Advertisement

                   கணபதியே அருள்வாய்

   நீ என்பது யாதெனில்

அத்தியாயம் ஒன்று :

சின்னக் கண்ணன் அழைக்கிறான்…

ராதையை.. பூங்கோதையை..

அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி

சின்னக் கண்ணன் அழைக்கிறான்

 

மெலிதான குரலில் மகனுக்கு பாடித் தூங்க வைத்துக் கொண்டிருந்தாள் சுந்தரி.. அருமையான குரல் வளம்.. அது மகனைத் தானாக கண் மூட வைத்தது…

ஒரு வயது மகன்.. பத்தொன்பது வயது அம்மா.. ஆம்! சுந்தரியின் பதினெட்டாவது வயதில் பிறந்து விட்டான்.. பாடலுக்கு தகுந்த மாதிரி மகனும் சின்னக் கண்ணன் தான்.. தந்தையின் பெயர் துரைகண்ணன் ஆகிற்றே..

அப்போது அவன் சின்னக் கண்ணன் தானே.. மகன் உறங்கியிருக்க அறையை விட்டு வெளியே வந்தாள்.. சற்று தூரத்தில் இருந்த பூந்தோட்டதிற்கு சென்று குண்டு மல்லிகை பூக்களைப் பறிக்க ஆரம்பிக்க.. சில மணித் துளிகளில ஆட்கள் பறிக்க வந்து விட்டனர்..

ஆம்! ஆட்களுக்கு கூலி கொடுக்கிறோமே, நாம் ஏன் அந்த வேலையை செய்ய வேண்டும் என்று நினைக்க மாட்டாள் அவர்களுக்கு முன் வந்துவிடுவாள்.. அவர்களோடு நின்று வேலை செய்வாள்.. அதனால் யாராலும் நேரத்தை விரையமாக்க முடியாது.. வேலை கச்சிதமாக நடக்கும்.   

மும்முறமாக பூக்களைப் பறித்துக் கொண்டிருந்தார்கள்.. அங்கிருந்த வயது முதிர்ந்த பெண்மணி ஒருவர் எப் எம் ரேடியோவை ஒலிக்க விட.. அது,

ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்… கண் தேடுதே சொர்க்கம்.. கை மூடுதே வெட்கம்.. பொன் மாலை மயக்கம்.. பொன் மாலை மயக்கம்.. எனப் பாட

“எம் ஜி ஆர் ரும் சரோஜாதேவியும் நடிச்ச இந்த படத்தை நான் என் மாமனோட…” என்று ஆரம்பித்து அவரின் கதைகளைப் பேச.. எல்லாம் சுந்தரியின் காதுக்குள் புகுந்து மனதினையும் தொட்டது.. “நான் இந்த வயதாகும் போது எனக்கு சொல்லிக் கொள்ள நினைவுகள் என்று ஏதேனும் இருக்குமா”..

அந்தப் பெண்மணியை ஒருத்தி அதட்டினாள், “அக்கோவ், நாங்க கேட்டோமா உன் கதையை, நாளையிலிருந்து பூப்பறிக்க விட மாட்டோம்!” என அதட்டல் போட.. அவர் கப்பென்று வாயை மூடிக் கொண்டார்..

வேறு இடமாய் இருந்தால் “எவடி அவ, என்னைய வாயை மூடச் சொல்றவ” என அதன் ஒன்றையடி நரைத்த கூந்தலை அள்ளி முடிந்து சண்டைக்கு கிளம்பியிருப்பார்.. சுந்தரி இருப்பதைக் கொண்டு அமைதியாகிவிட்டார்.. பேசினால்.. “நல்லதை பேசுங்க, மரியாதையா பேசுங்க.. சண்டை போடவோ, புரணி பேசவோ இது இடம் கிடையாது!” என்று விடுவாள் கறாராக.  

சிறு வயதில் இருந்தே ஒரு ஆளுமைத் தன்மை அவளிடம் எப்போதும் இருக்கும்.. வேலையாட்களிடம் வேலை கச்சிதமாக வாங்கிவிடுவாள்.  அந்த ஒரு அஆளுமைத் தன்மை தான் தைரியத்தை கொடுகிறது.. தனிமையை உணரவிடாமல் செய்கின்றது. 

மகன் விழித்து விட்டானா என்று எட்டிப் பார்த்து வர சுந்தரி வீடு செல்ல..  

அவள் அந்தப் பக்கம் செல்லவும்.. “உனக்கு வயசாச்சே தவிர அறிவு ஏதாவது இருக்கா.. சும்மா சின்னப் புள்ளைங்க முன்ன உன் காதல் கதையை சொல்ற.. அதுவும் சுந்தரி இருக்கக்குள்ள சொல்ற.. உனக்கு புத்தியிருக்கா.. அதுவே ஒத்தை புள்ளையா தனியா கெடக்கு..”

“நானும் என்ற மாமனும்ன்னு கதை பேசுவியா நீ” என கோபப்பட்டால் சிந்தாமணி.. ஆம் அது தான் அவளின் பெயர்.  

“கவனிக்கல புள்ள” என்றார் அந்தப் பெண்மணி பரிதாபமாக.

“அப்படி என்ன சுத்தி முத்தி கவனமில்லாம உன் மாமன் மேல காதல் உனக்கு!” என்றாள் சிந்தாமணி..

“ஏண்டி சினிமாக்கு போனதை சொன்னது ஒரு குத்தமா.. உனக்கு என் மாமியாரே பரவாயில்லைடி” என நொடிக்க..   

அவரை முறைத்த சிந்தாமணி “அப்போ சரி, என் பையனை கட்டிக்கோ.. நான் உனக்கு மாமியார் ஆகிடறேன்” என்றவள், “ஆனா உனக்குத் தெரியாததா, பையன் இனிமே தான் பொறக்கணும்.. அது நீ காத்திருக்கோணும்” என இழுத்துப் பேச,  

“ஆத்தாடி ஆத்தா, என்ன பேச்சு பேசறவ நீ.. இதெல்லாம் நமக்கு சரி படாதுடி.. கொஞ்சம் கூட இந்தக் காலத்து புள்ளைங்களுக்கு மரியாதையும் இல்லாமப் போச்சு.. வெக்கம்ன்றதே இல்லாம போச்சு!” என ஏகத்திற்கும் குறைபட..

அதற்குள் சுந்தரி மகனை தூக்கி வந்தாள்.. “உன் பையனை தூங்க வெச்சு தான் வந்திருப்ப.. அதுக்குள்ள முழிச்சிட்டானா.. என்ன கோழித் தூக்கம் தூங்கறான் உன் மவன்” என..

“அதுவா அவனையே கேளு” என்று கையில் இருந்தவனை சுந்தரி கொடுக்க முற்பட.. அம்மாவின் கழுத்தை விடுவேனா என்பது போலக் கட்டிக் கொண்டான் அபி என சுந்தரியினால் அழைக்கப் படும் அபராஜிதன்..

“செல்லம் அம்மாவை விடுடா.. கொஞ்சம் நேரம் அத்தை கிட்ட இரு” எனக் கொடுக்க..

அப்போதும் அபராஜிதன் முகத்தை நிமிர்த்தவேயில்லை..

அப்போது தான் அங்கே வந்த சின்னராசு.. “ஏம் புள்ள, அப்படி என்ன பையன் முகத்தை கூட பார்க்காத மாதிரி பயப்படுத்தி வெச்சிருக்க.. ஊட்டுக்காரன் என்னைத் தான் பயமுறுத்துறன்னா பாவம் பையனைக் கூடவா” என..

“தா வந்தியா.. பூவை ஏத்துனியா.. கிளம்பிக்கிட்டே இருக்கணும், சும்மா வியாக்கியானம் பேசக் கூடாது” என முறைக்க..

“இப்படிப் பார்த்தா பையன் பயப்படாம என்ன செய்வான்” என்றவன்.. “நீ வாடா ராசா” என கையை நீட்ட.. அவனிடம் தாவி வந்தவன் சிந்தாமணியைப் பார்த்து புன்னகை செய்ய..

“டேய், உன்ற மாமனோட சேர்ந்து என்னை நக்கலு செய்யறியா? அப்புறம் பொண்ணை பெத்துக் கொடுக்க மாட்டேன்” என..

“எத்தனை டி பெப்பே.. இப்போ தான் பையனை பெக்கணும் சொன்ன… இப்போ பொண்ணைச் சொல்ற?” என..

“அட, நீ வேற ஆத்தா.. அவ வாயிலயே வடை சுடுவா.. இங்கே ஒன்னுக்கே வழியைக் காணோம்” என அவளின் கணவன் சின்ன ராசு பேச..

“டேய், மவனே! நீ என்கிட்டே தனியா மாட்டாமையா போயிடுவ..” என்ற ஒரு லுக்கை அவனிடம் சிந்தாமணி செலுத்த..

“ஏன் ராசுண்ணா  உனக்கிந்த வேலை.. தனியா மொத்து தான் வாங்கப் போற” என்று சிறு புன்னகையுடன் சுந்தரி சொல்ல..

“அதெல்லாம் நமக்கு சகஜம்மா” என்றவன்..

“சும்மா வாய் தான் பேசுவா.. ஒரு புள்ளையை கரக்ட் பண்ண தெரியுதா?” என..

“இன்னும் உன்னையே அவ கரக்ட் பண்ணலை, அப்படித் தானே சிந்தா” என சுந்தரி சொல்லவும், அங்கிருந்த பெண்கள் எல்லாம் சிரிக்க.. சிந்தாமணி வெட்கப்பட..       

“சுந்தரி.. அப்படியே என் ஊட்டுக்காரம்மாவை ஒரு போட்டோ எடும்மா.. இப்படி எப்பவாவது தான் அதிசயமா வெட்கப்படுவா.. என் பொண்டாட்டியும் வெட்கப்படுவான்னு வரலாறு சொல்லனும்ல”

மீண்டும் கொல்லென்ற சிரிப்பொலி.. “உங்களை..” என சிந்தா துரத்த.. சுந்தரியின் பின் சென்று நின்றவன்.. “இப்போ அடிடி பார்க்கலாம்” என..

“சுந்தரி நீ தள்ளு”  

“அடியாத்தி நான் ஏன் தள்ளணும்.. நீ தாண்டிப் போய் அடிக்க மாட்டியா” என..

“சுந்தரி இது என்ன ஐடியா குடுக்கற நீ” என்று அலறுவது போல ஆக்ஷன் விட்டாலும், ராசு இருந்த இடத்தை விட்டு அசையவில்லை.. சிந்தாமணியும் இருந்த இடத்தை விட்டு அசையவில்லை.. வேலை செய்த களைப்பு போக சில நிமிடங்கள்..

அதிலும் அபராஜிதன் கைதட்டி சிரிக்க.. மகனை உச்சி முகர்ந்தால் சுந்தரி.. சிந்தாமணியும் சின்ன ராசுவும் அதனை தான் பாராதது போலப் பார்த்திருந்தனர்.. சின்ன ராசு சுந்தரிக்கு தூரத்து முறையில் அண்ணனாக வேண்டும்.. இப்போது சுந்தரி சொல்லும் வேலைகளைப் பார்த்துக் கொண்டு இருக்கிறான். 

இப்போது கணவன் மனைவி இருவரும் பார்ப்பது சுந்தரியும் அவளின் கையில் இருக்கும் அபராஜிதனும்..  அவர்களுக்குத் திருமணமாகி நான்காண்டுகள் ஆகிவிட்டன.. குழந்தை இல்லை.. ஆனால் அவர்களுக்குத் தெரிந்து ஒரு நான்கைந்து நாட்கள் தான் கணவன் வீட்டில் இருந்திருப்பால் சுந்தரி.. குழந்தை கையில்..      

பேச்சுப் பேச்சாக இருந்த போதிலும் பூக்கள் மூட்டையாகக் கட்டப் பட.. ஒரு பக்கம் அது எடை போடப் பட.. சுந்தரி சரி பார்க்க.. பின்பு மினி வேனில் லோடு ஏற்றப் பட்டது.

அபராஜிதனை சுந்தரியிடம் கொடுத்து.. பூ மார்க்கெட்டிற்குக் கிளம்பினான் சின்ன ராசு.. பின் எல்லோரும் வீட்டிற்குக் கிளம்ப.. “நான் கிளம்பட்டுமா சுந்தரி” என..

சுந்தரியின் முகத்தில் ஒரு தயக்கம் தெரிய.. “என்ன சுந்தரி?” என்றாள் வாஞ்சையாக சிந்தாமணி..

“நைட் இவன் சரியாவே தூங்கலை, முழிச்சிக்கிட்டே இருந்தேனா எனக்கு தூக்கமா வருது.. பாட்டியால தனியா பார்க்க முடியாது.. உனக்கு வேற வேலையில்லைன்னா கொஞ்சம் பார்த்துக்கறியா, நான் ஒரு தூக்கம் போடுவேன்”  

“அதுகென்ன ஏன் இப்படித் தயங்கற.. நீ தூங்கற தூக்கம் எனக்கு தெரியாதா.. வா, வா” என,

வீடு வந்தவர்கள் பாட்டியிடம், மகனை சிந்தாவிடம் விடுவதை சொல்லி உறங்க.. அவள் உறங்கும் வரை பொறுமையாக இருந்த  பாட்டி வடிவு…

“என் பையன் தான் கல்யாணம் செஞ்சும் கொஞ்சம் வருஷத்துலயே பொண்டாட்டி தவறி ஒத்தையா வாழ்ந்தான்னா என் பேத்தியும் அப்படியே ஆகிடுச்சே” என கண்கள் கலங்க..

“ஏ கெழவி, நீங்க பண்ணின தப்புக்கு இவ என்ன பண்ணுவா.. படிக்கற புள்ளைக்கு அவசரமா கல்யாணம் செஞ்சு வெச்சு.. எதுவுமே சரியில்லாமப் போச்சு.. ப்ச்” என்று உச்சுக் கொட்டியவள்.. “இன்னும் அவளுக்கு நிறைய வாழ்க்கை இருக்கு, என்னமோ முடிஞ்சு போன மாதிரி பேசாதே.. புருஷன் வேண்டாம்னு விவாகரத்து பண்ணினா வாழ்க்கை முடிஞ்சிடுமா.. கொஞ்சம் வருஷம் போகட்டும் நல்ல பையனா பார்த்து கண்ணாலம் பண்ணலாம்” 

“அருமையான புத்திசாலிப் புள்ளை.. உழைப்பாளி.. சோம்பி உட்காராம ஏதாவது வேலை செஞ்சிகிட்டே இருக்குது.. எவ்வளவு லட்சணமா இருக்கு.. என்ன மாநிறத்துக்கும் கொஞ்சம் குறைவா போயிட்டா..”

“சும்மா வீட்ல இருக்குற பெருசுங்க எல்லாம் பண்ணாட்டம் பண்ணி.. பையனுக்கு இஷ்டமா இல்லையான்னு கூடத் தெரியாம கல்யாணம் பண்ணி இந்தப் புள்ளைய வாழ விடாம பண்ணிட்டாங்க..”

“இந்தக் கொடுமையை எங்க போய் சொல்ல.. யாரு கேட்பா இதை..” என திரும்பவும் வடிவு கண்கள் கலங்க..

“ம்கூம், இது ஆகாது” என்று நினைத்தவள்.. “நான் பையனை வெளில விளையாட்டுக் காட்டுறேன்..” என்று வெளியில் வந்து அமர்ந்து கொண்ட சிந்தாமணியின் மனமும் கனத்துப் போனது..

ஆம்! சுந்தரிக்கு பதினெட்டாவது பிறந்த நாளின் அடுத்த நாளில் திருமணம்.. சரியாக பத்தாவது மாதத்தில் மகன்.. அதனையும் விட மகன் பிறப்பதற்கு முன்பே விவாகரத்து கிடைத்து விட்டது..

துரைகண்ணனிடம் இருந்த வந்த விவாகரத்து நோட்டிஸ் பார்த்த சில நாட்களில் ஏற்கனவே இதயம் பலகீனமாய் இருந்த அவளின் தந்தை இறந்து விட.. விவாகரத்து கொடுக்காதே என்று சொல்பவரோ.. திரும்ப அவளின் வாழ்க்கையை கருத்தோடு சரி செய்பவரோ இல்லாமல் போயினர். 

பிடிவாதத்தின் மறு பெயர் சுந்தரி என சொல்லலாம்.. ஒன்றை பிடித்து விட்டால் மாறவைப்பது இயலாத காரியம். தந்தையின் சொல் தவிர வேறு யாரின் பேச்சிற்கும் சிறு வயதில் இருந்தே செவி சாய்த்திராதவள்.. பாட்டி கரடியாய் கத்தியும், சொந்த பந்தங்கள் எடுத்து சொல்லியும் கேட்கவில்லை.. இந்த விஷயத்தில் எல்லோரும் ஒதுங்கிக் கொண்டனர். 

“வேண்டாம்” என்று சொல்லுபவனிடம்.. “எனக்கு வாழ்க்கை கொடு” என்று கெஞ்சவா முடியும்.. அதுவும் ஒரு பிள்ளையை கொடுத்து விட்டு வேண்டாம் என்று சொல்பவனை கொன்று விடும் ஆத்திரம் அந்த நாட்களில்.. அப்பாவின் இறப்பு.. அவளை வெகுவாக தளரச் செய்திருந்தது..  

“போடா” என இவளும் விவாகரத்திற்கு சம்மதித்து விட.. ஆறே மாதங்களில் எல்லாம் முடிந்து போனது.

விவாகரத்திற்கு ஆரம்பித்தது வேண்டுமானால் கண்ணனாய் இருக்கலாம்.. ஆனால் முடித்தது சுந்தரியே! 

இதற்கு துரைகண்ணனும் சிந்தாமணி பார்த்து வளர்ந்த பையனே.. நல்லவன், அமைதியானவன், யார் வம்பு தும்பிற்கும் போகாதவன்.. ஆனால் பிடிவாதமாய் இந்தப் பெண் வேண்டாம் என நிற்க.. கூடவே அவனின் சொந்த பந்தங்கள் ஒத்து ஊத.. தனியாளாய் அவனின் தந்தை என்ன செய்வார்.. ஆம்! இது அவர் முடித்த சமந்தம்.. தன் நண்பனின் மகள் என

எல்லாம் முடிந்தது!

பிடிவாதக் காரியாய் இருப்பதால் தான் என்னவோ ஒற்றைப் பெண்ணாய் எல்லாம் சமாளித்துக் கொள்கிறாள்.. ஆனால் உதவுவதற்கு அனேகம் பேர்.. சுந்தரி சொன்னால் அங்கே செய்வதற்கு கிராமத்தில் அத்தனை பேர் இருந்தனர்..

சேலம் மாவட்டத்தில் இருக்கும் நெய்காரப்பட்டி, அதுதான் அவளின் கிராமம் பெயர்.. அதே ஊர் தான் துரைகண்ணன்னுக்கும்.. இருவருக்கும் பக்கத்துக்கு பக்கத்துக்கு காடு.. அதன் மூலம் தான் இருவரின் அப்பாவும் சிறுவயதில் இருந்தே சிநேகிதர்கள்…

ஊருக்குள் எல்லாம் போகவேண்டியது இல்லை.. துரைக்கண்ணனின் வீடு பெரிய பங்களா.. சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும்.. அதனைத் தாண்டி பிறகு எல்லாம் அவர்களின் நிலபுலன்கள் தான்.. அவர்களின் நில புலன்களுக்கு அடுத்து சுந்தரியினுடையது.. அதன் கடைசியில் அவர்களின் வீடு.. ஒட்டு வீடு தான்.. துரைகண்ணனது போல பங்களா எல்லாம் இல்லை..

வசதி வாய்ப்பில் இருவரும் சமமானவர்கள் தான்.. ஆனாலும் சுந்தரி எல்லாவற்றிற்கும் ஒற்றை வாரிசு.. ஆனால் கண்ணனின் சொத்துக்கள் பங்கு பிரிக்கப் படவேண்டியவை.. கண்ணனின் அப்பா.. சித்தப்பா என இருவர் இருக்க.. அவர்களுக்கும் ஆளுக்கு இரு மக்கள்.. ஆதலில் நான்கு பங்குகள்..

அப்பாக்கள் இருவரும் மிகுந்த நண்பர்கள் என்றாலும் பிள்ளைகள் சந்தித்து கொள்ள வாய்ப்பு இல்லை.. கண்ணனின் வீடு ஒரு கோடியின் ஆரம்பம்.. சுந்தரியின் வீடு மறுகோடியின் முடிவு..

இந்தத் திருமணம் அப்பாக்களின் முடிவு.. பிள்ளைகளிடம் திணிக்கப் பட.. அது சில மாதங்கள் கூட நிலைக்கவில்லை.. திருமணதிற்கான பக்குவம் இருவரிடமும் இல்லை.. ஆனால் சுந்தரியின் மீது தவறு இல்லை அப்பா சொன்னதை தட்டாமல் செய்த பெண்..

கண்ணனுக்கும் இள வயதே.. பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு தேர்வுக்கு காத்திருந்த மாணவன்.. இஷ்டமேயில்லாத போது.. ஒரு திருமணதிற்கு தயார் இல்லாத போது.. கட்டாயப்படுத்தி செய்து வைக்கப் பட..

சுந்தரியின் தோற்றமும் பிடித்தம் இல்லை.. அவளுக்கு படிப்பும் இல்லை.. இது ஏற்கனவே மனதில் சிறு வெறுப்பாய் இருக்க..   அதன் பின் சில விரும்பத் தகாத நிகழ்வுகள் அவனிற்கு.. அதை எல்லாம் சுந்தரி மேல் திருப்பி.. பிடிவாதமாய் விவாகரத்திற்கு நின்றான்..

சிறிது காலம் போகட்டும் எதுவானாலும் பிறகு முடிவெடுக்கலாம் என்று அவனின் அப்பா எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை.. 

“கேட்டாயா.. பிடி.. வைத்துக் கொள்!” என்று கொடுத்து விட்டாள் சுந்தரி..      

 

Advertisement