Advertisement

கண்ணனுக்குள் அப்படி ஒரு கோபம் பொங்க, “இப்போ மட்டும் நீ போன, அப்படியே போயிட வேண்டியது தான். அபியை உன் கண்ல கூட காண்பிக்க மாட்டேன் யோசிச்சுக்கோ” என்றான்.
அப்படியே நின்றவள் “என்ன பழைய சுந்தரின்னு நினைச்சீங்களா, என் பையனை என் கண்ல காட்ட மாட்டீங்களோ? செஞ்சு தான் பாருங்களேன், உங்க மொத்த வீட்டையும் தொலைச்சிடுவேன்” என்று அவளும் சொன்ன போது ஆத்திரத்தில் குரல் நடுங்க கண்களில் நீரும் நின்றது.
இதெல்லாம் ரோட்டில் ஒரு ஓரமாய். அது தேசிய நெடுஞ்சாலை என்பதால் ஆள் அரவமின்றி இருக்க வண்டிகளும் வேகமாய் பறந்து கொண்டிருந்தது.
“ப்ச்” அவனையும் மீறி சட்டென்று மூண்டு விட்ட வார்த்தையாடலில் கண்ணனின் மனம் சலித்துக் கொண்டது..
“ஏய், ஒழுங்கா வந்து ஏறுடி வண்டில” என்று வார்த்தைகளை கடித்து துப்பினான்.
“நான் வரமாட்டேன்” என்று சுந்தரியும் பிடிவாதமாய் சொல்ல..
“எங்க வீட்டை நீ தொலைக்கறது அப்புறம், இப்போ நீ வண்டில ஏறல, உன்னை நான் தொலைச்சிடுவேன் ஏறுடி” என்று அவன் வண்டியை அருகில் நிறுத்தி உறும விட,
அபி வேண்டுமல்லவா ஏறினாள், ஆனால் கண்ணன் அவனின் வீட்டிற்கு செல்லாமல் அவளின் வீட்டிற்கு சென்று அவளை இறக்கி விட்டு அபியை கூட்டி வருவதற்காக அவனின் வீட்டிற்கு போக,
“அச்சோ, என் பிள்ளையை பிரித்து விடுவானோ, என் கண்ணில் நிஜமாய் காண்பிக்க மாட்டானோ?” என்று தோன்ற,
அந்த நேரத்தில் ரோடின் வழியாய் செல்வது சரியல்ல புரிந்து, அவர்களின் தோப்பின் பக்கம் சென்று தோப்பின் கேட்டை திறந்து அந்த வழியாக கண்ணனின் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
அந்த இருட்டில் ஒற்றையாய், யாருக்கும் பயம் கொடுக்கும் இருட்டும் தனிமையும், ஆனால் அவளின் காடு அவளுக்கு பழக்கம் தானே விடு விடுவென்று நடந்து விட்டாள்.
அவர்களின் வீட்டை அடையவும், அவர்களின் கேட்டும் இன்னும் பூட்டப் படவில்லை, கண்ணின் பைக் நிற்க,
வாயிலில் இருந்து பார்த்தாலே ஹால் தெரியும். அங்கே அபி சந்திரனின் மடியில் அமர்ந்திருக்க, சாரு அவனுக்கு உணவினை ஊட்டிக் கொண்டிருந்தாள். அவர்களின் சித்தப்பா வீட்டினர் காணவில்லை, அநேகமாய் அவர்கள் உறங்க மாடிக்கு சென்றிருக்க வேண்டும்.
கண்ணன் அங்கே சோபாவில் அமர்ந்திருந்தான். உணவின் வாசம் பசியை அதிகப்படுத்த “மா, பசிக்குது சாப்பிட குடு” என்று குரல் கொடுத்தான்.
“தோ வரேண்டா” என விமலா குரல் கொடுக்க,
என்னவோ அவர்கள் எல்லாம் குடும்பமாய் அமர்ந்திருக்க, இப்போது மகனும் அவர்களுடன் இருக்க, இனி அவனும் தனக்கில்லையோ, தான் மட்டும் தனியோ என்ற உணர்வு பலமாய் தாக்க, அப்படி ஒரு அழுகை பொங்கியது.
வேகமாய் அந்த இடத்தை விட்டு நகர்ந்தவள், அங்கேயே தோப்பின் ஆரம்பத்தில் மறைவாய் அமர்ந்து அழ ஆரம்பித்தாள்.
விமலா வந்தவர் “தோசை சுடட்டுமா இல்லை இல்லை இட்லி ஊத்தட்டுமா, மட்டன் செய்யலை சிக்கன் தாண்டா, நீ வருவன்னு யோசிக்கலை, குழம்பு மட்டும் ஊத்திக்கோ” என்றார் அம்மாவாய்.
ஆம், கண்ணன் சிக்கன் தொடவே மாட்டான், மட்டன் மற்ற இதர அசைவ உணவுகள் அத்தனையும் செல்லும், அவனுக்கு கோழி பிடிக்காது. அதன் வாசனை பிடிக்காது.      
“அதெல்லாம் வேண்டாம் காஃபி மட்டும் கொடு, அவ அங்க செஞ்சிருப்பா, நான் போகாம அவளும் சாப்பிட மாட்டா” என்றான் மனைவியை விட்டு கொடுக்காமல். அவனுக்கு மட்டனாய் இருந்தாலும் உணவு உண்ணும் எண்ணம் எல்லாம் இல்லை. வேறு காபி ஸ்நேக்ஸ் இது மாதிரி தான் கேட்டான்.  
“மா, அந்தக்கா கிட்ட என்னன்னு பேசிக்கோ, சாரு நம்பர்ல இருந்து வாட்ஸ் அப் செஞ்சு டிசைன் பார்த்துக்கோங்க, வாணி வீட்டு விஷேஷதுக்கு வர்ற மாதிரி ரெடி பண்ணிக்கங்க” என்று விட்டான்.
இதெதுவும் சுந்தரிக்கு தெரியாது, அவள் ஒரு பாடு அழுது முடித்து தேம்பலில் இருந்தாள்.
கண்ணன் காஃபி குடித்து மகனை தூக்கி கொண்டு பைக்கை இயக்கவும், அதன் ஒலியில் எட்டி பார்க்க அவன் மகனை கூட்டிக் கொண்டு கிளம்புவது தெரிந்தது.
“ஹப்பா, மகனை கூட்டிட்டுக் கொண்டு வீட்டிற்கு வருகிறான்” என்பதே அப்படி ஒரு ஆசுவாசத்தை கொடுக்க,
அவர்கள் செல்வதற்கு முன் சென்று விட வேண்டும் என்று வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
அவர்கள் ரோடு வழியாக சுற்றி வரவேண்டும், இவள் தோப்பின் வழியாக அதற்கு முன் சென்று விடலாம், ஓட்டமும் நடையுமாய் அவர்களின் வீட்டின் தோப்பு பக்க கேட்டினை அடைய, அதற்குள் கண்ணன் வந்து விட்டிருந்தான்.
வீட்டின் உள் அவன் பைக்கை நிறுத்த, இவள் தோப்பு பக்க கேட்டினை திறந்து உள்ளே வருவதை பார்த்தவனுக்கு கோபம் வந்தது. அவன் தோப்பிற்கு எதனையோ பார்க்க போயிருக்கிறாள் என்று நினைத்துக் கொண்டான்.  
“வந்ததும் இப்ப எதுக்கு அங்க போன, ஏதாவது சமைக்க வேண்டியது தானே” என்றான்.
அவனின் பேச்சினை சட்டை செய்யாமல், அவள் வந்து அபியை தூக்கிக் கொண்டு சென்றாள்.
“இப்போ தானே அவன் அம்மா வீட்ல நல்லா கொட்டிகிட்டு வந்தான், என்னை எதுக்கு வந்து அதட்டுறான்” என்ற கோபமிருக்க, பதில் பேசாமல் அமைதியாய் நடந்தாள்.
“ஏய், நில்லுடி, ஒரு மனுஷன் இந்த கத்து கத்துறேன் யாருக்கு வந்த விருந்தோன்னு போற, வெளில சாப்பிடலாம்னு சொன்னேன், வீட்டுக்கு போகலாம்னு கூட்டிட்டு வந்துட்ட, வந்தவ எதாவது சமைச்சியா நான் பசியோட வருவேன்னு” என்று  கத்தினான்.
“உங்க அம்மா வீட்ல கொட்டிட்டு வந்துட்டு இங்க சவுண்டு விட வேண்டாம்” என்றாள் அவளும் ஆத்திரமாய்.
“சும்மா ஏதாவது உளறாத, பசிக்குது போ, போய் ஏதாவது செய்” என்று அவனும் கத்தினான்.
“என்ன உளருறேன், நீங்க உங்க அம்மா வீட்ல சாப்பிட்டு தான் வந்தீங்க, எனக்கு தெரியும்” என்று அவளும் கத்த,
வடிவுப் பாட்டி உள்ளிருந்தவர் என்னவோ சத்தம் என்று வெளியில் வந்தார்.
அவரின் முன் சண்டையிட விரும்பாமல், “இங்க ஏன் வர்ற, உள்ள போ நீ” என்று அவரிடமும் கத்தினாள் சுந்தரி.
அவர் என்னவோ ஏதோவென்று பதறி நிற்க.. சுந்தரியின் கையில் இருந்த அபி அம்மாவை அப்பாவையும் சுவாரசியமாய் பார்த்திருந்தான்.
“ஆயா இவனை தூக்கிட்டு உள்ள போ” என்று அபியை அவரின் கையில் கொடுத்தாள். இருந்தால் இன்னும் கத்துவாள் என்று புரிந்தவராக கண்ணனை ஒரு கெஞ்சல் பார்வை பார்த்து சென்றார்.
அவர் உள்ளே சென்றதும் “நீ பண்றது சரியில்லை சுந்தரி” என்று கண்ணன் சொல்ல,
“ஆமாம் சரியில்லை, ஆனா இப்படி தான் நான், இது தான் நான்” என்று எப்போதும் போல சொன்னவள், “இது தான் எங்க வீடு, உங்களுக்கு இருக்க முடிஞ்சா இருங்க, இல்லையா கிளம்பிடுங்க உங்க அம்மா வீட்டுக்கு” என்று சொல்லி உள்ளே செல்ல முயல,
அப்படி அவனின் கட்டுப்பாட்டை எல்லாம் உடைத்து கோபம் பொங்க “ம்ம், என்ன போக சொல்வியா” என்று ஆவேசமாய் அவளின் முன் வந்து நின்றவன்,
“நான் கூட நினைச்சேன், நான் ரொம்ப தப்பு பண்ணிட்டேன், உன்னை விட்டு போய், விவாகரத்து எல்லாம் கொடுத்துன்னு. ஆனால் அப்படி இல்லை போல. நானே போகலைன்னாலும் நீ போயிருப்ப”
“ஆனா பாரு உன்னோடன்னு வந்துட்டேன். திரும்ப உன்னையே கல்யாணம் பண்ணிக்கிட்டு, எங்க வீட்டுக்கும் கூப்பிடலை, உனக்கு அங்க பழசை மறக்கறது கஷ்டமா இருக்கும்னு. ஆனா நான் செஞ்சது தப்பு போல”
“ஒன்னு உன்னை திரும்ப கல்யாணம் செஞ்சிருக்க கூடாது, இல்லை செஞ்சிருந்தாலும் நான் இங்க வந்திருக்க கூடாது. அது தான் உனக்கு ரொம்ப ரொம்ப திமிர் ஆகிடுச்சு”
“ஆனா இனி நான் போக முடியாது. அது உனக்கு எப்படியோ எனக்கு ரொம்ப அசிங்கம். அதனால் இந்த போன்னு சொல்ற வார்த்தை எல்லாம் இனி உன் வாய்ல இருந்து வந்துச்சு, தொலைச்சிடுவேன். போடி உள்ள” என்று அப்படி ஒரு சத்தமிட,
உள்ளிருத்த வடிவு பாட்டி என்னவோ ஏதோவென்று அழ ஆரம்பிக்க, அதை பார்த்து பயந்த அபி அழ, சுந்தரி அவனுக்கு பதில் கொடுக்க நேரமின்றி உள்ளே விரைந்தாள்.
கண்ணனுக்கு மனதே விட்டு போயிற்று!
உடை மாற்ற கூட வீட்டின் உள்ளே செல்லாமல் அங்கிருந்த கயிற்று கட்டிலை எடுத்து போட்டு படுத்துக் கொண்டான்.
“அம்மா வீட்ல நல்லா சாப்பிட்டு வந்துட்டு இங்க என்கிட்டே சண்டை இழுக்கறாங்க” என்று நினைத்தவள், அவள் “வேண்டுமென்றால் நீ போய்விடு” என்ற வார்த்தையின் வீரியம் புரியவில்லை. “இவங்க என்னை துரத்தி விட்டாங்க தானே, நான் பேசக் கூட கூடாதா?” என்பதாக தான் எண்ணம்.   
உள்ளே வந்ததும் “ஆயா, சும்மா என்ன இது? அபி பயப்படறான் தானே” என்று அதட்டியவள், மகனை உறங்க வைக்கிறேன் பேர்வழி என்று உள்ளே சென்று விட,
ஏற்கனவே அவர் மீதமிருந்த சாதத்தை உண்டிருக்க அவரும் சென்று படுத்துக் கொண்டார்.
அவளும் எதுவும் செய்து உண்ணவில்லை, மகனை உறங்க வைத்து வெளியில் வந்து பார்க்க இரவு வெகு நேரம் ஆகியிருந்தது.
கதவெல்லாம் திறந்திருக்க, வாயிலில் கட்டிலில் கண்ணன் படுத்திருப்பது தெரிய, “உள்ள வந்து படுங்க” என்றாள்.
“நான் இங்கயே படுத்துக்கறேன், நீ கதவை மூடிட்டு போ” என்று இறுகிய குரலில் சொன்னவன் கவிழ்ந்து படுத்துக் கொள்ள,
“சும்மா சீன போடறான், போடா, உள்ள வாங்கன்னு கெஞ்சணுமோ?” என்று நினைத்தவள் அவளும் கதவை மூடி உள்ளே சென்று விட்டாள்.
பசியில் உறக்கமும் வரவில்லை, காற்றும் பற்றவில்லை, அருகில் இருந்த மாட்டு தொழுவத்தின் வாசனை, அதுவும் அவனுக்கு ஒப்பவில்லை, மீண்டும் வேலை தேடிக் கொண்டு சென்னை சென்று விடுவோமா என்று தோன்றவே ஆரம்பித்து விட்டது.
அதற்குள் கதவு திறக்க, சுந்தரியோ என்று பார்த்தான், வந்தது வடிவு பாட்டி.
அந்த முதிய பெண்மணியின் தோற்றம் மனதினை ஏதோ செய்ய, “என்ன ஆயா?” என்று கரிசனமாய் அவன் கேட்டான்.
“ராசா, புள்ள ஏதாவது தப்பு பண்ணினாலும் பொறுத்துப் போய்யா, ஒத்தையாவே வளர்ந்துட்டா, ஒத்தையா வேற நின்னுட்டா, அது தான் இப்படி” என்றார்.
“ஏன்? உன் புள்ள தான் தப்பு பண்ணுமா, நான் பண்ண மாட்டேனா” என அந்த மூதாட்டிகாய் தப்பை தன் மீது போட,
“எதுவா இருந்தாலும் பொறுத்துப் போய்யா” என்றார் அவர்.
“புருஷன் பொண்டாட்டின்னா கொஞ்சிக்கிட்டே வா இருப்பாங்க, சண்டையெல்லாம் சகஜம் தான்” என்றான் அவன்.
எங்கே அவர்களுக்குள் இன்னும் கொஞ்சலே இல்லை, அப்படி இருந்திருந்தால் சுந்தரிக்கு நம்பிக்கை வந்திருக்குமோ என்னவோ? அதுவும் இல்லை.
“நான் பார்த்துக்கறேன் ஆயா, நீங்க போய் படுங்க” என்று சொல்லி அவரை அனுப்பியவன்.
“இன்னும் என்னை புரிந்து கொள்பவளாய் என் மனைவி அமைந்து இருக்கலாமோ” என்று தோன்றியது.
“இல்லை, இப்படி எல்லாம் நினைக்காதே, இவள் உன் மனைவி, அதை விடு, அபி, அவனை விட்டு நீ போக முடியுமா?” என்று தோன்ற, உறக்கம் வருகிறதோ இல்லை கண்ணை மூடி கொண்டான்.
அங்கே ஒருத்திக்கும் உறக்கமில்லை தான். பயமாய் இருந்தது அவளுக்கு, என்ன ஆகுமோ? மீண்டும் சென்று விடுவானோ? அவனுக்கு என்னை பிடிக்கவேயில்லையோ? ஆனால் ஏன் வந்தான்?
இப்படித்தான் யோசனைகள்.
என்ன மனதினில் ஓடினாலும் அவனுக்கு பிடித்த மாதிரி தான் மாற வேண்டும் என்பது மட்டும் ஓடவேயில்லை.
அப்படி ஓடக் கூடாது என்றில்லை, ஆனால் ஓடவில்லை. அப்படியும் சொல்லலாம், இல்லை முதலில் அதை ஓட வைக்க கண்ணன் நினைத்திருக்க வேண்டும், அவளை மாற்ற நினைக்க கூடாது அப்படியும் சொல்லலாம்.
கண்ணிற்கும் புரியவில்லை, சுந்தரிக்கும் தெரியவில்லை!  

Advertisement