Advertisement

அத்தியாயம் பதினொன்று :

ஆனால் அவளின் யோசனைகளுக்கு அவசியமேயில்லை எனதான் தோன்றியது. கிட்ட தட்ட இரண்டு மாதங்கள் திரும்ப கண்ணன் வரவேயில்லை. ஊருக்கே வரவில்லையா? இல்லை அவளின் வீட்டிற்கு வரவில்லையா எனத் தெரியவில்லை. அவன் சொல்லிச் சென்ற நாள் முதலாக வந்துவிடுவானா, வந்துவிடுவானா, என பொழுதும் நினைத்திருந்தவளால், சில சமயம் அவன் வராதது தாள முடியவில்லை.

சென்றவன் அப்படியே சென்றிருக்க வேண்டியது தானே எனத் தோன்றியது. தன்னிலை பல சமயம் இழந்தாள். அதில் பாதிக்கப் பட்டது வடிவுப் பாட்டி தான், அவரிடம் தான் எப்போதும் எரிந்து விழுந்தாள். அவருக்கு அவளைப் பார்க்கவே துயரமாக இருந்தது. 

“சரியாகிடும்னு நினைச்சோமே, இப்போ ராசாவையும் காணோம், இவளும் இப்படி ஆகிட்டா” என நினைத்து நினைத்து நாளுக்கு நாள் அவர் உடலை வருத்திக் கொண்டார். நல்ல திட காத்திரமான பெண்மணி, ஆனால் இதுவே ஒரு தொய்வைக் கொடுக்க, அவரைக் காய்ச்சலில் தள்ளியது.

இரண்டு நாட்களாக எழாமல் படுத்திருக்க, “என்ன பண்ணுது ஆயா?” என தவித்துப் போனாள் சுந்தரி. அங்கிருந்த ஆசுபத்திரிக்கும் அழைத்து சென்றாள், மாத்திரையும் கொடுத்தார்கள், ஆனாலும் காய்ச்சல் விட வில்லை.

அதனோடு வயிற்றுப் போக்கும் சேர்ந்து கொள்ள, ஒரு காலையில் அவர் மயங்கி விழ, அப்போது தான் மகன் குளிக்க சுடுதண்ணீர் எடுத்து ஊற்றப் போனவள், அவர் விழுவதை பார்த்து “ஆயா” என பதட்டத்தில் கத்தி அதனைத் தவற விட, அது அவளின் காலில் கொட்டி விட, “அம்மா” என்ற அவளின் அலறல் அவளின் மகனைத் தவிர யாரையும் எட்டவில்லை. ஆம்! அப்போது அவர்கள் மூவரும் தான் வீட்டினில் இருந்தனர்.

அந்த நிலையிலும் சுடுதண்ணீரில் மகன் கால் வைத்து விட்டால் என்ன செய்வது என அந்தத் தண்ணீரை மிதித்துக் கொண்டு தான் அவன் அந்தப் புறம் வராமல்  பிடித்துக் கொண்டாள்.

திரும்ப வேகமாக ஃபோனை எடுத்து சிந்தாமணியை அழைக்க, அவள் அப்போது தான் பூப்பறித்து முடித்து போயிருந்தவள் குளிக்க சென்றிருக்க, அலைபேசியை எடுக்க முடியவில்லை. சின்னராசுவிற்கு அழைக்க அவனும் அலைபேசியை வீட்டினில் விட்டு லோடு ஏற்றிச் சென்றிருந்தான்.

பின்பு அவளின் பெரியப்பா முறையில் இருந்த ஒருவரை அழைக்க, “நாங்க வீட்ல எல்லோரும் திருப்பதில இருக்கோம் கண்ணு” என்றார்.

பின்பு வேறு ஒரு உறவினரைப் பிடித்து தெரிந்தவர் ஒருவரின் ஆம்னியில் பாட்டியை ஏற்ற, அதற்குள் சிந்தா அழைக்க, அவளிடம் சொல்ல, வேகமாக அவளும் வர.. ஒரு வழியாக சேலத்தில் இருக்கும் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அவளின் காலைப்பற்றி அவளும் சொல்லவில்லை யாரும் கவனிக்கவில்லை. அங்கே பாட்டியை உடனடி சிகிச்சைப் பிரிவிற்கு கொண்டு போகும் போதே சிந்தாமணிக்கு அழைப்பு, அவளின் தாய் மாமா தவறி விட்டதாக, அதுவும் தூர ஊரில், அவர்கள் உடனே செல்ல வேண்டியிருக்க, “நீ போ, நான் பார்த்துக்குவேன், யாரையாவது கூப்பிட்டுக்கறேன்” என்றாள்.

அப்போதும் சிந்தாமணிக்கு அவளை விட்டுச் செல்ல மனமில்லை, “மாமாவை மட்டும் அங்க அனுப்பட்டுமா?” என,

“உன் தாய்மாமா சிந்தா, நீ போகணும், நான் பார்த்துக்குவேன்” என, அப்போதும் அவளின் காலில் சுடுதண்ணீர் கொட்டியது சிந்தாமணிக்குத் தெரியவில்லை. சரி, பார்த்துக்கொள்வாள் என அவள் கிளம்ப,

மகனை இருத்திக் கொண்டு முன்னிருந்த பெஞ்சில் அமர்ந்திருந்தாள். அழுகை முட்டியது, அதுவும் அபிக்கு உடைகள் கூட இல்லை, ஒரு துண்டில் சுற்றி தான் பிடித்திருந்தாள், குளிக்க வைக்க ஆயத்தம் செய்திருந்தாள் அல்லவா.   

 எழுந்து எங்கேயும் நடக்க முடியவில்லை. “இந்த மருந்தை வாங்கிட்டு வாங்க” என அங்கிருந்த சிஸ்டர் சொல்ல, மெதுவாக எழுந்து மகனை தூக்கி, அங்கே ஹாஸ்பிடலில் இருந்த மருந்தகம் நோக்கி நடந்து மருந்தினை வாங்கி வந்து கொடுத்தாள்.

மகனுக்கு பசிக்கும் உணவு கொடுக்க வேண்டும் என்று வேறு மனதில் ஓடிக் கொண்டே இருந்தது. காலையில் ஆறு மணிக்கு பால் குடித்தவன், பத்து மணி ஆகியது அப்போது, ஆனாலும் அழாமல் அம்மாவின் கையினில் அமர்ந்திருந்தான். துண்டில் சுற்றியிருந்ததால் அவளால் கீழேயும் விட முடியவில்லை, அருகிலும் அமரவைக்க முடியவில்லை. வலி வேறு கண்களில் தானாகக் கண்ணீர் பெருகியது.

அப்போது கண்ணன் அப்பாவுடனும் சித்தப்பாவுடனும் இவர்களைத் தேடி அவசரமாக வந்தான். சிந்தாமணி சுந்தரியின் மாமனாரிடம் சொல்லலாம் எனப் போக, அங்கே அப்போது தான் கண்ணனும் சென்னையில் இருந்து வந்திருந்தான். உடனே அவர்கள் கிளம்பி வந்திருந்தனர். அவர்களைப் பார்த்ததும் இன்னும் கண்ணீர் பெருகியது. 

சுந்தரியுமே மகனை குளிக்க வைத்து, அவளும் குளிக்க தான் இருந்தாள். அதனால் தலை முடியை வீட்டில் இருப்பது போல ஒரு கொண்டை தான் போட்டிருந்தாள், நெற்றில் பொட்டுக் கூட இல்லை, சேலையும் வீட்டில் இருக்கும் அவசரக் கட்டு தான். பார்க்கவே பரிதாபமாக இருந்தாள்.   

கண்ணன் அருகில் வந்ததுமே கைகள் தானாக குழந்தையை வாங்கியது. பின்பு இன்னும் துண்டை சுற்றி அணைவாய் பிடித்துக் கொண்டான். மனைவியையும் அணைத்துக் கொள்ள கைகள் பரபரத்தது. பார்த்து இரண்டு மாதம் ஆகிற்று அல்லவா கண்கள் மனைவியையும் மகனையும் அளவெடுத்தன.

“ஒரு ஃபோன் போட்டிருக்கலாமே மா, பாட்டிக்கு என்ன ஆச்சு” என்று சந்திரன் வினவ, அவளால் பேசவே முடியவில்லை. அங்கே பக்கத்தில் தண்ணீர் சுத்திகரிப்பு மெஷின் இருக்க, அதில் தண்ணீர் பிடித்துக் கொடுத்துக் கொண்டே, “அதான் வந்துட்டோம்ல, உன் பாட்டிக்கு ஒன்னும் ஆகாது, பயப்படாதே!” என ஆறுதல் மொழி பேசினான். 

அதனை வாங்கிக் குடித்து, “பாட்டி, மயங்கி விழுந்துட்டாங்க. ரெண்டு நாளா காய்ச்சல், வயிறும் சரியில்லை” என, சித்தப்பாவும், அப்பாவும் அங்கே உள்ளே கேஷுவாலிட்டி செல்ல, கண்ணன் அவளின் அருகில் அமரப் போக, “இன்னும் அபி ஒன்னும் சாப்பிடலை, சாப்பிட ஏதாவது வாங்கிக் குடுங்க” என்றாள்.

அவளின் கலைந்து இருந்த முடியை தானாக ஒதுக்கி விட்டவன், “அப்பாக்கு ஒரு ஃபோன் பண்ண மாட்டியா நீ? சிந்தா வந்து யாரும் கூட இல்லைன்னு சொல்லவும் ஓடி வர்றோம்” என,

“என்கிட்டே ஃபோன் நம்பர் இல்லை” என வாயடைத்துப் போனான். அப்போதும் கண்களில் நீர் நிற்காமல் வர, “சரியாகிடுவாங்க” என அவளைத் தேற்றினான்.

ஆனாலும் அழ ஆரம்பித்தாள், “ஷ், அழாதே” எனக் கை பிடித்தான், இந்த ஆறு மாதங்களாக பார்ப்பான், சில சமயம் அருகில் வருவான், தொட்டதெல்லாம் இல்லை. கை பிடித்து ஆதூரமாக அழுத்திக் கொடுக்கவும், “வலிக்குது” என்றாள்.

“எங்கே வலிக்குது?” என்றான் புரியாமல், புடவையைத் தூக்கி காலைக் காட்ட, “ஐயோ” எனக் கத்தியே விட்டான். தோல் வெந்து போய், கொப்புளிக்க ஆரம்பித்த இருந்தது. அவன் கத்தியதும் தான் அவளும் குனிந்து காலைப் பார்த்தாள், அதுவரை சகித்து கொண்டிருந்த வலி இப்போது சகிக்க முடியாமல் போயிற்று, “வலிக்குது” என கதற..

அவளை தோளில் சாய்த்துக் கொண்டவன், “என்ன ஆச்சு?” என்ன ஆச்சு என்றான் பதறி, “சுடுதண்ணி கொட்டிக்கிட்டேன்” என,

அவசரமாக அப்பாவைக் கூப்பிட்டு காட்ட, அவர்களும் அதிர்ந்து, பின் அங்கிருந்த டாக்டரிடம் சொல்ல, அவர் வந்து பார்த்து இவளையும் ஒரு பெட்டில் படுக்க வைத்து அதனை ஆராய்ந்தனர்.

என்னவென்று புரியாத போதும், அதுவரை பசியில் கூட அழாத அபி, அம்மாவைப் படுக்க வைத்ததும் வீரிட்டு அழ, “நீ கூட இரு” என்று சொல்லி, அவனிடம் இருந்த பிள்ளையை வாங்கி அப்பா வெளியில் வர, சித்தப்பா டாக்டர் எழுதிக் கொடுத்த மருந்தை வாங்கப் போக,

அதுவரை தைரியமாக இருந்தவள் பயத்தினில் சோர்வினில் வலியினில் மயங்கினாள். கூட இருந்த சிஸ்டர் வேறு, “இவங்க பாட்டிக்கு எழுதிக் கொடுத்த மருந்தை இந்தப் பொண்ணு தான் போய் வாங்கிட்டு வந்துச்சு. இவ்வளவு வலியோட எப்படி நடந்து போச்சோ தெரியலை, என்கிட்டே சொல்லவேயில்லை” என ஆதங்கப்பட..

“ஐயோ, நான் இன்றைக்கு ஊருக்கு வராமல் போயிருந்தால்” என்ற நினைப்பே கண்ணனுக்கு பயத்தைக் கொடுத்தது. அதனையும் விட மகன் கத்திய கத்தல் இன்னும் பயத்தைக் கொடுத்தது. ஆம்! அழுகையில் ஊரைக் கூட்டினான். சந்திரன் உள்ளே வந்து அவனிடமே பிள்ளையை கொடுக்க, அப்போதுதான் பிள்ளையின் அழுகை சற்று மட்டுப் பட்டது.

“அவனுக்கு பசிக்கும் பா” என்றான், சுந்தரி வேறு மயக்கத்தில் இருக்க, விட்டுப் போக மனதே இல்லை. “நாங்க இருக்கோம், நீ போய் அவனுக்கு சாப்பிட வாங்கி குடு! வெளில ஏதாவது துணிக்கடை இருந்தா அவனுக்கு ஒரு டிரஸ் வாங்கிப் போடு!” 

அவனே எல்லாம் செய்வதற்குள் சிரமப்பட்டு விட்டான், அபி என்னவோ அப்படி ஒரு அழுகை, திரும்ப வந்த போது சுந்தரிக்கு முதலுதவி முடிந்து இருந்தது, அவளும் எழுந்து அமர்ந்து இருந்தாள்.

வலி தெரியாமல் இருக்க வலி ஊசி போட்டிருக்க, வலி சற்று குறைந்து தெளிவாக இருந்தாள். அவளைப் பார்த்ததும் மகன் திரும்ப அவளிடம் தாவ, கொடுத்து அவள் அணைத்துப் பிடித்ததுமே திரும்ப வாங்கிக் கொண்டான்.

பாட்டியும் மயக்கம் தெளிந்திருந்தார், அவருக்கு ட்ரிப்ஸ் ஏறிக் கொண்டு இருந்தது. “என்ன பண்ணிவச்சுருக்கு இந்தப் புள்ள” என சுந்தரியின் காலைக் காட்டி கலங்க, “சரியாகிடும் ஆயா” என சுந்தரி அவருக்கு பதில் கொடுத்தாள். திரும்ப அவளின் தைரியம் மீண்டு இருந்தது.

டாக்டரிடம் கேட்க, “இவங்க ஒரு நாள் இருக்கட்டும்” என பாட்டியைக் காட்டியவர், “இவங்களுக்கு இப்போ டிரெஸ்ஸிங் பண்ணிடுவோம், ஆனா ஒரு ரெண்டு மூணு நாளைக்கு இவங்களை டெய்லி கூட்டிட்டு வாங்க! அப்புறம் நாள் விட்டுக் கூட வரலாம்”  

“எப்போ சரியாகும்” என, “எப்படியும் ஒரு மாசம் ஆகிடும், கால் மேல மட்டுமில்லை, கால் பாதத்துலையும் இருக்கு. நடக்காம பார்த்துக்கிட்டா சீக்கிரம் சரியாகிடும், ஆனா கவனமா பார்த்துக்கணும், இல்லை சீல் பிடிச்சிடும், தண்ணி படவேக் கூடாது” என பல ஜாக்கிரதைகள் சொல்ல, கவலையாகிப் போயிற்று கண்ணனுக்கு!

அதனையும் விட சுந்தரிக்கு “யார் வேலைகளைப் பார்ப்பார்” என தான் கவலை, கால் இப்படி ஆனது, வலி இருக்கும், அதெல்லாம் கவனத்தில் இல்லை. வேலை அதனைப் பற்றி தான் கவனம்.

“நடக்காம உட்கார்ந்துட்டே வேலை பார்க்கலாம்ங்களா?” என டாக்டரிடம் கேட்க, அவர் “என்ன வேலை?” என,

“தோட்டத்துல, நர்சரில” என அவள் விளக்கம் கொடுக்க, அப்போதும் அவருக்குப் புரியவில்லை, திரும்ப சந்திரன் விளக்கம் கொடுக்க, “பைத்தியமா நீ, என்ன பொண்ணும்மா நீ, மண்ணு  கால்ல பட்டா அவ்வளவு தான் உன் புண்ணு, கொந்தளிசிடும்” என பயமுறுத்த,

“ஆள் போட்டுக்கலாம், உன் கால்க்கு ரெஸ்ட் குடு, எந்த வேலையும் பார்க்க வேண்டாம்” என அதட்டினான்.

“ஏற்கனவே ஆள் இருக்காங்க, ஆனாலும் என்னோட வேலையை நான் தானே செய்யணும்!” என யோசித்து இருந்தாள். அவளின் யோசனை புரிந்து “நல்ல நம்பிக்கையான ஆளா போட்டுக்கலாம்” என கண்ணன் தைரியம் கொடுத்து, “முன்ன உன் காலைப் பாரு” என அதட்டினான்.

பின்பு விமலாவை அழைத்து விவரம் சொல்ல, அடுத்த அரை மணியில் கனகாவும் அவரும் வந்து விட்டனர்.

பாட்டியை அப்போதுதான் ரூமிற்கு மாற்றிக் கொண்டிருந்தனர், “ஆயாவோட யாராவது இருக்கணும்ல, நான் இங்கே இருக்கேன், அபியை மட்டும் நீங்க பார்த்துக்கங்க” என தயங்கித் தயங்கி கண்ணனிடம் உதவி கேட்க..

“பாட்டியை நீ பார்த்துக்குவ! அபியை நான் பார்த்துக்குவேன்! உன்னை யார் பார்த்துக்குவா?” 

“ஆங்” என விழித்தவளிடம், “உன் பிளானிங்க எல்லாம் நிறுத்திக்கோ முதல்ல!” என கடிந்து பேசியவன், “என்ன பண்ணலாம் பா, பாட்டியோட இருக்க ஆள் யாராவது இருக்காங்களா?” என சந்திரனிடம் பேச ,

“நான் இருக்கேன்” என விமலா சொல்ல, இப்போது “ஆங்” என அவரை தான் எல்லோரும் பார்த்தனர். “சும்மா விளையாடாதே, நீ இருப்பியா” என சந்திரன் கேட்க, “ஏன் நான் இருக்க மாட்டேனா?” என அவர் பதில் கேள்வி கேட்டார்.

“இல்லை, அங்க ஊர்ல தோட்டத்துக்கு வர்ற அக்கா இருப்பாங்க! நான் அவங்களை வரச் சொல்றேன் வந்துடுவாங்க” என ஃபோனை எடுத்து அழைத்து விட்டாள். சுந்தரி எப்படியும் பணம் கொடுப்பாள் என தெரிந்து, அந்தப் பெண்மணியும் நான் வர்றேன்” என்று விட, “சரி, சாயந்தரம் வரையாவது இருக்கோம்!” என விமலா இருக்க,

சண்டை மூளுமோ என கவலையாகிப் போயிற்று சந்திரனுக்கு, அதனையும் விட திருமணம் முடிந்து அந்த ஐந்து நாட்களும், மிக சில வார்த்தைகள் மட்டுமே விமலா சுந்தரியிடம் பேசியிருப்பார். பார்க்கும் பார்வையே துச்சமாகத் தான் இருக்கும்.

அதனையும் விட உணவு உண்ண சொல்லவே மாட்டார். அவர்கள் எல்லாம் உண்ட பின், “நீயின்னும் சாப்பிடலையா” என்பார். உணவே அவளுக்கு உள்ளேயே இறங்காது. யாருமே பேச மாட்டார்கள். சாப்பிட்டு எழும் நேரம் அந்தப் பாத்திரம் எல்லாம் கழுவி வெச்சிடு என்பார்.

அவர்களே எட்டு பேர், இவளோடு ஒன்பது. வேலை செய்வது அவளுக்கு பிரச்சனை கிடையாது, அது வீட்டின் மருமகளாக அவளிடம் சொல்வது போல இருக்காது, எதோ வேலையாளுக்கு உணவு கொடுத்து வேலை வாங்குவது போல இருக்கும்!  

அந்த ஐந்து நாளில் அவளுக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மையே உருவாகி விட்டது. அதுவும் கண்ணன் அவளின் வீட்டிற்கு வந்த போது, அவள் பார்க்கப் பார்க்கவே முகம் சுளித்தான், அதனை மறக்கவே முடியாது.

எல்லாம் ஞாபகத்தில் வர, “இல்லை அந்தக்கா இருக்காங்க, பாட்டி இருந்துக்குவாங்க” என சுந்தரி சொல்ல,

“நான் தான் உன்னை எதுவும் ப்ளான் பண்ண வேண்டாம் சொன்னேன் தானே, ஒழுங்கா கண் மூடி ரெஸ்ட் எடு!” என அதட்டினான்.

அவனை முறைத்துப் பார்க்க, அதையெல்லாம் அவன் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. “இல்லைம்மா நீங்க வீட்டுக்குப் போங்க, இந்தப் பயலை பார்த்துக்கணும், ஓடிட்டே இருப்பான் என அபியை  காட்டினான். அபி அப்பாவின் தோளில் உறங்கியிருந்தான். “இவனை நீங்க வீட்டுக்கு கூட்டிட்டு போங்க”

“சுந்தரி எப்படி தனியா சமாளிப்பா, நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போகலாமா?” என்றார் தயங்கி தயங்கி, அம்மா கேட்டதும் சுந்தரியின் முகம் ஒரு அதிர்ச்சியைக் காட்ட, “ம்ம்ம், கூட்டிட்டுப் போங்க!” என்று சந்தோஷமாகப் பாட்டி சொல்ல,

அதிர்ச்சி மறைந்து, ஒரு கோபம் வியாபிக்க, இவளின் முக பாவனைகளைப் பார்த்து இருந்தவன், “நான் சொல்றதை மட்டும் செய்ங்க!” என்று அம்மாவையும் அதட்டினான். அவர்களை அனுப்பி பாட்டியிடமும் அவரை பார்த்துக்கொள்ளும் பெண்மணியிடமும் ஜாக்கிரதைகள் பல சொல்லி, பணம் கொடுத்து கிளம்பினான் சுந்தரியுடன்.     

ஒரு கால் டேக்சி பேசி, அவளை வீட்டிற்கு அழைத்துச் செல்ல, ஹாஸ்பிடலில் இருந்தே வீல் சாரில் தான் கொண்டு வந்து ஏற்றி விட்டனர். வீட்டின் உள் வாயிலுக்கே அந்த டேக்சி செல்ல, எப்படி இறங்கி உள்ளே போவது என யோசிக்க, அவள் இறங்கி ஒரு காலில் நிற்கவுமே, மேலே ஏறி வீட்டினை திறந்து இருந்தான். பின்பும் அவள் பார்த்து நிற்கவுமே, அவளை அலேக்காக தூக்கி படி ஏற ஸ்தம்பித்து விட்டாள், அவளின் இயக்கமே நின்று விட்டது.

ஒரு நாளில் எவ்வளவு அதிர்ச்சியைத் தான் தாங்குவாள்!

படுக்கையில் விடப் போனவன், அதெல்லாம் கலைந்து இருக்க, அவளை ஒரு நாற்காலியில் அமர வைத்து வேகமாக அதனை தட்டிப் போட, பார்த்தது பார்த்தபடி நின்றாள். பின்பு அம்மாவிற்கு அழைத்து அங்கு வந்து விட்டதை சொன்னவன், “அபி என்ன செய்கிறான்?” எனக் கேட்க.. “இன்னும் தூங்குகிறான்!” என பதில் வர, “எழுந்து அழுதான்னா இங்க கூட்டிட்டு வந்துடுங்க” என்றான்.

“டேய், ஓவரா செய்யாத, உன்னையே நான் தான் வளர்த்தேன், உன் பையனை ஒரு நாள் பார்த்துக்க மாட்டோமா!” என சண்டைக்கு வர,

“நான் எப்போ நீ பார்த்துக்க வேண்டாம் சொன்னேன், நல்லா பார்த்துக்கோ, ஆனா அவனைப் பத்தி உனக்கு தெரியாது, நீயே தூக்கிட்டு வருவ பாரு!” என,

“பார்க்கலாம்” என அவரும் ஃபோனை வைக்க, இவனை தான் பார்த்து இருந்தாள். “என்னை சுற்றி என்ன நடக்கிறது, காலையில் யாருமற்ற அனாதையாய் தவித்தது என்ன? எல்லாம் எப்படி மாறியது? எப்படி மாற்றுகிறான் இவன்” என பார்த்திருந்தாள்.

பின்பு அவளைத் தூக்கி படுக்கையில் விட, சுந்தரி எதுவுமே பேசவில்லை, காலையில் இருந்ததற்கு வாழ்க்கை எப்படி மாறிவிட்டது! அதற்குள் ஆட்கள் பூப்பறிக்க வந்திருக்க, எட்டி பார்த்தவர்கள், “ஓஹ், தம்பி இருக்கா” என வாயிலிலேயே நிற்க,

“பாட்டிக்கு உடம்பு சரியில்லை ஆஸ்பத்திரில, இவ கால்ல சுடு தண்ணி ஊத்திக்கிட்டா நடக்கக் கூடாது” என,

எல்லோரம் உள் வந்து, “என்ன கண்ணு, இப்படி பண்ணிக்கிட்ட, கவனமா இருக்க வேண்டாமா?” என்று பேசினர்.

பின்பு பூப்பறிக்க செல்ல, அவர்கள் சென்றதும் “நான் என் வேலையை விட்டுட்டேன், இனிமே உன் கிட்ட தான் வேலை செய்யப் போறேன், எனக்கு ஒரு வேலை கொடு!” என்று அவளின் முகம் பார்த்து சொல்ல.

“ஆங்” என விழித்துப் பார்த்தாள். இன்னும் எத்தனை அதிர்ச்சியைத் தான் தாங்குவாள். அவளின் கன்னம் தட்டியவன் “நிஜம்மா சொல்றேன், எனக்கு வேலை கொடு!” என நின்றான்.

இவன் என்ன ஒன்றுமே நடக்காதது போல எல்லாம் செய்கிறான் என அப்போதும் பார்த்து இருக்க, “உன் நெத்தில பொட்டே இல்லை, எங்கே பொட்டு எனக் கேட்க, அவளிடம் பதில் இல்லை எனவும், கண்ணாடி எங்கே என்று பார்க்க, அங்கு பொட்டு ஒட்டி வைக்கப்பட்டிருக்க, எடுத்து வந்து அதனை அவளின் நெற்றியில் ஓட்டினான்.

ஒட்டி அவளை சரி பார்க்க, அவன் படுக்க வைத்ததில் அவளின் கழுத்தில் இருந்த சங்கிலி வெளியில் வந்திருக்க, மிக மெல்லிய சங்கிலி தான், ஆனால் அதில் அவன் கட்டிய தாலி கோர்க்கப்பட்டுத் தான் இருந்தது.

இத்தனை நேரம் இல்லாமல் இப்போது அவன் அதிர்ச்சியாய் பார்த்து நிற்க,  என்ன பார்க்கிறான் என்று அவளும் பார்க்க, இருவர் பார்வையுமே ஒன்றை ஒன்று பார்த்து நின்றது வெகு நேரம். 

இப்போது அந்த விவாகரத்து செல்லுமா? செல்லாதா? ஆனது போலா? ஆகாதது போலா?  

Advertisement