Advertisement

அத்தியாயம் பதிமூன்று :

கைபேசியை விமலனிடம் கொடுத்தவள் அவளின் லக்கேஜ் எடுக்க செல்ல, பின்னேயே விமலனும் கமலனும் சென்றனர்.. இதனை பார்த்துக் கொண்டிருந்த மருது எழுந்து திரும்ப வீட்டிற்கே கிளம்பிவிட்டான். என்னவோ தனியாகிவிட்ட உணர்வு!

பின்னே அவர்கள் வர ஒரு மணி நேரம் ஆகியது.. வந்தவள் “இந்த லக்கேஜ் எல்லாம் எடுத்துட்டு நீங்க போங்க” என்று சொல்லி அங்கிருந்த ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.

“ஏன் என்னாச்சு?” என்று விமலன் கேட்க,

“அவர் வரட்டும்” என்று அமர்ந்து கொண்டாள்.

“வரவும் இல்லை, ஃபோனும் எடுக்கலை, இங்க உட்கார்ந்து என்ன பண்ண போற?” என்று குடும்பத்தினர் கேட்க,

“அவர் வரட்டும்” என்று பிடிவாதமாய் அமர்ந்து கொண்டாள்.

“அவர் தான் ஃபோனே எடுக்கலையே, ஏதாவது வேலையா இருக்கும்” என்று விமலனும் கமலனும் எவ்வளவோ சொல்லிய போதும்,

“காலையில எட்டு மணிக்கு என்ன வேலை? வரட்டும்!” என்று அமர்ந்து கொண்டாள்.

மொத்த குடுமபமுமே அவளை வித்தியாசமாய் பார்த்தனர்., அவளை தனியே விட்டு எங்கு செல்ல, அவர்களும் அமர்ந்தனர்.

பின்பு விமலனின் கைபேசி வாங்கியவள்.. விஷாலிற்கு அழைத்து “எங்க உங்க அண்ணன்?” என்றாள் காட்டமாக.

“ஊருக்கு வந்துட்டீங்களா விமலன் போன்ல இருந்து பேசறீங்க?” என்றான் உற்சாகமாக.

“எங்க உங்க அண்ணன்? நான் ஏர்போர்ட்ல இருக்கேன், அவர் வராம இங்க இருந்து வெளில வரமாட்டேன்னு அவர் கிட்ட சொல்லிடுங்க” என்று வைத்து விட்டாள்.

விஷால் உடனே மருதுவிற்கு அழைக்க அவன் எடுக்கவேயில்லை.

விடாமல் அடித்தான். அப்போது தான் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தவன் விஷால் விடாமல் அடிக்கவும் எடுத்தான்.

“என்னடா?” என்று எரிச்சலில் கத்த,

“அண்ணி ஏர்போர்ட்ல இருக்காங்களாம், நீங்க வராம அங்கேயிருந்து வரமாட்டேன்னு சொல்லச் சொன்னாங்க” என்று சொல்ல

என்னவோ எரிச்சல் உடனே குறைந்து மனதிற்கு இதமாக… அவனிடம் “நான் வந்திட்டு இருக்கேன்னு சொல்லு” என்றவன் அவனின் புல்லட்டை அப்படியே திருப்பினான்.. அரை மணி நேரத்தில் கடந்த தூரத்தை கால் மணி நேரத்தில் சமன் செய்தான்.

ஏர்போர்ட் உள்ளே சென்று அவளை நெருங்க.. எல்லோரும் அவனை பார்த்ததும் எழுந்து நிற்க அவள் மட்டும் அசையவில்லை, அப்படியே அமர்ந்திருந்தாள்..

“நீங்க வீட்டுக்கு போங்க, நான் கூட்டிட்டு வர்றேன்” என்று சொல்லவும் அவர்கள் அனைவரும் கிளம்பினர் … “இந்த பெட்டியெல்லாம் எடுத்துட்டு போங்க” என்றான், அவர்கள் எல்லாம் தூக்கி சென்று விட்டனர்.

“போகலாமா” என்று மருது கேட்க.. “என்னை கூப்பிட வர்றதை விட முக்கியமான வேலையோ?”

“பின்ன இங்க வந்து, உன் வீட்டு ஆளுங்களை நீ கொஞ்சறதை பார்க்க சொல்றியா? உங்கம்மாவை மட்டும் பார்த்த உடனே ஓடி வந்து கட்டி பிடிச்ச?” என்று சொல்ல..

“இங்கேயா இருந்தீங்க?”

“ம்ம்” என்றான் தலையசைப்போடு.

“அப்புறம் ஏன் வரலை?”

“நீ சொல்லியிருக்கணும் உங்க அப்பா அம்மாக்கிட்ட அலையாதீங்க, அவரோட நான் வந்துடறேன்னு சொல்லியிருக்கணும்”

“ஏன்? ஏன் இப்படி பேசறீங்க?” என்றாள் புரியாதவளாக.

“எனக்கு என்ன தோணுதோ பேசறேன் ஜெயந்தி” என்றவன், “வா” என்று நடந்தான். “நான் தான் உனக்கு முதல்ல முக்கியமா இருக்கணும், அப்புறம் தான் எல்லோரும்” என்று கத்தும் ஆவேசமும்..

அவனோடு நடக்க ஆரம்பித்தாள். அவனை பார்த்த மகிழ்ச்சி சிறிதும் இல்லை, அதுவும் தன்னை பார்த்த பிறகும் சென்றிருக்கிறான் என்பது காயப் படுத்தியது.

“என்னை பார்த்துட்டும் பேசாம போயிட்டீங்களா?” என்று அவனிடம் கேட்டே விட, “நீ கூட தான் டிக்கெட் அனுப்பியும் வரலை” என்றான்.

“இப்போ ஏன் அதை பேசறீங்க?”

“நேர்ல வந்து சண்டை போட நினைச்சேன், ஆனா நீ கூப்பிடாம வர இஷ்டமில்லை. அதான் நீ எப்போ வருவேன்னு காத்திருந்து சண்டை போடறேன்”  

வேகமாக அவன் முன் போய் நின்றவள் “உங்களால அங்க வந்திருக்க முடியுமா?” என்று கேட்க,

அவளை தீர்க்கமாகப் பார்த்தவன் “நீ எப்பவுமே என்னை குறைச்சு தான் மதிப்பிடற. என் படிப்பு கம்மி தான், அதான் உனக்கு எப்பவுமே யோசனை. ஒன்னு நல்லா தெரிஞ்சிக்கோ, உங்களோட படிப்புக்கு வெளிநாடு போயி வேலை செஞ்சா தான் மதிப்பு, ஆனா என்னோட உழைப்புக்கு எங்கேயிருந்தாலும் மதிப்பு தான். சொல்லப் போனா உனக்கு என்னை பத்தி ஒன்னுமே தெரியாது” என்று சொன்னான். அப்போதாவது ஏதாவது தன்னை பற்றி தெரிந்து கொள்ள முயல்வாளா என்று?  

பேசினால் பிரச்சனை தான் வளரும் என்று நினைத்தவள் அப்படியே அமைதியாகி விட்டாள்.. கூடவே அவனின் வார்த்தைகள் அவளுக்கு வருத்தத்தை கொடுத்தன. இன்னும் ஏர்போர்ட் வாயிலைக் கூட தாண்டவில்லை, இத்தனை பிரச்சனைகளா” என்று ஆயாசமாக இருந்தது.

உண்மையில் அவள் பிரச்சனையின் தீவிரத்தை அவள் அறியாமல் குறைத்து விட்டாள். அவன் வந்தால் தான் வருவேன் என்று சொன்னது சற்று அவனை அமைதிபடுத்தி இருந்தது என்பது தான் உண்மை.

என்னவோ சண்டை பிடிக்க வேண்டும் என்றெல்லாம் மருதுவும் நினைத்திருக்க வில்லை ஆனால் அவளை பார்த்ததும் “ஏண்டி என்னை விட்டுப் போன?” என்று உலுக்க வேண்டும் என்ற ஆவேசம். அதுதான் சென்று விட்டான். இப்போதும் அருகில் பார்த்ததும் கோபம் பெருக பேசிவிட்டான்.

உணர்வுகளை பகிர்ந்து கொள்ள அவனுக்கு ஆள் கிடையாதே. அதுதான் பகிராத உணர்வுகள் வார்த்தைகள் எனும் வடிவம் பெற்று அவளை தாக்க ஆரம்பித்தது.   அதுவும் ஜானியின் இறப்பு அவள் சென்ற பிறகு ஆறு மாதத்தில் நிகழ, வீட்டில் அவனுக்கு பல வருடங்களாய் துணை இருந்த ஜீவனும் போக, யாருமில்லை என்றாலும் பரவாயில்லை, இருந்தும் இல்லை என்ற நிலை அவனை மூர்க்கனாய் மாற்றி இருந்தது.    

வெளியே சென்று அவனின் புல்லட்டை எடுக்க, எதுவும் பேசாமல் அவனின் பின் அமர்ந்தாள். இரு புறம் கால் போட்டு அமர்ந்தாலும் அவனின் வேகத்தில் கம்பியை, பின் அவனின் தோளை, என்று மாற்றி மாற்றி பிடித்தவள், “மெதுவா போங்க” என்று சொல்ல,

சீரான வேகத்தில் செல்ல ஆரம்பித்தான். அதுவரை எல்லா வண்டிகளையும் முந்தி கொண்டிருந்தான் வளைந்து வளைந்து..

அவனின் மருது ஸ்டோர்ஸ் தாண்டி தான் புல்லட் சென்றது ஆனால் அங்கே நிற்கவில்லை. “நிறுத்துங்க” என்று ஜெயந்தி சொன்ன போதும் நிறுத்தவில்லை.

“அம்மா இவன் என்ன இந்த காட்டு காட்டுகிறான்?” என்று தான் தோன்றியது.

“நிறுத்துங்க நான் பார்க்கணும்”

“ஒன்னும் வேண்டாம், அதான் வரமாட்டேன்னு சொல்லிட்டல்ல” என்று சொல்ல..

அதன் பிறகு ஜெயந்தி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இனி ஏதாவது அவன் பேசினால் நிச்சயம் அழுகை வந்து விடும் என்று புரிய, அமைதியாகி விட்டாள்.

வீடு வந்து விட்டது, “அம்மாடி இதுவா நான் வாழ வந்த வீடு” என்று தான் தோன்றியது. ஆம்! முற்றிலும் புதிய தோற்றம்!

பைக் சென்று அருகில் நின்றதும் கேட் திறந்தது.  ஜெயந்தியை இறக்கி அவன் வாயிலிலேயே இறங்கிக் கொள்ள, செக்யுரிட்டி வந்து பைக் வாங்கிக் கொண்டான். முன் இருந்த காலி இடம் எல்லாம் பூச்செடிகள் வைத்து பாதை அமைத்து,

இருந்த வீடே தான் ஆனால் மாறியிருந்தது. பழமையும் புதுமையும் கலந்த ஒரு தோற்றம். “என் வீடா இது, அம்மா அப்பா விமலன் கமலன்னு யாரும் சொல்லையே” என்று தான் தோன்றியது.

மருது சொல்லியிருக்க மாட்டான் என்று கனவா கண்டார்கள். கடையின் திறப்பு விழாவை எவ்வளவு சிறப்பாகச் செய்தானோ வீட்டின் அமைப்பை மாற்றியதற்கு யாரையும் அழைக்க வில்லை.

ஆம்! கடையின் வேலை செய்து கொடுத்த அந்த என்ஜினியர்ஸ் வைத்தே எல்லாம் மாற்றி இருந்தான். மிக சமீபமாய் தான் மாற்றி இருந்தான். இவள் வரும் நாள் கணக்கில் கொண்டு.

“ஏன்? என்கிட்டே சொல்லலை” என்று கேட்க வந்த வார்த்தைகளை விழுங்கிக் கொண்டாள். “நல்லா இருக்கு” என்று சொல்ல அவளை ஒரு பார்வை பார்த்து உள்ளே சென்றான்.

அவளும் உள்ளே வர முயல… “நில்லு” என்று சென்றவன், முன்பு போல ஆரத்தி எடுத்து வந்தான். “இந்த முறையாவது நீ என்னை விட்டுட்டு போகாம இருக்கணும்” என்று சொல்லியபடி அவன் மட்டும் சுற்ற, ஜெயந்தி எதுவுமே பேசவில்லை.

எப்படி இவனை சாமாளிக்க போகிறோம் என்று கவலையானது..

அவன் அதனை சென்று வாயிலில் கொட்டி விட்டு வர அங்கேயே தான் நின்றிருந்தாள் சேர்ந்து உள்ளே போக.

அவன் வந்ததும் சேர்ந்து சென்றவள், அதன் பின் அவனுக்கு காத்திருக்கவில்லை, அவர்களின் ரூம் நோக்கி சென்றவள் பாத்ரூமினுள் புகுந்து கொண்டாள்.

அவள் வெளியே வந்த போது மருது அங்கே தான் அமர்ந்திருந்தான், கட்டில் மேல் அதுவும் எல்லாம் மாறிவிட்டது. வாவ் என்று சொல்லும் படியாக தான் இருந்தது. எல்லாம் விழி விரித்து பார்த்தபடி அவனின் அருகில் வர, அவனின் பார்வை அவளின் மேல் மட்டும்.

“நல்லா இருக்கு, எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு” என்று சொல்ல,

“என்னை பிடிச்சிருக்கா உனக்கு” என்றான் நேரடியாக.

“என்ன கேள்வி இது?” என்று அவனை ஆராய,

“இல்லை, எனக்குள்ள பல சமயம் இந்த கேள்வி தோணுது” என்றான் மனதை மறையாது.

“என்னவோ என்னை கடிச்சு குதருற மூட்ல இருக்கீங்க போல” என்று சொல்லியபடி அருகில் அமர..

அதற்குள் மருதுவின் போன் அடித்தது. விமலன் அழைத்திருக்க கைபேசியை அவளிடம் கொடுக்கவும் “என்ன அண்ணா?”

“சாப்பிட இங்கே வாங்க” என்றான்.

“சரி” என்று சொல்லாமல், “சாப்பிட அங்கே போகலாமா?” என்று அவனிடம் கேட்க,

“வேண்டாம்” என்று சொல்ல வந்தவன் அவளின் முகத்தை பார்த்ததும் “சரி” என்றான்.

குளித்து புடவையில் தயாராகி வந்தவளை ரசித்துப் பார்த்தாலும் அருகில் நெருங்கவில்லை.

பின் அம்மா வீடு சென்று அங்கிருந்த வேம்புளியம்மனை தம்பதி சமேதராய் வணங்கி விட்டு தான் உணவு உண்ண அமர்ந்தனர், “நீ அப்புறமா வா நான் கடைக்கு போறேன்” என்று சொல்லி மருது சென்று விட.. அவனுக்கு பிறகு தான் விமலனும் கமலனும் சென்றனர். கோபாலனும் கேரேஜ் சென்று விட்டார். 

கமலன் படிப்பை முடித்து விட்டான். இன்னும் வேலை வரவில்லை. இரண்டு மூன்று இன்டர்வியு அட்டென்ட் செய்து விட்டு காத்திருந்தான்.

அப்படி ஒன்றும் மருது தன வீட்டில் ஒட்டவில்லை என்று உணர்ந்தாள். எல்லோரும் அவனிடம் தயங்கி தயங்கியே பேசினர் என்பதையும் உணர்ந்தாள்.

ஜெயந்தி எதுவும் காண்பித்து கொள்ளவில்லை.. அம்மாவிடம் பேசிக் கொண்டே உறங்கி விட்டாள். மதியமாய் தான் எழுந்தவள் மருதுவுக்கு அழைத்து.. “சாப்பிட வாங்க” என

“நான் சாப்டுட்டேன்” என்றான், நேரம் பார்த்தால் மூன்று என்று காண்பிக்க..

“ஓஹ்” என்று முடித்து கொண்டவள்.. “நைட் சாப்பிட வாங்க” என, “இல்லை ஜெயந்தி நீ வேணும்னா சாப்டுட்டு வா” என்று விட்டான். எல்லோரும் வந்த பிறகு இரவு உணவு உண்டு அவர்களுக்கு வாங்கி வந்த பரிசு பொருட்கள் எல்லாம் கொடுத்து, அவளின் பெட்டிகளை தூக்கி கமலனுடனும் விமலனுடனும் வீடு வந்த போது பதினோரு மணி..

ஒரு புயலை எதிர்கொள்ள வந்தாள், மனதை திடப் படுத்தி வந்தாள்… அதற்கு தான் நேரம் தள்ளி தள்ளி வந்தாள். இவ்வளவு கோபம் மருதுவிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை.

கதவை திறந்த மருது விமலனையும் கமலனையும் பார்த்து “உள்ள வாங்க” என்று சொல்லிப் போக,

“இல்ல மாமா, நேரமாச்சு, நாளைக்கு வர்றோம்” என்று இருவரும் ஒன்று போல சொல்லி அவளை விட்டு சென்றனர்.

கதவை சாற்றியவன் ரூமின் உள்ளே சென்று விட.. “இப்போ நான் போகணுமா? வேண்டாமா? இங்கேயே இருக்கவா? என்று மனது கேட்க, 

“சண்டையை இழுத்துப் பிடிக்காதே” என்று அறிவு சொல்ல.. உள்ளே சென்றாள்.

நம்மை மீறி நடக்கும் செயல்கள் என்றாலும் நாம் தானே பொறுப்பு!

Advertisement