Advertisement

அத்தியாயம் ஐந்து :

அம்மா கிணற்றினில் விழுந்தது எல்லாம் வீட்டினர் யாருக்கும் தெரியாது..வந்ததும் அவரை ஆசுவாசப் படுத்தி உறங்க வைத்தவன், தங்கையிடம் “உடம்பு சரியில்லை அம்மாக்கு, எழுப்பி தொந்தரவு பண்ணாதே” எனச் சொல்லி பார்த்துக்கொள்ள சொன்னான்.

கண்ணன் அப்பாவிடம் கூட சொல்லவில்லை. ஆனாலும் இதை மட்டும் சொன்னான்.. “சும்மா நான் பண்ணினதுக்கு அம்மாவைத் திட்டிட்டே இருக்காதீங்க.. நான் பண்ணினதுக்கும் நீங்க தான் காரணம்.. ஆனா இதுல உங்க யாருக்கும் லாப நஷ்டமில்லை. அந்தப் பொண்ணு தான் தனியா நிக்குது” என,

எந்தப் பெண்ணை சொல்கிறான் என்று முதலில் சந்திரனுக்கு புரியவில்லை.. புரிந்த போது  “சுந்தரியையா சொல்ற” எனக் கேட்க..  

“பின்ன எந்தப் பொண்ணை சொல்வேன்” என்றவனிடம்,  

“என்னை அபராஜிதனை கூடப் பார்க்க விடலை” என்று மகனிடமே குற்றப்பத்திரிக்கை வாசித்தார்.. அவருக்கு பேரனை காண முடியவில்லை என்பது ஆழ்மனத்தின் வருத்தம்.

கண்ணன் யார் என்பது போலப் பார்க்க. “உன் மவன் டா” என,

“ஓஹ், பேர் அபராஜிதனா” என்று மனதிற்குள் வியந்தான். ஏதோ மன்னனின் பெயர் எனத் தெரியும். பெயரும் பிடித்து இருந்தது. “ஷப்பா நம்ம பேரை போல துரை கிரைன்னு வைக்காம, அவ பேரை போலவும் வைக்காம, நல்லா தான் வெச்சிருக்கா” என நினைத்துக் கொண்டான்.

திரும்ப அப்பாவிடம் ஒரு செக் கொடுத்து அதில் நான்கு லட்சம் என எழுதியவன், “என்னவோ படிக்க வெச்சேன் அது இதுன்னு அந்தப் பேச்சு பேசினீங்களே, நீங்க எனக்கு காலேஜ் ஃபீஸ் கட்டினது விட அதிகமாவே இருக்கு இந்தாங்க” என,

முதலில் அவனை கோபமாக பேச வந்தவர் திரும்ப அதனை கையினில் வாங்கிக் கொண்டு “அப்போ பொறந்ததுல இருந்து உன்னை வளர்த்தது, அப்புறம் ஸ்கூல் ஃபீஸ் கட்டினது” என அடுக்க,

“எவ்வளோன்னு சொல்லுங்க, அதையும் கொடுக்கறேன்” என்று திமிராகப் பேச,

“பணத்தை கொடுத்துடுவ, ஆனா நாங்க உன்னை சிறு துரும்பும் தொந்தரவு செய்யாம பார்த்துக்கிட்டது, எங்க அக்கறை, எங்க பாசம், அதெல்லாம் எப்படித் திரும்ப கொடுப்ப”

“நீ உன் கால்ல நிக்கற வரை எப்படிப் பார்த்துக்கிடோம். அதெல்லாம் எங்களுக்கு திரும்ப கிடைக்குமா? என்ன எங்களுக்கு முடியாத போது எங்களை மாதியா நீ என்னை பார்த்துக்க போற. எத்தனை புள்ளைங்க அம்மா அப்பாவோட இருக்கு. எல்லாம் ஆளுக்கு ஒரு பக்கம் போயிடறாங்க” என அவர் ஆரம்பிக்க,

“திரும்ப ஆரம்பிசிட்டார்டா இவரு” என முறைத்தவன் திரும்பப் போக,

“இருடா” என்றவர், அந்த செக்கை கிழித்து அவனின் கையினில் கொடுத்தார். “போடா, எனக்கு பணம் குடுக்கறானாம். நீ வேலைக்கே போகாம உட்கார்ந்து சாப்பிடற அளவுக்கு உனக்கு நான் சொத்து சேர்த்து வைப்பேன், போடா, போடா” என்று அவர் மீசையை முறுக்கியபடி சொல்லிப் போக..

“பெருசு ஓவராத் தான் பேசுது, என்னைக்கு அடங்குமோ” என நினைத்து அவனும் போக,

“பையன் வந்திருக்கான், அவனுக்கு எதாவது வாய்க்கு ருசியா செஞ்சு போடுவோம்னு உங்க அண்ணிக்கு கிடையாது, போய் படுத்துக்கிச்சு” என விமலாவை தன் கணவரிடம் திட்டியபடி கனகா சமைத்துக் கொண்டிருந்தார்.

அம்மாவின் அருகினில் சென்று அமைதியாக அமர்ந்து கொண்டவனின் முகத்தினில் அபராஜிதனின் முகமே. பின்பு “அவ எப்படி இருக்கா, நாம பார்த்தாலும் கவனிக்கவே இல்லையே” என சுந்தரியின் முகத்தினை ஞாபகத்தில் கொண்டு வர முயன்றான். ம்கூம், எதுவும் தெளிவாகத் தெரியவில்லை.  

அதன் பிறகு வீட்டினருடன் அதிகம் பேசவில்லை என்றாலும் வீட்டிலேயே தான் இருந்தான். அம்மாவின் அருகிலேயே இருந்தான். ஏன் இப்படிச் செய்தார் என ஒரு வார்த்தை வாங்க முடியவில்லை. லொடலொட எனப் பேசும் அவனின் அம்மாவா. பலமாக யோசனை செய்தான். ஏன் என்று பிடிபடவில்லை. அப்பா திட்டியிருப்பார் என அனுமானித்தான், ஆனால் நினைவு தெரிந்த முதலே பார்க்கிறான் தானே. அடிக்கடி திட்டு வாங்குவார். ஆனால் எல்லாம் துடைத்து விட்டு போய்விடுவார். இந்த முடிவு எதனால் எனப் புரியவில்லை.

மாலை அவர் சற்று தேறியதும். “ஏன் மா இப்படிப் பண்ணினீங்க” என,

“வாழவே பிடிக்கலை” என்றார் விரக்தியாக.

“ஏன்மா சொன்னாத்தானே என்னன்னு தெரியும்” என கனிவாக மகன் கேட்க, அழுகை முட்டியது. மீண்டும் அவரின் கண்களில் கண்ணீரை காணவும்.

“எதுவும் பெரிய பிரச்சனையா?” என்றவனிடம், “ப்ச், பெருசா இல்லை, ஆனா வாழப் பிடிக்கலை” என்றார்.

திரும்ப திரும்ப அவரிடம் இப்படி பேசக் கூடாது, நினைக்கக் கூடாது” எனப் பலமுறை சொல்லி அவரை சகஜமாக்க முயன்றான்.

தன் மகன் தன்னை விட்டுவிடவில்லை என்ற உணர்வே அவருக்கு சற்று பலத்தை தந்தது. பின், “எனக்கு சாகணும், அதுக்கு என்ன வழி, கிணத்துல குதிச்சிடலாம் இப்படி தான் தோணிச்சு, அந்தப் பொண்ணு கிணறுன்னு தோணலை, பார்க்கும் போது சொல்லிடு” என,

“எந்தப் பொண்ணு” எனக் கண்ணன் திரும்பக் கேட்க,

“அதுதான் அந்த சுந்தரி”  

“சுந்தரின்னு அவ பேர் இருக்க, நீ இப்படிப் பேசறது சரியில்லை. உன்னைக் காப்பாத்தி இருக்கா, அதை நீ என்னைக்கும் மறக்கக் கூடாது.. உன் பின்னாடியே தான் நான் வந்தேன். ஆனா நான் உடனே குதிச்சிருப்பேனா தெரியாது. நான் யோசிச்சு குதிக்கறதுக்குள்ள எல்லாம் முடிஞ்சிருக்கும்” என,

“ம்ம்” என அரைகுறையாகத் தலையாட்டியவர் “நீ எப்படி அங்க வந்த, அவ எப்படி வந்தா, உன்னைப் பார்க்க வந்தாளா?” எனக் கேட்க,  

“அவ என்னைப் பார்க்க வந்தாளா? நினைப்பு தான் உனக்கு!” எனப் புன்னகைத்தவன். “அவ எப்பவும் வரமாட்டா. நான் நீ போறதைப் பார்த்து தான் வந்தேன்”

“எது எப்படியோ, அவ கிணறுன்னு எனக்கு ஞாபகமே இல்லை, அதைச் சொல்லிடு!”  

“சரி, இதை சொல்லப் போவோம்” என மனதில் நினைத்துக் கொண்டான். ஆனால் அவசரம் காட்டவில்லை. இரண்டு நாட்கள் இருந்து அம்மாவின் மனதை சற்று தேற்றி திங்கள் மாலை ஊருக்கு கிளம்பிக் கொண்டிருந்தான். மகனையும் அவனின் அம்மாவையும்  பார்க்க வேண்டும் போலத் தோன்றியது.

மாலை மங்கிக் கொண்டிருக்க. அவன் சுந்தரி வீடு இருக்கும் திசையைப் பார்த்து நின்று கொண்டிருந்தான். யாரோ வரும் அரவம் கேட்க, யார் என்று திரும்பிப் பார்த்தால் அப்பா.

சுற்றிலும் ஒரு முறை பார்த்தவர் “உங்கம்மா நேத்து கிணத்துல குதிச்சிட்டாளா” என சற்று பதட்டமாகக் கேட்க,

“அம்மா சொன்னாங்களா” என்றான்.

“இல்லை” என அவர் தலை அசைக்கவும், “சுந்தரி சொன்னாளா” என்றான் திரும்ப.

“ஆம்” என்றவர், “ஏன் அப்படி செஞ்சா” என,

“சொல்லலை, வாழ ஆசையில்லைன்னு சொன்னாங்க! வேற எதுவும் இதுவரை சொல்லலை. நீங்க என்ன பண்ணுனீங்க” என தீர்க்கமாகக் கேட்க,

“நான் என்ன பண்ணினேன் அவளை, எவ்வளவு சொகுசா உட்கார்ந்து இருக்கா. இதுல சாகப் போனாளா. என்னை கொன்னிருக்கணும்” எனப் பேச,

“ஷ்” என உதட்டின் மேல் விரல் வைத்து பேசவேண்டாம் என்பது போலச் சொல்லியவன் “மனுஷங்களா பொறந்தா பேச்சை மிச்சம் வைக்கணும். இப்படி ஆத்திரப்பட்டு பேசி பேசி என்ன சாதிக்கப் போறீங்க.. சொகுசா இருக்காங்கன்னா, அவங்க கஷ்டப்படணும் நினைக்கறீங்களா, முடிஞ்சா அவங்களோட இருங்க. முடியலைன்னா சொல்லிடுங்க, எங்கம்மாவை எனக்கு பார்த்துக்க தெரியும். இப்படி அவங்களை எப்பவும் பேச வேண்டாம். நீங்க பேசியிருப்பீங்க அதுதான் அவங்க இப்படி பண்ணப் போயிட்டாங்க” என அவரைப் பார்த்து, அவரின் கண்களை பார்த்து பேசும் மகன் அவருக்கு மிகவும் புதிதானவன்.

அவனை அசந்து பார்த்து நிற்க “நீங்க வாழ்ந்த வாழ்க்கைக்கு நீங்களே அர்த்தம் இல்லாம பண்ணிக்காதீங்க. அவங்க கிட்ட நல்லா பேசலைன்னா கூடப் பரவாயில்லை அவங்களை குத்தி குத்திப் பேசாம இருங்க” என்றான்.

“பேசினா என்னடா பண்ணுவேன்னு உடனே குதிக்காதீங்க. ஏன்னா நான் உங்களை என்ன பண்ணுவேன்னு இதுவரை யோசிச்சதில்லை. மரியாதை தெரியாத பையன் தான், ஆனாலும் யோசிச்சதில்லை, யோசிக்க வெச்சிடாதீங்க” என சொல்ல. அவர் கோபத்தில் முறைக்க,

“சும்மா முறைக்காதீங்கப்பா ஆசைப்பட்டு கட்டிக்கிட்டு இத்தனை வருஷம் வெச்சு குப்பை கொட்டிட்டு, உங்க பொண்டாட்டியைத் தற்கொலை செஞ்சுக்கற அளவுக்கு தள்ளியிருகீங்க. இதுல பிடிக்காம நான் கல்யாணம் பண்ணி வேண்டாம் சொன்னேன், அப்போவும் கடைசியா வாழலாம் சொன்னேன், சுந்தரி ஒத்துக்கலை. அப்புறம் முடிஞ்சிருச்சு. ஆனா நீங்க எந்த தைரியத்துல எங்களை பேசிக்கிட்டு திரியறீங்க, எனக்குப் புரியவேயில்லை” என வார்த்தைகளை சாட்டையாக சுழற்றி அவரின் மகன் என நிரூபித்தான்.

பதில் பேசாமல் அவர் இறங்கி சென்றது மனதிற்கு கஷ்டமாகத் தான் இருந்தது, ஆனாலும் இப்படி பேசாவிட்டால் இன்னும் அம்மாவை பேசியேக் கொல்வார் என்ற அனுமானத்தில் பேசி விட்டான்..

பின்னே பையை தூக்கிக் கொண்டு ஊருக்கு கிளம்ப.. “நான் விடறேன்” என்று கிளம்பிய சித்தப்பாவிடம்.. “வேண்டாம் சித்தப்பா, நான் போய்கறேன்” என்று சொல்லி, அம்மாவிடம் அப்பாவிடம் நேரடியாக “நான் கிளம்பறேன்” என சொல்லிக் கிளம்பினான்.

அப்பாவைத் தவிர எல்லோரும் வாயிலுக்கு வந்தவர்கள் மெயின் ரோட்டுக்கு போவான் எனப் பார்க்க, அவன் இந்தப் பக்கம் தோப்பின் உள் இறங்கி நடக்க..

அதுவே சொன்னது சுந்தரியின் வீடு இருக்கும் பக்கம் இருக்கும் ரோட்டிற்குப் போகிறான் என, சிறிது தூரம் நடக்க வேண்டும் என எல்லோருக்கும் தெரியும். யாரும் எதுவும் சொல்லவில்லை. தங்கைகளிடம் விடை பெற்று சென்றான். காலையில் சித்தப்பாவிடமும் பேசியிருந்தான்.

“பேசி ஒருத்தருக்கு ஒருத்தர் வருத்தப்படுத்திக்காதீங்க, எல்லாம் நல்லபடியா நடக்கும்” என, மெதுவாக நடையை ஆரம்பித்தவன், சுற்றும் முற்றும் பார்வையை ஒட்டிக் கொண்டே நடக்க, அப்படி ஒரு தனிமை, இருட்டு. நிலா வெளிச்சம் மட்டுமே. மனது முழுவதும் அப்போது சுந்தரியே. எப்படி தைரியமாக ஒற்றை ஆளாய் இதில் வருகிறாள். அந்தக் கிணற்றை கடக்கும் போது அதை எட்டிப் பார்க்க, ஆண்மகனான அவனுக்கே “அம்மா” என திகிலாய் இருந்தது.

அதில் இருந்து அவளின் இடம் ஆரம்பம். எல்லாம் சீராய் இருந்தது, பாதையில் இருந்து. அவளின் இடத்தின் உள் அவன் அனுமதி இல்லாமல் நடப்பது ஞாபகமில்லை. யாராவது இப்படி நுழைந்து விட்டால் என்ன செய்வாள் என்ற எண்ணம் தான்.

வீட்டின் அருகில் வந்து விட்டான், சுற்றிலும் முள் வேலி அதைச் சுற்றி ஒரு கேட். அதன் உள் சென்று மறு புறம் இன்னொரு கேட் வழியாக தான் மெயின் ரோட் செல்ல வேண்டும்.

கேட் பூட்டி இருந்தது. “அம்மாடி” திரும்ப வீடு போய் வருவதா. எட்டிக் குதிப்போமா என யோசிக்க ஆரம்பித்தான். சற்று தூரத்தில் அவளின் பாட்டி கட்டிலில் படுத்திருப்பது தெரிந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் நிமிடம் தவித்து நின்றான். வீட்டின் பக்க வாட்டில் அவன் நின்றிருந்தான்..

அப்போது தான் மகனை தூக்கிக் கொண்டு வந்த சுந்தரி படியினில் அமர்ந்தாள் உணவூட்ட. “அம்மா கதை சொல்வேனாம், அபி பையன் நல்ல பையனா சாப்பிடுவானாம்” என அமர்ந்து, அவனை மடியினில் இருத்திக்கொள்ள, இருவர் அமர்ந்திருப்பது தெரிந்தது இருவர் முகமும் தெரியவில்லை.

“ஒரு காட்டுல ஒரு ராஜா இருந்தானாம், எந்த ராஜா.. சிங்க ராஜா. அந்த சிங்க ராஜா எப்படி இருப்பார், நம்ம அபி குட்டி மாதிரி இருப்பார்” என மகனுக்கு பாவனைகளோடு கதை சொல்ல ஆரம்பிக்க, மகனும் கைத்தட்டி குருவி வாய்திறந்து வாங்கிக் கொள்ள, முகத்தினில் இருக்கும் பாவனைகள் தெரியவில்லை. ஆனால் குரலில் இருக்கும் பாவனை கேட்டது அல்லவா.. அவ்வளவு உற்சாகமான ஒரு குரல்.   

“அங்கே புலி இருக்கும், யானை இருக்கும்” என சொல்லிக் கொண்டேப் போக, அவள் கதை முடிக்கும் வரை அங்கேயே அசையாது அதை கேட்டு நின்றிருந்தான். கிட்ட தட்ட அரை மணி நேரம். ஒன்று மட்டும் புரிந்தது, அம்மா மகனது உலகத்தில் தான் இல்லவே இல்லை.. தான் நினைத்தது போலக் கூட சுந்தரி தன்னை நினைத்திருப்பாளா என்பது சந்தேகமே என

திட்டுவதற்காகவாவது தன்னை நினைத்திருப்பாளா என நினைக்கும் போது, தானாக ஒரு கசந்த முறுவல் மலர்ந்தது.  

“ஏன் என் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டது. பிடிக்கவில்லை என்று விட்டுவிட்டேன் விவாகரத்தும் வாங்கி விட்டேன். ஆனால் அந்த நாள் முதல் எந்தப் பெண்ணையும் ரசிக்கக் கூட இல்லை மனம்” ஏன் அப்படி எனப் புரியவில்லை.

கிட்டதட்ட இரு வருடங்கள் யார் புறமும் மனம் செல்லவில்லை. இதுதானா நான்? மிகுந்த யோசனையாகப் போயிற்று. இப்போது எதற்காக இங்கு வந்து நின்று கொண்டிருக்கின்றேன். ஏன்? என,

சுந்தரி கதை முடித்து மகனை தூக்கி பாட்டியைத் தாண்டி சற்று தொலைவில் இருந்த மாட்டுக் கொட்டகை சென்றாள். அங்கிருந்து பேசுவது கேட்கவில்லை.. ஆனால் மாடுகளுக்கு தண்ணீர் இருக்கின்றதா என்று பார்க்கிறாள் எனப் புரிந்தது. பின்பு அங்கிருந்த மாடுகளிடம் பேசினாள், மகனிடம் எதோ சொன்னாள், அதனை தடவிக் கொடுத்தாள். மகனின் பிஞ்சுக் கைகள் பிடித்து தடவிக் கொடுத்தாள். பார்க்கவே அவ்வளவு உயிர்ப்போடு இருந்தது.    

இவளைப் அப்போது பிடிக்கவில்லை.. இப்போதும் வாழ்க்கையை பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு பிடிக்குமா எனத் தெரியவில்லை. ஆனாலும் மனம் வேறு பெண்களை பார்க்கவில்லை. ஏன், எது தடுக்கின்றது?

என்னுள் இருக்கும் என்ன தடுக்கின்றது? இதுவா நான்!       

ஆம்! உணர்வுகள் இருபாலருக்கும் பொது தானே! மஞ்சள் கயிற்றின் மாயம் பெண்களுக்கு மட்டும் தானா ஆண்களுக்கு இல்லையா? பார்த்து வளர்ந்த மரபு, மரபு அணுக்கள், ஒரு ஒழுக்கம் அவனுள் இருக்கத் தான் செய்கின்றது.

யோசனைகளோடே நின்றிருந்தவனுக்கு, தனியாக இருக்கும் அவர்களை அந்த நேரத்தில் தொந்தரவு செய்ய மனதில்லை. யாராவது இவன் அந்தப் பக்கமாக செல்லும் போது பார்த்து, யார் எனத் தெரியாமல், இல்லை யார் எனத் தெரிந்தும் விவாகரத்திற்கு பின் இவனுக்கு என்ன வேலை என்று கதை கட்டி விட்டால்.

பகலில் தான் வரவேண்டும் என்று புத்தி எடுத்துரைக்க, திரும்ப நடக்க ஆரம்பித்தான். இப்போது அவனின் வீட்டின் பக்கமும் செல்ல முடியாது, யாராவது பார்த்து விட்டாள். கிட்ட தட்ட மூன்று கிலோமீட்டர் குறுக்கு வழியாக தோப்புக்குள் நடந்து, கம்பி வேலியைத் தாண்டிக்குதித்து, அங்கு பஸ் ஸ்டாப் இல்லாமல் திரும்ப ஒரு கிலோமீட்டர் நடந்து, ஒரு வழியாக சென்னை பஸ் ஏறும் போது.. வீட்டில் இருந்து ஏழரைக்கு கிளம்பியவன், பதினொன்றரை மணிக்கு பஸ்ஸில் அமர்ந்தான்.

இருட்டை நோக்கி கண்கள் வெறித்திருந்தன, அவன் சென்னை வரும் வரையிலுமே.           

  

 

Advertisement