Advertisement

அத்தியாயம் பத்து :

சுந்தரியிடம் பதில் பேசாமல் வந்து விட்டாலும் மனதிற்கு மிகவும் வருத்தமாய் இருந்தது. எத்தனை பாதிப்பு சுந்தரிக்கு, ஆனாலும் பெரிதாக எதுவும் நிகழாமல் தடுத்த சுந்தரியின் பண்பு அவனை பெரிதாக ஆகர்ஷித்தது.

ஆம்! அவனிடம் மரியாதையில்லாமல் தான் பேசினாள். ஆனால் யாரிடமும் அதுபோல் பேசியது போல தெரியவில்லை. ஆம்! யாரும் அவனை கீழாகப் பார்ப்பார்களோ என்ற பயம் வெகுவாக இருந்தது. அப்படி எதுவும் நடக்கவில்லை.

அது இங்குள்ள வாழ்க்கையின் மீது அவனுக்குப் புதிய பிடிப்பைக் கொடுத்தது. உப்பை தின்றவன் தண்ணீர் குடித்துதானே ஆக வேண்டும். மனதை வெகுவாக தேற்றிக் கொண்டான்.

குழந்தை இப்போது வீட்டினில் இருக்கவும், சந்திரன் அவனை கீழே விடவேயில்லை. “அப்பா, அவனை ஃப்ரீயா விடுங்க, அப்புறம் அம்மாக்கிட்ட போகணும்னு ரகளை பண்ணப் போறான்” என கண்ணனே அதட்டும் படி ஆகிற்று.

மாலை வாணியை பெண் பார்க்க வேறு வந்தனர். அதற்கும் மகனோடே இருந்தான். வந்தவர்கள் இவனை அலச, பொறுமையாக “என் மகன்” என்றவனிடம், “விவாகரத்து ஆகிடிச்சுன்னு சொன்னாங்க” என.

“ஆகிடுச்சு தான்! ஆனா திரும்ப சரியாகிடும்!” என வீடே திரும்ப அவனைத் தான் பார்த்தது. ஏதோ மகனுக்காக போகிறான் என்பது போல தான் வீட்டினரே நினைத்து இருந்தனர். இந்த பதில் அவர்கள் எதிர்பாராதது.

மாப்பிள்ளை வீட்டினர் இன்னும் இரண்டொரு நாட்களில் பதில் சொல்வேன் என்று போய் விட, வீடே அவனை சூழ்ந்து கொண்டது. இதுவரை என்ன செய்யப் போகிறாய் என்று வீடு கேட்கவே இல்லை, ஒரு பயம் எல்லோரிடத்திலும். இப்போது தானே வந்திருக்கிறான். எதையாவது கேட்டு முறுக்கிக் கொண்டால் என்ன செய்வது என.

“என்ன செய்யப் போற” என சித்தி கேட்க, “என்ன செய்யப் போறேன், சரியாகிடும் சொன்னேன்! அவ்வளவு தான்! இன்னும் நான் எதையும் யோசிக்கலை!” என்றான் கூலாக.

திரும்ப மகனை தூக்கிக் கொண்டு தோப்பின் உள் சுந்தரியின் வீடு நோக்கி நடந்தான். அங்கே ஒரே களேபாரமாக இருந்தது. பார்த்தால் மாட்டிற்கு பிரசவிப்பதில் சிக்கல் போல, அதனால் தான் மகனை கூட அவள் தேடவில்லை என நினைத்துக் கொண்டான்.

கவலையாக படியினில் இவள் அமர்ந்திருக்க, மாடு வேறு கத்திக் கொண்டிருக்க, அங்கே இரண்டு மூன்று பேர் இருந்தனர். பாட்டியும் உள்ளே தான் இருந்தார். அவளைப் பார்த்ததும் “அம்மா” என்று தாவிய மகனை கையினில் வாங்கி அணைத்துக் கொண்டாள்.

மாட்டுக் கொட்டகையின் புறமே கண் இருக்க, “சரியாகிடும்” எனத் தேற்றினான். அந்தக் கரிசனம் அவளின் வாய்ப்பூட்டை உடைக்க, “நேத்து ராத்திரி இருந்து சிரமப்படறா” என சொல்லும் போதே கண்களில் நீர் நிறைந்தது. “பனிக் குடம் உடைஞ்சிடுச்சு, ஆனா கன்னு வெளில வரலை” என்றாள் சிறு தேம்பலோடு.

இதற்கெல்லாம் அழுவார்களா என்று தோன்றியது. பெரும்பாலும் வீட்டில் மாடு இருந்தால் அதுவும் வீட்டு உறுப்பினரில் ஒருவர் போலத் தான் என புரிந்தவன் தான். ஆனாலும் சொந்த மகனைக் கூட மறந்து ஒரு அழுகை, ஒரு தவிப்போடு இருப்பது? உயிரோடும் உணர்வோடும் கலந்து விட்ட விஷயம் என புரிந்தது.

அதுவும் அம்மா அழ, அபி அவனின் பிஞ்சுக் கைகளில் துடைத்து விட்டான். மகன் துடைக்க அப்பா பார்த்துக் கொண்டு இருப்பதா? ஏதாவது செய்ய வேண்டுமே!

கண்ணன் வீட்டில் மாடுகள் இருந்ததில்லை. ஆனால் பார்க்கிறான் தானே, அது எல்லோருக்கும் எவ்வளவு முக்கியம் என்று. ஆனாலும் அவன் தள்ளி தான் நிற்பான். ஏன் முதல் முறை சுந்தரி வீட்டிற்கு வந்த போது கூட ஒரே புண்ணாக்கு வாசனை வீட்டினில் என்பதாகத் தான் அவனின் எண்ணம்.    

மாட்டுக் கொட்டகையை மெதுவாக எட்டிப் பார்க்க, எல்லோரும் கவலை தோய்ந்த முகத்துடன் இருப்பதை பார்த்தவன், “வெட்டினரி டாக்டர் யாரையாவது கூப்பிடலாம்” என அங்கிருப்பவர்களிடம் சொல்ல,

“எப்பவும் இந்தப் பக்கமா வர்றவர், ஃபோனே எடுக்கலை, அவர் வீடும் தெரியாது” என்றனர்.

அவன் முன்பு படித்த காலேஜின் எதிர்புறம் ஒரு வெட்டினரி டாக்டர் கிளினிக் இருக்கிறது பார்த்திருக்கிறான், இருந்தாலும் அப்பாவை அழைத்து இங்கே இப்படி எனச் சொல்ல, “ஞாயித்துக் கிழமை தம்பி, யாரையும் பிடிக்கறது கஷ்டம்” என்றார்.

“கஷ்டம்னு சொல்லவா உங்களைக் கூப்பிட்டேன்” என்று எரிந்து விழுந்தான். “முதல்ல இங்க வாங்க” என்றவன், காலேஜின் எதிர்புறம் எப்போதும் டீ சாப்பிடும் கடையின் கடைக்காரர் நம்பர் எடுத்து, அவரிடம் பேசி வெகுநாட்கள் ஆகிவிட்ட போதும் அழைத்து, அவனை அறிமுகப்படுத்தி கொண்டு, எதிரில் இருந்த அந்த போர்டில் இருந்த நம்பரை கேட்டு, உடனே டாக்டரை அழைத்து, அவரிடம் நிலைமையைச் சொல்லி, “நாங்க வந்து கூப்பிட டைம் ஆகும் சர், நீங்க வந்துடுங்க நாங்க பே பண்றோம்” என்று மிகவும் பணிவாக உரையாட..

அவரும் ஒரு உதவியாளருடன் கிளம்பி அரை மணிநேரத்தில் வந்துவிட்டார். வந்த பிறகும் சில பல சிரமங்களுக்கு இடையில் கன்று வெளியில் வர, “ஷப்பா” என்று அங்கிருந்த அனைவரும் மூச்சு விட்டனர்.

பின்னரும் சில பல மருந்துகள் எழுதிக் கொடுத்து, “வாங்கிட்டு வந்தீங்கன்னா, போட்டுட்டு கிளம்புவோம்!” என, எங்கே வாங்குவது எனக் கேட்டு, அப்பா வந்த பைக்கை வாங்கி, சேலம் சென்று வாங்கி வந்தான். அதற்கே அரை மணி நேரம் பிடித்தது. 

எல்லோரும் இவனுக்குத் தான் காத்திருந்தனர். பின்பு அவர்கள் ஊசி போட, எவ்வளவு பணம் எனக் கேட்டு அவர் சொன்னதற்கு இரு மடங்கு கொடுத்தான். யாரும் அழைத்தாலும் சட்டென்று வருவதில்லையே. அவருக்கு நன்றி சொல்லி அனுப்பி வைத்த போது ப்ராஜக்ட் முடிக்கும் போது இருக்கும் சந்தோஷத்தை விட அதிகம் இருந்தது என்னவோ நிஜம்.

பின்பு தான் பார்த்தான், அங்கே சிந்தாமணியும் இருப்பதை, “எங்க உங்க வீட்டுக்காரர், எப்பவும் ரொம்ப சவுண்ட் விடுவார்” என,

சிந்தாமணி எதுவும் பேசவில்லை, பின்னே ஞாயிறு என குடித்து மட்டையாகி வீட்டினில் கிடக்கிறான் என்றா சொல்ல முடியும்.

வடிவுப் பாட்டி அப்படியே கால் நீட்டி கீழேயே அமர்ந்து கொண்டார் “ரொம்ப நன்றி ராசா தடுமாறிப் போய்ட்டோம்” என்றார்.

சிந்தாமணி அதுவரையிலுமே மகனைப் பிடித்து அந்த படியினில் அமர்ந்தவள், அப்படியே அமர்ந்திருந்தாள். முகம் மட்டும் நிம்மதியைக் காட்டியது. “அதுதான் நல்லா படியா முடிஞ்சிடுச்சே. ஏன் இப்படி உட்கார்ந்து இருக்கா?” என கண்ணனுக்கு தோன்றியது. அவளுள் வேறு பல நினைவுகள் என அவன் அறியான் தானே! 

அதற்குள் மகன் சிணுங்க என்ன இருக்கிறது என்று பார்க்க உள்ளே போனாள். காலையில் உண்டது தான், அவளுக்கு மதியம் உணவு இறங்கவில்லை.

இப்போது எதுவும் சமைக்கவும் இல்லை. என்ன செய்வது என்று யோசித்தபடி  மகனை தூக்கி உள்ளே நடக்க, “நான் கிளம்பறேன் மா” என சந்திரன் வடிவுப் பாட்டியிடம் சொல்லி கிளம்பினார். எல்லோரும் ஆளுக்கு ஒரு பக்கம் சொல்லிக் கொண்டு கிளம்பினர்.

“நீ வர்றியாடா?” என கண்ணனைப் பார்த்துக் கேட்டார். சுந்தரி ஒரு வார்த்தைக் கூட பேசாதது மனதினில் உரைத்தது. அதனையும் விட அவன் புறம் பார்வை கூட திருப்பவில்லை, “ம்ம், பா” என்றவன், அரை மனதாக கிளம்பினான். அப்போதும் “இருங்கப்பா, டைம் ஆகிடுச்சு, நான் ஊருக்கு கிளம்பணும். நான் அபி பார்த்துட்டு வர்றேன்” எனத் தயங்கி நிற்க, “நீ உள்ள போ ராசா” எனப் பாட்டி சொல்ல,    

தயங்கித் தயங்கி தான் உள்ளே சென்றான். கால்கள் செல்ல மறுத்தன.திருமணம் முடிந்த நாள் வந்தது தான், பிறகு இப்போது தான் உள் நுழைகிறான். பெரிய வீடு எல்லாம் இல்லை, அளவான வீடு அவ்வளவே! ஒட்டு வீடு, ஒரு பெரிய கூடம் , சமையல் அறை, இரண்டு பெரிய அறைகள் அவ்வளவே!

சுந்தரி வேகமாகக் குக்கரில் ஏதோ செய்து கொண்டிருந்தாள். தரையில் அவளின் புடவையைப் பிடித்து அபி அமர்ந்து இருந்தான். இவனைப் பார்த்ததும் “பா” என எழ,

கண்ணன் வந்ததை சுந்தரி கவனிக்கவில்லை. அவன் இதுவரை வீட்டினுள் வந்தது இல்லையே. “ஷப்பா, இவன் அப்பா புராணம் கேட்டு எனக்கு காது புளிச்சு போச்சு. எப்போ பார்த்தாலும் பா பா ன்னுட்டு!  நிறுத்துடா! இன்னைக்கு நம்ம மாடு கஷ்டப்பதை விட பிரசவத்துல நான் கஷ்டப்பட்டேன் தெரியுமா?” என மகனை அவள் பாட்டிற்கு வேலை செய்து கொண்டே அதட்டினாள்.  

ஓஹ்! அதுதான் அப்படி அமர்ந்து இருந்தாளா!  என அவளை பார்த்தபடி நின்றான்.   

“பொறந்ததுல இருந்து எட்டிக் கூடப் பார்க்காம திடீர்ன்னு வந்து குதிச்சிருக்குற அப்பாவுக்கே என் மகன் மயங்கிட்டான். மயங்கிடாதடா எப்போ வேணா உன்னை விட்டு கிளம்பிடுவாங்க!” என பேசிக் கொண்டு இருந்தாலும் வேகமாக குக்கரை மூடி வைக்க,

அதற்குள் மகன் தளிர் நடையிட்டு அப்பாவிடம் வந்து “பா” என மகனை தூக்கிக் கொண்டான் கண்ணன். அதன் பிறகே திரும்பியவள், குழந்தையுடன் கண்ணன் நிற்பதை பார்த்து அதிர்ந்தாள், “இவன் எப்போ வந்தான் தெரியலையே” என நினைத்து அவனைப் பார்க்க,

அவள் பேசிய வருத்தம் இருந்தாலும் அதை மறைத்து “ரொம்ப கஷ்டப்பட்டியா இவன் பிறக்கும் போது” என்றான்.

அந்த கேள்வியில் சில நொடிகள் மனது அசைந்து கொடுத்தாலும், “ஞாபகமில்லை, ஞாபகத்துல கொண்டு வரவும் இஷ்டமில்லை” என்றாள் அவனின் முகம் பார்த்து நேரடியாக.

எப்படிப் பேசறா இவ என யோசித்துக் கொண்டே “ஊருக்கு கிளம்பறேன்” என, “ம்ம் சரி” என்பது போலத் தலையசைக்க, மகனை இறக்கி விட முயல, அவன் கண்ணனின் கழுத்தைக் கட்டிக் கொண்டு அசையவும் மறுக்க, 

“டேய் அபி, இறங்குடா, இவன் வேற, பசி என் காதை அடைக்குது” என, பேச்சை வளர்க்க வேண்டி “என்ன சமைக்கற” என்றான் கண்ணன்.

“ம்ம், அரிசி பருப்பு சாதம்” என விறைப்பாக சொல்ல,

அவள் சொல்லிய விதத்திற்கு கடுப்பானவன் “நீயே கொட்டிக்கோ, நான் ஒன்னும் பிடிங்கிட மாட்டேன்” என்று சட்டென்று கோபப்பட்டு கண்ணனும் மகனை இறக்கி விட முயல, அவன் விட மாட்டேன் என்பது போல வீலென்று அழ,

அபியை “வாடா” என்று பிடித்து இழுக்க, அவன் இன்னும் அதிகமாய் அழ,

“ப்ச், ஏன் அதட்டுற?” என்று அவளை அதட்டியவன், “அப்பாக்கு டைம் ஆச்சு, போ அபி, அம்மாக்கிட்ட போ!”   என,

“நான் இப்போ தானேடா சொன்னேன், அவர் கிளம்பிடுவார்ன்னு, திடீர்ன்னு காணாமப் போயிடுவார்டா” எனச் சொல்ல,

“அப்போ இங்கேயே இருக்கேன், காணாமப் போகாமன்னு சொன்னா, நீ இருக்க விட்டுடுவியா” என கடினமாகக் கேட்க,

“உங்களை.. நானு.. வீட்டுக்குள்ள..” என நிறுத்தியவள், “விடவே மாட்டேன்” என,

அப்படி ஒரு மூர்க்கத் தனமான கோபம் அவனுள் கிளம்பியது.. “நீ எப்படி விடாமப் போறேன்னு நானும் பார்க்கிறேன்” என்று அவன் சொன்ன விதத்தில் மனதினில் ஒரு பயமே வந்தது.. அது அப்படியே முகமும் காட்ட,

“என்ன பண்றதுன்னு ஒரு யோசனையிலேயே இருந்தேன், என்னை முடிவெடுக்க வெச்சிட்ட நீ!” என்றவன், மகனின் நெற்றில் முத்தமிட்டு கீழே விட்டவன் அவன் அழ அழ கிளம்பிவிட்டான்.

“ரொம்ப பேசிட்டேனோ, இவ்வளவு கோபமாப் போறானே! என்ன பண்ணுவான், வீட்டுக்குள்ள கட்டாயமா வந்து உட்கார்ந்துக்குவானோ? வந்தா நான் என்ன பண்ணனும்?” ஆனா ஏன் வருவான்?” என யோசனைகள் ஓட சமைந்து நின்றாள். 

  

 

Advertisement