Advertisement

இதமாய் பதமாய் சில நிமிட அமைதி, பின் முகத்தை விலக்காமலேயே “என்னடி உன் பிரச்சனை?” என்றான்.
உதடுகள் அவளின் வயிற்றில் கண்ணன் பேசப் பேச உரச, அதை கண் மூடி அனுபவித்தவள் பதிலே சொல்லவில்லை.
கண்ணன் மெதுவாய் முகம் விலக்கி பார்க்க, சுந்தரி கண்களை மூடி இருந்தது தெரிந்தது. 
“என்னடி உன் பிரச்சனை?” என்றான் மீண்டும்.
“தெரியலை” என்றாள் கண் திறக்காமல்.
“என்னை மிஸ் பண்றியா, மாமன் வரலைன்னு என்னை தேடி வந்துட்டியா?” என்று புன்னகையோடு அவன் கேட்க,
கண் திறந்தவள் “தெரியலை” என்றாள் அதற்கும் அவனின் முகம் பார்த்து.
“நீ சொல்ல மாட்டா, நீ சொல்லவே மாட்டா, ஏன்னா திமிர் டன் டன் னா வெச்சிருக்க” என்று பேசினான்.
“ம்ம், வெச்சிருக்கேன்! அதனால எனக்கு இப்போ ஒரு டீ போடுங்க பார்ப்போம்” என்றாள் ஒரு சோர்வான புன்னகையோடு.
“அடிங்க” என்று அவன் எழ,
“எங்க அடிங்க பார்ப்போம்” என்று அவள் அப்படியே திண்ணக்கமாய் அமர்ந்திருந்தாள்.
வேகமாய் சுந்தரியை இருகையாலும் எழுவதற்காக இழுத்தவன், அவள் வேகமாய் அவன் கையேடு வரவும், தன் மேல் இழுத்து இடை பற்றி நிறுத்தியவன், “சொல்லு எங்க அடிக்கட்டும்? எதுல அடிக்கட்டும்?” என்றான் சரசமாக.
“எங்க வேணா அடிங்க! எதுல வேணா அடிங்க!” என்றாள் மிகவும் தீவிரமான குரலில் சளைக்காத பார்வை பார்த்து.  
தன் சரசத்தை எல்லாம் கை விட்டவன்.
“என்ன சுந்தரி? என்ன பிரச்சனை?” என்றான் கனிவாக.
“நீங்க ஏன் இன்னைக்கு அங்க வரலை?”
“தலைவலி சுந்தரி”
“ஆனா பார்த்தா அப்படி தெரியலையே” 
“அஞ்சு மணிக்கு உன்கிட்ட சொன்னேன். அப்புறம் தூங்க முயற்சி பண்ணினேன். செம வலி, பின்ன சித்திக்கிட்ட போய் காஃபி வாங்கி குடிச்சு அவங்க குடுத்த மாத்திரை போட்டேன். பத்து மணிக்கு தான் எழுந்தேன். எழுந்த உடனே உனக்கு ஃபோன் பண்ணினேன், பா வெளில வான்னான் அபி!”
“வெளில வந்து பார்த்தா நீங்க, எனக்கு எவ்வளவு சந்தோசம் தெரியுமா?” என்றான் நீண்ட விளக்கம் கொடுத்து உற்சாகமான குரலில்.
“நான் நீங்க ரொம்ப முடியாம படுத்திருப்பீங்கன்னு வந்தேன், நீங்க நல்லா இருக்கவும் என்னவோ மாறி ஆகிடுச்சு” என்றாள் மனதை மறையாமல்.  
சில நொடிகள் அவளை அமைதியாய் பார்த்தவன் ஒரு பெரு மூச்சு விட்டு, “சோ, நான் பொய் சொன்னேன்னு நீ நினைச்சிருக்க” என்றான்.
“அப்படி நினைக்கலை, ஆனா நீங்க வரப் பிடிக்காம காரணம் சொன்னீங்களோன்னு நினைச்சேன்”
“ஒஹ், அப்படி உன் பேச்சு படி பார்த்தா, உங்களை பார்த்ததும் நான் ஏன் சந்தோசம் ஆகணும்”
“அது உங்க பையனை தானே வந்த உடனே தூக்கி கொஞ்சிணீங்க, அவனை பார்த்து ஆகியிருப்பீங்க, அவன் தூங்கின பிறகு தானே என் பக்கம் வந்தீங்க” என்றாள் மனம் சுணங்கியபடி.
அவளை அணைப்பில் இருந்து தூர விலக்கி நிறுத்தினான், “முட்டாளாடி நீ” என்ற கேள்வியோடு.
சுந்தரி முகம் கசக்கி பார்க்க, அவள் எதிர்பாராமல் இரு கைகளாலும் அவளை தூக்கினான்.
“அச்சோ, என்ன பண்ணறீங்க?”
“ம்ம், நீ சொல்லுவியே கீழ போடப் போறேன்னு, த போடப் போறேன்” என்று அவளை கீழே இறக்குவது போல கை இறக்க,
“வேண்டாம், வேண்டாம்” என்று அலறினாள்.
“நம்பவே மாட்டடி நீ என்னை” என்று சிரிப்போடே சொன்னவன்,
“பின்ன எல்லோர் முன்னையும் இப்படி உன்னை தூக்க முடியுமா. அவன் சின்ன குழந்தை, நம்ம பையன், அவனோட போட்டி போடுவியா நீ!” என்று கடிந்தான்.
ஆனாலும் சுந்தரியின் முகம் தெளியவில்லை! 
“உன்னோட” என்று கடிந்தவன் அவளை பார்க்க,
“எனக்கு அப்புறம் தான் உங்களுக்கு எல்லோரும்” என்றாள் இறுகிய குரலில்.  
“சுந்தரி அவன் நம்ம பையண்டி”  
“என்னை யாரும் இப்படி கொஞ்சினதில்லை, அம்மா எனக்கு ஞாபகமில்லை, அப்பாவும் பாட்டிக்கும் எப்பவும் வேலை தான், இப்படி நீங்க உங்க பையனை கொஞ்சற மாதிரி யாரும் கொஞ்சலை, நான் கர்ப்பமா இருக்குறதை பார்த்து தான் என்னை உங்க கூட வரச் சொன்னீங்க, உங்க பையனுக்காக தானே என்கிட்டே திரும்பி வந்தீங்க” என்று பேச,
அவனுக்கு உண்மையில் என்ன சமாதானம் சொல்வது என்று கூட தெரியவில்லை. அப்போதைய காரணங்கள் முன் நின்றது அது தான். சுந்தரி வேண்டாம் என்றும் நினைத்தும் உண்மை தான். ஆனால் சுந்தரி வேண்டாம் அபராஜிதன் மட்டும் போதும் என்று எப்போதும் நினைத்ததில்லை.   
அவளின் மனம் நோகாமல் எப்படி சொல்வது என்று யோசித்து, “பையன் வேணும்னா பையனை தானே கூட்டிட்டுப் போக முயற்சி பண்ணியிருப்பேன் இல்லை விவாகரத்தானதை அப்படியே விட்டு இன்னொரு கல்யாணம் செஞ்சிருக்கலாம்” என்று சொல்லும் போதே சுந்தரியின் முகம் கோபத்தை பூச,
அந்த பாவனையில் கண்ணனுக்கு சிரிப்பு வரப் பார்க்க முயன்று சிரிக்காமல் பேசினான்.  
“ஆனா அப்படி பண்ணலையே, பையனோட அம்மா வேணும்னு தானே உன் பின்னேயே சுத்தி திரும்ப கல்யாணம் செஞ்சு, திரும்ப சண்டை போட்டாலும், போய் வந்து, போய் வந்து, இப்படி பலதும் தானே பண்றேன். எதுக்கு உனக்காக மட்டும் தான்!” என்றான்.
அவளின் கேள்வியை அவளே ஒதுக்கி தள்ளி, அவனின் பதிலையும் கருத்தில் கொள்ளாமல், “என்ன இன்னொரு கல்யாணமா?” என்று ஆரம்பிக்க,
“நீ இப்படியே சண்டை பிடிச்ச, என் மனசுல அத்தனை ஆகாவளியும்  தோனத்தான் செய்யும்” என்றான் முறைப்போடு.
சுந்தரி முறைப்பை விடாவிட்டாலும் வேறு பேசவில்லை.
“எவ்வளவு நேரம் தாண்டி உன்னை தூக்கி வைக்க, இப்போ என்னை என்ன தான் செய்யணும்னு சொல்ற?” என்றான் முறைப்பை கைவிடாமல்.    
“எனக்கு டீ வேணும்” என்றாள் முகம் சுருக்கி சின்ன குழந்தை போல.
“சத்தியமா சொல்றேன், அபியை ஈசியா ஹேண்டில் பண்றேன். உன்னை என்னால முடியலை” என்று சொல்லி அவளை சமையல் திட்டு வரை தூக்கி சென்று அமர வைத்து டீ வைக்க ஆரம்பிக்க,
“நான் ரொம்ப படுத்தறேனா” என்றவளிடம்,
“ரொம்ப இல்லை, ரொம்ப ரொம்ப படுத்தற” என்றான் சற்று தீவிரமான குரலில்.
“நானும் இப்படி நடக்கக் கூடாதுன்னு நினைக்கிறேன். ஆனா இப்படி தான் வருது” என்றாள் சுந்தரியுமே உண்மையான வருத்ததோடு.   
அவளை தோளோடு அணைத்தவன் “பார்த்துக்கலாம் விடு” என்றான் ஆதூரமான குரலில்.
கண்ணனுக்கு நன்கு புரிந்தது, ஒரு முறை பிரிந்து சென்றது, மறுமுறை விட்டு வந்தது, எல்லாம் சேர்ந்து சுந்தரிக்கு அவ்வப்போது பயத்தை கொடுக்கிறது, அதன் தாக்கமே இது என்று!
என்ன செய்ய முடியும்? ஒன்றும் செய்ய முடியாது! காலம் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும் என்று புரிந்தவன்,
“ஓய், விடு சுந்தரி” என்று அவளை தேற்ற, சுந்தரியின் முகம் சஞ்சலத்தோடு தான் அவனை பார்த்தது!
“இப்போ என்ன திடீர்ன்னு இந்த பயம் எல்லாம் இத்தனை நாளா இல்லாம?”
“அது இன்னும் ரெண்டு மாசத்துல நீங்க வந்துடுவீங்க தானே, திரும்ப நமக்குள்ள சண்டை வந்து நீ கோவிச்சிட்டு போயிட்டா” என்று சொல்ல,
சொல்லும் போதே அவளின் கண்களில் கண்ணீர்.  
“என்னடி” என்று அவள் அமர்ந்த வாக்கிலேயே அணைக்க முற்பட, அவளானாள் கீழே இறங்கி அவனை அணைத்து நின்று ஓஓஒ வென்று அழுகை.
எதுவும் சமாதானம் பேசாமல் அவளை தட்டி கொடுத்து நிற்க, அவள் விலகவேயில்லை, அவளை கை அணைப்பில் வைத்தே டீ வைத்தான்.
பின் வடிகட்டும் முன் அவளை விலக்கி தூக்கி சமையல் மேடையில் அமர வைத்து, இருவருக்கும் டீ க்ளாசில் விட்டு, அதனை கொண்டு போய் ஹாலில் வைத்து திரும்பி பார்த்தால் சுந்தரி வரவில்லை.
மீண்டும் அவனே வந்து அவளையும் தூக்கி வந்து ஹாலில் அமர வைத்து பக்கத்தில் அமர்ந்தான்.
“நான் இன்னும் ரெண்டு மாசம் கழிச்சு அங்க வரப் போறேன்னு யார் சொன்னா?” என்று அவன் பேசும் போதே சுந்தரியின் முகத்தில் தெரிந்த பீதி, “என்ன வரமாட்டாயா?” என்ற நிராசை,
யோசிக்கவேயில்லை அவளை அப்படியே தூக்கி அணைத்து பிடித்தவன் “உன்னோடயே இப்போவே வரப் போறேன்” என்றான்.
அவனிலிருந்து முகம் நிமிர்த்தி பார்த்தவளின் முகத்தில் கலவையான உணர்வுகள். அவன் நிஜம் சொல்கிறானா இல்லையா நம்பலாமா வேண்டாமா என்று.
“கொஞ்சம் என் மேல நம்பிக்கைவை நம்ம வாழ்க்கை நல்லா இருக்கும்” என்றான் வேறு பேசவில்லை.
அவளும் முகம் நிமிர்த்தி இருந்தவள் பின் அவனுள் முகம் புதைத்து கொள்ள சில அமைதியான நிமிடங்கள்.
பின் கண்ணனே “டீ ஆறிடும் சுந்தரி” என, இன்று டீ ஆறிடும் முன்னரே அதனை குடித்து முடித்தனர்.
குடித்து முடித்ததும் “ம்ம் அப்புறம்” என்றான் சுந்தரியிடம்.
“என்ன அப்புறம்?” என்றாள் புரியாதவளாக.
“எதுக்கு இவ்வளவு அழுகை என்ன உன் மனசை உருத்தது?”  
அவள் முன்பு சொன்ன எல்லாம் சொல்லச் சொல்ல, “வேற, வேற” என்றான்.
“என்ன வேற?”  
“எதுவோ இருக்கு எனக்கு தோணுது?” என்றான்.
“தோணினா தோனட்டும், எனக்கு என்ன?” என்று சொல்லி சுந்தரி வேகமாய் எழுந்து படுக்கையறை செல்ல,
“உன் கிட்ட விஷயத்தை வாங்காம விடறதில்லைடி இன்னைக்கு” என்று சத்தமாகவே சொன்னான்.
“என்கிட்டே இருந்து ஒன்னும் வாங்க முடியாது” என்று அவள் சொல்ல,
“அப்போ என்னவோ இருக்கு” என்றான்.
சென்றவள் திரும்பி நின்று முறைக்க, “ஹேய், இருக்குன்னு கண்டுபிடிச்சிட்டேன் பார்த்தியா” என்றான்.  
“அய்யே” என்று பழிப்பு காண்பித்து சுந்தரி செல்ல,
எல்லாம் சரி பார்த்து லைட்டெல்லாம் அணைத்து கண்ணன் உள்ளே செல்ல, அவனின் மனைவியோ மகனை நடுவில் விட்டு அவள் அந்த புறம் படுத்து இருந்தாள்.
“தோடா, என்கிட்டயேவா” என்பது போல பார்த்தவன் கீழே சின்ன படுக்கையை விரித்தான், அபியை தூக்கி கீழே படுக்க வைக்க போகிறான் என்று உணர்ந்தவள், சுவரின் புறம் திரும்பி படுத்து கொண்டாள்.
அபியை கீழே படுக்க வைத்து மேலும் பத்து நிமிடங்கள், அவன் எழ மாட்டான் என்பதை உறுதி செய்து, மனைவியின் அருகில் வந்தான்.
உண்மையில் சுந்தரி உறங்கியே விட்டிருந்தாள்.
எட்டி அவளை பார்க்க அவள் உறங்குவது தெரிய அவளின் காதினில் சென்று,
கையில் கையும் வெச்சு
கண்ணில் கண்ணும் வெச்சு
நெஞ்சில் மன்றம் கொண்டு சேருந்த நேரம்
என்றான் கிசுகிசுப்பான பாடலாய்
அதில் அவளின் உறக்கம் கலைய,
உன்னோட சுந்தர ரூபம்
வர்ணிக்க ஓர் கவி வேணும் என்று பாட
சுந்தரிக்கு சிரிப்பு வர பார்த்தது.
மோகன ராகம் நின் தேகம்
கீர்த்தனமாக்கி ஞான் பாடும்
சுந்தரி முகம் கொள்ளா புன்னகை , முகம் திருப்பி அவனை பார்க்க
“ஷப்பா திரும்பிட்டியா” என்றான்.
“பாடினதெல்லாம் பாடுங்க”  
“அதெல்லாம் பாட முடியாது, எதுக்கு நீ அப்படி அழுத”
“சும்மா” என்றாள் சிரிப்புடன்.
அழுததில் அவள் முகம் பளபள வென்று இருக்க, கண்களில் தெரிந்த சோபை அவனை ஈர்த்தது.
“எல்லோரும் மேக் அப் போட்டு அழகா இருந்தா, நீ அழுது அழகா இருக்கடி. ஆனா நீ இப்படி அழகா இருக்க வேண்டாம்” என்றான் உள்ளார்ந்து.
“அய்யே நான் அழகா”
“நான் சுந்தரிகிட்ட பொய் சொல்றதில்லை” என்றவனின் கண்களுக்கு சுந்தரி அத்தனை அழகாய் தான் தெரிந்தாள், நிறம் சற்று குறைவே தவிர திருத்தமான வசீகரிக்கும் முகம் தானே!
முகம் முன்பு இருந்த காய்ந்த தோற்றம் இல்லையே, இப்போது கணவனின் கவனிப்பில், ஒரு பூரிப்பில், மிக மிக செழுமையாய் இருக்க, முகத்தில் எட்டிப் பார்த்த பருக்கள் கூட அழகாய் தான் இருந்தது.
முகத்தில் இருந்து எட்டி நின்ற பருவில் எட்டி ஒரு முத்தம் வைத்தான்,
சுந்தரியின் தேகம் சிலிர்க்க, “என்ன பண்றீங்க?” என்ற சுந்தரியின் குரல் அவளுக்கே கேட்கவில்லை.
“நீ சொல்லு என்ன பண்றேன்னு” என்று கண்ணன் சொல்லியபடி செய்த வேலைகள் எல்லாம் சொல்லவே முடியாதபடி இருக்க, சுந்தரி சொல்லும் நிலையிலும் இல்லாமல் இருக்க, அந்த நிமிடங்களில் இதழில் மௌனங்கள் மட்டுமே!
  
  
     
  
    
  
    

Advertisement