Advertisement

அத்தியாயம் ஆறு :
கேசவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை, அவரின் ஒன்று விட்ட அண்ணன் மூலமாக “கல்யாணம் பேசி முடிச்சா இங்கயே எங்களுக்கு இன்னொரு தொழில் இருக்கு, அதை மாப்பிள்ளைக்கு கொடுக்கறோம்” என்று வாக்குறுதி கொடுத்திருந்தார்..
இப்போது ரவீந்திரன் பேசுவதை பார்த்தால் முடியாது போலவே.
அவன் சொன்னது முற்றிலும் உண்மை முன்பிருந்த அவனின் வரிய நிலை தவிர, இப்போது குறை சொல்லும்படி அவனிடம் ஒன்றுமில்லை.
அதுவுமில்லாமல் வரன் தகைவது போல வந்து தட்டி போகிறது. அரசல் புரசலய் “உங்கள் மனைவியின் அண்ணன் மகனுக்கு தான் உங்கள் மகளை கட்டிக் கொடுப்பதாய் இருந்தீர்களாமே, அதனால் தான் அவனை வீட்டில், தொழிலில் எல்லாம் வைத்திருந்தீர்கலாமே” என்ற ரீதியல் பேச்சுக்கள்.
அவன் இருந்தது வீட்டிற்கு வெளியே அவுட் ஹவுசில் ஆனால் அது வெளியில் இருப்பவர்களுக்கு தெரியவில்லை.  
சில இடத்தில் “இரண்டு பேரும் காதலிக்கிறார்கலாமே, அது பிடிக்காமல் தான் நீங்கள் அவனை வீட்டை விட்டு அனுப்பி விட்டீர்களாமே” என்ற பேச்சுக்கள்.
“எப்படி இப்படி பேச்சுக்கள் வந்தது” என்று அவருக்கு புரியவில்லை. இதனால் தான் வயதுப் பெண் இருக்கும் வீட்டில் வேறு ஆண்மக்களை தங்க விடக் கூடாதோ. என்ன செய்து வைத்திருக்கிறாள் இந்த லக்ஷ்மி என்று இறந்து போன மனைவியின் மீது கோபம் வந்தது.
அப்போதும் இதனை ரவீந்திரன் பரப்பி விட்டிருக்கக்கூடும் என்று நினைக்கவேயில்லை..
முன்பே அலட்சியத்தில் ஷர்மி, “அவனை இவனை கல்யாணம் பண்றதுக்கு கல்யாணம் பண்ணாமையே இருப்பேன்” என்று சொன்னது, அவனை கல்யாணம் செய்து கொள்வதற்கு தூண்டியிருக்க, அதற்கு பின் பேசிய பேச்சு “கூட்டி கொடுக்கிறியா” என்றது அப்படி காயப் படுத்தியிருக்க,
“கூட்டி தான் கொடுக்க போகிறேன், உன்னையும், என்னையும்” என்று அவன் முடிவு செய்து களத்தில் இறங்கியிருந்தான்.
இப்போது அவளின் திருமண பேச்சு எவனோ ஒருவனுடன், அதுவும் ரவி தொடங்கி வளர்த்த தொழிலை கொடுத்து எனும்போது எப்படி ஒத்துக் கொள்வான்.
“எவன் வர்றான் நான் பார்த்துக் கொள்றேன்” என்று நின்று விட்டான்.
“தொழில் கொடுக்க முடியாது, வேலையை இங்கே மாற்றிக் கொண்டு வாருங்கள் பின்னே தொழில் புதிதாய் வைத்து தருகிறோம்” என்று ஷர்மி வீட்டினர் சொல்ல,
யாரென்றே தெரியாத இடத்தினில் செய்தியை பரப்ப முடிந்த அவனால் கும்பகோணத்தின் பின்னணியை கொண்ட வரனிடம் பரப்ப முடியாதா என்ன?
“உங்க பொண்ணு ஏற்கனவே காதலிச்சு இருந்தாலும், இப்போ சில சமயம் அப்படி ஆகிடுது, அதை நாம பெருசா எடுத்துக்கக் கூடாதுன்னு தான் வந்தோம். இதுல நீங்க இப்படி மாத்தி பேசினா எப்படி?” என்று அவர்கள் நேராய் பெண் இருக்கும் போதே கேட்க,
“நானா காதலிச்சேனா? யாரை?” என்று ஷர்மிளா விழித்து நிற்கும் போதே,
“தொழில் குடுத்தா கல்யாணம், இல்லை வேலையை எல்லாம் விட முடியாது, வேணும்னா பொண்ணை வெளிநாட்டுக்கு அனுப்புங்க” என்றனர்.
ஏற்கனவே மாப்பிள்ளையை பார்த்த ஷர்மிளாவிற்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை.. சற்று பூசினார் போல இருந்தான். தொப்பை வேறு இருந்தது, பெரிய சோடா புட்டி கண்ணாடி, இவளின் உயரம் தான் இருப்பான் போல, இவனை திருமணம் செய்தால் ஹீல்ஸ் செருப்பு போடுவதையே மறந்து விட வேண்டும் போல என்று நினைத்தாள்.
சந்தோஷிற்கும் மாப்பிள்ளையை பிடிக்கவில்லை, கேசவனுக்கும் திருப்தியில்லை, இப்போது இவர்கள் இப்படி பேசவும் “யோசிச்சு சொல்றோம்” என்று சொல்ல அவர்களும் கிளம்பி விட்டனர்.
முன்னே நின்ன பெரியப்பா “என்ன கேசவா இப்படி பண்ணிட்ட? நான் எவ்வளவு பேசி அவங்களை சரி கட்டினேன் தெரியுமா?” என்று சொல்ல,
அவ்வளவு தான் ஷர்மிக்கு பொங்கியதே கோபம், ஆனால் பெரியப்பா அந்த வீட்டை விட்டு கிளம்பும் வரை ஒரு வார்த்தை பேசவில்லை.
அவர் சென்றதும் பொங்கி விட்டாள், “என்னடா சந்தோஷ் என்ன நடக்குது? நான் யாரை காதலிச்சேன், இவர் ஏன் யாரையாவது சரி கட்டி எனக்கு மாப்பிள்ளையா கொண்டு வரணும்?”  
“எனக்கும் அதுதான் புரியலை, எல்லோரும் இருந்ததால என்னால கேட்க முடியலை” என்றான் சந்தோஷும்.
கேசவன் அமைதியாக நின்றார்.
அதுவே அவருக்கு விஷயம் தெரியும் என்று காண்பித்து கொடுக்க, “என்ன என்ன விஷயம்னு கேளு”
அப்போதும் அவர் மௌனமாய் நிற்க..
“நான் நல்லா இல்லையா? என்கிட்டே படிப்பில்லையா? இல்லை வசதியில்லையா? எதுக்கு இப்படி மாப்பிள்ளையை கொண்டு வந்து நிறுத்தறீங்க, அவன் பார்க்கவும் நல்லா இல்லை, வசதியும் இல்லை.. எதுக்கு நான் அவனை கல்யாணம் பண்ணனும்”
“நான் யாரை காதலிச்சேன்? யார் கூட சுத்தினேன்? ஏன் இப்படி எல்லாம் பேச்சு?” என்று அவள் பொங்க..
“அது ரவி இங்க இருந்தான் இல்லையா, அதனால் அவனுக்கும் உனக்கும் கல்யாணம் பண்ண இருந்தோம்னு பேச்சு” என்று கேசவன் சொல்லி விட,
அப்படி ஒரு ஆத்திரம் கிளம்பியது அவளுக்கு “இதுக்கு தான் வேலைக்காரங்களை எங்க வெக்கணுமோ அங்க வைக்கணும். இப்போ உங்க முட்டாள் தனத்துக்கு நான் கஷ்டப்படணுமா , கஷ்டப் படறது கூட பின்ன, நான் கெட்ட பேர் வாங்கணுமா”
“இதுல ஒருத்தன் கூட உருப்படியில்லை, அவனுங்களை மாப்பிள்ளைன்னு கொண்டு வந்து நிறுத்தறீங்க, இப்போதைக்கு எனக்கு கல்யாணம் பண்ண வேண்டாம் புரிஞ்சதா”
“ஊருக்குள்ள நிஜமாவே தப்பு பண்ணிட்ட பிள்ளைகளை கூட அது வெளிய வராம மூடி மறைச்சு அவளுக்கு நல்ல வாழ்க்கை அமைச்சு கொடுக்க நினைக்கற குடும்பம் மத்தியில, நான் செய்யாத ஒரு விஷயத்துக்கு எனக்கு கொஞ்சமும் பொருத்தமில்லாத மாப்பிள்ளையை கொண்டு வந்து நிறுத்தறீங்க, எனக்குன்னு இப்படி ஒரு அப்பா, அண்ணா” என்று அப்பாவையும் அண்ணனையும் பொதுவாய் நோக்கி கத்தி உள்ளே சென்று விட்டவளுக்கு மனதே ஆறவில்லை.
அப்படி ஒரு அழுகை பொங்கியது..
இன்னும் இன்னும் ரவியின் மீது ஆத்திரம் கிளம்பியது…
ரவி இது போல தான் ஏதாவது நடந்திருக்கும் என்று அனுமானித்து இருந்தாலும், ஒன்றுமே தெரியாதவன் போல இரவு சந்தோஷிற்கு அழைத்து “இன்னும் நான் ஃபாக்டரில தான் இருக்கேன்.. யாரையோ காமிக்க கூட்டிட்டு வருவேன் சொன்னீங்க வருவீங்களா?” என்று ஒன்றுமே தெரியாதவன் போல கேட்க..
சந்தோஷ் ஒரு நேர்மையான மனிதன், அவனுக்கு இன்னும் வார்த்தை சூட்சுமங்கள் புரியவில்லை. அவன் ரவியிடம் “நீங்க தான் யாரும் உங்களோட சேர்ந்து வேலை பார்க்க முடியாது சொல்லிட்டீங்க அதை மாப்பிள்ளை வீட்டுக்காரங்க கிட்ட சொன்னா அவங்க தொழில் இருந்தா தான் கல்யாணப் பேச்சு சொல்லிட்டாங்க, இல்லை அப்ராட் வர சொல்றாங்க, அது ஷர்மிக்கு பிடிக்காது”
“உங்களுக்கு ஓகே வா, தொழிலுக்கு விடுவீங்களா” என்று வேறு கேட்டான்.
ஒரு சாதாரண பேச்சு அதை கிரகிக்க முடியலை இவன் எப்படி தொழில் செய்வான் என்று தான் ரவிக்கு தோன்றியது.
கூடவே “அட மடையா, இப்போ நான் சொல்லி கூட உங்களுக்கு என்னை மாப்பிள்ளையா நினைக்க தோணலையா? திரும்ப தொழில் குடுக்கறிங்களான்னு கேட்கறீங்க. அப்போ கஷ்டப்படுங்கடா” என்று நினைத்தவன்,
“இல்லை சந்தோஷ், அது சாத்தியமில்லை, இதை மறந்துடுங்க, இதோட பணம் உங்களுக்கு கண்டிப்பா வரும். ஆனா இதை வெச்சு உங்க பொண்ணு கல்யாணத்தை ப்ளான் பண்ணாதீங்க” என்றான்.
சந்தோஷ் ஒரு நொடி கூட ரவீந்திரனை மாப்பிள்ளை ஆக்க நினைக்கவில்லை.. அவனுக்கு ஷர்மியை நன்கு தெரியும்.. அதையும் விட அவனுக்குமே தோன்றவில்லை..
ஆனால் கேசவனுக்கு தோன்றியது.. இதுவரை வந்த மாப்பிள்ளைகளில் ஒருவன் கூட ரவீந்திரனின் தோற்றத்தின் அருகில் கூட வரமுடியவில்லை.. அந்த உயரமும் கம்பீரமும் வசீகரமும் அவனிடம் ப்ரத்யேகம் தான்.
அதனையும் விட அவனின் திறமையும், உழைப்பும், கேசவனையன்றி வேறு யார் அறிய முடியும்.. அவனின் குணம் அவர் அறிந்தவரை நல்லவனே.. அவரை போல தடுமாறுபவனும் கிடையாது, தடம் மாறுபவனும் கிடையாது.. அதனால் பெண்ணை நம்பிக் கொடுக்கலாம் என்ற எண்ணம் தான்.
விசாலி! ஏறக் குறைய ஒரு வருடம் ஆகப் போகிறது அவளை காத்திருக்க சொல்லி, அவருமே நாற்பத்து எட்டில் இருந்து நாற்பத்து ஒன்பது வந்து விட்டார்.
அவர் நினைத்தார் ஷர்மிளாவிற்கு சொல்லி புரிய வைத்து விடலாம், சந்தோஷிற்கு புரிய வைப்பது கஷ்டம் என்று. ஆனால் மாறிப் போயிற்று சந்தோஷ் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் அவரை அங்கீகரித்து கொள்ள,
மகளிடம் இதையெல்லாம் அவரால் பேச முடியவில்லை.
ஆம்! விசாலியை திருமணம் செய்யும் முடிவிற்கு வந்து ஒரு வருடம் ஆகிறது. அவர் அந்த ஆலப்பி ட்ரிப்பில் இருந்து வந்த பிறகு சொல்ல நினைத்திருக்க, அதற்குள்ளாகவே அதனை பார்த்து தான் ஷர்மி அவ்வளவு சத்தம்.
விசாலியுடனான அவரது உறவு சில பெண்களுடன் அவருக்கிருந்த தொடர்பு போல அல்ல.. சொல்லப் போனால் உடல் சார்ந்த உறவே அல்ல.
ஒரு பார்ட்டியில் சிநேகிதமாய் ஆரம்பித்த உறவு, என்னவோ இப்படி ஒரு பெண் எனக்கு மனைவியாய் வந்திருக்க கூடாதா என்ற நினைப்பு அதிகமாய் தாக்கியது..
விசாலி ஒரு புகழ் பெற்ற மென்பொருள் கம்பனியில் பணியில் இருந்தாள், நாற்பது வயது. ஆனால் பார்த்தால் அப்படி சொல்ல முடியாது.. இவள் தான் படித்து வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றி அவர்களை ஸ்திரப் படுத்தியிருக்க, இதனையெல்லாம் செய்து நிமிர்ந்த போது முப்பத்தி இரண்டு வயதாகி இருந்தது.
திருமணம் அந்த வயதிலும் செய்திருக்கலாம், ஆனால் அந்த வயதில் திருமணமாகாத பெண்களுக்கு வராத கர்ப்பை கேன்சர் அவளுக்கு வந்தது… உடனே கர்ப்பபையை நீக்கி விட.. அதன் பின் வாழ்க்கையில் பிடிப்பற்று போயிற்று.. ஒரு பார்ட்டியில் கேசவனை பார்த்த போது ஏனென்று சொல்ல தெரியாமல் பிடிக்க,
சில பல முறை பழகியும் பார்த்தனர்.. சேர்ந்து கழித்த சில நாட்கள் எல்லாம் மனதளவில் மிக நெருங்கியிருக்க அதனை திருமணம் செய்து அங்கீகரிக்க நினைத்தனர்.
மகளிடம் இருந்து தடை!
சரி, அவளுக்கு திருமணம் முடித்து செய்து கொள்ளலாம் என்று நினைக்க இப்போது இப்படி சிக்கல்!
விசாலியிடமே பேசினார்,
“அவ சொல்றதும் சரி தானே, ஏன் நமக்காக அவளை அவசரமா கல்யாணம் செய்து கொடுக்கணும்.. நடக்கறப்போ நடக்கட்டும். ஆனா நம்மளது இனி தள்ளி போடவேண்டாம்” என்று சொல்லிவிட
சந்தோஷ் மூலமாய் ஷர்மியிடம் தகவல் சொல்ல, முன்பு மறுத்துக் கொண்டிருந்தவள் இப்போது மறுப்பு எதுவும் சொல்லவில்லை.
அவள் சொன்னது “என்னை எந்த வகையிலும் அவங்க தொந்தரவு பண்ணக் கூடாது. அக்கறை எடுத்து பேசக் கூடாது. அவங்க பாட்டுக்கு தான் அவங்க இருக்கணும். இங்க வந்துட்டு சும்மா என்கிட்டே உறவை ஏற்படுத்த நினைச்சாங்க, நான் வீட்டை விட்டு வெளிய போயிடுவேன்” என்றாள்.
இப்படியாக கேசவனின் திருமணம் எளிமையாய் ஒரு கோவிலில் நடந்து விட்டது. இருவருக்குமே வயதான தோற்றம் கிடையாது என்பதால் பெரிதான இந்த திருமணம் தேவையா போன்ற எதிர்மறை  பேச்சுக்கள் இல்லை. அதனையும் விட அதிசியமாய் இருவரும் ஒரே சமூக ஆட்கள் என்பதால் அதற்குரிய எதிர்ப்பும் இல்லை.
விசாலிக்கு மூன்று தங்கைகள், ஒரு தம்பி எல்லோரும் சந்தோஷமாகவே இந்த திருமணத்தில் பங்கெடுத்தனர்.. சந்தோஷ் வெகுவாய் பேசி ஷர்மியை திருமணதிற்கு அழைத்து வந்திருந்தான்
“உனக்கு கோபம் வரலை, ரோஷம் வரலை” என்று அண்ணனிடம் ஷர்மி சண்டை பிடிக்க..
“எதுக்கு வரணும் பேபி, இந்த வருஷம் நீ கல்யாணம் பண்ணி போயிடுவ, இன்னும் ரெண்டு வருஷம் நானும் பண்ணிக்குவேன், அப்புறம் அவர் தனியா தானே இருப்பார். அப்படி ஒன்னும் அப்பாவுக்கு வயசும் ஆகிடலையே. அவரா கல்யாணம் பண்ண இஷ்டப்படும் போது அதை வேண்டாம்னு சொல்ல நாம யார்?”
“அப்படி ஒன்னும் நம்ம வீட்ல அப்பாவுக்கும் அம்மாவுக்கு சண்டை வந்ததில்லை, ஆனா சந்தோஷமாவும் இருந்ததில்லை எனக்கு புரிஞ்சவரை”
“அவருக்கு இதுல சந்தோஷம்னா விட்டுட்டு போயேன்” என்று அவளின் மனதை வெகுவாக கரைத்து திருமணதிற்கு அழைத்து வந்திருந்தான்…
சந்தோஷின் மாற்றம் பரிமாணம் பக்குவம் எல்லாம் ஷர்மிக்கு அவ்வளவு வியப்பை கொடுத்தது. சிறிதும் பொறுப்பு இன்று பார்ட்டி ஃபிரண்ட்ஸ் என்று சுற்றிக் கொண்டு இருந்தவனா இவன், இவனின் பிறந்த நாள் கூட ஞாபகமில்லாமல் அப்பா சுற்ற, அதன் பார்ட்டிக்கு, பணத்திற்கு எவ்வளவு பேசி ரவியிடம் வாங்கினோம், எப்படி இப்படி மாறிப் போனான் என்று நினைத்தவள் அவனுக்காக மட்டுமே திருமணதிற்கு வந்தாள். 
ரவிக்கும் திருமண அழைப்பு வந்திருந்தது.. யார் அது கேசவனை இழுத்து பிடித்தது என்று பார்ப்பதற்கு வந்திருந்தான்.. அவனின் வீட்டிற்கும் சொந்தம் என்ற முறையில் அழைப்பு போயிருக்க, “நீ தான் அங்க இருக்கியே நீ போயிட்டு வந்துடு” என்று சொன்ன வீட்டினரிடம், “இப்போதான் எனக்கு தனியா வீடிருக்கே வர்றதுக்கு என்ன?” என்று சொல்லி அப்பாவையும் அம்மாவையும் வரவைத்திருந்தான்.
திருமணதிற்கு ரவியுடன் அவர்களும் வந்திருந்தனர். எளிமையான தோற்றம் தான். ஆனால் தோற்ற பொலிவு இருக்க அதுவும் ரவியின் அம்மா சீதா அத்தனை தேஜசாய் இருந்தார். அமைதியான மங்களகரமான முகம். அவர்களை முன்னால் நடக்க விட்டு இவன் பின்னால் வந்தான்..      
வந்தது தான் வந்தான், வேஷ்டி சட்டையில் அம்சமாய் வந்திருந்தான். என்னவோ அவன் தான் மாப்பிள்ளை என்பது போல.. முன்பே தோற்ற வசீகரம் தான், ஆனால் இப்போது வேண்டுமென்றே பார்த்து பார்த்து வந்திருந்தான்..
கேசவன் விசாலிக்கு பல மாதங்களுக்கு முன்பே திருமணம் பேசி, பின் மகளின் திருமணம் முடிந்து என்று காத்திருக்க அவளின் வீட்டினர் அத்தனை பேருக்கும் மகளின் திருமணதிற்கு பேசுவது தெரியும்.
இப்போது தள்ளி போவது யாரோ சொந்தக்காரன் வீட்டில் வேலை செய்தவன், அவனை திருமணத்திற்கு பார்த்திருந்தார்கள் என்ற புரளியினால் என்பது வரை.
ஆம், கேசவன் சந்தோஷிடம் கூட பகிர்ந்து கொள்ளாததை தன்னுடைய கவலையினால் விசாலியிடம் சொல்லியிருக்க,
அவளோ அவளின் அம்மாவிடம் சொல்லியிருக்க, இவன் வந்ததுமே சந்தோஷ் “வாங்க ரவி” என்று வேறு சொல்லியிருக்க..
இவன் தான் அவனோ என்று சரியாய் கணித்தவர்,  
“பையன் நல்லா இருக்கான், இவனுக்கு என்ன குறை? இவனுக்கு கட்டி குடுக்காம ஏன் இழுத்தடிசிட்டு இருக்காங்க, பணமில்லைன்னா என்ன? இவங்க கிட்ட இல்லாத பணமா? குடுத்துட்டு போக வேண்டியது தானே” என்றே ஒரு யோசனை! ஒரு பேச்சு!
நல்லதோ கெட்டதோ ஒரு பெண்ணை பற்றிய விஷயமென்றால் தீயாய் பரவிவிடும் என்பதற்கு உதாரணம் ஷர்மிளா ஆகி போனாள்.
அதை ஆரம்பித்து வைத்தவனோ ஒன்றுமே தெரியாதவன் போல நின்றிருந்தான்.
ஷர்மிளா தனியாய் நின்றிருக்க, அவளிடம் லக்ஷ்மியின் ஜாடை இருக்க, யோசிக்காமல் அவளின் அருகில் சென்ற சீதா “லக்ஷ்மி பொண்ணா” என கேட்டு அவள் “ஆம்” என்று தலையசைக்கவும்,
“ரொம்ப சின்ன வயசுல பார்த்தது, பெரிய பொண்ணானதுக்கு அப்புறம் பார்க்கவேயில்லை” என்று வாஞ்சையாய் கையை பிடிக்க,
யாரென்று தெரியாத போதும் சின்னதாய் புன்னகைத்து வைத்தாள். ஆனாலும் கையை உருவிக் கொண்டாள். அதை சீதாவும் கவனித்தவர், அவளிடம் இருந்து சிறிது இடைவெளி விட்டு நின்று கொண்டார், கூடவே “நீங்க” என்று ஷர்மி அவரை பார்த்து கேட்டு வைக்க,
“நான் ரவியோட அம்மா” என்று சொல்ல,
அவளின் புன்னகை காணாமல் போய் “வந்திருக்கின்றானா” என்று பார்வையை சுழற்ற.. அவனோ மாப்பிள்ளை மாதிரி தானே வந்திருந்தான்.
அவனை பார்த்ததும் தோன்றியதும் அதுதான், “எங்கப்பா தானே மாப்பிள்ளை, இவன் என்னத்துக்கு இப்படி வந்திருக்கிறான்” என்று தான் பார்த்திருந்தாள்.
ஆனால் அப்போது கூட சிறு ஈர்ப்பும் அவன் மீது தோன்றவேயில்லை.. 
ஷர்மி தன்னை பார்ப்பதை ரவியும் உணர்ந்தான், கூடவே அவளின் பார்வையில் சிறிதும் மாற்றமில்லை, எவனோ ஒருவன் என்ற பார்வை தான்,
“ஒரு சிறு ஈர்ப்பும் என்னால் இவளிடம் கொண்டு வரமுடியவில்லையா, என்ன நான் வளர்ந்து என்ன பயன்?” என்று அவனின் மனம் நினைக்க, என்ன செய்வது என்று அவனின் விரல்கள் தானாய் சொடக்கிட்டது.
நான்.. எனது… பணம்…
என்பது போய்,
நான்… எனது… இவள்…
என்று வந்து நின்றது.   
       

Advertisement