Advertisement

அத்தியாயம் ஒன்பது :

அதன்பின் வாரா வாரம் வர ஆரம்பித்தான் கண்ணன். வாரவார பயணம் என்பது மிகவும் அலைச்சல் கொடுத்தது. ஆனாலும் மகனுக்காக வந்தான், அப்படித்தான் சொல்லிக் கொண்டான்.

சுந்தரியிடம் பேசும் ஆர்வமும் இருந்தது. ஆனால் சுந்தரியை அசைக்க முடியவில்லை. கிட்ட தட்ட மூன்று மாதமாக வருகிறான், மகன் இப்போது தளிர் நடை போடுகிறான், இவனைப் பார்ததும் தூக்கச் சொல்லி கை நீட்டி “அப்பா” என கட்டிக் கொள்கிறான். ஆனால் சுந்தரி, பக்கத்தில் செல்லும் வாய்ப்புக் கூட வரவில்லை.

இவன் வந்தால் யாரிடமாவது குழந்தையைக் கொடுத்து விடுகிறாள். சுந்தரியை தூரமாக தான் நின்று பார்க்கிறான். பேச்சு இல்லாவிட்டால் போகிறது புன்னகை கூட இல்லை. அதுதான் ஒரு வருத்தத்தை கொடுத்தது, கூடவே ஒரு கடுப்பையும். தெரிந்தவரிடம் இருக்கும் முக இளக்கம் கூட இல்லை.

முதல் சில நாட்கள் பார்த்ததை விட இப்போது அவனை பார்க்கும் போது முகத்தினில் கடுமை ஏறியிருந்தது. அவளையும் விட வடிவுப் பாட்டியை தான் அவனால் பார்க்கவே முடியவில்லை. அவன் வரும்போதெல்லாம் வாய் விட்டு எதனையும் கேட்காவிட்டாலும், ஏதாவது சொல்வானா சொல்வானா என்று அவர் எதிர்பார்ப்பது தெரிந்தது.

சொல்லும் தைரியம் அவனுக்கு இல்லை, ஏனென்றால் என்ன எதிர்பார்க்கிறான் என்று அவனுக்கே தெரியாத போது என்ன சொல்லுவான்.

அன்றும் அப்படித்தான் ஊரிலிருந்து வந்தவன், காலை உணவுக்கு முன்னேயே சுந்தரியின் வீடு நோக்கி சென்றான். இவன் வருவதைப் பார்த்ததுமே வடிவுப் பாட்டியிடம் “அபியை கொடுத்துடுங்க” என்று சொல்லி தோப்பு நோக்கிப் போக,

இவனை பார்த்ததும் மகன் தளிர் நடையிட்டு வர, வேகமாக வந்து அவனை தூக்கிக் கொண்டான். “ஏன் பாட்டி வேகமாப் போறா?” என சுந்தரியைக் காட்ட,

“அங்க ஆளுங்க தேங்காய் பறிச்சு போட்டுட்டு இருக்காங்க ஒரு பக்கம், ஒரு பக்கம் உரிக்கறாங்க, வேலை நடக்குது, அதுதான்!”  

“நான் அங்கே போகட்டுமா?” என்றான்.

“போ ராசா, போ, போ! இதுக்கு போய் கேட்பாங்களா, நானும் போக முடியாது, நம்ம மாடு ஒன்னு சினையாய் இருக்கு, அது சத்தம் கொடுத்துட்டே இருக்கு. எனக்கு எங்கயும் போக முடியலை, இங்க ஆள் வேணும். அவசரம்னா ஓடி வர்ற மாதிரியா இருக்கோம்” என்றார். 

அவன் மகனோடு போய் மாட்டு கொட்டகையை எட்டிப் பார்த்தான், ஒரு மாடு மிகவும் வயிறு உப்பி இருக்க அதனையே சிறிது நேரம் பார்த்து இருந்தான்.

ஆம்! அவ்வப்போது மாட்டுக் கொட்டகையை எட்டிப் பார்ப்பது இப்போது சகஜமாகி விட்டது. அந்த வாசனைகள் இப்போது பழகி விட்டன. ஆம்! நாற்றம் என அவன் நினைத்தது இப்போது வாசனையாகிப் போயிற்று அவனுக்கு.

சிறிது நேரம் பார்த்தவன் பின்பு மகனோடு பேசிக் கொண்டே சுந்தரி இருக்கும் இடம் நோக்கிப் போக, காலையில் தான் குலை தள்ளியிருப்பார்கள் போல, ஓரிடத்தில் குவித்து வைத்திருக்க,  மட்டைகளை உரித்து தேங்காயை எடுத்துக் கொண்டிருந்தனர். கிட்ட தட்ட பத்து பேர் வேலை செய்து கொண்டிருந்தனர்.

எல்லோரும் ஆண்கள், இவள் ஒற்றை பெண்ணாய் தான் அங்கே இருந்தாள். மகனை தூக்கியபடி கண்ணன் இவளை நோக்கி வரவும் “என்ன?” என இவனிடம் கேட்க,

“ஓஹ், உனக்கு பேசக் கூட தெரியுமா? மறந்திட்டியோன்னு நினைச்சேன்” என பாவனையாக சொல்ல,

“ஓஹ், நான் உங்க கிட்ட பேசணும்னு நினைக்கறீங்களா?” என்றாள் அவனைப் போலவே நேரடியாக, “ஆங்” எனத் தடுமாறினான். “பையனை பார்க்கத்தானே வர்றீங்க, நான் ஏன் பேசணும்” என்ற பதிலும் கூடவே சேர.. சற்று ஆராய்ச்சியாய் பார்த்தான், “நான் இவளையும் பார்க்க வரவேண்டும் என  விரும்புகிறாலோ” முகத்தினில் இருந்து எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை.

“எப்போ இருந்து பண்றாங்க?” என வேலையை காட்டிக் கேட்க, “ஆறு மணில இருந்து” என்றாள். சொல்லும் போது முகத்தினில் ஒரு களைப்பு கூட, “டயர்டா இருக்கா? நீ வேணா வீட்டுக்குப் போ, நான் பார்த்துக்கறேன்” என்றான் தானாகவே.

“உங்களுக்கு இதெல்லாம் தெரியுமா?”  

“என்ன இது? பக்கத்துல என்ன இருக்கு?” என அங்கிருந்த அவர்களின் தென்னந் தோப்பைக் காட்டி, அதன் பக்கம் இருந்த வீட்டைக் காட்டி, “இங்கே தான் பொறந்தேன், இங்கே தான் வளர்ந்தேன். எனக்குத் தெரியாம இருக்குமா?” என்றான். உண்மையில் அப்பா சொன்னதற்காக தான் இஞ்சினியரிங் படித்தான். அவனுக்கு இதில் ஆர்வம் அதிகம். அதுவுமே ஒரு காரணம் சந்திரன் சுந்தரியை இவனுக்கு கட்டி வைக்க, இவ்வளவு நிலபுலன் மகனுக்கு பிடிக்கும் எனதான் நினைத்தார். 

ஆனால் வேறு முடிவு எடுக்கும் நிலைக்கு அவரே தள்ளி விட்டார். ஊரை விட்டு போனால் போதும் என போய் விட்டான். இப்போது அதை சுந்தரியிடம் சொல்ல முடியாதே. அதுவும் இப்போது எனக்கு இந்த வேலைகள் தான் பிடிக்கும் என்றால் அது கேலிக்குரிய பொருள் ஆகிவிடும்.

அவர்கள் மட்டை உரிப்பதை பார்த்தாலே கண்ணனுக்கு பரபரவென்றது. எப்படி உரிக்கணும்னு நான் சொல்லித் தர்றேன் என்பது போல, எல்லோரும் வேலை செய்வார்கள் ஆனால் திறமை என்பது வேறல்லவா. அப்படித் தான் கண்ணன்.

அதனால் தான் இப்போது சுந்தரியைப் பிடித்தது. சலிக்காமல் வேலைகளை எப்படி செய்கிறாள், அதுவும் எத்தனை? பூந்தோட்டம், மாந்தோப்பு, தென்னந்தோப்பு, நர்சரி, அதுவமன்றி வீட்டினில் கறவை மாடுகள், மிகப் பெரிய வேலை.

இந்த நான்கு மாதங்களாக வரும் போதெல்லாம் பார்த்துக்கொண்டு தானே இருக்கிறான். அவனால் எல்லாம் இப்படி செய்ய முடியும் என்று தோன்றவில்லை. சுந்தரியின் உழைப்பு அவனை ஆகர்ஷித்தது. அவள் அவன் மனைவி, விவாகரத்து செய்து விட்டான், எல்லாம் ஒதுக்கி, ஒரு மதிப்போடு பார்க்க வைத்தது. 

“இவ்வளவு சின்ன வயசுல எப்படி இவளால முடியுது” அவனின் வீட்டினில் மூன்று தங்கைகளைப் பார்க்கிறான் தானே. அவர்களுக்கு அவ்வளவு சொகுசான வாழ்க்கை, இவளானால் வியப்போடு பார்த்தான். இப்படி அவன் யோசனைகளில் இருக்க,                

“அப்புறம் ஏன் எங்க வீட்டைப் பார்த்து முகம் சுளிச்சீங்க” என, “எப்போ” என்றான் அவனுக்கு நினைவே இல்லை.

“கல்யாணம் முடிஞ்சு, இங்க வந்த அடுத்த நாள்” என, “அம்மா” என அதிர்ந்து விட்டான். உண்மை தானே! “அது..” எனத் தயங்க, மேலே ஒன்றும் கேட்கவில்லை,

“எனக்கு டயர்டா இல்லை, நல்லா தான் இருக்கு, நான் பார்த்துக்குவேன்” என, “நானும் இருக்கேன்” என அவன் சொல்ல,

“இங்க எல்லோரும் இருக்காங்க, எல்லாம் இங்க ஊர்காரங்க, தப்பா பேசுவாங்க” என்றவளிடம், “என்ன தப்பா பேசுவாங்க? தப்பா பேச என்ன இருக்கு? நான் இருக்கேன்!” என்றான் சுள்ளென்று. 

“நீங்க இருக்க முடியாது” என்றாள் ஸ்திரமாக, வெகு நாட்களுக்குப் பிறகு இருவருக்குள்ளும் ஒரு சண்டை மூண்டது.

“ஏன், ஏன் இருக்க முடியாது?” என, “விவாகரத்து” என்று நிறுத்தியவள், “நாம நம்ம விவாகத்தை ரத்து பண்ணிட்டோம், அதனால் முடியாது!” என,

“நான் அப்போவே வேண்டாம் சொன்னேன், நீ தான் கேட்கலை”

“என்ன கேட்கலை?” என்று அவளும் சிலுப்பி நிற்க.. சில அடி தூரத்தில் ஆட்கள் இருப்பதால் இருவரும் மெதுவான குரலில் வழக்காடிக் கொண்டிருந்தனர்.

“விவாகரத்து வேண்டாம், என்னோட வந்துடு சொன்னேன்!”

“சொன்னா கேட்கணுமா, ஏன் கேட்கணும்? கல்யாணமாகி ரெண்டு மாசத்துல டைவர்ஸ்க்கு கேட்கறீங்க! அதுக்கு முன்னேயும் பேசலை, அதுக்கு அப்புறமும் பேசலை, ஏன் டைவர்ஸ் கேட்கறீங்கன்னு எனக்குப் புரியவேயில்லை. அப்படி பிடிக்காம இருந்தா ஏன் கல்யாணம் பண்ணனும், கல்யாணத்துக்கு பின்ன வீட்டை விட்டு போனவர், முன்னயே போயிருக்க வேண்டியது தானே. எங்கப்பா செத்தப்போக் கூட வரலை!”

“என்ன தான் எதிரியா இருந்தாலும், சாவு வீட்டுக்குக் கூட வரலை. எத்தனை பேர் கேட்டிருப்பாங்க தெரியுமா என்னையும் பாட்டியையும்.. இப்போ, இப்போக் கூட நீங்க கூப்பிட்டீங்கன்னு பஞ்சாயத்து பண்ண அத்தனை பேர் வந்து நிக்கறாங்க. என்கிட்டே டைவர்ஸ் குடுக்காதேன்னு சொன்னவங்க அவங்கல்லாம்!”

“ஏன்டா இப்படி செஞ்சன்னு உங்களை யாராவது கேட்டாங்களா? இல்லையே! ஏன்னா ஊருக்குள்ள பெரிய மனுஷன் உங்கப்பா! பெரிய குடும்பம் நீங்க!”  

“அதுக்கு மயங்கி தானே, எங்கப்பா என்ன ஏதுன்னு கேட்காம உங்கப்பா சரின்னு சொல்லிடார்னு அவசரமா கட்டி வெச்சார்” என பொரிந்தாள். ஒரு கட்டத்தில் ஆவேசம் அதிகமாக தன்னை நிலைபடுதியவள் “ப்ச், இப்போ எதுக்கு அந்தப் பேச்சல்லாம். நான் தனி தான். என் வாழ்க்கையை எனக்கு பார்த்துக்க தெரியும், யாரும் எனக்கு உதவனும்னு அவசியமில்லை, நான் பார்த்துக்குவேன்!” எனச் சொல்ல,

ஒரு ஒரு வார்த்தையும் சாட்டையாய் அவனை சுழற்றி அடித்தன. என்ன பதில் பேசுவது என்றே தெரியவில்லை. ஒரு பிடித்தமின்மை, ஒரு பிடிவாதம், டைவர்ஸ் கேட்டு விட்டான். ஆனால் கடைசியில் மனதில்லை, தப்பு செய்வதாகத் தோன்ற, உண்மையில் வேண்டாம் என்று தான் சொன்னான், கூட வந்து விடு என்றும் அழைத்தான், ஆனால் அவள் வரவில்லை! என்ன செய்ய?

“சரி, நீயே பார்த்துக்கோ! கூட நானும் பார்த்துக்கறேன்!” என்று அப்போதும் அங்கேயே தான் இருந்தான். அப்போது சின்ன ராசு பூவின் கணக்கைக் கொண்டு வர, கண்ணனைப் பார்த்ததும் தேங்கி நின்றான்.

“வாண்ணா!” சுந்தரி அழைக்க, வேறு வழியில்லாமல் அருகில் வந்து கணக்கை சொல்லிப் பணத்தை கொடுக்க, வாங்கிக் கொண்டவள், “ண்ணா நான் இங்க இருக்கேன், ஆயா வீட்ல இருக்கு, அதனால் சிந்தாவை நர்சரில இருக்கச் சொல்லியிருக்கேன். அவ அங்க தான் இருக்கா, எனக்கு இங்க முடியறவரை நீ ரெண்டு பேரும் அங்க இருங்க!” என,

“ம்ம், சரி” என்று தலையாட்டி அவன் செல்லவும், இவர்கள் சற்று நேரமாக அங்கே இருப்பதைப் பார்த்து அங்கே சுந்தரி இருந்த ஒரு நாற்காலி மட்டுமே இருப்பதை பார்த்து, இருவரும் நின்று கொண்டே இருப்பதை பார்த்தவர்கள், இன்னொன்றையும் கொண்டு வந்து போட்டனர், இருவரும் அமர வசதியாக..

அவர் சென்றதும் “என்னவோ தப்பா பேசுவாங்க சொன்ன, பாரு, சேர் போடறாங்க!” என்றான்.

ஒன்றுமே பேசாமல் களைப்பு மேலோங்க அமர்ந்து கொண்டாள். “அபிப் பையன் அம்மாவைத் தூங்க விடலியா, அம்மா ஏன் இவ்வளவு டையர்ட்” என மகனிடம் பேச்சுக் கொடுக்க, அதனைக் கேளாதவள் போல அவள் பாட்டிற்கு பணத்தை எண்ணிக் கொண்டிருந்தாள். நேற்று மாலையும் ராசு பணம் கொடுக்கவில்லை. இரண்டு சேர்த்து இப்போது கொடுக்க நான்காயிரம் இருந்தது.

“என்ன பணம் இது?” என்றவனிடம், “பூ, மார்கெட்ல போட்டது” என,  

“ஒரு வாரத்துக்கானதா” என, அவனை ஒரு பார்வை பார்த்தவள் “நேத்து சாயந்தரம், அப்புறம் இன்னைக்குதும். என்னவோ தெரியும் எல்லாம் சொன்னீங்க” என,

“எங்க வீட்ல என்ன பூந்தோட்டமா இருக்கு. அதனால தெரியாது” என்றவன், “நிறையப் பணம் தான் வருதே, அப்புறம் ஏன் நீ இப்படி டிரஸ் பண்ற” என,

“எப்படிப் பண்றேன்” என்றாள் திரும்பக் கூர்மையாக.

“தப்பா எடுக்காதே, எப்பவும் பழைய சேலை, கட்டினதே திரும்பத் திரும்பக் கட்டி, அதுவும் கலர் நல்லாவே இல்லாம, அதையும் நீட்டா கட்டாம, ஏறக் கட்டி!” என அவன் அடுக்க..  

“ஹல்லோ சார், காலையில இருந்து சாயந்தரம் வரை வேலை பார்க்கணும் தோட்டத்துல. அதுக்கு இப்படி தூக்கிக் கட்டினா தான் வசதி. பாதி நேரம் மண்ல உட்கார்ந்து வேலை பார்ப்பேன். அப்போ இந்த மாதிரி தான் கட்ட முடியும்” என நிறுத்தியவள், கூடவே “யார் பார்க்க நான் கட்டணும்” என்றாள் நேராக அவனை பார்த்து.

கேள்வியின் அர்த்தம் புரிந்தாலும், “நாம நமக்காக வாழணும், யாரும் நம்மை எதுக்கு பார்க்கணும். நமக்காக உடுத்தணும்!” என்றான்.  

“பேச நல்லாத் தான் இருக்கும், ஆனா செய்ய முடியாது. பாரு, புருஷன் விட்டுட்டு வேண்டாம்னு போயிட்டான், இவ மினுக்கிக்கிட்டு திரியறான்னு பேசுவாங்க. நம்ம இஷ்டத்துக்கு எல்லா நேரத்துலயும் வாழ முடியாது” என,

வாயடைத்துப் போனான்!

“யாரு அப்படில்லாம் சொல்வா” என, “ப்ச், சொல்லியிருக்காங்க, அதுக்கு அப்புறம் தான் மாத்திக்கிட்டேன்” என்றாள்.

திரும்பப் பேச முடியவில்லை, அதற்குள் மகன் பசிக்கு சிணுங்க, “நான் வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டு வரட்டுமா?” என்றான்.

கண்ணன் போனால் போதுமென்று “சரி” என்று தலையசைத்து விட்டாள். எதற்கு இப்படி வாராவாரம் வந்து உயிரை எடுக்கிறான் என்று இருந்தது. தன் வாழ்வில் மகனைத் தவிர யாருமில்லை என்று நிலைப்படுத்தி இருக்க மகனை பார்க்கிறேன் என்று வந்துவிடுகிறான்.

பாட்டி வேறு ஒவ்வொரு முறையும் “ஏதாவது சொன்னங்களா கண்ணு” எனக் கேட்க, என்ன சொல்வாள். பாட்டியையும் விட பூப்பறிக்க வருகிறவர்கள், சிந்தா, எனத் தெரிந்தவர்களும் “உன் வீட்டுக்காரர் இப்போ அடிக்கடி வர்றாராமே, சேர்ந்து வாழப் போறீங்களா?” என நேரடியாகக் கேட்டனர்.

விவாகரத்து ஆனா விஷயம் தெரிந்தும் கேட்பது எரிச்சலாக இருந்தது. “பையனை பார்க்க வர்றார்கா” என சொல்வதை தவிர வேறு என்ன பேச.

அதுவும் இன்று வந்தவன் உடை பற்றி எல்லாம் பேச மனது வெகுவாக முரண்டியது. ஒரு சமயம் இல்லையென்றாலும் ஒரு சமயம் இவனோடு என் வாழ்வு நன்றாய் இருந்திருக்கக் கூடாதா என்று தோன்றுகிறது தானே!

ஒரு வேலை அதைத்தான் விரும்புகிறானோ எனத் தோன்ற ஒரு கோபம் வந்தது. “எதற்கு கோபம் கொள்கிறாய், எத்தனை பேரைப் பார்க்கிறாய், கடந்து விடப் பழகு!” என,

மகனை சாப்பிட வைத்து அழைத்து வந்தவன், “நீ போய் சாப்பிட்டிட்டு வா, நான் இருக்கேன்!” எனத் திரும்பவும் நிற்க,

அவளுக்கும் பசிக்க செய்ய வீடு நோக்கி நடந்தாள். அங்கே போய் உணவு உண்ணும் போதே மாடு வேறு கத்தி கொண்டே இருக்க, “என்ன ஆயா இப்படிக் கத்துது” என்றாள் கவலையாக.  

“அது இன்னைக்கு பிரசவிச்சிடும் கண்ணு, அதுக்கு தான்!” என்றார்.

“சத்தம் கேட்கவே ஒரு மாதிரி இருக்கு ஆயா” என்றவளிடம், “கன்னு போட்டதும் சரியாகிடும் கண்ணு!” என்றார்.

காலையில் இருந்து குளிக்கக் கூட இல்லை என்பதை நினைவில் கொண்டு குளித்து முடித்தவள், புதிதாய் இருக்கும் புடவையைக் கையினில் எடுத்தவள், வேண்டாம் என முடிவெடுத்து எப்போதும் கட்டும் சேலையே கட்டிப் போனாள். எதிலும் எந்த மாற்றமும் தெரிந்து விடக்கூடாது என மிக கவனமாக இருந்தாள்.

அவள் அங்கே வரவும் “குளிச்சியா, ஃபிரெஷா இருக்க!” என்று விட, இப்படி அவன் தன்னைக் கவனிப்பது எரிச்சலாக இருந்தது. “ஒன்னும் பிரச்சனையில்லை எனக்கு, நீங்க அவனை உங்க வீட்லயே வெச்சிருங்க! சாயந்தரம் கொண்டு வந்து விடுங்க போதும், என்னை இங்க வேலைப் பார்க்க விடுங்க!” என்றாள் கறாராக.

“ஏன், நான் என்ன பண்றேன் உன்னை வேலை பார்க்க விடாம” என,

“டிஸ்டர்ப் பண்றீங்க, என்னால இயல்பா இருக்க முடியலை. எதுக்கு வர்றீங்கன்னு மனசு குடையுது, எல்லோரும் கேட்கறாங்க. நான் என்ன பதில் சொல்வேன்? பையனை தான் பார்க்க வர்றீங்கன்னு சொல்லிட்டேன்! ஆனாலும் எல்லாம் திரும்பத் திரும்பக் கேட்கறாங்க! என்னோட நீங்க இருக்க வேண்டாம் போங்க!” என்றாள் வேண்டிக் கேட்கும் குரலில்.

அது வெகுவாக கண்ணனை அசைத்தது..“சரி” என்றவன் மகனை தூக்கிக் கொண்டே வீடு நோக்கி நடந்து விட்டான்.

“போ என்றால் போய்விடுவானா” எனத் தோன்றிய போதும், “இப்படியே இருக்கட்டும் திரும்பவும் கேலிப் பொருள் ஆகிவிடாதே. எந்த எதிர்பார்ப்பும் வைத்துக் கொள்ளாதே. அவன் மகனைப் பார்க்க வருகிறான். அவ்வளவு தான்!” என மனதினை நிலைப்படுத்த ஆரம்பித்தாள்.  

 

Advertisement