Advertisement

அத்தியாயம் பதினேழு :
ஒரு முழு நிமிடம் கூட மருதுவால் அமர முடியவில்லை.. ஜெயந்தியின் அழுகை அவனை அமர விடவில்லை.. வேகமாக எழுந்தவன் அவள் முன் சென்று நின்றான்..
கீழே தரையில் குத்துக்காலிட்டு அமர்ந்து தலையை சுவற்றில் சாய்த்து அழுது கொண்டிருந்தாள்.. இன்னம் ரத்தம் உதட்டில் வந்து கொண்டிருக்க.. பதறி போனான், கூட பயந்தும் போனான்.
அவளின் முகம் ஒரு புறமே வீங்கி இருக்க.. முகமே வித்தியாசமாய் தெரிந்தது.. கண்களும் வீங்கி இருக்க.. அதிர்ந்து விட்டான்.
எப்படி அடித்து விட்டோம்.. என்னவாகிற்று எனக்கு? மனிதனா நான்!
“அழாத ஜெயந்தி.. நான் செஞ்சது தப்பு தான், அழாத!” என்றான்.
“நீ தப்புன்னு சொல்லிட்டா நீ செஞ்சது இல்லைன்னு ஆகிடுமா?” என்றாள் தேம்பிக் கொண்டே..
“நீயும் என்னை அடிச்சிக்கோ, இதை விட அதிகமா காயம் ஆகிற மாதிரி” என்று ஒரு தீர்வு சொல்ல
“உன்னை அடிச்சா என்னோட வலி குறைஞ்சிடுமா?” என்றாள்.
எல்லாம் தேம்பி கொண்டே, பேசினால் உதட்டில் இருந்தா, வாயில் இருந்தா என்று தெரியவில்லை.. ரத்தம் வேறு வந்தது..
வேகமாய் உள்ளே சென்று அவனின் வேஷ்டி துணியை கிழித்து அதை தண்ணீரில் நனைத்து வந்தவன்.. அவளின் உதடை துடைக்க கைகளை நீட்ட..
“ஒன்னும் வேண்டாம்” என்று அவள் சொல்ல…
“பேசாத, பேசாத, பேசினா ரத்தம் வருது.. துடைச்சிடலாம் ஹாஸ்பிடல் போலாம்”  
“நான் துடைக்கவும் மாட்டேன், ஹாஸ்பிடல் வரவும் மாட்டேன், இப்படியே தான் இருப்பேன்”  
“ஜெயந்தி ப்ளீஸ், நான் பண்ணினது தப்பு தான். முகம் வீங்குது, ரத்தமும் வருது, வா போகலாம். எனக்கு பயமா இருக்கு” என்றான் மனதை மறையாது.
“என் புருஷன் என்னை இப்படி அடிச்சிருக்கான்னு தெரிஞ்சா எவ்வளவு அசிங்கம் தெரியுமா எனக்கு.. இப்படி எல்லாம் எனக்கு ஒரு வாழ்க்கை அமையும்னு நான் கனவுல கூட நினைச்சது இல்லை.. நான் வெளில வரமாட்டேன்..” என்று முகத்தை திருப்பிக் கொள்ள..
அவளின் முகத்தை அழுந்த பற்றி அந்த ரத்தத்தை துடைக்க.. உதட்டில் இருந்து தான் ரத்தம்..  
“வாயை திற” என்று சொல்ல..
அவள் வாயை இறுக மூடிக் கொள்ள… வலியில் கண்களில் இன்னும் நீர் இறங்க, அதனை பார்த்தவன் பதட்டத்திலும் பயத்திலும்.. “வாயை திற” என்று அவன் போட்ட சத்தத்தில் வாய் தானாக திறந்தது…
பார்த்தால் பல்லிடுக்கிலும் ரத்தம்..
வேகமாக உள்ளே சென்று ஒரு பாத்திரமும் ஒரு சொம்பில் தண்ணீரும் கொண்டு வந்தவன்.. வாயை கொப்பிளிச்சு துப்பு என்றான்
அவள் பிடிவாதமாய் அமர்ந்திருக்க.. “கொப்பிளிச்சு துப்புடி” என்று மீண்டும் அடிப்பது போல மருது மிரட்டிய விதத்தில் தானாய் அந்த வேலையை செய்தாள். 
“சத்தியமா நான் வேணும்னு செய்யலை.. இதுக்கு தான் ரொம்ப கோபம் வந்தா வெளில போயிடுவேன். தப்பு தான், வா, ஹாஸ்பிடல் போகலாம்… வா போலாம்” என்று வெகுவாய் தணிந்து அழைத்தான்.
“அப்போ என்னை அடிக்க போறீங்கன்னு உங்களுக்கு முன்னமே தெரியுமா?” என்று ஜெயந்தி மீண்டும் அழ…
“அப்படி எல்லாம் எதுவுமில்லை ஜெயந்தி, ப்ளீஸ் வா, என்னை திட்டிக்கோ, அடிச்சிக்கோ, ஹாஸ்பிடல் போகலாம் வா, நிறைய ரத்தம்” என்றான் மன்றாடலாய்.
அவள் அசையாமல் தேம்பியபடி இருக்க…
அவளை விட்டு வேகமாய் சென்று திரும்பவும் ஃபிரிட்ஜில் இருந்து ஐஸ் எடுத்து வந்து அவளின் உதட்டிலும் கண்ணிலும் கன்னத்திலும் வைத்தான்…
சில நிமிடம் விட்டு “இப்போ போகலாமா” என்றான் திரும்பவும்.
“நான் வரமாட்டேன்”  
“எழுந்து வரலை, அடுத்த கன்னமும் பழுத்துடும்”  
“நீங்க என்னை கொன்னே போட்டாலும், நான் வரமாட்டேன், எனக்கு என்னவாவது ஆகட்டும் போங்க, நான் வரமாட்டேன்” என்று கத்தினாள்.
கத்தியதில் நின்றிருந்த உதடு ரத்தம் மீண்டும் வர.. எழுந்து நின்றவன் அவளை தூக்க முற்பட்டான்.
“என்னை தூக்கின, இந்த உதடை நான் இன்னமும் கிழிச்சு வைப்பேன்” என அவளின் உதட்டில் அவளே கையை வைக்க, பதறி விலகி கொண்டான்..
சில நொடிகள் அவளை பார்க்க “நீ என்ன செய்தாலும் நான் வரமாட்டேன்” என்ற பார்வையை கொடுத்தவள்.. “என்னை ரத்தம் வர்ற மாதிரி அடிச்சிட்டல்ல. இந்த என்னோட வலி எனக்கு தேவை தான்” என்று அவனை பார்த்தபடி சொல்ல..
மருது ஒன்றும் சொல்லாமல் உள்ளே போனவன் காய்கறி நறுக்கும் கத்தியோடு வெளியே வந்து அவளின் முன் மண்டியிட்டு அமர்ந்தான்.
“என்ன கத்தியை காட்டி பயப்படுத்தறீங்களா?” என்று அழுது சிவந்த விழிகளோடு அவள் சொல்ல..
“நான் பண்ணினது தப்பு தான், ஆனா சாரி கேட்க மாட்டேன், நான் சாரி கேட்டா செஞ்சது இல்லைன்னு ஆகிடாது.. அதனால உன்னோட வலி உனக்கு தேவைன்னா எனக்கு தேவைதானே.. உன்னோட வலி என்னால வாங்க முடியாது.. இப்போ நீ ஆசுபத்திரி வரலைன்னா அந்த வலியை நான் குடுத்துக்குவேன்” என்று சொன்னவன் அவள் என்ன என்று அனுமானிக்கும் முன்னரே அவளை அடித்த அவனின் உள்ளங்கையை அவள் முன் நீட்டி அந்த கத்தியால் ஒரே கீறாய் கீற ரத்தம் பீச்சி அடித்தது.. மேம்போக்காய் பயப் படுத்த கீறவில்லை.. நல்ல ஆழமான கீறல்.    
அதை கண்டு பயந்தவள் “என்ன பண்றீங்க?” என்று கத்தினாள்.
“தொ பாரு, நான் செஞ்ச தப்பை சரி பண்ண நான் கீறிக்கலை, எனக்கு தண்டனையாவும் நான் குடுத்துக்கலை, அச்சோ நம்ம புருஷன் நம்மை அடிச்சிட்டு இவ்வளவு ஃபீல் பண்ணி அவரோட கையை கிழிச்சிகிட்டறேன்னு நீ நினைக்கறதுக்காகவும் நான் இதை செய்யலை .. இப்போ நீ ஆசுபத்திரி வரணும் அது ஒன்னு தான்.. எந்திரி ஹாஸ்பிடல் போகலாம், இல்லை அடுத்தடுத்து கீறிக்கிட்டே இருப்பேன்” என்று அவளை பார்த்தபடி மீண்டும் கையினை கீற போக.. 
அதற்கு பிறகு எதுவுமே பேசவில்லை.. வேண்டாம் என்பது போல கையை காண்பித்து, அவள் சிரமப்பட்டு எழ.. அணைவாய் முதுகில் கை கொடுத்து தூக்கியவன், வேகமாக டைனிங் ஹால் சென்று அங்கிருந்த வாஷ் பேசினில் பைப்பை திறந்து விட்டு தன் கையை கழுவியவன்.. வேஷ்டி துணியை ஈரப் படுத்தி தன் கையை அதில் சுற்றிக் கொண்டான்.
எல்லாம் மின்னல் வேகம், அப்போது தான் அவள் சுதாரித்து நின்றிருந்தாள்.. அவளை அப்படியே கைபிடித்து சோபாவில் அமர்த்தினான். அவன் பிடித்த கையை ஜெயந்தி விலக்க முற்பட்ட போதும் அவளால் முடியவில்லை. 
அவளை இப்படியே பைக்கில் அழைத்து போக முடியாததால்.. வாயில் காவலாளியை அழைத்து “ஒரு ஆட்டோ பிடி” என்றான் அவசரத்திற்கு..
அவளின் முகமே மாறியிருந்தது.. வீக்கம் ஒரு புறம் முழுவதுமே.. அவளின் முகத்தை விடாமல் பார்க்க.. அவளோ அவனின் கையினை பார்த்து இருந்தாள்..
“இதெல்லாம் ஒன்னும் ஆகாது” என்று அவளிடம் சொல்ல..
“அப்போ அப்போ எதுக்கு பண்ணுனீங்க”
“ம்ம், சும்மா பண்ணினேன்” இதெல்லாம் எனகொன்றுமில்லை என்ற அலட்சிய பாவனையில்.  
“எதுக்கு சும்மா பண்ணனும், என்னை ஹர்ட் பண்ணிட்டீங்கன்னு உங்களை ஜஸ்டிஃபை பண்ண கையை கிழிச்சிக்கணுமா என்ன?”
அவள் வேகமாக பேச உதடு அசைவில் ரத்தம் எட்டி பார்க்க..
பேசவேண்டாம் என்று சைகை செய்தவன்.. “நான் முதல்லையே காரணம் சொல்லிட்டேன், உனக்கு அது ஒப்பலைன்னா உனக்கு சரியான பிறகு பேசு” என்று முடித்துக் கொண்டான்.. அவள் சொன்னதும் புரியவில்லை.. சில ஆங்கில வார்த்தைகள் இருக்க, அது சொல்லும் சரியான அர்த்தம் வேறு புரியவில்லை..     
ஆட்டோ கேட்டின் வாயிலில் நிற்கும் சத்தம் கேட்க..
“போகலாம்” என்று அவன் எழ..
வெளியில் வந்து வீட்டை பூட்டும் போது தான் அவளின் முக லட்சணம் வீட்டின் கதவு பக்கத்தில் இருந்த ஆளுயர கண்ணாடியில் தெரிய.. மீண்டும் ஜெயந்தியின் கண்களில் நீர் நிறைந்தது..
“வலிக்குதா?” என்றான் அவளை பார்த்து..
“ப்ச்” என்று சலித்தவள் “உங்க கர்சீப் குடுங்க” என்றாள்.
அவனது பெரிய கர்சீப்.. அவன் என்ன என்று புரியாத போதும் தன்னுடைய பேன்ட் பேக்கட்டில் இருந்ததை எடுத்து கொடுக்க,
அதனை வாங்கி முகத்தில் கண்களை மட்டும் விட்டு அதற்கு கீழே கட்டினாள்.. பின்பு போகலாம் என்பது போல சைகை..
இருவரும் ஆட்டோவில் ஏற.. அப்போது தான் கவனித்தாள் அவனின் கைகளிலும் ரத்தம்.. அவன் சுற்றியிருந்த வெள்ளை துணியையும் மீறி..
என்ன இது மனது சலிப்பாக உணர.. சோர்வாக கண்களை மூடிக் கொண்டாள்.. வலி உயிர் போனது. உதடு கன்னம் இரண்டையும் மீறி.. உடலில் வலி எங்கே என்று சொல்லவே தெரியவில்லை.. அடித்ததில் அப்படியே கீழே விழுந்தது வலித்தது..
அவனின் ஏரியாவிற்கு சற்று தள்ளி இருந்த பெரிய ஹாஸ்பிடல் ஒன்று சென்று கேசுவாலிட்டியில் காண்பித்தனர்.. இரவு மணி எட்டிற்கும் மேல் ஆகியிருக்க.. டாக்டர்ஸ் பிசியாக பேஷண்ட்ஸ் பார்த்துக் கொண்டிருக்க.. டியூட்டி டாக்டர் மட்டுமே அங்கிருந்தான்.   
அவளின் உதட்டு காயத்தை சுத்தம் செய்து கொண்டிருந்த டியூட்டி டாக்டர் “எப்படி ஆச்சு?” என்று கேட்டான். அவனுக்கு ஒரே சந்தேகம் இந்த பெண்ணை யாரேனும் ஏதாவது செய்திருப்பரோ இல்லை இவனே கூடவோ என்பது போல.. கண்டிப்பாக ஜெயந்தியின் மேல் நாட்டு தோற்றம்.. மருதுவின் தமிழ் நாட்டு தோற்றம்.. ஒட்டவில்லை.. அவனை எதோ சிந்திக்க செய்தது..      
“நான் அடிச்சிட்டேன்” என்று சொல்ல ஆரம்பித்த மருது.. “நான்” என்று ஆரம்பிக்கும் போதே சொல்ல வேண்டாம் என்ற பார்வையை ஜெயந்தி பார்க்க.. அவன் வாயை மூடிக் கொண்டான்..
“லிப்ஸ் தான்றதால் தையல் தேவையில்லை” என்று சொன்னவன், “என்ன ஆச்சு கன்னத்துல, முகமும் வீங்கி இருக்கு” என்று கேட்க..
“அடி பட்டுடுச்சு” என்றான் மருது,
உடனே “எப்படி?” அந்த டாக்டர் கேட்க..
“சொல்லாதே” என்ற பார்வையை மீண்டும் ஜெயந்தி பார்க்க..
ஏற்கனவே தன்னால் என்ற குற்றுவுணர்சியில் இருந்தவன் “இவ சொல்ல வேண்டாம் சொல்றா, அவன் துருவி துருவி கேட்கறான்” என்று எரிச்சல் ஆனவன்,
“ஏன் சொல்லலைன்னா ட்ரீட்மென்ட் குடுக்க மாட்டீங்களா?” என்று மருது கோபப்பட்டான்.
“என்ன சர் சத்தம் போடறீங்க, இங்கல்லாம் போடக் கூடாது” என்று அங்கிருத்த சிஸ்டர் சொல்ல..
“போட்டா என்ன பண்ணுவ?” என்று அடுத்த நிமிடம் மருது எகிறியிருந்தான்.
“என்ன கலாட்டா இது? நீங்க முதல்ல வெளில போங்க” என்று அந்த டாக்டர் கூற..
அவ்வளவு தான் மருதுவிற்கு வந்ததே கோபம்.. அங்கிருந்த சேரில் அமர்ந்து கால் மேல் கால் போட்டுக் கொண்டவன்… “நானே நல்லவனா இருக்கணும்னு நினைச்சாலும் விட மாட்டீங்கடா.. ஒழுங்கா வாய் பேசாம ட்ரீட்மென்ட் பண்ற, இல்லை நீ இந்த ரூமை விட்டு வெளில போக மாட்ட” என்று டாக்டரை பார்த்து சொன்னவன்..
“நீ கிளம்பு முதல்ல வேற நர்ஸ் அனுப்பு கிளம்பு போ” என்று அந்த நர்சை பார்த்து சொன்னான்.
அந்த நர்ஸ் வெளியே சென்று அங்கிருந்த இரண்டு மூன்று பேரை அழைத்து வர.. அவர்களுடன் வந்த ரிசப்ஷனில் இருந்தவனும் செக்யுரிட்டியும் “அண்ணாத்தே நீ எங்க இங்க” என்று பவ்யமாய் அவனின் முன் நின்றனர்.
“இன்னாடா ஆசுபத்திரி நடத்தறீங்க.. வைத்தியம் பாருடான்னு சொன்னா ஆயிரத்தெட்டு கேள்வி கேட்கறான்” என்று அவன் பேசும் போதே..
“என்ன அண்ணாத்தே? என்ன ஆச்சு.. யாருக்கு..” என்று பார்வையை சுழல விட்டவர்கள், “அண்ணி, அண்ணிக்கா என்ன ஆச்சு அண்ணாத்தே? உன் கைல இன்னா கட்டு” என்று பதறினர்.
“எனக்கொன்னுமில்லை, அவளுக்கு என்னன்னு பார்க்க சொல்லுங்கடா”  
ஜெயந்திக்கு இந்த களேபரம் எல்லாம் பிடிக்கவில்லை “நாம் வேற ஹாஸ்பிடல் போகலாம், இங்க வேண்டாம்” என்று அதற்குள் ஜெயந்தி கிளம்ப முற்பட..
“சரி” என்று அவனும் எழுந்து கொண்டான்.

Advertisement