Advertisement

அத்தியாயம் இரண்டு :

மருதாச்சலமூர்த்தி!

அம்மா பிறந்ததும் இறந்து விட, அப்பா வேறு திருமணம் செய்து கொண்டு போய் விட, அம்மாவை பெற்ற பாட்டி தான் வளர்த்தார். ரோட்டோர இட்லி கடை வைத்திருந்த ஆயா, அப்படி தான் அவனுக்கு ஞாபகம் இருக்கிறது. இன்னும் மாமா, சித்தி, பெரியம்மா இந்த உறவுகளும் நினைவடுக்கில் இருக்கின்றன. அவனின் பத்து வயதில் பாட்டி இறந்துவிட யாரும் ஆதரிக்க அன்றி இவனும் ரோட்டோரமாய் தான் நின்றான்.

அன்றிலிருந்து உணவு வேண்டி உழைப்பு ஆரம்பித்து விட்டது. ஒரு டீக்கடையில் டீ கிளாஸ் கழுவும் வேலையில் ஆரம்பித்தான். அங்கேயே படுக்கை குளியல், பின்பு பன்னிரண்டு வயதில் டீ மாஸ்டராக உயர்ந்தான். பதினைந்து வயது வரை அங்கேயே தங்கி வேலை.

அந்த வயது வந்த பிறகு தனக்கும் ஒரு வீடு, வசிக்க வேண்டும் என்று தோன்ற, வாடகைக்கு வீடு தேடினான். ஒரு சமையலறை ஒரு கூடம் அதற்கே பன்னிரண்டு வருடம் முன்னமே ஆயிரம் ரூபாய், அது ஒரு லைன் வீடு.

கசகசவென்ற ஜனத்திரள், போகும் போதும் வரும் போதும் இவனின் வீட்டையும் எட்டி பார்த்து விட்டு போகும் சில பேர். அதையும் விட காலையில் கியூவில் நிற்க வேண்டிய இம்சை அவனுக்கு பிடிக்கவில்லை.

இப்படியே ஒரு வருடம் கழிய, 

வீட்டுக்குள்ளேயே எல்லா வசதிகளும் இருக்க வீடு வேண்டும் என்று தோன்ற வாடகை அதிகம், அதையும் விட இவன் தனியன் பதினாறு வயது யாரும் வீடு வாடகைக்கும் கொடுக்கவில்லை

அந்த வீட்டு தரகர் “உனக்கெல்லாம் வாடகைக்கு குடுக்க மாட்டாங்க தம்பி, உனக்கு லைன் வீடு குடுக்கறதே பெரிய விஷயம்” என்று அலட்சியமாய் சொன்னார்.

இவனும் பதில் பேச, அவரும் பேச.. அடித்து விட்டான்.

அப்போது அவரின் கண்களில் தெரிந்த பயம் இவனுக்கு ஒரு உற்சாகத்தை கொடுக்க..

“என்ன பண்ணுவியோ தெரியாது, எனக்கு வீடு வேணும்!” என்று மிரட்டினான்.

இவன் டீ கடையில் இருக்கிறான், அதற்கு பக்கம் அந்த ஏரியா போலிஸ் ஸ்டேஷன் வேறு. அதனால் போலிஸ் காரர்கள் வருவதும் போவதுமாய் இருக்க அவனுக்கு அவர்கள் எல்லாம் பழக்கம் வேறு.

அது தெரிந்த அந்த தரகரால் அவனை ஒன்றும் செய்ய முடியவில்லை.

பதினாறு வயது தான், ஆனால் ஒல்லியாய் இருந்தாலும் உயரமாய் இருப்பதால் பெரிய பையன் போல தெரிவான்.

அதையும் விட பழகுவதற்கு இனிமையானவன், இயற்கையாகவே அவனுக்கு எல்லோரிடமும் அவனுக்கு சிநேகிதம் பிடிக்கும் திறமை இருந்தது.

கருப்பானவன் தான், ஆனால் களையானவன். ஒரு மரியாதை கொடுக்க கூடிய தோற்றத்தை கொண்டிருப்பான்.

முக்கியமாய் யாரிடம் எப்படி பேச வேண்டும் என்று நன்கு தெரிந்தது.

அவரிடம் மிரட்டி பேசி வீடு பார்க்க வைத்து விட்டாலும் அவருக்கு கமிஷன் அதிகம் கொடுத்தான். அதில் அவன் அவரை அடித்தான் என்பதே அவருக்கு மறந்து விட்டது.

இப்படி எங்கே அடிக்க வேண்டும், எங்கே தட்டிக் கொடுக்க வேண்டும் என்று புரிந்து கொண்டான். அவரிடம் சொல்லி வீடு பார்த்து விட்டாலும் எனக்கென ஒரு வீடு வேண்டும் என்று எண்ணம் ஸ்திரமாய் பதிந்தது.  

அதற்கு டீ மாஸ்டர் வேலை போதாதே.

டீ குடிக்க வந்த ஒரு கான்ஸ்டபிளிடம் “அண்ணா எனக்கு கொஞ்சம் சம்பளம் அதிகமா ஒரு வேலை கிடைக்குமா” என்றான்.

அவனை யோசனையாய் பார்த்தவர்…

“ஒரு வேலை இருக்கு, செய்வியா, பணம் அதிகம். ஆனா ரிஸ்க் இருக்கு மாட்டினா, ஜெயில் தான்!”  

“என்ன வேலை அண்ணா?”

“ஸ்மக்ளிங் கூட்ஸ் இருக்கு, கப்பல்ல வரும். ஆனா அது துறை முகத்துக்கு வரும்முன்ன கொஞ்சம் தூரம் கடல்ல போய் வாங்கிட்டு வரணும், போட்ல போக பசங்க இருக்காங்க. ஆனா அவங்களை மட்டும் நம்பி விட முடியாது, எஸ்கேப் ஆயிட்டாங்கன்னா?”

“நான் ஆக மாட்டேனா அண்ணா?” என்றவனிடம்,

“ஆக மாட்ட” என்றார் புன்னகையுடன்.

அப்படி ஆரம்பித்தது தான் அந்த தொழில். எத்தனை ரிஸ்கியான வேலை என்றாலும் செய்து முடிப்பான். ஆனால் பொருட்கள், தங்கம், இப்படி தான்! வேறு மாதிரி வேலைகள் செய்ய மாட்டான். அதாவது ஆயுதம் போதை பொருள் இப்படி!”

இப்படியாக பண வரத்து அதிகமாக… முதலில் ஆட்களுக்காக செய்தவன் பின்பு அவன் தனக்காக செய்ய லட்சங்களில் ஆரம்பித்து கோடி வரை பணம் கண்டான்.

ஐந்தே வருடம் வீடு கட்டி விட்டான், போலிஸ் காரர்களுடன் தொடர்பில் இருந்ததால் அங்கு வேலையாகவேண்டும் என்றால் இவனை அணுகினர். அதனால் ஏரியாவில் ஏதாவது பிரச்சனை என்றால் இவனை அணுகினர்.

இவனும் பஞ்சாயத்து அத இதென்று பெரியாள் ஆகிவிட்டான். பணப் புழக்கமும் அதிகம்.

ஆனால் புத்திசாலி! என்றும் கடத்தல் தொழில் கை கொடுக்காது என்று தெரிந்தவன், அவனின் நேரம் பத்து வருடங்களாக நன்றாக இருந்த போதும் எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று புரிந்தவனாக, அவனின் இருபத்தி ஆறாவது வயதில் அதனை விட்டு பின்வாங்கி விட்டான்.

கடத்தல் தொழிலில் இருப்பவர்கள் போல தண்ணி, தம், பெண்கள் என்று எந்த கெட்ட சகவாசமும் கிடையாது. கடத்தல் அவனின் வேறொரு முகம். வாழ்க்கையில் ஸ்திரமாகிய உடன் பணம் அதில் எவ்வளவு வந்தாலும் வேண்டாம் என்று ஒதுங்கி விட்டான்.  

இப்போது வயது இருபத்தி ஏழு. ஆனால் அந்த பத்து வருடங்களிலேயே குடியிருக்க ஒரு பெரிய வீடு, மெயின் ரோடில் ஒரு காம்ப்ளெக்ஸ் என்றும் வாங்கியிருந்தான்.

அந்த காம்ப்ளெக்ஸில் எட்டு கடைகள், கீழ் நான்கு, மேல் நான்கு. ஒன்றோன்றும் இருபதாயிரம் வாடகை… ஒரு கடையில் இவன் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் வைத்திருந்தான். செய்வதற்கு வேலை வேண்டும் அல்லவா!

அபார்ட்மென்ட் மூன்றும் சொந்தமாய் இருக்க அதிலும் வாடகை வந்தது.

ஆக மொத்தம் நேரம் நன்றாய் இருக்க… படிக்காத பணக்காரன் ஆகி விட்டான். ஏரியா மக்கள் உதவி என்று வந்து நிற்கும் போது பொன் வைக்கும் இடத்தில பூ வைப்பது போல எதோ ஒரு உதவி செய்ய..

பிரச்சனை என்று வந்து நிற்கும் போது வாயை விட கை பேச…

இதோ மினி தாத்தாவும் ஆகி விட்டான்.              

ஆனாலும் இவ்வளவு பண புழக்கம் அவனிடம், இவ்வளவு சொத்துக்கள் உள்ளது அவனின் ஆடிட்டரை தவிர யாருக்கும் தெரியாது. காண்பித்து கொள்ள மாட்டான். வசதி என்று தெரியும். கோடீஸ்வரன் என்று தெரியாது.  

எதிலும் எளிமை மட்டுமே, பகட்டு என்பது இருக்காது. உணவிற்காக கஷ்டப் பட்ட நாட்களையும், பின்பு பணம் வந்த வழியையும் அவன் என்றும் மறப்பதில்லை. ஏதோ கடவுள் புண்ணியம் எதிலும் மாட்டவில்லை, போலிஸ் ரெகார்டில் அவன் பேர் வரவில்லை என்று தெரியும்.  

அதனை கொண்டு கோவில் விஷயங்கள் என்றால் முன் நிற்பான். எல்லா செலவும் அவனதே!    

இப்படி எல்லாம் ஆகி விட்ட போதும், இப்போது வாழ்க்கையில் ஒரு துணையை மனம் எதிர்பார்க்க துவங்கியது. படித்தத் பெண்ணாய் அழகாய் வேண்டும் என்று எதிர்பார்த்தது.

சொன்னால் சுற்றி உள்ளவர்கள் பெண் பார்ப்பார்கள் தான். ஆனால் என்னவோ தயக்கம் சொல்ல வில்லை. அடுத்தவர்களுக்காக என்றால் எதுவும் செய்பவன் அவனுக்கு என்று எதையும் யாரிடமும் கேட்டது கிடையாது. கடவுளும் அதற்கான அவசியத்தை கொடுக்கவில்லை. இப்போது திருமணம் பற்றி யாரிடமும் பேச பிடிக்கவில்லை.

முதல் முறையாக வாழ்க்கையில் யாருமற்று இருப்பதை உணர்ந்தான். காலால் இட்டால் தலையால் செய்ய ஆட்கள் அவனுடன் இருந்தார்கள் தான், ஆனாலும் சொல்லவில்லை.       

இப்போதெல்லாம் அவன் பார்க்கும் இளவயது பெண்களை எல்லாம் “இப்படி ஒரு பொண்ணு வந்தா நல்லா இருக்குமா?” என்று பார்க்க துவங்கினான்.

அப்படி இந்த ஒரு வருடமாக பார்த்த போதும் அவனை அதிகம் பிடிக்க வைத்தது ஜெயந்தி மட்டுமே.

அவளின் பெயர் கூடத் தெரியாது. ஆனால் அவளின் வீட்டை பார்த்தான், அதிலுள்ள ஆட்களை பார்த்தான், வசதியில்லை என்று புரிந்தது. பெண் கேட்போமா கொடுப்பார்களா இல்லை இந்த பெண்ணிடம் காதல் சொல்வோமா என்று நினைக்க…

“இந்த வயசுல காதல் சொல்வியா?” என்று அவனின் மனமே அவனை பார்த்து சிரிக்க, வயது என்னவோ இருபத்தி ஏழு தான் ஆனால் சிறு வயதில் இருந்து உழைப்பதினால் வயது முதிர்ந்த எண்ணங்கள் தான் இருக்கும்.

நிச்சயம் தோற்றம் அப்படி கிடையாது. நன்றாக உடை அணிந்தால் வசீகரனே. ஆனால் தன்னை எடுத்துக் காட்டிக் கொள்ள மாட்டான். ஏனோ தானோ வென்று இருப்பான். ஒரு வருடம் முன்பு வரை செய்த தொழில் அப்படி அல்லவா. யாருடைய கவனத்தையும் கவர்ந்து விடக் கூடாது என்பதில் அவ்வளவு கவனமாய் இருப்பான். இப்போதும் அதுவே தொடர்ந்தது.      

“பின்னாலேயே போனா அந்த பொண்ணு நம்மை பார்க்கிறாளா பார்ப்போம்” என்று தான் பின்னே சென்றது. பின் சென்று அவளின் கல்லூரி பார்த்ததுமே பின் வாங்கி விட்டான், இது நடக்காது என்று.

கோடீஸ்வரன் தான், ஆனால் “ஹாய் கைஸ்” என்று வாயிலின் உள் நுழையும் முன்பே ஆண்களும் பெண்களுமாய் நாகரீகமாய் கை யை தட்டி கொண்டு உள்ளே நுழைவதை பார்த்ததும், பின் வாங்கி விட்டான். 

இங்கே அவளின் அப்பா, அவளை வாங்கு வாங்கு என்று வாங்கிக் கொண்டிருந்தார்.

“பொம்பளப் புள்ள அடக்கமா இருக்க வேண்டாம், அத்தனை பசங்க இருக்கும் போது சண்டை போடுவியா நீ”  

“பா. எனக்கு எங்க எகிறணும் எங்க பயப்படணும்னு தெரியும். எல்லா நேரமும் நாம சும்மா வர முடியாது. அவனுங்க என் அண்ணன் சட்டையை பிடிச்சு இழுத்தா பார்த்துட்டு இருப்பேனா. நான் பொண்ணுன்றதால பேசினேன். பையன்னா அடி பின்னியிருப்பேன்” என்று சவடால் விட,

“உனக்கு அடிக்கத் தெரியும் போது, எனக்குத் தெரியாதா, சண்டை போட்டு நம்ம வீரத்தை காமிக்கணும்னு எந்த அவசியமும் இல்லை ஜெயந்தி, பார்த்து நடந்துக்கோ. பிரச்சனைன்னா ஒதுங்கி போகணும், முன்ன போகக் கூடாது” என்று விமலன் மிரட்டலாய் பேசினான்.

அண்ணன் டென்ஷன் ஆனதை பார்த்து “சரி, சரி” என்று தலையாட்டி வைத்தாள். குடும்பத்தினர் மீது அவ்வளவு பாசம். அதுவும் அண்ணன் என்றால் அவளுக்கு எல்லோரையும் விட இன்னும் பிடித்தம் அதிகம்.

“அதுவும் இன்னைக்கு நீ பேசினவன் ஏரியா தாதா, அவன் கிட்ட வாயடிக்கற, ஏதோ நம்ம நல்ல நேரம் அவன் போங்கன்னு விட்டுட்டான். அவன் கிட்ட ஜாக்கிரதையா இரு!”

“எவன் கிட்ட? நான் யாரையும் கவனிக்கலையே!”

“அதுதான் உயரமா கடைசியா ஒருத்தன் வந்தானே, மஞ்சள் வேஷ்டி, கைல காப்பு கூட கட்டியிருந்தானே, நம்மளை கூட நீங்க போங்க சொன்னானே!”  

நினைவில் கொண்டு வந்தாள் அவனின் முகத்தை…

“தாதா வா, அவன் முகம் அப்படி ஒன்னும் தெரியலையே” என்று தன் கமண்ட்டை வேறு சொல்ல…

“சொன்னா கேட்க மாட்டியா நீ?” என்று விமலன் மிரட்டினான்.

“சரி, சரி, அவன் தாதா நான் ஒத்துக்கறேன். வம்புக்கு போக மாட்டேன், ஒத்துக்கறேன்!” என்று சொல்லி முடித்து வைத்து,

“பா, எனக்கு மட்டன் பிரியாணி தான் வேணும்” என்று சொல்ல…

“சரி வாங்கிடலாம்” என்றார் அவர்.

இப்படியாக மெக்கானிக் ஷெட் அடைந்து அங்கு அவள் அங்கிருந்த கார்களை உருட்ட, பக்கத்திலேயே நின்றிருந்தார் கோபாலன் பின்னே எதாவது தப்பும் தவறுமாய் செய்து விட்டாள்.

“பா, என் மேல நம்பிக்கை இல்லையா?”

“அப்படி இல்லைம்மா இது உயிர் சம்பந்தப்பட்ட விஷயம்”  

“பா நான் என்னன்னு பார்க்க மட்டும் தான் செய்யறேன், வேற எதுவுமே செய்யலை” என்று சொல்லி… பின்னே அங்கே பொழுது கழிந்து அவர்கள் மட்டன் பிரியாணி வாங்கி வீடு வந்த போது மதியம் மூன்று மணி.

ஒரு மட்டன் பிரியாணி மட்டுமே வாங்கினர். அதுவே முன்னூறு ரூபாய், எண்ணி எண்ணி தான் செலவு செய்வர்.

அதை இரண்டாக பிரித்து ஜெயந்திக்கும், கமலனுக்கும் கொடுத்து மற்ற மூவரும் வீட்டில் சமைத்த சைவத்தை மட்டுமே உண்டனர்.

விமலன் பொறுப்பான அண்ணன். தம்பி தங்கையோடு போட்டியிடவே மாட்டான், அவனுக்கும் ஒன்றும் வயது அதிகமில்லை. இருபத்தி நாலு வயது தான். டிகிரி ஒன்று முடித்ததும் இருபத்தி யொரு வயதில் சேனலில் வேலைக்கு சேர்ந்து விட்டான். இருபத்தி ஒரு வயதில் வேலைக்கு சென்று விட்ட பொறுப்பான பிள்ளை.  

அரட்டைகள் முடிந்து ஜெயந்தி ஒரு தூக்கம் போட, வீட்டினர் காலை அவள் பேசியதை கண்டு கவலைப் பட்டு கொண்டிருந்தனர்.

சரி சரி என்று கேட்டுக் கொள்வாள் வாக்குவாதம் செய்ய மாட்டாள் ஆனால் அதே சமயம் அவளுக்கு தோன்றியதை தான் செய்வாள். அவளின் சரி என்ற ஒப்புக் கொடுத்தல் வாய் வார்த்தைக்கு மட்டும் தான்!

அதீத செல்லம் தான் கொடுத்தனர் வீட்டினர்.

அது வேண்டும், இது வேண்டும் என்று என்ன கேட்டாலும் முடிந்தாலும் சரி, முடியாவிட்டாலும் சரி நிறைவேற்றி வைக்கவே பார்ப்பர். அப்படி பெரிய செலவுகள் வைக்கா விட்டாலும் சிறு சிறு செலவுகள் வைக்கவே செய்வாள்

முக்கியமாய் அதிக செலவு வைப்பது உடை தான்!

அவளின் நட்பு வட்டத்தில் சாதாரண குடும்பம் அவளது மட்டுமே. அதனால் உடையில் மிகவும் கவனமாய் இருப்பாள். பகட்டு வெட்டி ஜம்பம் வீண் கௌரவம் அப்படி கிடையாது. தன்னுடைய ஏழ்மை மற்றவருக்கு தெரியக் கூடாது என்பதும் கிடையாது.  

அதனை கொண்டு தன்னை யாரும் கீழாய் பரிதாபமாய் பார்த்து விடக் கூடாது என்பது தான், நான் யாருக்கும் குறைவுயில்லை என்பதற்காக மட்டுமே மற்றபடி வகுப்பில் உள்ள ஆண் பிள்ளைகளை விட இவளின் மதிப்பெண்கள் அதிகம் தான்.

இவளின் வகுப்பில் ஐந்தே ஐந்து பெண்கள் மட்டுமே பாக்கி எல்லோருமே ஆண்மக்களே! படிப்பில் முதல் என்பதால் அதன் முக்கியத்துவம் எல்லோரிடமும் அவளுக்கு இருக்கும்.

மறுநாள் காலையில் அவள் கல்லூரி செல்ல எழுந்த போது ஆறு மணி. ஆம்! பாட்டு கேட்கவும் தான் எழுந்தாள். “ஹை, டைம் மாத்தி வெச்சிட்டாங்க போல, புண்ணியமா போவும் ராசா உனக்கு” என்று சொல்லிபடி படுத்திருக்க,

“டைம் ஆச்சு” என்ற அம்மாவின் சத்தத்தில் எழுந்து ரெடியாகி கல்லூரி செல்ல, என்ன தான் இந்த பெண் நம்மை திரும்பி பார்க்க மாட்டாள் என்று மனதை நிலை படுத்தி விட்டாலும் , அவள் மீது பதிந்த பார்வையை திருப்ப முடியவில்லை.

அவளை சைட் அடித்த படி அமர்ந்திருந்தான் டீக்கடையில் அமர்ந்திருந்தான் மருதாச்சலமூர்த்தி! 

வீடு இருந்தாலும், சமையலறை இருந்தாலும், டீ அவன் வைத்துக் கொள்ள மாட்டான் ஏன் சமையலும் நடக்காது. எழுந்தவுடனே இப்படி சற்று தூரம் நடந்து அமர்ந்து டீ அருந்தினால் தான் பிடிக்கும்.

எப்போதும் போல விர்ரென்று புறப்பட்ட அம்பாய் ஜெயந்தி மிதமான வேகத்தோடு நடக்க, அவள் கடை கோடியில் வரும் போதே பார்த்து விட்டவன், மெயின் ரோட் இணைப்பில் அவள் இணையும் வரை விடாது பார்த்தான்.

இதுவே தொடர் வாடிக்கையானது, ஒருவன் ஐந்து மாதமாக பார்க்கிறான் அது ஜெயந்திக்கு தெரியவேயில்லை.

அவன் வருடக்கணக்கில் அங்கு தான் டீக்கடையில் அமர்ந்து குடிக்கின்றான். அப்போது வருவோர் போவோரை அவன் வேடிக்கை பார்த்துக் கொண்டு அமர்ந்திருப்பது வழமை தான். அதனால் அவன் உடன் இருப்பவர்களுக்கு கூட அதனை கண்டு பிடிக்க முடியவில்லை.

இப்போது அவள் மூன்றாம் வருட ஆரம்பத்தில் இருந்தாள். அவளுக்கு இண்டஸ்ட்ரியல் விசிட் என்று பெங்களூரில் போட்டிருந்தனர் ஒரு மாதம். அதற்கு ஐந்தாயிரம் பணம் வேறு கட்ட வேண்டும். பின்பு தங்கும் செலவு அது ஒரு பத்தாயிரம். 

நேற்றே அப்பாவிடமும் அண்ணனிடமும் சொல்லி விட்டாள். இப்போது மூன்றாம் வருட ஆரம்பம் என்பதால் இப்போதும் தான் பீஸ் கட்டியிருந்தனர். அதையும் விட கமலன் ப்ளஸ் டூ முடித்து விட்டான். ஆஹா ஓஹோ மார்க் இல்லையென்றாலும் சுமாரான் மார்க் எடுத்திருந்தான்.

இன்ஜியநீயரிங் தான் படிக்க வேண்டும் அதுவும் நல்ல கல்லூரியில் வேண்டும் என்றான். கவுன்சிலிங்கில் ப்ரீ சீட் கிடைக்கும் தான். ஆனால் அதற்கும் பணம் கட்ட வேண்டுமே. வங்கி கடன் எந்த அளவு சாத்தியம் என்று தெரியவில்லை. அதனையும் விட முதல் செமஸ்டர் கையில் இருந்து கட்டுவது போல தான் வரும்.

குழப்பங்களுடன் நடந்து கொண்டிருந்தாள்.

எப்போதும் போல டீக்கடையில் அமர்ந்து மருது பார்த்துக் கொண்டிருந்தான். அவளின் முகம் எப்போதும் போல இல்லாமல் சற்று கவலையை சுமந்து இருக்க…

அவனுக்கு என்னவோ என்னவோ என்று அடித்துக் கொண்டது.

ஒரு ஸ்டாப் தூரம் அவளின் கல்லூரிக்கு நடக்க வேண்டும். சற்று தூரமே, ஷேர் ஆட்டோ அல்லது பஸ் ஏறலாம், ஆனால் உடலுக்கு நல்லது என்று நடந்தே செல்வாள்.

என்னவோ அன்று அவளின் பின்னேயே நடந்து சென்றான்.

அதுவும் அவளுக்கு தெரியவில்லை!

அவள் உள்ளே சென்றதும் தான் அங்கிருந்த பஸ் ஸ்டாப்பில் அமர்ந்து பையன் ஒருவனை பைக் கொண்டு வர சொல்லி பின் அமர்ந்து சென்றான்.

என்ன முயன்றாலும் மண்டைக்குள் ஓடும் அவளின் நமைச்சல் விட்டு விலகவே இல்லை!

நீங்காத ரீங்காரமாய் அவனுள் ஸ்திரமாய் அமர்ந்து கொண்டாள். 

           

  

             

 

   

 

 

 

                      

              

Advertisement