Advertisement

அத்தியாயம் இருபது :
அவள் கதவை மூடிய வேகத்திற்கு சட்டென்று பின்னடைந்து தடுமாறி பின் ஸ்திரமாய் நின்றான். அது ஒரு அனிச்சை செயல். சுற்றும் முற்றும் பார்த்தான். மனது கொதித்தது, “என்னவோ ஏதோ வென்று பதறி வந்தால் கதவை முகத்தினில் அடித்து சாத்துகிறாள்”.
“நான் எட்டி உதைத்தேன் என்றால் இந்த கதவு என் முன் நிற்குமா? கதவு என்ன? ஒரு அறை விட்டதற்கே தாள முடியவில்லை.. இப்படி முகமே வீங்கி கிடக்கிறது.. இவள் என்னை அடிப்பாளாமா, ஆளையும் அவளையும் பார்..” கதவை உடைக்க ஒரு ஆத்திரம் கிளம்ப.. இப்போது யாரும் காரிடாரில் இல்லை என்றாலும் சத்தம் கேட்டு யாராவது வெளியே வந்து  வேடிக்கை பார்த்தால் அது வேறு தலையிறக்கம் என்று புரிய அமைதி காத்தான்.
பின்னே தான் கிளம்பும் போது கையினில் விஷால் இன்னொரு சாவி தன்னிடம் கொடுத்தது ஞாபகம் வர…
“ஓஹ் இவள் கதவை திறக்க மாட்டாள் என்று தெரிந்து தான் சாவியை கொடுத்தானா.. அப்போது எல்லோருக்கும் தெரிகிறது நமக்கு தெரியவில்லையா” என்பது அப்படி ஒரு கோபம் கொடுத்தது..
வேகமாய் கதவை திறந்து மருது உள்ளே நுழைய.. ஜெயந்தி சத்தியமாய் இதை எதிர்பார்க்கவில்லை.. சோஃபாவில் அமர்ந்திருந்தவள் அதிர்ச்சியில் எழுந்து நின்றாள்.
“தைரியம் இருந்தா என முகத்துல அறையணும், அதைவிட்டு கதவை முகத்துல அடிக்கற மாதிரி சாத்த கூடாது” என்று நின்றான்.
“எப்படி? எப்படி உள்ள வந்தீங்க?”  
“கதவை உடைக்கலாம்னு நினைச்சேன், ஆனா வீணா எல்லோருக்கும் காட்சி பொருள் ஆகிடுவோம்னு பேசாம விட்டுடேன்”
“அப்புறம் எப்படி வந்தீங்க?” என்றவளிடம்..
“ம்ம்ம், ஜீபூம்பா போடேன்” என்றான் நக்கலாக..
கவனமாய் சாவியை அவனின் ஜோபில் மறைத்திருந்தான்..
வேகமாய் அவள் சென்று கதவை சாத்தி மீண்டும் அது திறக்க வருகிறதா என்று பார்க்க, வரவில்லை.
“எப்படி உள்ள வந்தீங்க? நான் இங்க இருக்குறது எப்படி தெரியும்?”
“ஒரு அறை விட்டதுல, முகமே மாறி போச்சு, நீ என் முகத்துல அடிக்கற மாதிரி கதவை சாத்துவியா” என்று மீண்டும் கேட்டு வேஷ்டியை மடித்துக் கட்டிக் கொண்டே அருகில் வந்தான். வேம்புலியம்மன் கோவிலுக்கு சென்றதால் வேஷ்டி அணிந்திருந்தான்.
முன்பானால் ஒரு பயம் இருந்தது, இப்போது ஜெயந்திக்கு அது இல்லை.. அடித்து விட்டான், வீட்டை விட்டு துரத்தி விட்டான். இனி என்ன செய்து விடுவான் பார்த்துக்கொள்ளலாம் என்ற இருமாப்பு எழ…
“நீங்க ஒரு கன்னத்துல அடிச்சது பத்தாதுன்னு, இன்னொரு கன்னத்துல அடிக்க வந்திருக்கீங்களா” என்றாள் அவளுமே கிண்டலாக
“அட தெரிஞ்சு போச்சா, அதுக்கு தான் வந்திருக்கேன்னு” என்றான் அசராமல். அவன் பார்வை அவளின் முகத்தை தான் விடாமல் பார்த்தது.. முகம் சற்று வீக்கம் குறைந்து இருக்க, அடிபட்ட பக்கம் கண்ணை சுற்றி கரு வளையம் ஆரம்பித்து இருக்க..
ஏதோ குத்துசண்டை வீரர்களுக்கு அடிபட்டால் கண்ணை சுற்றி இருப்பது போல இருந்தது..
சோர்வாய் இருந்தவள் அமைதியாய் சென்று அமர்ந்து கொண்டாள்.. ஒரு நாளில் என்னென்னவோ நடந்து விட்டது.. இந்த வலிகளைஎல்லாம் விட அவளின் மாதந்திர உதிரப் போக்கு அதிகமாய் இருக்க அவனிடம் பேச பிடிக்காமல் “நீ எதுக்கு வேணா வந்திரு, எனக்கென்ன” என்ற பாவனையை கொடுத்து வாயையும் மூடிக் கொண்டாள்.
மருது அவளுக்கு எதிர்புறம் உள்ள சோபாவில் அமரந்து.. “ஒன்னு உங்கம்மா வீட்டுக்கு போ, இல்லை நம்ம வீட்டுக்கு வா, இப்படி தனியா இருக்குறது எல்லாம் என்னால அனுமதிக்க முடியாது” என்றான் கறாராக.
“உங்க அனுமதியை நான் கேட்கலையே” என்றாள் வசதியாக சாய்ந்து அமர்ந்து கொண்டு..
“அது தானே நீ எதுக்கு கேட்ப? என்னை கல்யாணம் பண்ண சரின்னு சொன்னதையே எதோ போனா போகுதுன்னு சொன்ன ஆள் தானே நீ.. இதுல நீ என் அனுமதி எல்லாம் கேட்பேன்னு நான் நினைக்கலை” என்றான் அவனும் வசதியாய் சாய்ந்து கொண்டு..
“சும்மா கதை பேசாதீங்க போன்னு சொன்ன பிறகு நான் எங்க போகணும்னு எல்லாம் நீங்க சொல்ல வேண்டிய அவசியமில்லை.. ஒன்னு எங்கம்மா வீடு, கல்யாணமான பிறகு எனக்கு அங்க போக விருப்பமில்லை, இன்னொன்னு என் புருஷன் வீடு, அவன் என்னை வெச்சிக்க மாட்டேன்னு துரத்தி விட்டுட்டான்” என்றாள் காட்டமாக.
“சூடு சொரனையில்லாம அங்க என்னால போக முடியாது, அதனால எனக்கு போக வீடு கிடையாது, ஏதோ எப்பவோ பண்ணின புண்ணியம் தங்க ஒரு இடம் கிடைச்சிடுச்சு, இல்லைன்னா இன்னைக்கு நான் இருக்குற நிலைமைக்கு நடு ரோட்ல இருந்திருந்தா நான் என்னவாகியிருப்பேன்னு தெரியலை” என்று சொல்லும் போது அவளின் குரலில் ஒரு நடுக்கம்.. கண்களில் நீர் 
அதுவரை பேசிக் கொண்டிருந்த மருதுவும் அப்படியே அமைதியாகி விட்டான்.
அவனுக்கு என்ன தெரியும் இவள் அம்மா வீடு செல்லாமல் தனியாய் வருவாள் என்று.. ஜெயந்தியை அறிந்தவன் தான், ஆனால் பெண்களை அறிந்தவன் இல்லையே. அம்மாவை அறியாதவன்.. கூடப் பிறந்த அக்காவோ தங்கையோ கிடையாது.. மனைவியை ஒரு மாதம் அணு அணுவாய் அறிந்தவன்.. அவளின் உள் இருக்கும் எலும்புகளை தோல் மறைத்து விட்டதால் அதனை அறிய முடியவில்லை.. பாக்கி எல்லாம் கண் மூடி காணும் கனவு இல்லை.. கண் திறந்து கொண்டே காணும் நனவாய் வைத்திருந்தான் அவனுள்.
“போ” என்று சொன்ன போது அவளின் நிலை ஞாபகம் வரவில்லை..
செய்தது தப்பு என்று புரியாதவன் கிடையாது, செய்ததை நியாயப் படுத்துபவனும் கிடையாது. ஆனால் நடந்து விட்டதற்கு இனி என்ன செய்ய முடியும் என்ற எண்ணம் இருக்க..
அமைதியாய் எழுந்து அவளின் அருகில் வந்தான்.. அவள் என்ன என்று பார்க்க…
சோஃபாவில் அமர்ந்திருந்த அவளின் முன் மண்டியிட்டு அமர்ந்து.. “வீட்டுக்கு வந்துடேன்” என்றான்.
“வரமுடியாது” என்று அவள் ஸ்திரமாய் தலையசைக்க,
முன்பே முடிவு செய்திருப்பாள் கூப்பிட்டாலும் போகக் கூடாது என்பது போல என்று புரிந்தவன்..
“நடந்துடுச்சு தப்பு தான், சாரி கேட்டா செஞ்ச தப்பு இல்லைன்னு ஆகிடாது. அதனால் கேட்க மாட்டேன், வீட்டுக்கு வந்துடு” என்று மீண்டும் சொல்ல..
“நேத்தும் இதே டைலாக், இன்னைக்கு இதே டைலாக், இதுவே சொல்லுது எப்பவும் நீங்க ஒரே மாதிரி தான்னு.. அப்போ நீங்க மறுபடியும் என்னை அடிக்கலாம் வீட்டை விட்டு துரத்தலாம்.. அப்படி தானே.. இல்லைன்னு பொய் சொல்லப் போறீங்களா”  
“நான் ஏன் பொய் சொல்லணும்? நான் அப்படி தான்! கோபம் வந்தா என்ன செய்வேன்னு தெரியாது, திரும்ப அடிக்க மாட்டேன்னும் சொல்ல மாட்டேன், போன்னு சொல்லமாட்டேன்னும் சொல்ல மாட்டேன்”
“ஆனா அப்படி செஞ்சாலும் இந்த மாதிரி திரும்ப உன்னை தேடி வருவேன்னு தான் நினைக்கிறேன். எப்படியோ போகட்டும்ன்னு கல்யாணத்துக்கு முன்னையே என்னால உன்னை விட முடியலை. இப்போவா விடுவேன்” என்றான் அவளின் கண்களை ஆழ்ந்து பார்த்து.
“நீங்க என்னை விடுவீங்களா, மாட்டீங்களான்னு என்னோட ஆராய்ச்சி கிடையாது. எனக்கு அதை யோசிக்க வேண்டிய அவசியமும் இனி கிடையாது” என்றாள் ஜெயந்தியும் மருதுவின் கண்களை நேர் பார்வை பார்த்து.  
“எனக்கு இப்படி உங்களோட இருக்கணும்னு கிடையாது.. சண்டையோ சச்சரவோ நமக்குள்ள இருந்திருக்கலாம். நான் வந்த இத்தனை நாளா நீங்க ஒதுங்கி தான் இருக்கீங்க. ஆனா அது நமக்குள்ள இருந்தது. இப்போ, இப்போ எல்லோருக்கும் தெரிஞ்சிடிச்சு. அதுவும் எங்க அப்பா முன்னாடி என்னை போன்னு சொல்லிட்டீங்க”
“என்னவோ எங்கப்பா சொல்லிட்டாராம், இல்லை, தெரியாம தான் கேட்கறேன், எங்கப்பா சொல்லியா நீங்க என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க, இப்போ எங்கப்பா உங்களை பேசினார்ன்னு என்னை போ சொல்லிட்டீங்க, அப்படி எனக்கு உங்களோட இருக்கணும்னு எதுவும் கிடையாது.  இந்த மாதிரியான ஒரு குடும்ப வாழ்க்கை எனக்கு வேண்டாம்”
“அப்புறம் என்ன பண்ணுவ?”
“நான் சம்பாதிக்கறேன், நான் சாப்பிட்டுக்குவேன்”
“இது போதுமா வாழ்க்கைக்கு?”
“எனக்கு இது போதும், இந்த ரெண்டு வருஷமா தனியா இருக்கேன். இப்போ இங்க வந்த பிறகும் என்ன பெருசா இருக்கு? ஒண்ணுமில்லை, எனக்கு விதிச்சது இதுதான்னா என்னால இருக்க முடியும்..”
“சும்மா நான் கட்டி பிடிச்சா ஒரு நாள் முழுசும் காணாம போகும், இல்லை கை பிடிச்சா என்னை அடிக்கும், இல்லை முன்ன வந்து நின்னா நீ வராதன்னு எல்லோர் முன்னையும் கை நீட்டி என்னை தள்ளி நிறுத்துற புருஷன் எனக்கு வேண்டாம்” என்றாள் தெளிவாக.
இதெல்லாம் தெரிந்து எதுவும் மருது செய்யவில்லை அதனால் அவனுக்கு ஞாபகமில்லை..
“இதென்ன அபாண்டமா சொல்ற?”
“என்ன? அபாண்டமா சொல்றேனா?” என்று ஆவேசமாய் கேட்டவள், “நீ சொல்லு வந்து இத்தனை நாள் ஆச்சே, என் பக்கத்துல வந்தியா நீ, ரொம்ப நாள் கழிச்சு பார்க்கறோம், ஆசைக்கு கட்டி பிடிக்கலைன்னாலும் ஆதரவுக்கு கூட கட்டி பிடிச்சியா நீ என்னை” என்று ஒருமையில் அவனை திட்டினாள்.

Advertisement