Advertisement

அத்தியாயம் பதினேழு :
“சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இந்நாள் நல்ல தேதி”
என்று கண்ணனின் கைபேசி ஒலித்தது.
“எதுக்கு இதை போய் ரிங் டோனா வெச்சிட்டு இருக்கீங்க” என்று சுந்தரி குறை பட,
“ஏன்? ஏன் வெச்சா என்ன?. நீ தான் இதுக்கு பதில் பாட்டு பாடவே மாட்டேங்கிறியே” என்று சொல்லிக் கொண்டே அதனை அட்டென்ட் செய்ய, அது ஒரு விளம்பர கால்.  
அதனை கட் செய்தவனை பார்த்து “ம்ம், என்ன பாட?” என்றாள் கிண்டல் குரலில்.  
“என்ன பாடவா?  
என்னையே தந்தேன் உனக்காக,
ஜென்மமே கொண்டேன் அதற்காக
ன்னு பாடணும்” என
“அதெல்லாம் பாட முடியாது”
“ஏண்டி, ஏன்?”
“அதெல்லாம் சொல்ல முடியாது”  
வார்த்தைகள் இப்படி ஓடிக் கொண்டிருக்க.. அது ஒரு இனிய மாலை பொழுது ..  அபராஜிதனை சாரு தூக்கி சென்றிருக்க, வடிவு பாட்டி வீட்டின் முன் புறம் இருக்க.. இவர்கள் இருவரும் நர்சரியில் இருந்தனர்.
ஒரு முக்காலியில் அமர்ந்து கண்ணன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, சுந்தரி செடிகளை பதியன் இட்டுக் கொண்டிருந்தாள் நர்சரிக்காக.
“அந்த தண்ணி எடுங்க, இந்த குருத்து எடுங்க, இந்த கலப்யை எடுங்க” என்று அவள் வேலை ஏவிக் கொண்டிருக்க, அவளுக்கு உதவுகிறேன் பேர்வழி என்று வம்பு செய்து கொண்டிருந்தான்.
முழு நேர உதவியாளன் ஆகிவிட்டான் சுந்தரிக்கு, பின்னே அவ்வளவு வேலைகள் அவளுக்கே, இவன் என்ன தனியாய் செய்வான். பூந்தோட்டம், நர்சரி, தென்னதோப்பு, மாந்தோப்பு.. இப்படி.
இவனின் அப்பாவிற்கோ சித்தப்பாவிற்கோ இவன் உதவி செய்வது ஒன்றுமில்லை. அவர்களே திடமாய் இருக்க. அவர்களின் வேலை அவர்களுக்கு பார்த்துக் கொள்ள முடிந்தது, இடையினில் சந்திரனுக்கு இவன் வேலை வைத்தான் “பா, இதை செய்ங்க , இது ஏன் இப்படி” என்பது போல.  
வேலைகள் சரியாய் இருந்தது. உடல் உழைப்பும் பிடித்திருந்தது. இறங்கி ஆட்களோடு ஆட்களாய் வேலை செய்தான்.
“என்ன இது? இத்தனை காலம் சேர்ந்து வாழலைன்னாலும் நல்ல ஜோடி தான், புருஷனும் பொண்டாட்டியும் ஒரே மாதிரி”
“என்னவோ செய்யட்டும்னு விடறாங்களா. ஆளுக்கு முன் வந்து நின்னுக்கறாங்க சரி, பார்த்துட்டு போகட்டும் விட முடியுதா? நமக்கு முன்ன வேலைல இறங்கிடறாங்க. சரி, செஞ்சிட்டு போகட்டும்னு விட முடியுதா? நமக்கு முன்ன விரசா முடிச்சிட்டு நாம இன்னும் முடிக்கலையான்னு பார்த்துட்டு நிக்கறாங்க! இவங்க வேகம் எல்லாம் நமக்கு வராது!” என்று முனக ஆரம்பித்து இருந்தனர்.
ஆம்! இருவரும் இறங்கி தான் செய்தனர். ஆட்கள் மட்டும் வேலை செய்யட்டும் என்று விடுவதில்லை.      
இருந்தாலும் படித்த படிப்பிற்கு ஏதாவது வேலை செய்ய வேண்டும் என்று ஆன்லைனில் வேலை வேறு தேடிக் கொண்டிருந்தான்.
“சரி. எனக்கு மாசம் எவ்வளவு சம்பளம் கொடுப்ப முதலாளியம்மா” என்று மீண்டும் ஆரம்பிக்க,
“நிஜம்மாவா கேட்கறீங்க?”
“நிஜம்மா கேட்கறேன்”
“உங்க வேலைல என்ன சம்பளம் வாங்கினீங்க?”
“பிடித்தம் போக நாற்பதாயிரம்”
“சரி, அதையே வாங்கிக்கங்க” என்று உடனே சொல்லிவிட,
“ஓஹ், சூப்பர்” என்றவன், “எங்கம்மாக்கு வேலை” என்றான்.
“அய்யே, என்னை கொஞ்சம் யோசிக்க விடுங்க , நேத்து தான் சொன்னீங்க இன்னைக்கு சம்பளம் பேசியாச்சு, அம்மாக்கு யோசிக்க வேண்டாமா?”
பெரிதாய் உதடை சிரிப்பது போல இழுத்து பிடித்தவன் “எனக்கு எல்லாம் உடனே உடனே செய்யணும், தள்ளி போடறது பிடிக்காது”  
“எனக்கு இவ்வளவு ஸ்பீட் எல்லாம் ஆகாது. யோசிச்சு தான் செய்யணும்” என்றவள் பதியன் எல்லாம் போட்டு முடித்திருக்க,
“என்னோட ஸ்பீட் உனக்கு அபி உன் வயிற்றுக்குள்ள வந்ததுல இருந்தே தெரியலையா?” என்றான்.
அவளோ அதுக்கும் மேலே சென்று “அபி வயதுக்குள்ள வந்ததுல தெரியலை, என்னை விட்டுட்டு போனதுல தெரிஞ்சது” என்று பேசினாள். பேச வேண்டும் என்று காரியமாய் பேசாவிட்டாலும், அவ்வப் போது இந்த குத்திக் காட்டும் பேச்சுக்கள் சுந்தரியிடம் இருந்து வந்து விடுகிறது.  
கண்ணனிற்கு மனது எரிச்சலானாலும் தனிமையின் கொடுமை அவளுக்கு கொடுத்த தாக்கம் இது என்று புரிந்தவனாக அமைதியாக இருந்தான்.  
அவள் எழுந்து வந்து அங்கிருந்த பைப்பில் கைகளை கழுவி பின்னே மோட்டார் போட்டு தண்ணீர் பாய்ச்ச ஆரம்பிக்க,
“போடி, பசிக்குது, டீ கொண்டு வா” என்று அந்த வேலையை தனதாக்கினான் கண்ணன்.
“சூப்பரா இருக்கு இன்னும் கொஞ்சம் வேணும்” என்று கேட்டு வாங்கி உண்ணும் படி சுந்தரியின் சமையல் இருக்காது, ஆனால் மோசம் இல்லை, அதிக வகைகளும் தெரியாது.. மெதுவாக சமையல் கற்றுக் கொண்டிருந்தாள்.
கடுமையான உழைப்பாளி, பணம் கொட்டிக் கிடக்கிறது, ஆனால் அனுபவிக்க தெரியாது.
கொஞ்சம் கொஞ்சமாக அவளை அவளின் வாழ்க்கை முறையை மாற்ற கண்ணன் முயன்று கொண்டிருந்தான்.
ஆளுமை அவளிடம் எப்போதும் உண்டு, அவளின் தொழிலில் எதுவும் மாற்றமில்லை.
வேறு வகையில் வீடு, சமையல், அவளின் தோற்றம், இளைப்பாறுதல், இப்படி மாற்றம் கொண்டு வர முயன்று கொண்டிருந்தான்.
எத்தனை வேலை இருந்தாலும் காலை ஆறுமணியில் இருந்து மாலை ஆறு அல்லது ஏழு மணி வரை தான், பின் அவளுக்கான நேரம் தானே!
இதோ சம்பளம் பேசிக் கொண்டவன், அவள் டீ யோடு வர, அவன் முக்காலியில் அமர்ந்து குடிக்க
அவள் மண் தரையில் சம்மணமிட்டு அமர்ந்தாள்.
குடித்துக் கொண்டே “எனக்கு இங்க வசதி பத்தலை” என்றான்.
“அதுக்கு” என்றாள் கேள்வியாக,
“ஒன்னு புதுசா வீடு கட்டுவோம், இல்லை இதை புதுசா மாத்துவோம், எதை செய்யலாம்” என்றான்.
“நான் இப்போதானே சொன்னேன், இந்த வேகம் எனக்காகாது யோசிப்போம்”  
“எனக்கு ராத்திரி இங்க படுத்தா தூக்கம் சரியா வரதில்லை, கட்டில் மெத்தை எல்லாம் வேணும்”  
“ஷ், எனக்கு டைம் வேண்டும்” என்றாள் ஸ்திரமாக.
“எதுக்கு டைம்?” என்று அவன் கேட்க,
“ம்ம்ம், கட்டில் மெத்தை வாங்கறதுக்கு இல்லை, அதை யூஸ் பண்றதுக்கு”  
“அடப்பாவி, நீ அப்பாவின்னு நினைச்சா என்ன பேச்சு பேசற” என்று நிஜமாகவே முறைத்து பார்த்தான் கண்ணன்.  
பின்னே இன்னும் ஒரு முத்தத்திற்கு கூட பஞ்சம் தானே. அதையும் விட அவன் அதனை மனதில் நினைத்து பேசவில்லை. உடல் உழைப்புக்கு அஞ்சாதவன் என்றாலும் சொகுசான உறக்கத்திற்கு பழகி விட்டான். அதற்காக மட்டுமே சொன்னான்.   
நன்றாக பேசினாலும். இலை மறைவு காய் மறைவு தான் இந்த பேச்சுக்கள் இருவரிடமுமே, பிள்ளை பெற்று விட்டாலும் இன்னும் அதனை பேசும் அளவு நெருக்கம் இல்லை.
இப்போது அவள் பேசவுமே அவனுக்கு கோபம் வந்தது.   
அவனாய் சற்று நெருக்கமாய் பேச முயன்றாலும் இப்படி இப்போது அவன் பேசியது போல தான் பேசி வைப்பாள்.
அவனுக்கு அதற்கு மேல் அருகில் நெருங்க முடியாது, சண்டை இழுக்க தோன்றும் மனதை அடக்கி வைப்பான்.
நடந்து விட்டது, இனி என்ன செய்ய முடியும், அவன் அழைத்தான் தானே, டைவர்ஸ் வேண்டாம் என்று சொன்னான் தானே, அவள் தானே கேட்கவில்லை, அதற்கு என்ன செய்வதாம்?
“இன்னும் மூணு நாள்ல வாணி வீட்ல ஒரு விஷேஷம் நாம போகணும் சுந்தரி”  
“போகணுமா?” என இழுத்தாள்.
“கண்டிப்பா போகணும், நான் உன் வீட்டோட வந்துட்டேன், உன்னை விட்ட நாள்ல இருந்து அப்பா அம்மா வீட்டை யாரையும் கவனிக்கலை, சித்தப்பா சித்தியையும் நான் தான் பார்க்கணும், நான் தான் அங்கே ஒரே பையன், அப்போ எனக்கு பொறுப்புகள் அதிகம்”
“என்னடா அப்படியே பொண்டாட்டி வீட்டோட போயிட்டான்னு சொந்தம் பேசக் கூடாது, இதுவரை என்னவோ பேசியிருக்கட்டும், இனி பேசக் கூடாது, நம்ம வீட்டு சார்பா நாமளும் போகணும்” என்றான்.
“ம்ம்” என்றாள் சுரத்தே இல்லாமல்.
“ஏன் வரமாட்ட?”
“அது கல்யாணத்துக்கு முன்னமே அப்படி ஒன்னும் பெருசா யார் வீட்டுக்கும் கல்யாணத்துக்கு எல்லாம் போனதில்லை. கல்யாணத்துக்கு அப்புறமும் நீங்க விட்டுட்டு போயிட்டீங்க போனதில்லை, அதனால என்னவோ எல்லோரையும் பார்க்கறப்போ ஒரு மாதிரி இருக்கு” என்றான் மனதை மறைக்காமல்.
“என்ன என்னவோ மாதிரி இருக்கு? வேலைக்கு எத்தனை பேரை கட்டி மேய்க்கற, அப்படி என்ன யாரோடையும் பேச பழக முடியாம போயிடும், நான் எல்லாம் நிறைய பேச மாட்டேன், நீதான் பேசணும்!” என்றான்.
“பார்ப்போம்” என்றவளிடம்.
“என்ன பார்க்கறதா?… என்னை மட்டும் தான் பார்க்கணும் வேற எல்லாம் பார்க்க கூடாது” என்றான்.
சுந்தரி அவன் சொன்னதற்கு “அப்படியா” என்ற பாவனையோடு அவனை பார்த்தாள்,  
ஆம்! திருமணத்தின் போது இருந்த பையனின் தோற்றம் போய் இப்போது ஆண்மகனின் தோற்றத்திற்கு மாறிக் கொண்டிருந்தான்..
அதுவும் ஒரு பக்கா விவசாயி தோற்றத்தில் தான் அப்போது இருந்தான். அவன் ஒரு சாஃப்ட்வேர் கம்பனியில் இருந்தான், வெளிநாடு எல்லாம் சென்று வந்திருக்கின்றான் என்றால் நம்புவது கடினம்.
ஒரு வெள்ளை வேஷ்டி, அதுவும் இறக்கி விடாமல் மடித்துக் கட்டி, மேலே கை வைத்த பனியன் மட்டுமே சட்டை இல்லை, அதற்கு மேலே ஒரு சிகப்பு துண்டு கழுத்தை சுற்றி.
உடை இப்படி இருக்க. முகம் முறுக்கு மீசையை கொண்டிருக்க. அவ்வபோது அவனின் கைகள் தானாக அதை முறுக்கி கொண்டது.
இதையெல்லாம் மீறி ஒரு மேல் தட்டு தோற்றம் , நடை உடை பாவனையில் கம்பீரம், பேச்சுக்கள் ஆட்களுக்கு தகுந்த மாதிரி, வேலை செய்பவர்களிடம் அவர்களின் மொழி பேசுவான், நர்சரியில் வீட்டின் அழகுக்காக செடி வாங்குபவர்களிடம் அவர்களின் மொழி பேசுவான். கிராமமும் நகரமும் தனி தனியாக வரும்..
இதோ இன்று காலை யாரோ வடநாட்டவர் போகும் வழியில் செடி பார்த்து விட்டு வாங்க நிற்க, அவர்களிடம் இதோ இந்த உடையில் அவன் ஆங்கிலம் பேச, அவர்கள் ஆச்சர்யமாய் பார்த்து, பின் “உங்களுக்கு இதில் என்ன லாபம் வரும்” என்று கூட கேட்க,
சிரித்து அவர்களிடம் செடி விற்றவன் அதன் பிறகு தான் “என்னுடைய சாஃப்ட்வேர் வேலையை விட அதிகம்” என்று ஒரு பேச்சாக சொல்லியிருக்க..
அதனை அவளிடம் அவர்கள் சென்ற பிறகு விளையாட்டாய் சொல்லியிருக்க..
இதோ கண்ணன் சம்பளம் எனவுமே. “இந்தா, பிடி, வைத்துக் கொள்” என்று கொடுத்து விட்டாள். உண்மையில் விவாகரத்தை கூட சுந்தரி அப்படி தான் கொடுத்தாள்.
ஆனால் கணவன் பேசும் ஆங்கிலத்தை ஆ வென வாய் பிளந்து தான் பார்த்து நின்றாள்.   
இப்போது அவன் என்னை தான் பார்க்கணும் வேற பார்க்கக் கூடாது என சொல்ல
இவள் உண்மையாகவே அவனை பார்த்துக் கொண்டிருந்தாள். அப்படியும் சொல்லலாம் ரசித்துக் கொண்டிருந்தால் என்றும் சொல்லலாம். சைட் அடித்துக் கொண்டிருந்தாள் இப்படியும் சொல்லலாம்.
இப்படியாக அவனை பார்க்க, கூடவே தன்னுடைய தோற்றத்தையும் மனம் ஒப்பீடு செய்தது. அப்படி ஒன்றும் அவளுக்கு தோற்றப் பொலிவு வந்து விடவில்லை. வெயிலிலும் மழையிலும் காயும் ஒரு விவசாயி அவளுமே.
அப்படி ஒன்றும் உணவை பற்றிய பெரிய அக்கறை இருந்தில்லை. உடையும் அவளுக்கு அவளுக்காய் பொருத்தமாய் அணிய வரவில்லை. ஆள் பாதி ஆடை பாதி தானே!
இருவரின் தோற்றப் பொருத்தத்தை ஆராய்ந்ததால், “என்னை பிடிக்கலைன்னு விட்டுட்டு போனீங்க, அப்புறம் ஏன் வந்தீங்க?” என்று திடீரென்று அவள் கேள்வி கேட்க,
“பா, நம்ம பொண்டாட்டி நம்மை சைட் அடிச்சிட்டு இருக்கா” என்று நினைத்துக் கொண்டிருந்தவனுக்கு இந்த கேள்வி வர அதிர்ச்சியானவன்,
“இப்போ எதுக்கு இந்த கேள்வி?” என்று வாய் விட்டே கேட்டான்.
“தெரியலை, கேட்கனும்னு தோணிச்சு” என பாவனையாக சொல்ல,
சற்று கடுப்பானவன் “எனக்கு இந்த கேள்விக்கு பதில் தெரியலை, தெரிஞ்சாலும் சொல்லமாட்டேன்” என்றான்.
அவனுக்கு சற்று கோபம் வந்து விட்டது என்று புரிந்து பேச்சை மாற்ற, “நாம எத்தனை மணிக்கு போற மாதிரி இருக்கும்”  
“அதை அப்புறம் சொல்றேன்” என்றவன், “வா நீ என்ன புடவை கட்டப் போறேன்னு காட்டு” என்றான்.
எழுந்து வந்தவள் காண்பித்த புடவைகள் எல்லாம் வாணியின் திருமணத்தின் போது அவள் கட்டியவையாக இருக்க, அதுவும் புடவை கட்டும் அவளினது இன்னும் மாற வேண்டும். முக்கியமாய் அவளின் ப்ளௌஸ் கட்டாயம் மாற வேண்டும்.
“யார் உனக்கு தெச்சி குடுக்கறா” என்று கேட்க வாய் வரை வரும். ஏனென்றால் அது பெண்கள் அணிவது போல அவனுக்கு தோன்றாது. ஆண்கள் அணியும் சட்டை போல தான் அவனுக்கு தெரியும். கழுத்தும் மேலே ஏறியிருக்கும் இடுப்பும் தெரியவே தெரியாது. உடலும் கையும் சற்று லூசாக இருக்கும். கச்சிதமாக இருக்காது. என்னவோ கிழவிகள் அணிவது போல தோன்றும்.        
ஆனால் எதுவும் சரியாகாத நிலையில் அவளின் உடையை விமர்சித்து அது ஒரு பிரச்சனையாக அவன் விரும்பாததால் இதுவரை சொன்னதில்லை. புடவையின் கலரை மட்டும் சொல்வான். இன்னும் பளிச்சென்று எடுக்கலாம் என்று.      
“என்ன திரும்ப அதையே கட்டுவியா நீ, அதெல்லாம் கூடாது, வா புதுசு எடுக்கலாம்”  
“ஆத்தாடி ஆத்தா, இதென்னடிம்மா பொண்ணுங்க கேட்டா புருஷனுங்க சலிப்பாங்கன்னு பார்த்தா, நீங்க மாத்தி இருக்கீங்க” என்று தாவாங்கட்டையில் கை வைக்க,
“நாம உடுத்துற உடையும் தோற்றமும் ரொம்ப முக்கியம்” என கிளாஸ் எடுத்தவன், அவளை தயாராக சொல்லி அவனும் உடை மாற்றி வர,
அவள் வேறு புடவைக்கு மாறியிருக்க, அதுவும் சற்று ஏறக் கட்டி இருக்க, அதுவும் கணுக்காலில் நின்றது.  
“எத்தனை தடவை சொல்றது புடவையை இறக்கி கட்டு, இப்போ நீ காட்டுக்கு வேலை செய்ய போகலை கடைக்கு போற, என் கூட வெளில வரும் போது இனி புடவை தூக்கி கட்டின, அப்புறம் புடவையை உருவிட்டு என் முன்ன நிக்க விடுவேன்” என்றான் மிரட்டலாக.
அவன் என்னாவோ கோபமாக தான் சொன்னான், உள்ளே சென்று புடவையை பாதம் மறைய இறக்கி கட்டியவளுக்கு, திரும்பவும் “அப்படியே போனா சொன்ன மாதிரி நிக்க வைப்பானோ” என்று தோன்ற முகத்தில் அவளையும் மீறிய புன்னகை, வெட்கத்தின் சாயல்.
அகத்தின் எண்ணம் வண்ணமாய் முகத்தில் பிரதிபலிக்க, ஒரு மென்னகையோடு அவள் வர, “என்ன முகத்துல பல்ப் எரியுது?” என்றவனிடம்,
“நீங்க திட்டுணீங்கல்ல அது தான்” என்று கூற,
“நான் கொஞ்ச வந்தா இவ முகத்தை காட்டுறா, நான் திட்டினா சிரிக்கறா, என்ன டிசைண்டா இவ” என்று பார்த்தவனிடம்,
“இப்போவே ஆறு மணி, லேட் ஆனா அபி தேடுவான்”  
பைக்கை எடுத்து நிறுத்த பின்னால் அமர்ந்து கொண்டே, “அபியையும் கூட்டிட்டு போவோமா?” என அவள் சொல்ல,
“இல்லை, வேண்டாம், படுத்துவான். நான் அம்மா கிட்ட சொல்லிட்டேன், நைட் தான் வந்து கூட்டிப்போம்னு, இல்லை சாரு கொண்டு வந்து விடுவா அப்பாவோட” என்றான்.
“ம்ம், சரி” என்றதும் ஒரு புகழ் பெற்ற கடையின் முன் நிற்க, அங்கே அவள் தேர்ந்தெடுத்தது அத்தனையும் தள்ளி வைத்தவன், எழுமிச்சை மஞ்சளில் ஒரு புடவை எடுத்தான்.
“இது அடிக்கும்” என்றவளிடம்.
“விஷேஷதுக்கு அடிக்கிற கலர்ல தான் கட்டணும், சும்மா கண்ணை உறுத்தாத கலர்ல கட்டுவியா” என்றவனை “முடியாது” என்பது போல பார்த்து நின்றாள்.  
“நான் சொல்றதை தான் கட்டணும், கொஞ்சமாவது உன்னை மாத்திக்கோ”
“நான் இப்படி தான் இருப்பேன்” என்று  பிடிவாதத்துடன் சொல்ல,
“ப்ச், இது கடை வாயாடாதே” என்று முணுமுணுத்தான்.
வாயை மூடிக் கொண்டாலும் “இவனுக்கு என் தோற்றம் பிடிக்கவில்லை” என்ற எண்ணம் எப்போதும் இருந்தது இப்போதும் முன் நின்றது.  
“நான் இப்படித் தான், இது தான் நான்” என்ற பிடிவாதம் எப்போதும் சுந்தரியிடம் உண்டு, அது தான் அவளை கண்ணன் விட்டு சென்ற போது சிதைய  விடாமல் காத்தது.
இப்போதும் அந்த பிடிவாதம் முன் நின்றது.
கண்ணனுக்கு அவளிடம் நிச்சயம் குறை எதுவும் கிடையாது, முன்பிருந்ததை போல அவளின் தோற்றமும் பிடிக்காமல் இல்லை, ஆனால் இன்னும் அவள் சிறப்பாய் இருக்க வேண்டும் என்பது அவனின் எண்ணம்!
ஆனால் அதனை கண்ணன் வார்த்தைகளில் எல்லாம் கொண்டு வரவில்லை, அதனால் சுந்தரிக்கு அது புரியவில்லை.      
          
     
                                
    
             
                

Advertisement