத்தில் இருந்த இன்னொரு பில்லிங் செக்ஷனில் வேலை செய்யும் பெண்ணிடம் “இத பத்தி அந்த செயராசு அசிங்கமா பேசறான். இது கிட்ட பேசினா இது என்கிட்டயே காட்டுது” என்று சொல்ல,
ரௌண்ட்ஸ் சென்ற அவளின் காதில் நன்கு விழுந்தது. நொந்தே போனவள் லீவை கேன்சல் செய்து விட்டு இந்தியாவே வேண்டாம் என்று ஜெர்மனி செல்லும் முடிவிற்கே வந்து விட்டாள்.
ஆனாலும் நின்று திரும்பி அந்த பெண்மணியை ஒரு பார்வை பார்க்க அவள் வாயை மூடிக் கொண்டு சென்று விட்டாள்.
ஒரு எரிச்சல் உணர்வை கொடுக்க மிதமான நடையை வேக நடையாக்கி அவள் நடக்க, காலை டீ இடைவேளை அப்போது, ஜெயராஜும் அவனுடன் பணி புரியும் சிலரும் ஒரு கும்பலாய் நடந்து வந்து கொண்டிருந்தனர்.
இவள் அவர்களை பார்த்தாலும் எதுவும் சொல்லலாமல் அவர்களை கடந்து நடக்க முற்பட்டாள்.
ஜெயராஜ் அவளின் வேக நடையிற்கு இடையில் அவனின் கால் விட, காலில் தட்டி அப்படியே முன் புறம் விழுந்து விட்டாள்.
“தடால்” என்ற சத்தம்.
யாரும் எதிர்பார்க்கவில்லை!
வேகமாய் அவளின் அருகில் இரண்டு மூன்று பேர் சென்று தூக்க முற்பட்டனர். மெதுவாக கை பிடித்து தூக்கினர்.
முன் நெற்றியில் அடிபட்டு ரத்தம் வந்தது.
பட்ட காலிலேயே படும் கெட்ட குடியே கெடும் என்பதை போல மீண்டும் மோசமாய் அடிபட்டாள் ஜெயந்தி!

Advertisement