Advertisement

“ஏய், என்ன ஆச்சு முகத்துல? என்ன இப்படி அடிபட்டிருக்கு?” என்று பதறி அருகில் செல்ல..
“அதொண்ணுமில்லை அண்ணா, சின்ன அடி” என்றாள்.
“சின்ன அடியா உனக்கு இது? சின்ன அடியா? முகமே வீங்கி இருக்கு, ஒரு பக்கம் கண்ணு இருக்குற இடமே தெரியலை, உதடு கிழிஞ்சு இருக்கு, எப்படி ஆச்சு? வேற எங்கேயும் அடிபட்டிருக்கா?” என்று பதறினான்.   
வலி! கூடவே அண்ணனின் அனுசரணையான பேச்சு, அண்ணனின் முகத்தினில் தெரிந்த பதட்டம், மருதுவின் விலகல் தன்மை, மருது அவள் மீது வைத்த குற்றசாட்டு, அது கொடுத்த குற்றவுணர்ச்சி …
“வலிக்குது அண்ணா” என்று வார்த்தை வெடித்துக் கிளம்ப அப்படி ஒரு அழுகை.
மருது அப்படியே நின்று விட்டான்.. என்னிடம் இப்படி சொல்லவில்லையே என்று தோன்ற.. ஒரு இயலாமை தோன்ற.. அப்படியே பார்த்து இருந்தான். ஜெயந்தியோ அவனை ஏகத்திற்கும் தேட, அவனுக்கோ அவள் விலகியே நிற்பது போன்ற தோற்றம் தான்.   
“எப்படி? எப்படி ஆச்சு? ஏன் என்னை கூப்பிடலை? நான் வரலைன்னா இப்போ கூடத் தெரிஞ்சிருக்காது, நாங்கல்லாம் எதுக்கு இருக்கோம்” என்று அவளிடம் கேட்க,
அவளோ பதில் சொல்லாமல் தேம்பி தேம்பி அழ…
“அழாத ஜெயந்தி இன்னும் வலிக்கும்.. இப்படி அடி படர மாதிரி என்ன ஆச்சு?” என்று கேட்டான்.        
“ப்ச் வலிக்குது, சொன்னா சும்மா எப்படின்னு கேட்டுட்டே இருக்க, சொல்ல முடியாது போ!” என்று செல்லம் கொஞ்சிக் கொண்டே தேம்பினாள்.
எதுவும் சொல்லாமல் விமலன் கைபேசி எடுத்தவன்… அப்பாவின் கைபேசிக்கு அழைத்து “ஜெயந்திக்கு அடிபட்டிருக்கு” என்று சொல்லிவிட,
ஜெயந்தி “சொல்லாதே” என சொல்ல நினைக்கும் போதே அவன் சொல்லி முடித்திருந்தான்..
மருது எதுவும் பேசாமல் பார்த்திருக்க, அப்போது பார்த்து ஏரியாக்காரர்கள் ஒரு பத்து பதினைந்து பேர் ஒரு பிரச்சனை என்று வந்தனர்.
அவன் வெளி வராண்டாவிற்கு “என்ன விஷயம்?” என்று கேட்பதற்காக சென்றான்.
அங்கே இருந்த பிரச்சனை ஒரு ஆள் தினமும் குடித்து விட்டு வந்து பெண்டாட்டியை பிள்ளைகளை அடிக்கின்றான் என்பதே!
அவனை இழுத்து வந்தனர்.. கூட அழுதபடி மனைவியும்.. இவர்கள் ஜெயந்தியின் வீடு இருந்த தெரு ஆட்கள் தான்!
“இப்போ பார்த்து இந்த பிரச்சனையா?” என்று மருது நினைக்க, அப்போது கோபாலனும் கலைச்செல்வியும் கமலனும் அரக்க பறக்க வந்தார்கள்.
அவர்களை பார்த்ததும் “உள்ள இருக்கா, போங்க” என்று முடித்துக் கொண்டான்.
உள்ளே சென்று மகளை பார்ததும் “என்ன இது?” என்று கலைச்செல்வி கண்கலங்க.. “எப்படி ஆச்சு?” என்று கோபாலன் பதற,
கமலன் “அப்பா இது முகத்துல அடிச்சிருக்காங்க” என்று சரியாய் கணித்தான்.. 
“என்னது அடிச்சிருக்காங்களா?” என்று கோபாலன் பதற..
நேற்று வேறு மருது தன்னிடம் பேசாதது, வாங்க என்று கூட சொல்லாதது எல்லாம் கலைசெல்விக்கு புரிய.. “நீ எதுவும் உன் வீட்டுக்காரர் கூட சண்டை போட்டியா? அவர் அடிச்சிட்டரா?” என்று கேட்டார்.
“இல்லையே” என்று ஜெயந்தி தலையாட்டிய விதத்திலேயே அப்படி தான் என்று அங்கிருந்தவர் அனைவருக்கும் புரிந்தது… சிறு வயதில் இருந்து அவளை பார்ப்பவர்கள் அல்லவா.
கோபாலனுக்கு கோபமும் ஆத்திரமும் பெருக.. வெளியில் சென்று “என் பொண்ணை அடிச்சியா? எனக்கு அப்போவே தெரியும் நீ என் பொண்ணு பின்னாடி தான் வர்றன்னு. எனக்கு உனக்கு கொடுக்கவே இஷ்டமில்லை. என்னென்னவோ பண்ணி என் பொண்ணை கல்யாணம் பண்ணி, இப்போ அடிக்கிறியா!” என்று கத்தினார்…
சுற்றியிருந்தவர்கள் எல்லாம் பார்க்க.. அப்படி ஒரு தலையிறக்கமாய் போனது மருதுவிற்கு,
“அப்பா என்ன பேசறீங்க” என்று ஜெயந்தி வேகமாய் வெளியில் வர.. அவளின் முகமமும் அப்படியிருக்க..
“நீ சும்மாயிரு, உன்னை அடிச்சிட்டு இவன் ஊருக்கு பஞ்சாயத்து பண்றானா?” என்று கோபாலன் அப்படி ஆத்திரத்தில் கத்தினார்.
அருமை பெருமையாய் வளர்த்த மகள். வசதி வாய்ப்புகள் இருந்ததோ இல்லையோ அவள் அந்த வீட்டின் இளவரசி தான். ஏன் ஜெயந்தி மருதுவுடன் திருமணதிற்கு சரி என்று சொன்ன போதும், அவருக்கு அதில் ஒப்பில்லாத போதும், சரி என்று தான் சொன்னார்.
அவருக்கு முதலில் இருந்து மருது சரியில்லை என்ற எண்ணம் தானே!
“உள்ள போங்க பேசிக்கலாம்” என்று பொறுமையை இழுத்து பிடித்து மருது சொல்ல,
“அப்பா வாங்க” என்று விமலன் உள் இழுக்க…
“என்னடா உள்ள போய் பேசறது? தெரியட்டுமே இவன் லட்சணம் எல்லோருக்கும்” என்று அப்போதும் அவர் எகிறினார்.
யாரோ ஒருவன் “மருதுண்ணா, அப்படியெல்லாம் அடிக்க மாட்டார். சும்மா கத்தாதீங்க, அப்படி அடிச்சார்ன்னா அதுல நியாயமான காரணம் இருக்கும். எங்களுக்கு அவரை எத்தனை வருஷமா தெரியும் தெரியுமா? உங்க பொண்ணு என்ன பண்ணினாங்களோ?” என்று பேசிவிட..
“ஏய் என்னடா பேசற நீ?” என்று விமலனும் கமலனும் பேசியவனை நெருங்க.. ஜெயந்தியால் இதனை தாளவே முடியவில்லை.. அழுகை பொங்க உள்ளே சென்று விட்டாள்.
“என்ன முருகா?” என்று பேசியவனை அதட்டியவன்.. “அது தெரியாம பட்டுடுச்சு, அவங்க தான் புரியாம பேசறாங்கன்னா, நீ அண்ணியை பேசுவியா, நீ அவ்வளவு பெரிய ஆளா?” என்று மருது கர்ஜித்தான்.
“இல்லண்ணா, உங்களுக்கு யாருமில்லைன்னு குற்றம் சொல்றாங்களோன்னு கோவம் வந்துடுச்சு சாரிண்ணா” என்று அவன் ஜகா வாங்கி..
“ண்ணா அண்ணியை கூப்பிடுங்க நான் மன்னிப்பு கேட்கறேன்” என்றான்.
“மன்னிபெல்லாம் வேண்டாம், நான் சொல்லிக்குவேன். ஆனா இனிமே ஒரு வார்த்தை கூட தப்பா வரக் கூடாது. வந்தது நான் என்ன செய்வேன்னு தெரியாது” என்று அவனை மிரட்டிக் கொண்டிருக்க..
“நடிக்கிராண்டா, என் பொண்ணை அடிச்சிட்டு நடிக்கிராண்டா, பூ மாதிரி வெச்சிரோந்தோம்டா” என்று அவர் பேச, மருது அவரை பார்த்த பார்வையில், அவரை வீட்டின் உள் கலைச்செல்வி இழுத்து சென்றார்.
“சூழ்நிலை சரியில்லை, நீங்க வீட்டுகிட்ட இருங்க, நான் சாயந்தரம் வேம்புலியம்மன் கோவிலுக்கு வந்து உங்களை கூப்பிட்டு விடறேன், பேசிக்கலாம்” என்று அவர்களை அனுப்பிவிட்டு உள்ளே வந்தான்.
எல்லோர் முன்னேயும் கோபாலன் பேசியது அவனுக்கு ஆத்திரத்தை கொடுத்து இருந்தது.   
ஜெயந்தி அங்கே தேம்பி தேம்பி அழ, “என் பொண்ணை இப்படி பண்ணி வெச்சிருக்கியே நீ” என்று பேச…
“என்ன பண்ணி வெச்சிருக்கேன்? ஒரு அடி அடிச்சிட்டேன், அது காயம் ஆகிடுச்சு, உங்க பொண்ணை அடிக்கலை, என் பொண்டாட்டியை தான் அடிச்சேன். அது என்னவோ எங்களுக்குள்ள! எல்லார் முன்னையும் மரியாதையில்லாம பேசறதை விடுங்க” என்று கோபமாய் பேசினான்.
“என்ன? என்ன பண்ணுவ? என்னையும் அடிப்பியா, அடி, அடிடா” என்று அவர் நெஞ்சை நிமிர்த்தி அவனிடம் எகிறி எகிறி பேச,
“டேய், இவரை கூட்டிட்டு போங்கடா” என்று விமலனையும் கமலனையும் பார்த்து சொன்னான்.
அவர்கள் இருவரும் என்ன செய்வது என்று தெரியாமல் நின்ற போதும் இப்படி அடித்திருக்கிறான் என்பது அவர்களுக்குமே வருத்தத்தையும் கோபத்தையும் கொடுக்க அசையாமல் நின்றார்கள்.
அதற்குள் ஜெயந்தி “அப்பா பேசாம இருங்க” என்று சொல்ல,
“என்ன பேசாம இருக்குறது? காசு பணம் இருந்தா ஆச்சா? ரவுடி பய! யாருமில்லாத பய! இவனுக்கு பொண்ணு குடுத்ததே பெருசு? இப்படி அடிச்சதையும் பார்த்து பேசாம இருந்தா, அப்புறம் நாங்க எல்லாம் எதுக்கு மீசை வெச்சு சுத்தணும், நீ எங்க பொண்ணும்மா?” என்று ஏகத்திற்கும் எகிறினார்.
அப்பா என்ன பேசறீங்க தப்பு நீங்க பேசறது என்று ஜெயந்தி பதறி பேச..   
அவரின் வார்த்தைகள் அப்படி ஒரு காயத்தை மருதுவிற்கு கொடுக்க “என்ன பண்ணுவ நீ என்னை?” என்று மருதுவும் மரியாதை விட்டு கோபாலனை நெருங்கினான்.
அப்பாவை அடித்து விடுவானோ என்று அவசரமாய் ஜெயந்தி இடையில் வந்தவள் “ஏதோ என் மேல இருக்குற அக்கறையில பேசறாங்க, ப்ளீஸ் சண்டை வேண்டாம், அப்பா பேசினதுக்கு நான் மன்னிப்பு கேட்கறேன், நான் அப்பா கிட்ட சொல்றேன்” என்று பயந்து சொன்னாள்.
“அப்போ உன் மேல எனக்கு அக்கறை இல்லை, அப்படி தானே” என்று அவளை பார்த்து வார்த்தைகளை நிறுத்தினான்.
ஜெயந்தி அப்படி சொல்லலை என்று பேச வர..
“ஷ்” என்று அவளை ஒற்றை விரல் வாயில் வைத்து பேசாதே என்பது போல மிரட்டியவன்,   
“எப்போ பார்த்தாலும் என்னை அசிங்கப் படுத்தறதே உங்களுக்கு வேலையா போச்சு. ஒரு கடை திறந்தா உனக்கு வர முடியலை. நம்ம கடை இருக்கும் போது அடுத்த கடைக்கு போய் வாங்கிட்டு வர்ற, இப்போ எல்லோர் முன்னாடியும் உங்கப்பா என்னை என்னவோ பொண்டாட்டியை கொடுமை பண்றவன் மாதிரி பேசறார்”
“அன்னைக்கு ஸ்டேஷன்ல போய் உன்னை உட்கார வெச்சாங்களே அப்போ இப்படி எகிறி குதிச்சானா உங்கப்பன், நான் வரலைன்னா அன்னைக்கு உனக்கு எவ்வளவு பிரச்சனை ஆகியிருக்கும் தெரியுமா?”
“நன்றி கெட்ட மனுஷங்க நீங்கல்லாம்.. எல்லோர் முன்னயும் என்னை பேசுவீங்களா” அவனால் இந்த அவமானத்தை தாங்கவே முடியவில்லை..
“அதுவும் நான் ரவுடி பய, யாருமில்லாத பயலா, அப்படி கஷ்டப்பட்டு எல்லாம் பொண்ணு குடுத்திருக்க வேண்டாம்..”     
“இந்த ஏரியாலா ராஜா மாதிரி இருந்துட்டேன், இப்படி எல்லார் முன்னையும் என்னால அசிங்கப்பட்டு வாழ முடியாது.. நீ அவங்க பொண்ணாவே இருந்துக்கோ. நீ தயவு செஞ்சி கிளம்பிடு” என்று தாட்சன்யமின்று உரைக்க..
ஜெயந்தி சிதிலமடைந்த சிலையாய் நின்று விட்டாள்!             
            

Advertisement