Advertisement

“டேய் விமலா, என்ன நீ இப்படி உட்காருற, வா ஜெயந்தியை பார்க்கலாம்”
“பார்த்து, என்ன பண்ண?”
“என்ன பண்ணன்னா?”
“வரமாட்டா! எங்களோட வரமாட்டா! எனக்கு தெரியும். அதுதான் இவர் கிட்ட வந்து சொன்னேன். சரி, எங்க வீட்டுக்கு வராம போயிட்டான்னு தெரிஞ்சாலாவது இவர் அவளை பார்ப்பாரோன்னு தான் இங்க வந்தேன், இப்படி பேசறார்” என்றான் அதீத இயலாமையோடு.  
பின் எழுந்தவன் “வா போகலாம், அட்லீஸ்ட் எங்க இருக்கான்னு பார்க்கலாம். ரொம்ப முகத்துல அடி கூட” என்று குரல் கரகரத்து சொல்ல,
“என்ன நடந்துச்சு தெளிவா சொல்லு” என்று விஷால் கேட்க,  
“அடிச்சிட்டார், அதை பார்த்து அப்பா சண்டைக்கு போய் எல்லோர் முன்னையும் மாமாவை திட்டிட்டாங்க, அதுக்கு கோபம் வந்துடுச்சு. எங்களை ஜெயந்தியை வீட்டுக்கு கூட்டிட்டு போங்க சொல்லிட்டார். அவகிட்டயும் போ சொல்லிட்டார். அதுதான் அவ போயிட்டா” என்று விமலன் சொல்ல..
விஷாலிற்கு மருது இப்படி செய்வானா என்று நம்பவே முடியவில்லை..
உடனே சண்டை பிடிக்கும் ஆத்திரம் வந்த போதும், இப்போது ஜெயந்தியை பார்ப்பது முக்கியம் என்று தோன்ற..
“முதல்ல அவங்க பத்திரத்தை பார்ப்போம் வா” என்று அழைத்து வெளியே வந்தனர். விமலன் அங்கே டீ பாய் மேல் இருந்த ஜெயந்தியின் மருந்து மாத்திரைகளை கையோடு எடுத்துக் கொண்டான்.
மற்றவர்களை வீட்டிற்கு அனுப்பி விட்டு ஜெயந்தியை தேடினர்.
அந்த ஆட்டோ இன்னமும் சுற்றிக் கொண்டு தான் இருந்தது… இவளின் நெருங்கிய தோழிகள் இரண்டு பேர் வொர்கிங் வுமன்ஸ் ஹாஸ்டலில் தங்கி இருக்க.. அவர்களில் யாராவது ஒருவருடன் தங்கி கொள்ளலாம் என்று தான் அழைத்திருந்தாள்..
ஆனால் இவளின் துரதிர்ஷ்டம் ஒருத்தி அவளின் சொந்த ஊரிற்கு சென்றிருக்க.. ஒருத்தி அபோதுதான் அதிலிருந்து காலி செய்திருந்தாள்.. வீட்டை விட்டு வந்து விட்டேன் என்று சொல்லியிருந்தால் அவர்கள் ஏதாவது இடம் சொல்லியிருப்பார்கள். ஆனால் இவள் தான் துரத்தப் பட்டு விட்டாளே.. நெஞ்சே ஆறவில்லை!
அழுகை முட்டிக் கொண்டு வந்தது.. ஆனால் ஆட்டோவில் அழவும் முடியவில்லை.. எங்கே போவது என்றும் தெரியவில்லை..
ஆட்டோ டிரைவரின் நம்பர் கிடைத்து விட, அதனை அழைக்க கையில் எடுத்த விஷால், பின்பு முடிவை மாற்றிக் கொண்டு.. ஜெயந்திக்கே அழைத்தான்..
அவனின் நம்பர் பார்த்ததும் எடுப்பதா வேண்டாமா என்ற தயக்கம். ஆனால் இப்போது யாரின் உதவியாவது வேண்டும் தானே எடுத்து விட்டாள்.
“மேம் எங்க இருக்கீங்க?” என்றவனிடம்.
“ஆட்டோல ஊர் சுத்திட்டு இருக்கேன்” என்று அவளின் குரல் என்ன பாவனை என்று சொல்ல கணிக்க முடியாத விதத்தில் ஒலிக்க,
“அப்போ சுத்திட்டு வீட்டுக்கு வருவீங்க” என்றான் சாதாரணமாகவே.
“வீடா.. வீடு இல்லையே எனக்கு. அதை தான் தேடிட்டு இருக்கேன்.. இங்க வொர்கிங் வுமன்ஸ் ஹாஸ்டல் ஏதாவது தெரியுமா உங்களுக்கு?”  
அதுவரை இலகுவாக பேசிக் கொண்டிருந்த விஷால் பயந்து விட்டான்.
“என்னது? ஹாஸ்டலா? என்ன உளற்றீங்க?” என
“இதுல உளறல் என்ன இருக்கு, எனக்கு இருக்க இடம் வேணும்? ஏற்பாடு பண்ண முடியுமா?”  
“சும்மா ஏதாவது பேசாதீங்க மேம், வீட்டுக்கு வாங்க, நாம மருதுண்ணா கிட்ட பேசலாம். அவரா நாமளா பார்த்துடலாம்”  
“பேசி என்னை வீட்ல சேர்த்துக்கோங்கன்னு கால்ல விழ சொல்றீங்களா.. தேவையில்லை.. உங்களால முடிஞ்சா சொல்லுங்க, இல்லை என் பிரண்ட்ஸ் யாரையாவது பிடிக்கறேன்” என்றாள்.
“ஒரு அஞ்சு நிமிஷம் நான் கூப்பிடறேன்” என்று வைத்து விட்டான்.
விமலன் அதுவரை அவனின் முகத்தினையே பார்த்திருக்க.. “நீங்க சொன்ன மாதிரி தான் வீட்டுக்கு வர மாட்டாங்க போல”
“மாமா கூப்பிட்டா வருவா, அவர் கிட்ட பேசுங்களேன்” என்று விஷாலிடம் சொல்ல..
விஷால் அதற்கு பதில் எதுவும் பேசவில்லை. அப்படி மருதுவிடம் சட்டென்று பேசி விட முடியாது.. ஆனால் விஷால் நினைத்தால் பேசலாம். ஆனால் அவனுக்கே பிடித்தமில்லை. ஏறக்குறைய அடித்து வீட்டை விட்டு துரத்தியது போல தானே!
ஆனால் மருதுவை தவிர வேறு யாரை அவனுக்கு தெரியும், எதுவும் பிரச்சனை என்றால் அவனிடம் தானே வருவான்.
ஆனால் இந்த முறை மருதுவிடம் போக விருப்பமில்லை..
கொஞ்சிக் கொள்வதை நாலு சுவற்றுக்குள் வைத்துக் கொள்ளும் போது, சண்டைகளை மட்டும் ஏன் பொதுவில் கொண்டு வர வேணும்.. இப்படி தான் விஷாலின் நினைப்பு. அவனை பொறுத்தவரை கணவன் மனைவி சண்டை அடுத்தவருக்கு தெரியக் கூடாது.  
அவளின் தந்தை செய்தது தவறாக இருந்தாலும், ஏன் ஜெயந்தியே தவறு செய்திருந்தாலும், வீட்டை விட்டு போ என்று சொல்லியது விஷாலால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.
மருதுவின் இரண்டு அபார்ட்மென்ட் வீடு இருப்பது, விஷாலின் பராமரிப்பில் தான் இருந்தது.. ஆம்! அதை சர்விஸ் அபார்ட்மெண்ட்ஸாக மாற்றி நாள் வாடகைக்கு விட ஆரம்பித்து இருந்தனர்.
முக்கியமாக வெளிநாட்டில் இருந்து வந்து ஒரு மாதமோ இரண்டு மாதமோ இந்தியாவில் இருக்க நினைப்பவர்கள், இல்லை சிகிச்சைக்காக தங்குபவர்கள், இவர்களை முன்னிட்டு. ஒரு சிறு விஷயத்தையும் லாபகரமாக காசாகத் தெரிந்தவன் மருதாச்சலமூர்த்தி!  
அதில் ஒன்று இப்போது காலியாக இருப்பது நினைவில் வர.. “எங்க இருக்கீங்க மேம், நான் வர்றேன்” என்றான்.
ஆட்டோ ஓட்டுனரை நிறுத்த சொல்லி.. இடத்தை சொல்ல.. விஷால் விமலனும் அங்கே விரைந்தனர்.
விஷால் ஜெயந்தியை பார்த்து அந்த சர்விஸ் அபார்ட்மென்ட் அழைத்து சென்றான். அவளும் மறுப்பேதும் சொல்லவில்லை. கூட விமலன் இருந்த போதும் ஒரு வார்த்தை கூட ஜெயந்தி பேசவில்லை.
“நான் என்ன பண்ணினேன்? ஏன் என்கூட பேசமாட்டேங்கற” என்று அண்ணன் கேட்ட போதும் பதில் ஒன்றும் சொல்லவில்லை..
விஷாலிற்கு ஜெயந்தியை பார்த்ததில் இருந்து மனதே சரியில்லை.. இப்படி அடி பட்டிருக்கிறது இப்போது வீட்டை விட்டு வெளியே போ என்று சொல்வதா?
“இப்போ எப்படி தனியா இருக்க முடியும், அம்மா வீட்டுக்கு போகலாமே” என்று விஷால் சில முறை எடுத்து சொல்லிய போதும், ஜெயந்தி கேட்கவில்லை.
வீட்டை திறக்கவும் “யாரோட வீடு இது?’ என்று ஜெயந்தி கேட்க..
அது மருதுவின் வீடு என்பது கூட அவளுக்கு தெரியாது என்று புரிந்து கொண்டான்.
விமலனிற்கு ஸ்டோர்ஸ் பற்றி எல்லாம் தெரியும். இந்த வீடெல்லாம் அவனுக்கு கூட தெரியவில்லை.
“என் ஃபிரண்ட்து தான். பாரின் போயிருக்காங்க. என்கிட்டே தான் சாவி இருக்கு, கொஞ்சம் நாள் இருக்கலாம். அவங்க வரும் போது வேற இடம் பார்த்துக்கலாம்” என்று சொல்ல..
“வாடகை ரொம்ப அதிகமா இருக்குமோ” என்றாள் ஜெயந்தி.. அது மூன்று படுக்கையறை கொண்ட லஃசுரி அபார்மென்ட்.. நின்றால் நிழல் தரையில் தெரியுமளவிற்கு பளபளப்பாய் இருந்தது.. பின்னே நாள் வாடகையே.. ம்கூம்! மூச்..
“வீடே உங்களது தான்” என்று வாய் வரை வந்த வார்த்தைகளை விழுங்கியன்.. “பேசிக்கலாம் எவ்வளவுன்னு, இப்போ தங்குங்க” என்று முடித்துக் கொண்டான்.        
ஜெயந்திக்கு உணவு வாங்கி கொடுத்தனர், விஷால் கிளம்ப, விமலன் மனமின்றி அங்கேயே நின்றான்.
“என்னை எனக்கு பார்த்துக்க தெரியும், யாரும் தேவையில்லை. நீ கிளம்பு ண்ணா. எனக்கு ரொம்ப வலிக்குது, நான் தூங்கணும்” என்றாள் தெளிவாக.
அவளின் முகத்தில் இருந்து எதையும் கண்டு கொள்ள முடியவில்லை!
“என்னை பார்க்க எல்லாம் வரவேண்டாம், எனக்கு பார்க்கணும்னு இருந்தா நான் வீட்டுக்கு வருவேன். எனக்கு கொஞ்சம் தனியா இருக்கணும்” என்று சொல்லி அவர்களை ஒருவாறு கிளப்பி கதவை மூடியதும், அதுவரை இருந்த தைரியம் போய் அப்படி ஒரு அழுகை பொங்க.. தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தாள்.
“எப்படி? எப்படி? என்னை வீட்டை விட்டு போ என்று சொல்லிவிட்டானா. இல்லை, போ என்று சொல்லவில்லை. துரத்தி விட்டான்” ஆத்திரம் கோபம் இயலாமை எல்லாம் பெருக பெரும் குரலெடுத்து அழ ஆரம்பித்தாள்.
இது எதுவும் மருதுவிற்கு தெரியாது! விஷாலும் மருதுவிடம் சொல்ல வில்லை.. மருது ஜெயந்தியை பார்த்துவிட்டாயா என்று கேட்டதற்கு “பார்த்துட்டேன், அவங்க வீட்ல விட்டுட்டேன்” என்று முடித்துக் கொண்டான்.
ஆம்! மருதுவின் வீடு அவளின் வீடு கூடதானே..
கலைச்செல்வி தான் தவித்து போனார்… ஜெயந்தி அவரிடமும் பேசவில்லை.. அவரை பார்க்கவும் விடவில்லை.. முகத்தில் ஒரு பெரிய கர்ஃசீப் வாங்கி கட்டிக் கொண்டவள், அவளே உணவை வாங்கிக் கொண்டாள். அவளே கையில் இருந்த பணத்தினில் உடையை எடுத்துக் கொண்டாள். ஜெர்மனியில் தனியாய் இருந்து பழகியது கை கொடுக்க..
ஜெர்மனியில் ஒரு விடுமுறையில் இருந்ததாய் மனதினை தயார் படுத்தியவள் ஒரு முழு நாளை ஓட்டினாள்.. இந்த அலைச்சலில் உதிரப் போக்கும் அதிகமாய் இருக்க.. மிக கடுமையான மணி நேரங்கள்.. மனதை அமைதிப் படுத்தி உறங்க முற்பட்டாள்.
உறக்கம் தழுவ, மாலையில் இப்போது சற்று தெளிவாய் இருந்தாள். ஆனாலும் மனது சமன்படவே இல்லை.
மருது, விஷால் ஜெயந்தியை அவளின் வீட்டில் விட்ட விஷயத்தை தெரிந்து கொண்டு, அவனிடம் “நான் இன்று கடைக்கு வரவில்லை” என்று சொல்லி படுத்தவன் தான்.. காலையில் அருந்திய டீ மட்டுமே, வேறு உணவு எதுவும் இல்லை.
அவனாய் தானே கடையில் வாங்கிக் கொள்ள வேண்டும். அவனை உண்டு விட்டாயா என்று கேட்பவர் யார்.. வந்த ஒரு சொந்தத்தையும் விரட்டி அடித்து விட்டான்.. ஏன் அவ்வளவு கோபம் அந்த நேரம் வந்தது என்றே தெரியவில்லை..
எல்லோர் முன்னும் தரக் குறைவாய் பேசியதும்.. இத்தனை நாட்களாய் தான் கட்டி காத்து வந்த மரியாதை குறைய, அதையும் விட பெண்டாட்டியை அடிக்கின்றான் என்று அவர்கள் வந்திருக்க, நீயும் அந்த வேலை தானே செய்கிறாய் என்று அவளின் அப்பா பேசவும், அவனால் அந்த சூழலை கையாள முடியவில்லை. எல்லாம் தப்பாய் போயிற்று.
நிஜமும் அதுதானே! அந்த குற்றவுணர்ச்சியும் கலந்து கட்டி அடிக்க, “போ” என்று விட்டான்.. உடல் நிலை வேறு சரியில்லாமல் இருந்தாள், இப்படி செய்து விட்டோமே என்று மனம் பதைக்க படுத்தே கிடந்தான்..  
ஜெயந்தியை பார்க்க வேண்டும் போல மனம் முழுவதும் ஒரு ஏக்கம் எட்டி பார்த்தது..

Advertisement