Advertisement

அத்தியாயம் பதினெட்டு :
புடவை எடுத்து முடித்ததும், அம்மாவிற்கு அழைத்தவன் “மா, இங்க எங்க நீங்க எல்லாம் தைக்க குடுப்பீங்க, சுந்தரிக்கு புடவை எடுத்தோம் தைக்க குடுக்கணும்” என்றான்.
“என்ன மாதிரிடா?”
“என்ன மாதிரின்னா?” என்றான் புரியாமல்.
“சாதா ப்ளவுஸ் சா, டிசைன் ப்ளவுஸ் சா, வொர்க் பண்ணனுமா, பேட்ச் வொர்கா” என அவர் அடுக்க..
“மா, ஸ்டாப், ஸ்டாப், எனக்கு அதெல்லாம் தெரியாது,  பட்டு புடவை வாணி வீட்டு ஃபங்ஷன்க்கு கட்ட”
“இன்னும் மூணு நாள் தான் இருக்கு வொர்க் பண்ண முடியாது, பேட்ச் வொர்க் பண்ணலாம், இரு கடை கிடையாது, வீடு தான், இன்னைக்கு அவங்க இருக்காங்களா கேட்டு சொல்றேன்” என்று அவர் ஃபோனை வைக்க,
“எதுக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டம்?” என்றாள்.
“என்ன ஆர்ப்பாட்டம் இதுல, உன்னோட டிரெஸ்ஸிங் ஒரு கேதரிங்ல எனக்கு முக்கியம், யு ஆர் மை வைஃப்”   
அவளுக்கு புரியவில்லை, அதனை முகம் வெளிப்படுத்தியது.
“ஒரு விஷேஷம்னா அதுல நீயும் விஷேஷமா தெரியணும். எப்பவும் போல ஏனோ தானோன்னு வந்து நிக்க கூடாது. யார் அது உனக்கு ப்ளவுஸ் தைக்கறதுன்னு தெரியலை” என்று அவன் கடுப்பாக சொல்ல..
“எங்களுக்கு தெரிஞ்சவங்க, அவங்க வடிவு பாட்டிக்கு முன்ன இருந்து தெச்சு குடுக்கறவங்க,  அதனால நானும் அங்க தான் குடுபேன், வேற எங்கேயும் குடுக்க மாட்டேன்” என்று அவள் முறைப்பாய் சொல்ல.
“அதானே பார்த்தேன், அதுதான் நீ போடறதும் பாட்டிங்க மாதிரி இருக்கு, நீ சின்ன பொண்ணு, இப்படி பசங்க சட்டை மாதிரி தொளபுள போட்டு பத்து தடவை உன்னோட தோள்ல இருக்கிறதை இழுத்து விடற” என்று அவனும் கடுப்பாய் சொல்ல
பலமுறை அவளே நினைத்து இருக்கிறாள், “இது என்ன இவ்வளவு கச்சிதமா போடறாங்க, தைய மிஷினை எடுத்து உடம்போட துணியை வெச்சு தைப்பாங்களோ, நம்மது எத்தனை தடவை சொன்னாலும் இந்தக்கா தைக்கறது இப்படி தானே இருக்கு” என்பதாக,
இப்போது அவன் சொல்லவும், அது அவளுக்கே தோன்றியது தான் என்றாலும், ஒத்துக் கொள்ள மனதின்றி,
“என்னை, என் துணியை, என் வீட்டை, என் ஆளுங்களை, எல்லாம் பிடிக்கலைன்னு தானே விட்டுட்டுப் போனீங்க, இப்போ என்ன வந்து அதை செய், இதை செய், உனக்கு யாரு தைச்சு குடுக்கறான்னு பண்ணாட்டம் பண்ணறீங்க” என்று சுள்ளென்று பேசினாள்
கண்ணனுக்கு அப்படி ஒரு கோபம் பொங்கியது, “உன்னை நான் பண்ணாட்டம் பண்ணாம வேற யாருடி பண்ணுவா”  
அதற்குள் அவனின் அம்மா அழைத்து விட.. எடுத்தவனிடம், அடையாளம் சொன்னார், அவன் ஒரு முறை அங்கே சாருவை அழைத்து சென்றிருக்கின்றான், அது ஞாபகம் வர “சரிம்மா” என்றவன்,
நடக்க ஆரம்பிக்க, அவளும் பின்னே நடந்தாள். வண்டியை எடுத்தவன் அவள் ஏறுவதற்காய் நிறுத்த ஏறியவள் “வீட்டுக்கு போங்க” என்றாள் விறைப்பாய்.
“நான் எங்க போகணும்னு, நான் தான் முடிவு பண்ணனும்” என்றவன், “அப்படியே இறங்கி போயிடலாம் நினைக்காத, தொலைச்சிடுவேன்” என்றவன் வேகமெடுத்து தைப்பவர்களின் வீட்டின் முன் நிறுத்த,
“நான் இறங்க மாட்டேன்” என்றாள்.
“இறங்குடி” என்று வார்த்தைகளை கடித்து துப்பியவன் அவள் இறங்கியதும், “நான் சொல்றதை மட்டும் செய்யற என்றான் அவனுமே அதிகாரமாய்.  
“செய்யலைன்னா?” என்று சண்டை கோழியாய் இவளும் சிலிர்த்து நின்றாள்.
“செய்ய வைப்பேன் பார்க்கிறியா?” என்று அவன் ஆவேசமாய் கிளம்ப அதற்குள் கதவு திறக்க, முகத்தை உடனே மாற்றிக் கொண்டான்.
“விமலாக்கா பையனா?” என்று கேட்கப் பட,  
“ஆம்” என்பது போல தலையசைத்தவனிடம்,
“வாங்க” என்று உள்ளே அழைத்தவர், சுந்தரியை பார்த்தும், “இவங்களுக்கா?” என்றார்.
 “ஆம்” என்று தலையசைத்தான்.
துணி தைப்பவர் என்று சொல்லலாம், ட்ரெஸ் டிசைனர் என்றும் சொல்லலாம், அவரின் கீழே பத்து பேர் வேலை செய்ய, அவரிடம் இருக்கும் கஸ்டமர்கள் எல்லாம் பெரிய ஆட்களாய் இருக்க அவரின் தையல் கூலி சில சமயம் புடவை விலையை விட அதிகம் இருக்கும்.  
அவர் அவளை பார்த்தவர், “இப்போ போட்டிருக்கிற மாதிரி வேண்டாம். இன்னும் கொஞ்சம் கரக்டா அளவு இருக்குற ப்ளவுஸ் கொடுத்தா பரவாயில்லை” என
“அவகிட்ட இருக்குற எல்லாம் இப்படி தான்” என்றான்.
“அட இதென்ன, நீங்க ஃபாரின் எல்லாம் போயிருக்கீங்கன்னு உங்கம்மா எப்பவும் பெருமை பேசுவாங்க, எப்படி இப்படி இவங்க ட்ரெஸ் பண்றாங்க” என்றார் பட்டென்று.
“அட இது ஒரு அதிகப் பிரசங்கி போல” என மனதிற்குள் நினைத்தவன், அவசரமாய் சுந்தரியை பார்க்க,
அவளோ அசராமல் “அவர் தான் ஃபாரின் போனார் நான் போகலை” என்று முறைப்பாய் சொன்னாள்.
“அச்சோ தப்பா எடுத்துக்கிட்டீங்கலா, நான் அப்படி சொல்லலை” என்று அந்த பெண்மணி பேச்சுக்காய் நீட்டி முழக்க,
“தப்பா பேசினா தப்பா தான் எடுப்பாங்க” என்று நிமிர்வாய் சொன்னாள்.
“இவன் எதுவும் சத்தம் போடுவானோ, என்ன இந்த பெண் இப்படி பேசுகிறது” என்று பார்க்க கண்ணன் ஒன்றும் அவளை சொன்னான் இல்லை, ஆனால் அந்த பெண்ணிடம் குறிப்பு காட்டினான்.
“ஃபாரின் வேலையை விட்டுட்டு இப்போ இவளுக்கு உதவியா வந்திருக்கேன்”
“அதென்ன உதவின்னு சொல்றீங்க தம்பி”  
“அட வேலை செய்யறதை தாங்க அப்படி மரியாதையா சொன்னேன்” என்று சிறு சிரிப்போடு சொல்ல,
சுந்தரியின் முகத்தில் சிரிப்பு இல்லை “உன் வேலை என்னவோ அதை பார்” என்ற பார்வையை அந்த தைக்கும் பெண்மணியிடம் கொடுத்தாள். எத்தனை பேரை கட்டி மேய்க்கிறாள்.
பின்பு அந்த பெண்மணி ஒரு வழியாய் அளவு எடுக்க அதை பார்த்தும் பாராமல் பார்த்திருந்தான் கண்ணன்.
நிச்சயம் சுந்தரியை ரசிக்கவில்லை, “இதுவாவது என் பெண்டாட்டிக்கு அழகாய் தைக்குமா” என்ற பார்வை தான்..  
சுந்தரியின் உயரமே வேறு, அவளின் உழைப்பு, அது கொடுக்கும் அழகு, அவளின் வசதி வாய்ப்புகள், ஆனால் அது அவளின் தோற்றத்தில் எங்கும் பிரதிபலிக்காது, பேச்சுக்கள் கூட அவளின் இடத்தினில் தான் வெளியில் பேச மாட்டாள். இன்று அந்த தைக்கும் பெண்மணியிடம் நிமிர்வாய் பேசியதே அவனுக்கு ஆச்சரியம் தான்..
இதோ இந்த பெண்மணி பேசியது போல, “நீங்க ஃபாரின் எல்லாம் போயிட்டு வந்திருக்கீங்க, உங்க மனைவி இப்படி இருக்காங்க” என்ற பேச்சுக்கள் யாரிடமும் இருந்து வருவதை அவன் விரும்பவில்லை.
அதையும் விட “இந்த புள்ள அவனுக்கு பொருத்தமேயில்லை, அப்புறம் எப்படி பொழைப்பான். பணங்காசு இருந்தா போதுமா?” என்ற பேச்சுக்கள் வருவதை அறவே விரும்பவில்லை.
இருவரும் சேர்ந்து போகும் போதும் இந்த பேச்சுக்கள் வர வாய்ப்புக்கள் அதிகம், ஏனென்றால் சுந்தரிக்கு அவளின் உடை மீது தோற்றத்தின் மீது பெரிதாய் அக்கறை இருந்ததில்லை.
இதோ இப்போது கூட அவள் தலையில் வைத்திருக்கும் எண்ணெய் தினமும் எண்ணெய் உபயோகிக்கும் பெண்களே மூன்று முறையாவது உபயோகிப்பர்.
“என் மனைவி” என்ற அன்பு அபரிதமாய் தான் அவனுள்ளே இறங்கியிருக்க, யாரும் அவளை இந்த தோற்ற அக்கறையின்மையால் குறைத்து மதிப்பிடக் கூடாது என்ற எண்ணம் வந்து அமர்ந்து கொண்டது.
இதுவரை இல்லாமல் இப்போது எங்கே திடீரென்று வந்து குதித்தது என்றால், இதுவரை அவளோடு சேர்ந்து வாழ வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே, இப்போது அது நடக்கவும் உடனே இது வந்து குதித்தது.
இதில் அவன் மறந்தது இருவரும் இப்போது தான் சேர்ந்து இருக்கவே ஆரம்பித்து இருக்கிறார்கள்.  ஒருவரை பற்றி ஒருவருக்கு இன்னும் அதிகம் தெரியவே தெரியாது.
“இவன் என் கணவன்” என்ற எண்ணம் சுந்தரியினிடம் இருந்தாலும், இவன் எனக்காக எதுவும் செய்வான் என்னை பார்த்துக் கொள்வான் எனக்காக தான் இதனை சொல்கிறான் என்பது போல எல்லாம் இன்னும் தோன்றவில்லை.
விட்டு சென்ற மனக்காயம் தான் முன் நின்றது.  எல்லோரின் ஏச்சுக்கள், பேச்சுக்கள், விவாகரத்தான மனக்காயம், தனியாய் குழந்தை பெற்றெடுத்த மனக்காயம், இதோ இப்போது திரும்பி வந்த போது குழந்தையை என்னிடமிருந்து பிரித்து சென்றுவிடுவானோ என்ற எண்ணங்கள், இப்படி எல்லாம் மறையாமல் இருக்க..
அவளின் தோற்றதில் மாற்றம் கொண்டு வர நினைக்கும் இந்த துரைகண்ணனின் வேகம் சற்று அதிகமே..
அதுவும் தோற்றத்தை பற்றிய பேச்சு வரவும், “நான் மாறமாட்டேன்” என்ற பிடிவாதம் மனதினில் ஒங்க ஆரம்பித்தது. “இதற்காக தானே விட்டு சென்றான் , நான் இப்படித்தான்” என்ற எப்போதும் உதிக்கும் எண்ணம் தலை தூக்கியது.
சேர்ந்து வசிக்க ஆரம்பித்தாலும் எங்கோ ஒரு அபஸ்வரம் ஒலிக்க ஆரம்பித்தது.
அது சுந்தரியின் பேச்சுக்களில் வடிவம் பெறவும் ஆரம்பித்தது..
“என்ன டிசைன் எப்படி தைக்கட்டும்?”  
சுந்தரி அசையாமல் நிற்கவும், அதற்கு மேல் அங்கே வெளியாட்கள் முன் எதுவும் பேசாமல் “அம்மா பேசுவாங்க, சாருக்கு வாட்ஸ் அப்ல டிசைன் போடுங்க, அவ பார்த்துக்குவா இல்லை அவங்களை கூட்டிட்டு வர்றேன்” என்று முடித்துக் கொண்டு அவன் கிளம்ப,
சுந்தரியும் பதில் பேசாமல் அவனுடன் கிளம்பினாள்.
உண்மையில் அந்த நேரத்தில் அந்த பெண்மணியின் மனதில் தோன்றியது இது தான், “இந்த பையன் எப்படி இருக்கான், இந்த பொண்ணு கொஞ்சமும் பொருத்தமில்லை” என்பதாய் தான்.
பைக் பயணம் மீண்டும் ஒரு அமைதியை தத்தெடுத்தது.
புடவை எடுத்து விட்டு அப்படியே டின்னர் செல்லலாம் என்று நினைத்து தான் வீட்டில் இருந்து கிளம்பினான்.
“வெளில சாப்பிட்டிட்டு போகலாமா?” என
“இல்லை வேண்டாம், வீட்டுக்கு போயிடலாம்” என்றாள்.
“போயி, சமைச்சு, சாப்பிட நேரமாகும். நாம சாப்பிட்டிட்டு பாட்டிக்கும் வாங்கிட்டு போகலாம்”
“இல்லை, வேண்டாம்” என்றாள் பிடிவாதமான குரலில்.
அப்போதே நேரம் எட்டு.. அவனுக்கு பசிக்க வேறு செய்தது!
“எனக்கு பசிக்குது” என்ற வார்த்தை சொல்லியிருந்தாலாவது சுந்தரி யோசித்திருப்பாள், அவன் அதையும் சொல்லவில்லை.
அவனுக்கு கோபம் வந்து விட, வண்டி வேகமெடுத்தது வீட்டை நோக்கி, அவனின் அம்மா வீட்டின் பக்கமாய் செல்லவும்,
“என்னை விட்டுட்டு அபியை போய் கூட்டிட்டு வாங்க”  
“பத்து நிமிஷம், கூட்டிட்டு போய்டலாம்”
“இல்லை, நான் எங்கேயும் வரலை, இல்லைன்னா வண்டியை நிறுத்துங்க, நான் இறங்கி போயிக்கறேன்” என்றாள் பிடிவாதமான குரலில்.
வண்டியை அங்கேயே நிறுத்தியவன் “ஏன் அங்க வந்தா என்ன? பத்து நிமிஷம் வர மாட்டியா?” என்று சுள்ளென்று கேட்க,
“இல்லை, எனக்கு யாரையும் பார்க்கப் பிடிக்கலை, வேண்டாம்னா துரத்தி விடுவீங்க, வேணும்னா வந்து ஒட்டிக்குவீங்க. எனக்கு இதெல்லாம் இன்னும் பழகலை” என்றாள் அவளும் சுள்ளென்று.
அப்படி ஒரு கோபம் கண்ணனுக்கு வந்தது.
நடந்து முடிந்ததை சொல்லிக் காண்பித்து கொண்டேயிருந்தால், அவனும் தான் என்ன செய்வான், ஒரு நாளில் ஒரு முறையாவது சொல்லி விடுவாள்.
கண்ணனும் மறந்தான், அப்படி ஒன்றும் மாதங்கள் கூட இன்னும் ஆகவில்லை, அவர்கள் சேர்ந்து வசிக்க ஆரம்பித்து. சேர்ந்து வேலை செய்ய ஆரம்பித்து மாதங்கள் ஆனாலும் வசிக்க ஆரம்பித்து நாட்கள் தானே!  
“ஆமாம், நாங்க அப்படி தான். இப்போ அதுக்கென்ன?” என்று அவனும் வார்த்தையை விட்டான்.
இறங்கி விடு விடு வென்று நடக்க ஆரம்பித்தாள்.

Advertisement