Advertisement

அதியமானுக்கு, கோவம்தான். ஆனால், என்னமோ அவனை அருகில் பார்க்கவும்.. அவனின் உடல்மொழி சாயல் எல்லாம் யாரையோ நினைவுப்படுத்தவும்.. யோசனைதான் வருகிறது.. கோவம் பின்னுக்கு போகிற்று.. எதோ சிறியவன் பேசுகிறான்.. விட்டு விடுவோம் என பெருந்தன்மையாக எண்ணிக் கொண்டே அவனை ஆராய்கிறார்.

ஆனால், அவருக்கு ஏதும் பிடிபடவில்லை. எனவே “யாரு நீங்கல்லாம், எந்த ஊர்..” என்றார் எதார்த்தமாக. அவருக்கு நான்கு மாதமாக கடையை கட்டுகிறார்கள்.. யாரும் உரிய பதில் சொல்லுவதில்லை.. இப்போது வேறு, இப்படி மளிகை கடைபோல ஒரு செட்டப் வருகிறது.. இப்போதுதான் இந்த இரண்டு வாரமாகத்தான் இவன் கண்ணில் படுகிறான்.. அதிலும் எங்கையோ யாரையோ நினைவுப்படுத்துகிறான்.. அதில் என்  வண்டி வேறு பஞ்சர் எனவும், எதார்த்த குரலில், கேட்டார், அதியமான்.

அந்த வாலிபன் “என் பேரு நீலகண்டன். இந்த ஊருதான் எனக்கும்..  நீங்க, எங்க இருக்கீங்க, எனக்கு வழி தெரியாது.. நீங்க சொல்லிடுங்க” என்றவன் பின்னால் திரும்பி “கார்த்தி.. வா, இவர் வண்டியை அந்த இடத்தில் நிறுத்திட்டு சாவியை கொடு” என்றவன்.. மீண்டும் இவரிடம் திரும்பி “கார் அங்க நிக்குது..” என எதிர் தெருவில் இருந்த மரத்தடியை காட்டியபடி நடந்தான்.

இவன் முகம் கொடுத்து பேசாததில் கொஞ்சம் சங்கடமானது.. பெரியவருக்கு, இருந்தும் “இல்ல பரவாயில்ல, என் பையன் வருவான்  நான் பார்த்துக்கிறேன்” என்றவர், தானே வண்டியை தள்ளிக் கொண்டு போய் நிறுத்தினார். தன் கடை வாசலில் அமர்ந்துக் கொண்டார்.

பெரியவர் அப்படி சொல்லவும்.. அடுத்த நொடி, அவர் என்ன செய்கிறார் என கூட பார்க்காமல்.. அந்த நீலகண்டன் தன் வேலையை பார்க்க சென்றான்.

‘இப்போதெல்லாம் பசங்க அவ்வளவுதான். அப்படிதான் இருக்கிறார்கள்.. இவர்களிடமிருந்து வேறு எதையும் எதிர்பார்க்க கூடாது போல.. இந்த ஊர்தான்னு சொல்றான்.. இரண்டு வார்த்தை பேசினால் தானே யாரு என்னான்னு தெரியும்.. என்னமோ போ..’ என தனக்குதானே எண்ணிக் கொண்டே அமர்ந்திருந்தார்.

பத்து நிமிடத்தில் இருபது வயது மதிக்க தக்க பையன் ஒருவன் வந்தான் “அப்பா..” என அழைத்து என்ன நடந்தது என கேட்டான்.

தந்தையும் அவர்கள் பேசியதையும் ஒரு சாரி கூட சொல்லாமல்.. நீங்க பார்த்து வரமாட்டீங்களா என கேட்டதையும் மனதில் வைத்துக் கொண்டார்.. மகனிடம் ‘ஆணி குத்தி பஞ்சர்’ என சொல்லி மகனின் வண்டியில் அமர்ந்தார்.

அந்த இளையவன் வண்டியை யு டர்ன் எடுத்துக் கொண்டு வந்து, வெளியே நின்றிருந்த.. மேற்பார்வையாளர் போல நின்றிருந்த நீலகண்டனின் அருகில் நிறுத்தி.. “என்னங்க.. ஆளுங்க வந்து போற இடம் பார்த்து செய்யலாமில்ல.. காலில் ஏதும் பட்டிருந்தால்..” என்றான்.

நீலகண்டன் அந்த இளையவனையே பார்த்துக் கொண்டிருந்தான் அவன் பேசும் வரை, பின் “கீழதான் வச்சிருந்தது.. வேணும்ன்னு இடிக்கலை..” என்றான் அதே இரும்பு குரலில்.. கொஞ்சமும் இளகாமல்.

அவன் குரலிலே, மிரட்டியது இளயவனை. எனவே “பார்த்து வேலை செய்ங்க அண்ணா” என நீலகண்டனை பாராமல், அங்கே செல்ப் எடுத்து செல்லும் பணியாளர்களை பார்த்து சொன்னவன் வண்டியை எடுத்து சென்றுவிட்டான்.

இப்போதும் நீலகண்டன் ஒரு மன்னிப்பை வேண்டவில்லை.. அந்த இளஞ்சனை பார்த்துவிட்டு உள்ளே சென்றான்.

ஏனோ இவன் இப்படிதான் இருக்கிறான்.. நீண்ட வருடமாக. இவன் நீலகண்டன், இவனுக்கு சொந்தமென ஒரே ஒரு தம்பி குமரகுகன். வேறு யாரும் இப்போது இல்லை. ம்.. இவனின் சொந்த ஊர் இது.

இவர்களின் தந்தை வாகைசூடன் தாய் வள்ளியம்மை. நீலகண்டனின் ஒன்பது வயது வரை இங்கேதான்.. இப்போது கட்டிக் கொண்டிருக்கிறானே இந்த இடத்தில்தான், தங்களின் சொந்த வீட்டில் வசித்தனர்.

காலம் எல்லாவற்றையும் மாற்றிற்று.

அவனின் தந்தை கடன் பிரச்சனை காரணமாக அவனின் ஏழாம் வயதில் தற்கொலை செய்துக் கொண்டார். அவர் சின்ன பைனான்ஸ் வைத்திருந்தார். இதோ எதிரில் இருக்கிறாரே.. அதியமான், அந்த இடத்தில்தான், முன்பு வைத்திருந்தார், வாகைசூடன்.

வாகைசூடனும் நன்றாகத்தான் தொழில் செய்துக் கொண்டிருந்தார்.. என்ன கருணை குணம் அதிகம் அவருக்கு. பைனான்ஸ் தொழிலில் இறக்கம் கொண்டால், இப்படிதான் தனியே எல்லா துன்பங்களையும் அனுபவிக்க நேரிடும்.

இவர் கடன் கொடுத்தவர்கள் திருப்பி கொடுக்கவில்லை.. காலதாமதம் ஆனது, தன் வீட்டையும், தனக்கு இருக்கும் நிலங்கள் எல்லாவற்றையும் அடமானம் வைத்தார். காலபோக்கில் அதற்கும் வட்டி கட்ட முடியவில்லை அவரால். ஒரு கட்டத்தில்.. தற்கொலை செய்துக் கொண்டார். அனுதாபத்தில் மனைவி மக்களிடம் கடன் கேட்கமாட்டார்கள் என எண்ணினார் போல.

அப்போது நீலகண்டனுக்கு ஏழு வயது, இளையவனுக்கு நான்கு வயது. பாவம் வள்ளியம்மைக்கு ஒன்றும் தெரியவில்லை.. கணவனுக்காக அழுவதா.. மகன்களை பார்ப்பதா.. கடனை கொடுப்பதா என தெரியவில்லை. இவ்வளவு கடன் இருப்பதே, கடன் கொடுத்தவர்கள் வந்து கேட்க்கும் போதுதான் தெரிந்தது வள்ளிக்கு..

சொந்தமெல்லாம் உதவிக்கு வந்ததுதான்.. ஏதேனும் நகை, நிலம் இருக்கும்.. புரட்டி கடனை கொடுக்க வைக்கலாம் என.. பார்வதியின் அண்ணன் வந்தார் உதவிக்கு.. இந்த பக்கம் வாகைசூடனின் தம்பியும் வந்தார்தான்.

ஆனால், தங்கள் கைகாசைதான் போடும்படி இருக்கும்.. இவர்களிடம் ஏதும் இல்லை, என தெரியவும்.. தெறித்து பின்வாங்கியது சொந்தம் எல்லாம். இதில் வருடம் இரண்டு கடந்தது.

அடமான காரர்கள் வீட்டை தங்கள் பேரில் எழுதிக் கொள்ள  ஆயுத்தமாகினர். எப்படியும் இரண்டு கிரவுண்ட் இடமாவது வரும் அது. அப்போது கிரமாமே என்றாலும்.. அப்போதே பருவநிலையால் பிரபலமான ஊர் என்பதால்.. விலை அதிகம்தான் இடத்திற்கு. ஆனால், மிகவும் சொற்ப விலைக்கு அதை தங்கள் பெயரில் எழுதிக் கொள்ள நினைத்தனர்.

அதை தடுக்க.. அதியமான்தான் உதவினார். தனக்கு தெரிந்த வக்கீலை அறிமுகம் செய்தார் வள்ளியம்மைக்கு. அத்தோடு, அதியமான்தான் எதிரில் இருந்த, எந்த அடமானமும் இல்லாத, இந்த கடையை.. வாங்கிக் கொண்டார்.. அந்த தொகையை, யாருக்கும் தெரியாமல் வள்ளியம்மையிடம் கொடுத்தார்.

அந்த வக்கீல்தான் இவர்களுக்கு நல்ல வழி காட்டினார்.. “இப்போது உங்களிடம் பணமும் இல்லை, பணம் தருவாரும் யாரமில்லை.. ஆனால், இடம் நல்ல விலை போகும்.. எனவே, கோர்ட்டில் கேஸ் போடுங்கள்.. இங்கே இருந்துக் கொண்டு போட்டால்.. உங்களை ஏதாவது செய்து விடுவார்கள்.. அதனால் சென்னை சென்று.. கேஸ் போட்டுடுங்க. அதற்கு செலவு நிறையதான் ஆகும்.. கேஸ் போட்டுடுங்க, அப்புறம் பார்த்துக்கலாம்.. வாபஸ் கூட வாங்கிக்கலாம்.. பேசி பார்க்கலாம்.. முதலில் இதை காப்பத்திங்க..” என ஆலோசனை கூறினார் தக்க நேரத்தில்.

அதன்படியே சத்தமில்லாமல், தன்னிரண்டு மகன்களை கையில் பிடித்துக் கொண்டு சென்னை வந்து சேர்ந்தார் வள்ளி.

அதன்பின், வக்கீல் தனக்கு தெரிந்தவர்களின் வீட்டில், மேலே சின்ன சீட் போட்ட ஒரு வீட்டில் குடியேற்றினார்.

வள்ளியை, ஒரு டெக்ஸ்டைல் கம்பெனியில் சேர்த்தார். தன் நண்பன் மூலமாக அந்த  கேசை எடுத்து நடத்தினார்.. அவர்கள், கொடுத்த சொற்ப தொகையை வாங்கிக் கொண்டு, தானே நடத்தினார்.

நீலாவிற்கு விவரம் தெரிய தொடங்கியது. கான்வென்ட் விடுத்து கவேர்மென்ட் ஸ்கூல் சேர்ந்தான். எதோ மாற்றம் என புரிந்தது.. அவனின் அன்னை, அதிகாலையில் பால் போடுவதற்கு அவனை சேர்த்தார்.. மாலையில் தன் டெக்ஸ்டைலிலேயே பீஸ் அடுக்கும் வேலைக்கு வர செய்தார்.

இப்படியாக இருவரும் சேர்ந்து உழைத்தனர்.. பின் மூவரும் சேர்ந்து உழைத்தனர். பின் நீலகண்டன் தம்பியை பீஸ் எடுக்க அனுப்பாமல் டியூஷன் சேர்த்தான்.. அன்னை ஏதும் சொல்லவில்லை. அதிலிருந்து முடிவுகளை அவனே எடுக்க தொடங்கினான்.

நீலகண்டன் பத்தவது படிக்கும் போதே வீடு அவன் சொல் பேச்சு கேட்க தொடங்கியது. வரவு செலவுகளை செய்ய தொடங்கினான்.. மிச்சம் பிடித்தான். இல்லை, கடன் வாங்கினான். எல்லாம் அவன் செயல் ஆனது.

அதனாலோ என்னமோ பேச்சு குறைந்து போனது அவனிடம். மேலும் அப்போதெல்லாம்.. மூவருக்கும் பேசிக் கொள்ள கூட நேரம் இருக்காது.. வந்து.. இரவு உணவு செய்து.. உண்டு, உறங்கவே நேரம் சரியாக இருக்கும்.

குகனாவது இரண்டு வார்த்தை பேசிக் கொண்டே.. அந்த உப்புமாவை உள்ளே இறக்கிவிடுவான். ஆனால், பெரியவன் வெறித்து பார்த்துதான் உண்பான். என்னமோ ஒரு இறுக்கம் அவனுள் வந்துவிட்டது. அந்த வயதில் தோன்றும் ஆசைகள் எல்லாம் அவனுக்கு இல்லை, கடன், அடமானம், படிப்பு வேலை, அடுத்த மாதம் வாடகை.. எனத்தான் அவனின் சிந்தனை சென்றது.

இப்படிதான் அவர்களின் வருடங்கள் சென்றது.

“வாழ்க்கையில் ஆயிரம் தடைகல்லப்பா..

தடைக்கல்லும் ஒவ்வொரு படிகல்லப்பா..”

Advertisement