Advertisement

நீ தெய்வம் தேடும் சிலையோ!..

3

குகன், இரவு பேசிக் கொண்டே.. அதியமானின் வீடு எங்கிருக்கிறது என தெரிந்துக் கொண்டான். அடுத்தநாள் அவரின் வீட்டில் சென்று அழைத்து வந்தான். நீலகண்டன்தான் ‘காலையிலேயே போ.. அவர் கடைக்கு வந்துவிடுவார்..’ என நேரமாக தம்பியை அனுப்பி வைத்தான்.

குகன் “நீ போ..” என்றான்.

நீலா முறைத்தான்.

ஒன்றும் சொல்லாமல் தானே சென்றான்.. நண்பனோடு ஒருவனோடு.

காலையில் அவரின் வீட்டின் முன் நின்று பெல் அடித்தான்.. கதவு திறந்துதான் இருந்தது. அதியமானின் மனைவி பார்வதி வந்து பார்த்து “யாருங்க” என்றார்.

மணி ஏழு.. இப்போது அதியமான் குளித்துவிட்டு.. பூஜை அறையில் இருந்தார் போல…

குகன் தங்களை அறிமுகம் செய்துக் கொண்டான்.

பார்வதி “வாங்க.. வாங்க.. நேற்று நைட் சொல்லிட்டு இருந்தார், வாங்க.. உள்ள வாங்க” என வரவேற்றார். தானும் இரண்டு வார்த்தைகள் ‘உங்க அம்மா இல்லாதது வருத்தமாக இருக்கு.. இப்போது நீங்க என்ன பண்றீங்க..’  என ஆறுதல் சொல்லி, கேள்விகள் கேட்டு.. பேசிக் கொண்டிருந்தார்.

குகன்.. அவரின் ஒரு கேள்விகே.. எப்போதும் போல எல்லா பதிலையும் சொன்னான். 

அதியமான், பூஜை அறையிலிருந்து வெளியே வரவு.. குகனை, பார்த்தவர் “வா பா.. குகன்” என்றார்.. அவனும் எழுந்து நின்றான்.

அதியமான் “என்ன பா… கடை வேலையை விட்டுட்டு வந்திட்டியா.. அண்ணன் என்ன பண்றார்..” என குகனிடம் கேட்டவர், மனைவியிடம் திரும்பி “டிபன் ரெடி பண்ணு பார்வதி..” என்றார்.

அப்போது அவசரமாக கிளம்பிய படியே “கார்த்தி.. சீக்கிரம்” என பக்கவாட்டில் உள்ள அறையை நோக்கி குரல் கொடுத்துக் கொண்டு வெளியே, ஹாலை நோக்கி வந்தாள் ஒரு இளம் பெண். ஹாலில் யாரோ அமர்ந்திருப்பதை பார்த்து.. ‘கத்திட்டோமே..’ என நாக்கை கடித்துக் கொண்டு கிட்சென் சென்றாள்.

அனிச்சையாய், பெண்ணவளின் சத்தத்தில் குகன் பேச்சை நிறுத்தி யாரென பார்த்தான்.. தவறு செய்த பாவனையில் முகம் குழந்தையாக.. குமரி ஒருத்தி நின்றிருந்தாள்.. அவனின் பக்கவாட்டில்.. தூரமாகதான்.

அனிச்சையாக அவளை பார்த்தவன்.. என்ன உணர்ந்தானோ.. நொடிகளேனும் பேச்சு தடைபட்டது..  பின் சுதாரித்து.. அதியமானிடம் பேச தொடங்கினான். 

இப்போது பார்வதி காபி எடுத்துக் கொண்டு வந்து தந்தார்.

பத்து நிமிடத்தில் ஒரு பையன் வெளியே வந்தான்.. அவனும் கிட்சென் சென்றான்.

சற்று நேரத்தில் ஆண் பெண் இருவரும் வெளியே வந்தனர்.. அதியமான் “கீர்த்தனா.. கிளம்பிட்டியா டா..” என்றவர். குகனிடம் திரும்பி “குகன், இவங்க எங்க பசங்க.. பெரியவ கீர்த்தனா, பிசியோ தெரபி.. இந்த வருஷம்தான் முடிச்சா.. இப்போது ரெண்டு மாசமாக ட்ரைனிங் போயிட்டிருக்கா.. அடுத்து, கார்த்தி CA படிக்கிறான்..” என இருவரையும் அறிமுகப் படுத்தியவர், தன் மக்களிடமும் “இது என் நண்பன் பையன்.. “ என முறையாக அறிமுகப்படுத்தினார்.

குகன் “ஹாய்.. நான் குகன்..” என சொல்லி கார்த்திக்கு கை கொடுத்தான். கார்த்தியும் இயல்பாய் முகமன் கூறி பேச தொடங்கினான்.

குகன், பேச்சு வாக்கில் “உங்க கடைக்கு எதிரில் தாங்க நாங்களும் கடை ஆரம்பிச்சிருக்கோம்.. அதுக்கு அழைக்கத்தான் வந்தோம்.. கண்டிப்பா நீங்களும் வரணும்..” என இருவரையும் பார்த்து பொதுவாக சொன்னான்.

கீர்த்தனா, லேசாக புன்னகைத்துக் கொண்டே தலையசைத்தாள்.

கார்த்திக், தன் தந்தையை பார்த்தான்.. அன்று பிரச்சனை நடந்ததே அந்த கடையா எனும் விதமாக. தந்தை எதையும் முகத்தில் காட்டாமல் மகனையே பார்த்தக் கொண்டு இருந்தார். கார்த்திக்கு, இதில் கொஞ்சம் கடுப்பாக.. சிரித்து கிளம்பிவிட்டான்.

கீர்த்தனாவும் விடைபெற்று கிளம்பினாள், தன் தம்பியோடு.

பார்வதி “வாங்க டிபன் சாப்பிடலாம்..” என அழைத்தார்.

குகன் “ஐயோ இல்லைங்க.. அண்ணன் அங்க செய்து வச்சிருப்பான்..” என்றான்.

பார்வதி “என்ன பா.. இத்தனை வேலையில் சமைக்கவும் செய்து.. கிளம்பனுமா.. பாவம்தான். சீக்கிரம் கல்யாணம் செய்துக்க சொல்லு..” என்றார் புன்னகைத்தவாறே.

குகன் “அப்படியே பழகிடுச்சிங்க ஆன்ட்டி… நீங்க ரெண்டு பேரும் கண்டிப்பா காலையில் சீக்கிரமாக வந்திடனும்.. எங்களுக்கு, இங்க உங்களை மட்டும்தான் தெரியும், கண்டிப்பா வரணும்” என அழைத்தான் பெரியவர்கள் இருவரையும்.

பார்வதி “காலையில் இவர் வந்திடுவார்.. ஈவ்னிங் கண்டிப்பா வரேன்.. காலையில் வேலையிருக்கு குகன்” என்றார் அப்போதே. காபி குடித்து.. விடைபெற்று கிளம்பினான் குகன்.

அன்றைய நாள் வேகமாக சென்றது. அதியமானும், புது கடைக்கு சென்று.. ஏதேனும் உதவி வேண்டுமா என கேட்டார்.. அப்போதுதான் நீலகண்டன் “வேலை இங்க ஆள் கிடைப்பாங்களா சர்..” என்றான்.

நீலகண்டன் இந்த கடையை ஆரம்பித்தது தொடங்கி எல்லாம் ஆன்லைன்.. சாமான்களை வாங்க அந்த அந்த.. வெப் சைட்டில் விண்ணப்பித்து.. முகவர்களை நேரில் வர சொல்லி என எல்லாம் அவனுக்கு தொலைத் தொடர்பு வழியாகவே நடந்துவிட்டது.

இப்போதும்  மேன் பவர் ஏற்பாடு செய்யும் தனியார் நிறுவனத்தில்.. பதிந்து வைத்திருக்கிறான், தங்களின் கடைக்கு வேலைக்கு ஆட்கள் வேண்டி. ஆனால், அவர்கள் இன்னும் ஆட்களை அனுப்பவில்லை. எனவே, அவசத்திற்கு, நாளைக்கு எப்படியும் கூட்டம் வருமே, தங்கள் நால்வரால் சமாளிக்க் முடியுமா என எண்ணி… இப்போது ஆட்களை கேட்க்கிறான் இவரிடம்.

அதியமான் “ஓரு நாள் வேலைக்கு கேட்க்கிறியா இல்ல, வருஷம் முழுசும் வேலை கொடுப்பியா ப்பா” என்றார் அப்போதே, நீலகண்டனிடம்.

நீலகண்டன் கொஞ்சம் தடுமாறினான் “ஏன் கேட்க்குறீங்க.. நல்ல வேலை செய்தால், இருக்கட்டுமே..” என்றான் தெளிவில்லாமல்.

அதியமான் திடமாக கேட்டுக் கொண்டார் “இல்ல பா, அப்படியில்ல, நீ ஒரு நாள் வேலை செய்ய ஆள் கேட்டீனா அதுக்கு வேற ஆட்கள்.. இல்லை, நீயே அவர்களை தொடர்ந்து வேலைக்கு எடுக்கிறன்னா, அதுக்கு வேற ஆட்கள்.. இதோ பாரு என் கடையில் வேலை செய்யற மணியோட அக்கா பையன் டிப்ளமோ முடிச்சிட்டு சும்மாதான் இருக்கான்.. எல்லா வேலையும் பார்ப்பான்.. ஆனா, தொடர்ந்து வேலைக்கு எடுத்துப்பீன்ன நான் அந்த பையனை ஏற்பாடு செய்கிறேன்.. இப்படி நாலு பேர் கைவசம் இருக்காங்க.. உனக்கு எப்படி ஆட்கள் வேணும் சொல்லு” என்றார் கட் அண்ட் ரைட்டாக.

நீலகண்டன் இரண்டு நிமிடம் யோசித்து “சரி எத்தனைபேர் இருக்காங்களோ வர சொல்லுங்க.. நான் வேலைக்கு சேர்த்துக்கிறேன்.. ஒருமாசம் எந்த பிரச்சனையும் இல்லைன்னா.. அவங்களே தொடர்ந்து வேலையில் இருக்கட்டும்” என பேசி முடித்துக் கொண்டான்.

இப்படியாக அதியமானும் நீலகண்டனும் ஒட்டியும் ஒட்டாமலும் பேச தொடங்கினர்.

மறுநாள் இனிதாக விடிந்தது.

அதிகாலையிலேயே நால்வரும் புதிய கடைக்கு வந்துவிட்டனர். போர்டுக்கு மாலை வாங்கி போட்டு, கடையில் வரவேற்பிற்காக பலூன்கள் கட்டி.. செயற்கை மலர்கள் ஒட்டி என வாகை ஸ்டோர்ஸ் அழகாக நின்றது.

குகன்தான் சாமிக்கு பூ போட்டு.. விளக்கு ஏற்றினான். பின் பழங்கள் பொறி என படைத்து தூப தீபம் காட்டி.. ஐவரும் வணங்கி.. அதியமான் மஞ்சள் குங்குமம் வாங்கி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.

இப்படியாக திறப்பு விழா எந்த ஆடம்பரமும் இல்லாமல் எளிமையாக நடந்தது. 

காலையில் அதியமான் ஏற்பாடு செய்திருந்த நான்கு நபர்களும் வேலைக்கு வந்துவிட்டனர். அவர்களுக்கு என்ன எது என சொல்லி.. நீலகண்டனும் அவர்களோடு பணிக்கு நின்றுக் கொண்டான். 

திறப்புவிழாவை முன்னிட்டு ஏதேதோ ஆபர்கள் அறிவித்தினர். எனவே, பகல் நேரத்தில் கொஞ்சம் வியாபாரம் ஆகியது. குகன் கல்லாவில் நின்றான்.

நண்பர்களும் நீலகண்டன் புதிதாக வந்த வேலையாட்கள் என எல்லோருக்கும் மதியம் மூன்று மணி வரை வேலை. அதன்பின் ஒவ்வொருவறாக உண்டு வந்தனர்.

அண்ணன் தம்பி இருவரும் பில்லிங் தொடங்கி ஸ்டாக் வரை எல்லாவற்றுக்கும் அழகாக தாங்களே ப்ரோக்ராம் செய்திருந்தனர். எனவே முதல் நாளிலேயே தடுமாறாமல் பில் செய்தனர்.

மாலையில் சொல்லியபடியே பார்வதி வந்தார்.. தன் பெண்ணை கூட்டிக் கொண்டு வந்தார். இருவரும் தங்கள் கடைக்கு சென்றுவிட்டு வாகைக்கு வந்தனர்.

நீலகண்டன்தான் இருந்தான். குகன் இல்லை. பெண்கள் இருவருவரையும் தெரியவில்லை நீலகண்டனுக்கு. அதியமானும் வரவில்லையே அவர்களோடு.. எனவே தெரியவில்லை. எதோ இரண்டு பொருட்கள் வாங்கிக் கொண்டு.. பில் செய்ய வந்தனர்.

அப்போது கீர்த்தனா “ம்மா.. காலையில் வந்தவரை காணோம்.. சொல்லும்மா.. எதிர் கடை நம்மதுன்னு சொல்லும்மா.. இவங்ககிட்ட” என்றாள் சின்ன குரலில்.

பார்வதியும் எண்ணினார்தான், ஆனால் எப்படி தாங்களே போய் அறிமுகமாகிக் கொள்வது என எண்ணி.. நின்றார்.

கீர்த்தனா பொறுத்து பார்த்தவள் “ஹலோ.. எங்க.. குகன்” என்றாள், தங்களை அறிமுகம் செய்துக் கொள்ள, எப்படி ஆரம்பிப்பது என தெரியாமல் குகன் பெயரை சொன்னாள்.

நீலகண்டன் அப்போதும் அதிராமல் “யாருங்க” என்றான் தான் கேட்ட பெயர் சரிதானா என பார்க்க.

கீர்த்தனா “இல்ல, குகன்.. நேற்று வந்து இன்வைட் பண்ணார்.. நாங்க, இல்ல, எங்க கடை..” என எதிர் கடையை கை கட்ட.. எப்படி சொல்லுவது என தவிக்க.. குறுக்கே வந்த தெய்வமாக வந்துவிட்டான் குகன்.

குகன் “அஹ.. ஆன்ட்டி, ஹாய்.. வாங்க..” என வரவேற்றான், முகம் விகாசிக்க.

கீர்த்தனாவிற்கு ‘அப்பாடா..’ என்றானது.

நீலகண்டன் எந்த பாவனையும் காட்டாமல்.. பில்லிலேயே கவனமானான்.

குகன் “அண்ணா, இவங்கதான் அதியமான் அங்கிள் பாமிலி.. இவங்க அவரோடு வைஃப்.. இவங்க அவங்க டாட்டர்..” என்றவன், தன் அண்ணனை பார்த்து “இவர் என் அண்ணன் நீலகண்டன்.” என்றான்.

நீலகண்டன் எழுந்து நின்றான் “எனக்கு தெரியலைங்க.. உட்காருங்க..” என சொல்லி தான் அமர்ந்திருந்த சேர் எடுத்து  பார்வதி பக்கம் போட்டான்.

குகன் “ஆன்ட்டி கடையை பார்த்தீங்களா” என்றான்.

அவரும் நன்றாக இருக்கிறது என சில வார்த்தைகள் பேசினார்.

நீலகண்டன் உள்ளே சென்றுவிட்டான்.

குகன், கீர்த்தனாவிடம் “என்ன நீங்க காஸ்மெட்டிக் செக்ஷன் பார்த்தீங்களா இல்லையா.. வாங்க, இன்னிக்கு மட்டும் 3௦% ஆப்பர்.. வாங்க நீங்க..” என சொல்லி கீர்த்தனா மறுத்து பேச முடியாதபடி.. உள்ளே கூட்டி சென்று, ஏதேதோ எடுத்துக் காட்டிக் கொண்டிருந்தான்.

அண்ணன் கண்ணில் இது பட்டது.. தலையை குனிந்துக் கொண்டு.. பில்லிங்கில் யாருமில்லை என உணர்ந்து அங்கே சென்று நின்றுக் கொண்டான், நீலகண்டன்.

பார்வதி “முன்னாடி பார்க்கிங் நல்லா பெருசா இருக்கு..” என ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார். நீலகண்டன் ம்.. சரிங்க.. என சொல்லிக் கொண்டிருந்தான்.

குகனும் கீர்த்தனாவும் இருபது நிமிடம் சென்று.. வந்தனர். பார்வதி “முடிஞ்சிதா டா.. பில் போடுங்க தம்பி.. கிளம்பலாம்” என பெண்ணிடம் தொடங்கி, நீலகண்டனிடம் முடித்தார்.

நீலகண்டன்  “குகா வா..” என சொல்லி மீண்டும் “நீங்க பாருங்க.. வரேன்” என சொல்லி உள்ளே சென்றுவிட்டான்.

குகன் காஸ்மெட்டிக் பொருட்களுக்கு ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்றான். பின் தங்கள் கணக்கில் பில் போட்டு.. “நீங்க எடுத்துட்டு போங்க ஆன்ட்டி.. நான் அங்கிள் கிட்ட வாங்கிக்கிறேன்” என சொல்லி கவர் போட்டு.. பலூன் வேறு கீர்த்தனா கையில் கொடுத்து அனுப்பிவிட்டான் நல்லவன்.

அங்கிருந்து எந்த பாவனையும் காட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த நீலகண்டனுக்கு என்ன சொல்லுவது என தெறியவில்லை.. வேடிக்கை மட்டும் பார்த்தான். 

அவர்கள் சென்றதும் வந்து நின்றான் தன்னுடைய இடத்தில்.. நீலகண்டன். அண்ணன் ஏதேனும் கேட்பான் என குகன் பார்த்திருந்தான். ம்கூம், எப்போதும் போல ஒன்றுமே கேட்கவில்லை.. குகன்தான் திட்டிக் கொண்டான் ‘வந்தவர்கள் கிட்ட, ரெண்டு வார்த்தை பேசினால் என்ன.. சரியான ரோபோ.. ஆன்ட்டி சொன்னா மாதிரி கல்யாணம் செய்து வைக்கணும்.. ஐயோ!… கல்யாணம் பத்தி யார் அவன் கிட்ட பேசறது.. என்னமோ போ” என கடையிலிருந்து வெளியே, அதியமான் கடை நோக்கி சென்றான் குகன்.

அதன்பிறகு, குகன் ஊருக்கு கிளம்பும் வரை, கடை பக்கம் வரவில்லை. குகனுக்கு அதியமானுடன் பேசுவது பிடித்திருந்தது. பழைய கதைகள் நிறைய சொன்னார்.. தன் தந்தையை பற்றி நிறைய சொன்னார் “உங்க அப்பா, கலகலன்னு பேசுவான்.. இரக்க குணம் நிறைய.. கலர் வேட்டின்னா அவனுக்கு ரொம்ப பிடிக்கும்.. காலையில் சைக்கிள் எடுத்துகிட்டு ஐந்து கிலோமீட்டர் உடற்பயிற்சின்னு எங்கையாவது போயிடுவான்.. நல்லா செலவு பண்ணுவான்..” என நிறைய சொல்லுவார். எனவே குகன் தந்தையின் கதை கேட்க.. இந்த இரண்டு நாளும் அவரின் கடையே கதியென அமர்ந்துக் கொண்டான்.

குகன் கடையின் திறப்பு விழா முடிந்து.. மறுநாள் இரவு, நண்பர்கள் இருவரோடும்.. சென்னை சென்றுவிட்டான். கிளம்பும் போதும், அண்ணனை பற்றி தெரிந்தும் “எனக்கு ஏதாவது வேலை இருக்குமா.. நான் இருக்கவா..” என்றான்.

அண்ணன் அப்போதும் “அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்..” என்றுவிட்டான்.

ஆக, நீலகண்டன் இயல்பாக வாழ்க்கைக்கு பழகிக் கொண்டிருந்தான். இல்லை.. அவனுக்கு எல்லாம் ஒன்றுதான். ம்..  அவனுக்கும் எந்த ஊரும்.. எந்த தேசமும் ஒன்றுதான்.. பெரிதாக பழக்கம்.. பிடிக்கும் பிடிக்காது.. இதெல்லாம் அவனுக்கு தெரியாது. ஒரு இயந்திரம் போல.. அந்த இடத்தில் தன்னை பொருத்திக் கொள்வான் அவனே. 

அப்படியே இப்போதும், இந்த நாட்களில் எந்த குறையும் இல்லை.. அவன் கடையை ‘டே ஒன்’னிலிருந்து தனக்குள் வைத்திருக்கிறான் எனத்தான் சொல்ல வேண்டும்.. ஆரம்பத்திலிருந்து எந்த தடுமாற்றமும் இல்லை அவனிடம்.. அமைதியாக நகர்ந்தது அவனின் நாட்கள், இங்கே.

குகனும் மாதத்தில் ஒரு நான்கு நாட்கள் வந்து இருப்பான்.. பின், பொது விடுமுறை தினங்களில் வந்துவிடுவான். இப்படியாக அவர்களின் நாட்கள் சென்றது.

ஒருநாள், மதியம் மூன்று மணி இருக்கும்.. அதியமான் அவசர அவசரமாக நீலகண்டன் கடைக்கு வந்தார்.. நீலகண்டன் அப்போதுதான் உண்டு வந்திருந்தான்.

வந்தவர் “நீலகண்டா, உன் மாமா எண்ணிலிருந்து  கூப்பிட்டாங்க ப்பா..” என்றார்.

நீலகண்டன் “யாரு.. மாமா…” என்றான்.

அதியமான் “என்ன ப்பா.. இப்படி சொல்ற.. அவர் உங்க அம்மாவை பத்திரமா சென்னை அனுப்ப வில்லை.. என்றால், இப்படி பேசி இருக்க முடியுமா நீயு..” என்றார், குரல் உயர்த்தி.

நீலகண்டன் நெற்றி சுருக்கி.. அதியமானை பார்த்தான்.

அதியமான் “உன் நம்பர் கேட்டாங்க, எதோ, அவருக்கு முடியலையாம்.. உன்னை பார்க்கனும்ன்னு சொல்றாராம்.. என்னான்னு தெரியலையே.. நல்லாதானே இருந்தார்..” என்றார் பதட்டமாக.

நீலகண்டன் “என்ன சொன்னீங்க..” என்றான் இறுகிய குரலில்.

அதியமான் “போ பா, எதோ முடியலையாம்.. உனக்கு பதறலையா..” என்றார்.

நீலகண்டன் “இல்ல, முன்னாடி என்னமோ செய்தார்ன்னு சொன்னீங்கள்ள…” என்றான் ஆராயும் பார்வையோடு.

அதியமான் கோவமாக “ஆமாம் அவர் உதவியிருக்கார்.. ஆதரம் எல்லாம் இல்லை, பணத்தில் செய்தால்தான் உதவியா.. இந்த இடத்தை.. தங்கை கஷ்ட்டப்படுதுன்னு யாருக்கும் தெரியாமல்.. குறிப்பாக, அந்த கடன் காரர்களுக்கு தெரியாமல் எனக்கு விற்றுக் கொடுத்தார், உங்க அம்மாக்கு.  இங்கிருந்த இரண்டு வருடமும் எப்படி.. உ..உண்டீர்கள்?.. அவர் பொண்டாட்டிக்கு பயந்தவர்தான்.. ஆனால், உ..உங்களுக்கும் செய்தார். இங்கிருந்து நீங்கள் சென்னை சென்று.. கேஸ் போடும் வரை.. பல மாதங்கள் கடன் காரர்களை.. பேசி.. சமாளித்தது யார்?.. எல்லாம் உதவி என சேராதா.. தெரியாது பா எனக்கு.. சாப்பாடு போட்டதை சொல்லி காட்டலை.. அவருக்கு எதோ முடியலையாம்.. உன் அப்பனின் நண்பன்தான் நான். அவர் உன் மாமா.. என்னமோ போ.. நம்பர் கொடுத்துவிட்டேன்..” என்றவர் தன் கடையை நோக்கி சென்றார், கோவமாக.

“வட்டம் போல வாழ்வாகும்..

வாசல்கள் இல்லா கனவாகும்..

அதில் முதலும் இல்லை ..

முடிவும்  இல்லை.. 

புரிந்தால் துயரமில்லை..”

 

Advertisement