Advertisement

“என்ன கலாட்டா இது ரவி?” என்று கேசவன் கேட்க,
“சே, சே, கலாட்டா எல்லாம் இல்லை. என்னை விட இவன் என்ன பெஸ்ட்ன்னு எனக்கு தெரியணும்” என்றான் பிடிவாதமான குரலில்.
விசாலி வீட்டினர் இல்லையென்றால் ஷர்மியின் பரிமாணம் வேறாய் இருக்கும் அவர்கள் இருப்பதினால் அமைதி காத்தாள்.
“இங்க பெஸ்ட் வொர்ஸ்ட் எல்லாம் எதுவுமில்லை, என் பொண்ணுக்கு பிடிக்கணும் அவ்வளவு தான்” என்றார் கேசவன். மறைமுகமாக “என் பெண்ணிற்கு உன்னை பிடிக்கவில்லை” என்ற செய்தி இருந்ததோ.  
இது இன்னுமே ரவியின் ஆத்திரத்தை கிளப்பியது.
“சரி அவனை பத்தி சொல்லட்டும், உங்க பொண்ணுக்கு ஏன் பிடிச்சதுன்னு பார்க்கறேன்”
அதுவரை அமைதியாய் இருந்த ஷர்மிக்கு அந்த வார்த்தைகள் கோபத்தை கொடுக்க, “ஏய், என்ன?” என்றாள் அவன் புறம் திரும்பி.
எப்போதும் ரவியிடம் அவள் பேசும் பாங்கு அதுதானே,
“அச்சோ, என்ன செய்ய போகிறானோ?” என்று எல்லோரும் பார்க்க,
“என்ன?” என்றான் அவளிடம் அமைதியாய்.
“எனக்கு பிடிச்சிருக்குன்னு நீ சொல்வியா? தேவை இல்லாதது பேசின தொலைச்சிடுவேன்” என்றாள் முகம் சிவக்க.
“அப்போ பிடிக்கலையா?” என்றான் ஆசுவாசமடைந்து.  
அவனை திரும்பி நேருக்கு நேராய் பார்த்தவள், “இது உன்னோட பிசினெஸ் பேச்சு கிடையாது நீ கேம் ப்ளே பண்ண, வாயை மூடிட்டு உட்காரு, ஒரு பேச்சு கூடப் பேசக் கூடாது” என்றாள் அதிகாரமாக. இதனை சப்தமாக சொல்லவில்லை மெதுவாக சொன்னாள். சன்னக் குரலில் என்னவோ அதட்டுகிறாள் என்று எல்லோருக்கும் புரிந்தது, ஆனால் என்ன என்று புரியவில்லை.  
கூடவே அவ்வளவு அருகில் அவனுடன் இதுவரை அமர்ந்ததில்லை, பேசியதுமில்லை. என்னவோ போல இருக்க “சந்தோஷ், நீ இந்த பக்கம் வா” என்று அவனை அழைத்து இருவருக்கும் நடுவில் அமருமாறு, இவள் நகர்ந்து அமர்ந்து கொண்டாள்.
கூடவே “சசிம்மா” என்று சமையலறையின் உள் குரல் கொடுத்தவள், “சாப்பிட, குடிக்க ஏதாவது கொண்டு வாங்க” என்று குரல் கொடுத்தவள்,
மாப்பிள்ளையின் புறம் திரும்பி “நான் ஷர்மிளா, பி ஈ இப்போ தான் முடிச்சேன், என் அம்மா இறந்துட்டாங்க, இது என் அப்பா, என் அண்ணா, இது மட்டும் தான் என்னோட குடும்பம். ஆனா எங்கப்பாக்கு இன்னொரு மனைவி இருக்காங்க, அதுல எனக்கு ஒன்னும் ஆட்சேபனை இல்லை. உங்களை பத்தி சொல்லுங்க” என்றாள்.
அவன் “நரேன்” என்று ஆரம்பிக்க “வேற சொல்லுங்க” என்றாள்.
“வேறன்னா, புரியலை” என்றான் அவன்.
“உங்க அப்பா, அம்மா, கூடப் பிறந்தவங்க எங்க இருக்காங்க, அவங்க ஏன் உங்களோட வரலை, உங்க வீடு எங்க இருக்கு, உங்க பூர்வீகம் என்ன? வேற சொல்ற மாதிரி உங்க சொந்த பந்தங்கள் யாரு? உங்களோட பின் புலம் என்ன? அதாவது சொத்துக்கள். இல்லை அப்பா ஏதாவது தொழில் பண்றாரா, எந்த காலேஜ் நீங்க? எந்த பேட்ச்? என்ன மேஜர், உங்க சோசியல் மீடியா அக்கௌன்ட் என்ன? ஃபேஸ்புக் ல இருக்கீங்களா?” என்று அடுக்கினாள்.                   
விசாலியின் வீட்டினர் அவளின் கேள்விகளில் அசந்து விட்டனர். விசாலிக்குமே ஷர்மியின் இந்த பரிமாணம் தெரியாது. அதுதானே “இந்த வீட்டுலயே நம்ம ஆளு தான் புத்திசாலி. ஆனா பாவம் அவனை இண்டர்வியு பண்றா” என்று ரவி மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.
“அப்பா, அம்மா இல்லை”  
“சொந்த ஊர் எது? என்ன சொல்வாங்க உங்க குடும்பத்தை?” என்றாள்.
நரேனின் முகம் சிறுத்து விட.. “உங்களை அவமானப் படுத்த எல்லாம் கேட்கலை, பொண்ணை கல்யாணம் பண்ணி குடுக்க இதெல்லாம் கேட்பாங்க, இங்க அப்பா கேட்டரான்னு எனக்கு தெரியலை, ஆனா எனக்கு தெரிஞ்சிக்கணும் அதனால் கேட்கறேன்” என்றாள் தன்மையாகவே.
“அப்பாம்மா சின்ன வயசிலயே தவறிட்டாங்க, சொந்தக்காரங்க உதவில தான் படிச்சேன். விசாலி அக்கா கூட எனக்கு நிறைய உதவி பண்ணியிருக்காங்க, சொத்து எல்லாம் எதுவும் கிடையாது, இப்போதைக்கு மேன்ஷன்ல இருக்கேன், கல்யாணம் ஃபிக்ஸ் ஆன பிறகு வீடு பார்க்கணும், முடிஞ்சா லோன்ல வீடு வாங்கிடலாம்னு இருக்கேன்” என்றான்.
“என்ன சம்பளம் உங்களுக்கு?” என்றான் சந்தோஷ், அவனுக்கு மாப்பிள்ளையின் இந்த பதில்களில் திருப்தியில்லை. ஷர்மிளாவின் எதிர்பார்ப்பு இது கிடையாது. அவர்களின் வசதிக்கு இப்படி ஒரு மாப்பிள்ளை அசலில் பார்த்தால் பெண்ணிற்கு என்ன குறையோ என்று தான் சொல்வார்கள்.   
“அறுபதாயிரம்”
“நல்ல சம்பளம் தான், நல்ல வேலை தான், ஆனா தப்பா எடுக்காதீங்க, நாங்க இன்னும் ஷர்மிக்கு அதிகமா எதிர்பார்க்கிறோம் என்று விட்டான் சந்தோஷே..
ரவீந்திரன் சுவாரசியமாய் எல்லாம் கவனித்து கொண்டிருந்தான். இந்த வரன் தகையாது என்று அவனுக்கே தெரிந்து விட்டது.
விசாலி கேசவனின் முகத்தை முகத்தை பார்த்தாள், அவர் எதுவும் பேசுவாரோ என்று. கேசவன் அமைதியாய் நடப்பதை பார்த்துக் கொண்டிருக்க, “இதென்னா பிள்ளைகளை பேச விட்டு வேடிக்கை பார்க்கிறார்” என்று தான் அங்கிருந்தவர்களுக்கு தோன்றியது. 
ஷர்மிளாவின் முடிவு தான் திருமணத்தில் என்பது கேசவனின் முடிவு. அவளாய் திருப்தியானால் தான் உண்டு. அவளின் எதிர்பார்ப்பு தவறென்று சொல்ல முடியாது. ஆனால் மணமகன் தகையவில்லையே என்ற வருத்தம் அவரின் ஆழ் மனதில் உண்டு.   
“இதென்ன பெரியம்மா என்னை கூட்டிட்டு வந்து அவமானப் படுத்தறீங்களா?” என்றான் கோபமாக நரேன்.
“இதுல அசிங்கப்படுத்த என்ன இருக்கு நரேன். நீங்க என் தங்கச்சியை பொண்ணு பார்க்க வந்திருக்கீங்க, உங்களுக்கு பார்த்துட்டு பிடிக்கலைன்னாலும் பிடிக்கலை தானே சொல்லியிருப்பீங்க” என்றான் சந்தோஷ்.
“சொல்லியிருக்க மாட்டேன், எனக்கு பிடிக்கலைன்னாலும் பெரியம்மா சொன்னா கல்யாணம் பண்ணியிருப்பேன்”  
“ஆனா அப்படி என் தங்கைக்கு கல்யாணம் பண்ணனும்னு எங்களுக்கு எந்த அவசியமும் இல்லை. வசதி வாய்ப்புகள் இன்னும் வேணும்”
“எதுக்கு சந்தோஷ் வசதி வாய்ப்பு. பையன் நல்லவன், படிச்சிருக்கான், வேலைல இருக்கான், என்ன சொத்து, பத்தோ, நாம வாங்கி கொடுக்கலாம். வேலை திருப்தி இல்லைன்னா நாம அதான் இந்த தம்பி கிட்ட இருக்கே அந்த தொழிலை குடுக்கலாம்” என்று விசாலியின் அம்மா சொல்லிவிட..
அங்கே ரவியின் பேச்சை நிறுத்துவதற்கு யாராலும் முடியவில்லை. ஷர்மிளாவாலும் கூட.. ஆடித் தீர்த்து விட்டான்.   
இறுதியில் “யார் சொத்தை பத்தி யார் பேசறது?” என்றவன். கேசவனை பார்த்து “இப்போ சொல்றேன் கேட்டுக்கங்க, இந்த நிமிஷம் உங்க பார்ட்னர்ஷிப் நான் கேன்சல் பண்றேன், நாம போட்ட டீட் ( deed ) ல அந்த கிளாஸ் இருக்கு, எப்போவேணா நான் உங்களை வெளில அனுப்பலாம்னு. உங்க கிட்ட ஒரு காபி இருக்கும் படிச்சு பாருங்க, நானா குடுக்கறது தான் உங்களுக்கு செட்டில் மென்ட், அதுவும் அதுல தெளிவா இருக்கும் படிச்சு பாருங்க”
“இந்த மாதிரி உங்களை ஒரு நிலைமைக்கு கொண்டு வரணும்னு நான் நினைச்சதில்லை. ஆனா நீங்க என்னை வர வெச்சிட்டீங்க. என்னை நீங்க ஏதாவது பண்ணிட்டா தொழில்லன்னு ஒரு ஜாக்கிரதைக்கு வெச்சேன். அதே மாதிரி நீங்க என்கிட்டே இருந்து பிடுங்க பார்க்கறீங்க”  
“அந்த ஃபாக்டரியோட மதிப்பு என்ன தெரியுமா, அத்தனையும் என்னோட உழைப்பு, உங்களுக்கு தான் உங்க லாபம் குடுக்கறேன். ஆனா எனக்கு வர்றதை திரும்ப திரும்ப அதுல தான் போட்டுட்டு இருக்கேன். கூடிய சீக்கிரம் அதை பப்ளிக் லிமிடட் கம்பனி ஆக்கப் போறோம், ஒரு ஒரு நாளும், ஒரு ஒரு நிமிஷமும், நான் என்னோட உழைப்பை போட்டா, நீங்க தூக்கி குடுப்பீங்களா? குடுக்கறதானா உங்க பரம்பரை தொழிலை குடுங்க, என்னோடதை குடுக்க இளிச்சவாயன் நான் தான் கிடைச்சனா?”
“நீங்க போலிஸ் போங்க, கோர்ட் போங்க, கேஸ் போடுங்க இல்லை ரௌடிங்க கிட்ட பஞ்சாயத்துக்கு போங்க, என்ன வேணா பண்ணுங்க, உங்களால முடிஞ்சதை பார்த்துக்கோங்க, ஒத்தை பைசா என்கிட்ட இருந்து வாங்க முடியாது”
“உங்க பொண்ணு சொல்லுவா கும்பகோணத்துல இருந்து பழைய டிரஸ் போட்டுட்டு மஞ்சைபையை தூக்கிட்டு ரப்பர் ஸ்லிப்பரை போட்டுட்டு வந்தேன்ன்னு”
“அப்படி வந்தவன் எவ்வளவு அச்சீவ் பண்ணியிருக்கேன்னு உங்களுக்கு தெரியலை, தெரிய வைக்கிறேன், ஒன்னு உங்களோட பார்ட்னர்ஷிப் கேன்சல், இன்னொன்னு உன்னோட பேப்பர் கம்பனி என்னோட உதவியில்லாம நீங்க எப்படி நடத்துறீங்கன்னு நான் பார்க்கறேன்”
“உங்க புதுசா வந்த மனைவியோட சொந்தம் சொன்னா என்ன வேணா யோசிப்பீங்களா? அப்போ நான் யாரு? உங்க முன்னாள் மனைவியோட சொந்தம் தானே!”
“கதற விடறேண்டா உங்களை” என்று சொல்லி அவன் வேகமாய் வெளியேறிவிட..
கேசவன் அப்படியே அமர்ந்து விட்டார்.
யாருக்கு தெரியுமோ தெரியாதோ அவனின் திறமைகள், அவருக்கு தெரியும் தானே, சொன்னதை செய்வான்!
ஆனால் அவருக்கு தெரியாதது சொல்லாததையும் செய்வான்.
சந்தோஷும் அப்பாவை பார்த்து தடுமாறி நிற்க.. “பா, பார்த்துக்கலாம் விடுங்க” என்று அப்பாவிடம் இரண்டு வருடங்களுக்கு பிறகு பேசியவள்,
“சாரி மிஸ்டர் நரேன், யாரோ உங்களை மிஸ் கைட் பண்ணியிருக்காங்க, நமக்குள்ள கல்யாணம் எல்லாம் பாசிபிள் இல்லை, நீங்க எங்கப்பாவோட சொந்தக்காரரா போயிட்டீங்க, சோ, உங்களுக்கு எங்கப்பாவோ இல்லை அவரை சேர்ந்த யாரோ ஃபால்ஸ் ஹோப் குடுத்திருந்தா அதுக்காக நான் மன்னிப்பு கேட்கறேன்.. வி ஷால் பார்ட் அஸ் பிரண்ட்ஸ்” என்று மரியாதை நிமித்தம் பேச..
என்னவோ அவனுடைய மேலதிகாரி அவனிடம் பேசும் தோரணை தான்!
அவனுக்குமே புரிந்தது, அவளுக்கும் அவனுக்கும் பொருந்தாது. இந்த கம்பீரம் இந்த ஆளுமை எல்லாம் அவன் குடும்பம் நடத்த சரி வராது என்று.
புன்னகையோடே “இட்ஸ் ஓகே, நான் யோசிச்சு இருக்கணும், இவங்க என்னவோ உங்க கல்யாணம் நடக்கலை, தள்ளி போகுது சொன்னாங்க சோ, நான் யோசிக்கலை வந்துட்டேன்” என்று சொல்லிவிட
ஷர்மிளா விசாலியின் அம்மாவை பார்த்த பார்வையில் அவர் பொசுங்கி போகவில்லை. இதுவரை விசாலியிடம் அவள் பேசியதே இல்லை அவளிடம் திரும்பியவள் ,
“உங்க வீட்டு ஆளுங்க உங்களை பார்க்க வரட்டும், போகட்டும், ஆனா என்னை பத்தின பேச்சு அவங்க பேசக் கூடாது. இந்த மாதிரி வேலை இனி செய்யவே கூடாது, மீறி செஞ்சாங்க, ஒன்னு இந்த வீட்ல நீங்க இருக்க மாட்டீங்க, இல்லை நாங்க இருக்க மாட்டோம், அதாவது நானும் சந்தோஷும்” என்று சொல்லி அவள் முடிக்கவில்லை,
சந்தோஷின் கைபேசி இசைக்க..
ஃபாக்டரியில் இருந்து ஃபோன்.. “சர், ஒரு யூனிட்ல தீ விபத்து, பெருசா பரவறதுக்குள்ள தடுத்துட்டோம், ஆனா ஞாயித்துக்கிழமை ஆளுங்க கம்மி, அதனால் அணைக்க டைம் ஆகிடுச்சு, கொஞ்சம் சேதாரம் தான்”  
“இப்போ வர்றேன்” என்று சந்தோஷ் கிளம்ப,
கேசவனின் கைபேசி இசைத்தது, அழைத்தது ரவி, எடுத்ததும் “இது ஜஸ்ட் சேம்பிள் தான்” என்றான்.
சந்தோஷிற்கு என்ன தகவல் வந்தததென்றே இன்னும் அவருக்கு தெரியவில்லை, ரவி வைக்கவும் சந்தோஷ் சொல்லவும்.. ஓய்ந்து அமர்ந்து விட்டார்..         
கூடவே “இது ரவி செஞ்சது” என்று சொல்ல, மொத்த வீடும் ஸ்தம்பிக்க, சந்தோஷும் ஷர்மிளாவும் அதிர்ந்து நின்றனர்.              
      
      
  
       
                                
     
  
        
          

Advertisement