Advertisement

அத்தியாயம் பன்னிரண்டு :

கட்டிட பூச்சு நடக்க, மேற்பார்வை பார்த்திருந்தான் மருதாசல மூர்த்தி. முகத்தில் எதுவும் தெரியவில்லை, ஆனால் மனம் முழுவதும் சோர்வு!

நேற்று தான் ஜெயந்தி ஜெர்மனி கிளம்பினாள்..

“போகணுமா” என்று ஒரு வாரமாகவே கேட்டுக் கொண்டே இருந்தான்.

“இது என்னோட அச்சீவ்மென்ட், ரொம்ப பிரச்டிஜியஸ் வேலை, எல்லோருக்கும் சுலபமா கிடைக்காது. என் ஆசைக்கு கொஞ்சம் நாள் வேலை பார்த்துட்டு வர்றேன்”

“எவ்வளவு நாள்?”

“குறைஞ்ச பட்சம் ரெண்டு வருஷம், அதுதான் காண்ட்ராக்ட்”

அப்போதிருந்தே முகத்தை தூக்கி வைத்து தான் சுற்றிக் கொண்டிருந்தான்.

அவளின் படிப்பு, அவளின் கனவு, தடை சொல்வது சரியல்ல என்று புரிந்த போதும். அவள் தானே அவனின் வாழ்க்கை! இவ்வளவு நாள் தனியாய் இருந்த வாழ்க்கையில், வந்த உடனே செல்வது என்பது அவனால் தாள முடியவில்லை.

“இங்க சென்னையில அந்த மாதிரி பார்க்கலாமா? இல்லை நீ சுயமா தொழில் கூட வெச்சிக்கோ” என்று பல மாதிரி பேசிப் பார்த்தான்.

அவள் அசையவேயில்லை.. மருதுவின் மேல் காதலா இன்னும் கூட பகுத்தறிய முடியவில்லை, ஆனால் ஒரு நெருக்கம் வந்திருந்தது.. தானாய் வந்திருந்ததா அவன் வரவைத்திருந்தானா தெரியவில்லை.

திருமணம் முடிந்து இரண்டு நாட்களில் அவனின் தோற்றத்தையே மாற்றிக் கொண்டான். அவனின் உடை, ஹேர் ஸ்டைல், எல்லாம் மாறி விட்டது.

ஜெயந்தி எப்போதும் போல விழி விரித்து பார்க்க..

“சும்மா, சும்மா, என்னையே பார்த்துட்டு இருந்தியா, அதான் உனக்கு பிடிச்ச மாதிரி கொஞ்சம் மாறிக்கலாம் நினைச்சேன்” என்றான் சன்ன சிரிப்போடு.  

கூடவே “உனக்கு என்னோட தோற்றம் பிடிக்காதுன்னு தெரியும்” என்று வசீகரமாய் ஒரு புன்னகை புரிந்து கூற..

“அப்போ ஏன் முன்னமே மாத்தலை?”

“அதெல்லாம் மாத்தி உனக்கு என்னை பிடிக்க வைக்கனும்னு தோணலை, நீ வேற என்னை என்னவோ வயசானவன் மாதிரி பார்த்தியா, அதனால எப்போவும் விட என்னோட தோற்றத்துல அக்கறையை குறைச்சிட்டேன்.  உனக்கும் எனக்கும் ஏழுவருஷ வித்தியாசம் தான்”

“என்னடா கான்செப்ட் இது, என்னோட ஆட்டோ மொபைல் எஞ்சினியரிங் கூட எனக்கு ஈசியா புரியுது, இது புரியலையே” என்று மனதிற்குள் நினைத்தவள்,

“இப்போ மட்டும் ஏன் மாத்திணீங்க?”

“நீ அதையும் இதையும் பேசாம என்னோட மனைவியா முழுசா மாறிட்ட இல்லையா, உன்னை எனக்கு கொடுத்துட்ட இல்லையா, அதுக்கு நான் உனக்கு ஏதாவது பரிசு குடுக்கணும்ன் தோணிச்சு, சோ மாறிட்டேன்!” என்று சிறு குழந்தைக்கு சொல்வது போல சொன்னான்.

“நான் எங்க கொடுத்தேன், நீதானே எடுத்துக்கிட்ட, ஆனாலும் பெரிய ஆள்டா நீ, ஒரே நைட்ல எல்லாம் முடிச்சிக்கிட்ட” என்ற பார்வையை ஜெயந்தி கொடுக்க,

“நான் இப்போ மாதிரி என்னோட வாழ்க்கைல எப்பவும் சந்தோஷமாவே இருந்ததில்லை” என்று சொன்னான்.

அவளுக்கு பெரிதாய் அது தோன்றவில்லை! காதலித்த பெண்ணை திருமணம் செய்திருக்கிறான், அவளோடு வாழவும் ஆரம்பித்து விட்டான் என்ற சந்தோசம் என்று நினைத்தாள்.

அது இல்லை! அவனுக்காக ஒரு உறவு என்பது தான் அவனின் மகிழ்வுக்கு காரணம்.. யாராவது அவனுக்காய் யோசிக்க வேண்டும், காத்திருக்க வேண்டும், வாழ வேண்டும்.. இப்படி!

அவனின் எதிர்பார்ப்புகள் வேறு, அவனின் தேடல்கள் வேறு!

அதை உணரும் பக்குவம் ஜெயந்திக்கு இல்லை… இத்தனை நாட்கள் குடும்பத்தின் செல்லப் பெண்ணாய் இருந்தவளுக்கு தனிமை என்ன தெரியும். வசதி இருக்கிறதோ இல்லையோ அவரவர் பெண் அவரவர் வீட்டிற்கு இளவரசி தானே!   

அவளை உடலளவில் தேடுகிறான் என்று நினைத்தாள். அதுவும் இருந்தது. அது ஜெயந்திக்கும் பிடித்து இருந்தது.. அதையும் மீறி அவனின் மனதை பெரிதாக எடுக்கவில்லை, காதலித்தான், கல்யாணம் முடித்துக் கொண்டான் அவ்வளவே!

அவளுக்கு தெரியாதது, மருதாச்சலமூர்த்தி என்ற மனிதன் தன்னை தானே உருவாக்கி கொண்டவன்! மனிதர்களை படிப்பதில் வல்லவன்! எப்போதும் ஜெயந்திக்கு நன்றியும், மரியாதையும் அவன் மீது இருந்தாலும், ஈர்ப்பு என்பது அவன் மீது இருந்ததில்லை என்பதை அவன் அறிவான்.

அதன் பொருட்டே பிடித்தம் இருந்த போதும், சண்டை எல்லாம் வந்தது, வேண்டாம் என்றும் நினைத்திருந்தான்.. இறுதியில் விட முடியாது என்று தெரிந்து திருமணம் செய்து கொண்டான்..

தன்னோடு வாழ யோசிப்பாள் என்று நினைக்க, அப்படி எல்லாம் எதுவும் இல்லை என்பதே அவளுக்காக எல்லாம் மாற்றிக் கொள்ள போதுமானதாக இருந்தது. அவளுக்கு பிடித்தம் என்று ஒரு நொடி தோன்றியிருந்தாலும் அப்போதே தட்டி தூக்கியிருப்பான்.. ஆனால் இல்லை என்பதில் அவனுக்கு அவனே தெளிவு.    

ஜெயந்திக்கு அப்போதைக்கு அவளின் கவனம் அவளின் ஜெர்மனி பயணம்… சென்று வந்த பிறகு மருதாச்சலமூர்த்தியோடு ஒரு ஆதர்ஷ வாழ்க்கை வாழ வேண்டும் என்ற நினைப்பெல்லாம் இருந்தது.  

அப்போதைக்கு பெரிதாய் வேறு எதிலும் கவனமில்லை..

மருது ஜெயந்தியின் சில பல கனிவான பார்வைகளுக்கே மகிழ்ந்து போனான்.. இன்னும் கவனிப்பாய் அவள் பார்த்திருந்தால் உண்மையில் அனுப்பியே இருக்க மாட்டான்.. உண்மையில் அவளுக்கும் நேரம் கொடுக்க வேண்டும் என்றும் நினைத்தான். ஆனால் அவ்வவ்போது முடியாது அவள் போக கூடாது என்று மனது முரண்டு பிடிக்கும்.

ஆனால் சென்று விட்டாளே!

ஜெர்மனி வாழ்க்கை, புது வேலை, அங்கே இருக்க, பழக, தன்னை நிருபிக்க வேண்டிய கட்டாயம், இப்படி பலதும் இருக்க, ஜெயந்தியின் கவனம் முழுவதும் அங்கே. அதற்காக மருதுவை மறந்து விட்டாள் என்று சொல்ல முடியாது.. இரவு என்று ஒன்று வந்து விட்டாலே மருதுவின் ஞாபகம் வந்து விடும்… ஆம்! ஆணிற்கு மட்டுமா ஏக்கம் பெண்ணிற்கும் தானே!

அதையும் விட அவள் ஹாஸ்டலில் கூட இருந்ததில்லை, எப்போதுமே வீட்டுப் புறா! இப்போது பறக்கவும்.. அப்படி ஒன்றும் பெரிய மகிழ்ச்சி இல்லை.. கூட்டிற்கு செல்ல தான் ஏக்கம். அப்போதிருந்தே நாட்களை எண்ண ஆரம்பித்தால் எப்போது இரண்டு வருடம் முடியும் என்று..

உடல்களில் இருந்த நெருக்கம் வார்த்தைகளில் இன்னும் ஜெயந்திக்கு வரவில்லை.. நிறைய அவனிடம் பேச வேண்டும் என்று நினைப்பாள் ஆனால் என்ன பேசுவது என்று தெரியாது.. ஒரு தயக்கம், சிறிது பயம் மருதுவிடம் இருந்தது..

அதுவும் அவன் பலமுறை “போய் தான் ஆகவேண்டுமா .. உனக்கு வெளிநாடு போக வேண்டும் என்றால் டூர் போகலாம்.. அங்கே இவ்வளவு பெரிய வேலை கிடைக்கும் போது இங்கே கிடைக்காதா? முயற்சி செய்!” என்றான்.

“நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையா, அதற்கும் வழி செய்கிறேன்” என்றான். “நீயாக சம்பாதிக்கும் வரை அங்கே உனக்கு எவ்வளவு சம்பளமோ அதை நீ இங்கே உழைக்காமலேயே செலவு செய்!” என்றான்.

என்னென்னவோ சொல்லிப் பார்த்தும் மீறி வந்து விட்டாள்.. அவனை மீறி வந்தது மனதிற்கு ஒரு நெருடலை கொடுத்துக் கொண்டே இருந்தது. முழு மனதோடு உற்சாகமாக இருக்க முடியவில்லை. வேலையில் இப்போது ஆர்வமும் சற்று குறைந்து, அதுவும் ஜெர்மன் மொழி வேறு படிக்க வேண்டும் என்று சொல்ல அதுவும் பிடித்தமில்லாமல் போனது.

பிடிக்காமல் இருக்கிறேன் என்று தெரிந்தால் தொலைத்து விடுவான் என்று தெரிந்ததால், தயக்கமும் பயமும் வந்து அமர்ந்து கொண்டது.  

அதனால் பேசும் போதும் கவனமாக “சாப்பிட்டீங்களா, தூங்கிணீங்களா, கட்டட வேலை எப்படி போகுது, ஆர்டர் எல்லாம் ப்ளேஸ் பண்ணியாச்சா” இப்படி தான் பேச முடிந்தது.

ஆனால் மருது நிறைய பேசினான்.. அவளின் நாளின் முடிவில் அவளுக்கு அழைப்பவன், என்ன செய்தாள், ஏது செய்தாள், என்று ஒன்று விடாமல் விஷயம் வாங்கிவிடுவான். ஆனால் வார்த்தைகள் முடிக்கும் போது “எப்போ வரணும்னு தோணினாலும் உடனே வந்துடு” என்பான்..

கூடவே “நீங்க இங்க வாங்க” என்ற அவளின் அழைப்புக்காக மனம் ஏங்கும்.. ஒரு முறை அவள் அழைத்திருந்தால் போதும் சென்றிருப்பான்.. ஒரு பத்து நாளாவது தங்கி வந்திருப்பான். மூன்று மாதம் ஒரு முறையாவது போய் வந்திருப்பான்.  

அவள் ஏன் என்னை அழைக்கவில்லை, என்னால் முடியாது என்று நினைத்து விட்டாளா என்ற கோபம் மனதிற்குள் சிறிது சிறிதாக வியாபிக்க துவங்கியது.

ஜெயந்திக்கு அவன் நாலாவது பாஸ், அஞ்சாவது பெயில் என்பது மட்டும் நெஞ்சில் நன்றாய் பதிந்திருக்க. அவனுக்கு பாஸ்போர்ட் இருக்காது என்று நினைத்துக் கொண்டாள், பாஸ்போர்டே இருக்காது எனும் போது விசாவிற்கு ஏது வழி?

ஒரு வார்த்தை அவனிடம் கேட்டிருக்கலாம், கேட்கவில்லை!

அவள் சென்ற ஒரு வருடத்தில், மருது ஸ்டோர்ஸ் பிரம்மாண்டமாய் திறப்பு விழா நடந்தது. மருது எவ்வளவோ பேசிப் பார்த்தான் “வந்து விட்டு போ, விடுமுறை எடு” டிக்கெட் எல்லாம் கூட அவளை கேட்காமலேயே போட்டு அனுப்பிவிட்டான்.

ஆனால் அவள் செல்லவில்லை! சென்றால், அவனை பார்த்த பிறகு, அப்பா, அம்மா, அண்ணன், தம்பி எல்லோரையும் பார்த்த பிறகு, திரும்ப வரமுடியும் என்று தோன்றவில்லை.. அதன் பொருட்டே செல்லவில்லை.. ஒரு இரண்டு வருடமாவது படித்த படிப்பிற்கு இருந்து விட வேண்டும் என்ற தணியாத ஆவல்..

முன்பு எப்படியோ, பணத்தின் தேவை இருக்க ஒரு கட்டாயம் இருந்திருக்கும், இப்போது அவளுக்கு அப்படி எதுவும் இல்லையே.. அவள் யுரோவில் சம்பளம் வாங்கினாலும் மருதுவும் அவளிற்கு பணம் அனுப்பினான்.  

“வெளிநாட்டு வாழ்க்கை, எண்ணி எண்ணி செலவு செய்யாதே, பணம் சேர்க்க வேண்டும் என்று எல்லாம் நினைக்காதே, வேலை நேரம் போக ஜாலியா இரு” என்பான்.

Advertisement