Advertisement

அத்தியாயம் மூன்று :

நினைத்ததை செய்ய கால அவகாசம் எடுக்கும் பிறவியல்ல அவன்.. இதோ கிளம்பிவிட்டான்.. இரண்டு மணி இன்டர்சிட்டியை பிடித்து எழரைமணிக்கு சேலம் ஜங்கஷனில் இறங்கிவிட்டான்.. பின்னே இரண்டு பஸ் மாறி அவனின் வீட்டு வாசலையும் ஒரு மணிநேரத்தில் அடைந்து விட்டான்..

தூரத்தில் வரும் போதே பார்த்து விட்டான்.. சித்தப்பா சண்முகம் வாயிலில் ஒரு சேரில் அமர்ந்திருக்க.. படியில் வாணியும் நித்யாவும் அமர்ந்திருக்க.. அவர்களுக்கு சற்று தள்ளி கனகா அமர்ந்திருதார்..

இவன் அருகில் செல்லும்வரை யாரும் கவனிக்கவில்லை.. சென்று நின்ற பிறகு தான் யாரோ வந்திருக்கின்றார் என்று உணர்ந்து பார்வையை திருப்ப.. “அண்ணா” என முதலில் அழைத்தது நித்யா தான்..

எல்லோர் முகங்களும் அவனை பார்த்ததும் பளிச்சென்று மலர்ந்தது.. அது ஏதோ ஒரு வகையில் நிம்மதியைக் கொடுக்க.. அவன் முகமுமே புன்னகை சிந்தியது..

“எப்படி இருக்க கண்ணா?” என சித்தப்பா கேட்ட குரலில் அவரின் மனதில் இருந்த அன்பு அப்படியே குரலில் வந்தது. “நல்லா இருக்கேன் சித்தப்பா” என்றவனிடம் இருந்து வேகமாக வந்த வாணி அவனின் கையில் இருந்த பையை வாங்க.. நித்யா முதுகின் பின்புறம் இருந்ததை வாங்கினாள்..

நால்வருமே அவனின் தோற்றத்தை தான் பார்த்திருந்தனர்.. கம்பீரமான ஆண்மகனாகப் பரிமளிக்க துவங்கியிருந்தான்.. இங்கே இருந்து போகும் போது இப்படி இல்லை.. அவன் வராத காரணம் எல்லோருக்கும் ஞாபகம் வர, இப்படி இவன் இருக்க சுந்தரியைக் கட்டி வைத்தால் எப்படி பிழைப்பான் என எல்லோர் கோபமும் சந்திரன் மேல் தான் திரும்பியது..

“பெரியம்மா” என்று குரல் கொடுத்துக் கொண்டே நித்யா உள்ளே விரைய, காலையில் இருந்து அமைதியாய் இருந்த வீட்டினில் இப்படி ஒரு குரல் கேட்கவும், விமலா என்ன என்று குரல் கொடுக்காத போதும் தானாகவே ரூமை விட்டு வெளியில் வர.. நித்யாவும் அவளின் கையினில் இருந்த பையையும் பார்த்தவர் “என்ன நித்யா?” என,

“அண்ணா வந்திருக்காங்க” என்றாள் சிரிப்போடு. விமலாவின் முகத்தினில் நம்பியும் நம்பாத தன்மை, அவரும் வேகமாக வர, வெளியில் நின்றது அவரின் கண்ணனே..

வருடத்திற்கு பிறகு பார்க்கும் மகன்.. கண்கள் தானாக கண்ணீரைக் காட்டியது.. கண்ணணிற்கும் அவரைப் பார்த்து புன்னகைக்க வேண்டும் போலவும் தோன்ற, வேண்டாம் போலவும் தோன்ற பார்த்தது பார்த்தபடி நின்றான்..

முன்னயே ஆடுவான், இப்போ வெளிநாடு எல்லாம் போய் வந்திருக்கான், இப்போ மட்டும் என்னை மதிக்கவா போறான் என்ற எண்ணம் தான் விமலாவிற்கு..

“உள்ள வா, வா” என.. சித்தப்பா செல்ல.. அம்மாவை பார்த்தபடி உள்ளே வந்தவன் அவரிடம் பேசும் பொருட்டு “சாரு எங்கேம்மா” என..

“அதானே எங்கே சாரு?” என்று அப்போது தான் எல்லோரும் கவனிக்க.. நித்யா தான் “மேலே மொட்டை மாடில இருப்பா” என சொல்லி அவள் போக.. “இருங்க நான் போறேன்” என்று அவன் மேலே செல்ல..

சண்முகமும் கனகாவும் விமலாவைப் பிடித்துக் கொண்டனர்..

“என்ன அண்ணி நீங்க பார்த்துட்டு அப்படியே நிக்கறீங்க, அவன் கிட்டப் பேச வேண்டாமா.. சும்மா அதையும் இதையும் பேசி அவனை திரும்பத் துரத்தி விட்டுடாதீங்க.. உங்களுக்கு பிள்ளை வேணுமோ இல்லையோ எங்களுக்கு பிள்ளை வேணும்..” என சண்முகம் பேச

கனகாவும் “அவன் கிட்ட நல்லா பேசுங்க அக்கா, சண்டை போடாதீங்க” என,

“என் பையன் கிட்டப் பேச இவங்கல்லாம் எனக்கு நாட்டாமை” எனத் தோன்ற, அப்படி ஒரு அழுகை அவருக்குள் பொங்கியது.. அவரின் ரூம் போய் அடைந்து கொண்டார்..

மொட்டை மாடியில் வானத்தில் இருக்கும் நட்சத்திரங்களை பார்த்துக் கொண்டிருந்தாள் சாரு.. சிறு வயதில் இருந்தே அவளுக்குப் பிடித்தமான பொழுது போக்கு.. “சாரு” என அண்ணனின் அழைப்பைக் கேட்டதும், “அண்ணா” என முகமும் அகமும் மலர திரும்பியவள் வேகமாக அருகில் வந்து அவனின் கையைப் பிடித்துக் கொண்டு “சூப்பரா ஆகிட்டேண்ணா” என குதூகலித்தாள்..

சிரிப்பு தான் வந்தது, இவள் இன்னும் என்னை நன்றாக கூடப் பார்க்கவில்லை அப்போதும் கூட என, “நீயும் தான் வளர்ந்துட்டே” என்றவனிடம்.. “நீ தான் அண்ணா சூப்பரா இருக்கே” என்றவள்.. அங்கே மாடியின் சுவரில் வைத்திருந்த ஃபோன் எடுத்து செல்பி எடுக்க..

கண்கள் அந்த ஃபோனைத் தாண்டி எதிரில் இருந்த தோப்பு, அதன் பக்கம் இருந்த பூந்தோட்டம், அதனை தாண்டி இருந்த ஓட்டு வீடு எனப் பயணித்தது..

சுந்தரி அந்த நேரம் வீட்டுப் படியில் அமர்ந்து மகனுக்கு கதை சொல்லிக் கொண்டிருந்தாள்.. அவளின் பாட்டி வாயிலில் இருந்த கயிற்று கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்தார்.. ஆனால் தூரத்தில் இருந்து பார்த்தவனுக்கு வெளிச்சக் கீற்று மட்டுமே தெரிந்தது வேறு எதுவும் தெரியவில்லை.

“கீழ போகலாமா அண்ணா” என,

“ம்ம்” என முனகியபடி வந்தவன், திரும்பத் தனக்குள் மூழ்கிக் கொள்ள.. அவனின் அப்பா வந்ததோ அவனை பார்த்ததோக் கூட தெரியவில்லை..

மகனைப் பார்த்ததும் சில நொடிகள் தடுமாறி தான் நின்றார்.. அவருமே குற்ற உணர்ச்சியில் இருந்தார்.. மகனது வாழ்க்கைக் கொண்டு அல்ல சுந்தரியினுடைய வாழ்க்கையைக் கொண்டு.. அவ்வளவு சொத்து பத்து இருக்கிறது அதனைக் கொண்டு தானே தயங்காமல் தன் மகனிற்கு அத்தனை அவசரமாகக் கொண்டு வந்தார்..

“முட்டாள் பயல், எல்லாம் தொலைத்து நிற்கின்றான்” என்பது தான் அவரின் எண்ணம், “என்ன அழகா சாப்பாடு போடும், கிறுக்கன். அவர் பார்த்து வளர்ந்த பெண்.. தங்கமல்ல வைரம்.. என்ன பட்டை தீட்டப் படாத வைரம்.. இவன் தீட்டிக் கொண்டு இருக்க வேண்டியதுதானே! எல்லாம் முடித்து விட்டான்”  என நினைத்தவர் எதுவும் சொல்லாமல் அறைக்குள் சென்று விட..

வீடே பார்த்து தான் இருந்தது.. சந்திரன் வந்தது மகனை நின்று பார்த்து உள்ளே சென்று விட்டது.. கண்ணன் எதையும் உணரும் நிலையில் இல்லை, ஏதோ யோசனையில் இருந்தான் என..  

இங்கே இவர்கள் இருக்க, மேலே சித்தப்பா வீட்டினர் இருக்க, அதற்கு மேலே தான் மொட்டை மாடி. அங்கே ஒரு ரூம் இருக்க.. “சாரு, என் திங்க்ஸ் அங்கே வெச்சிடு, நான் மண்டே நைட் தான் கிளம்புவேன்” என்றவன் “அப்பா இன்னும் வரலையா?” என..

“வந்துட்டாரே, உன்னை இப்போ தானே பார்த்தார்” என,

“அப்போ என்னை அவர் வீட்டை விட்டு துரத்தலையா?” என..

கேட்டிருந்த வாணி “இரு, பெரியப்பாக் கிட்ட கேட்கறேன்” எனச் சொல்லி, “பெரியப்பா” என அழைக்கப் போக.. அவசரமாக அவளின் வாய் பொத்தியவன்.. “ஷ்” என அங்கே ஒரு மெல்லிய சிரிப்பலை..

ரூமின் உள் மனைவி கண்களில் நீரோடு அமர்ந்திருக்க, “அங்கே உன் மவன் வந்திருக்கான்னு எல்லாம் கொட்டம் அடிக்கறாங்க, நீ ஏன் ஒப்பாரி வெச்சிகிட்டு கிடக்கற” என்று சந்திரன் பேச,

கணவரின் பேச்சில் இன்னுமே விமலாவிற்கு அழுகைப் பொங்கியது.. பதிலே பேசாமல் முதுகு காட்டி படுத்துக் கொள்ள.. “இப்படி முன்னமே அமைதியா இருந்திருந்தா என் வீடு விளங்கியிருக்கும், அதுதான் விளங்காம செஞ்சிட்டியே” என அதற்கும் குத்திப் பேச..

யாரும் புரிந்து கொள்ளாமல் இந்த வாழ்க்கை வாழ்ந்து என்ன பயன் என்ற ஒரு தாக்கம் மனதினில் மிகவும் அதிகமாக தோன்ற ஆரம்பித்தது..

“ஒத்தை ரூவா உங்கம்மா வீட்ல இருந்து கொண்டு வந்திருப்பியா.. நல்லா இருக்கேன்னு எதுவும் பார்க்காம போடுற நகையை போடுங்கன்னு கட்டி வந்தேன்.. இத்தனை வருஷம் ராணி மாதிரி இருந்திருக்க, ஒரு கஷ்டம் தெரியுமா உனக்கு.. உனக்கெங்க தெரியும் பணத்தோட அருமை.. அவ்வளவு சொத்து பத்தோட ஒரு புள்ளையை கட்டி வெச்சா, உன் மவனுக்கு பிடிக்கலைன்னாலும் சேர்ந்து பொழைக்கக் சொல்லி கொடுத்திருக்கணும். அதை விட்டு இன்னும் அதையும் இதையும் பேசி பையன் மனசைக் கெடுத்து, அந்தப் புள்ளையையும் யாருமில்லாம நிக்க வெச்சிட்ட”

“எனக்கு பேரன் பொறந்திருக்கான், அவனை என் கண்ல கூட சுந்தரி காட்ட மாட்டேங்கறா, உனக்கு என்னைக்காவது பார்க்கணும்னு தோணியிருக்கா, எப்படித் தோணும்.. மனுஷங்களோட அருமையும் தெரியாது, காசு பணத்தோட அருமையும் தெரியாது.. உயிரோட இருந்து ஒரு பிரயோஜனம் கிடையாது, பெரிய தண்டம்டீ நீ.. ஒரு பைசா கொண்டு வரலை, உனக்கு எதுக்குத் திமிர்.. வீட்டுக்கு வந்த மகாலக்ஷ்மியை விரட்டி விட்டுட்ட” என ஏகத்திற்கும் அவரை போட்டு வாட்டி எடுத்து விட்டார்.

சில காலத்திற்கு பிறகு மகனை பார்க்கவும் அதுவும் நல்ல முறையில் வசீகரிக்கும் தோற்றத்தோடு.. அவ்வப்போது அவரின் கண்ணில் ஒற்றை பெண்ணாய் மகனை இடுப்பில் வைத்துக் கொண்டு எதற்கும் அலைந்து திரியும் சுந்தரி கண்ணில் பட.. பொங்கி விட்டார்.   

சுந்தரி எதற்கும் இவரை அருகில் விடவில்லை.. மாமனாராய் வேண்டாம், உன் தந்தையின் நண்பனாய் எனக் கேட்டும் நெருங்க விடவில்லை.             

சாரதா வந்து உணவிற்கு அழைக்க, “பசியில்லை, அண்ணனுக்கு செஞ்சு குடுத்துடு” என்று சொல்லி படுத்துக் கொண்டார்..

அப்பா இருந்ததினால் உள்ளே செல்ல முயலாமல் “அம்மா வரலை” எனக் கேட்டவனிடம், “பசிக்கலையாம்னா, உன்னை சாப்பிட சொன்னாங்க” என..

கண்ணனுக்குப் பசி, பிகு செய்யாமல் உணவருந்த அமர்ந்தான்.. உள்ளே சென்று அம்மாவைப் பார்க்க வேண்டும் போலத் தோன்ற.. ஆனாலும் ஒரு தயக்கம்..

உண்டுவிட்டவன் “சரி, காலையில் வெளியில் வரும் போது பேசிக் கொள்ளலாம்” என நினைத்து, “நான் மேல போறேன்.. நான் இருந்தா அவர் சாப்பிட வர மாட்டார்” என அப்பாவை உணர்ந்தவனாக சொல்லிச் செல்ல..

கண்ணன் மேலே சென்ற பிறகு அப்பாவை அழைத்து உணவு உண்ண செய்தவள், திரும்ப அம்மாவை அழைக்க… “வேண்டாம் கண்ணு” என்ற அவரின் தீனமான மறுப்பில் சாரதாவும் வந்து உணவருந்தி உறங்க சென்று விட்டாள்.

விமலா உணவருந்தாதது சந்திரனுக்கு ஒரு கோபத்தைக் கிளப்ப “சும்மா என்னதுக்குடி சீன போட்டுட்டு இருக்குற.. உன்னை நான் கொடுமை பண்றேன்னு உன் மவனுக்கு காட்டவா.. மனுஷன் உயிரை எடு.. வேளா வேளைக்கு கொட்டிக்கறது ஒன்னு தான் உருப்படியா செய்யற, அதையும் செய்யறதுக்கு என்ன?” என,

கணவன் பேசப் பேச காலையில் இருந்து நடந்த சண்டை, உண்ணாதது, இப்போது மகனைப் பார்த்த அதிர்ச்சி.. அவனுக்காய் உறவுகள் அவரிடம் பேசிய போது மகன் முழுவதுமாய் தன்னை விட்டு சென்று விட்ட உணர்வு.. ஒரு மயக்க நிலைக்கு கொண்டு செல்ல.. அது கூட சந்திரனுக்குத் தெரியவில்லை.

“மனுஷனை மதிச்சா தானே நீ பதில் பேசுவ.. உங்கிட்ட எல்லாம் பேசவே முடியாது” என்று அவரும் படுத்து விட..   

மேலே வந்த கண்ணனிற்கு ஆள் அரவமற்ற அந்த ஏகாந்தம், அவனின் ஊர் காற்று அவனை இதமாய் தழுவ, எதனைத் தேடுகின்றோம் என்று தெரியாமல் சுந்தரியின் வீடு இருக்கும் திக்கையே பார்த்திருந்தான்.. அங்கே இருந்த வெளிச்சக் கீற்று தொலைந்து போக.. பின்பு அப்படியே தரையில் படுத்து தலைக்கு முட்டுக் கொடுத்து உறங்க ஆரம்பித்தான்..

திடுமென்று விழிப்பு வர.. எழுந்து அமர்ந்து நேரம் பார்த்தான், மணி நான்கரையை நெருங்கிக் கொண்டிருக்க, தானாய் எழுந்து சுந்தரியின் வீடு இருந்த புறம் பார்த்தான், அங்கே மீண்டும் வெளிச்சக் கீற்று அதற்குள் எழுந்து விட்டார்களா என நினைத்து பார்த்திருந்தான்..

சற்று நேரம் கழித்து தான் பார்த்தான்.. யாரோ அந்தப் பக்கமாக நடந்து செல்வதை, உற்றுப் பார்த்தால் அம்மா போலத் தோன்ற.. எதற்கு இந்த நேரம் அந்தப் பக்கமாக செல்வர் என அனுமானிக்க முடியாத போதும் அவர் தனியாக செல்வதால் இறங்கி வேகமாக அவர் பின் போக.. அதற்குள் அவர் தொலைவு போயிருந்தார்..

நடையை வேகமாக எட்டிப் போட்டான்.. அவர்களின் காடு முடிந்து சுந்தரியினது ஆரம்பிக்கும் இடத்தில், ஒரு பக்கம் அவளின் தென்னந்தோப்பு போக இன்னொரு பக்கம் பூந்தோட்டம் ஆரம்பம்..

அங்கே சுந்தரியின் வீட்டினது கிணறு இருக்க.. என்ன ஏது என்று அனுமானிக்கும் முன்னே, இதற்கு கண்ணன் ஒரு முப்பதடி தூரத்தில் இருந்த போதே.. அம்மா கிணற்றில் குதித்து விட.. “அம்மா” என வீறிட்டான். வெலவெலத்து விட்டான்.. கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை..

அப்போதுதான் எழுந்து சுந்தரி தோட்டம் பக்கமாக ஒரு பார்வை பார்த்து தண்ணீர் எடுத்து விட வந்தாள்.. அந்த இருட்டில் ஒற்றை பெண்ணாய்.. அவளுக்கு சற்றும் பயமில்லை.. அது இடம் மட்டுமல்ல. அங்கிருந்த எல்லாம் அவளின் உணர்வோடு கலந்தவை.. சில சமயம் அதனோட பேசக் கூட செய்வாள்.. அந்த செடிகளோடு, மரங்களோடு, கிணற்றோடு எல்லாம்.. எல்லாம்..       

பொதுவில் இன்னும் நேரம் கழித்து தான் வருவாள்.. இன்று என்னவோ மனது சரியில்லாமல் இருக்க உறக்கமில்லாமல் நேரமே வந்தாள்..

கிணற்றில் தொபீர் என ஏதோ விழுந்த சத்தம்.. கூடவே அம்மா என்ற கத்தல்.. ஒரே பாய்ச்சலில் வேகமாக ஓடி வந்து கிணற்றில் எட்டிப் பார்க்க யாரோ மேலே எழுந்து அமுங்குவது தோன்ற நிமிடமும் யோசிக்காமல் கிணற்றில் குதித்தாள்.. யார் கத்தியது என்று கூடப் பார்க்கவில்லை.

அதற்குள் கண்ணனும் அருகில் ஓடி வந்திருந்தான்.. சற்று ஆழமான கிணறு, அவனுக்கு நீச்சல் தெரியும், ஆனால் குதித்தெல்லாம் பழக்கமில்லை.. அவன் நீச்சல் பழகியது நீச்சல் குளத்தில்.. இருட்டு இல்லாமல் இருந்திருந்தால் ஒரு முயற்சி செய்திருப்பான்.. ஆயினும் அதற்கு அவசியமில்லாமல் பின்னோடு யாரோ குதித்தது தெரிந்தது.

படி போக.. அதில் இறங்க ஆரம்பித்தான்.. பதட்டத்தில் அவனே விழுந்து விடுவான் போல இருந்தது..

இருட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.. சிறு வெளிச்சக் கீற்றே..

யாரென்று தெரியாத போதும் கையைப் பிடித்து மேலே இழுத்து வந்திருந்தாள் சுந்தரி.. அந்தக் கிணற்றில் குதித்து பழக்கம் தான்.. ஆனாலும் விடியாத போது, வெளிச்சமும் இல்லாமல்.. அதுவே சொல்லும் அவளின் தைரியத்தின் அளவை… பற்று கோலைப் பிடித்து நிற்க முயன்றாலும் விமலா மூர்ச்சையாகி இருக்க, உடலின் எடை அதிகமாகி திரும்ப அவரை கீழே இழுக்க..

ஒரு கையால் அவரை பிடித்து மறுகையால் கல்லை பிடித்து நின்றவள் இமை சிமிட்டி ஆளின் அரவம் புரிந்து, “பிடிங்க, என்னால முடியலை” எனப் பேசி யார் எனப் பார்க்க..

கண்ணனுக்கும் அதிர்ச்சி சுந்தரியா இவ்வளவு வேகமாக செயல்பட்டு அம்மாவைக் காப்பாற்றியது.. “பிரேவோ” என தான் அவனின் மைன்ட் வாய்ஸ் சொன்னது, 

சுந்தரியின் கண்களுக்கு துரைகண்ணன் போலத் தெரிய.. அவனா இல்லை ஏதாவது பேயா என அஞ்சிப் போனவள்.. இமை சிமிட்டி மீண்டும் அவனைப் பார்த்தாள்.. சரியாகத் தெரியவில்லை.. விமலாவைப் பிடித்திருந்த கையை விட்டு கண்களில் இருந்த நீரை வழித்தெடுக்க.. அதில் திரும்பவும் விமலா உள்ளே மூழ்க..

“அச்சோ, பிடி, பிடி சுந்தரி!” என பதட்டத்தில் கத்தினான் கண்ணன்.. அதில் அவன் தான் என உறுதியாக..

சமாளித்துக் கொண்டவள், மீண்டும் முடியைப் பிடித்து மேலே இழுத்து அவன் புறம் வர, அவன் அவரை பற்றிக் கொண்டான்.. அவரை மேலே இழுத்து படிக்கல்லில் சாய்ந்த வாக்கில் அமர்த்தி வேகமாகக் கன்னத்தை தட்ட.. அவரிடம் அசைவில்லை..

பதறியபடியே சுந்தரியைப் பார்க்க.. அவள் அவரின் வயிற்றை பிடித்து அழுத்தி தண்ணீரை வெளியே எடுக்க முற்பட்டாள்.. பின்பு பலமாக அவரின் கன்னத்தில் தட்ட சிறு அசைவு.. மெதுவாக கண்களை திறக்க..

அவர் கண் திறந்ததும் பொங்கி விட்டாள், “அறிவிருக்கா உங்களுக்கு… நீங்க குதிச்சு சாவ எங்க கிணறு தான் கிடைச்சதா” எனக் கத்தவும்.. விமலாவின் முகம் ஒரு பயத்தைக் காட்ட.. “முதல்ல யாரும் வருமுன்ன இங்க இருந்து கூட்டிட்டுப் போங்க” என அதட்டினாள் கண்ணனைப் பார்த்து..

கண்ணன் பேச வர.. “ஆளுங்க யாரவது வந்துட்டா பெரிய அசிங்கம் இது.. இன்னும் கொஞ்சம் நேரத்துல எல்லோரும் பூ பறிக்க வந்துடுவாங்க.. கிளம்புங்க முதல்ல” என்று அதட்டினாள்..

கண்ணனுக்கும் அது புரிய.. மெதுவாக அவரை எழுப்பி படிகளில் ஏற வைத்து மேலே கூட்டி வந்தான்.. அம்மாவிடம் ஒரு பேச்சும் பேசவில்லை..

பின்பு மேலே ஏறிய சுந்தரி சுற்றும் முற்றும் பார்த்து “சீக்கிரம் கூட்டிப் போங்க” என,

விமலாவின் நடை தடுமாற.. வேகமாக அருகில் வந்தவள்.. கீழே அவரின் புடவையை பிழிந்துவிட்டு “இப்போ கூட்டிப் போங்க” என்று சொல்லி தன் வேலை முடிந்தது என்பதாக அவளின் வீடு நோக்கி உடை மாற்ற சென்றாள்.

கண்ணன் அவர்களின் தோப்பிற்கு வந்ததும் ஒரு கல்லில் அமர்த்தி “ஏன் மா இப்படிப் பண்ணுனீங்க?” என அவர் முன் அமர்ந்து கலங்கிய குரலோடு கேட்கவும்..

விமலா திரும்ப அழுகையைத் தத்தெடுக்க.. கண்ணனால் என்ன என்றும் அறிய முடியவில்லை, அவரை சமாதானம் செய்யவும் முடியவில்லை..

“நாம எவ்வளவு பெரிய கொடுமையைப் பண்ணியிருக்கோம், ஆனா தைரியமா வந்து உங்களை காப்பாத்துறா.. பொண்ணுங்க எப்படி இருக்காங்க.. நீங்க ஏன் இப்படிக் கோழையா மாறிட்டீங்க.. உங்களைப் பத்தி மட்டுமே நினைக்கக் கூடாது, ஏற்கனவே ஒரு பொண்ணை துரத்தி விட்டுட்டோம்னு ஊர் முழுக்கக் கெட்டப் பேர்.. நிஜமும் அதுதான்.. இதுல நீங்க ஏதாவது பண்ணிக்கிட்டிருந்தா நாளைக்கு நம்ம வீட்ல இருக்குற பொண்ணுங்க நிலைமை யோசிக்க வேண்டமா?” என்று பேசிக் கொண்டிருக்க..

அங்கே பேசி வந்துவிட்டாலும் இன்னும் கண்ணனைப் பார்த்த அதிர்ச்சியில் இருந்து சுந்தரி மீளவில்லை.. அவனையே கொண்டு பிறந்திருக்கும் மகனைத் தான் பார்த்திருந்தாள்.                       

 

Advertisement