Advertisement
“என்ன அத்த புதுசா பாக்கற மாதிரி பாக்கறிங்க?” என்றவள் “புருசன் பொண்டாட்டிக்குள்ள சண்டைன்னு சொன்னீங்களே யாரு அத்த?” திரும்ப கேட்டாள்.
அதில் தெளிந்தவர், “அது எங்க சொந்தக்கார பொண்ணு ஒருத்தி புருசன் கூட சண்டை போட்டு அம்மா வீட்டுக்கு வந்துட்டா. அது பத்தி பேசிட்டு அம்மாகிட்ட சொல்லிட்டு இருந்தேன் மதி கண்ணு.” சில நொடிக்குள் பேச்சை மாற்றிவிட்டார்.
“ஓஓஓ… அது அவங்க வீட்டு பிரச்சினை அது நமக்கு எதுக்கு அத்த. நம்ம வீட்டு பிரச்சினையே தலைக்கு மேல இருக்கு. நமக்கு எதுக்கு மத்தவங்க வீட்டு பஞ்சாயத்து எல்லாம்.” என்றாள்.
“நீ சொல்றதும் சரிதான் கண்ணு. நானும் எதோ நினப்புல காதுல கேட்டத சொல்லிப்புட்டேன்.”
“அதை விடுங்க அத்த… நீங்க எப்படி இருக்கீங்க? வீட்ல மாமா எப்படி இருக்காங்க?” என்றாள்.
“எதோ இருக்கேன் கண்ணு.” என்றவர், “என்ன விடு நீ எப்படி இருக்க கண்ணு? உன்னோட புருசன் கூட வராம நீ மட்டும் தனியா வந்துருக்க?” கேட்டார்.
“ஏனுங் அத்த எங்க வீட்டுக்கு நான் தனியா வரக்கூடாதா?” திருப்பி அவரையே கேள்வி கேட்டாள்.
“அப்படி இல்லை கண்ணு. இப்போதான் புதுசா கல்யாணம் ஆகிருக்கு. புருசன் கூட வராம தனியா வந்தா ஊருக்குள்ள ஆள் ஆளுக்கு எதாவது பேசுவாங்க. அத கேட்டா உங்க அம்மாவுக்கு தானே கஷ்டமா இருக்கும். அதுக்கு சொன்னேன்.” என்றார்.
“எங்க அம்மா மத்தவங்க மாதிரி ஊர் ஆளுங்க என்ன பேசுவாங்கன்னு கவலை படறவங்க இல்லை அத்த. அதனால் நீங்க எங்கள பத்தி கவலைபடாதிங்க.” என்றுவிட்டாள்.
இவ்வளவு நேரம் அக்கறையாக பேசிக் கொண்டிருந்தவரின் முகம் அவள் பேச்சில் சுருங்கி விட்டது. அவர் கேள்வி பட்டு வந்ததுக்கு சம்பந்தமில்லாமல் அழகம்மை, மதுமதி இருவரும் பேசவும் வாய் விட்டு கேட்கவும் முடியாமல் சிரித்துக் கொண்டே பேசிவிட்டு கிளம்பினார்.
சரியாக அந்த நேரம் சூர்யாவின் அப்பாவும் அம்மாவும் வண்டியில் வந்து இறங்கினர்.
கிளம்பி கொண்டிருந்த பெண்மணியை பார்த்து, “என்ன ராசாத்தி அக்கா இந்த பக்கம்?” என்றார்.
“சும்மா தான் சாந்தி. என்ன புருசன், பொண்டாட்டி ரெண்டு பேரும் காலையிலையே சம்பந்தி வீட்டு பக்கம்?” அவர்கள் வந்த விசயம் தெரிந்து கொள்ள கேட்டார்.
“ஊர்ல இருந்து மருமக வந்துருக்கால்ல அதான் பார்த்துவிட்டு போலாம்னு வந்தோம் அக்கா.” என்றவர் அங்கு நின்றிருந்த மருமகளிடம், “உனக்கு பிடிக்குமேன்னு மீன் குழம்பு வச்சி கொண்டு வந்துருக்கேன். போய் சாப்பிடு கண்ணு.” என்றவாறே மருமகளிடம் கொண்டு வந்த பையை கொடுத்தார்.
“சரி நீங்க பார்த்துட்டு வாங்க நா அப்படியே கிளம்பறேன்.” என்றார் அந்த பெண்மணி.
சாந்தி, “ஏங்க அக்காவ கூட்டிட்டு போய் வீட்ல விட்டுட்டு வரீங்களா?” என்றதும் ராஜரத்தினம் மனைவியை முறைத்தார்.
“வரும் போது நடந்துதானே வந்தாங்க. இப்பவும் நடந்தே போயிடுவாங்க.” என்றுவிட்டார்.
ராஜரத்தினத்துக்கு அந்த பெண்மணியை சுத்தமாக பிடிக்காது. அது குரலில் வெளிப்பட்டது.
“தம்பிக்கு வேலை இருக்கும். விடு சாந்தி. நா நடந்து போயிக்குவேன்.” என்றவாறே கிளம்பி விட்டார்.
அந்த பெண்மணி கிளம்பியதும் அழகம்மை, “உள்ள வாங்க அண்ணா. அண்ணி நீங்களும் வாங்க.” என்று விட்டு மகளை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றார் அழகம்மை.
அவர்கள் உள்ளே சென்றதும், “ஏன் டி உனக்கு அறிவே இருக்காதா? அந்த பொம்பளையை போய் என்ன கொண்டு போய் விட சொல்ற? நம்மகிட்ட நல்லா பழமை பேசிட்டு அந்தபக்கம் போய் நம்மளயே கேவலமா பேசும். இப்பக்கூட மருமக ஊருக்கு வந்துருக்கறத பத்திதான் விசாரிக்க வந்துருக்கும்.” என்றார்.
“அது எப்படி எனக்கு தெரியும். அவ்வளவு தூரம் நடந்து போகனும்னு சொன்னேன்.” அவர் குரலே உள்ளே போய் விட்டது.
“உன்ன என்ன தான் பண்றதோ எனக்கு தெரியலை டி. சிரிச்சி பேசிட்டா அப்படியே நம்பிடற.” கணவன் திட்டியதும் வாயை மூடிக் கொண்டார்.
ராஜரத்தினம், “என்ன கண்ணு கையில கட்டு எல்லாம் போட்ருக்கன்னு மாப்பிள்ளை சொல்றான். என்ன ஆச்சு? உன்னோட புருசனுக்கும் உனக்கும் எதாவது சண்டையா? எதுவா இருந்தாலும் எங்ககிட்ட சொல்லு கண்ணு. நாங்க அவன் திட்டுறோம்.” என்றார்.
“அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க மாமா. அவங்க என்ன நல்லாத்தான் பாத்துக்கறாங்க.”
“அப்பறம் ஏன் கண்ணு. நீ மட்டும் தனியா வந்துருக்க? உன்கூட ஊருக்கு வர முடியாத அளவுக்கு தொரைக்கு அங்க அப்படி என்ன வெட்டி முறிக்கற வேலை.” ராஜரத்தினம் தான் கோபமாக கேட்டார்.
“உண்மையாவே அவங்களுக்கு ஆபீஸ்ல வேலை மாமா. அதான் என்ன மட்டும் அனுப்பி வச்சாங்க. நீங்க கோபப்படாதிங்க.” சாமாளிக்க முயன்றாள்.
“நீ என்ன தான் என்னை சமாளிக்க சொன்னாலும் அவன் உன்ன இப்படி தனியா மாப்பிள்ளை கூட அனுப்பி வச்சது எனக்கு இது பிடிக்கலை கண்ணு. அவனே வந்து உன்ன கூட்டிட்டு போகாம நீ ஊருக்கு போகக்கூடாது சொல்லிட்டேன்.” என்றுவிட்டார்.
கணவன் சொன்னதை கேட்டு சாந்தி தான் பதறி விட்டார். அவருக்கு தான் மகனை பற்றி தெரியுமே.
“என்னங்க பேசுறீங்க? அதான் மருமகளே ஒன்னும் இல்லைன்னு சொல்லுதே அப்பறம் ஏன் நீங்க பிரச்சினை பண்றீங்க?” என்றார்.
“நீ வாய மூடு இதுக்கெல்லாம் காரணமே நீதான் டி. இப்படி தனியா வந்தா ஊர்ல என்ன பேசுவாங்கன்னு உனக்கு தெரியாதா? அதும் இரத்த காயத்தோட புள்ள வந்துருக்குனு சின்ன மாப்பிள்ளை சொன்னதுமே பயந்தே போயிட்டேன். எதோ இக்கட்டான சூழ்நிலையை கல்யாணம் நடந்துருச்சுங்றதுக்காக உனக்கும் உன்ர மகனுக்கும் ஏ மருமக எளக்காரமா போயிட்டாளா? அவளுக்கு ஒன்னுன்னா நான் கேட்பேன்.” என்றுவிட்டார்.
“என்னங்க இப்படி எல்லாம் பேசுறீங்க, எனக்கு மட்டும் கவலை இல்லையா?”
“அந்த கவலை இருந்துருந்தா இவ்வளவு நேரத்துக்கு உன்ர மகனுக்கு போன போட்டு இங்க வர சொல்லி என்ன ஏதுன்னு விசாரிச்சுருப்ப. இனி இந்த மாதிரி நடக்க கூடாதுன்னு கண்டிச்சிருப்ப.”
“அண்ணி கிட்ட நீங்க இப்படி பேசறதுல எனக்கு விருப்பம் இல்லை அண்ணா. அவங்களே அவங்க பிரச்சினையை சமாளிக்க முடியும்ங்கிறதால தான் நம்மகிட்ட அதபத்தி எதுவும் சொல்லல. அப்படி இருக்கப்ப மூனாவது மனுசங்க நாம இதுல தலையிடாம இருக்கிறதுதான் நல்லதுங்ண்ணா.” என்றார் அழகம்மை.
“அப்படி சொல்லுங்க அண்ணி. இவர் இப்படி எதாவது பேசி முடிஞ்சத திரும்ப ஆரம்பிச்சி விட்டாலும் விட்டுடுவார்.”
“ப்ளீஸ் மாமா! என்ன காரணமா வச்சி உங்களுக்குள்ள சண்டை போடாதிங்க. அது எனக்கு பிடிக்கல. நான் தான் சொல்றேன்னு எங்களுக்குள்ள எந்த பிரச்சனையும் இல்லை. நாங்க சந்தோசமா தான் இருக்கோம். என்ன நம்புங்க மாமா.” என்றாள்.
“நீ சொல்றது உண்மையா இருந்தா அதுவே எனக்கு போதும் கண்ணு. அன்னைக்கு சொந்த பந்தம் முன்னாடி நான் கேட்டதும் அழகு மறுபேச்சு பேசாம சம்மதம் சொன்னுச்சு. இன்னைக்கு இவ்வளவு நடந்த பிறகும் அழகு ஒரு வார்த்தை எங்ககிட்ட கோபமா கேட்காம எங்களுக்காக இப்பவும் பேசுது. அதுக்காகவாவது நீங்க சந்தோசமா வாழனும். அதுதான் என்னோட ஆசை.” என்றார்.
“உங்க மாமா சொல்றதுதான் நானும் சொல்றேன் கண்ணு. உன் புருசன் கொஞ்சம் கோபக்காரன் தான். முரடன் கிடையாது. கோபத்துல தான் சட்டுனு வார்த்தையை விட்டுடுவான். அப்புறமா அது தப்புன்னு தோனுனா மன்னிப்பும் கேட்டுருவான். நீ கொஞ்சம் அவன் புரிஞ்சிட்டு விட்டுக் கொடுத்துப் போ கண்ணு. எல்லாம் சரியாகிடும்.” மகனை விட்டுக் கொடுக்காமல் மாமியாராக பேசினார்.
“அப்பவும் உன்னோட மகன் மாறமாட்டான். என்னோட மருமக மட்டும் விட்டுக் கொடுத்துப் போகனுமா? அதெல்லாம் முடியாது. கண்ணு நீ இவ சொல்ற மாதிரி எல்லாம் கேட்காத. அவன் என்ன பெரிய ஆளா? நீ விட்டுக் கொடுத்து போறதுக்கு. உனக்கு எது சரின்னு படுதோ அது மட்டும் செய். மீறி எதாவது பேசுனானா எங்கிட்ட சொல்லு அவன நான் பாத்துக்கிறேன்.” என்றார்.
“நல்ல மாமனார் வெளங்கிடும். ஒரு பெரிய மனுசனாட்டமா பேசறாரு. புள்ளைங்கள வாழ வைக்க அட்வைஸ் பண்ண சொன்னா இவரே பிரிச்சு வச்சி விட்டு வந்துடுவார் போல. மது கண்ணு இவர் சொல்ற எல்லாம் கேட்காத. முடிஞ்சா இந்த மனுசன்கிட்ட பேசாம இரு. இல்லைனா அதையும் இதையும் பேசி உன்னோட மண்டைய கழுவி விட்ருவாரு.”
“என்னடி நான் சொன்னதுல என்ன தப்பு இருக்கு. பொம்பள புள்ளைங்களே தான் விட்டு கொடுத்து போகனுமா? இது ஒன்னும் அந்த காலம் கிடையாது. புருசன் சொல்றதுக்கு எல்லாம் தலையாட்றதுக்கு. அவங்களும் படிச்சிருக்காங்க. வேலைக்கு போய் சம்பாதிக்கறாங்க. எந்த வகையிலையும் உன்னோட மகனுக்கு என் மருமக சளைச்சவ இல்லை.” என்றார்.
“பாருங்களேன் இத்தனை நாள் இது தெரியாம நீங்க சொல்றதுக்கு எல்லாம் தலையாட்டிட்டு இருந்துருக்கேன். என்ன பண்றது உங்க மருமகளுக்கு கிடைச்ச மாதிரி மாமனார் எனக்கு கிடைக்காம போயிட்டார். சரி பரவால இப்பதான் என்ன கெட்டு போச்சு. நானும் வேலைக்கு போறேன் நாலு காசு சம்பாதிக்கறேன். புருசன என்ன சேதினு ஒரு கை பாக்குறேன். என்னோட அறிவு கண்ணு திறந்து வச்சதுக்கு ரொம்ப நன்றிங்க.” கணவன் பேசியதை கணவனுக்கே திருப்பி குடுத்தார் சாந்தி.
மனைவி பேசியதை கேட்டு, ‘அடேய் ராஜரத்தினம் நீயே இப்படி வாயகுடுத்து மாட்டிக்கிட்டையேடா!’ உள்ளுக்குள் நொந்தே விட்டார்.
ராஜரத்தினம், “என்னம்மா பேசற… நான் என்ன உன்ன அப்படியா நடத்தறேன். இதுவரையிலும் உன்னோட பேச்ச மீறி எதாவது செஞ்சிருக்கேனா சொல்லு.” கெஞ்சும் குரலில் கேட்டார்.
“ஒன்னா ரெண்டா… சொல்ல ஆரம்பிச்சா ஒருநாள் பத்தாது.” அவரும் விடாமல் கணவனை வம்பிழுத்தார்.
“ஐயோ சாந்திமா… இதெல்லாம் நம்ம வீட்ல போய் வச்சிக்கலாமே.” விட்டால் அழுது விடுவார் போல.
“சரி சரி எதுவும் பேசல… உள்ள போகலாம் வாங்க.” என்றுவிட்டு சென்றார் சாந்தி.
அழகம்மையும், மதியும் இருவரும் பேசுவதை கேட்டு சிரித்துகொண்டே அவர்களுடன் உள்ளே சென்றனர்.
Advertisement