Advertisement
அத்தியாயம்.12
மறுநாள் காலையில் தூங்கி எழுந்தவள் அருகில் படுத்திருந்தவனை பார்த்ததும், இரவு நடந்த வாக்குவாதம் அனைத்தும் நினைவுக்கு வந்தது.
சில நிமிடங்கள் அவனை பார்த்துக் கொண்டிருந்தவள் பின் அவன் தூக்கத்தை கலைக்காமல், எழுந்து பாத்ரூம் சென்று விட்டு அம்மாவை தேடி சென்றாள்.
கிச்சனில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவரின் அருகில் சென்றவள் அவர் வெங்காயம் பூண்டு உரித்து கொண்டிருப்பதை பார்த்துவிட்டு, “இன்னைக்கு என்ன சமையல் ம்மா?” என்றாள்.
“மாப்பிள்ளை வந்துருக்கார்ல அதான் கறி ஆக்கலாம்னு உங்க அண்ணன கறி எடுத்துட்டு வர போக சொல்லிருக்கேன். மாப்பிள்ளை ஆட்டுகறி சாப்டுவார்ல?” என்றார்.
“அதெல்லாம் சாப்டுவார்.” என்றவள், “இன்னைக்கு சனிக்கிழமை ம்மா. மறந்துட்டீங்களா? இன்னைக்கு போய் கறி ஆக்கறேன்னு சொல்றீங்க?” என்றாள்.
“அதனால என்ன? மறுவீட்டு விருந்துக்கு வந்ததுக்கு அப்பறம் இப்பதான் உன்னோட புருசன் நம்ம வீட்டுக்கு வந்துருக்கார். அவருக்கு வெறும் சோத்தையா போடுவ.” என்றார்.
“அதுக்கு இல்லைம்மா. நீங்க சாப்பிடமாட்டிங்கல. அதான் சொன்னேன்.”
“நான்தானே சாப்பிட மாட்டேன் நீங்க எல்லாரும் சாப்பிடுவீங்கல அப்பறம் என்ன?” என்றவர், “பேசிட்டு இருக்காம குழம்புக்கு மசாலா அரைச்சி வை. கோழி வேற புடிச்சு அடிச்சி வச்சிருக்கேன். அத போய் சுத்தம் பண்ற வேலைய பார்க்கறேன்.” என்றவர் அருவாள்மனை, கறிபோட பாத்திரம், மஞ்சள் தூள் எல்லாம் எடுத்துக் கொண்டு வீட்டுக்கு பின்புறம் சென்றார்.
“ஐயோ உங்க மாப்பிள்ளைய பத்தி தெரியாம எல்லாம் செய்யறீங்களேம்மா.. இப்ப கூட மாமா திட்டுனதால வந்துருக்காங்க. தூங்கி எழுந்ததும் போகப்போறாங்க. இது தெரியாம அம்மா வேற மாப்பிள்ளை வந்துருக்காங்கன்னு பார்த்து பார்த்து சமைக்கறாங்களே…” என புலம்பி கொண்டிருக்கும் போதே சூர்யாவும் எழுந்து அவளை தேடிக் கொண்டு அங்கு வந்துவிட்டான்.
சமையல் கட்டில் நின்றுக் கொண்டு மனைவி தனியாக பேசிக் கொண்டிருப்பதை பார்த்ததும் ‘என்னாச்சு இவளுக்கு தனியா பேசிட்டு இருக்கா?’ என நினைத்துக் கொண்டு அவளின் அருகில் சென்றவன், “என்ன மதி தனியா பேசிட்டு இருக்க?” என கேட்டான்.
அவன் குரலில் திரும்பியவள் “அதுக்குள்ள தூங்கி எழுந்துட்டிங்களா?” என பரபரத்தாள்
“புது இடமா இருக்கவும் சீக்கிரம் எழுந்துட்டேன். ஏன் என்னாச்சு?” அவளின் பரபரப்பை பார்த்து கேட்டான்.
“அதெல்லாமல் ஒன்னும் இல்லை. நீங்க எப்ப கிளம்புறீங்க?” என்றாள்.
‘அப்ப நா இங்க வந்தது இவளுக்கு பிடிக்கலையா? நைட்டும் இங்க எதுக்கு வந்திங்கன்னு கேட்டா.. இப்ப எப்ப கிளம்புவிங்கன்னு கேக்கறா?’ என்றுதான் நினைத்தவன்,
“என்ன நான் மட்டும் கிளம்பி போற மாதிரி கேக்குற? நீயும் தானே வர? நைட் பேசுனது எல்லாம் அதுக்குள்ள மறந்துடுச்சா???”
“அது தெரியும். உங்களுக்கு தான் எங்க வீட்டில இருக்கறது புடிக்காதே. கிளம்பி வெளிய போய்டுவீங்கதானே. அதான் கேட்டேன்.”
‘நான் எப்ப இங்க வரது பிடிக்காதுனு சொன்னேன். என்ன இவ பாட்டுக்கு எதையோ உளரா?’ என நினைத்தவன், “நீயே என்ன தொரத்தி விட்ருவ போல இருக்கு.” என்றான்.
“நான் எதுக்கு தொரத்த போறேன். உங்களுக்கு புடிக்காதேன்னு கேட்டேன்.”
“அதெல்லாம் நான் பாத்துக்கிறேன். சீக்கிரம் கிளம்பு நாம ரெண்டு பேரும் சேர்ந்து தான் போறோம்.”
“அம்மா வேற கல்யாணத்துக்கு அப்புறம் இப்பத்தான் நீங்க வந்துருக்கிங்கன்னு கறி ஆக்கறாங்க. நீங்க சாப்டாம போனா ரொம்ப கஷ்டபடுவாங்க. இன்னும் கொஞ்ச நேரம் இருந்து சாப்பிட்டு போலாம்.”
‘ஓஓஓ இவ்வளவு நேரம் அவ்ளோட அம்மா கஷ்டபடக்கூடாதுன்னு தான் இவ்வளவு பொறுமையா பேசிட்டு இருக்காளா? அதானே பாத்தேன் என் பொண்டாட்டியாவது இவ்வளவு இறங்கி வந்து எங்கிட்ட பேசறதாவது’ என நினைத்துக் கொண்டான்.
அவன் பதில் ஏதும் சொல்லாமல் இருக்கவும் அவன் முடியாது என சொல்லிவிடுவானோ என பயந்தே விட்டாள்.
“ப்ளீஸ் சூர்யா. அம்மாவுக்காக இத மட்டும் பண்றீங்களா?” என்றாள்.
‘எதே சூர்யாவா? புதுசா பேர் எல்லாம் சொல்றா என் பொண்டாட்டி. ஆனா இதுவும் நல்லாத்தான் இருக்கு.’ என நினைத்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல், “நீ இவ்வளவு தூரம் சொல்றதால இருக்கேன்.” அவள் கேட்டதுக்காக ஒத்துக் கொள்வதை போல பேசி வைத்தான்.
“அப்படி ஒன்னும் நீங்க இருக்க தேவை இல்லை. கிளம்புங்க.” என சொல்ல அவள் வாய் பரபரத்தாலும் அம்மாவுக்காக பொறுத்துக் கொண்டாள்.
“மதுகண்ணு குடிக்க கொஞ்சம் தண்ணி கொண்டு வாடா.” என்ற தாத்தாவின் குரல் கேட்கவும், தண்ணீருடன் அவனை கடந்து சென்றாள்.
அவனுக்கும் தான் வந்ததிலிருந்து அவரை இன்னும் பார்க்காதது நினைவு வரவும் அவனும் அவளின் பின்னால் சென்றான்.
“இந்தாங்க தாத்தா.” தண்ணீர் செம்பை அவரிடம் கொடுத்தாள். தண்ணீரை வாங்கியவர் “யார்ட்ட கண்ணு பேசிட்டு இருந்த, குரல் கேட்டுச்சு. ஒரம்பரை ஏதும் வந்துருக்காங்களா?” என்றார்.
“ஒரம்பரை எல்லாம் இல்லை தாத்தா. உங்க பேத்தியோட புருசன் தான் வந்துருக்கேன்.” என்றவாறே அங்கு வந்தான்.
அவனை நிமிர்ந்து பார்த்தவர் “வா கண்ணு. காலைல தான் வந்தியா?” என்று கேட்டார் .
“இல்லை தாத்தா நைட்டே வந்துட்டேன். நீங்க எப்படி இருக்கீங்க?” என்றவாறே அவரின் அருகில் கட்டிலில் அமர்ந்தான்.
“எனக்கென்ன கண்ணு நா நல்லாத்தான் இருக்கேன்.”
“என்ன தாத்தா ஒரு மாசத்துக்குள்ள ரொம்ப எளைச்சி போய் இருக்கீங்க? சாப்பிடுறீங்ளா இல்லையா? உடம்பை பாத்துக்கோங்க தாத்தா.”
‘என்ன திடீர்னு தாத்தா மேல பாசம் இருக்கற மாதிரி பேசுறாங்க?’ என புரியாமல் அவனை பார்த்தவள் அங்கிருந்து சென்றாள்.
“இத்தனை வயசுக்கு அப்பறம் உடம்ப பாத்து என்ன செய்ய போறேன். கண்ணு. நட உடையா இருக்கற அப்பவே போய் சேர்ந்துட்டா போதும். அதுதான் என்னோட வேண்டுதலே.”
“என்ன தாத்தா உங்க கடைசி பேரன் கல்யாணத்த பாக்கனும்னு ஆசை இல்லையா? அதுக்குள்ள போகனும்னு பேசிட்டு இருக்கீங்க.”
“அதெல்லாம் நம்ம கைலயா இருக்கு கண்ணு. பொண்ணு அமைஞ்சாதானே கல்யாணம் எல்லாம். அதுக்கு இன்னும் எத்தனை காலம் ஆகுமோ? அது வரைக்கும் நான் உசுரோட இருப்பேனோ என்னவோ!” என்றார்.
“அதெல்லாம் இருப்பீங்க தாத்தா. பொண்ணு நான் பாக்கறேன். உங்க தலைமைல தான் கல்யாணமே. அதுக்கு நீங்க ஜம்முனு வந்து நிக்க வேண்டாமா? நல்லா சாப்பிட்டு உடம்ப நேத்தி வைங்க.” அவன் அப்படி சொன்னதும் ஆசை அவரின் முகத்தில் தெரிந்தது.
“நீ சொன்ன மாதிரி நடந்தா சரிதான் கண்ணு.” என்றார்.
“அதெல்லாம் கண்டிப்பா நடக்கும் தாத்தா. கவலைபடாதீங்க.” அவனின் அந்த பேச்சு அவருக்கு மிகப்பெரிய ஆறுதலை தந்தது.
“இந்த ஒரு மாசமா மருமக முகத்துலையும் சந்தோசமே இல்லை. நான் வேற அவசரபட்டு மருமகள கல்யாணத்துக்கு சம்மதம் சொல்ல வச்சி என் பேத்தி வாழ்க்கைய கெடுத்துட்டேனோனு பயந்தே போயிட்டேன். இப்ப உன்ன பாத்ததும் தான் மனசே நிம்மதி ஆச்சு கண்ணு. இனி என் மருமகளும் பேத்திய நினைச்சு கவலை படாம நிம்மதியா இருப்பா.” அந்த வார்த்தையை சொல்லும் போது அவர் கண்களில் மருமகளின் மேல் வைத்திருக்கும் பாசத்தை அவனால் உணர முடிந்தது.
“ஏன் தாத்தா உங்களுக்கு உங்க மருமக மேல அம்புட்டு பாசமா?” திடீரென கேட்டான்.
” மருமக மட்டும் இல்லைனா இன்னைக்கு எங்க குடும்பம் இல்லை. பையன் அல்பாயுசுல போனதும் ஒத்த ஆளா நின்று எங்க குடும்பத்தையே தூக்கி நிறுத்துனது என் மருமகதான். அவ என்னோட மருமகன்னு சொல்றத விட மகள்னு சொல்லனும். நான் நடக்க முடியாம கட்டில்ல உக்கார்ந்து ரெண்டு வருசம் ஆகிப்போச்சு. இப்ப வரையிலும் பெத்த மக மாதிரி எனக்கு எல்லாம் செய்யறா. அவ எங்க வீட்டு குலசாமி கண்ணு. நாளைக்கு நா செத்தாக்கூட கொள்ளி அவளைத்தான் போட சொல்லிருக்கேன். அவ போட்டா தான் என் கட்ட வேகும்.” பேச பேச அவரின் கண்களில் இருந்து கண்ணீர் வந்து விழிந்தது.
சூர்யா வாயடைத்து போய் அவர் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தான்.சொந்த மகனின் பசங்களான பேரப் பசங்க இருக்கும் போது மருமகள் தனக்கு கொள்ளி போடனும் என்று சொல்றது எவ்வளவு பெரிய வார்த்தை. அந்த வார்த்தையை அவர் சொன்னதுமே அவர் தன் மாமியாரின் மீது எவ்வளவு மரியாதை வைத்திருக்கிறார் என்பதை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.
உள்ளுக்குள் அவனையறியிமலே மாமியாரின் மீது மரியாதை வந்தது. அவரிடம் பேசிவிட்டு வெளியே வந்தவன் வெற்றியை பார்த்து விட்டான்.
வெற்றி அப்போது தான் கறி எடுக்க சென்றுவிட்டு வீட்டுக்கு வந்து பைக்கை நிறுத்தியவன் சூர்யாவை பார்த்தும் இரவு நடந்தது அனைத்தும் நினைவுக்கு வந்தும் கோபம் கோபமாக வந்தது. ஆனாலும் அதை அவனிடம் காட்டாமல் அம்மா தங்கச்சிக்காக அமைதியா போக வேண்டியது இருக்கே’ என நொந்துக் கொண்டான்.
“என்ன மச்சான் காலைலயை ஜாலியா சுத்திட்டு வர போல இருக்கு.” அவனை வம்பிழுக்கவே கேட்டான்.
வெற்றி பதில் ஏதும் சொல்லாமல் அவனை முறைத்து விட்டு செல்லவும் அவன் முன்னால் போய் நின்று தடுத்தவாறே, “என்ன மச்சான் எதுவும் பேசாம போற?” என்றான்.
“எனக்கு நிறைய வேலை இருக்கு. உன்கிட்ட பேசி நேரத்தை வீணடிக்க எனக்கு விருப்பம் இல்லை. வழி விடு.” என்றவாறே பல்லை கடித்தான்.
“என்ன மச்சான் பொசுக்குனு இப்படி சொல்லிபோட்ட. நான் உன்னோட தங்கச்சி புருசன்.” என்றதும்,
“டேய் காலைலயே என்ன டென்ஷன் பண்ணாம போய்டு. அப்பறம் நான் என்ன பண்ணுவேன்னே தெரியாது.” என எரிந்து விழுந்தவன் அவனை தாண்டி கொண்டு உள்ளே சென்றுவிட்டான்.
“அச்சோ பாவம் மச்சான் ரொம்ப சூடா இருக்கான் போல!” என உச்சுக்கொட்டியவன் திண்ணையில் போய் உக்கார்ந்துக்கொண்டான்.
இங்கே உள்ள வந்த வெற்றி “என்ன வெறுப்பேத்தனும்னே எல்லாம் பண்றான். எல்லாம் அம்மா சொன்னாதுக்காக பொறுத்து போக வேண்டி இருக்கு.” இருந்த எரிச்சலில் அவனை திட்டிக் கொண்டே சமையல் அறைக்கு சென்றான்.
வேலை செய்து கொண்டிருந்தவள், “யார அண்ணா திட்டிட்டே வர?” அவன் கையில் இருந்த பையை வாங்கிக்கொண்டு கேட்டாள்.
“வேற யாரு. எல்லாம் உன்னோட புருசனத்தான். அவன் கிட்ட சொல்லி வை. என்ன ரொம்ப டென்ஷன் பண்றான். அப்பறம் நான் எதாவது சொல்லிடுவேன். அப்பறம் நீ என்ன கோவிச்சிக்க கூடாது பாப்பா.” என்றான்.
‘ம்க்கும் அப்படியே நா சொல்றத கேட்டுட்டு தான் மறுவேலை.’ என நினைத்தவள், “அவங்க உங்க ப்ரண்டு தானே. நீங்களாச்சு அவங்களாச்சு. என்ன விட்டுருங்க.” என்றாள்.
“அவன் ஒன்னும் எனக்கு பிரண்டு எல்லாம் கிடையாது. அவன் என்னோட பிரண்டுனு சொல்லாத.” முறுக்கிக் கொண்டான்.
“நீங்க ரெண்டு பேரும் ஒரே ஸ்கூல், ஒரே க்ளாஸ்ல தானே படிச்சீங்க. அப்பறம் பிரண்டுனு சொல்லாம வேற என்னனு சொல்றது ண்ணா?”
“ஒரு க்ளாஸ்ல படிச்சா பிரண்டா? என்ன பேசற நீ? உன்னோட புருசன் கூட எல்லாம் எவனும் பிரண்டா இருக்க முடியாது. சரியான திமிர் புடிச்சவன் தெரியுமா???” என்றதும்,
“எனக்கு எப்படி தெரியும்ண்ணா. உன்னோட பிரண்ட் பத்தி உனக்கு தான் தெரியும்.” என்று அவனை மேலும் வெறுப்பேற்றினாள்.
“திரும்ப அவன என்னோட பிரண்டுனு சொல்லாத பாப்பா. எரிச்சலா வருது.” முகம் சிவக்க கூறினான்.
“சரி சரி சொல்லல போதுமாண்ணா.” என்ற பிறகே அவனது கோபம் குறைந்தது.
“அம்மா எங்க?” என வெற்றி கேட்டதும்,
“அம்மா பின்னாடி கோழிய சுத்தம் பண்றேன்னு போனாங்க.”
“இதெல்லாம் ரொம்ப ஓவர் பாப்பா. இதுவே நாம சனிக்கிழமை கறி ஆக்க சொன்னா நல்ல நாளும் அதுவுமா கறி திம்பாங்களான்னு நம்மள எப்படி திட்டுவாங்க. ஆனா இப்ப மருமகன் வந்துருக்கான்னு ஆடு கோழின்னு விதம் விதமா செய்யறாங்க அம்மா. எனக்கு இது பாத்தா கோபம் கோபமா வருது.” கடுப்பாக கூறினான்.
“ஏன் ண்ணா உனக்கு அவங்க வந்தது பிடிக்கலையா?” அவனின் கோபத்தை பார்த்து கேட்டுவிட்டாள்.
“ஏய் நான் அப்படி சொல்லல பாப்பா. பதறி விட்டான். மருமகனுக்காக ரொம்ப வருச பழக்கத்தை மாத்தறாங்களேங்ற கோபத்துல தான் சொன்னேன். என்ன தான் இருந்தாலும் அவன் உன்னோட புருசன். பிடிக்கலைன்னு ஒதுக்கவா முடியும். இருந்தாலும் அவன பார்த்தா கோபம் கோபமா வருது. என்னை என்ன பண்ண சொல்ற.” என்று அவளிடமே கேட்டவன்,
“இனிமே அவன் கிட்ட கோபபடாம பேச முயற்சி பண்றேன் பாப்பா. என்ன பண்றது அவன்கிட்ட இப்படி பேசிப்பேசி பழகிடுச்சு.” என்றான்.
அண்ணனின் மனநிலை புரிந்ததால் “நான் சும்மா தான் கேட்டேன் அண்ணா. நீ ஏன் இவ்வளவு விளக்கம் குடுக்குற.” என்றாள்.
“நீ எதுவும் நினைச்சிக்கல தானே பாப்பா.” திரும்பவும் கேட்டான்.
“ஐயோ அண்ணா. நான் எதுவும் நினைச்சிக்கல போதுமா? நீ போய் கறி அரிஞ்சிட்டு வர வேலைய பாரு. உன்னோட மாப்பிள்ளை சீக்கிரம் போகனும்னு சொன்னாங்க.” என்றாள்.
“ஏன் தொரைக்கு ஒரு நாள் கூட நம்ம வீட்ல தங்க முடியாதாமா? என்ன நினைச்சிட்டு இருக்கான் அவன். இரு நான் அவன் கிட்ட கேக்கறேன்.” என்று விட்டு கோபத்துடன் வெளியே செல்லப் போனான்.
அவனின் கையை பிடித்து தடுத்து நிறுத்தியவள், “இப்ப எதுக்கு ண்ணா கோபபடற? அவங்களுக்கு எதோ வேலை இருக்கும் போல ண்ணா. அதான் போகனும்னு சொன்னாங்க. கூட நானும் தான் போறேன்.” என்று கூறி தடுத்துவிட்டாள்.
“நீ இப்படி அவன் இழுத்த இழுப்புக்கு எல்லாம் போறது எனக்கு சுத்தமா பிடிக்கலை பாப்பா. நா அவ்வளவு தான் சொல்வேன். அப்புறம் உன்னோட விருப்பம்.” என்று விட்டு கோபத்துடன் வெளியேறி விட்டான்.
அண்ணனின் கோபம் புரியத் தான் செய்தது. ஆனாலும் அவளே சூழ்நிலை கைதியாக இருக்கும் போது அவளால் என்ன செய்ய முடியும்???
Advertisement