Advertisement

மாலையானதும் எழுந்து குளித்து வேம்புலியம்மன் கோவிலுக்கு சென்றான். குளிக்கவுமே கை வேறு வலித்தது.. அன்று கட்டு மாற்ற வேண்டும் என்று வேறு சொல்லியிருந்தனர்.. மாத்திரைகளும் எதுவும் அவன் உட்கொள்ளவில்லை.   
அவன் வணங்கி முடிக்கவுமே, காலையில் பஞ்சாயத்து பேச வந்த ஆட்கள் அவனை பிரச்சனை செய்தவனை இழுத்து வர..
இனி இப்படி மனைவியை, பிள்ளைகளை, குடித்து விட்டு அடித்தால் நடப்பதே வேறு என்று மிரட்டி, பின்பு சில புத்திமதிகளை சொன்னான்.
சொல்லும் போதெல்லாம் மனதில் அப்படி ஒரு குற்றவுணர்ச்சி. இதை சொல்ல உனக்கு தகுதி இருக்கிறதா என்று. ஆனால் என்ன செய்ய? வெளியில் எதையும் காண்பிக்க முடியாதே, கெத்து காண்பிக்க வேண்டுமே!
அதை அவனால் என்றும் விட முடியாதே!  
“கைல என்னண்ணே கட்டு” என்றான் ஒருவன்.. காலையில் அவன் தான் ஜெயந்தியை பேசியவன்.   
“நேத்து ஒரு சின்ன விபத்து, அதுதான் கைலயும் அடி, அவளுக்கும் அடி” என்று சொன்னவன்,
“அவங்கப்பா தான் என்னனு தெரியாம பேசறார்னா. நீயும் பொசுக்குன்னு என் வீட்டம்மாவை தப்பு சொல்ற.. இனிமே மறந்தும் சொல்லிடாத. அப்புறம் என்னைக்கும் உன் முகம் பார்க்க இஷ்டப்பட மாட்டேன்” என்று நேரடியாக அத்தனை பேர் முன் காலையில் பேசியவனை திட்டினான்.
“அண்ணே, தெரியாம பேசிட்டேன். மன்னிச்சிக்கங்க. நான் அண்ணி கிட்ட போய் மன்னிப்பு கேட்கறேன்”  
“எப்படி கேட்ப? நீ பாட்டுக்கு பேசிட்ட, அவளுக்கு கோபம் வந்து விட்டுட்டு அம்மா வீட்டுக்கு வந்துட்டா. இனி தான் பேசணும் அவகிட்ட. நானே பார்த்துக்கறேன். மறந்தும் நீ போயிடாத, எப்போவாவது என்னோட அவளை பார்க்கும் போது பேசிக்கோ” என்று சொன்னான்.
ஆம்! அனுப்பிவிட்டான். காரணம் என்னவோ என்று யாரும் யோசிக்கும் முன், காலையில் நடந்த பிரச்னையை என்னவோ ஏதோவென்று அவர்களின் கற்பனைக்கு கொண்டு போகும் முன், வந்தவர்களை உங்களால் தான் என்று சொல்லி மாற்றி விட்டான்.
இனி அதிகம் பேச மாட்டார்கள்!
இப்படி நான்கும் நான்கும் நாற்பத்தி நான்கு என்று கணக்கு போடும் திறமையே அவனின் வெற்றிக்கு காரணம்.. அதனால் தான் எல்லோரும் பேசிவிட்டார்களே, கேட்டு விட்டார்களே, அவள் ஏன் திறப்பு விழாவுக்கு வரவில்லை என்பது மனதில் இருந்து கொண்டே இருக்க.. அவனுக்கும் வரவில்லை என்ற வருத்தம் இருக்க… அதன் பொருட்டே ஒரு வருடம் கடந்தும் ஜெயந்தியின் செய்கையை ஏற்க முடியவில்லை.
அவனே ராஜா! அவனே மந்திரி இத்தனை நாளாய்! இப்படி இருந்து விட்டு எல்லோர் முன்னும் அப்போதும் இறக்கம் செய்து விட்டாள், இப்போது அவளின் அப்பா செய்து விட்டார் என்பது தாங்கவே முடியவில்லை.
ஆனாலும் கண்கள் நொடிக்கொருமுறை வேம்புலியம்மன் கோவிலில் இருந்து பார்த்தால் தெரியுமாறு இருந்த அவளின் வீட்டை நோட்டம் விட்டு கொண்டே இருந்தது..
முகம் காலையில் அதிகமாய் வீங்கி இருந்ததே, இப்போது இன்னம் அதிகமாய் ஆகியிருக்குமோ.. மருத்துவமனை மீண்டும் செல்ல வேண்டுமோ இப்படியாக யோசனைகள்.
எல்லோரும் செல்ல கோவிலிலேயே சற்று நேரம் அமர்ந்திருந்தான்.
அங்கே பஞ்சாயத்து நடப்பதை கலைச்செல்வி முன்னமே பார்த்து விட்டார். இப்போது எல்லோரும் செல்லவும், இவன் மட்டும் தனியாக இருக்கவும் இவனை பார்க்க வந்தார்.
அவரை பார்த்தும் மீண்டும் அவளின் வீட்டை நோக்கி பார்வையை ஓட்டினான்.. ஜெயந்தி நிற்கிறாளோ என்பது போல, அவள் வீட்டில் இல்லாதது தெரியவில்லை.
“அவங்கப்பா பேசினதுக்கு நான் மன்னிப்பு கேட்கறேன். அவரையும் கேட்க வைக்கிறேன். நாங்க ஏதாவது தப்பு செஞ்சிருந்தா மன்னிச்சிருங்க” என்று கண்களில் நீரோடு கையெடுத்து கும்பிட்டு கேட்க..
அமர்ந்திருந்தவன் பதறி எழுந்தான். “என்ன பண்றீங்க? யாராவது பார்க்க போறாங்க. ஏற்கனவே உங்க வீட்டுக்காரர் என்னை அசிங்கப் படுத்தினது பத்தாதா? இப்போ நீங்க இப்படி அழுது கையெடுத்து கும்பிட்டு, என்னை இன்னம் கெட்டவன் மாதிரி வெளில காட்டாதீங்க”
“அதுவும் இது சாமி சன்னிதானம். இங்க இப்படி செஞ்சு என்னை பாவி ஆக்காதீங்க” என்றான் கடுமையாக.
“இல்லையில்லை” என்று அவசரமாக கண்ணை துடைத்தவர். “எப்படியாவது சமாதானம் செஞ்சு, அவளை உங்க கூட கூப்பிட்டுக்கங்க”  
அவனுக்கு அப்போதும் அவள் தனியாய் இருப்பது தெரியவில்லை.. அவளின் அம்மா வீட்டில் இருக்கிறாள் என்று தான் நினைத்தான். சட்டென்று சரியென்று சொல்ல மனதில்லாமல்.. அமைதியாய் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான்..
கலைச்செல்வி அவனையே பார்த்தவாறு நிற்க.. அவர் நின்ற விதம் என்னவோ செய்ய..    
சிறுது தூரம் சென்றதும் திரும்பி “பார்த்துக்கலாம் விடுங்க” என்று சொல்லி நடக்க.. அவரின் குரல் அவனை தொடர்ந்தது..
“எங்க இருக்கான்னு கூட சொல்லலை, என்கிட்டே ஃபோனும் பேசலை, ஒரு முறை இப்போ அவ முக வீக்கம் வத்திடுச்சா, வலி குறைஞ்சிடுச்சா பாருங்களே, தனியா வேற இருக்கா?” என்று சொல்ல..  
அப்படியே நின்று விட்டான்.. என்ன சொல்கிறார் இவர் என்று நெஞ்சம் படபடக்க திரும்பியவன்..
“எங்க இருக்கா?”  
“தெரியலை அப்படியே போனவ தான். விமலன் தான் எங்கயோ வீட்ல விட்டோம் சொன்னான். அவன் கிட்டயும் பேசலையாம், யார் வீடு என்ன ஏது எதுவும் தெரியாது. ஆனா அங்க யாருமில்லைன்னு சொன்னான்” என,
அப்படி ஒரு கோபம் பொங்கியது!
“என்ன? உங்க கூட இல்லையா. அதை இவ்வளவு நேரம் என்கிட்டே சொல்லாம என்ன கதை பேசிட்டு இருக்கீங்க நீங்க. உங்களுக்கு அறிவே கிடையாதா?” என்று திட்டியவன்.. வேகமாய் நடையை எட்டி போட்டான் விஷாலிற்கு அழைத்துக் கொண்டே..
“அறிவே கிடையாதா?” என்று திட்டு வாங்கிய போதும், அவனின் கோபத்தில் என்னவோ இனி மருது பார்த்துக் கொள்வான் தனியாய் விட மாட்டான் என்று மனதிற்கு தோன்ற கலைச்செல்வி சற்று ஆசுவாசமாய் உணர்ந்தார். ஜெயந்தி தன்னை பேசியது போல நினைத்து வீட்டை நோக்கி சென்றார்.
“எங்கடா அவ?”  
“எதுக்கு கேட்கறீங்க”  
“வந்தேன்னா மூஞ்சி முகரையெல்லாம் பேத்துடுவேன். எங்கடா இருக்கா?” என்று அடிக் குரலில் சீறினான்.
விஷால் கைபேசியில் பதில் சொல்லாமல் இருக்க…
“ரெண்டு நிமிஷத்துல என் முன்னால நீ இருக்கணும்” என்று சொல்லி கை பேசி வைக்க..
இவன் வீடு செல்ல இவனுக்கு முன் விஷால் அங்கே இருந்தான்.
“எங்கடா இருக்கா, ஜெயந்தியை அவ வீட்ல தானே விட சொன்னேன். விட்டுட்டேன்னு சொன்ன, எப்போ இருந்து என்கிட்டே பொய்யெல்லாம் பேச ஆரம்பிச்ச” என்று அடித்து விடுபவன் போல சீற..
“சும்மா மூஞ்சி முகரையை பேத்துடுவேன்னு எல்லோரையும் மிரட்டி இப்போ அதை தானே அவங்க கிட்ட செஞ்சிருக்கீங்க.. உங்க வயசென்ன அவங்க வயசென்ன, சின்ன பொண்ணு தப்பே பண்ணினாலும் அட்ஜஸ்ட் பண்ண மாட்டீங்களா” என்று ஜெயந்திக்காக பேசினான்.
“எங்க இருக்கா அதை மட்டும் சொல்லுடா?” என்றான் அவனின் பதிலில் கோபம் குறைந்து குற்றவுணர்ச்சி ஓங்க..
“நீங்க ஃபோன் பண்ணினா தெரியப் போகுது பண்ண வேண்டியது தானே!”
“கேட்டதுக்கு பதில் சொல்லு” என்று அதட்ட…
“நான் பொய் சொல்லலை, அவங்க வீட்ல தான் விட்டேன்”  
“புரியற மாதிரி சொல்லி தொலைடா” என்று அவன் கர்ஜித்த விதத்தில்
இதற்கு மேல் சொல்லாமல் விட்டால், அடி நிச்சயம் என உணர்ந்து “நம்ம அபார்ட்மென்ட்ல விட்டேன். உங்களுதுன்னு அவங்களுக்கு தெரியாதா? அதை கூட நீங்க இன்னும் சொல்லலையா?”
தங்களின் வீட்டில் தான் இருக்கிறாள் என்பதில் மனம் ஆசுவாசமடைய..  “ப்ச்” என்று சலித்தவன், “அவளுக்கு என்னை பத்தியும் தெரியலை என் சொத்தை பத்தியும் தெரியலை” என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டவன்,
“ஒரு மாசம் என்ன பேசினோம்னு ஞாபகமில்லை.. இப்போ வந்த பிறகும் பேசலை” என்று அமைதியாக சொல்ல,
விஷால் என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாக நின்றான்.
பின்னே மருது அவனின் பைக் எடுக்க செல்ல.. அபார்மென்ட் தான் போகிறான் என்று புரிந்தவனாக விஷால்.. “ண்ணா அங்க போனா இப்போதைக்கு அது உங்க வீடுன்னு சொல்லிடாதீங்க, ஒரு வேளை உங்களோட சமாதனம் ஆகலைன்னா கிளம்பி எங்கயாவது போயிடப் போறாங்க. இந்தாங்க இன்னொரு சாவி” என்று சொல்லிக் கொடுத்தான்.  
“எங்க போவா, எங்கேயும் போக விடமாட்டேன்” என்று மனதிற்குள் நினைத்தவனாக கிளம்பி ஜெயந்தியை பார்க்க சென்றான்.
மாடியேறி போகும் போதே எப்படி அவளை எதிர்கொள்வது என்று மனது தடதடத்தது.
அழைப்புமணி அடித்து நிற்க.. ஒலி கேட்டு யாராய் இருக்கும் என்று ஜெயந்தி பார்க்க முற்பட.. அந்த ஐ கேட்சரில் தெரியாதவாறு சற்று தள்ளி நின்றான்.    
கதவை திறந்ததும் மருது முன் வந்து நிற்க.. இவனை பார்த்தவளுக்கு அப்படி ஒரு கோபம் பொங்க, பார்த்ததும் என்ன என்று இவன் நடக்கிறது என்று இவன் கிரகிக்கும் முன், கதவை வேகமாய் அடித்து மூடி விட்டாள்.
அவனுடைய முகத்திற்கும் கதவிற்கும் ஒரு நூழிலை தான் இடைவெளி. இல்லையென்றால் இப்போது மருது எல்லோரையும் மிரட்டுவது போல அவனின் பாஷையான, “மூஞ்சி முகரையெல்லாம் பேந்திருக்கும்”  
அவனின் கோபம் ஊருக்கே தெரியும்!
ஜெயந்தியின் கோபம் அவனுக்கு கூட தெரியாது!

Advertisement