Advertisement

“போடா உங்கப்பாவை நீயே வெச்சிக்கோ” என்று அரட்ட,
அபியோ சற்றும் கண்டு கொள்ளாமல் அப்பாவின் கழுத்தை கட்டிக் கொண்டான்.
அதனை பார்த்தவள் முகத்தை தூக்கி வைத்து கொண்டு சமையலறை போக,
மகனை தூக்கிக் மனைவியின் பின்னே வந்தவன் “ஹ, ஹ, என்ன இது? பையனோட சண்டை போடுவியா நீ” என்றான் பெரிதாய் சிரித்து.
கண்ணனின் சிரிப்பில் கடுப்பானவள், இந்த சிரிப்புக்கு அபியே கத்தட்டும்னு விட்டிருப்பேன் என்று நக்கலாய் சொல்ல
அந்த பாவனையில் அசந்தவன் “ஆனாலும் உனக்கு இருக்குற கொழுப்பு இருக்கே” என்று சொல்ல, 
“பின்ன எப்பவும் அவன் தானே உட்காருறான். ஒரு நாள் நான் உட்கார்ந்தா கத்துவானா?” என்று முகம் சுருக்கினாள்.
இன்னுமே சத்தமாய் சிரித்தவன், “யாரோ பிசினெஸ் கேர்ள்ன்னு சாயந்தரம் காம்ப்ளிமென்ட் எல்லாம் வாங்கிட்டு, ரெண்டு வயசு குழந்தை கூட சண்டை போடறா?” என்று பேச,
“நான் சொன்னேனா? நான் சொன்னேனா?” என்று சிலிர்த்தவள், “யாரவது சொன்னா அதுக்கு நான் எப்படி பொறுப்பாக? நான் ஒன்னும் பிசினெஸ் கேர்ள் எல்லாம் இல்லை. அதனால் எல்லாம் நான் சண்டை போடக் கூடாதுன்னு சொல்லக் கூடாது”   என்று வீம்பாய் விதண்டாவாதம் பேசினாள்.
“போடும்மா, போடும்மா, நீ சண்டை போடு, இல்லை சட்டிய தூக்கி என் மண்டையில போடு, என்னானாலும் போடு” என்று சிரிப்போடு ரைமிங்காய் கண்ணன் பேசினான்.
ஆனால் சுந்தரி சட்டென்று, “சும்மா சொல்லாதீங்க, நான் சண்டை போடறது பிடிக்காம தானே வந்துட்டீங்க” என்று சொல்லிவிட்டாள். இது தானே அவளின் குறையே நடந்த பழையவைகளை சொல்லி சொல்லி காண்பிப்பது.  
அப்படியே ஒரு அமைதி!
சுதாரித்த கண்ணன், அந்த பேச்சை தவிர்க்க நினைத்தான். குறைகளை அவ்வப்போது சுட்டி பேசுவது அவளின் குறையாகின், அந்த குறையை பொறுத்து தானே போகவேண்டும். இறைவனிடம் வேகமாய் பிரார்த்தித்தான் “கடவுளே! எனக்கு நிறைய பொறுமையை கொடு, கூடவே இவள் என்னை குறை காண முடியாத செய்கையை, சூழலை எனக்கு கொடு” என்று.    
“சரி, இப்போ எதுக்கு சமையலறை வந்த?” என்றான் இலகுவாகவே. அவனின் கேள்வியில் அவளும் சுதாரித்து விட்டவள்,  “ம்ம், பாத்திரம் கழுவ” என்று நக்கலாக பதில் சொன்னாள்.
சுந்தரியின் பதிலில் இன்னுமே அப்படி ஒரு சிரிப்பு பொங்கியது கண்ணனுக்கு. “அசத்துறடி சுந்தரி, நாள் முழுசும் பாத்திரம் கழுவ நானும் ரெடி” என்றான் பெரிதாய் சிரித்து. அப்பா சிரிக்க, என்னவென்று தெரியாமல் அபியும் சிரித்தான்.
அப்போது தான் தான் பேசியதின் அர்த்தம் புரிய அசடு வழிந்த சுந்தரி, “போங்கடா அப்பனும் புள்ளையும்” என்று பேசிக் கொண்டு அடுப்பை பற்ற வைத்தாள்.
“என்ன பண்ற?” என்று கண்ணன் கேட்க,
“டீ சாப்பிடணும் போல இருக்கு, டீ வைக்கறேன்” என்றாள்.
“புடி இவனை, நீ டீ வைச்ச அவ்வளவு தான்! ஆமாம் யாராவது உனக்கு டீ வைக்க கத்துக் குடுத்து இருக்காங்களா என்ன?” என்றான்.
அவன் கிண்டல் செய்யவில்லை என்று புரிந்து “இல்லை, டீ மட்டுமில்லை, சமையல்ன்ற ஒன்னே யாரும் கத்துக் கொடுக்கலை, நானா ஆயா செய்யறதை பார்த்து கத்துக் கிட்டேன். அம்மா ரொம்ப சின்ன வயசுலயே தவறிட்டாங்க. எல்லாம் நானே, என் தலையை யாரும் சீவி ஜடை போட்டது கிடையாது, நானே தான் போட்டுக்குவேன், ரொம்ப கோணல் மாணலா இருக்கும், ரிப்பன் கட்ட தெரியாது, பின்ன மெதுவா மத்த பிள்ளைகளை பார்த்து பழகினேன்”  
“எனக்கு தாவணி கட்ட யாரும் சொல்லிக் கொடுக்கலை நானா தான் சுத்திக்கிட்டேன், புடவையும் அப்படி தான், யாரையும் தப்பு சொல்ல முடியாது. என்னை சுத்தி நிறைய நல்ல மனுஷங்க இருந்தாங்க. தெரியலைன்னு சொன்னா கத்துக் குடுத்து இருப்பாங்க. ஆனா நான் இப்படி தான் நிக்கறதுலயே எனக்கு தெரியுமா தெரியாதான்னு கூட எதிர்ல இருக்குறவங்களு தெரியாது. அதுவுமில்லாம ரொம்ப நெருக்கமா யாரோடவும் பழகினது இல்லை. எல்லோரையும் தள்ளி தான் நிறுத்துவேன். அதுக்கு சிந்தா தான் விடாம நான் தள்ளி நின்னாலும் பேசி சினேகிதமானா, ஏன் புடவை கட்ட சாரு தான் எனக்கு சொல்லிக் கொடுத்தா” என்றாள்.
மிக நீண்ட பேச்சு அவளை பற்றின முதல் பேச்சும் கூட.  
அபியை கையில் வைத்தபடி பேசிக் கொண்டிருந்த சுந்தரியை தோளோடு அணைத்துக் கொண்டான்.  பின் புன்னகையோடு அவளின் முகம் பார்த்து “தன் மானச் சுந்தரி, ம்ஹும், அப்படியும் சொல்லலாம். திமிர் பிடிச்ச சுந்தரி அப்படியும் சொல்லலாம்” என்று கண்ணடிக்க,
“ஏன் திமிரா இருக்க கூடாதா என்ன?” என்று சிலிர்த்து ஒரு வாக்குவாதத்தை துவங்கினாள்.  
தொடர கண்ணன் விடவில்லை “இரு, திமிரா இரு, எனக்கு இந்த திமிர் பிடிச்ச சுந்தரியை பிடிச்சுதான் இருக்கு” என்றான் புன்னகை வாடாமல். 
சுந்தரி அமைதியாக, “சரி, இப்போ நான் உனக்கு டீ வைக்க கத்து குடுக்கறேன்” என்றவன், “இது என்னோட செய்முறை தான். ஆனா எனக்கு இப்படி தான் பிடிக்கும்” என்று சொல்லி.
“முதலில் தண்ணீர் ஊற்றி, அது சற்று சூடானதும், அதில் டீத்தூள் போட்டு, அது கொதிக்கும் போது,   கொஞ்சம் ஏலக்காய், இஞ்சி போட்டு, பின் சர்க்கரை போட்டு நன்கு கொதி வந்த பின் பால் ஊற்ற.. காய்ச்ச காய்ச்சவே டீ மனம் வீசியது.
பின் வடிகட்டி இருவருக்கும் எடுத்தான்.
டீ வைக்கும் பாங்கினையும் பின்பு அதனோடு சேர்த்து வைக்கும் அவனையும் சுந்தரி ரசித்து நின்றாள்.
அம்மாவின் கைகளில் இருந்த அபி தூக்கத்திற்கு கண்களை சொருகினான்.
“இப்போ தான் அந்த ஓட்டம் ஓடினான். அதுக்குள்ள தூக்கத்துக்கு கண்ணை சொக்குறான்” என்று கண்ணன் பேச,
“ஆமாம், பையன் தூக்கத்துக்கு சொக்கறது தெரியுது, பெண்டாட்டி இவரை பார்த்து சொக்கி நிக்கறது தெரியலை” என்று வாய் விட்டு அவனுக்கு கேட்கும் படி சத்தமாய் நொடித்தாள்.
“ஆத்தாடி ஆத்தா, என்ன வாய்டி இது, இப்படி பேசற உன் வாயை…” என்று சற்று மயக்கத்தோடு பேச,
“போடா, போடா” என்ற பார்வையை கொடுக்க, அவளின் அந்த பார்வை அவனை நிச்சயம் உசுப்பேற்றியது.
மகனை கொண்டு போய் சோஃபாவில் படுக்க வைத்து தட்டி கொடுக்க, அபி உறங்க ஆரம்பித்து இருந்தான். 
கண்ணன் டீயோடு பின்னே வந்தான். டீயை அங்கே இருந்த டீபாயின் மேல் வைத்து விட்டு, 
மகன் உறங்கி விட்டதை நன்கு பார்த்துக் கொண்டவன், சுந்தரியை கை பிடித்து எழுப்பியவன், வேகமாய் அவளை இழுக்க, இதனை எதிர்பாராதவள் அவன் மேல் மோதி தான் நின்றாள்.
“அம்மா” என்று அலற, “என்னடி எப்போ பார்த்தாலும் கிண்டல் பார்வை, என்ன பேச்சு பேசுது உன் வாய்” என்று உதடுகளை அவனின் விரல்களால் வலிக்காமல் நிமிண்டினான்.
ஒரு வார்த்தை கூட பேசாமல், “அய்யே, இதுக்கு தான் இந்த பில்ட்ப்பா” என்ற பார்வை கொடுத்தாள் சுந்தரி.  
“ஏத்தம்டி உனக்கு” என்று பேசியபடி பக்கமாய் இருந்த சுவரின் புறம் அவளை தள்ளி அதில் சாய்த்து நிறுத்தி, அவள் மேல் முழு பாரத்தையும் கொடுத்து சாய்ந்து நிற்க, சுகமாய் தாங்கி நின்றாள்.
“அப்படியே உன்னை பிச்சு திங்கணும் போல இருக்கு, ஆனா பயமா இருக்கு” என்றான் மனதை மறையாது.
சுந்தரிக்கு அவன் சொல்ல வருவது புரியவில்லை, தன்னை குறை சொல்கிறானோ என்று நினைத்து, “இல்லை, நான் தள்ள மாட்டேன்” என்று மெல்லிய குரலில் பேச,
“ப்ச், அதில்லை சுந்தரி” என்று அவளின் காது மடலில் ஜாலங்கள் செய்து கொண்டே பேச, உடல் என்ன தளர்ந்த போதும் சுந்தரி அசையாமல் நின்றிருந்தாள்.
கண்ணன் அவனாய் தான் பேசினான், “அது அபி எப்படி வந்தானே தெரியலை, நம்மோட ஒரு நாள் உறவுலயே வந்துட்டான். திரும்ப அந்த மாதிரி ஆகிருச்சுன்னா? இப்போ நான் வேற இங்க இருக்கேன், இன்னொரு குழந்தை வரும் போது கண்டிப்பா நான் உன்கூட இருக்கணும்”
“உன்னை தனியா விட எனக்கு இஷ்டமில்லை. அதுவுமில்லாம அபிக்கு இப்போ தான் ரெண்டு வயசு ஆகப் போகுது. உனக்கும் சின்ன வயசு, இன்னொரு குழந்தையை சுமக்குற அளவுக்கு உனக்கு போதிய சக்தி இருக்கான்னு தெரியலை. ரெண்டு குழந்தையையும் பார்த்துக்குற அளவுக்கு நமக்கு பக்குவம் இருக்கான்னு தெரியலை”  என்று ரகசியம் பேசினான்.               
தன்னை குறை சொல்வான் என்று நினைத்திருந்த சுந்தரிக்கு, இந்த பதில் அவளை இளக்கியது. அவனை சுற்றி கைகளை படர விட்டாள்.
“நிறைய யோசிக்கறீங்க போல” என்று கனிவாய் பேச,
“ம்ம், எப்பவும் உன் ஞாபகம் தான் ஏதோ ஒரு வகையில, அப்புறம் ஏன் விட்டுட்டு வந்தீங்கன்னு கேட்காதே, அப்போ ரொம்பவுமே வெக்ஸ் ஆகி இருந்தேன்”
“வெக்ஸ்னா” என்று புரியாமல் அவள் கேட்க,
“அது, அது, ஒரு மாதிரி வெறுத்த நிலைல இருந்தேன்” என்றான்.
“இப்போ சரியாகிடுச்சா?” என்றாள் குரலில் ஒரு தயக்கத்தோடும் பயத்தோடும்.   
“ம்ம், சென்னைல ரொம்ப மோசம் தான். ஆனா கோயம்பத்தூர் வந்ததுக்கு அப்புறம் பரவாயில்லை, இப்போ சுந்தரியையும் அபியையும் பார்த்த பிறகு எல்லாம் போச்சு, இப்போ ஊர்லயே கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கலாமோ தோணுது. அவசரப்பட்டு வந்துட்டேன்” என்றான் மனதை மறையாது.
கண்ணன் சுந்தரியில் மேல் முழு பாரம் கொடுத்து நின்றதோடு சரி பின் காதினில் ரகசியம் பேசினான்.
 ஆனால் சுந்தரிக்கு அவன் பேச்சுக்கள் மனதை வருட, மெதுவாய் அவனின் உதடுகளை உதடுகளால் தீண்டி விலகினாள். இருவருக்குமே உடல் சிலிர்த்தது.
“ஓய், உசுப்பேத்தாத, அப்புறம் பேபி வந்துடப் போகுது” என்றான் அவளின் தீண்டலில் மனம் உடல் எல்லாம் மயங்கிய போதும்.
“அப்போ என்ன பண்ணலாம்?” என்று சுந்தரி கண்ணனையே கேட்க,
“எனக்கும் தெரியலை, ஆனா ப்ளான் பண்ணனும், ஏதாவது ப்ரிகாஷன் எடுக்கலாம்” என்று சொல்ல,
பன்னிரெண்டாவது படித்திருந்தாலும் தமிழ் வழி கல்வி என்பதால் புதிதான ஆங்கில வார்த்தைகள் அவளுக்கு அர்த்தம் ஆகாது. முன்பிருந்த சுந்தரி என்றால் என்ன என்று கூட கேட்டிருக்க மாட்டாள்.
“வேண்டுமென்றே இவன் நான் படிக்கவில்லை என்று என்னை சீண்டுகிறான்” என்று நினைத்திருப்பாள். ஆனால் அதிசயித்திலும் அதிசயமாய் அந்த உணர்வு அப்போது தோன்றவில்லை, அவனிடமே என்ன என்று கேட்டாள்.  “ப்ரிகாஷனா? அப்படின்னா?” என்று சுந்தரி கேட்க,  
யாருமில்லாத போதும் கண்ணன்  பதில் சத்தமாய் எல்லாம் பேசவில்லை, அவளின் காதினில் பேசினான். “முன்னெச்சரிக்கை, என்ன மாதிரின்னா?” என்று, எல்லாம்  கணவன் மனைவியின் அந்தரங்கம். சுந்தரியின் முகம் ஏகத்திற்கும் சிவந்து போக, கண்ணனுக்கு அதனை பார்த்து பார்த்து அவளை இஷ்டத்திற்கு கஷ்டப்படுத்த உணர்வு பொங்கியது.   
முடிவாய் கண்ணன் பேசி முடித்து விலக நினைக்க, அவனை விலக விடாமல் அவனை சுற்றியிருந்த கைகளில் இறுக்கத்தை கூட்டினாள்.
இன்னமுமே இருவரும் தடுமாறி தான் நின்றனர்.
ஆனால் சுந்தரி அவனை விலக விடவில்லை.
கண்ணன் அவளின் முகத்தை பார்க்க,  தயக்கத்தை விட்டு, தடுமாற்றத்தை மறைத்து, “கட்டி பிடிச்சா, முத்தம் குடுத்தா, எல்லாம் குழந்தை வராது” என்று சுந்தரி சொல்ல,
சத்தமாய் சிரித்து விட்டான். ஆனாலும் அதற்கு மேல் கண்ணன் தயங்கவில்லை, மனம் உல்லாசமாய் உணர்ந்த போதும், “அம்மாடி எவ்வளவு பெரிய பலப் குடுக்கறடி நீ எனக்கு” என்று சொல்லி அவளை பிய்த்து தின்னும் முயற்சியில் இறங்கியவன்,
“கட்டிப்பிடிக்க, முத்தம் கொடுக்க மட்டும் தான் விடணும் சரியா” என்று ரகசியம் பேச,
“ஒரு முத்தத்துக்கு இத்தனை அக்கப்போரா, மறுபடியும் அபி கண் முழிக்கற வரை பேசுவீங்க நீங்க” என்று கடிந்தவள், “நீங்க முதல்ல வாயை மூடுங்க” என்று சுந்தரி தான் அவனின் வாயை அடைக்கும் படி ஆகிற்று.   
இருவரின் உணர்வுகளும் சூடாக, மணக்க மணக்க வைத்த டீ ஆறி போனது.    
  

Advertisement