Advertisement

அத்தியாயம் எட்டு :
ஷர்மிளா இதோ படிப்பையே முடித்து விட்டாள், அவளிடம் சொல்லவில்லை என்றாலும் மாப்பிள்ளை பார்த்துக் கொண்டே இருக்க அது அமையவேயில்லை..
கேசவனுக்கு அது அப்படி ஒரு கவலையை கொடுத்தது… கேசவன் கவலைப் படுவது விசாலிக்கு கவலையை கொடுத்தது..   
விசாலி அந்த வீட்டின் பொறுப்பை முழுதாய் எடுத்துக் கொண்டாள் என்று தான் சொல்ல வேண்டும். அவள் எப்பொழுதும் போல அவளின் ஐ டி கம்பனியின் வேலையில் தொடர்ந்து கொண்டும் இருந்தாள்.
விசாலியுடனான வாழ்க்கை கேசவனுக்கு ஒரு நிம்மதியை பூரணத்துவத்தை கொடுக்க, அவருக்கு வாழ்க்கையில் இருந்த ஒரே கவலை அப்போதைக்கு ஷர்மிளாவின் திருமணம் மட்டுமே!
சந்தோஷும் படிப்பை முடித்து அப்பாவுடன் முழு நேரமும் இணைந்து கொண்டான். சந்தோஷ் விசாலியுடன் பொருந்தி போக, தனியாய் நின்று விட்டது ஷர்மிளா மட்டுமே!
எங்காவது திருமணம் செய்து கொடுத்தால் வீட்டை விட்டு போய் விடலாம் என்ற எண்ணம் அவளுக்குமே ஸ்திரமாய் மனதில் இருக்க, அதுதான் அமையவேயில்லை. அமையவேயில்லை என்பதனை விட அமைய ரவீந்திரன் விடவில்லை.. அவனின் தொழிலில் வைத்த கவனத்தை விட ஷர்மிளாவின் மீது வைத்த கவனம் அதிகம்.
அவனால் தான் திருமணம் தடை படுகிறது என்பதனை யாரும் அறியாமல் செய்தான். அவனுக்கு ஒரு பக்கம் நேரமும் நன்றாய் இருக்க, யாராலும் இதனை அனுமானிக்க முடியவில்லை. மற்றொரு புறம் நேரம் நன்றாய் இல்லாமல் இருக்க ஷர்மிளாவினோடு அவனின் திருமண பேச்சை யாரும் பேசவேயில்லை.
சீதாவுடன் பேசுவதையே அவன் நிறுத்தி இருந்தான். அவர் பெண் கேட்க மாட்டேன் என்று சொல்லிவிட்ட கோபம் தங்கி விட பேசுவதில்லை.
சீதாவிற்கும் இதற்காகவாவது பெண் கேட்க வேண்டும் என்று தோன்றவில்லை. அவனின் அம்மா அல்லவா. அவனின் பிடிவாதம் இருந்தது. நடக்காத ஒன்றிற்கு ஆசைப் படக் கூடாது என்பதாக.    
விசாலியிடம் குறையென்று சொல்ல எதுவுமில்லை.. மிகவும் நல்ல பெண்ணே.. ஷர்மிளாவிடம் இரண்டு மூன்று முறை பேச முயற்சி செய்து அவளுக்கு அது பிடிக்கவில்லை என்று புரிந்து ஒதுங்கி விட்டாள்.
இதுவரை ஷர்மிளா ஒரே விட்டில் இருந்தாலும் விசாலியிடம் பேசியதேயில்லை. அவளுக்கு விருப்பமில்லை, அதற்காக விசாலியை அவமதித்தால் என்று சொல்ல முடியாது, கண்டு கொள்ள மாட்டாள். அவளையும் கண்டு கொள்ள விட மாட்டாள்.
விசாலியிடம் மட்டுமல்ல கேசவனிடமும் அவரின் திருமணதிற்கு முன்பிருந்தே பேசுவது இல்லை தானே!
இப்போதெல்லாம் உண்பது கூட அவளின் அறையில் தான். டீவீ பிரிட்ஜ் முதற்கொண்டு அவளின் ரூமில் தனியாய் வைத்து கொண்டு அவளுகென்று ஒரு உலகம் அமைத்து கொண்டாள்.
எப்போதும் மேடை ரகசியம் பேசும் அவளின் குரல் அந்த வீட்டில் கேட்பதே இல்லை. முடிந்தவரை சந்தோஷ் அவளுக்காக பார்த்து பார்த்து செய்தான்
“அண்ணா டேய், நான் என்னை பார்த்துக்குவேன். சும்மா சின்ன பொண்ணு மாதிரி என்னை ட்ரீட் பண்ணாதே” என்று கடிந்து விடுவாள்.
அவளுக்கிருந்த ஒரே பிரச்சனை விசாலியின் வீட்டினர் அவர்களின் மகள் வீட்டிற்கு அடிக்கடி போக வர இருக்க, அவர்கள் வரும் போது மட்டும் டென்ஷன் ஆகிவிடுவாள். அவளின் திருமணம் பற்றிய கவலைகள், பேச்சுக்கள், எல்லாம் அப்போது தாராளமயமாக்குதல் ஆகி விடும்.
இப்போதும் அப்படி தான் விசாலியின் அம்மா வந்திருக்க, அவர் ஒரு ஜாதகத்தை ஷர்மிளாவிற்காக கொண்டு வந்திருந்தார். அங்கே ஆரம்பித்தது தான் பிரச்சனை, கேசவனிடம் “எங்க சொந்தம் தான் மாப்பிள்ளை பையன், படிச்சிருக்கான், நல்ல வேலைல இருக்கான், பார்க்கவும் நல்லா இருப்பான்”
“அப்பா அம்மா கிடையாது. நாமளே எல்லாம் கொடுத்து நம்மளோட வெச்சிக்கலாம். பொண்ணும் நம்மளோடவே இருப்பா. பக்கமா வீடு வாங்கி கொடுத்துடலாம். பின்ன பையன் வேலைக்கு போறதானா போகட்டும். இல்லை அந்த வருமானம் நமக்கு தோது படாதுன்னு நினைச்சா நம்மகிட்ட பேப்பர் கம்பனி இல்லாம கம்பி பாக்டரி இருக்காமே, அதை கொடுக்கலாம்” என்று திட்டமிட்டார்.
“இல்லை அந்த தொழில் ரவி கொடுக்க மாட்டான்” என்றார் கேசவன்.
“அவன் யாரு கொடுக்க மாட்டேன் சொல்றதுக்கு, கொடுத்து தான் ஆகணும்னு நாம சொல்லுவோம்”
இத்தனை நாளாய் வரன் தகையாததில் கொடுத்து தான் ஆகவேண்டும் என்று சொல்ல வேண்டும் என்ற முடிவிற்கு கேசவனும் வந்து விட்டார்.
ரவி எனும் மனிதனை கெட்ட மனிதனாய் மகள் மாற்றியிருக்க, அப்பாவின் செய்கை ராட்சசனாய் மாற்ற போகிறது என்பதனை அவர் அறியவில்லை. இந்த பேச்சுக்கள் எல்லாம் ஷர்மிளாவிற்கு தெரியவில்லை.
மீண்டும் ஒரு ஞாயிறு மாலை வர, ரவியை வீட்டிற்கு அழைத்தான் சந்தோஷ், கேசவன் சொல்லி. அந்தோ பரிதாபம் அவன் வருவது தெரியாமல் விசாலியின் அம்மா அவர் சொன்ன மாப்பிள்ளையை அழைத்து வந்திருந்தார். அவருடன் விசாலியின் தங்கை, அவளின் மாப்பிள்ளை, விசாலியின் தம்பி அவளின் மனைவியும் வந்திருந்தனர். பார்ப்பதற்கு நன்றாகவே இருந்தான். கேசவனுக்கு பார்த்ததும் சற்று திருப்தியாகிவிட்டது. ரவி இன்னும் வந்திருக்கவில்லை.
இப்போது ஷர்மிளாவை யார் வரச் சொல்வது என்ற கேள்வி. சந்தோஷை அனுப்பி வைத்தனர். “அப்பா அவ மாப்பிள்ளை பத்தி விவரம் கேட்பா” என்றவனிடம்,
“எதுவும் சொல்லாம கூட்டிட்டு வா, அவளுக்கு பிடிச்சிருந்தா பின்ன விவரம் சொல்லிக்கலாம்” என கேசவன் சொல்ல, விசாலிக்கு தான் பதட்டமாய் இருந்தது. அவளுக்கு பிடிக்க வேண்டும், கேசவனின் கவலை குறைய வேண்டும் என்பதாய்.
மாப்பிள்ளை பையன் வந்தவுடனேயே வீட்டின் செல்வ செழிப்பை பார்த்து வாயை பிளந்து விட்டான்.
“என்ன பொண்ணுக்கு இனிமே தான் என்னை பிடிக்கணுமா பெரியம்மா, நீங்க சொல்லிட்டீங்க அதனால எனக்கு பொண்ணு எப்படி இருந்தாலும் பிடிக்கும்” என்று ஐஸ் வைக்க,
“அந்த பொண்ணு ஒரு முசுடு, விடு அவங்கப்பா கிட்ட பேசி எப்படியாவது கல்யாணத்தை முடிச்சிடறேன். உன்னை விட நல்ல மாப்பிள்ளை அவளுக்கு கிடைக்குமா?” என்று சொல்ல,
அம்மாடி! இந்த வார்த்தை மட்டும் ஷர்மியின் காதில் விழுந்திருந்தால் அவ்வளவு தான், அவளின் திருமணம் முடிக்கிறாரோ இல்லையோ, விசாலியின் அம்மாவை அவள் முடித்திருப்பாள்.
சந்தோஷ் வந்து சொல்லவுமே “யார்? என்ன?” என்று கேட்க,
“பிடிச்சிருந்தா அதுக்கு பிறகு விவரம் பேசிக்கலாம், நீ வா!”  
ஷர்மியும் ஒன்றும் பிகு எல்லாம் செய்யவில்லை, “போ, ஒரு பத்து நிமிஷத்தில் வர்றேன்” என்று சந்தோஷை அனுப்பிவிட்டு ஒரு சாஃப்ட் சில்க் புடவை கட்டி பொருத்தமாய் அணிமணிகள் அணிந்து வந்தாள். அவளுக்கு திருமணம் தேவையோ இல்லையோ இந்த வீட்டை விட்டு போக அவளுக்கு திருமணம் தேவையாய் இருந்தது.
அவள் படியில் இருந்து இறங்கி வர அந்த நேரம் தான் ரவி உள்ளே நுழைந்தான். என்ன வீட்டில் இத்தனை பேர் இதில் என்னை எதற்கு வர சொன்னார்கள் என்று மனதில் ஓட உள்ளே நுழைந்தவனுக்கு. படியில் இறங்கிக் கொண்டிருந்த ஷர்மிளா கண்ணில் பட்டாள்.
ஷர்மிளா அங்கே சத்தியமாய் விசாலியின் குடும்பத்தை எதிர்பார்க்கவில்லை. அதிலேயே மலர்ந்து இருந்த அவளின் முகம் கூம்பிவிட்டது.
பார்த்தே பல மாதங்கள் ஆகியிருந்தது. கண்ணிலேயே அவள் பட்டிருக்க வில்லை. இறங்கும் அவளை  இமைக்காமல் பார்த்திருந்தான். முன்பிருந்த தோற்ற பொலிவு நிச்சயமாய் இல்லை. ஆனால் அவள் அழகி தான். அவளை ஆராயும் பார்வை பார்த்தபடி சுவரின் ஓரமாய் நின்று கொண்டான்.
எல்லோரும் வாயிலுக்கு எதிர்ப்புறமாய் ஷர்மிளா வரும் திக்கை பார்த்து அமர்ந்து கொண்டிருந்தனர். சுவரில் சாய்ந்து ஒற்றை காலை மடிக்கி சுவரில் ஊன்றி கையை கட்டி அவன் நின்று கொள்ள, யாரும் அவனை கவனிக்கவேயில்லை.
ஆனால் படிகளில் இறங்கிய ஷர்மி கவனித்து விட, “இவன் எங்க வந்தான். ஒரு வேலை இவன் மாப்பிள்ளை வீட்டினருக்கு தெரிந்தவனோ? இவன் கொண்டு வந்திருப்பானோ? இந்த நேரமா இவர்கள் வீட்டினர் வர வேண்டும்” என்று விசாலியின் வீட்டினரை வெறுப்பாய் நினைத்தாள்.            
மௌனமாய் வந்தவள் நின்று கொண்டிருக்க, “வா ஷர்மி, உட்காரு” என்று அவளை சந்தோஷ் அழைத்து அவனின் அருகமர்த்தி கொண்டான்.   
“இது நரேன், என் ஒன்னு விட்ட பெரியப்பாவோட பேரன்” என்று விசாலியின் அம்மா பேச,
“என்ன இவன் இவர்களின் உறவினனா? எனக்கு இவர்களின் உறவினால் இங்கே வீட்டிலேயே இருக்க பிடிக்காமல் கல்யாணம் செய்து போகலாம் என்று நினைக்க இவர்களின் வீட்டில் திருமணமா”
“பையன் பி ஈ படிச்சிருக்கான், சாப்ட்வேர் கம்பனில வேலை” என்று சொல்ல,  
நிமிர்ந்து அவனை பார்த்தாள். அவனும் ஆர்வமாய் ஷர்மியை தான் பார்த்திருந்தான்..
சூப்பராய் இருக்கும் ரவீந்திரனையே கண்ணெடுத்தும் பார்த்திராத மனது கொண்டவள் இதில் சுமாரான நரேனையா ஆர்வமாய் பார்ப்பாள். ஆராய்ச்சி பார்வை பார்த்தாள்.
மணமகளின் பெற்றோர் பார்க்க வேண்டிய பார்வையை அவளுக்காய் அவளே பார்த்துக் பார்துக் கொண்டாள். மறந்தும் விசாலியின் வீட்டினர் புறம் பார்வையை திருப்பவில்லை, அவர்களை “வாங்க” என்று மரியாதை நிமித்தம் அழைக்கவில்லை.
மேலே சொல்லுங்க என்ற பாவனையில் காத்திருந்த போதும் அவர்களின் உறவில் எல்லாம் திருமணம் செய்யப் போவதேயில்லை என்று.
“உனக்கு பிடிச்சிருக்கா” என்று கேட்டார் விசாலியின் அம்மா.
“பேரும், படிப்பும், வேலையும் சொன்னா பிடிச்சிடுமா என்ன?” என்று மனதில் நினைத்ததை எப்போதும் போல கேட்க வேறு செய்து விட்டாள்.
“தனியா பேசறீங்களா” என்றார்.
“தனியா பேச ஒண்ணுமில்லை, இங்கயே பேசலாம்”
ரவீந்திரனின் பார்வை அவளை விட்டு இம்மியும் அகலவில்லை. அவன் பார்ப்பது போல தான் அமர்ந்திருந்தாள். அப்போது தான் சந்தோஷ் அவனை பார்த்தான்.
“வாங்க ரவி” என்றழைக்க, எல்லோரும் திரும்பி யார் என்பது போல பார்த்தனர். எப்போதுமே பார்க்க வசீகரன் தான், இதில் இங்கே வருவதால் சிரத்தையெடுத்து தயாராகி வந்திருந்தான்.
கடுப்பில் இந்த பெண் பார்க்கும் நிகழ்வை பார்த்திருந்த ரவி, அவன் அழைத்ததும் இவர்கள் அமர்ந்திருந்த இடம் வந்து விட்டான்.
கேசவனுக்கு அப்போது தான் அவனை வரச் சொன்ன ஞாபகம் வந்தது. உள்ளே வந்ததும் “நாம இன்னொரு நாள் பேசலாம்” என்று ரவியை பார்த்து  சொல்ல..
“அப்போ என்னை இப்படியே வெளில போடான்னு சொல்றீங்களா?” என்றான் பளிச்சென்று.
இதென்னடா இவன் இப்படி பேசுகிறான் என்று தோன்றிய போதும் “இல்லையில்லை, அப்படி சொல்லலை, இப்போ நான் பேச முடியாதுன்னு சொன்னேன்” என்றவர் சொல்ல,
“நீங்க என்ன பேச கூப்பிட்டீங்கன்னே எனக்கு தெரியாது” என்று சொன்னவன் சாவகாசமாய், சந்தோஷும் ஷர்மிளாவும் அமர்ந்திருந்த பெரிய சோஃபாவில் சந்தோஷின் புறம் இடமிருந்த போதும் ஷர்மிளாவின் பக்கம் அமர்ந்தான், சற்றே இடைவெளி விட்டு.
“ஆங்” என்று வாயை பிளந்து எல்லாம் பார்த்தனர்.
“நீங்க பேசுங்க, எனக்கு ஒண்ணுமில்லை” என்று ஏதோ பெர்மிஷன் கொடுப்பவன் போல பேசி.. அவனின் மொபைல் எடுத்து பார்க்க ஆரம்பித்தான்.
இவன் என்ன இப்படி செய்கிறான் என்று சந்தோஷிற்கு மனதிற்குள் கலவரம் மூண்டது.
ஷர்மிளாவிற்கு இடம் மாற மனது துடித்த போதும் விசாலி வீட்டினர் முன் அதனை செய்ய மனதில்லாமல் அமர்ந்திருந்தாள்.
விசாலியின் அம்மா பெண் பார்க்க வந்த பையனிடம் “அவங்க வீட்ல முன்னாடி வேலை செஞ்சவன்” என்று மிதப்பாய் சொல்ல,
தலை நிமிர்ந்த ரவி, “வீட்ல வேலை செஞ்சவங்க எல்லாம் இப்படி வந்து வீட்டு ஆளுங்களோட உட்கார முடியுமா என்ன? கல்யாணத்தப்போ எங்கம்மா தான் எல்லாம் செஞ்சாங்க, உங்ககிட்ட பேசினாங்க, அப்போ நான் யாருன்னு உங்களுக்கு தெரியாது. இதுதான் நீங்க குடுக்கற அறிமுகமா? நீங்க பெரியவங்களா இருக்கலாம், ஆனா வா போ அவன் இவன் எல்லாம் பேசறதை நான் அனுமதிக்க முடியாது” என்று வேகமாய் சொல்ல..  
ஷர்மிக்கு முகத்தில் புன்னகை வந்தது.
“அடடா, நாம துரத்த வேண்டாம் போல வந்தவனை இவனே துரத்திடுவான்” என்றதில் வந்த புன்னகை.
மாப்பிள்ளையிடம் திரும்பியவன், “நான் ரவீந்திரன், இங்க சில வருஷம் வேலை பார்த்தேன். இப்போ இவங்க என்னோட பார்ட்னர், ஆனா நான் அதுக்கு முன்ன இருந்தே இவங்களுக்கு சொந்தம், இவங்க அம்மாவோட அண்ணன் பையன், கூடப் பிறந்த அண்ணன் இல்லை, பெரியப்பா மகன், ஆனாலும் எல்லோரும் ஒரே வீட்ல வளர்ந்தவங்க, அதனால் எங்க வீட்ல இருக்குறவங்க பிரிச்சு பார்க்கலை, சொந்த தங்கை போல தான் நினைப்பு” என்று சொல்லியவன்
“நீங்க என்ன பண்றீங்க சொல்லுங்க” என்றான். கேள்வியே “நீ என்னை விட எந்த விதத்தில் உயர்ந்தவன் சொல்லடா” என்ற பாவனையில் இருந்ததை ஷர்மி மட்டுமல்ல கேசவனும் சந்தோஷும் கூட புரிந்து கொண்டனர்.
“நான் நரேன், பி ஈ படிச்சிருக்கேன், சாப்ட்வேர் எஞ்சினியர் என்றான் மீண்டும்.
“அதுதான் அவங்க சொல்லிட்டாங்களே”  
“என்ன பண்ணிட்டு இருக்க ரவி?” என்றார் பொறுமையாக கேசவன்.
“ஒருத்தன் பொண்ணு பார்க்க வந்திருக்கான், அவனை பத்தி விசாரிக்கறது இல்லையா, அதுவும் நீங்க நான் பெண் கேட்டு கொடுக்கலை, அப்போ என்னை விட இவன் என்ன பெஸ்ட்ன்னு எனக்கு தெரியனும் தானே” என்றான் மனதை மறையாது.
“அச்சோ இவன் என்ன பேசுகிறான்” என்ற கலவரம் ஷர்மிளாவிற்குள் மூண்ட போதும், அதனை காண்பித்து கொள்ளவில்லை. கூடவே “என்ன தைரியம் இவனுக்கு” என்றும் தோன்றியது.  

Advertisement