Advertisement
அத்தியாயம்.4
“கெட்டிமேளம்… கெட்டிமேளம்…” என்ற ஒருவரின் குரலும் அதை தொடர்ந்து கெட்டிமேள சத்தமும் நாதஸ்வர இசையும் சேர்ந்து வர உற்றார் உறவினர்களின் ஆசிர்வாதங்களுடன் மதுமதியின் கழுத்தில் பொன்தாலி ஏறியது.
பெண்ணவளின் மார்பில் உரசிய மாங்கல்யத்தை தொட்டு அதில் மணமகன் குங்குமம் வைக்கும்போது அவன் கரத்தில் ஒரு சொட்டு தண்ணீர் வந்து விழுந்தது. அதன் பிறகே அவளை கவனித்தான். திருமணம் நடந்துவிட்ட மகிழ்ச்சி அவள் முகத்தில் துளியும் இல்லாமல் முகம் இறுகிப் போய் கிடந்தது.
அவனுக்குமே அதே நிலைதான். எதோ ஒரு வேகத்தில் சம்மதம் சொல்லி விட்டான். ஆனால் முழுமனதாக அவனால் இந்த திருமணத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவன் மீதே கோபம் கோபமாக வந்தது. கோபத்தை யார் மீதும் காட்ட முடியாமல் அமர்ந்திருந்தான்.
மாப்பிள்ளை மாறிவிட்டது. அவசர கல்யாணம் இப்படி எதுவும் சொல்ல முடியாத அளவுக்கு திருமணம் நடந்துக் கொண்டிருந்தது. ஒரு நைட்டுக்குள் தாலி, புடவை முதல் கொண்டு எல்லாமே புதிதாக வாங்கிவிட்டனர். ஒரே நைட்டுக்குள் அத்தனையும் செய்துவிட்டார் ராஜரத்தினம்.
சொந்தங்களுக்கு எல்லாம் போனிலே அழைத்து விட்டார். அவர்களும் திருமணத்திற்கு வந்துவிட்டனர். மகனின் திருமணம் யாரும் எந்த குறையும் சொல்லக்கூடது என்பதில் தெளிவாக இருந்தார். எந்த குறையும் இல்லாமல் திருமணமும் நடந்து முடிந்தது.
மணமக்களை வீட்டுக்கு அழைத்து கொண்டு முதலில் மணமகனின் வீட்டிற்கு வந்தனர். அவளுடன் ராகவேந்திரனும், சீதாவும் வந்தனர்.
கார் நின்றது கூட தெரியாமல் மதுமதி கண்களை மூடி அமர்ந்திருக்கவும் சீதா அவளின் கையை தொட்டு, “வீடு வந்துடுச்சு மது. இறங்கு.” என்றபிறகே சுயநினைவுக்கு வந்தவள் காரில் இருந்து இறங்கி நின்றாள்.
மணமக்களுக்கு ஆலம் சுற்றிய பின்னர் ரம்யா பிடித்து வைத்திருந்த நிறைகுடத்தை தூக்கி மதுமதியிடம் குடுத்துவாறே, “இத தூக்கிட்டு உள்ள போ மது.” என்றாள். அதை வாங்கி இடுப்பில் வைத்துக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தாள்.
சாமிக்கு விளக்கேற்றுவது, பால் பழம் சாப்பிடும் சடங்கு என எல்லாத்தையுமே இயந்திரம் போல செய்தாள். அவள் முகத்தில் துளிகூட மகிழ்ச்சி இல்லை. ராகவேந்திரனால் தங்கையை இப்படி பார்க்கவே முடியவில்லை.
அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் வெளியே சென்றுவிட்டான். மாப்பிள்ளை வீட்டில் செய்ய வேண்டிய சடங்கு அனைத்தும் முடிந்ததும் பெண் வீட்டுக்கு கிளம்பிவிட்டனர்.
மணமக்களுக்கு ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து சென்றனர். கணவனுடன் உள்ளே வந்த மதுமதி சுற்றி தன்வீட்டை பார்த்தாள். இத்தனை நாள் தன்னுடைய வீடாக இருந்த வீடு இன்று தனக்கு சொந்தம் இல்லாததை போல இருந்தது.
ஒருவேளை அவளுக்கு பிடித்த ஒருவனுடன் திருமணம் நடந்திருந்தால் இப்படி தோன்றி இருக்காதோ என்னவோ?
மதியின் அத்தை எல்லாருக்கும் ஜூஸ் கொண்டு வந்து கொடுத்தார். சூர்யாவுக்கு அங்கு இருக்கவே பிடிக்க வில்லை. ஜூசை கூட வாங்காமல் வெளியே வந்து விட்டான்.
அவன் அப்படி எழுந்து சென்றது அங்கிருந்த அனைவருக்குமே ஒரு மாதிரி ஆகிவிட்டது.
மதுமதிக்கு சொல்லவே வேண்டாம். கண்கள் கலங்கி விட்டது. அங்கிருந்தால் அழுது விடுவோம் என்பதை உணர்ந்ததும் யாரையும் பாக்காமல் தன்னுடைய அறைக்கு சென்று விட்டாள்.
மகளின் கலங்கிய கண்களை பார்த்த அழகம்மைக்கு மனதே விட்டு விட்டது. தாயாக பரிதவித்து நின்றார்.
தம்பியின் பின்னால் வந்த ரம்யா, “டேய் தம்பி என்னடா இப்படி பண்ணிட்ட?” என்றாள்.
“இவ்வளவு கூட ரியாக்ட் பண்ணலைன்னா நா சாதாரண மனுசனே இல்லைக்கா.” அவன் சொன்ன விதமே அவன் எந்த அளவுக்கு கோபமாக இருக்கிறான் என்பதை காட்டியது.
“இது தப்பு சூர்யா. நீ மாமா மேல இருக்க கோபத்தை வேற இடத்துல காட்டற? இதனால பாதிக்கப்படப்போறது அந்த பொண்ணு தான்.” என்றவாறே அங்கு வந்தான் சந்திரன்.
“நான் யார பத்தியும் கவலை படற நிலைமையை இல்லை மாமா. போதும் ஒருதடவை பரிதாப பட்டதுக்கே என்ன இங்க கொண்டு வந்து நிறுத்திருக்கு. இதுல இன்னொரு தடவை பரிதாப பட நான் தயாரா இல்லை.”
அவன் கெட்ட நேரமோ அல்லது மதுமதியின் கெட்ட நேரமோ சரியாக அந்த நேரம் ஜூஸ் டம்ளர் உடன் அங்கு வந்தவள் கணவன் பேசியதை கேட்டு மொத்தமாக நொறுங்கி விட்டாள்.
தனிமை வேண்டி அறைக்கு சென்றவளை அவளின் அத்தை தான், “மாப்பிள்ளை கிட்ட போய் இத குடு.” என சொல்லி ஜூஸ் டம்ளரை குடுத்து விட்டார்.
அவர் பொண்ணும், மாப்பிள்ளையும் தனியா இருந்தா எதாவது பேசுவாங்க. எல்லாம் சரியாகும் என நல்லது நினைத்து தான் அனுப்பி வைத்தார். ஆனால் அதுவே இருவருக்கும் பெரிய விரிசல் விழ காரணமாக அமைந்துவிட்டது.
ஆனால் இந்த முறை கண்கள் கலங்க வில்லை. விரக்தியாக சிரித்து கொண்டாள். எதர்ச்சியாக திரும்பிய ரம்யா மதி நிற்பதை பார்த்ததும் ‘ஐயோ சூர்யா பேசுனத கேட்டாளோ!’ என நினைத்தவள் தம்பி வேறு எதுவும் பேசாமல் தடுக்க கணவனின் காலை மிதித்து விட்டாள்.
அவள் மிதித்ததில் “ஆஆஆஆ….” என கத்தியவன் மனைவியை பார்த்து, “எதுக்கு டி மிதிச்ச?” என்றான்.
“என்ன விளையாடுறீங்களா நா எங்க மிதிச்சேன்?”
“அப்ப நா பொய் சொல்றேனா?”
“அது எப்படி எனக்கு தெரியும்!”
அவர்கள் சண்டையில் கடுப்பான சூர்யா, “ஏய் மாமா உனக்கு சண்டை போட நேரம் காலமே கிடையாதா? மனுசன் இருக்க நிலமை புரியாம…” என்று விட்டு திரும்பியவன் அங்கு நின்றிருந்த மனைவியை பார்த்தாலும் அவளை கண்டுக் கொள்ளாமல் கடந்து சென்றான்.
“அடேய் மாப்பிள்ளை. உங்க அக்கா என்னோட கால மிதிச்சாடா. அது ஏன்னு கேக்காம என்ன திட்டிட்டு போற.” என்றவாறே திரும்பியவன் மதுமதியை பார்த்ததும் அதிர்ந்தவன் மனைவியை தான் பார்த்தான். அப்போது தான் மனைவி எதுக்கு காலை மிதித்தாள் என்பதே புரிந்தது.
“சும்மா பேசிட்டு இருந்தோம். ஏன் அங்கையே நின்னுட்ட வாம்மா.” என சமாளித்தான்.
கணவனை போல் சமாளிக்காமல் நேரடியாக “சாரி மது… சூர்யா கொஞ்சம் கோபமா இருக்கான். அதான் எதோ கோபத்துல பேசிட்டு போறான்.” என மன்னிப்பு கேட்டாள்.
மதுமதி அதற்கு பதில் எதுவும் சொல்லாமல் அமைதியாக நின்றாள். ரம்யாவிற்கு அதற்கு மேல் என்ன பேசுவது என்றே தெரியவில்லை.
அந்த நேரம் சந்திரன் போனுக்கு சூர்யா அழைக்கவும், ‘இங்க இருந்து கிட்டு இவன் எதுக்கு போன் பண்றான்?’ என நினைத்துக் கொண்டு சிறிது தள்ளி வந்து அழைப்பை ஏற்றான்.
எடுத்த உடனே, “மாமா நான் போறேன் நீங்க வரீங்களா இல்லையா?” என்றான் சூர்யா.
“டேய் இப்போதான்டா வந்தோம் அதுக்குள்ள போனா தப்பா நினைப்பாங்க டா.”
“சரி அப்ப நீ இருந்துட்டு வா… நான் போறேன்.” என்று விட்டு போனை அணைக்க போனான்.
“அப்படி ஏதும் பண்ணிடாதடா. கல்யாணம் ஆனா அன்னைக்கே பொண்ண விட்டுட்டு நீ மட்டும் போனா அது தப்பாயிடும். கொஞ்ச நேரம் இரு. மதுவையும் கூட்டிட்டு போகலாம்.” என்றான்.
“சரி என்னமோ பண்ணுங்க. ஆனா பத்து நிமிஷம் தான் நா இங்க இருப்பேன். அதுக்குள்ள நீங்க வரல நான் கிளம்பி போயிட்டே இருப்பேன்.” என்று விட்டு போனை வைத்து விட்டான்.
“அட ச்சே… குடும்பமா இது? அப்பா மகன் பிரச்சனையில எந்தலைய உருட்டுறாயிங்க.” என புலம்பிக் கொண்டே மனைவியின் அருகில் வந்தான்.
அவன் முகம் டென்ஷனாக இருக்கவும், “என்னாச்சு ங்க? யார் போன்ல?” என்றாள். “எல்லாம் உன் கூட பொறந்த ஏழரை தான் வேற யாரு? என் உசுர வாங்குறதுக்குனே மாமாவுக்கு பையனா பொறந்துருக்கான்.” என கடுப்புடன் கூறினான்.
“அவனுக்கு இப்ப என்னவாங்க?”
“அவன் கிளம்பி போறானாம்.”
“இப்போதானே வந்தோம். அதுக்குள்ள போனா நல்லா இருக்காதுங்க.”
“அது அந்த பைத்தியக்காரனுக்கு புரிஞ்சாத்தானே. பத்து நிமிசத்துல வரலைன்னா பொண்டாட்டியை விட்டுட்டு போயிடுவானாம். சரி நீ போய் மதுவ கிளம்ப சொல்லு.” சூர்யா சொன்ன மாதிரி அடுத்த பத்து நிமிடத்தில் கிளம்பி விட்டனர்.
அவர்கள் கிளம்பி சென்ற பிறகு வெற்றிமாறன், “சூர்யா பாப்பா கிட்ட முகம் குடுத்து கூட பேசலண்ணா.” என்றான்.
ராகவேந்திரனுக்கும் அதே எண்ணம் தான். “நாம அவசரபட்டுட்டோம்ண்ணா.”
“இப்ப யோசிச்சு என்ன பண்றது வெற்றி? எல்லாம் முடிஞ்சு போச்சு.” என்றவனின் குரலில் குற்ற உணர்ச்சி மட்டுமே. தான் மட்டும் மாப்பிள்ளை பற்றி சரியாக விசாரித்து இருந்தால் தங்கச்சி இந்த நிலைமையே வந்திருக்காது. இதுக்கு எல்லாம் தான் தான் காரணம் என்ன குற்ற உணர்ச்சி அவனை கொன்றது.
இடிந்து போய் உக்கார்ந்திருந்த அம்மாவை பார்க்க முடியாமல் அறைக்கு சென்று விட்டான். முதலில் மாப்பிள்ளையாக பார்த்தவன் பேசியதே அவன் மனதில் ஓடிக் கொண்டிருந்தது. அவனால் நிம்மதியாக இருக்கவே முடியவில்லை.
அறைக்கு வந்த சீதா கணவன் இடிந்து போய் தலையை குனிந்து கொண்டு அமர்ந்திருப்பதை பார்த்து விட்டு அருகில் வந்தவள் அவனின் தோளை தொட்டாள். அடுத்த நொடி அவளின் இடுப்பை கட்டிக் கொண்டு கதறிவிட்டான்.
“நா தப்பு பண்ணிட்டேன் சீதா. என்னோட தங்கச்சி வாழ்க்கைய நானே கெடுத்துட்டேன். அன்னைக்கு நீ சொன்னப்பவே நா ஒழுங்கா விசாரிச்சிருக்கனும். பாப்பா பேச்சை கேட்டு விட்டுட்டேனே! எங்க அம்மா மூஞ்சில நா எப்படி முழிப்பேன்.” என விடாமல் புலம்பி விட்டான்.
அவனின் கதறல் அவளையும் கலங்க வைத்தது. “ப்ளீஸ்ங்க அழாதிங்க. எல்லாம் சீக்கிரமே சரியாகும்.”
“எப்படி சரியாகும் சீதா? நீயும் பார்த்தல சூர்யா நம்ம பாப்பா கிட்ட முகம் குடுத்துக்கூட பேசல. அவன் முகத்துல அவ்வளவு கோபம் தெரியுது. மண்டபத்துல எல்லாரும் ஃபோர்ஸ் பண்ணதால நம்மல மாதிரி அவனும் ஊருக்காக சம்மதம் சொல்லிருக்கான். அது அவன் முகத்துலயே தெரியுது.”
“அப்படி எல்லாம் எதுவும் இருக்காதுங்க. அவனுக்கும் இது திடீர்னு நடந்த கல்யாணம் தானேங்க. அந்த அதிர்ச்சியில் அப்படி நடந்துருப்பானுங்க. வேற ஒன்னும் இருக்காது. நீங்க பொறந்ததுல இருந்தே சூர்யாவ பாக்குறீங்க தானே உங்களுக்கு அவன பத்தி தெரியாதா? கண்டிப்பா நம்ம மதுவ நல்லா வச்சிப்பான்ங்க. நான் சொல்றத கேளுங்க.” அவனுக்கு புரிய வைக்க முயன்றாள்.
அந்த நேரம் அவளின் ஆறுதலான வார்த்தை அவனை கொஞ்சம் இலகுவாக்கியது. “இதெல்லாம் நடக்குமா சீதா. அவனுக்கு என்னோட தங்கச்சிய புடிக்கும் தானே?”
“நம்ம மதுவுக்கு என்னங்க குறை. புடிக்காம போறதுக்கு. அவள மாதிரி ஒரு பொண்ணு யாருக்கு தான் புடிக்காது. அதெல்லாம் சூர்யாவுக்கு மதுவ புடிக்கும்.” நம்பிக்கையாக கூறினாள்.
“அப்பறம் ஏன் சீதா அவன் என்னோட தங்கச்சிய வேண்டாம்னு சொன்னான்? என்னோட தங்கச்சிக்கு என்ன குறை?” மீண்டும் மண்டபத்தில் நடந்ததை நினைத்து புலம்ப ஆரம்பித்து விட்டான்.
அவனுடைய குற்ற உணர்ச்சி அவனை நிம்மதியாக விடவில்லை. சீதாவிற்கு அவனை எப்படி சமாதானபடுத்து என்றே தெரியவில்லை.
அன்றைய இரவு மொத்த குடும்பத்திற்கும் நிம்மதி என்பதே இல்லாமல் போனது.
Advertisement