Advertisement

அந்த குரலும் முகமுமே தாக்க, சுந்தரி சொன்ன விஷயத்தை கிரக்கிக்கவே சில நொடிகள் ஆனது, பிறகு அதற்கு பதிலாய் “மாட்டேன்” என்பது போல இடமும் வலமுமாய் தலையசைத்தான்.
“ஆனா நமக்குள்ள சண்டை வருமே” என்றாள்.
சத்தமாக வாய் விட்டு சிரித்தான்! என்ன ஒரு நம்பிக்கை என் மீது அவள் மீதும் அவளுக்கு என்று தோன்றியது! பின் சிரிப்பை நிறுத்தி,
“ஆம்!” என்பது போல மேலும் கீழும் தலையாட்டினான்.
“என்ன பதில் சொல்ல மாட்டீங்களா?” என்றாள் கோபமாய்.
சிரித்தான் ஆனால் பதில் சொல்லவில்லை.
சுந்தரி புரியாமல் பார்க்க, “ரொம்ப யோசிக்கற தானே கண்டுபிடி” என்றான் இன்னும் விரிந்த சிரிப்போடு.
“என்ன?” என்று புரியாமல் சுந்தரியின் முகம் எரிச்சலையும் கோபத்தையும் தத்தெடுக்க,
“வா நல்லா இருட்டிடுச்சு, பாட்டி அசந்த நேரமா நம்ம பையன் நம்மை தேடி வெளியே வரப் போறான்” என்று சொல்ல,
நேரமாகிவிட்டதால் சுந்தரியும் அவனை விட்டு விலகி நின்றாள்.
“எனக்காக எவ்வளவு யோசிக்கற? நான் சொல்ல வந்த பதில் என்னன்னு யோசிக்க மாட்டியா என்ன?” என்றான்.
“கண்டு பிடிக்கறேன்” என்று சுந்தரி வீர வசனம் பேசினாள்.
“ம்ம், திஸ் இஸ் த ஸ்பிரிட்” என்று கண்ணன் பாராட்டு பத்திரம் வாசிக்க,
“ஸ்பிரிட் ன்னா” என்றாள் சுந்தரி.
“ஸ்பிரிட் ன்னா ஒரு ஜோஷ், ஒரு ஆர்வம், ஒரு உற்சாகம்” என்றவன் கூடவே அவளை இடையோடு அணைத்து, “வேற மாதிரியும் சொல்லலாம்” என்றான் நிதானமான குரலில்.
குரலின் பேதமும் அணைப்பின் பேதமும் புரிய, சுந்தரி அவனை பார்த்திருந்தாள்.
மெதுவாக அவளின் முகத்தினை பற்றினான். அதுவே சொன்னது அவன் முத்தமிட போகிறான் என்று.
“எனக்கு முத்தம் கொடுத்தா, ஒரு ஜோஷ், ஒரு ஆர்வம், ஒரு உற்சாகமா?” என்றாள் உற்சாகமாய்.
“இல்லை” என்றவன், “ஸ்பிரிட் ன்னா நம்ம பாஷையில, கள்ளு கூட சொல்லலாம், சரக்கு, ஒரு போதை வஸ்து, என் போதைடி நீ” என்றான்.
“அய்யே, என்ன பேச்சு இது, கள்ளு, சரக்கு, போதைன்னு” என்று சுந்தரி முகம் சுளிக்க,
“இது தாண்டி பேச்சு” என்றவன் அவளின் இதழை தீண்ட,
தீண்டியது மட்டும் தான் தெரியும் சுந்தரிக்கு, தொய்ந்து கைகளில் விழும் வரை கண்ணன் விடவேயில்லை.
அவன் மேலேயே சாய்ந்து நின்றாள், “என்னவோ ஆச்சு உங்களுக்கு” என்ற குற்றச்சாட்டோடு.
“முன்ன அளவு சாப்பாடு, இப்போ அன்லிமிட்டட்” என்றான் கண்ணடித்தபடி.
“என்ன உளறல், எனக்கு புரியலை”
“அடியேய் என் சுந்தரி, முன்ன நாம தனியா இருந்தோம், அப்போ ரொம்பவும் ஒருத்தரை ஒருத்தர் தேடக் கூடாதுன்னு கொஞ்சம் கவனமா இருப்பேன். ஏன்னா தூரமா இருந்தோம், இப்போ அப்படி எதுவும் இல்லை, எப்போன்னாலும் கட்டிக்கலாம் எப்போன்னாலும் ஒட்டிக்கலாம்” என்று கண்ணடிக்க,
“பேச்சை பார்றா” என்று லஜ்ஜையாய் தலையில் அடித்துக் கொண்டாள்.    
உடனே “பையன் தேடுவான்றன் நீ கதை பேசற” என்று என்னவோ அவள் பேச்சை வளர்ப்பது போல பேசினான்.
“பாருடா” என்று சலித்தவள் உற்சாகமாய் முன் நடக்க, அவளின் பின்னே நடந்தான். இருவரின் மனமும் அவ்வளவு நிறைவாய் உணர்ந்தது.
வீட்டின் உள்ளே சென்றால் அங்கே பாட்டி மட்டுமே இருக்க அபி இல்லை.
“எங்க பாட்டி அவன்?”  
“எங்க, இப்போதானே வந்தான், உங்க கூட இருப்பான்னு நினைச்சேன்”  
பதறி, வேகமாய் இருவரும் படியிறங்கி அவனை தேடத் துவங்க, அவனோ வீட்டின் முன் புறம் இருந்து இப்போது பக்கவாட்டில் இடம் மாறியிருந்த மாட்டு கொட்டகையில் இருந்தான்.
அதனை கடந்து தான் சற்று முன்பு வீட்டிற்குள் சென்றனர். ஆனால் மகன் கண்ணில் பட வில்லை!
இப்போது பார்த்தால் அங்கே இருந்த செவளையிடம் கதை பேசிக் கொண்டிருந்தான்.
“அப்பாவையும் அம்மாவையும் தேடினேன், எங்கேன்னு காணோம், நீ பார்த்தியா?” என்று.
அந்த வார்த்தை காதில் விழ பாய்ந்து சென்று தூக்கி கொண்டாள் சுந்தரி, அவளின் முகம் வருத்தம் காண்பிக்க, கண்ணனோ “ஓய், சுந்தரி, பையனை பயமுறுத்தாத” என்று அவளிடம் மெல்லிய குரலில் பேசினான்.     
பின் உற்சாகமாய் அபராஜிதனிடம் பேசினான் “சிங்கக் குட்டி எங்களை தேடினியா” என்றான்.
“ம்ம்” என்று அபி தலையசைக்க,
“தோப்புக்கு போனோம், அப்பா நம்பர் சொல்லு” என்றவன், அபி சொல்லவும்,
“அங்க வீட்ல பெரிய ஆயா பேசற ஃபோன் இருக்கு தானே, இனி எங்களை காணோம்னா அதுல கூப்பிடணும், தனியா எல்லாம் வரக் கூடாது” என்று மகனுக்கு பாடம் எடுத்தான்.
“ம்ம், சரி, செவளை கிட்ட சொல்றேன்” என்று இறங்கி, “செவளை” என்ற காளையை தடவிக் கொடுத்து, “அப்பா சொன்னாங்க, இனி நான் ஃபோன் பண்ணுவேன்” என்று.
“சரி, இங்க என்ன பண்ணுன?” என்று கண்ணன் கேட்க,
“நீங்க வர்ற வரை செவளையை பாக்க வந்தேன்” என்றான் மழலையில்.
“என் பையன் சிங்கம்டி, அவங்கம்மா மாதிரி, சும்மா பயந்து அவனை பயமுறுத்தாத” என்று கண்ணன் சொல்ல,
“பாருடா” என்ற பார்வையை சுந்தரி கொடுத்தாலும், கணவனின் புகழ்ச்சியில், முகத்தில் கொஞ்சம் பெருமை, கொஞ்சம் கூச்சம்.
“அந்த இருட்டுல எங்கம்மாவை காப்பாத்த கிணத்துல எப்படி பாய்ஞ்சு குதிச்ச தெரியுமா? அப்போவே உன் தைரியத்துக்கு ரசிகன் ஆகிட்டேன். காலையில நாலு மணிக்கு ஒத்தையா எந்த பயமும் இல்லாம எப்படி வேகமா மோட்டார் போட வருவ தெரியுமா, அதுவும் அபியை இடுப்புல தூக்கிட்டே சுத்துவ?” என்று முந்தையை நினைவுகளை பகிர்ந்து கொள்ள,
“என்னவோ அச்சு உங்களுக்கு?” என்று சொல்லி நடக்க,
“என்னடி ஆச்சு? அதை தானே சொல்ல சொல்றேன்” என்றான் மகனை வாங்கியபடி.
“என்னவோ சிங்கம் எல்லாம் சொல்றீங்க? அப்போ நீங்க யாராம்?”
“ஹ, ஹ” என்று பெரிதாய் சிரித்தான். ஆம்! முன்பு மாட்டு தொழுவம் வந்தாலே முகம் சுழிப்பவன், இப்போது நன்கு பழகி விட்டான்.
“சொல்லுவாங்க உண்மையான்னு தெரியாது. ஆண் சிங்கம் காட்டுக்கு ராஜா தான், ஆனா பெருசா எதுவும் செய்யாதாம், ஆனா பெண் சிங்கம் தான் வேட்டையில சிறந்ததாம் என் சுந்தரி மாதிரி” என்று சொல்ல.
சுந்தரி முகம் மலர்ந்து விட, கூடவே “ஒத்தையா, ரெட்டையா” என்பது போல சைகை காண்பிக்க, கண்ணனுக்கு இன்னும் சிரிப்பு தான் வந்தது
“சொல்லுங்க, சொல்லுங்க” என்றாள் நக்கல் சிரிப்போடு.
“என்ன சொல்ல?”
“ஆங்! நீங்க சொன்னது டபுள் மீனிங் ஆ சிங்கிள் மீனிங் ஆ”  
“அநியாயத்துக்கு பச்சை பச்சையா பேசற? அது என்னன்னு நீயே சொல்லு!” என்று அவன் நடக்க,
எதுவும் புரியாத மகன் “சிங்கம்” என்ற வார்த்தையை கொண்டு, “பா, சிங்கம்” என கதை பேசினான்.
“எஸ், லயன் தி கிங் ஆஃப் பாரஸ்ட்” என்ற கண்ணன், “நாம யாரை பார்த்தோம்” என்றான் உற்சாகமாக.
“அஸ்லாம்” என்றான் மகன்.
இனி அவர்கள் இருவரின் உலகமே வேறு என்று புரிந்த சுந்தரி, அவர்களை புன்னகையோடு கடந்து விட்டாள்.
“அஸ்லாம்” என்பது நார்னியா என்ற ஒரு பழைய படத்தில் வரும் ஒரு சிங்கத்தின் கதாபாத்திரம், அது என்னவோ அபிக்கு அவ்வளவு பிடித்து விட, எப்போதும் “என் சிங்கக்குட்டி” என்று கண்ணன் மகனை சொன்னால்
“பா அஸ்லாம்” என்பான் மகன்.
இருவரும் கதை பேச, “டிஃபன் வாங்கிட்டு வந்துட்டு பேசுங்க” என்று சுந்தரி அதட்ட, மகனை பைக்கில் முன் அமர்த்தி தான் ஹோட்டல் சென்றான்.
அவன் டிஃபன் வாங்க நிற்கும் போதே அலைபேசி ஒலிக்க “என்ன சுந்தரி?” என்றவனிடம், “சாருவும் நித்யாவும் வந்திருக்காங்க, இங்க சாப்பிட சொல்லிட்டேன், அவங்களுக்கும் வாங்குங்க” என்றாள்.
“என்ன வேணும்னு கேட்டு சொல்லு” போன் சாருவிடம் கைமாற ஒரு பெரிய லிஸ்ட் கொடுத்தாள்.
“சாரு எல்லாம் வாங்கிட்டு வருவேன். எல்லாம் சாப்பிடணும், வேஸ்ட் பண்ணின” என்று அண்ணனாய் மிரட்ட,
“டேய் அண்ணா, வாங்கிட்டு வாடா, ரொம்ப தான் பண்ற” என்றாள்.
உண்மையில் அவள் சொன்ன லிஸ்ட் குறைந்த பட்சம் ஐந்து பேர் சாப்பிடலாம்.
“பிசாசு, வேஸ்ட் பண்ணட்டும், அவளுக்கு இருக்கு” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாலும், அவள் கேட்ட அத்தனையும் வாங்கி வந்தான்.
பின்பு அங்கே ஒரே சத்தம், ஆர்பாட்டாம், கொண்டாட்டம் தான், அபியும் சேர்ந்து கொள்ள அந்த சத்தம்.
பின் மெதுவாய் “ண்ணா, அவர் அவரோட ஃபிரண்ட்ஸ்க்கு கல்யாணம் ஃபிக்ஸ் ஆனதுக்கு பார்ட்டி குடுக்கறராம், என்னையும் கூப்பிடறார்” என்றாள்.
“நீ என்ன சொன்ன?”
“வீட்ல கேட்டுட்டு சொல்றேன்னு சொன்னேன்”
“வீட்ல என்ன சொன்னாங்க?”
“உங்க கிட்ட கேட்க சொன்னாங்க? இப்போ நான் என்ன செய்யட்டும் போகவா? வேண்டாம்மா?”
“உனக்கு போகணுமா?”
“எனக்கு போக எல்லாம் பெருசா இன்ட்ரஸ்ட் இல்லை, ஆனா ரொம்ப கூப்பிடறார்”  
“அப்போ அண்ணா கிட்ட நீங்களே கேளுங்கன்னு முடிச்சிடு சரியா?” என்றான்.
“அவர் கோச்சிக்கிட்டா” என்றாள் கவலையாய்.
“சாரு, இன்னும் நீ எங்க வீட்டு பொண்ணு தான். உன்னோட பத்திரம் எனக்கு ரொம்ப முக்கியம், நீ கல்யாணம் செஞ்சு [போனா கூட கேள்வி கேட்பேன். இப்போ எங்க யாரு வருவாங்க இதெல்லாம் தெரியாம அனுப்ப முடியாது. சொல்லப் போனா அவர் எங்க கிட்ட தான் உன்னை கூட்டிட்டு போக கேட்கணும். அவருக்கு தெரியலைன்னா நீ கத்துக் குடு” என்றான் ஸ்ட்ரிக்ட் ஆபிசராக.
“சரி, சரி” என்று தலையாட்டி கொண்டாள்.
சுந்தரி இருவருக்கும் இடையில் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
இந்த திருமணப் பேச்சு ஆரம்பித்ததில் இருந்து கொஞ்சம் முட்ட ஆரம்பித்து இருந்தது. காரணம் சுந்தரி, அவளின் சொத்துகள்!
அதாவது மாப்பிள்ளை வீட்டினர் இவர்களின் வசதியை பொதுவாய் பார்க்க, அப்படி கிடையாது அல்லவா, அது சுந்தரியின் சொத்துக்கள் அல்லவா!
சீர் செய்வதிலேயே கொஞ்சம் உரசல் தான், மாப்பிள்ளை வீட்டினர் மிக வசதியானவர்கள், நகை போல அவர்கள் அதிகம் எதிர்பார்க்கவில்லை தான். ஆனால் எல்லாம் சிறப்பாய் இருக்க வேண்டும், பெருமையாய் இருக்க வேண்டும் என்று நினைத்தார்கள்.
அவர்களின் பங்காளி வீட்டினில் நடந்த திருமணத்தில் கார் சீர் வரிசையாய் கொடுக்கப்பட்டிருக்க, தங்களுக்கும் கிடைத்தால் பெருமை என நினைத்தார்கள்.
அதுவே முட்டியது.
சந்திரன் தெளிவாய் சொல்லியிருந்தார், பெரிய சொத்து தான் நம்பளது. ஆனா அது நம்ம மருமகப் பொண்ணோடது. எங்களது இது தான். இதுல அண்ணன் தம்பி நாங்க ரெண்டு பேர், மூத்த பொண்ணு கல்யாணத்துல நாங்க என்ன செஞ்ஜமோ, அது தான் செய்வோம்” என்று விட்டார்.
அவர்களும் அரைமனதாய் சரி என்று இருந்தனர்.
“அப்பா ரொம்ப ஆசைப்படறாங்க, நான் வீட்டுக்கு தெரியாம பணம் தர்றேன் உங்க வீட்ட்ல வாங்கி கொடுக்க சொல்லு” என்று மாப்பிள்ளை சாரு விடம் சொல்லியிருக்க, அவள் அதெல்லாம் முடியாது என்று மாப்பிள்ளையிடம் மறுத்து இருந்தாள்.
ஆனாலும் ஒரு வார்த்தை அவள் அப்பாவிடம் சொல்லியிருக்க, அவர்களும் முடியாது என்று சொல்லியிருக்க, அதில் துரைகண்ணன் ஆண்மகனாய் கோபம் காண்பித்திருக்க, “அச்சோ, அவங்க அப்பாக்கு தெரியாது” என்று சாரு வெகுவாக விஷயம் வெளியில் வராமல் செய்திருக்க, எல்லாம் முட்டியது.
கண்ணன் சுந்தரியிடம் சொல்லியிருந்தான், ஆனால் முழுமையாய் விஷயம் தெரியாமல் இருக்க, இப்போது சாரு சுந்தரியிடம் வந்திருந்தாள், “அண்ணி எனக்கு என்ன பண்ணன்னு தெரியலை சரி பண்ணுங்க” என்று.
“நாங்க என்ன பண்ண முடியும்ன்னு, உன்னோட அண்ணா கிட்ட பேசிட்டு சொல்றேன்” என்று சாருவிடம் பேசியிருந்தாள்.
உண்டு முடித்து மீதமானதை அங்கே வீட்டிற்கு எடுத்துக் கொண்டு சாருவும் நித்யாவும் ஒரு வண்டியில் செல்ல, அவர்களின் பின்னே இன்னொரு வண்டியில் சென்று கண்ணன் அவர்களை வீடு விட்டு வந்திருந்தான். அதற்குள் அபி உறங்கியிருந்தான்.
“என்ன அதுக்குள்ள தூங்கிட்டான்?”  
“பின்ன கொஞ்சம் ஆட்டமா?” என்றாள்.
எல்லாம் சரி பார்த்து கண்ணன் வந்த போது பாட்டியும் உறங்கியிருக்க, முன்புற கதவையும் தாளிட்டு வர, சுந்தரி அவர்கள் இருவருக்கும் அருந்த பால் எடுத்து உள்ளே வந்தாள்.
அவள் உள்ளே நுழைந்தது கதவை தாளிட்ட உடனே கேட்டான், “எதுக்கு சாரு வந்தா? என்ன உன் கடிச்சிட்டு போனா?” என்று.
“எப்படி கண்டு பிடிச்சீங்க?”
“ஆமாம் பெரிய கம்ப சூத்திரம் இது, எனக்கு தெரியாம போக, எதுவும் முடியாதுன்னு சொல்லிடு, சும்மா எதையும் நீ தலையில இழுத்து போடக் கூடாது. வாணிக்கு செஞ்சது தான் இவளுக்கும்” என்று பட படவென்று பேச,
“ஷ்” என்று அபியை அதட்டுவது போல வாயில் விரல் வைத்து அதட்டியவள், “முதல்ல என்னை பேச விடுங்க” என்றாள் அதட்டலாய்.
பிரச்சனை இது வேறு என்றாலும், அவள் அதட்டியதும் வேறு ஞாபகம் வர,
“நான் கண்டு பிடின்னு ஒன்னு சொன்னேனே, முதல்ல அதை கண்டு பிடி நீ, அப்புறம் என்னை மிரட்டுவியாம்” என்றான்.
சுந்தரிக்கு நிஜமாய் என்ன யோசித்தும் அவன் என்ன சொல்ல முயன்றான் இல்லை நினைத்து இருக்கிறான் இல்லை உணர்த்த முயன்றான் என்று சத்தியமாய் தெரியவில்லை.
“எனக்கு தெரியலை?” என்று பரிதாபமாய் சொன்னாள்.
“அப்போ மூச், கண்டுபிடிக்காதவரை நான் என்ன செய்யணும்னு நீ சொல்லக் கூடாது” என்றவன் படுத்துக் கொள்ள.
“என்ன ரொம்ப தான் பண்றீங்க” என்று விரைந்து வந்து அவன் மேலேயே “டொம்” என்று விழ, “அம்மாடி, என்னடி பண்ற நீ?” என்றான் வலியில்.
“இப்போ நீங்க என்னன்னு சொல்லலை, உங்களை அடிப்பேன், கடிப்பேன், என்ன வேணா செய்வேன்?” என்று பெரிய மிரட்டலாய் விடுத்தாள்.
“சொல்லுங்கன்னு கொஞ்சி கேட்க தெரியலை, அடிப்பாளாம், கடிப்பாளாம். உன்கிட்ட அடியும் கடியும் வாங்க தான் எங்கம்மா என்னை பெத்து விட்டிருக்காங்க பாரு” என்று நக்கல் பேச,
“ஆமாம்! அதுக்கு தான் பெத்து விட்டிருக்காங்க” என்று சொல்லி சுந்தரி சில மாதிரிகளை கண்ணனிடம் காண்பிக்க, சிலது வலித்தது, சிலது இனித்தது.
“என்னை சித்தரவதை பண்ற சுந்தரி” என்றான் சிறு அலறலாய்.
“அப்போ என்ன சொல்ல வந்தீங்க?” என்று மீண்டும் கேட்க,
“முதல்ல என்னை அடிச்சது கடிச்சது எல்லாத்துக்கும் பதில் கொடுக்கறேன். அப்புறம் உன் கேள்விக்கு பதில் சொல்ல தோணினா சொல்றேன்” என்று பேரம் பேசினான்.
“முடியாது” என்று சுந்தரி சொல்லும் போதே, பாதி வார்த்தையிலேயே அவளுக்கு பதில்கள் கொடுக்கப்பட, அங்கே யார் அடித்தனர், யார் கடித்தனர் என்பது அவர்களுக்கு மட்டுமே உரிய ரகசியம்!  
“சுந்தரி பெண்ணே” ராகம் தான் அங்கே முழுவதும்! ஆம், கண்ணனின் பிதற்றல் எல்லாம் சுந்தரிக்கு ராகம் தானே!

Advertisement