Advertisement

அத்தியாயம் பதினெட்டு :
காலையில் இதமான வெயில் முகத்தில் பட்ட போது மருதுவிற்கு விழிப்பு வந்து விட்டது.. ஆனால் அப்போதும் ஜெயந்தி உறங்கிக் கொண்டிருந்தாள். மாத்திரைகளின் தாக்கம்.. எழுந்தவன் அவளின் அருகில் சென்று மண்டியிட்டு அவளின் முகத்தை பார்த்தான்..
நேற்றை போல தான் இருந்தது வீக்கம், குறைந்தது போல தெரியவில்லை… முகமே என்னவோ போல இருக்க.. மெதுவாக அவளின் முக வீக்கத்தை தன் கட்டு போடாத கையினால் தொட்டு பார்த்தான். “ஷ்” என்று தூக்கத்திலேயே தலையை அசைத்தவள் அப்போதும் தூக்கத்தை தொடர்ந்தாள்.
ஒரு அறை தானே விட்டேன், அதுக்கு இப்படி ஆகுமா என்று யோசனை செய்து கொண்டே இவளை பார்த்தவன்.. சுற்றியும் பார்க்க, பக்கத்தில் கட்டடங்கள் இருந்தாலும் இவர்கள் படுத்திருந்த இடம் அப்படி ஒன்றும் எல்லோர் பார்வைக்கும் வராது.. இருந்த போதும் அவளை ஜெயந்தி என்று எழுப்பினான்.
“ம்ம்” என்று அசங்களாய் விழி திறக்க, “விடிஞ்சிருச்சு உள்ள போய் படு, எழுந்திரு” என்றான்.
“ம்ம்” என்று சோர்வாய் எழுந்தவள்.. அப்படியே போக.. அந்த தலையணை படுக்கை விரிப்பை அவன் தான் தூக்கி கொண்டு போனான்..
அவன் கீழே சென்ற போது மீண்டும் படுக்கையில் படுத்து உறங்கி இருந்தாள். பாதி உறங்கியும் உறங்காத நிலை. ஆரோக்யமான பெண் ஜெயந்தி அதிகம் வலிகளை பார்த்ததில்லை. தலைவலி உடல்வலி வயிற்று வலி என்று எதுவுமே அவளின் உடல்வாகிற்கு இருந்ததில்லை..
அதனால் சிறு வலி கூட தாங்க மாட்டாள்.. இப்போது மாத்திரைகளின் தாக்கம், கூடவே மாதந்திர தொந்தரவு… விழுந்தத்திலும் இடுப்பில் வலி, மாத்திரைகள் இருந்தாலும் அதையும் மீறி முகத்தில் வலி..
அவளால் எழ முடியாது என்று புரிந்தவன், அவளுக்கு பசிக்கும் என்று பால் எடுத்து டீ வைப்பதற்காக அடுப்பை பற்ற வைத்தான்.
என்ன வேலை செய்தாலும் டீ மாஸ்டர் வேலையை அவன் அதனை விட்டதில் இருந்து செய்ததில்லை.. இன்று செய்தவன் அதோடு போய் அவளை எழுப்பி, “குடிச்சிட்டு படு ராத்திரியும் ஜூஸ் தான் குடிச்ச” என்றான்.
எழுந்தவள் அதனை கையில் வாங்கியதும் “சுடுது.. புன்னு வலிக்கும் கொஞ்சம் ஆற வைச்சு குடுங்க” என,
பதமாய் ஆற்றி அவன் கொடுக்கவும் குடித்தவள், “டீ நல்லா இருக்கு” என சிலாகிக்க..
“அதுதானே என்னோட வேலை, அது உனக்கு தெரியுமா? நான் சொல்லியிருக்கேனா? எனக்கு ஞாபகமில்லை” இப்படியெல்லாம் நினைத்து புரியாத பார்வை பார்த்தான்.
அதை அவன் நம்பாத பார்வை பார்ப்பது போலத் தெரிய..
“நிஜம்மா” என்று அவள் சொல்ல,
“டீ மாஸ்டர் கிட்ட டீ நல்லா இருக்குன்னு சொல்ற” என்றான் அமைதியாக.
“டீ மாஸ்டரா” என்றாள்..
“ம்ம் கிட்ட தட்ட எட்டு வருஷம் இருந்தேன்”  
“ஓஹ்” என்று மட்டும் சொன்னாள்.. பயமாய் இருந்தது அவனை பற்றி ஒன்றும் தெரியாது.. “நீ கேட்கவில்லை” என்று அவன் சண்டையும் போட்டு அடித்தும் விட்டான்.. இப்போது நான் என்ன செய்ய வேண்டும்.. புரியாமல் புரியாத பார்வை பார்த்தாள்..
இப்போது உங்களை பற்றி சொல்லுங்கள் என்பது நன்றாய் இருக்காது.. உண்மையில் அப்போது கூட அவனை தெரிந்து கொள்ள ஆர்வம் தான். ஆனால் அவனின் கடந்த காலம் தெரிந்து கொள்ள ஆர்வம் இல்லை.
நல்ல நிலையில் இருக்கும் போதே இல்லை.. இப்போது வலி வேறு! என்ன பேசுவது என்று புரியாமல் “இன்னொரு கப் கிடைக்குமா” என்றாள்.
தலையாட்டி அவன் போக, சோர்வாய் கண்களை மூடினாள்.. முதல் முறை அவனை பார்த்த போது, இல்லை அவன் திருமணதிற்கு முன் சண்டையிட்ட போது, திருமணத்தின் போது, இங்கே வந்த போது என எப்போதும் இல்லாத பயம் மனதில். அவனிடம் எப்படி நடந்து கொள்வது என்ற பயம்.   
மருதுவிற்கு தன்னை பிடிக்கும் என்று தெரியும்.. இத்தனை எதிர்பார்ப்பு தெரியவில்லை.. எல்லாம் சரியாக வேண்டும்.. அவனுக்கு பிடித்த மாதிரி நானும் நடக்க வேண்டும்.. அவனின் எதிர்பார்ப்புகளை அவன் சொல்லாமலேயே நானே கண்டு கொண்டு பூர்த்தி செய்ய வேண்டும், அதனையும் விட முதலில் குழந்தை பெற்று கொள்ள வேண்டும்.. குடும்பம் விரிவானால் மனகசப்புகள் இருந்ததோ இருகின்றதோ குறையும்..  
என்னென்னவோ தோன்ற, அதற்குள் அவன் டீயோடு வர.. எழுந்து அமைதியாக குடித்தவள்.. பின் ரெஸ்ட் ரூம் சென்றாள்.
இந்த முறை அவள் எதுவுமே சொல்லாதது, மருதுவிற்கு தான் டீ மாஸ்டர் என்று சொன்னதால் அதனை அவளால் சகித்து கொள்ள முடியவில்லை போல என்று நினைத்துக் கொண்டான்.
மனம் சில சமயம் மாயையில் சிக்கி விட்டால் இல்லாதது இருப்பது போல தோன்றும் இருப்பது இல்லாதது போல தோன்றும்..
“ஏன் திறப்பு விழாவிற்கு வரவில்லை” என்று கேட்டதற்கு, “வந்தால் உங்களை விட்டு என்னால் இருக்க முடியாது, அதனால் வரவில்லை” என்று ஜெயந்தி சொன்னதேல்லாம் ஞாபகத்திற்கு வரவில்லை..
வெளியே வர காத்திருந்தவன்.. “என்ன ஃடிபன் வாங்கிட்டு வரட்டும்” என்று கேட்க..
“ஏழு மணி தானே ஆகுது எட்டு மணி மேல பார்த்துக்கலாம்” என்று சொல்லி படுத்துக் கொண்டாள்.
முகத்தினில் இன்னும் வெகுவாய் வீக்கம் இருந்தது, ஒரு புறம் கண்ணே சிறிதாக தெரிந்தது. அதனை சுற்றி வீக்கம்.
“ஐஸ் கொண்டு வரட்டுமா” என்றான்.
“வேண்டாம் வலிக்குது”  
“வெச்சா தான் குறையும்” என்று சொல்லி எடுத்து வந்து அமர்ந்தவன், ஐஸ் எப்படி அவளுக்கு சிரமம் கொடுக்காமல் வைப்பது என்று யோசித்து பின் அவனின் மடியை காண்பித்தான்..
ஜெயந்தி மறுக்கவோ தயங்கவோ இல்லை வாகாய் அவன் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டாள்.. “வலிக்குது” என்று சொல்ல சொல்ல விடாமல் வைத்தான்..
அவனின் ஒரு கையில் கட்டு இருக்க.. அவன் ஒரு கையில் தான் டீ வைத்தான், இப்போது ஐஸ் வைத்து கொண்டிருந்தான்.
அவன் சுவரில் சாய்ந்து கால் நீட்டி அமர்ந்திருக்க.. அவனின் மடியில் வீக்கம் இருந்த பக்கம் முகம் தெரியுமாறு தலை வைத்து படுத்து இருந்தவள்.. அவனின் இடுப்பை சுற்றி கை போட்டு கொண்டாள், உதறிவிடுவானோ என்ற பயத்தோடே.. அதனை தாங்கும் சக்தியெல்லாம் கிடையாது.  
எதையும் கவனிக்காமல் அவளுக்கு ஐஸ் வைப்பதை மட்டுமே கருத்தாய் செய்து கொண்டிருந்தான்.
அவள் வலியில் முகம் சுளிக்க சுளிக்க.. அவனின் தப்பிற்கு அவனுக்கு ஆத்திரம் பெருகியது அவன் மீதே!
காலிங் பெல் சத்தம் கேட்க, “யாருன்னு பார்க்கிறேன்” என்று மருது எழ.. மனமேயில்லாமல் அவனை விட்டு விலகி தலையணையுள் முகத்தை புதைத்துக் கொண்டாள்..
“அணைத்து கூட பிடிக்க மாட்டானா என்னை” என்று தோன்றியது.
உடலின் வலியோ? மனதின் வலியோ? அவனின் அணைப்பிற்கு ஏங்கியது..
கூடவே “எப்படி இப்படி உன்னை அடித்திருக்கிறான், பதிலுக்கு நீ அவனை அடிக்கா விட்டால் போகிறது, அவனை தேட வேறு செய்வாயா நீ” என்று மனம் சாடியது.
மருது கதவை திறக்க.. விமலன் நின்று கொண்டிருந்தான்..
இந்த நேரத்திற்கு இவன் எதற்கு வந்தான் என்று மருது பார்க்க, மருதுவை பார்த்ததும் முதலில் அவனுக்கு தெரிந்தது மருதுவின் கையின் கட்டு..
“என்ன ஆச்சு மாமா? என்ன கைல கட்டு?” என்றான் வேகமாக.. “சர்” என்ற அழைப்பு தான் பொதுவாய், எப்போதாவது வீட்டில் பார்க்கும் போது தான் “மாமா” என்ற அழைப்பு வரும்.
“என்ன சொல்வது?” என்று தடுமாறினான் மருது, முதல் முறை தடுமாற்றம், செய்தது தவறு என்ற குற்றவுணர்ச்சி அவனை பேச விடவில்லை.
“சின்ன காயம்” என்று பதிலுரைக்க..
“சின்ன காயத்துக்கு எதுக்கு இவ்வளவு பெரிய கட்டு, நேத்து சாயந்தரம் நீங்க ஸ்டோர்ல இருந்து வரும் போது கூட இல்லையே” என்று கேள்வி அடுக்க,
அதற்கு பதில் சொல்லாமல் “என்ன இவ்வளவு காலையில?” என்றான்
“அது அம்மா ஃபோன் இங்க இருக்காம், விட்டுட்டு வந்துட்டாங்களாம், இன்னைக்கு யாரோ முக்கியமா கூப்பிடுவாங்கலாம், அதனால் அதை எடுத்துட்டு வரச் சொன்னாங்க” என்றான்.
அன்று பெண் வீட்டினர் அழைப்பார்கள் என்று காலையிலேயே அனுப்பிவிட்டார். இரவு விமலன் வரும் போதே பத்து மணிக்கு மேல் ஆகியிருக்க அந்த நேரம் அனுப்ப வேண்டாம் என்று காலையில் அனுப்பியிருந்தார்.. 
ஜெயந்தியை பார்த்தால் இவனின் நிலை என்னவாக இருக்கும் என்ற யோசனை மருதுவுக்குளோட அவனை உள்ளே வா என்று கூப்பிட கூட தோன்றவில்லை.. அவன் கைபேசி எடுக்க உள்ளே போக,
விமலன் அவன் அழைக்க வேண்டும் என்றெல்லாம் நினைக்கவில்லை அவனாய் உள்ளே வந்து நின்று கொண்டான்.
உள்ளே இருந்த டீ பாய் மேல், நேற்று மருத்துவமனையில் எடுத்த சீ டீ ஸ்கேன், எக்ஸ்ரே எல்லாம் இருக்க, அதில் இருந்த பேரின் மேல் விமலன் பார்வை பதிக்க “ஜெயந்தி” என்று தெளிவாய் இருக்கவும் அவசரமாய் அதனை கைகளில் எடுத்தான்..
உள்ளே டைனிங் டேபிள் மேல் கலைசெல்வியின் கைபேசி இருக்க, அதனை எடுத்துக் கொண்டு மருது வெளியே வர.. விமலன் கையில் ரிபோர்ட்சை எடுத்து கொண்டு பார்த்துக் கொண்டிருந்தான்.
“என்ன ஆச்சு? ஜெயந்தி எங்கே? உங்களுக்கும் அடி பட்டிருக்கு? அவளோடதும் எக்ஸ்ரே, ஸ்கேன் ரிபோர்ட் எல்லாம் இருக்கு.. நேத்து தேதில இருக்கு.. ஏன் எங்களை கூப்பிடலை? என்ன ஆச்சு வண்டில இருந்து எதுவும் விழுந்துட்டீங்களா?” என்று பட பட வென்று பொரிந்தான்.
கிஞ்சித்தும் மருது மேல் எல்லாம் சந்தேகம் வரவில்லை. விமலனையும் மீறி என்னவோ ஏதோவென்ற பதைப்பில் அவனின் குரல் ஓங்கி ஒலிக்க,
விமலனின் குரல் கேட்கவும் ஜெயந்தி ரூமை விட்டு வெளியில் வந்தாள். அவளை பார்த்ததும் அதிர்ந்து போனான் விமலன்.

Advertisement