Advertisement

அவர் கேட்டை தாண்டி செல்லும் வரை பார்த்து நின்றவள் அவர் சென்று விட்டார் என்று தெரிந்ததும்…
“எங்கம்மாவை வாங்கன்னு கூட உங்களால சொல்ல முடியாதா? சரி, சொல்ல வேண்டாம்! அவங்க சொல்லுபோது தலை கூட அசைக்க முடியாதா? என்கிட்டே பேசுங்க பேசாம போங்க, ஆனா எங்க அம்மா அப்பாக்கு நீங்க கண்டிப்பா மரியாதை குடுக்கணும். இப்படி முகத்தை திருப்பக் கூடாது” என்று கோபமாக பேச…  
“குடுக்க மாட்டேன், என்ன பண்ணுவ?” என்றான் இருந்த ஆத்திரத்தில்.. 
“என்னால ஒன்னும் பண்ண முடியாதுன்னு தான் இப்படி பண்றீங்களா?” என்றாள் அவளும் ஆத்திரமாக.
“உன்னால ஒன்னும் பண்ண முடியாதா?…. என்ன பண்ண முடியாது?” என்று நிறுத்தி அவளை ஒரு பார்வை பார்க்க.. அந்த பார்வையில் இருந்த குற்றச்சாட்டு, அதன் தீவிரம்.. உள்ளுக்குள் குளிர் பிறக்க செய்தது. 
“என்ன செஞ்சேன் நான்?” என்று மனது கேட்டாலும் வாயில் வார்த்தைகள் வரவில்லை.. கண்கள் அதனை பிரதிபலிக்க…     
“நீ என்ன செஞ்சியா? என்னோட நிம்மதியை எடுத்துகிட்ட. நான் வாழ்க்கைல சந்தோஷமா இருந்தேன்னா தெரியாது. ஆனா நிம்மதியா இருந்தேன்.  உன்னால என்னோட நிம்மதி போச்சு, உன்னை ஏன் கல்யாணம் பண்ணினேன்னு வருத்தப் படாதா நாளில்ல”
“அவ்வளவு ஏன்? உன்னை பார்த்த நாள்ல இருந்து எனக்கு என்ன ஆச்சுன்னே தெரியலை, அதுக்கு முன்ன அவ்வளவு சந்தோஷமா இருந்தேன்” என்று பொரிய
அப்படியே நின்று விட்டாள்..
“சந்தோஷமா இல்லை சொல்றான், இருந்தேன் சொல்றான், இப்படி இவனை மாத்தி மாத்தி தடுமாறி பேசற அளவுக்கு நான் என்ன பண்ணினேன்.. என்ன நிம்மதி பறிச்சேன்..?” மனது ஓலமிட..  
“நான்.. நான் என்ன பண்ணினேன். நீங்க இவ்வளவு பேசற அளவுக்கு. நான் எதுவுமே பண்ணலையே?” என்று சொல்ல..  
“எதுவுமே பண்ணலையா? என்ன பண்ணலை நீ? பிடிச்சிருந்தா, பிடிச்சிருக்கு சொல்லணும், இல்லை வேண்டாம் சொல்லணும். அதை விட்டு போனாப் போகுதுன்னு என்னை கல்யாணம் பண்ணுவேன்னு சொல்வியா.. அப்படி என்ன நான் கீழ போயிட்டேன். உன்னை விட என்ன குறைவு நான்.. படிக்கலை, அது ஒன்னு தானே, வேற என்ன? என்னவோ நீ எனக்கு வாழ்க்கை பிச்சை போடற மாதிரி பேசின”
“நீ எனக்கு வேண்டாம்னு தான் ஒதுங்கி போனேன். அப்படியும் என்னவோ உன்னை விட முடியாம ஊர்ல வேற பொண்ணே இல்லைன்ற மாதிரி ரெண்டு வருஷம் கழிச்சும் உன்னையே கல்யாணம் பண்ணிக்கிட்டேன்”
“கல்யாணத்துக்கு முன்ன என்னை பத்தி உன்கிட்ட சொல்ல எவ்வளவோ முயற்சி பண்ணினேன். நீ கேட்கவேயில்லை! ஏன் கேட்கலை தெரியுமா? கேட்டா உன்னால என்னை கல்யாணம் பண்ணிக்க முடியாம போயிடுமோன்ற உன் எண்ணம் தான்” என்று அவன் பேச..
அவளின் கண்கள் சாசறாய் விரிந்தன, மனதும் அடித்துக் கொண்டது. என்னை இவனுக்கு இவ்வளவு தெரியுமா என்பது போல..
மருது நிறுத்தவேயில்லை.. ஆத்திரத்தில் பேசிக் கொண்டே போனான்…
“என்னோட சின்ன வயசு, என்னோட வளர்ச்சி, என்னோட விஷயங்கள், என்னோட செயல்கள், என்னோட மனைவியை வர்றவளுக்கு தெரியணும்னு எனக்கு இருக்காதா.. நான் யார் கிட்ட என்னை பத்தி சொல்வேன்? எனக்கு யார் இருக்கா? அப்பாவா? அம்மாவா? யாரு? அவங்க ரெண்டு பேர் முகத்தை கூட பார்த்தது கிடையாது!”
“எனக்கு எல்லாமே நீதானடி.. உன்னை விட்டா எனக்கு யார் இருக்கா? அப்போ நீ என்னை பத்தி தெரிஞ்சிக்க மாட்டியா? அது நல்லதோ கெட்டதோ தெரிஞ்சிக்கணும் தானே! ஒரு வேளை நான் கெட்டவன்னா என்னை விட்டு போயிடுவியா”
“தாராளமா போ! ஆனா அதை தெரிஞ்சிக்காம கூட இருக்கணும்னு நினைக்கறது, எனக்கு என்னை நினைச்சு ரொம்ப அசிங்கமா இருக்கு” என்று அவன் சொல்லும் போது அவனின் குரல் கூட ஆதங்கத்தில் கமறியது…
ஜெயந்திக்கு அவன் சொன்ன விதத்தில் கண்களில் நீர் வர… 
அதை பார்த்து இன்னும் கத்தினான்..    
“உனக்கு வெளிநாடு போக ஆசைன்னு போன்னும் சொன்னேன். ஆனா நீ என்னை ஒரு நிமிஷம் கூட நினைக்கலை.. எனக்கு யார் இருக்கா? எனக்கு யார் இருக்கா உன்னை விட்டா.. என்னை பார்க்க வாங்கன்னு கூட கூப்பிடலை. என்னை கூப்பிட வேண்டாம், பார்க்கணும் போல இருக்குன்னு சொல்லியிருந்தா கூட நான் வந்திருப்பேனே”  
“ஊரே மெச்சர மாதிரி ஒரு கடையை கட்டி, அதோட திறப்பு விழாவுக்கு வான்னு சொன்னா உன்னால வரக் கூட முடியலைல்ல.. என் மனசு, என் சந்தோசம் விடு.. நான் உன்னை தேடுவேன் எல்லாம் விடு.. ஊர்ல என்னை பத்தி என்ன நினைப்பான்”
“இந்த ஏரியாக்குள்ள இருக்கிற எல்லோருக்கும் என்னை தெரியும்… எல்லோரையும் கூப்பிட்டு இருக்கோம், எல்லோருக்கும் சாப்பாடு போடறோம், வர்றவங்களுக்கு இலவசமா பொருள் குடுக்கறோம், இவ்வளவு செய்யறோம்”
“எல்லோரும் அண்ணி எங்கன்னு கேட்கும் போது என்ன சொல்வேன்.. லீவ் போட்டு கூட்டிட்டு வர மாட்டீங்களான்னு கேட்கறான்.. அவங்க வந்து போற செலவெல்லாம் ஒரு செலவா உங்களுக்கு, ஏன் கூப்பிடலை கேட்கறான்?”
“நீ வரலைன்னு யார் கிட்டயாவது என்னால சொல்ல முடியுமா?”
“உன் அண்ணன் தம்பின்னு ரெண்டு பேரும் அங்க தானே இருக்காணுங்க, அவனுங்க உன்கிட்ட சொல்லி வர சொல்லக் கூடாதா? உன் அப்பா அம்மா சொல்லக் கூடாதா?.. எனக்கு ஒரு அப்பா அம்மா இருந்தா அதை சொல்லியிருக்க மாட்டாங்களா? அப்போ உன் வீட்டு ஆளுங்க எனக்கு யாருமே இல்லை தானே!” என்று கத்தினான்.
ஜெயந்திக்கு பதில் பேச முடியவில்லை.. இப்படி கோர்வையாய் பேச அவளுக்கு வருமா என்று கூட தெரியாது..
உண்மையில் அவன் சொல்லும் குற்றச்சாட்டிற்கு அது அப்படி இல்லை என்று நியாயப் படுத்தும் பதில் அவளிடம் கிடையாது.. இப்போது அவன் பேச பேச தப்பு தான் என்று தோன்றியது.. இந்த கோணங்கள் அவள் நினைத்தது இல்லை.. நிச்சயம் வேண்டுமென்றும் செய்யவில்லை.. தெரிந்தும் செய்யவில்லை..    
ஆனால் அவள் வீட்டினர் எல்லோருக்குமே இவனிடம் ஒரு ஒதுக்கம் பயம் இருக்கும்.. இருவரின் திருமணம் பேசியதுமே அது தானாய் வந்து விட்டது..   
“அவங்களுக்கு உங்களை பார்த்தா பயம்” என்று அவர்களுக்கு பரிந்து பேச.. 
“எதுக்கு பயம்? எதுக்கு பயம்? என்னவோ என்னை கொலைகாரன் ரேஞ்சுக்கு நினைச்சா பயம் வராம என்ன வரும்? இந்த ஆறு வருஷமா இந்த ஏரியால இருக்கீங்க? என்ன பண்ணினேன், அப்படி பெருசா அக்கிரமம் அநியாயம் செஞ்சிட்டேன்.. நீங்க யாருமே என்னை நல்ல விதமா நினைக்கவேயில்லை” என்று அப்படி ஒரு கத்து கத்தினான்.
“இல்லை, இல்லை, அப்படி எல்லாம் இல்லை” என்று ஜெயந்தி அவனின் கத்தலில் பதறி பதில் சொல்ல..
“ஏன்? ஏன் வரலை? இப்போ… இப்போ எனக்கு பதில் சொல்லு” என்று அருகில் வந்து அவளின் தாடையை அழுந்த பற்றி கேட்க.. அவன் பிடித்த பிடி அப்படி ஒரு வலியை கொடுத்தது.  
பெரிதாய் வலி தாங்க மாட்டாள் ஜெயந்தி.. “வலிக்குது” என்று சொல்லும் போதே கண்களில் நீர் பெருக ஆரம்பித்தது.
“எனக்கு பதில் வேணும், ஏன் வரலை? உனக்கு என்னை பிடிக்கலையா? என்னோட தோற்றம் பிடிக்கலையா? என்னோட படிப்பு உனக்கு அவமானமா இருக்கா? ஏன்? ஏன் என்னை பிடிக்கலை? ஏன் வரலை?’ என்று வார்த்தைகளை கடித்து துப்பினான்.
“இல்லை, எனக்கு பிடிக்கும்! உங்களை ரொம்ப பிடிக்கும்” என்று அவள் கண்களில் நீரோடு பதில் கொடுக்க.. அதில் அவன் கண்டது உண்மை மட்டுமே!
“அப்போ ஏன்?… ஏண்டி வரலை” என்று அவளின் தாடையை விட்டு விட்டு கத்த..
“வந்தா.. உங்களை விட்டுட்டு திரும்ப போக முடியாதுன்னு வரலை” என்று பதில் சொல்லியே விட்டாள்..
அவ்வளவு தான் மருதுவின் மனதில் ஒரு பிரளயம் வெடிக்க.. இன்னும் அவனிடம் ரௌத்திரம் பெருகியது… “அப்படி உனக்கு அங்க இருக்கணும்னு என்ன?” என்று கேட்டபடி ஜெயந்தியின் அருகில் வர..
பயத்தில் பின்னால் போனாள்.
படிப்பில்லை என்றால் என்ன அவனுக்கு தான் விஷயங்கள் சட்டென்று புரியுமே.. “வந்தா காண்ட்ராக்ட் உடையும், அவங்களுக்கு பணம் கொடுக்கணும், எனக்கு திரும்ப செலவு வைக்க கூடாதுன்னு வரலையா நீ?” என்று கர்ஜித்தான்.
அந்த கர்ஜனையில் “ஆம்” என்பது போல பயத்தில் தலையை ஆட்டி விட..
ஆத்திரம் கோபம் இயலாமை எல்லாம் பெருக “ஒரு நொடி, ஒரு பொழுது, ஒரு நிமிஷம் கூட இவன் எதுவும் செய்வான் நமக்காகன்னு உனக்கு தோணலையா? அவ்வளவு தானா நான்? அந்த பணம் நமக்கொரு விஷயமா?” என்று அவளின் கண்களை நேருக்கு நேர் பார்த்து கேட்க..
அவள் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் பயத்தோடு பார்க்க..
அவளின் பார்வை அப்படி ஒரு கோபத்தை கொடுக்க “ச்சே, உன்னை போய் கல்யாணம் பண்ணினேன் பாரு” என்று வெறுப்பாக சொல்லி வேகமாக வெளியே போகப் போனான்..  
ஓடி சென்று வேகமாக அவனின் முன் நின்றாள் “சாரி” என்று சொல்லியபடி..
“யேய், என் முன்ன நிக்காத, எனக்கு உன்னை பார்க்க கூட பிடிக்கலை, போ.. என்னோட ஒரு வருஷம் அதை ஏன் வீணடிச்ச, இப்போ மட்டும் ஏன் வந்த? ” என்று கத்தினான்
“சாரி, சாரி” என்று சொல்லியபடி மருதுவை போக விடாமல், அவனின் கையை பிடிக்க வர, அவ்வளவு தான் கோபம் பெருக அவனையும் மீறி அவனின் கை மின்னலென அவளின் கன்னத்தில் இறங்கியது.. 
அவன் விட்ட அடியில் தூரமாய் போய் விழுந்தாள்..
“சே” என்று தன் நெற்றியில் தானே அடித்துக் கொண்டவன் “ஏண்டி, ஏண்டி, என்ன சாவடிக்கற?” என்று சொல்லியபடி சென்று அவளை தூக்க முயல..
அவன் விட்ட அரையின் தாக்கம்.. உதடு ஒரு பக்கம் கிழிந்து ரத்தம் வழிந்தது.. கன்னமும் புசுபுசுவென்று வீங்கி விட்டது.. விழுந்தது வேறு எங்கு வலி என்றே சொல்ல முடியவில்லை..
அவன் எழுப்ப முயல, அவன் பிடித்த கையை தட்டி விட்டவள்.. “நான் தொட வந்தா நீ என்னை அடிப்பியா.. போ, போ, இதனால தான் உனக்கு அப்பா இல்லை, அம்மா இல்லை, நானும் இல்லை, போ” என்று சொல்லியடி ரத்தம் வழியும் உதடுகளுடன் தேம்பி தேம்பி அழ..
இந்த வார்த்தைகள் அவனுக்கு அப்படி ஒரு ஆதங்கத்தை கொடுக்க.. அவளின் காயம் அவனை பதற செய்தாலும் அந்த வார்த்தைகள் அவனை தள்ளி நிறுத்த, “நான் தனியாவே இருந்துக்கறேன் போடி, எனக்கு யாரும் தேவையில்லை” என்று சொல்லியடி அவனும் வெளியே சென்று அங்கிருந்த சேரில் அமர்ந்து கொண்டான்.  
அவளுக்கு உடலில் வலி, மனதில் வலி, அப்படி ஒரு அழுகை.
ஜெயந்தி அழுதாள்! மருது அழவில்லை! அதுவே வித்தியாசம்!         

Advertisement