Advertisement

அத்தியாயம் பத்தொன்பது :
சில நொடிகள் பேச்சே வரவில்லை ஜெயந்திக்கு.. என்னது என்னை போ என்று சொல்லிவிட்டனா?
கண்களில் நீரோடு அவள் நின்ற விதம் மனதை அப்படி அசைத்த போதும் முதல் முறையாக ஒன்றை செய்தான்.. கோபத்தை விட்டு நிதானத்தை கையில் எடுத்தான்.. மருதுவிற்கு மனது விட்டு போயிருந்தது
இதுவரை குடும்பமே கிடையாது. ஆனாலும் குடும்பத்திற்குள் சண்டை சச்சரவுகள் இப்படி வரும் என்று தெரியும். அதுதான் நிறைய பஞ்சாயத்து பேசுகிறானே! ஆனால் அவனுக்கே எல்லோர் முன்பும் இப்படி ஒரு நிலை என்பதை அவமானமாய் உணர்ந்தான்..  
அவளின் அப்பாவை நோக்கி திரும்பியவன்.. “உங்க பொண்ணை நான் அடிச்சதுக்கு உங்க கிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேன், இந்த ரவுடி பய, யாருமில்லாத பய அவ்வளவு ஏன் அனாதை பய, அப்படியும் சொல்லலாம். அவனோட உங்க பொண்ணு இருக்கணும்னு எந்த அவசியமுமில்லை” என்று நிறுத்தியவன்..
“நீங்க கூட்டிட்டு போயிடுங்க” என்று சொல்ல..
அப்படியே ஒரு அதிர்வு எல்லோரிடமும்.. இப்படி சொல்லுவான் என்று எதிர்பாரக்கவேயில்லை. அப்போதும் கோபாலன் மட்டும் முறைப்பாய் நிற்க..      
“இல்லை அடிச்சதுக்கு என்னை ஏதாவது செய்யணும்னு நினைச்சா உங்களால என்ன செய்ய முடியுமோ செஞ்சிக்கோங்க” என்று பேச
விமலன் தான் அவசரமாக “இல்லை மாமா, இப்படி எல்லாம் பேச வேண்டாம். அப்பா ஏதோ பொண்ணு மேல இருக்குற பாசத்துல பேசிட்டாரு. நாங்க எல்லோரும் மன்னிப்பு கேட்கறோம், இப்படி எல்லாம் பேசாதீங்க” என்று பதறி பேசினான்.
“ஏன் இப்படி அநாதைன்ற வார்த்தை எல்லாம் சொல்றீங்க, ப்ளீஸ், அப்பா பேசினது தப்பு” என்று ஜெயந்தி பேசி அவனருகில் போகப் போக..
பக்கம் வந்து விடாதே என்று கை நீட்டி தடுத்தவன், “எல்லோர் முன்னையும் என்னை பேசும் முன்ன யோசிச்சிருக்கணும்.. என்னை பத்தி நீயோ.. உன் குடும்பமோ நினைக்க போறதில்லை, அது எனக்கு தேவையுமில்லை”
“ஆனா நீ… நீ என்னை பத்தி நினைக்கவேயில்லை பார்த்தியா. மனசை நான் எவ்வளவு சமன் செய்தாலும் முடியலை. நான் செய்யறது ரொம்ப அதிகமா தெரியலாம், சுயநலமா தெரியலாம், கண்டிப்பா அதிகம் தான், சுயநலம் தான்!”
“ஏன்னா எனக்கு யாரும் கிடையாது. அப்போ என்னை பத்தி நான் தானே யோசிக்கணும். நான் சுயநலவாதி தான். அப்படி தான் இனிமேயும் இருப்பேன்!”
“வேண்டாம் நமக்குள்ள சரிவராது, நீ கிளம்பிடு!” என்று நிதானமாகவே ஜெயந்தியை பார்த்து சொன்னான்.
மனது வெறுத்து போய் இருந்தது. “ரவுடிபய, யாருமில்லாத பய” என்ற வார்த்தைகள் அவனை ஒரு சுழலாய் சூழ்ந்து கொண்டது..
“நீங்க எல்லோரும் வெளில போங்க” என்று அப்பா, அம்மா, அண்ணன் தம்பி என்று அனைவரையும் பார்த்து சொன்னவள், “நான் போகமாட்டேன்” என்றாள்.
“போகாத” என்று வெறுப்பாய் சொன்னவன் “நான் போறேன்” என்று சரசரவென்று வெளியில் செல்ல ஆரம்பித்தான்.. அந்த பார்வை அதில் தெரிந்த வெறுப்பு அவனின் செய்கை.. ஒரு உச்சபட்ச அதிர்வு அவளிடம்..
இவ்வளவு தானா எனக்கும் அவனுக்குமான உறவு! இதற்கா திருமணம்! இதுவா வாழ்க்கை? யோசனைகள் ஓட சமைந்து நின்று விட்டாள்.
அதற்குள் அவன் வெளி வாயிலை நெருங்கி இருக்க..   
“இருங்க, ஒரு நிமிஷம்” என்று கத்தி அவன் முன்னே ஓடி நின்றவள்.. “நான் கிளம்பிறேன்” என்று சொல்லி உள்ளே வேகமாய் வந்து அவளின் பர்ஸ் மற்றும் மொபைல் எடுத்து கொண்டவள்.. வேகமாய் வெளியேற,
அவளின் பின்னேயே கோபாலன் கலைச்செல்வி விமலன் கமலன் என்று சென்றனர்.
மருது படுக்கையறை உள் சென்றவன் தலையணையுள் முகம் புதைத்து படுத்துக் கொண்டான்.
பிறந்ததில் இருந்து அப்பா அம்மா இல்லாமல் வளர்ந்து, பத்து வயதில் இருந்த ஒரு சொந்தமான பாட்டியும் இல்லாது போய், நடுத்தெருவில் நின்று, அதன் பின் ஒற்றையாய் போராடி வாழ்வில் எல்லாம் செய்து கொண்டிருக்க.. என்னவோ வாழ்வில் மோசமாய் தோற்றுவிட்ட ஒரு உணர்வு!
கூடவே ஒன்றுமில்லாததற்கு தான் அதிகப் படியாய் நடக்கிறோமோ என்ற உணர்வு!
தாள முடியாத மன அழுத்தம்!
அவனை பற்றி ஜெயந்திக்கும் தெரியவில்லை! ஜெயந்தியை பற்றி அவனுக்கும் தெரியவில்லை!
திருமண வாழ்வு அறிதலை உடனே கொடுத்து விட்டாலும், அப்படி ஒன்றும் புரிதலை உடனே கொடுத்து விடுவதில்லை!  
என் பொண்டாட்டி அப்படி தான்! என் புருஷன் அப்படி தான்! என்பது போல எதிரில் இருக்கும் புருஷனோ மனைவியோ கணிக்க முடியும். ஆனால் ஏன் அப்படி என்று கணிக்க சிலரால் மட்டுமே முடியும்!
இங்கே மருதுவிடமும் ஜெயந்தியிடமும் அறிதலே பஞ்சம், இதில் புரிதல் எங்கிருந்து? மனதை இன்னும் அறியவேயில்லை.. உடலை அறிந்தும் இரு நீண்ட வருடங்கள் ஆகிறது, பின்னே எது பிடித்து வைக்கும் மருதுவை! இதுவரை அவனை பிடித்துக் கொள்ள நினைத்த ஜெயந்தியும் இனி நினைப்பாளா தெரியாது?      
அப்பாவிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.. இப்படி அப்பா கிறுக்குத்தனம் செய்வார் என்று நினைக்கவில்லை. சில சமயம் கோபாலன் அப்படி ஏதாவது செய்வார், ஆனால் மருதுவிடம் அதை செய்தது யாரும் எதிர்பாராதது.  
வெளியில் விரைந்தவள் வீடு செல்லும் வழிக்கு எதிர்புறம் நடந்தாள்..
“என்னை வெளியில் போ” என்று சொல்லிவிட்டானா. அதுவும் அடித்து விட்டு பின்பும் தாளவே முடியவில்லை அவளாலும்.. இப்படியா என் வாழ்க்கை இருக்க வேண்டும்..
முகம் வின் வின் என்று வலிக்க, இடுப்பும் வலிக்க, வேக நடை அதனை எல்லாம் அதிகரிக்க.. விமலன் “எங்க ஜெயந்தி போற?” என்று பதறி அவளின் முன் சென்று அவளை தடுத்து நின்றான்.
“எங்க போனாலும் உங்க வீட்டுக்கு வர மாட்டேன்.. பொண்ணை அடிச்சிட்டார்ன்னு கோபம் இருந்தா சண்டை போடலாம் தப்பில்லை. ஆனா எல்லோர் முன்னையும் மரியாதை குறைவு எதுக்கு செஞ்சீங்க அவரை. நான் இருக்கும் போது யாருமில்லாதவன்னு எதுக்கு சொன்னீங்க?”
“அதை கூட விடுண்ணா, அவர் இல்லைன்னா நீ இன்னைக்கு எங்களோட இருந்திருப்பியான்னு கூடத் தெரியாது.. அந்த நன்றி கூட வேண்டாமா இந்த அப்பாக்கு”  
“எனக்கு புரியவேயில்லை, இந்த அப்பா யாரோட இப்படி சண்டை போட்டிருக்கார்ன்னு. ஏற்கனவே என் மேல என் வீட்டுக்காரர் கோபத்துல இருந்தார். எங்களுக்குள்ள என்னவோ பிரச்சனை, நான் தீர்த்துக்கறேன். உங்களை நான் கூப்பிட்டேனா, அவருக்கு ரொம்ப கோபம் வரும், தெரிஞ்சது தானே!” என்று பொரிய..
“வீட்டுக்கு போய் பேசலாம் ஜெயந்தி” என்று அம்மா சொல்ல..
“நான் வேணா உன் வீட்டுக்காரன் கால்ல விழுந்து, உன்னை வீட்டுக்குள்ள சேர்த்துக்க சொல்லவா?” என்று அப்போதும் கோபாலன் இறுமாப்பாய் பேச..
“சே” என்ற பார்வையை கொடுத்து, “கல்யாணம் செஞ்சு குடுத்துட்டீங்கள்ள, எனக்கு என்னவோ நான் பார்த்துக்கறேன். உங்க வீட்டுக்கு வரமாட்டேன், என்னை எனக்கு பார்த்துக்க தெரியும்” என்று அப்பாவை பார்த்து சொன்னவள், அந்த வழியாக வந்த ஒரு ஆட்டோவை நிறுத்தி ஏறிக்கொண்டாள்.
“எங்க போற” என்று விமலன் அதில் கூட ஏற,
“அண்ணா தயவுசெஞ்சு என்னை விடு, நானே உனக்கு ஃபோன் பண்றேன், ப்ளீஸ் என்னை தனியா விடுங்க” என்று கண்ணீரோடு பேச.. வேறு வழியில்லாமல் இறங்கினான்.
“கண்ணு என்னடா ம்மா, தெரியாம நடந்துடுச்சு சரி பண்ணிடலாம் வீட்டுக்கு வா” என்று ஆட்டோவை பிடித்தபடி கலைச்செல்வி நிற்க,
“மா போம்மா” என்று சலிப்பாக அழுதவள்..
“கிளம்புங்கண்ணா” என்று சொல்ல…  
அந்த ஆடோகாரர் “எங்கம்மா போக” என்றார்.
“ம்ம், எதிர்ல இருக்குற சுவர்ல போய் முட்டுங்க” என்று அதட்டினாள், அதுவரை எப்படியோ அந்த நிமிடம் மருதுவின் மனைவியாய் மாறினாள்.
மருதுவின் மனைவி என்று தெரியும் அதனால் அந்த அட்டோக்கார் வாய் மூட..
“முதல்ல இடத்தை விட்டு கிளம்புங்க” என்றாள் அதிகாரமாக.
அவளின் மொத்த குடும்பமும் பார்க்க ஆட்டோ அவர்களுக்கு எதிர்ப்புறமாய் சென்றது.
என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றனர்.. பின்பு வேகமாய் மருதுவின் வீட்டின் உள்ளே சென்றான் விமலன்.. அவன் மட்டும் தான் சென்றான்.
சென்றவன் பெல் அடித்து வெளியில் நிற்க…
பெல் அடித்ததும் மருது வரவில்லை.. பின்பு விடாமல் அடிக்கவும் மருது வந்தவன், விமலனை பார்த்ததும் “என்னடா இப்போ?” என்று கோபமாய் பேச..
“அவ எங்களோட வரலை, ஆட்டோ ஏறி எங்கயோ போயிட்டா” என்று சொல்ல…
“இன்னாடா, இன்னாடா சொல்ற.. உங்களை தானே டா கூட்டிட்டு போக சொன்னேன். சாவடிக்கிறீங்கடா என்னை” என்று எரிச்சலாக கத்தினான்.
“சொன்னோம் கேட்கலை எங்களை எல்லாம் திட்டிட்டு போயிட்டா”
“சரி பின்னாடி போகாம, நீ என்ன பண்ற?”
“அது ஆட்டோ போயிடுச்சு”
“ஆட்டோ நம்பர் பார்த்தியா”
“இல்லை”  
“போடா” என்று விமலனை கெட்ட வார்த்தையில் திட்டினான்.
“அவ்வளவு வலில இருக்கா, எங்கடா போவா. என் உயிரை எடுக்காம விடமாட்டா. என்னைக்கு அவளை பார்த்தேனோ, அன்னைக்கு இருந்து என் உயிரை எடுத்துட்டு தாண்டா இருக்கா” என்று விமலனை அடித்து விடுபவன் போலப் பேசியவன்,
“எங்க ஆட்டோ ஏறினா?”
“இங்க வீட்டு வாசல்ல கொஞ்சம் தள்ளி”
உடனே செக்யுரிட்டியை அழைத்தவன் “நீ பார்த்தியாடா ஆட்டோ நம்பரை”  
“இவங்க எல்லாம் கும்பலா பேசிட்டு இருந்தாங்க, அதை பார்த்தேன். அண்ணி ஆட்டோல ஏறினது பார்த்தேன். ஆனா ஆட்டோ நம்பர் எல்லாம் பார்க்கலை”
“போடாங் நீ எதுக்குடா செக்யுரிட்டின்னு இருக்க” என்று அவனையும் திட்டி
சிசி டிவியில் பார்க்க முடியும்.. ஆனால் மருதுவிற்கு சரியாக இன்னும் பழகவில்லை. உடனே விஷாலிற்கு அழைத்தான்… அவன் அடித்து பிடித்து ஐந்து நிமிடத்தில் வர.. அடுத்த ஐந்து நிமிடத்தில் சிசி டீவியில்  ஆட்டோவின் நம்பரை பார்க்க, கூடவே தலையை நீட்டிய அட்டோகார்னை பார்க்க..
“ண்ணா, இவன் நம்ம ஸ்டேன்ட் தான்” என விஷால் சொல்ல மருதுவிற்கும் அவனை தெரிய, “அவன் ஃபோன் நம்பரை பிடி உடனே பேசு.. அப்படியே ஜெயந்தியை கூட்டிட்டு போய் இவங்க வீட்ல விட்டுடு” என்று சொல்லி என் பேச்சு முடிந்தது என்பதாக அவன் ரூமின் உள் சென்று விட்டான்.
மருது கோபக்காரன் என்று விமலனிற்கு தெரியும். ஆனால் இவ்வளவு எதிர்பார்க்கவில்லை. அதுவும் ஜெயந்தியிடம் இப்படி கோபம் காண்பிப்பது, அடித்து விட்டது, மனதை பிசைய அப்படியே அமர்ந்து விட்டான்.

Advertisement