Advertisement

அத்தியாயம் எட்டு :

சற்று பிரச்சனை தான் ஆகிவிட்டது. மீண்டும் மாலையே போவோமா என்று நினைத்த மனதை கடிவாளமிட்டவன், அவள் யோசிக்க சிறிது நேரம் கொடு எனத் தோன்ற, மாலை மங்கும் நேரத்தில் மொட்டை மாடியில் நின்று புதிதாக வாங்கி வந்திருந்த மிக காஸ்ட்லியான பைனாகுலர் மூலம் சுந்தரியின் வீட்டினைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அதில் பார்க்க ஆள் அரவமே இல்லை. சிறிது நேரத்தில் அவளின் பாட்டி வந்து வாயிலில் இருந்த கயிற்றுக் கட்டிலில் படுப்பது தெரிந்தது. அவளைக் காணவில்லை. கிட்ட தட்ட ஒரு மணிநேரம் அங்கேயே அமர்ந்து வேலைப் பார்த்துக் கொண்டே பத்து நிமிடத்திற்கு ஒரு முறை பைனாகுலரில் பார்த்தான், வரவேயில்லை.

மாட்டிற்கு தண்ணி காட்ட வருவாள் என எதிர்பார்த்து நிற்க அதற்கும் வரவில்லை. பாட்டியே தான் எழுந்து செய்வது தெரிந்தது, சிறிது கவலையாகிப் போயிற்று. பஞ்சாயத்து அது இதென்று இன்றே போயிருக்க வேண்டாமோ, கொஞ்சம் நிதானித்து இருக்கலாமா என்று தோன்றியது. நிதானம் என்ற ஒன்று தான் அவனிடம் கிடையாதே எல்லாம் உடனே உடனே செய்ய வேண்டும் அதுவே தான் நிறைய சிக்கல்களைக் உண்டாக்கி விட்டது.

ஆம்! சுந்தரிக்கு இதுவரை இல்லாத பயம் மனதினில் எதிர்காலம் குறித்து. அவளிடம் யாரும் வரலாமா என்று கூடக் கேட்கவில்லை. பத்து பதினைந்து பேர் அவர்களாக வந்து அமர்ந்து பேசினர். எல்லாம் அவளின் சொந்தங்கள் தான், ஆனாலும் தான் கதியற்று போய்விட்டோமோ என்ற எண்ணம் எழுவதை தடுக்க முடியவில்லை.

அதுவே மனதிற்கு சோர்வைக் கொடுக்க, எந்த வேலையும் செய்ய ஆர்வமில்லை. யார் பூவைப் பறித்தர், யார் லோடு ஏற்றினர், என்ன கணக்கு, எதுவும் தெரியவில்லை. சின்னராசு கொண்டு வந்து பணத்தைக் கொடுக்க கூப்பிட “ஆயா நீ வாங்கிக்கோ” என்று குரல் கொடுத்து விட்டாள்.

வீட்டின் உள் இருந்த நாடாக் கட்டிலில் அம்மாவும் மகனும் படுத்துக் கொண்டிருந்தனர். ஆம்! நாடாக் கட்டில் தான், மிகவும் எளிமையான வாழ்க்கை முறை, வசதி வாய்ப்புகள் எதுவும் அதிகரித்துக் கொள்ளவில்லை. யாரும் சொல்வதற்கோ செய்வதற்கோ ஆட்களில்லை. அவளுக்கும் ஆர்வமில்லை.

ஆயாவிற்கு ஒன்றும் தெரியாது. இவளுக்குமே அதிகம் தெரியாது. ஆனால் தெரிந்ததையும் செய்து கொள்ள முயலவில்லை. மகன் வளரட்டும் பிறகு செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் தான். ஆயாவிற்கு செய்ய வேண்டும் என்று நினைத்தால் தான். ஆனால் அவருக்கு எதிலும் விருப்பமில்லை. இவளுக்காவது நாடாக் கட்டிலில் மெத்தை இருக்கும், அவருக்கு அது கூடக் கிடையாது. எனக்கு அதுல எல்லாம் படுத்தா தூக்கம் வராது கண்ணு என்று விடுவார். சீக்கிரமே உணவு கொடுத்து மகனையும் உறங்க வைத்திருந்தாள். அதனால் வெளியில் வரவே இல்லை.

எப்போதும் இல்லாத ஒரு சோர்வை உணர்ந்தாள். படுத்துக் கொண்டிருந்தாலும், வெகு நேரம் கழித்து உறங்கினாலும், காலையில் எப்போதும் விழிக்கும் நேரத்திற்கு முன்பே விழிப்பு வந்து விட்டது, அவள் எழவுமே மகனும் எழுந்து கொண்டான்.

அவனை தூக்கிக் கொண்டு மோட்டார் போட்டுவிட வெளியில் வந்தாள்.

அலாரம் வைத்து எழுந்திருந்த கண்ணன், எப்படியும் தண்ணீர் பாய்ச்ச வருவாள் என அனுமானித்து அவளுக்கு முன் அங்கு வந்திருந்தான்.

மோட்டார் போடும் போது ஆளின் அரவம் உணர்ந்து, “யாரு அது, யாரு அது?” என்று சற்று பதட்டத்தோடு கேட்டாள். பயந்து விட்டால் எனப் புரிந்து “நான் தான்” எனக் கண்ணன் குரல் கொடுக்க, அது அவனின் குரல் என உடனே புரிந்து கொண்டாள்.

“ஹப்பா” என ஒரு ஆசுவாசப் பெருமூச்சு வெளியேறியது. கூடவே “நான்னா யாரு?” என அதட்ட,

“ம்ம், உன் பையனோட அப்பா” என்றான் தெனாவெட்டாக அவளின் முன் வந்தவாறே. சுந்தரியின் முகம் சுருங்கிப் போயிற்று. அந்த நேரத்திலும் ஒரு ஷார்ட்ஸ் டீ ஷர்ட் என அப்போது அணிந்தது போல பளிச்சென்று உடையில் கண்ணன் நிற்க..

அம்மாவும் மகனும் உறங்கி எழுந்து அப்படியே வந்திருந்தனர், தலை ஒரு வேஷமாக, உடல் ஒரு வேஷமாக. சுந்தரி புடவையைக் கூட ஒதுங்க வைக்க வில்லை. அப்படியே சுற்றி இருந்தாள். இந்த நைட்டி என்ற ஒன்று அவளின் வாழ்க்கையில் இல்லவே இல்லை.  அபியும் அழுக்கு உடையோடு தான் இருந்தான். நேற்று தான் மாற்றவேயில்லயே, படுத்தது படுத்தபடி தானே இருந்தாள்.

அம்மாவையும் மகனையும் பார்வையால் ஆராய்ந்தான். அவசரமாக தன்னை குனிந்து ஒரு முறை பார்த்துக் கொண்டவள் உடையை இழுத்து விட்டுக் கொள்ள, கண்ணனின் முகத்தினில் தானாக ஒரு முறுவல் மலர்ந்தது. உண்மையில் இழுத்து விடும் போது தான் பார்க்கத் தூண்டியது.   

அவன் முகத்தினில் இருந்த முறுவல் எதோ கிண்டலாக தன்னை பார்ப்பது போலத் தோன்ற “என்ன இளிப்பு?” என்றாள்.

“ம்ம், உன்னை பார்த்துதான்” என்றான் நக்கலாக.

“அது தெரியுது, எதுக்கு இளிப்பு?” என காரமாகப் பேச,

“இன்னும் அது சொல்ற அளவுக்கு நாம க்ளோஸ் ஆகலை” என்றான் ஒரு சன்னச் சிரிப்போடு. எவரையும் கவரக் கூடிய சிரிப்பு அது, ஆனால் அவனின் மனைவியாகப் பட்டவளைக் கவரவில்லை.    

சத்தியமாய் அப்போது சுந்தரியின் மனதினில் தோன்றியது, “குழந்தையே பொறந்துடுச்சு, இன்னும் க்ளோஸ் ஆகலை சொல்றான், மாக்கான்” என்ற எண்ணம் தான்.

அந்த நேரத்திலும் தன்னுடைய பெரிய கண்களை முழித்து மொட்டு மொட்டென்று பார்த்துக் கொண்டிருந்தான் அபி. இருவருக்கும் நடுவினில் முள்வேலி, அதன் ஓரிடத்தில் கேட் இருக்க, சுந்தரி பார்க்கப் பார்க்க லாவகமாக ஏறி குதித்து விட்டான் கண்ணன்.

“என்ன பண்றே?” என பயந்து சுந்தரி பின்னால் போக,

“ஷ், சத்தம் போடக்கூடாது” என அதட்டியவன், சமாதானம் பேச ஆரம்பித்தான். “ஏன், இப்படிப் பண்ற? பையனைத் தானே பார்க்கக் கேட்டேன். அதுக்கு ஏன் விடமாடேங்கற?” என,

“ம்மா” என்று அபி மழலையில் மிளிற்ற,

“அதுதான் பார்க்கற தானே” என சுந்தரி சொல்ல,

“எனக்கு இது பத்தாது. நான் அவனை தூக்கிக் கொஞ்சணும்” என அருகில் வர, பதட்டமாகி விட்டாள் சுந்தரி. கொடுக்கவே கூடாது என்ற வைராக்கியம் எல்லாம் ஞாபகத்திற்கு வரவில்லை. நேற்று சின்னராசுவிடம் எப்படி கெத்து காட்டினான், அடித்து விடுவானோ எனத் தோன்றியது. அந்தோ பரிதாபம்! கொஞ்சுவானோ, தன்னை அணைப்பானோ என்ற படபடப்போ எதிர்பார்ப்போ இல்லை.    

“இல்லை, இப்போ வேண்டாம், அழுக்கா இருக்கான்” என,

“ப்ச், சும்மா அதையும் இதையும் பேசக் கூடாது” என்றான் சலிப்பாக.  

“நிஜம்மா.. அழுக்கா இருக்கான்” என்று பாவனையாக சொல்ல,

“குடு, நான் குளிக்க வெச்சிக்கறேன்” என நின்றான். 

“இப்போ எல்லாம் குளிக்க வைக்கக்கூடாது”

“சரி, நான் துடைசிக்கறேன்” என்றான், நீ கொடுத்தே ஆக வேண்டும் போல குரலிலும் பிடிவாதம் முகத்திலும் பிடிவாதம்.  

“இத்தனை நாள் இல்லாம, இப்போ ஏன் இப்படி பண்றீங்க?” என்றாள் பரிதாபமாக.   

“இப்போ நீ குடுக்கலை, கைல இருந்து பிடிங்கிக்குவேன்! அப்புறம் பையன் பயந்துக்குவான்” என மிக அருகில் வந்து மிரட்டவே ஆரம்பிக்க,

வேறு வழியில்லாமல் தடதடக்கும் இதயத்தோடு மகனை நீட்டினாள். உடனே கையை நீட்டி பெற்றுக் கொண்டான் கண்ணன். எல்லோரிடமும் சிணுங்கிக் கொண்டே செல்லும் மகன், கண்ணனிடம் சமர்த்தாய் செல்ல, இதுதான் ரத்த பிணைப்போ என நினைக்கத்தான் தோன்றியது.

மகனை அப்படியே மார்போடு அணைத்துக் கொண்டான். ஒரு புது பரவசம், சில நொடிகள் அதை கண் மூடி அனுபவிக்க, “ஓவரா சீன போடறான்” என்று தான் சுந்தரிக்குத் தோன்றியது. அவன் மேல் இருந்து பால் வாசனை வந்தது, “பால் குடிச்சானா?” என,

“இன்னும் இல்லை” என்றாள் முறைப்பாக சுந்தரி.  

மகனை வாசம் பிடித்தான் கண்ணன். அவர்களையே பார்த்தவாறு நின்றிருந்தாள் சுந்தரி. மகனை உடனே வாங்கி விடுவாளோ என நினைத்து “ஏன் இங்கேயே நின்னிருக்க, போ! உன் வேலையை பாரு! என்றான்.

“விரட்டுகிறான்” எனத் தான் தோன்றியது. “மகன் மட்டும் வேண்டும், நான் பக்கத்தில் இருந்தால் கூட பிடிக்கவில்லையா” தெரிந்த விஷயம் தான், ஆனாலும் மீண்டும் தெரிய வரும் போது வலிக்கத் தான் செய்தது.  மனது அப்படியே உடைந்து போனது. கண்களில் மளுக்கேன்று நீர் நிறையப் பார்க்க, அது அவன் கவனித்து விடாதபடி தோட்டம் பக்கம் நடந்தாள். சற்று தொலைவு போய் கண்ணன் கண்ணில் படாமல் ஒரு கல்லில் அமர்ந்து கொண்டவளுக்கு அப்படி ஒரு அழுகை பொங்கியது.

சத்தம் கேட்டு விடுமோ என பயந்து வாய் மூடி அப்படி ஒரு அழுகை அழுதாள்.

எங்கே இவளின் அரவமே காணோம் என மகனைத் தூக்கியபடி வந்த கண்ணனுக்கு அழுது கொண்டிருந்த சுந்தரி தான் தென்பட்டாள்.

மகனை தூக்கி சென்று விடுவேனோ என பயப்படுகிறாள் என நினைத்து, “ஏன்? ஏன் அழற?” என்று பதறி அருகில் வந்தான். அவள் நிமிர்ந்ததும் “நான் பார்த்துட்டு போய்டுவேன், இல்லை கொஞ்சம் நேரம் வெச்சிருப்பேன், தூக்கிட்டு எல்லாம் போக மாட்டேன்!” என்று சொல்ல,

“தோடா, உன்னை தூக்கிட்டுப் போக விட்டுடுவேனா, கொன்னுட மாட்டேன்!” என்ற பார்வை பார்த்தாள்.

“அழறா, ஆனா முறைக்கறா” என யோசித்து அவளை ஆராயும் பார்வைப் பார்க்க, வேகமாக கண்களை துடைத்து எழுந்தாள்.  “நான் ஒன்னும் பண்ண மாட்டேன், இவ்வளவு என்கிட்டே சண்டை போடாதே, பையனைப் பார்க்க விடு!” என்றான் பொறுமையாக.

“இவ்வளவு நாள் இல்லாம இப்போ மட்டும் ஏன் வந்தே?”  

“நான் இவ்வளவு நாளா ஊர்ல இல்லை, இப்போ வந்து ரெண்டு மாசம் தான் ஆச்சு, ஸ்வீடன் போயிருந்தேன்!” என்றான்.

ஏதோ வெளிநாடு என்றவரைப் புரிந்தது. “ஓஹ்” என முடித்துக் கொண்டாள். பின் மகனுக்கு பசிக்கும் என புரிந்து “அவனை பால் குடிக்க வைக்கணும்” என,

மறுக்காமல் அவளிடம் கொடுத்தவன், “அவன் மேல பால் வாசனை வருது, ஏதாவது எறும்பு கடிச்சிட்டா, எப்பவும் வேற ட்ரெஸ் மாத்தி தூங்க வை!” என்றான் நல்ல விதமாகவே.

“சரி” என்ற ஒற்றை தலையசைப்போடு வேகமாக வீட்டின் புறம் போனவள், நின்று திரும்பி, “நீங்க உங்க வீட்டுக்கு போங்க, ஆளுங்க எல்லாம் பூப்பறிக்க வந்துடுவாங்க” என,

“வரட்டும், வந்தா என்ன?”  

“நானும் பாட்டியும் தனியா இருக்கோம். நீங்க இப்போ என் வீட்டுக்காரர் கிடையாது. இங்க நிக்கறது சரி கிடையாது”  

மறுத்து எதுவும் பேசாமல் உடனே ஏறிக் குதித்தான். அவன் செல்வதையே பார்த்திருந்தாள். வாழ்க்கை என்ன வைத்திருக்கின்றது என்ற பயம் வந்தது.

நான்கு நடை நடந்தவன் திரும்ப இவர்களைப் பார்க்க, சுந்தரி அவனையே பார்த்து நிற்பது தெரிந்தது “என்ன?” என்பது போல சைகையில் கேட்க,

“ஐயோ, இவனை ஏன் பார்த்துக் கொண்டு நிற்கிறேன்” என அவளின் தலையில் அவளே தட்டிக் கொண்டு திரும்ப நடக்க, அதை பார்த்தவன் “ஒரு நிமிஷம்” என்றான்.

“என்ன?” என்பது போலப் பார்க்க..

“உன் கோபம் ரொம்ப நியாயம் தான், தனியா இருக்கும் போது என்ன வேணா திட்டிக்கோ, வாடா, போடா சொல்லு, பேர் சொல்லிக் கூப்பிடு, இல்லை வேற ஏதாவது கூட சொல்லு. ஆனா யாரும் இருக்கும் போது மரியாதையாப் பேசணும், திட்டும் போது கூட மரியாதையா திட்டணும்” என்றான்.

சுந்தரி யோசிக்க ஆரம்பித்தாள், “அது எப்படி திட்டும் போது மரியாதையாத் திட்டுவாங்க” என்பது போல,

இதுவே இன்றைக்கு அதிகம் எனப் புரிந்தவன், வேகமாக வீட்டை நோக்கி எட்டி நடை போட்டவன், சுந்தரி திரும்ப நடக்க துவங்கி விட்டால் எனத் தெரிந்து இவர்களை பார்த்து நின்றான்.

“என்ன நீ விரும்புகிறாய்?” என அவனை அவனே கேள்வி கேட்டு, “உன் விருப்பம் தானா எல்லாம், இல்லை, தவறு, சுந்தரியின் விருப்பமும் முக்கியம்” என மனதில் பதிய வைக்க முயன்றவன், “உன் முடிவு என்ன என முதலில் நீ தெளிவாக இரு” என யோசித்துக் கொண்டே நடந்தான்.

மதிய உணவிற்கு சற்று முன் வந்தான், முன் கேட்டில் நின்று “கொடுக்கிறாயா” என மகனிற்காக கை நீட்ட, சுந்தரியால் மறுக்க முடியவில்லை. ஏனென்றால் மறுத்தாலும் விடுவான் போல தோன்றவில்லை. முகத்தினில் அவ்வளவு தீவிரம். இது எத்தனை நாளைக்குன்னு பார்ப்போம் எனதான் தோன்றியது. 

கண்ணன் வீட்டின் உள் எல்லாம் வரவில்லை, “வெயிலா இருக்கு” என சுந்தரி குறிப்புக் காட்ட,“வெயில்ல வெச்சிருக்க மாட்டேன்”

அதற்காக ரோட்டிலா நிற்பார்கள், “இப்படியே உள்ள வந்து தோப்புக்கு போய்டுங்க” என்றவளிடம், “அப்புறம் நீ பாட்டுக்கு உள்ள வந்துட்டேன்னு வெளில போய்ட மாட்டியே” என கிண்டல் செய்ய,  

“மரியாதையில்லாம பேசக் கூடாது சொல்லிட்டு, என்னை மரியாதையில்லாம பேச வைக்கக் கூடாது” என்றாள் கறாராக.  

“ஓஹ், சூப்பர் போ” என சொல்லிக் கொண்டே உள்ளே வந்து மகனை கையினில் வாங்கி, அவனை இறுக்க அணைத்து சுந்தரியை தாண்டி செல்ல ஆரம்பித்தவன், அவளைப் பார்வையால் பார்த்துக் கொண்டே சென்றான்.

மங்கிய கலரில் ஒரு புடவை, அதுவும் தூக்கிக் கட்டி, தலையும் சரியாக சீவியது போலத் தெரியவில்லை, மொத்தத்தில் ஆடைகளிலோ, தோற்றத்திலோ ஒரு கவனமில்லை எனப் புரிந்தது. ஆனால் மகன் வாசனையாக இருந்தான், உடைகளும் புதிதாக இருந்தன.

ஒரு வேளை நான் வருவேன் என எதிர்பார்த்து இப்படி வைத்திருக்கிறாலோ என யோசித்துக் கொண்டே சென்றான். உண்மையில் அபி எப்போதும் அப்படித் தான் இருப்பான், அப்படித் தான் வைத்திருப்பாள். அன்று அவளின் சோர்வு அவளை எதுவும் செய்யவிடவில்லை என்பது தான் உண்மை.

பேச்சை வளர்க்க விரும்பி “இன்னைக்கு என்ன என் மகன் பளபளன்னு இருக்கான், அவங்கப்பா பார்க்க வருவான்னு இப்படி இருக்கானா?” என,

சுந்தரி பதிலே பேசவில்லை… “பதில் சொல்ல மாட்டியா, சரி போ! நான் அப்படித்தான்னு நினைச்சுக்கறேன்!” எனத் தோளைக் குலுக்கியபடி செல்ல அதற்கும் ஒன்றும் பேசவில்லை. “செம அழுத்தம் போல இவ” என தான் தோன்றியது.

அப்போது தான் வீட்டின் உள் இருந்து வந்த வடிவுப் பாட்டி, “வா ராசா, வா, வா” என்றவர், “உள்ள வா” என வீட்டின் உள் கூப்பிட,

“இவனை விட வரும் போது வர்றேன் பாட்டி” என்றவன், சுந்தரியிடம் தயங்கித் தயங்கி “நான் அங்க எங்க தோப்புக்கு கொண்டு போகட்டுமா” என்றான்.  

சுந்தரி கண்ணனைப் பார்க்கவேயில்லை, அவனின் கைகளில் சமர்த்தாய் இருந்த அபராஜிதனை தான் பார்த்தாள். புதியவர்கள் என்றால் போகவே போகாத மகன், அப்படி எந்த பாவமும் இன்றி வெகு நாள் தெரிந்தவன் போல தந்தையின் கைகளில் இருந்தான்.

அந்த ஒரு உணர்வை தான் மகனுக்கு மறுக்கக் கூடாது என்று புரிந்தவளாக, சரி என்பது போலத் தலையை மட்டும் ஆட்டினாள், பேசவே இல்லை. ஆனால் முகத்தினில் ஒரு கலக்கம் தெரிவதாக கண்ணனுக்குத் தோன்ற, “ஒன்னுமே பண்ண மாட்டேன், உன் பையன் தான் பயப்படாதே. என் பக்கம் திருப்பிக்குவேனோன்னு எல்லாம் நினைக்காதே” என்றான்.

அதற்கும் அவனிடம் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் பாட்டியிடம், “ஆயா அவனுக்கு சாப்பிடற நேரம் ஆகிடும், சீக்கிரம் வந்துடச் சொல்லு” என்றாள்.

சம்மதம் கிடைத்த களிப்பில் கேட்டின் அந்தப் புறம் சென்றவன், போனில் அழைத்து சாரதாவிடம் சொல்ல, பத்து நிமிடங்களில் எல்லோரும் அவர்களின் வீட்டினில் இருந்து தோப்பின் வழியாகவே வந்தனர். விமலா, கனகா மற்றும் மூன்று தங்கைகளும், ஞாயிறு என்பதால் எல்லோரும் வீட்டினில்.  

ஆளாளுக்கு மாற்றி மாற்றி குழந்தையைத் தூக்க, வீலென்று அழ ஆரம்பித்தான். வீட்டுக்குள் கட்டாயப் படுத்தி தன்னை அமர வைத்துக் கொண்டிருந்த சுந்தரிக்கு மகனின் அழுகுரல் கேட்கவும், வேகமாக வெளியில் வந்து எட்டிப் பார்க்க, “அம்மா, எதுக்கு இவ்வளவு கும்பல்” எனதான் தோன்றியது.

அதற்குள் அப்பாவின் கைகளுக்குத் தாவியிருந்த மகன் அழுகையை நிறுத்தியிருந்தான். “அதென்னடா உன் கிட்ட மட்டும் அழாம இருக்கான்” என்று விமலா குறைபட,

“என்கிட்டே அழவே இல்லைம்மா, உடனே வந்துட்டான்” என மகனை உச்சி முகர மகனும் அப்பாவின் முகத்தோடு முகம் புதைத்துக் கொள்ள,

“பாருடா குட்டிப் பையனை” என்ற வாணி அதை புகைப்படம் எடுக்க, பார்த்தது பார்த்தபடி நின்றாள் சுந்தரி.

“வாடா அபி” என பெண்கள் அனைவரும் மாறி மாறி விளையாட்டுக் காட்டி அழைக்க, எதற்கும் அசையவில்லை அவளின் மகன்.

“அப்படியே உன்னை மாதிரியே பிடிவாதம்” என மகனிடம் விமலா சலிக்க,

“இவன் அவ்வளவு பிடிவாதக்காரனா, எப்படியோ மகனை கைகளில் வாங்கிக் கொண்டானே” என கண்ணனை தான் பார்த்து இருந்தாள் சுந்தரி.   

“அவன் என்னவோ இருந்துவிட்டு போகிறான், நீ ஏன் குழந்தையைப் பார்க்க விட்டாய்” என மனது சாட, அவளிடம் பதில் இல்லை.                  

 

Advertisement