Advertisement

அத்தியாயம் ஆறு :

சுந்தரியின் வாழ்க்கை எப்போதும் போலப் பரபரப்பாகச் சென்றது, காலை எழுந்தது முதல் மாலை உறங்கும் வரை எப்போதும் ஏதாவது வேலை செய்து கொண்டோ இல்லை மகனை கையினில் வைத்து விளையாட்டுக் காட்டிக் கொண்டோ இருந்தாள்.

மனைவியின் தற்கொலை முயற்சிக்குப் பின் அதுவும் மகன் கேட்ட கேள்விகளுக்குப் பிறகு மனைவியை வார்த்தையால் வதைப்பதை சற்று தளர்த்தி இருந்தார்  சந்திரன்.

இப்போது மகன் தினமும் பேசாவிட்டாலும் இரு நாட்களுக்கு ஒரு முறை ஒரு இரண்டு மூன்று நிமிடம் பேச அதுவே விமலாவின் உள் நல்லதொரு மாற்றத்தைக் கொண்டு வந்திருந்தது.  

தன்னைக் காப்பாற்றிய சுந்தரிக்கு நன்றி கூற வேண்டும் போலத் தோன்ற, அடுத்த ஞாயிறு மகன் வருவானா என எதிர்பார்த்தார். அவன் வரவில்லை என, மெதுவாக மகளிடம் வெளியே செல்லலாம் என சொல்லி அவளை டூ வீலர் எடுக்கச் சொல்லி மதியம் வீடு உறக்கத்தில் இருக்கும் போது  சுந்தரியின் வீட்டின் புறம் சென்றனர்.

அங்கே வெளியில் இருந்து பார்த்தால் யாரும் தெரியவில்லை, அம்மா எதுக்கு இங்கே வந்திருக்கிறோம் என சாரு கேட்க, “சும்மா கேள்வி கேட்காம சுந்தரி இருக்காலான்னு பாரு” என,

“அம்மா” என பரிதாபமாக நின்றாள் மகள். பின்னே வீட்டில் இருந்த ஐந்து நாளும் அவள் சில வார்த்தைகள் மட்டும் தானே பேசியிருந்தாள். சாரதாவை விட ஒரு வயது தான் மூத்தவள் சுந்தரி. “போ, போ, பாரு” என்று மகளிடம் கெஞ்ச..

மெதுவாக சற்று வீட்டின் புறம் நடந்தாள். வடிவு அங்கே இருந்தவருக்கு இவளைத் தெரியவில்லை. “யாரு பொண்ணு நீ, என்ன வேணும்?” என்று வடிவு பாட்டி கேட்க, “அது அது” என்று உளறியவள், “அம்மா தான் பார்த்துட்டு வரச் சொன்னாங்க!”

“என்ன பார்த்துட்டு வரச் சொன்னாங்க? யாரு உங்க அம்மா?” என, “என்னைத் தெரியலையா உங்களுக்கு” என பரிதாபமாக சாரு நிற்க,

“யாரு நீ? ஸ்ரீதேவியா, சரோஜாதேவியா?” என, கடுப்பான சாரு, “சுந்தரி அண்ணி இருக்காங்களா?” என்றுவிட..

அப்போதும் அவருக்குத் தெரியவில்லை, “சுந்தரிக்கு தெரிஞ்ச பொண்ணா, முன்னமே சொல்றதுக்கு என்ன? போ, அங்க பால் கறந்துட்டு இருக்கா” என்றார்.

சற்று உள் சென்று திரும்ப அங்கே மாட்டுக் கொட்டகையில் புடவையை மடித்து காலுக்கடியில் கொடுத்து முழங்காலிட்டு அமர்ந்து லாவகமாக சுந்தரி பால் கறந்து கொண்டிருந்தாள்.

அவள் பால் கறப்பது ஆச்சர்யத்தைக் கொடுத்தாலும் இவள் எப்படி என் அண்ணனிற்கு செட் ஆகியிருப்பாள் எனத் தான் தோன்றியது. சுந்தரியின் வசதி வாய்ப்பு அந்த முட்டாள் பெண்ணிற்குத் தெரியவில்லை. அது சுந்தரி கஷ்டத்தில் செய்யும் வேலை அல்ல, இஷ்டத்தில் செய்யும் வேலை என.

அதற்குள் அபியின் அழுகைச் சத்தம் கேட்க சுந்தரி செய்து கொண்டிருந்த வேலையை அப்படியே விட்டு மகனிடம் செல்ல விரைந்து எழுந்து வந்தாள். அப்போது தான் வழியில் நிற்கும் சாரதாவைப் பார்த்தவள், உடனே அடையாளம் கண்டு, “என்ன வேணும்?” என்க,

அதற்குள் மகனின் வீறிடல் அதிகமாக உள்ளே சென்று அவனை தூக்கி வந்தாள். “என்ன வேணும்?” என்று சுந்தரி கேட்ட விதத்திலேயே சாரதா பயந்து இருந்தாள், ஏதாவது திட்டி விடுவாளோ என்று.

திரும்பி அம்மாவிடம் சென்று விட, வெளியே வந்த சுந்தரிக்கு அவள் இல்லாதது தெரிய, அவளும் சற்று வெளியே வந்தாள். அங்கே சாரதா வாசலில் நிற்பதும் சற்று தள்ளி அவளின் அம்மா நிற்பதும் தெரிய.. பாட்டி அது பாட்டிற்கு வேறு புறம் பராக்கு பார்த்துக் கொண்டிருந்தது. அவர்களைக் கவனிக்கவில்லை. யாரோ என நினைத்து இருந்தது. சுத்தமாய் அங்கே கவனம் இல்லை.

“ஆயா, என்ன பண்ற நீ?” எனக் குரலை உயர்த்தினால் சுந்தரி. “என்ன கண்ணு?” என்றவரிடம், “ப்ச், போ, நான் பால் கறக்கரதை பாதில விட்டுட்டு வந்துட்டேன், போ, போய் பாரு!” என்றாள்.

“சரி” என மறுபேச்சு பேசாமல் அவர் செல்ல, தன்னை மிரட்டும், பாட்டியை அதட்டி பேசும், சுந்தரி, ஏதோ பெரிய கொடுமைக்காரியாய் சாரதாவிற்கு தோன்ற அவளின் வண்டி நிறுத்தியிருந்த இடம் சென்று நின்று கொண்டாள்.

கண்களில் சிறிதும் இளக்கம் இல்லாமல், “வாங்க” என்றும் சொல்லாமல், “என்ன?” என்று கேட்காமல் சுந்தரி விமலா வை வெறித்துப் பார்க்க..

“அன்னைக்கு என்னைக் காப்பாத்தினதுக்கு ரொம்ப தேங்க்ஸ்” எனவும், “ம்ம், சரி” என்றாள். அதுவே சொன்னது “சொல்லிட்டல்ல கிளம்பு” என..

இவள் கேட்டின் வாயிலின் உள், விமலா வாயிலின் வெளியே. விமலா மேலே என்ன பேசுவது என்று தெரியாமல் நின்று கொண்டே இருக்கவும், சுந்தரி மகனை தூக்கிக் கொண்டு திரும்ப வீட்டின் உள் நடந்தாள்.

“என்ன பேர் பையனுக்கு” என்ற கேள்வி காதில் விழ, மனதினில் ஒரு ஆத்திரம் பொங்கத் திரும்பியவள், “முடிஞ்சு போனது முடிஞ்சதாவே இருக்கட்டும். நீங்கன்னு இல்லை, யார் இருந்தாலும் உதவி இருப்பேன். இதை சாக்கா வெச்சு இங்க யாரும் வராதீங்க” என முகத்தினில் அடித்தார் போலப் பேச..

விமலாவின் முகம் சுருங்கிப் போயிற்று. ஆனாலும் பதில் பேசாமல் சுந்தரியின் கையினில் இருந்த அபராஜிதனை தான் பார்த்தார். அப்படியே கண்ணனின் மறு உருவம், குழந்தையையே பார்த்து நிற்க, சுந்தரியால் அதற்கு மேல் அதட்டிப் பேச முடியவில்லை. அங்கே நிற்கவும் பிடிக்கவில்லை, உள்ளே மளமளவென்று சென்று விட்டாள்.

விமலா திரும்ப மகளிடம் வர, “எதுக்கு நாம இங்கே வந்தோம்” என சாரதா அதட்ட, “அந்தக் குழந்தை உங்க அண்ணன் மாதிரியே இருக்கு” என்றார்.

“அவன் குழந்தை அவனை மாதிரிதானேம்மா இருக்கும். இதுல என்ன அதிசயம்?” என்றாள் மகள் அசால்டாக. “உனக்குத் தூக்கணும் போலத் தோணலை” என்றவரிடம்,

“எனக்கு எந்தக் குழந்தை பார்த்தாலும் தூக்கணும் போலத் தோணும். ஆனா அவங்களைப் பார்த்தா பயமா இருக்கு. நான் குழந்தையை சரியா பார்க்கக் கூட இல்லை” என்று சலித்துக் கொண்டே சாரதா வண்டி எடுத்தாள்.   

மகனிற்கும் விமலாவிற்கும் பிரச்சனை ஆனது இந்த குழந்தை விஷயத்தில் தான். “பிடிக்கவில்லை, பிடிக்கவில்லை” என அவன் பாடாய் அழ, விமலாவிற்கும் பிடிக்கவில்லை என்பது வேறு விஷயம். அதனைக் கொண்டே ஐந்து நாட்களில் மகன் பரீட்சைக்கு படிக்க வேண்டும் என்று சுந்தரியை அப்பா வீட்டிற்கு அனுப்பினார்.

சரியாக ஒரு மாதம் தான் ஆகிற்று. “இப்படி விஷயம்” என பேத்தியை அழைத்துக் கொண்டு பாட்டி வந்து சொல்ல..

“என்ன?” என்று அதிர்ந்து விட்டார். மகன் என நினைத்தாலும் நம்ப முடியவில்லை. “பிடிக்கவில்லை என்று அப்படிச் சொன்னானே. இவர்களைப் பார்த்தாலே முகம் சுளித்தானே. எப்படி முடியும்”. “எப்படி எப்படி அதுக்குள்ள முடியும்” என நடுவீட்டில் வைத்துக் கேட்க,

பாட்டிக்கு விமலாவின் பார்வையும் பேச்சும் சுர்ரென்று ஒரு கோபத்தைக் கொடுக்க, “எப்படி முடியும்னா? உன் மாமியார்கிட்ட நீ சொன்னப்போ இப்படித் தான் கேட்டாங்களா? ஏன் உன் பையன் ஆம்பளை இல்லையா?” என அந்த கிராமத்துப் பெண்மணி முகத்தில் அடித்தார் போல நாசுக்கு பார்க்காமல் கேட்டுவிட்டார்.

விமலா ஒரு ப்ரளையத்தையே உண்டாக்கி விட்டார். “என் பையனைப் பார்த்து ஆம்பளையான்னு கேட்கறீங்களா?” என ஆடிவிட. வேறு வழியில்லாமல் “உன் மகளை கூட்டிட்டுப் போ ஏழுமலை, நான் பையனோட வந்து கூப்பிட்டுக்கறேன்” என்றார் சந்திரன்.

பரீட்சை முடிந்து வீடு வந்த மகனிடம், “டேய், அந்தப் புள்ளை என்னமோ சொல்லுது. என்னன்னு கேட்டா அவ பாட்டி உன் பையன் ஆம்பிளைதானேன்னு கேட்கறாங்க” என,

கண்ணனிற்கு தலையும் புரியவில்லை, காலும் புரியவில்லை “என்னமா?” எனக் கலக்கத்தோடு கேட்டான்.

இருபத்தியிரண்டு வயதில் இருக்கும் ஆண்மகன். இன்னும் அதிக பக்குவமெல்லாம் இல்லை, இந்த விஷயத்தை எப்படி அணுக வேண்டும் என்று தெரியவில்லை. கூச்ச சுபாவமும் அதிகம்.  

“அந்தப் பொண்ணு கர்ப்பமா இருக்கு. எப்படின்னு கேட்டா, உன் பையன் ஆம்பளை இல்லையான்னு அவ பாட்டி கேட்குது” என்றார்.

“சுந்தரி கர்ப்பமா?” என்று அதிர்ந்து நின்று விட்டான் அவன், எதிர்பார்க்கவேயில்லை.

“உங்கம்மா என்னவோ கேட்கறாடா, நீயே பதில் சொல்லு” என சந்திரன் எரிச்சலோடு பேசினார்.

“நான் தான் மா!” என பதில் சொல்லும் போது ஒரு அவமானம் கண்ணனின் உள், எங்காவது ஓடிவிட தான் தோன்றியது.

“என்ன? நீயா! சே, சே, பிடிக்கலை பிடிக்கலைன்னு சொல்லிட்டு இப்படிப் பண்ணிட்டியே. என்ன பையன்டா நீ? அவங்க முகத்துல எப்படி நான் முழிக்க, என்ன கேள்வி கேட்டு வெச்சிருக்கேன்” என மீண்டும் ஆட,

“ஏய் பேசாம உள்ள போடி. உன்னை இதோட விட்டிருக்கக்கூடாது, மனுஷியாடி நீ” என சந்திரன் ஒரு புறம் கத்த, வீடே வேடிக்கைப் பார்க்க, அதுவும் தங்கைகள் எல்லாம் பார்க்க, கூனிக் குறுகி விட்டான்.

அன்றே போய் நண்பனின் ரூமில் தங்கிக் கொண்டவனுக்கு வீடு, அம்மா, அப்பா, பிடிக்காமல் போக, சுந்தரியைப் பார்க்கவே வெட்கமாக இருக்க.. அவளோடு வாழ முடியும் என்று தோன்றாமல் போக.. நண்பனின் அண்ணன் வக்கீலாக இருக்க.. வீடும் செல்லவில்லை, அப்பா, அம்மா பேச்சும் கேளவில்லை, விவகாரத்திற்கு அனுப்பி விட்டான்..

ஏழுமலைக்கு இதயப் பிரச்சனை அதிகமாக இருக்க, அவரின் உடலும் ஒரு அறுவை சிகிச்சையை தாங்காது எனச் சொல்ல, அதன் பொருட்டே இந்த அவசர திருமணம். சந்திரனைத் தவிர யாருக்கும் தெரியாது.

இந்த சிக்கல்கள் எல்லாம் அவரை இன்னும் பலவீனம் ஆக்க, விவாகரத்துப் பத்திரம் வந்த சில நாளில் அவரின் வாழ்க்கை முடிந்து விட்டது.

சில மாதம் கழித்து கோர்ட் வந்த போது, பெரிய வயிறுடன் பாட்டியுடன் அவள் நிற்க, எங்கே அவளின் அப்பா என மண்டை குடைய, பின்பு தான் விஷயங்கள் தெரிய வர, சுந்தரியின் தோற்றமும் வெகுவாக அசைத்தது.

அவன் சமாதானத்திற்கு வந்த போதும் அந்த ஊரில் அவனுக்கு இருக்கப் பிடிக்கவில்லை. கூட வந்து விடும்படி அழைக்க, சுந்தரி ஒத்துக்கொள்ளாமல் போக. கண்ணனால் ஒன்றும் செய்ய முடியவில்லை, எல்லாம் முடிந்தது.

வயது ஏற, இப்போது சற்று பக்குவப்பட்டு இருக்க, தன் மீது மட்டுமே தவறு என கண்ணனுக்குப் புரிந்தது. தனக்கு நடந்த அவமானம் மட்டுமே அவனுக்கு பிரதானமாய் தெரிய, சுந்தரி என்ன உணர்ந்திருப்பாள் என அப்போது தோன்றவேயில்லை. அந்த வயதின் முதிர்ச்சியின்மை அவனை சரியாக யோசிக்க விடவில்லை. 

ஆனால் என்ன செய்ய முடியும், என்ன செய்ய வேண்டும் என்றுத் தெரியவில்லை. அதுவும் அவன் சுந்தரியோடு வாழ்ந்த காரணம், வாழ்ந்ததும் அதிகமில்லை ஓரிரண்டு முறை தான், வெளியில் சொல்லவே முடியாது.

அதாகப்பட்டது, அவனுக்கு சுந்தரியைப் பிடிக்கவில்லை என்பது திண்ணம். அதில் கட்டாயப்படுத்தி நடந்த அந்த திருமணம் மிகுந்த மனவுளைச்சளைக் கொடுத்திருக்க.. படங்களில் பார்த்தது, ஆங்காங்கே கேட்டது எல்லாம், முதலிரவு முடிந்தால் கணவன்கள் எல்லாம் மனைவியின் காலடியில் எனச் சொல்லியிருக்கப்பட, ஒரு வேளை உறவு வைத்துக் கொண்டால் அப்படி நமக்கும் அவளைப் பிடித்து விடுமோ என்ற எண்ணம் மட்டுமே அவனை அப்படி ஒரு செயலுக்கு தூண்டியது. எதையும் அவனுக்கு ஆறப் போடும் பழக்கமில்லை, சிறு வயதில் இருந்தே நினைத்தால் உடனே செய்ய வேண்டும். அதுவே எல்லாம் அவசரமாய் செய்ய வைத்தது கூடலும் சரி, பிரிவும் சரி.

ஒருவேளை சுந்தரி அங்கே வீட்டினில் இருந்திருந்தால் எல்லாம் சரியாகக்கூட நடந்திருக்கலாம். விமலா தான் சுந்தரியை அப்பா வீட்டிற்கு அனுப்பிவிட்டாரே. இருவரும் பேசியிருக்கவேயில்லை, பேசியிருந்தாலே நிச்சயம் கண்ணனுக்கு பிடித்திருக்கும். ஆனால் அது தான் நடக்கவேயில்லையே!

சுந்தரியிடம் அவன் அவமானமாய் நினைத்த விஷயத்தை பேசியிருந்தால் அவளின் பதில் இதுவாகத் தான் இருந்திருக்கும், “கல்யாணம் செய்யறதே குழந்தை பெத்துக்கத்தான். இந்த விஷயம் என்ன அவமானம்?” என கேட்டிருப்பாள். கூச்சம் கிடையாதா இப்படிப் பேச என நினைக்கலாம், ஆனால் இந்த பதில் கண்ணனுக்கானது மட்டும் தான். அவள் யதார்த்தவாதி!

ஆனால் நிற்பது, நடப்பது, பார்ப்பது எனஎல்லாவற்றிலும்  நாசூக்குப் பார்ப்பவன் கண்ணன், நான்கு சுவற்றினில் நடக்கும் விஷயம், இப்படி கேள்விகளுக்கு உற்பட்டு கேலிப் பொருளானது அவனால் தாளவே முடியவில்லை. பிடிக்கவில்லை என்று சொல்லி இப்படி நடந்து விட்டது, எல்லோரும் தன்னைப் பற்றி என்ன நினைப்பர் என யோசனை, அவனை அவனிடமே இறக்கிக்காட்ட, இதில் அவனின் அம்மாவின் கேள்வி அத்தனை பேர் முன்னிலையிலும், இன்று வரையிலும் நினைக்கப் பிடிக்காத விஷயம். அவனை மனதளவில் மிகவும் தளரச் செய்த விஷயம்.   

விமலாவும் அவனைத் தவறாக நினைத்துக் கேட்கவில்லை. பிடிக்கவில்லை, பிடிக்கவில்லை எனச் சொல்லி, நீ செய்து வைத்திருக்கும் காரியம் என்ன என்ற ஒன்றே!

எல்லாம் தவறாகிப் போயிற்று!    

 

Advertisement