Advertisement

அதையும் விட இப்போது ஜெயந்தியிடம் அவனுக்கு பணம் திரும்பக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் இல்லை. அதனை பற்றி அவனிடம் கிஞ்சித்தும் பேச முடியாது என்று தெரியும்.. முதல் மாத சம்பளத்தை அவளுக்கு போக மருதுவிற்கே அனுப்பி வைத்தாள்..

“எனக்கு எதுக்கு போட்டு விடற?” என்றான்.

அவன் கேட்ட விதத்திலேயே பயந்து போனவள், “என் அக்கௌன்ட்ல இருக்குறதுக்கு ஜஸ்ட் உங்களுக்கு போட்டேன்” என்று சமாளிக்க,

“அம்மா தாயே, ஏற்கனவே என் அக்கௌன்ட்ல இருக்குறதே எங்க ஒளிச்சு வைக்க, என்ன கணக்கு காட்டன்னு தெரியாம இருக்கேன், அந்த பணத்தை டாக்ஸ்க்குள்ள கொண்டு வர்றதுக்கே ஒருத்தர் தனியா மூளையை கசக்கணும், எனக்கு எதுக்கு இது?”

“உங்க அப்பா அம்மாக்கு அனுப்பி விடு, அவங்க தானே படிக்க வெச்சாங்க, அவங்களுக்கு போட்டு விடு, நமக்கு தேவையில்லை. அவங்களுக்கு தேவை அதிகம், உனக்கு என்ன வேணுமோ சொல்லு, நான் அனுப்பி வைக்கறேன்” என்பதாக தான் அவன் பேச்சு.

அதனால் அவனுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை அழிப்பான் கொண்டு அழித்து விட்டாள்.   

அவளுக்கு அங்கே இரண்டு மூன்று இந்திய நண்பர்களும் கிடைக்க.. அவர்களோடும் அலைபேசியில் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டான். ஜெயந்தியின் பத்திரத்தையும் பார்த்துக் கொண்டான்.    

மொத்தத்தில் ஒரு கட்டாயத்தின் பேரிலேயே இருந்தாள். 

இப்போது திறப்பு விழாவிற்கு ஜெயந்தி வராதது மருதுவிற்கு மனதிற்கு அப்படி ஒரு வருத்தத்தை கொடுத்திருந்தது.. இவளுக்கு நம்மை பிடிக்கவேயில்லையா என்ற எண்ணமும் தோன்ற ஆரம்பித்து இருந்தது..

தான், தன் என்ற எண்ணம் மட்டுமே ஜெயந்திக்கு அப்போது.. போனால் வரமுடியாது வேண்டாம் என்பது போல அவள் நினைத்திருந்தாள். மருதுவின் இடத்தினில் இருந்து நினைக்கவேயில்லை…

அவனின் பிரமாண்டத்தில் அவளின் பங்கு இல்லையென்றாலும் அவளின் இருப்பாவது இருக்க வேண்டும் அல்லவா?

இவ்வளவு செலவு செய்பவனுக்கு மனைவியை ஜெர்மனியில் இருந்து வரவழைப்பது ஒரு பெரிய விஷயம் அல்லவே. அவனை தெரிந்தவர் அனைவரும் உன் மனைவி வரவில்லையா என்று கேட்க, என்ன பதில் சொல்வது என்று கூட தெரியாமல் வாய்க்கு வந்ததை சொன்னவன் இரண்டு நாட்கள் பேசக் கூட இல்லை அவளிடம்.

அவளும் ஃபோன் அடித்து அடித்து ஓய்ந்து போனவள், பின்பு விஷாலிற்கு அழைத்து “உங்க அண்ணன் ஃபோன் சரியில்லையா? போன் போக மாட்டேங்குது, குடுங்க” என்று சொல்ல,

அவன் வந்து கொடுக்கும் போது “வேண்டாம்” என்றா சொல்ல முடியும்.

“சொல்லு” என்றான் இறுக்கமாக..

“ஏன் என் போன் எடுக்கலை?”

“எதுக்கு எடுக்கணும்?” என்றான் பட்டென்று.

“என்ன கோபம்?” என்றாள் குரல் இறங்கியவளாக..

“டிக்கெட் அனுப்பி கூட உன்னால வரமுடியலைல்ல”

“நான் தான் வரமாட்டேன்னு சொன்னேனே”

“அதுதான் ஏன்?” என்று கத்தினான். அது ஜெர்மனிக்கே கேட்டிருக்கும்,

லேசாக திறந்திருந்த அவன் கேபின் கதவு வழியாக அந்த ப்ளோர் முழுவதும் கேட்க.. விஷால் விரைவாக சென்று கதவை நன்கு சாத்தினான்…

அவனின் கோபம் ஒரு அழுகையை கொடுக்க, அமைதியாகி விட்டாள்.

“பேசு பேசுன்னு சொல்றேன்ல” என்று அதற்கும் கத்தினான்.

ஏற்கனவே சென்றிருக்க வேண்டுமோ என்ற ஒரு குற்றவுணர்சியில் இருந்தவளுக்கு அவனின் கோபம் அப்படி ஒரு அழுகையை கொடுக்க அலைபேசியிலேயே அவளின் விசும்பல் கேட்டது..

“என்ன தான் உன் பிரச்சனை ஜெயந்தி?” என்று அதற்கும் கத்தினான்.

“ஒன்னுமில்லை நான் அப்புறம் கூப்பிடறேன்” என்று வைத்து விட்டாள்.  

அப்படியே அமர்ந்து விட்டான். “பார்த்த நாள்ல இருந்து என் உயிரை எடுக்கறா? இவளை ஏன் எனக்கு பிடிச்சு தொலைச்சது” என்ற கோபம் மனமெங்கும் வியாபிக்க துவங்கியது.

சிறிது நேரம் கழித்து விஷால் வந்தவன் அவனின் அலைபேசியை கையில் எடுத்துக் கொண்டவன் மருதுவை பார்த்தான்.

“என்னடா?” என்று அவன் கேட்க..

“அண்ணா உங்களுக்கு கோபம் வந்தாலும் சரி, தப்பு அண்ணி மேல இருந்தாலும் சரி, நான் இதை சொல்லி தான் ஆகணும். அவங்க அங்க தூரமா தனியா இருக்காங்க, அவங்க கிட்ட கோபப்படாதீங்க” என்று சொல்லி வேகமாக வெளியேறி விட்டான்.

பின்னே மருது எந்த நேரத்தில் என்ன செய்வான் என்று தெரியாதல்லவா? அவனின் கோபம் தான் அவனின் பலம் பலவீனம் எல்லாம்.

மருதுவின் கோபம் ஜெயந்தியை வெகுவாக அசைக்க அப்படி ஒரு அழுகை. எல்லாம் தூக்கி போட்டு விட்டு அவனிடம் போய்விட ஆசைதாம். ஆனால் காண்ட்ராக்ட் ப்ரேக் செய்தால் நிறைய பணம் கொடுக்க வேண்டும் அவள் இதுவரை வாங்கிய சம்பளத்தை விட, இன்னும் அவனுக்கு செலவு வைக்க இஷ்டமில்லை… 

தேம்பி தேம்பி அழுகை.. சிறிது நேரத்தில் மனது கேட்காமல் மருது அழைக்க வெகு நேரத்திற்கு பின் எடுத்தாள் சிறு தேம்பளோடு..

“என்ன ஜெயந்தி இப்படி பண்ற? எதுக்கு இந்த அழுகை?” என்று கனிவாக கேட்க,

“நீங்க கோபப்படுறீங்க” என்றாள். ஆம்! ஜெயந்தி மருதுவிடம் மிகவும் பலவீனமான பெண் தான்..   

“பின்ன எப்போ பார்த்தாலும் கொஞ்சுவாங்களா?” என்றான்.

“ஏன் கொஞ்சுனா என்ன?” என்று தோன்றிய போதும் அதனை வெளியில் சொல்லாமல் அப்படியே அமைதியாகி விட்டாள்..

பின்பு சிறிது நேரம் பேசி அவளை சமாதானம் செய்து வைத்தான்.

“செய்யறது இவ, இதுல நான் சமாதானம் வேற செய்யறேன். ஊருக்கு வரட்டும் அப்புறம் கோபப்படு தனியா இருக்கா” என்று அவனுக்கு அவனே சொல்லிக் கொண்டான்.

ஆம்! கோபம் மட்டும் போகவில்லை.. அவளும் வரவில்லை, என்னையும் கூப்பிடவில்லை என்ற கோபம் மட்டும் கனன்று கொண்டே இருந்தது.

அவனை பொறுத்தவரை பணம் என்பது ஒரு விஷயமல்ல.. பணத்தை கொண்டு தான் ஜெயந்தி யோசிக்கிறாள் என்று தெரிந்தால் அவ்வளவு தான் மருது என்ன செய்வான் என்று சொல்லவே முடியாது. 

இப்படியாக இன்னும் ஒரு வருடமும் ஓடியே போனது. ஆம்! கொஞ்சல், மிஞ்சல், சண்டைகள், சமாதானங்கள் என. ஆனால் எல்லாம் மருதுவின் புறம் இருந்து தான்.

ஜெயந்தி பலவீனமான பெண்ணாகிவிட்டாள். வெளிநாடு என்பது கனவாக இருந்த போதும், வேலை பிடித்து இருந்த போதும், அந்த ஊர் பிடிக்கவில்லை. அவளுக்கு நிறைய வீட்டின் ஞாபகமா தான்!

இதுவரை ஹாஸ்டலில் கூட இருந்ததில்லை, இதில் தனியாய் இருப்பது முடியவில்லை, அதையும் விட உணவு.. அதுவும் பிடிக்கவில்லை. என்னவோ எல்லாம் பிடிக்கவில்லை ஊர் போனால் போதுமென்று இருந்தது. 

மருதுவின் தவிப்பிற்கு ஜெயந்தியின் தவிப்பு சிறிதும் குறைவு கிடையாது.. மருதுவிற்காவது தனிமை பழக்கம் ஜெயந்திக்கு அதுவும் கிடையாதே..

இப்படியாக ஊர் வந்து இறங்க விமான நிலையத்தில் அவளின் அம்மா வீட்டில் இருந்து எல்லோரும் இருக்க.. மருதுவை மட்டும் காணவில்லை..

காணவில்லை எல்லாம் இல்லை. அவளின் கண்களில் படவில்லை.. இவர்கள் எல்லாம் கும்பலாய் நிற்க.. அவர்கள் கேட்ட போது “நீங்கள் முன்னே செல்லுங்கள், நான் பின்னே வருகிறேன்” என்று சொல்லி விட்டான். மாமனார் வீட்டோடு பெரிய ஒட்டுதல் கிடையாது. திருமணதிற்கு முன்பு இருந்த அளவு கூட பின் இல்லை. ஜெயந்தி இருந்திருந்தால் இந்த வித்தியாசம் வந்திருக்காதோ என்னவோ, அவளும் இல்லை. அதுவமன்றி அவர்கள் திருமணதிற்கு முழு மனதாய் சம்மதிக்கவில்லை என்று தோன்றியிருக்க, ஒரு ஒதுக்கம் மருதுவிற்கு வந்திருந்தது. இவர்கள் என்ன உயர்ந்தவர்கள் நான் என்ன தாழ்ந்து போய்விட்டேன் பெண் கொடுக்க முடியாத அளவிற்கு என்ற ஒரு கோபமும் இருந்தது.      

அதனால் அவர்களுடன் போய் நிற்க அவனுக்கு விருப்பமில்லை. தனியாக சென்றவன் தனியாக அமர்ந்து கொண்டான். யாருடைய கவனத்தையும் கவராமல்.

ஒரு ஜீன்ஸ் டீ ஷர்ட் ஓவர் கோட் உடையில் ஜெயந்தி வந்த போது, அவனின் கண்கள் நொடியும் விடாமல் அவளை பார்த்திருந்தது..

அப்படி ஒன்றும் இங்கிருந்த தோற்றம் இல்லை வாடி தான் தெரிந்தாள். “இவளை யாரு போக சொன்னா?” என்று தான் பார்த்த உடனே தோன்றியது

அம்மாவை பார்த்ததும் “மா” என்று ஓடி வந்து கட்டிக் கொண்டாள். பின்னே அண்ணன் தம்பி அப்பா என்று அனைவரோடும் பேசியவள், “அவர் எங்கே?” என்றாள் விமலனிடம்.

“நீங்க போங்க நான் பின்னே வர்றேன்னு சொன்னார், இன்னும் வரலை போல” என்று சொல்லவும், அவளின் முகம் சுருங்கி விட்டது.

“ஃபோன் குடு” என்று விமலனின் போன் வாங்கியவள் மருதுவை அழைக்க,

அவளை பார்த்து தான் அமர்ந்திருந்தான், கைபேசியில் அவள் தான் அழைக்கிறாள் என்றும் தெரியும், ஆனால் எடுக்கவில்லை!

“எல்லோரையும் கொஞ்சிட்டு, சாவகாசமா இவ என்னை தேடினா, நான் முன்ன போய் நிக்கணுமா? மாட்டேன்!” என்று அமர்ந்திருந்தான்.   

காதல் என்னை பிழிகிறதே                                      கண்ணீர் நதியாய் வழிகிறதே
நினைப்பதும் தொல்லை மறப்பதும் தொல்லை
வாழ்வே வலிக்கிறதே 

Advertisement