Advertisement

அத்தியாயம் ஐந்து :
நான்கைய்ந்து மாதங்கள் கடந்து விட்டது.. அப்பாவும் மகளும் பேசிக் கொள்ளவதில்லை.
ரவீந்திரன் அவர்களின் பேப்பர் ஃபாக்டரியை விட்டு முழுவதும் விலகியிருந்தான். அங்கே வேலை தானே செய்தான்.. எனக்கு முப்பது பெர்சென்ட் தேவையுமில்லை, உன்னுடைய வேலையும் தேவையில்லை.. என்று விலகிக் கொண்டான். 
அவன் விலகியது கேசவனிற்கு இழப்பு தான், எந்த வகையில் என்றால் புதிதாய் ஏதாவது செய்ய இருந்தானா தெரியாது. அதன் லாபம் இருக்காது. புதிது புதிதாய் செய்து விரிவு படுத்திக் கொண்டே இருப்பான். கொள்ளை லாபம் கொடுத்துக் கொண்டிருந்தான். ஆதலால் புதிதான லாபமில்லை.  ஆனால் செய்தவரை ஸ்திரமாய் செய்திருந்தான்.
பக்கா மார்க்கெட்! நான் இருந்தால் மட்டுமே இது சாத்தியம் என்பது போல அவன் செய்து வைத்திருக்கவில்லை. நினைத்திருந்தால் செய்திருக்கலாம். நினைக்கவில்லை, செய்யவில்லை.    
கொஞ்சம் இவர்கள் அக்கறை எடுத்து பார்த்தாலே அந்த லாபம் பார்க்க முடியும். அதனால் சொல்லப் போனால் இவர்களுக்கு அந்த வகையில் லாபமே! அவனுக்கு கொடுத்துக் கொண்டிருக்கும் முப்பது பெர்சென்ட் மீதம்.   
ஆனால் முறுக்கு கம்பிகள் தயாரிக்கும் ஃபாக்டரியில் அவனும் கேசவனும் சரி சமமாய் பார்ட்னர்ஸ், அதனால் அது அவனுடையதும் கூட.. ரவியிடம் இங்கே வேலைக்கு வருவதற்கு முன் பைசா கிடையாது, இங்க வந்த பிறகு இரண்டு வருடமும் பெரிதாய் ஒன்றும் கிடையாது, பின் புலமும் கிடையாது.
அதன் பிறகு வந்த பணம், வங்கி கடன், இப்படி தான் பார்ட்னர் ஆகியிருந்தான். இவன் ஆகியிருந்தான் என்பதனை விட கேசவனை அவனுடன் சேர்த்திருந்தான். இது முழுக்க முழுக்க அவனின் ப்ராஜெக்ட் மட்டுமே!   
அதனால் அதனை விட்டு விலக முடியாது, விலகினால் அதற்குரிய பணம் கிடைக்கும். தொழில் புதிதாய் முடியாது என்பதும் கிடையாது, ஆனால் இவ்வளவு பெரிதாய் முடியாது.. அதனால் அவரிடம் சொல்லிவிட்டான் “இப்போதைக்கு உங்களின் பங்கு என்னவோ சரியாய் வந்து விடும், நீங்களும் வந்து அவ்வப் போது பார்த்துக் கொள்ளுங்கள்” என்று விட்டான்.
அதனால் ஒரு வகையில் அவர்களோடு வேலை முடிந்தது, ஆனால் தொழில் தொடர்ந்தது..
ஷர்மியின் வீட்டில் என்னென்னவோ நடக்கிறது என்று கேள்வி, என்ன நடக்கிறது என்று சொல்ல தான் சசிகலாவும் ரமேஷும் அங்கே இருக்கிறார்களே!
அவனாய் கேட்க வேண்டும் என்றெல்லாம் இல்லை. ஆனால் பார்க்கும் போது சொல்லி விடுவர். எப்போது பார்ப்பர் என்றால் தினமுமே இல்லை ஒரு நாள் விட்டு ஒரு நாள் போல.
ஆம்! அவன் வீடு பார்த்திருப்பது அந்த வீதியிலே தான்.. அன்றைய நாள் ஷர்மிளாவின் வீட்டை விட்டு உடனே போக வேண்டும் போல தோன்ற, அந்த வீதியின் கோடியில், மாடியில், ஒரு வீட்டில் இருந்த வீடு வாடகைக்கு விடப் படும் கண்ணில் பட உடனே சென்று விட்டான். அந்த வீதியில் பணக்கார்கள் மற்றும் மேல் தட்டு மத்திய வர்கத்தினர் இருக்க அப்படி ஒரு வீட்டின் மாடி தான் அது! 
அவர்களுக்கு இவனை இத்தனை வருடங்களாய் கேசவன் வீட்டில் இருப்பதால் தெரியும் பார்த்த முகம்…
பிரச்சனைகளை பற்றி சொல்லாமல் “திருமணம் செய்யப் போகிறேன், அப்பா அம்மாவை அழைத்து வரப் போகிறேன்” என்று காரணம் சொல்ல உடனே வீடு தந்து விட்டார்கள்.
ஒரு ஆவேசத்தில் வந்து விட்டான், மிகப் பெரிய வீடு என்று கிடையாது. ஆனால் வாடகை அதிகம், இருபத்தி ஐந்தாயிரம்! வந்த அடுத்த நாள் முதல் இவ்வளவு வாடகையா என்று மனம் துடித்தது நிஜம். பின்னே அந்த பணத்தை தான் அவன் ஊருக்கு ஏழு பேரின் செலவிற்கு அனுப்பி வைக்கிறான்.
இவன் சம்பாத்தியத்தில் மூன்று தங்கைகளுக்கு திருமணம் முடிந்திருந்தது.. சித்தப்பாவின் இரண்டு பெண்கள், இவனின் ஒரு தங்கை.. இன்னும் ஒரு தங்கை கடைக்குட்டி மட்டும் இருந்தாள். அவள் இப்போது தான் கல்லூரியில் பி ஏ தமிழ் இரண்டாம் வருடம் படித்துக் கொண்டிருந்தாள். அடுத்த வருடம் அவளின் திருமணம் முடித்து இவனுக்கு திருமணம் செய்ய பெரியவர்கள் பேசிக் கொண்டிருந்தனர்.
இன்னும் இவனின் தொழில் அவர்களுக்கு தெரியாது. அவர்களை பொறுத்தவரை கேசவனின் வீட்டினில் வேலை செய்கின்றான். இவன் தான் எல்லாம் பார்த்துக் கொள்கிறான், அதனால் சம்பளம் மிக அதிகம் என்பதாக  நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.
ரவீந்திரன் அதிகம் வீட்டில் அவனின் வருமானம் பேசுவதில்லை, தங்கைகளுக்கு திருமணம், நல்ல பெரிய இடத்தில தான் செய்து கொடுத்தனர். அதற்காக அதிகமான சீர்வரிசை எல்லாம் இல்லை. ஆனால் நல்ல நகை தொகை, கூட பெண்களும் ஸ்ருங்காரமாய் இருக்க, சட்டென்று மூன்று பேருக்குமே நன்றாய் அமைந்து விட்டது.. ஊரில் சொந்தமாய் கச்சிதமாய் ஒரு வீடும் கட்டி இருந்தான்.
அதனால் இப்போது கையில் பணம் கிடையாது, தொழிலில் வரும் வருமானம் தான்!
அதனால் அவன் விலகவுமில்லை, அவரை விலக சொல்லவுமில்லை. இருப்பதை அப்படியே தொடர்ந்தான், பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்பது போல. வேறு இடத்தில் வாடகை சற்று குறைவாய் வீடு பார்த்துக் கொண்டு தான் இருந்தான், ஆனால் மனதிற்கு பிடிக்கவில்லை.
இப்படியாக கேசவனின் வீதியில் இருக்க ரமேஷ் இவனை பார்க்க வந்து விடுவார், அவனாய் கேட்கா விட்டாலும் நடப்பதை சொல்லுவார். அப்படி சொன்னது தான் தீவிரமாய் ஷர்மிளாவிற்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள் என்று.
“எதுக்கு இவ்வளவு அவசரம்?”  
“யாருக்கு தம்பி தெரியுது அப்பாவும் பொண்ணும் பேசிக்கறதில்லை, சந்தோஷ் தம்பி முதல்ல மாதிரி இல்லை எல்லாம் பொறுப்பாய் பார்த்துக்கறார். காலேஜ் போயிட்டே அப்பாவோட ஃபாக்டரியும் போறார்.
ஆனா ஷர்மிமா சந்தோஷ் தம்பியோட கூட சரியா பேசறதில்லை”
“ஓஹ்” என்றவனின் மனது சொன்னது “தனியாகிடுவாளே, அவளுக்கு பேசிட்டே இருக்கணுமே, அப்போ யாரோட பேசுவா” என்பதாகத் தான்.   
“ரெண்டு மூணு தரகர் கிட்ட ஜாதகம் கொடுத்திருக்காங்க”
“யாரு அவங்கன்னு தெரியுமா? கடைசி தங்கை கௌசல்யாக்கு கூட மாப்பிள்ளை பார்த்துட்டு இருக்கோம், அவ ஜாதகம் குடுக்கலாம்னு” என்று அவர்களின் விவரங்கள் வாங்கிக் கொண்டான்.
கூடவே ரமேஷிடமும் “ஏதாவது இடம் ஷர்மிக்கு அமையற மாதிரி இருந்தா சொல்லுங்க, நல்லா விசாரிக்கலாம், அவங்க அப்பாவுக்கும் பையனுக்கும் விவரம் பத்தாது” என்று வேறு சொன்னான்.
மனது சொல்லிக் கொண்டது “என்னோடு மட்டுமே உன் திருமணம், வேறு எவனுடனும் நான் உயிருடன் இருக்கும் வரை கிடையாது” என்று.  
“ஆமாம், ஆமாம் தம்பி, ஷர்மிம்மாக்கு கல்யாணம் பண்ணினதும் அய்யா பண்ணிக்குவார் போல” என அவர் அனுமானித்ததை சொல்லி விட…
“என்ன?” என்றவனின் முகமே ஒரு மாதிரியாகிவிட்டது.
“ஆமாம், அப்படி தான் போல, யாரோ ஒரு அம்மா, சின்ன பொண்ணு கிடையாது, ரொம்ப வயசும் கிடையாது, வீட்டுக்கு ரெண்டு மூணு முறை வந்துடுச்சு. அப்போ ஷர்மிம்மா அவங்களை ரொம்ப சண்டை போட்டாங்க, திட்டினாங்க, அதுதான் அவசரமா மாப்பிள்ளை பார்க்கிறாங்க” என்று எல்லாம் சொல்லியிருந்தார்.
இதெல்லாம் நடக்கும் போது ஆறு மாதமே கடந்து விட்டிருந்தது ஷர்மி கடைசி வருடத்தில் அடி எடுத்து வைத்திருந்தாள்.
ஆனால் ஒரே வீதியில் இருந்தாலும் ஷர்மிளா மட்டும் அவனின் கண்ணில் படவில்லை. அவ்வப்போது அவளை பார்க்க மனம் ஆவல் கொள்ளும். வன்மமோ, துவேஷமோ, கோபமோ ஏதோ ஒன்று மனைவியாய் வரித்து விட்டானே!   
கேசவன் காலையில் வாக்கிங் போகும் போது தான் மாடியில் வராண்டாவில் அமர்ந்து காஃபி குடித்து கொண்டிருப்பான் ரவி.. சந்தோஷ் தான் இப்போது தொழில் விஷயம் எல்லாம் பேசுவது.. பேசுவது அவனாயினும் பேச வைப்பது கேசவன் என்று புரிந்தது.
மகனுக்கு தொழில் கற்று கொடுப்பாராயிருக்கும் என்று புரிந்தது.
ஒரு முறை சந்தோஷ் பேசும் போது “அன்னைக்கு அடிச்சதுக்கு சாரி. என்னால கோபத்தை கண்ட்ரோல் பண்ண முடியலை” என்று ரவி சாரி சொல்லியிருந்தான்.
“அன்னைக்கு அவ பேசினதும் ரொம்ப தப்பு தான். அவளுக்கு எப்பவும் எல்லாம் தெரியும்னு நினைப்பு. அதனால சின்ன வயசுல இருந்தே பேச்சு அதிகம் தான். சில குடும்ப சூழல் அதை அப்படியே வளர்ந்துடுச்சு” என்று தங்கைக்காக பேசினான்,
“இட்ஸ் ஓகே” என்றோ, இல்லை “சரி விடுங்க” என்றோ, “மன்னிச்சிட்டேன்” என்றோ ரவி சொல்லவில்லை.. “மறக்க முயற்சி பண்றேன்” என்று சொன்னான்.
ஆனால் உண்மையில் மறக்க நினைக்கவேயில்லை..
இதோ நாட்கள் பறக்க மூன்று நான்கு வரன் வந்து தகைவது போல இருந்தும் கடைசியில் “வேண்டாம்” என்று விட்டனர்.
“ஏன்?” என்று கேட்டதற்கு சரியாய் பதிலும் இல்லை..
ஒரு ஞாயிற்று கிழமை காலையிலேயே சந்தோஷ் ரவிக்கு அழைத்தவன்,  புதன் கிழமை ஃபாக்டரிக்கு எங்க ரிலேடிவ் ஒருத்தரை அழைச்சிட்டு வர்றேன்” என்று சொல்ல…
“எதுக்கு?” என்றான் ரவி.
“ஷர்மிக்கு மாப்பிள்ளை பார்க்கறோம், இந்த வரன் மோஸ்ட்லி அமைசிடுச்சு.. கல்யாணம் ஆகிடுச்சுன்னா அந்த ஃபாக்டரி ஷேர்ஸ் ஷர்மி பேருக்கு கொடுத்துடுவோம், அதுதான் காமிக்கலாம்னு” என்றான்.
“அப்போ சொத்து குடுப்போம்னு சொல்லி கல்யாணம் பண்றீங்க” என்றான் சற்று நக்கலாக.
“இதுல என்ன இருக்கு? பொண்ணுக்கு கல்யாணம் பண்ணினா சீர் குடுக்க வேண்டியது தானே, ஷர்மி பேருக்கு தானே கொடுக்கறோம்”
“அப்போ ஷர்மி தானே பார்க்கணும்”
“ஷர்மியா பிசினெஸ் பார்ப்பா? மாப்பிள்ளை தானே பார்ப்பார்”  
அப்படியே மனம் கொதித்தது “நான் கஷ்டப்பட்டு உருவாக்கினால் எவனாது உரிமை கொண்டாடி வந்து நிற்பானா, நோ நெவர்”  
“நாளைக்கு நாம முடிஞ்சா நேர்ல பார்க்கலாம் சந்தோஷ், அப்பா கிட்ட சொல்லு, புதன் கிழமை அவங்களை நீங்க கூட்டிட்டு வர்ற முன்ன நாம பேசணும்” என்றான்.
“சரி, அப்பா கிட்ட சொல்றேன்” என்று அவனும் சொன்னான்.
சந்தோஷ் கேசவனிடம் சொல்ல, “இன்னைக்கு சாயந்தரம் அவனை வீட்டுக்கு வரச் சொல்லு, என்னன்னு பேசி முடிச்சிடலாம்” என்றார்.
அவருக்கும் அவனுடன் பேச வேண்டி இருந்தது…
மாலை ரவீந்திரன் அங்கே வீடு வர..
கேசவனும் சந்தோஷும் உடனே வந்தனர்.. அப்போது கூட ஷர்மி பார்வையில் படவில்லை, இவனை பார்த்ததும் சசிகலா வந்து தண்ணீர் கொடுக்க, மறுக்காமல் வாங்கிக் கொண்டான்..
இவனை தான் கேசவன் பார்த்திருந்தார், இந்த வீட்டிற்கு வந்த போது எப்படி இருந்தான், இப்போது எப்படி இருக்கிறான் என்பது போல.
ஆம், செல்வ செழிப்பில் வளர்ந்த சந்தோஷ் கூட அவன் போல இருக்கவில்லை.. சில விஷயங்கள் கேள்வி படும் இந்த நேரத்தில் ரவீந்திரனின் தோற்றத்தை தான் ஆராய்ந்தார்.. தோற்றம் நடை உடை பாவனை என்று அத்தனையும் நேர்த்தியாய் இருந்தது.
இதுவரை ஷர்மிளாவிற்கு பார்த்த மாப்பிள்ளைகளில் கூட யாரும் அப்படி இருக்கவில்லை..  
“வீட்ல எல்லாம் எப்படி இருக்காங்க?” என்றார் உறவினராய்.

Advertisement