Advertisement

அத்தியாயம் பன்னிரண்டு:

இன்னும் சுந்தரியால் நம்ப முடியவில்லை நடப்பதை! வந்ததில் இருந்து என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டு கேட்டுச் செய்தான், சின்ன ராசு ஊரில் இல்லாததால் பூவிற்கு வேறு யாரிடம் சொல்ல எனக் கேட்க,

அவள் தொலைபேசியில் வேறு ஒருவரை அழைத்து சொன்னாள், கூடவே “பூ எல்லாம் எடை போடணும், எவ்வளவுன்னு அக்காங்க பண்ணுவாங்க, நீங்க கணக்கு மட்டும் வெச்சிக்கங்க” என, அவன் வேலையைப் பார்க்க கிளம்ப, அசதியில் சுந்தரி உறங்கிவிட்டாள்.

அந்த வேலையை செய்து முடித்தவன், பின்பு அவர்களிடமே  பாலை கறக்க கேட்க, ஒருவர் பாலை கறந்து அவன் சொன்ன வேலையைச் செய்தார்.   

பாலை வேறு ஒருவர் வந்து எடுத்துப் போனார், அவரே இது வீட்டிற்கு எனக் கொடுக்க, அதனை எடுத்துக் கொண்டு சமையலறை போனான். அப்போதுதான் வயிறு பசியே உணர்ந்தது.

சமையல் அறையில் எல்லாம் போட்டது போட்டபடி இருக்க, அதனை சுத்தம் செய்ய ஆரம்பித்தான், சுத்தம் செய்து முடித்தவன் பாலை காய்ச்சிக் கொண்டே “அம்மா பசிக்குது” என அம்மாவிற்கு அழைக்க,

உடனே பத்து நிமிடத்தில் உணவை தூக்கிக் கொண்டு சந்திரனுடன் வந்து விட்டார், கூடவே அபியும், அப்பாவை பார்த்ததும் மகன் உடனே தாவ, அவனை அணைத்துக் கொண்டான்.

“சாப்பாடு எடுத்து வைக்கட்டுமா?” எனக் கண்ணனிடம் கேட்க, “வேண்டாம்மா, சுந்தரி எழுந்துக்கட்டும் சாப்பிட்டுக்கிறோம்!” என அவர் மேலே எதுவும் பேசவில்லை. 

மகன் எடுத்துப் போட்ட பாத்திரங்கள் எல்லாம் இருக்க, விமலா அதனை கழுவ ஆரம்பித்தார். பேச்சுக் குரல் கேட்கவும் சுந்தரி உறக்கம் களைய கண்கள் திறந்தாள். அங்கே சந்திரனையும் விமலாவையும் பார்த்தவள் உடனே கண்கள் மூடிக் கொள்ள, அவள் விழித்ததையும் உடனே கண் மூடியதையும் கண்ணன் பார்த்து தான் இருந்தான்.

அவனின் ஒரு பார்வை அவள் மேலேயே இருந்தது தானே! அபி அவளிடம் போகப் போக, “அம்மா தூங்கறாங்க!” என அவனிடம் சொல்லி, தன் அருகிலேயே வைத்துக் கொண்டான்.

விமலா அவனுக்கு டீ வைத்து வர, மூவருமாக குடித்தார்கள். பின் “நாங்க கிளம்பறோம், எழுந்ததும் சாப்பிட்டுக்கோ, சுந்தரிக்கு டீ இருக்கு, சூடு பண்ணிக் கொடுத்துடு!” என்றார். அபியை தூக்கிக் கிளம்ப, “அவன் இருக்கட்டுமேம்மா!” என்றான்  

“அழுதா குடுத்தனுப்பரேன், அப்பா வீட்ல தான் இருக்கார், சாருவும் காலேஜ்ல இருந்து வந்துடுவா!” என, “ம்ம்” என தலையசைக்க, அவர்கள் கிளம்பினர். அவர்கள் சென்றது இவளிடம் வந்தவன் “எழுந்துரு சுந்தரி சாப்பிடலாம்” என,

அவளிடம் அசைவில்லை, “நீ முழிச்சிட்டு தான் இருக்க, எனக்குத் தெரியும்!” என,

மெதுவாக கண் திறந்தவளிடம் அவள் எழ கைகொடுக்க, “நானே எழுந்துக்குவேன்” என எழுந்து அமர்ந்தாள். முகமும் சோர்வைக் காட்ட “வலிக்குதா” என,

“ம்ம்” என்றவளின் கண்களில் கண்ணீர், “சாப்பிடு மாத்திரை குடுத்திருக்காங்க” என்றான்.

சாப்பாடு போட்டு பிசைந்து அதில் ஒரு ஸ்பூன் போட்டு கொடுத்தான். மறுக்காமல் வாங்கி உண்டாள், திரும்ப மாத்திரை எடுத்துக் கொடுத்தான், சாப்பிட்டவள், அப்போது தான் ஞாபகம் வந்தவளாக “பால் கறக்கணும், தண்ணி காட்டணும்” என,

“அதெல்லாம் முடிஞ்சாச்சு” என்றவனிடம், “நீங்களா பண்ணுனீங்க” என விழிவிரிக்க,

“ஹ, ஹ” என வாய் விட்டு சிரித்தவன், “இன்னும் நான் அந்த அளவு தேறலை, அது எனக்கு கொஞ்சம் கஷ்டமும் கூட, அதனால் ஆள் வந்தாங்க தானே, அவங்க கிட்ட சொன்னேன் செஞ்சிட்டாங்க!” என்றான்.

“இன்னும் என்ன என்ன பண்ணனும்”, “நர்சரில இருக்குற செடிக்கு தண்ணி ஊத்தணும்” என, “எப்படி, எவ்வளவு” எனக் கேட்டு செய்யப் போக.. “நாளைக்கு சிந்தா வந்துடுவா, உங்களுக்கு சிரமம் இருக்காது” என,

“நான் வேலைல ஜாயின் பண்ணி நாலு மணிநேரம் ஆச்சு, யு நோ!” என்றவன் சாப்பிட அமர, “நீங்க இன்னும் சாப்பிடலையா?” என்றவள் அவன் உணவு உண்ணும் வரை பேசவில்லை!

பின் எப்படி செய்ய வேண்டும் எனக் கேட்டு சென்று அதனை செய்து வந்தான். அந்த செடிகளை மொபைலில் போட்டோ எடுத்து வந்து அவளிடம் காட்டிப் பார்த்துக்கோ” என்றான். அதனைப் பார்க்கும் ஆர்வமில்லாமல் அவனைப் பார்க்க, “என்ன” என, “எனக்கு போகணும், காலையில இருந்து போகலை” என,

“எங்க போகணும்” என்றான், அவள் தலையில் அடித்துக் கொள்ளவும், “ஓஹ், பாத்ரூம் போகணுமா” என,

“எதுக்கு கத்துறீங்க?” என்றவளிடம், “யாரு இருக்கா இங்கே” என, “யாருமில்லைன்னா கத்துவீங்களா” என.. அவளைத் தூக்க முயல, “நான், நான் போய்க்குவேன்” என்றாள். “யாரையாவது ஹெல்ப்க்கு வர சொல்லட்டும்மா, அம்மா இல்லைன்னா, சாரு” என,

“அய்யய்யோ, வேண்டாம், வேண்டாம், நீங்களே தூக்கிப்  போய் விடுங்க, நான் சுவர் பிடிச்சு போய்க்கறேன்!” என பதற,

“சரி” என்பது போல அவளைத் தூக்கி, பாத்ரூம் உள் சென்று விட, சிறிது நேரத்தில் கதவை தட்ட, திரும்பவும் அவளைத் தூக்கி படுக்கையில் விட்டவன், ஒரு பக்கெட்டில் தண்ணீர் எடுத்து வந்து அவளை அங்கயே முகம் கழுவ வைத்து, “இந்த புடவை மாத்திக்கோ” என்றவன், “நைட்டி எங்கே இருக்கு” என,

அவனின் கரிசனத்தில் அழுகை வரும் போல இருந்தது. “என்கிட்டே நைட்டி இல்லை” என்றாள், “என்ன?” என்றான் அதிசயமாய், “ஆயாவுக்குப் பிடிக்காது” என,

“இப்போ போட்டுக்கோ, தப்பில்லை!” என்றவன் சாருவிற்கு அழைத்து அவளின் புது நைட்டி எடுத்து வர சொல்ல,

மூன்று தங்கைகளும் அண்ணியைப் பார்க்க வர, சுந்தரி பதட்டமாகி விட்டாள். திடீரென்று கணவன், உறவுகள் என வரிசைக் கட்ட, என்னவோ ஒரு பதட்டம் அவளுள். அவர்கள் இரவு உணவையும் எடுத்து தான் வந்தனர்.

“அபி எங்கே?” என, அவன் அப்பா அம்மா கூட கோவிலுக்கு போயிருக்கான் என்றனர். சிறிது நேரம் இருந்து அவர்கள் செல்ல, பின்பு மகனைத் தூக்கி கொண்டு பெற்றவர்கள் வர, அபியை விட்டு, பாட்டியை போய் பார்த்து வந்து அழைத்துக் கொள்கிறோம் என்றனர்.

மகனை வைத்துக் கொண்டு மனைவியுடன் அந்த வீட்டினில் இருப்பது அப்படி ஒரு மன நிம்மைதியைக் கொடுத்தது. சுந்தரியின் முகத்தை அடிக்கடி பார்க்க, அவள் எதுவும் பேசுவதாகவே காணோம். முகத்தினில் வலியின் சாயலும். கட்டையும் மீறி கசிவு இருக்க, அமைதியாய் பார்த்திருந்தான் அவளை.

பின்பு பாட்டியை பார்த்து வந்தனர், “நல்லா இருக்காங்க, நாளைக்கு அனுப்பிடுவாங்க” என அபியை உடன் அழைத்து சென்றனர். “நைட் யாரையாவது நான் இருக்க சொல்லிக்குவேன், நீங்க போங்க” என கண்ணிடம் சொல்ல, “நீயா உன் வேலையை செய்யற வரைக்கும் நான் உன்னை விட்டு நகர மாட்டேன்” என்றான்.

“அவ்வளவு பரிதாபம் எனக்குத் தேவையில்லை, என்னை என்னால பார்த்துக்க முடியும்” என்றாள். “பரிதாபமா? என்ன இது? என்னை பார்த்தா பரிதாபப்படறவன் மாதிரியோ, அதுக்கு இத்தனை வேலை செய்யறவன் மாதிரியோ தோணுதா, நான் கெட்டவன் சுந்தரி?” என,

“அப்போ என்ன இது” என, “தெரியலை” என தோள் குலுக்கியவனிடம்.. “காதல் அது இதுன்னு உளறிடாதீங்க, நான் நம்ப மாட்டேன்!” என,

“நிச்சயமா உளற மாட்டேன், ஏன்னா எனக்கே அது தெரியலை. ஆனா உன்மேல மனைவின்ற உரிமை இருக்கு, என் பையனோட அம்மான்ற பாசமிருக்கு, எப்படி தனியா எல்லாம் செய்யறன்ற பிரமிப்பு இருக்கு. இத்தனை வேலை, வாவ் கேர்ள் தான் நீ போ, எல்லாம் மீறி ஒரு அட்ராக்ஷன் இருக்கு”

“உன் தலை கலைஞ்சு நீ நிக்கும் போது அதை ஒதுங்க செய்யனும்னு இருக்கு, உனக்கு சேலை கட்ட சொல்லிக் கொடுக்கணும் போல இருக்கு, நீ மேல தூக்கி கட்டியிருக்குற புடவை இறக்கி விட கை பரபரங்குது. உன் கலர் மங்குன சேலையெல்லாம் தூக்கி கடாசிட்டு, நல்லா உனக்கு பொருந்துற மாதிரி எடுத்துக் குடுக்க ஆசையாய் இருக்கு. மொத்ததுல உன்னை அழகா பார்க்கணும்னு ஆசையாய் இருக்கு” என சொல்லிக் கொண்டே அருகில் வந்தவன் அவளின் முகத்தினில் இருந்த பருவைத் தடவிக் கொடுத்தான்.

அவன் பேசிய பேச்சிலேயே ஆ எனப் பார்த்திருந்தாள். அருகில் வரவும், “என்ன செய்யப் போகிறான்” என அவளின் இதயம் திக் திக் என அடிக்க,

“முதல்ல இதைப் பார்த்தா எனக்கு பிடிக்கவே பிடிக்காது, ஆனா இப்போ உனக்கு இது ரொம்ப அழகா இருக்குன்னு தோணுது!” என மென்மையாய் வருட உடல் சிலிர்த்தது. அதை மறைத்தவளாய், “என்ன சொல்ல வர்றிங்க, நான் நல்லாவே இல்லைன்னா” என

வருடலை நிறுத்தவே இல்லை “உன் முகத்தை நீ கண்ணாடில பார்த்தது இல்லையா, நிறம் கொஞ்சம் குறைவு ஆனா உன் முகம் ரொம்ப அழகு” என்றான் ரசித்துப் பார்த்து. அவனின் கண்களில் இருந்த ரசனை இதுவரை சுந்தரி பார்த்து இராதது.

“நீங்க பேசறது என்னால நம்ப முடியலை” என, “நம்பு சுந்தரி, உண்மையை ஒரு தரம் சொல்லிடறேன்! எனக்கு உன்னை பிடிக்கவே பிடிக்காது! உங்கப்பாவை பிடிக்காது! உங்க வீட்டை பிடிக்காது! எதையுமே பிடிக்காது, கல்யாணம் நடந்தப்போ! ஆனாலும் உன்னை விட்டுடணும், விவாகரத்து பண்ணனும்னு எல்லாம் நான் நினைக்கலை!”

“உன்னை பிடிச்சிடணும்ன்னு தான் உன்கூட என் வாழ்க்கையை ஆரம்பிச்சேன்! ஆனா அம்மாக்கிட்ட பிடிக்கலை, பிடிக்கலை, சொன்னதுனால பரீட்சை முடியறவரை, உன்னை உங்கப்பா வீட்டுக்கு அனுப்பினாங்க. அப்புறம் திடீர்ன்னு வந்த, ஆம்பளையான்னு கேட்கறாங்கன்னு அம்மா கலாட்டா பண்ணிட்டாங்க! ரொம்ப அசிங்கா ஃபீல் பண்ணினேன்!  அதைவிட பிடிக்கலைன்னு சொல்லி இப்படிப் பண்ணிட்டியேன்னு கேட்க, ரொம்ப ஒரு மாதிரி ஆகிடுச்சு  எனக்கு”

“நீ வேண்டாம்னு முடிவு பண்ணி, எல்லாம் பண்ணினேன்! கடைசில உன்னை பார்த்த போது உன்னை விடறது தப்பு மாதிரி தோணி பேசினேன், நீ ஒதுக்கலை! அப்புறம் வேலைல வெளிநாடு போக ஒரு வாய்ப்பு வந்துச்சு, போயிட்டேன்! ஆனாலும் எப்பவும் உன்னை விட்டுட்டு வந்துட்டேன்ற நினைப்பு மனசுல ஓடிட்டே இருக்கும். அதான் இங்க வந்தவுடனே பார்க்கணும் போல இருந்துச்சு!”

“சாரு ஒரு நாள் பேசவும் முடிவு செஞ்சு வந்துட்டேன், அப்புறம் உன்னைப் பார்த்தேன், அபியைப் பார்த்தேன், திரும்பத் திரும்ப பார்த்தேன், இப்போ வேலையை விட்டுட்டு வந்துட்டேன்! அதுதான் ரெண்டு மாசமா வரலை, ப்ராஜக்ட் முடிச்சு ரிலீவ் ஆகிட்டேன். பொட்டி படுக்கையெல்லாம் கட்டி வந்துட்டேன்! உன்கிட்ட வேலைக்கு சேர்ந்துட்டேன்!” என்றான் பாவனையாக.

அவன் பேசியதில், பேசிய பாவனையில், அவனின் இதுவரை நிற்காத வருடலில், மனமும் உடலும் எங்கோ பறக்க விழைந்தன, கட்டாயபடுத்தி நிலை நிறுத்தினாள்! அவனின் கையை நாசூக்காக விலக்கி, “ஏன் என்கிட்டே வேலைக்கு சேரணும்” என, 

“எனக்கு உன்னை ரொம்பப் பிடிச்சு இருக்கு, எப்படி விடாம வேலை செய்யறேன்னு, அதை கத்துக்க தான்! கூடவே எனக்கு சம்பளம் கொடுக்கணுல, எங்கப்பாக் கிட்ட எல்லாம் பணம் வாங்க முடியாது! நீ தான் நிறைய வேலை செய்யற, பணம் வருது, உன்னால எனக்கு கொடுக்க முடியும் தானே!” என,

“இவன் நிஜம் பேசுகிறானா? பொய் பேசுகிறானா?” என பார்க்க. அந்த பார்வையை உணர்ந்தவன் “நிஜம்மா” என்றான்.

“நீங்க இஞ்சினியர்” என்றவளிடம், “அப்புறம் எப்படி உங்கப்பா கல்யாணம் பண்ணி வெச்சார்!” என,

“உங்கப்பா நீங்க இங்கே தான் இருப்பீங்க, சும்மா ஒரு டிகிரிக்கு படிக்கறீங்கன்னு தான் சொன்னார்!”

“உண்மையா அதுதான் என் எண்ணம் முடிக்கற வரை! எனக்கு வேலைக்கு போற எண்ணமே கிடையாது. ஏன் கேம்பஸ் இன்டர்வியு கூடப் போனதில்லை, திடீர்ன்னு தான் போனேன்!” என,

“என்னை பிடிக்காம” என எடுத்துக் கொடுத்தாள். “இல்லைன்னு எல்லாம் சொல்ல மாட்டேன், ஆனா இப்போ அப்படிக் கிடையாது!” என்றான்.

“ஆனா எனக்கு உங்களை பிடிக்கலை, இப்படி விட்டுட்டு போன உங்களை பிடிக்கலை! நீங்க போய்டுங்க!” என்றாள் ஸ்திரமான குரலில்.

“ஏன்? ஏன் போகணும்?” என, “இன்னொரு ஏமாற்றத்தை எல்லாம் என்னால தாங்க முடியாது, ஒரு தரம் இதெல்லாம் என்னை ஒன்னுமே பண்ணலைன்னு காட்டிக்கிட்டேன். ஆனா எப்பவும் என்னால முடியாது, செத்துப் போய்டுவேன்! அப்புறம் அபியை யாரு பார்த்துக்குவா!” என குரல் கலங்க சொல்ல,

“லூசு மாதிரி பேசாதே, அப்படி எல்லாம் ஆகாது!” என்றவனிடம், “இல்லை, நீங்க எனக்கு வேண்டாம்!” என்றாள் திரும்ப.

“ஓகே! சரி வேண்டாம்! வேலை மட்டும் கொடு!” என்றான் அவனும் திரும்ப, “அதெல்லாம் குடுக்க முடியாது!” என,

“அதெல்லாம் குடுத்து தான் ஆகணும்!” என, வெகுநேரம் மாற்றி மாற்றி இதையே பேசி இருந்தனர்.

சிந்தா அப்போது அழைத்தவள் “பாட்டி எப்படி இருக்காங்க” என, “ஆயா நல்லா இருக்காங்கலாம் சிந்தா, சொன்னாங்க!” என,

“என்ன? சொன்னாங்களா! நீ எங்கே இருக்க?”.. “நான் வீட்ல, கால்ல கட்டு போட்டதுனால நடக்கக் கூடாதுன்னு வீட்டுக்கு வந்துட்டேன்!” என, “ஏன், ஏன் கட்டு?”.. “கால்ல வெந்நீர் கொட்டிடுச்சு” எனவும் பதறி, உடனே போனை வைத்து வீட்டிற்கு வந்து விட்டாள்.

வந்த பிறகு தான் அங்கே கண்ணன் இருப்பதை பார்த்து “நீங்க இருக்கீங்களா?” என ஆசுவாசப்பட்டு, சுந்தரிக்கு உடை மாற்ற உதவி செய்து “நான் கிளம்பறேன்” என,

“நீ இரு! நான் அவரை வீட்டுக்கு போக சொல்றேன்” என்றவளிடம், “எந்திருச்சு நடக்க முடியாதபடி பண்ணிடுவேன், ஒழுங்கா வீடுக்காரரோட பொழைக்கற வழியைப் பாரு, நான் காலையில வர்றேன்!” எனச் சொல்லி சிந்தா போக,

மனதிற்கு என்னவோ இதமாகத் தான் இருந்தது. அந்த இதம் பார்த்துக் கொள்ள கண்ணன் இருக்கிறான் என்பதால் வந்த இதம், ஆனாலும் சேர்ந்து வாழும் எண்ணமெல்லாம் சிறிதும் வரவில்லை!

 

Advertisement