Advertisement

        கணபதியே அருள்வாய்

               நீங்காத ரீங்காரம்

அத்தியாயம் ஒன்று :

செல்லாத்தா செல்ல மாரியாத்தா எந்தன் சிந்தையில் வந்து அரைவினாடி நில்லாத்தா ….

ஆதிசக்தி மாதா கருமரியாத்தா எங்கள் ஆதிசக்தி மாதா கருமாரியாத்தா …

எல் ஆர் ஈஸ்வரியின் கணீர் குரல் கட்டியிருந்த ஒலிபெருக்கியில் ஒலிக்க, ஜெயந்தியின் கண்கள் விழித்துக் கொண்டது, கண்கள் மட்டுமல்ல புலன்களும்,

நேரத்தை பார்த்தால் காலை ஐந்து மணி.

“எப்படி தான் இப்படி வைப்பாங்களோ தெரியலை? மனுஷங்களை ஒரு லீவு நாள்ள கூட தூங்க விடராணுங்களா உயிரை எடுக்கராணுங்க. ஒரு ஆறு மணிக்கு பாட்டை வெச்சா என்ன? இன்னும் ஒரு பதினஞ்சு நாள் மேல இருக்கு பண்டிக்கைக்கு, அதுக்குள்ள காதுல கத்த விடறாணுங்க. இன்னும் தூங்கின படி தான்” என்று அலுத்துக் கொண்டே கண்களை மூடினாள்.

சென்னையே அவர்களுக்கு புதிது. வந்து இரண்டு வருடங்கள் தான் ஆகின்றது. இதில் குரோம்பேட்டைக்கு வந்து இரண்டு மாதங்கள் தான் ஆகிறது.

ஆடி மாத பண்டிகை ஏரியாவில் தூள் கிளப்ப, ஷப்பா இந்த பதினைந்து நாட்களாக காதுக்குள் ரேடியோவின் சத்தம் மட்டுமே.

“ங்கொயாலே வெக்கறவன் என் கைல மட்டும் மாட்டுனா கைமா தாண்டி மவனே நீ” என்று சென்னை பாஷையும் அவளின் ஊர் பாஷையும் கலந்து கட்டினாள்.

பின்னே காலை ஏழு மணிவரை உறக்கம் என்பது அவளிற்கு எழுதப் படாத விதி, இங்கே வந்ததில் இருந்து ஐந்து மணிக்கு ஒலிபெருக்கி அலறியது.

உறக்கம் வராமல் எழுந்து அமர்ந்து கொண்டாள்.

அவர்களின் ஊர் தஞ்சாவூர் பக்கம் ஒரு கிராமம். அண்ணன் தம்பி என்று இரண்டு பேருடன் பிறந்தவள். ப்ளஸ் டூ முடித்ததும் காலேஜ் சென்னையில் சேர்வதற்கு கவுன்சிலிங்கில் வந்தது.

ஜெயந்தி படிப்பில் கெட்டி, அதனால் அவளாய் எது சேரலாம் என்று தேர்ந்தெடுக்கும் நிலையில் இருந்தாள். அவளுக்கு சென்னை, இந்த கல்லூரி, இந்த துறை பிடித்திருக்க, 

அண்ணன் ஒரு புகழ் பெற்ற தொலைக்காட்சி நிறுவனத்தில் சிறு வேலையில் இருக்க, அப்பா ஒரு கார் மெக்கானிக், சொந்தமாய் கிடையாது தஞ்சாவூரில் கார் மெக்கானிக்கிடம் இவர் அசிஸ்டன்ட், அதை இங்கே பார்த்துக் கொள்ளலாம் என்று குடும்பமே சென்னைக்கு புலம் பெயர்ந்து விட்டது.

ஆம்! வசதியானவர்கள் அல்ல, கைக்கும் வாய்க்கும் சரியாக இருக்க, வீடு வாசல் எதுவும் கிடையாது. எப்போதும் வாடகை வீடு தான். படித்தது கவர்மென்ட் பள்ளியில், இப்போது காலேஜ் ஃபீஸ் ஹாஸ்டல் ஃபீஸ் இவர்களின் ஜீவனம் எல்லாம் சிரமம் கொடுக்கும் என்று தெரிய, பேசாமல் வீட்டை மாற்றிக் கொள்ளலாம் பெரியவனும் அங்கே தானே இருக்கிறான் என்று வந்து விட்டனர்.     

இதோ மெட்ராஸ் இன்ஸ்டிடுட் ஆஃப் டெக்னாலஜியில் ஆட்டோ மொபைல் என்ஜினீயரிங், பெண்கள் அதிகம் தேர்ந்தெடுக்காத படிப்பு. அப்துல் கலாம் படித்த காலேஜ் என்பதே அவளை அதனை தேர்ந்தெடுக்க செய்தது.

சிறுவயதில் இருந்து அப்பாவை பார்க்க, அவரின் மெக்கானிக் ஷெட் போகும் போது, அங்கிருந்த வண்டிகளின் ரகசியக் காதலியானாள். இதோ அதனைக் கொண்டு ஆட்டோ மொபைல் இஞ்சினியரிங் படிப்பு.

முன்பு இருந்த ஏரியாவில் வாடகை குறைவு, இங்கே சற்று அதிகம் தான். ஆனால் அவளின் கல்லூரி இங்கே தான். அப்பாவின் மெக்கானிக் ஷெட்டும் இங்கே அதற்காக வந்தனர்.  அப்பர் கிளாஸ், மிடில் கிளாஸ், லோ கிளாஸ் என்று பணத்தை கொண்டு வரையருக்கப்படும் எல்லா வகையினரும் அந்த ஏரியாவில் கலந்து கட்டி அடித்தனர்.  

அங்கிருந்த வேம்புலியம்மன் கோவிலில் தான் ஆடிமாத பண்டிகை. இன்று ஞாயிறு அவளுக்கு கல்லூரியும் விடுமுறை.

அப்பாவிடம் கேட்டு அவரின் மெக்கானிக் ஷெட் செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள். 

மூன்றே அறை கொண்ட வீடு, ஒரு கூடம், சமையல் அறை, ஒரு அறை. அம்மாவும் அவளும் அறையில் படுக்க, ஆண்கள் மூவரும் கூடத்தில் தான். தெருவின் ஆரம்பத்தில் வீடு இருக்க, பக்கத்துக்கு தெருவின் ஆரம்பத்தில் கோவில் இருக்க, சத்தம் காதை பிளக்க, யாராவது இருந்தால் கேட்டே விடுவோம் என்று எழுந்து வந்தாள்.        

கதவு திறந்து வெளியே வந்து நின்றாள். எங்கும் இருட்டு கோவிலில் மட்டும் விளக்கு எரிந்தது. அந்த பக்கத்தில் அவர்களின் வீட்டுக்காரர் வீடு, கோவிலின் பக்கம் அவர்களின் காம்பௌண்ட் இருக்கும். அதில் இருந்த காலி இடத்தில், வேப்ப மரம், கொய்யா மரம், மாதுளம் மரம், பூச்செடி என நிறைய இருக்கும்.

வீட்டுக்கார அம்மா அதனை பராமரிக்கிறார். அவருக்கு அது ஒரு உயிர். “இந்த பக்கம் எட்டிப் பார்க்க போய் செடியை மிதிச்சு வெச்சேன், அந்தம்மா என்னை மிதிச்சிடும்” என்று நினைத்தவள் காம்பவுண்ட் கேட் திறந்து வெளியே வந்து நின்றாள்.

கோவிலின் முன் ஒரு அம்மா சிகப்பும் மஞ்சளும் கலந்த சேலை கட்டி  வாயிலை கூட்டி தண்ணீர் தெளித்து கொண்டிருந்தார்.

இவளின் இடம் இருட்டாய் இருக்க, அவர் நின்ற இடம் தெரு கோவிலின் முன் இருந்த விளக்கால் வெளிச்சமாய் இருந்தது.  

அங்கிருந்தே ஒரு சத்தம் கொடுத்தாள் “அக்கா” என்று.

அவர் அவர்பாட்டுக்கு வேலை செய்து கொண்டிருக்க, “அக்கா உங்களை தான்” என்றாள் இன்னும் சத்தமாக.

அவர் நிமிர்ந்து பார்க்கவும் “அக்கா அதுக்குள்ள எதுக்கு பாட்டு, இன்னும் கொஞ்சம் நேரம் கழிச்சு வெக்க கூடாதா? ராத்திரியும் பதினோரு பன்னண்டு வரை பாடுது. இப்பவும் பாடுது, எப்படி தூங்க?” என்றாள்.

அவர் பதில் சொல்லாமல் அங்கிருந்து முறைத்து பார்ப்பது தெரிய,

“தோடா முறைக்குது, கண்ணை நோண்டி காக்காய்க்கு போடணும்” என்று மெதுவாக முணுமுணுத்துக் கொண்டவள்,

“சொன்னேன், முடிஞ்சா செய்ங்க, இல்லை விடுங்க” என்று சத்தமாய் சொல்லி, “அதுக்கு எதுக்கு கஷ்டப்பட்டு முறைக்கறீங்க, கண்ணு வலி எடுக்க போகுது” என்று மெதுவாய் சொல்லி அந்த பெண்மணி எதுவும் சண்டைக்கு வரும் முன் உள்ளே வந்து விட்டாள்.

மெதுவாய் சொன்னதையும் சத்தமாய் சொல்லியிருப்பாள், ஆனால் அவ்வளவு தான் அவளின் வீட்டினர் அவளை உண்டு இல்லையென்று செய்து விடுவர். ஆம்! அவர்கள் இருக்கும் இடமே தெரியாது. அம்மா, அப்பா, அண்ணன், தம்பி என்று அத்தனை பேரும் யார் வம்பு தும்புக்கும் போகாதவர்கள்.

பிரச்சனை என்றால் காத தூரம் ஓடுவர், ஓடாத ஒரே ஜீவன் ஜெயந்தி. அதனையும் விட அந்த இடத்தை எட்டி பார்க்காவிட்டால் அவளுக்கு மண்டை வெடித்து விடும்.

இப்படியாக உறக்கமும் கலைந்து விட செய்வதற்கும் எந்த வேலையும் இல்லாமல் இருக்க,

மொபைல் எடுத்து ஹெட் செட் போட்டு பாட்டை ஓடவிட்டு படுத்துக் கொண்டாள். அப்படியே உறங்கியும் விட்டாள்.

எட்டு மணி போல அவளின் அண்ணன் விமலன் பார்த்தவன், “எருமை ஹெட் செட் காதுல மாட்டிட்டு தூங்குது” என்று அதனை கழட்டி விட்டான்.

அதில் விழித்தவள் “அண்ணா வெளில கத்துது” என்று பாட்டை காண்பிக்க,

“அங்க கத்துதுன்னு மண்டைக்குள்ள ஓட விடறியா, வெரி பேட்”  

“சத்தத்துக்கு பழகிக்கணும் இல்லை, அதுக்கு தான்” என்று புது தியரி பேசினாள்

“நீ இருக்கியே” என்று சிரித்தபடி அவன் போக,

அதற்குள் அம்மாவின் சமையல் அவளை எழ வைத்தது.

எழுந்து சமையலறை சென்று என்ன அடுப்பில் என்று பார்த்தவள்,

“அம்மா மட்டன் செய்யலையா?” என்று கேட்க,

“இன்னைக்கு கோவில்ல கூழ் ஊத்தறாங்க கண்ணு, நானும் செஞ்சு தர்றேன். அதனால சைவம் தான்”  

“போம்மா” என்று சலித்துக் கொண்டே வந்தவள்,

“அப்பா இன்னைக்கு அம்மா செய்யலை, நீங்க எனக்கு கடையில வாங்கி குடுக்கணும்” என்று சொல்லிக் கொண்டே அமர்ந்தாள்.   

“அப்போ எனக்கு?” என்றபடி கமலன் அவளின் தம்பி வந்தமர்ந்தான்.

அவன் இப்போது தான் பன்னிரெண்டாம் வகுப்பு.

இப்படியாக அப்பாவிடம் பேசி “இன்னைக்கு உங்க கடையில ஓனர், வேற ஆளுங்க எல்லாம் வர மாட்டாங்க தானே, என்னை கூட்டிப் போகணும்” என்று சம்மதம் வாங்கி விட்டாள்.

அவர் பொதுவாக வேலை நாட்களில் அங்கே ஆட்கள் வருவதும் போவதுமாக இருக்க அழைத்து போக மாட்டார். “அப்பா இது என் வேலைப்பா” என்று அவள் சொன்னாலும்,

“மா கம்பனி வேற, இது வேற” என்று விடுவார் .

“போங்கப்பா, நான் படிச்சிட்டு நான் சொந்தமா வைப்பேன்”  

“நீ பாரின் போவேன்னு படிக்க வெச்சா, அழுக்குள உளலுவியா”

“அங்க போனா மட்டும் இந்த வேலை தானே செய்வேன்”

“அங்க செஞ்சா மதிப்பு, பணம், இங்க செஞ்சா ஒன்னு கிடையாது. நீ அங்க தான் போகணும்” என்பவரிடம்,

“சரி, சரி” என்று தலையாட்டி வைப்பாள்.

இன்று அப்பாவுடன் கிளம்ப, விமலனும் அவர்களுடன் இணைந்து கொண்டான். பின்னே இங்கே இருந்தால் அம்மா கூழ் ஊற்ற உதவிக்கு கூப்பிடுவார் என்று தெரியும். அதிசயமாய் இன்றைக்கு தான் சேனலில் ஓய்வு கொடுத்து இருந்தனர். கமலனை உடன் நிறுத்திக் கொண்டார் கலைச்செல்வி.

மூவருமாய் நடக்க, கோவிலை கடக்கும் போது அப்பா கோபாலன் சாமி கும்பிட நிற்க, இவளும் சென்று உடன் சென்று நின்றாள்.

அதற்குள் விமலனை நெருங்கியிருந்த சில இளைஞர்கள் “டேய், என்ன வீட்டு வாசல்ல நின்னு பாட்டு போடக் கூடாதுன்னு மிரட்டுனியாமே” என சத்தமிட்டனர்.

இவளும் அப்பாவும் திரும்பி பார்த்து வேகமாக அருகில் வந்தனர்.

“என்ன நீ அவ்வளவு பெரிய ஆளா?” என்று ஒருவன் கை நீட்டி மிரட்ட,

விமலனுக்கு எதுவும் புரியவில்லை “இல்லைங்க, நான் இல்லைங்க” என்றான்.

அதொன்றுமில்லை நைட்டி அணியமாட்டால் ஜெயந்தி, நைட் பேன்ட் ஷர்ட் தான் அணிவாள். சற்று உயரமும் கூட..

அதனால் காலையில் பார்த்த பெண்மணிக்கு இருட்டில் தெரிந்த இவள் யாரோ ஆண் போல தோன்ற செவியும் சற்று பழுதாய் இருக்க,

“அவங்க வீட்டு பையன்” என்று விட்டார்.

“யார் இவர்கள்?” என்று பார்த்தாள் ஜெயந்தி.

கோபாலன் அதற்குள் “என் பையன் அப்படி எதுவும் செய்ய மாட்டாங்க?” என்று அவரும் சொல்ல..

“இல்லை அக்கா சொல்லிச்சு, நீங்க தான்!” என்று அடித்து பேசினர்.

ஒருவன் அடிப்பது போல வந்து “என்னடா எங்க ஏரியாக்குள்ள வந்து இருந்துகிட்டு எங்களை பாட்டு போட வேண்டாம்னு சொல்றியா? கீசுடுவேன் கீசி!” என்று உதார் விட்டான்.

அப்பாவின் விமலனின் பதற்றம் சிறிதும் இல்லை ஜெயந்தியிடம். வாய் பேச பரபர வென்றது. ஆனால் அப்பா திட்டுவாரே என்று அமைதியாய் நின்றாள்.

“நான் இல்லைங்க” என்று விமலன் சொல்ல,

“பொய் சொல்ற நீ” என்று ஒருவன் அவனின் சட்டையை பிடித்தான்.

அதுவரை அமைதியாய் இருந்த ஜெயந்திக்கு கோபம் பெருக,

“ஏய், கை எடு, சட்டையில இருந்து கை எடு” என்று வேகமாய் அருகில் போனாள்.

“தோடா, நீ யாரு?” என அவர்கள் பேச,

கோபாலனும் விமலனும் “பேசாம இரு ஜெயந்தி” என்று அவளை அடக்கி, “இல்லைங்க நாங்க இல்லைங்க” என்று மீண்டும் சொன்னர்.

“அது நான்தான் சொன்னேன்” என்று அவர்களின் முன்னாள் அசராமல் போய் நின்றாள்.

அவளின் துணிச்சலில் அவர்கள் ஒரு நிமிடம் தடுமாறி… “என்ன தைரியம் உனக்கு ஒரு பொம்பளை பிள்ளை” என்று ஆரம்பிக்க,

“டேய், என்னங்கடா சத்தம்” என்ற ஒரு குரல் ஓங்கி ஒலித்தது.

சத்தமிட்ட இளைஞர்கள் அனைவரும் கப் சிப்பென்று அடங்கினர்.

சுற்றி நின்ற இளைஞர்கள் நகர, உயரமான ஒருவன் முன் வந்து நின்றான்.

ஜெயந்தி அவன் புறம் பார்வையை ஓட்டினாள். இதற்கு முன் அவள் அவனை பார்த்தில்லை. அவனை என்ன அங்கிருந்த யாரையுமே தெரியாது.

வீட்டை விட்டு இறங்கினால் செல்லும் பாதையில் மட்டுமே கவனம், வேறு யாரும் பாதையில் வந்தால் தெரியாது. ஏன் அவளின் குடும்பத்தில் ஒருவர் வந்தால் கூட தெரியாது.

“அட, நம்ம லகான்” என்ற பார்வையை அவனும் ஜெயந்தியின் மீது ஓட்டினான்.

ஆம்! அவளுக்கு தான் தெரியாது. அவனுக்கு தெரியும், தினமும் அவள் கல்லூரி செல்ல நடக்கும் போது அங்கிருக்கும் டீக்கடை ஒன்றில் காலை டீ அருந்தியபடி நிற்பான்.

ஆனால் ஒரு நாள் கூட ஜெயந்தியின் பார்வை சுற்று புறம் கவனித்ததில்லை. அதனால் அவன் வைத்திருக்கும் பெயர் லகான்.  அதாகப்பட்டது யாரோ கடிவாளமிட்டு அவளை செலுத்துவது போல நடப்பாள்.

“என்னடா பிரச்சனை?”

“ண்ணா இந்த பொண்ணு பாட்டு போடக் கூடாதுன்னு மிரட்டி இருக்குண்ணா”  

“யாரை மிரட்டினேன், கூப்பிடுங்க அவங்களை” என்று அசராமல் ஜெயந்தி சொல்ல,

“தம்பி, என்னனு தெரியலை. அப்படி எல்லாம் பண்ண மாட்டா. மன்னிச்சுக்கங்க” என்றார் கோபாலன் அவசரமாக அவனிடம்.

அவன் மருதாச்சலமூர்த்தி! அந்த ஏரியாவின் மினி தாதா என்று சொல்லலாம்

அவனை பற்றி தெரிந்தவர்களாக கோபாலன் பேச, விமலனும் “ஆமாங்க” என்று பிரச்னையை முடிக்க பார்த்தனர்.

“ண்ணா, பத்மாக்கா பொய் சொல்லாது” என்று அந்த இளைஞர்களும் பேச,

“இன்னா மிரட்டினேன் நானு, சட்டையை பிடிப்பியா நீ, கூப்பிடு அவங்களை. நான் மிரட்டலை சொல்லிட்டா நீ மன்னிப்பு கேட்கணும் சட்டையை பிடிச்சதுக்கு” என்று பேசினாள்.

“இன்னாது நான் மன்னிப்பு கேட்கணுமா?” என்று அவன் எகிறி ஜெயந்தியின் அருகில் போக பார்க்க,

“டேய்” என்ற ஒரு வார்த்தை அவனை நிறுத்த, மருதுவின் முகத்தில் தெரிந்த கோபம் அவனை பின் வாங்க வைத்தது.

என்ன நடந்தாலும், பசங்கள் தப்பே செய்தாலும் கூட நிற்கும் அண்ணன் இன்று என்ன பிரச்சனை என்று புதிதாய் கேட்க, கூடவே அந்த பெண்ணை பேச விட்டு வேடிக்கையும் பார்க்க,

நொடியில் அடங்கினர்.

“நீங்க போங்க” என்றான் மருது.

“தேங்க்ஸ் சர்” என்று அவசர அவசரமாய் விமலன் சொல்ல,

கோபாலன் “நாங்க எதுவும் பண்ணலை தம்பி” என்று மீண்டும் சொல்லி “நன்றி தம்பி” என்று சொல்லிச் செல்ல,

அப்போதும் அண்ணனின் சட்டையை பிடித்தவனை பார்த்து ஜெயந்தி முறைத்து நின்றாள்.

“வா நீ” என்று விமலன் அவளின் கை பிடித்து இழுக்க,

“அண்ணா இவன் உன் சட்டை பிடிச்சான்” என்று அவள் பேசப் பேச,

“வா நீ” வலுக்கட்டாயமாக இழுத்து அந்த வழியாக ஒரு ஆட்டோ வர ஆட்டோவை நிறுத்தி “ஏறு நீ” என்று ஏற்றி அந்த இடம் விட்டு வேகமாய் நகர்ந்தனர்.

அவர்கள் சென்றதும் அங்கிருந்தவர்களை பார்த்தவன் “அந்த பொண்ணை யாரும் தொந்தரவு பண்ணக் கூடாதுடா” என்று சொல்ல..

உடனே “ண்ணா, அண்ணியாண்ணா” என்றான் ஒருவன் சந்தோஷமாக.

“ஏன்டா டேய் அறிவிருக்கா? அது படிக்கிற பொண்ணு, பார்க்கவும் எப்படி அம்சமா இருக்கு, அதையேண்டா அண்ணின்னு சொல்றீங்க, நல்லா இருக்க வேண்டிய பொண்ணுடா, வேலையை பாருங்கடா!” என்றான்.

“ஏன் உனக்கு என்ன குறைச்சல்?”

“அடேய் சினிமால தாண்டா ரௌடிய படிச்ச புள்ளைங்க விரும்பும். நிஜத்துல எல்லாம் கிடையாது. ரெண்டு மாசம் தான் ஆச்சு குடி வந்து. அதையும் இதையும் பேசி துரத்தி விட்டுடாதீங்கடா, பாரு அப்பாவும் அண்ணனும் இப்போவே பயந்துட்டாங்க!”

“நல்ல பொண்ணு தினமும் பார்க்கறேன். தலையை கூட அந்த பக்கம் இந்த பக்கம் திருப்பாது! அந்த குணத்துக்காக உதவிக்கு வந்தேன் சரியா. திரும்ப இதை பத்தி ஒருத்தனும் பேசக் கூடாது” என்று மிரட்டி பேசினான்.

“சரிங்கண்ணா” என்று சொல்லி சென்றார்கள்.

உண்மையில் மருதாசாலமூர்த்தி சைட் அடிக்கும் யுவதி அவள். அப்படி ஒன்றும் பெண்கள் பின்னால் சுற்றுபவன் கிடையாது. ஆனால் அழகான பெண்களை பார்த்தால் பார்ப்பவன் தான்.

அப்படி கருத்தை கவர்ந்தவள் தான் ஜெயந்தி. அதி அழகு என்று சொல்ல முடியாவிட்டாலும் அழகான பெண். நிமிர்ந்த நடை, நேர்கொண்ட பார்வை என இருப்பவள். இருபது வயதில் இருப்பவள் அதனால் இளமையும் சேர்ந்து கொண்டது.

“இந்த மாதிரி ஒரு பொண்ணு நமக்கு பொண்டாட்டியா வந்தா எப்படி இருக்கும்” என்று தோன்றியது

ஆனால் நிதர்சனம் புரிந்தவன். முகம் பார்த்தாலே அறிவுக்களை சொட்டியது. கூடவே கல்லூரிக்கும் போகிறாள். ஒரு நாள் தொடர்ந்து எந்த கல்லூரி என்று பார்த்தான் பெரிய கல்லூரி.

“நம்மை எல்லாம் பார்க்காது, வேற வேலை பாரு” என்று மனதை திருப்பிக் கொண்டான் என்பது தான் உண்மை.

ஆனாலும் அவளை பிடிக்கும் அதன் பொருட்டே யாரும் தொந்தரவு செய்யக் கூடாது என்றான்.

 “கட்டுனா அவளை கட்டணும்டா” என்ற எண்ணத்தில் இருந்தவன், “இல்லாட்டி கட்டுனவன் காலை தொட்டுக் கும்பிடணுடா” என்ற பாட்டை தான் மனதில் ஓட விட்டான்.                     

         

   

  

    

 

 

   

.

               

     

 

Advertisement