Advertisement

ஆம்! அவன் சென்று பதினைந்து நாட்களாக, அந்த நாட்களில் எல்லா நிர்வாகமும் அவளே! வீடு, குடும்பம், அலுவலகம் எல்லாம். அவனின் தொழில் சாம்ராஜ்யத்திற்கு இது சாதாரணம் கிடையாது. அவளுக்குத் தொழிலில் எல்லாம் சற்றும் ஆர்வம் கிடையாது, அது செய்வது ரவிக்காக மட்டுமே.
“ஏன் இப்படி சென்டிமெண்ட் படம் ஓட்டுறீங்க?” என்றாள் ஷர்மி.
“வேற என்னப் பண்ண? லவ் படம் ஓட்ட முடியாதே நீதான் முதுகு வலி சொல்றியே…” என்றான் பாவம் போல.
“இந்த சென்டிமெண்ட் படத்துக்கு அதுவே ஓகே! எனக்கு இந்த ஃபீலிங்க்ஸ் எல்லாம் ஆகாது! இப்படிப் பேசி என்னைக் கடுப்படிக்கக் கூடாது…” என்றாள் கறாராக.
“எனக்கு ஆகுது, ரொம்ப ரொம்ப ஃபீலிங்க்ஸ் ஆகுது, நான் உன்னோட சந்தோஷமா இருக்கேன் நீ இருக்கியா?” என்றான்.
எப்போதும் அவன் கேட்கும் கேள்வி!
“அய்யா சாமி, என்னால ஆகாது! நீ லவ் படமே ஓட்டுறா ராசா!” என்று ஷர்மி கிண்டல் பேச,
“நீ பதில் சொல்றவரை சென்டிமெண்ட் படம் தான்…” என்றான் ஒரு எதிர்பார்ப்பான குரலில்.
ரவி கேட்பதை அவளின் மனது ‘சொல்லிட்டுத் தான் போயேன்டி…’ என்று அவளுக்குக் கட்டளையிட,
“இருக்கேன்! இருக்கேன்! சந்தோஷமா இருக்கேன்! போதுமா?” என்ற ஷர்மியின் முகத்தில் புன்னகை மட்டுமல்ல அவனைப் பார்த்த கண்களில் “இவன் என்னவன்…” என்ற கர்வம் காதல் ஆசை எல்லாம் போட்டிப் போட்டது.
“பாருடா, இப்படித் தானே என்னை ஏர்போர்ட்ல சைட் அடிச்ச, பக்கம் வந்ததும் அப்படியே மாறிக்கிட்ட…” என்று குறைபட்டான்.
“இப்ப என்ன?”
“ஓடிவந்து கட்டிப் பிடிச்சி முத்தம் குடுக்கலைன்னா போகுது. படுத்துக்கிட்டே கூட குடுக்கலாம்…” என்றான் இன்னும் இன்னும் ஒரு எதிர்பார்ப்போடு.
“ம்ம் அப்புறம்…” என்று நக்கல் பேசிய போதும், ரவியின் கண்களைப் பார்த்து “ஐ மிஸ்ட் யு…” என்றாள் திருவாய் திறந்து. எல்லாம் அவனுக்காக பார்த்து பார்த்து செய்தாலும் இந்த வார்த்தைகள் அபூர்வம்.
ரவி அவளையேப் பார்க்க “இப்படி ரொம்ப நாள் போகக் கூடாது போனா என்னையும் கூட்டிட்டு போகணும்…” என்றாள் சலுகையாய்.
ஒன்றும் பேசாமல் அணைத்துக் கொண்டான், பின்னே அவளாவது பிள்ளைகளை விட்டு வருவதாவது ஏதோ நெகிழ்ந்த நேரம் தன்னை ஒப்புக் கொடுப்பாள் அவ்வளவே.
“ரொம்ப படுத்துறேனா?” என்றவனை நிமிர்ந்துப் பார்த்தவள்,
“ரொம்ப இல்லை. ஆனா கொஞ்சம். சில சமயம் என்னால எல்லாம் ஹேண்டில் பண்ண முடியாம டென்ஷன் ஆகுது…” என்று சொன்னாள்.
இப்படி சொன்னாலும் ரவீந்திரன் எல்லாம் பார்க்கும் போது, அவளாய் வேலைகளை பிடுங்கும் சமயங்கள் எல்லாம் உண்டு. அதனைக் கொண்டு ரவி அவளை “இவளை என்ன செய்ய…” என்பது போல ஷர்மி அவனைப் பார்க்கும் பார்வையை இப்போது ரவி பார்க்க, அதனை கண்டுக் கொண்டவள்,
“என்ன பார்வை?” என்றவள் அவன் மேலே ஏறிப்படுத்து கட்டிக் கொள்ள, ரவி இதமாய் அவளின் முதுகை பிடித்து விட்டான்.
சில நிமிடம் அதனை அனுபவித்தவள், பின் தலை நிமிர்த்தி ஒரு ஆழ்ந்த முத்தம் அவனுக்காக வேண்டி. ஆம்! என்னவானாலும் அவனுக்கு வேண்டியதை செய்யவோ இல்லை அவன் வேண்டியதை செய்யவோ தயங்கவே மாட்டாள்.
“ஆக்சுவலி ஏர்போர்ட்ல உங்களைப் பார்த்ததும் நிஜமாவே ஓடி வந்து கட்டிப் பிடிச்சுக்கணும் போல தான் தோணிச்சு…” என்று ஒப்புக்கொடுத்தாள்.
ஷர்மியை இன்னும் இன்னும் இறுக்கமாய் ரவி அணைக்க, முதுகு வலியில் அவள் முனங்கவும் இறுக்கத்தைத் தளர்த்தியவன்,
 “எதுக்கு இப்படி நீ ரவுண்ட் தி க்ளோக் வொர்க் பண்றேன்னு எனக்குத் தெரியலை. அம்மாவும் சித்தியும் செய்றாங்கன்னு நீ இழுத்துப் போட்டு செய்ய வேண்டியதில்லை. அவங்களையே நான் வேண்டாம்னு தான் சொல்றேன். சில வேலைகள் எல்லாம் உனக்கு வராது. கஷ்டப்படுத்திக்காத. பசங்களை மட்டும் பாரு. வேற எதுவும் வேண்டாம். எதுன்னாலும் நான் பார்த்துக்கிறேன் ஷர்மி!” என,
“ம்ம்…” என்று முனகினாள்.
“எனக்கு பெர்ஃபெக்ட் வைஃப் எல்லாம் வேண்டாம். எனக்கு ஷர்மி எப்படியோ அப்படியே தான் என் வைஃப் வேண்டும். எனக்காக எதுவும் மாற வேண்டாம்…” என்றான் உணர்ந்த குரலில்.
அந்த வார்த்தைகள் அவளைப் பெருமையாய் உணர வைத்தாலும், சற்று வெட்கமும் வர “ச்சே, ச்சே, பிண்றீங்க பிண்றீங்க. என்னம்மா பேசுறீங்க நீங்க?”  என்று அதை மறைக்க கிண்டல் பேசினாள்.
ஷர்மிளாவை அப்படியே புரட்டி கீழே கொண்டு வந்தவன், “ரொம்ப பேசுறடி நீ…” என்றபடி அவளுக்கு தனக்கு தெரிந்த விதத்தில் எல்லாம் அடித்தும் கடித்தும் தண்டனைக் கொடுத்தான்.
“ஹேய், விடுடா விடுடா என்னை. உன்னை என்ன செய்றேன்னு பாரு…” என்று அவளும் பதில் கொடுக்க, அங்கே உருண்டு புரண்டு ஒரு கட்டில் யுத்தம் தான். சிறிது நேரம் நீள, அவளின் முதுகு வலியை கருத்தில் கொண்டு அவளை விட்டவன்,   
“கல்யாணத்துக்கு முன்ன நாம அப்படி சண்டை போட்டுட்டு இருக்கும் போது கூட உன்னை ஒரு வேலை நான் செய்ய விட்டதில்லை. எல்லாம் நான் தான் பார்ப்பேன். இப்போ நீ ஏன் என் வேலையைக் குறைக்கறேன்னு உன்னை நீ கஷ்டப்படுத்திக்கிற. தேவையில்லை. அதை தான் சொல்றேன். எனக்கு இது பழக்கம் நான் பார்த்துக்கிறேன்…” என்றான் முறைப்பாய்.
பதிலே இல்லை “ம்ம்…” என்ற சத்தம் கூட இல்லை, அவனையே ரசித்துப் பார்த்திருந்தாள்.
அதனை பார்த்தவன் முகத்தில் விரிந்த புன்னகை “ஓய், இப்படி பார்க்காதடி, எனக்கு என்னென்னவோ ஆகுது…”  அவன் திரும்பி மெதுவாய் அவளை மேலேற்றினான், சுகமாய் அவனின் நெஞ்சில் சாய்ந்தவள்
“நான் அழகா இருக்கேனா?”என,
“என்ன இப்போ?” என்றான் எதற்கென்று புரியாமல்.
“என்ன இப்போ தான் சொல்றீங்க. நான் அழகா இருக்கேன்னு சொல்லலை…” என்று சிணுங்கியவள்
“நீங்க ரொம்ப ரொம்ப மேன்லியா அழகா, யங் ஆகிட்டே வர்றீங்க, நான் கிழவி ஆகிட்டே வர்றேன்…” என்று மாலையில் இருந்து அவளின் மனதில் உறுத்திய கேள்வியைக் கேட்க,
“என்னது கிழவி ஆகிட்டியா? என்னோட நிலைமை என்ன ஆகறது?” என்று போலியாய் அலறியவன், “நீ ஒன்னும் கிழவி எல்லாம் ஆகலைன்னு இப்போ ப்ரூவ் பண்றேன்…” என்று அவளை ஆக்கிரமிக்க,
“வேண்டாம், வேண்டாம், நான் தூங்கணும். இல்லை காலையில தூங்கி வழிவேன். வீடு முழுசும் ஆளுங்க, அதுவும் உங்க தங்கச்சிங்க உங்களுக்கு மிச்சம் கண்லயே என்னைக் கிண்டல் பண்ணுவாங்க. எனக்கு ஷேமா போகும்…” என்று மறுக்க,
“இதெல்லாம் ஷேமா உனக்கு போடி. ரசனையே இல்லை உனக்கு. ஆனாலும் நாளைக்கு காலையில யாரும் உன்னைத் தொந்தரவு பண்ணாம நான் பார்த்துக்குவேணாம். அப்போ தூங்கு, அநியாயத்துக்கு நீ பேசுற…” என்று அவன் சொல்லிய போதே, மறுப்புக்கள் எல்லாம் மறைந்து அவளே அவனை தேடும் நிலைக்கு கொண்டு வந்திருந்தான். 
“ஊருக்குள்ள ஆயிரம் அழகிகள் இருந்தாலும் என்னோட அழகி நீ தான்டி. அதுவுமில்லாம ஒரு ரகசியம் சொல்றேன் கேளு. என்னோட லுக், ஸ்டைல், பேசற விதம், டிரெஸ்ஸிங் எல்லாம் மொத்தமும் உனக்காகத் தான் மாத்தினேன். நீ என்னைப் பார்க்கணும்னு தான் மாத்தினேன்…” என்றவன் ஷர்மி எத்தனை அழகு என்று அவனுக்குத் தெரிந்த முறையில் வார்த்தையில் இல்லாமல் செய்கையில் காண்பித்தான்
.
அவனின் கொஞ்சல் மிஞ்சல் கெஞ்சல் எல்லாம் சேர்ந்து அவளின் உயிர்மெய் தீண்டி, அங்கே சம்சார சாகரத்திற்குள் சுனாமியாய் தாக்க, அதற்குள் இருவருமே அடித்துச் செல்லப்பட்டனர். உயிர்ப்போடு அதற்குள் மூழ்கி இருக்க, கரை சேரவே வெகு நேரமானது.  
ரகசிய பரிமாற்றங்களின் முடிவில் “என்ன நீ கிழவியா?” என்றான்.
சில நிமிடங்கள் அவளுக்குப் பதிலே வரவில்லை. அவனிலிருந்து மீளவே முடியவில்லை. ஆழ்ந்து அனுபவிக்கும் நிமிடங்கள். 
சற்று நேரம் பொறுத்தே அவனைப் பார்த்தவள் “இல்லை, நான் அழகி தான்..” என்ற பாவனையை கண்களில் காட்டி
“ஐ திங்க் வி மேக் அ பெர்ஃபெக்ட் மேட்ச்! நீங்க வாழ்க்கையில எனக்குப் பண்ணின உருப்படியான காரியம் அதையும் இதையும்னு எதையோ செஞ்சு என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டது தான். இல்லைன்னா நான் உங்களை கல்யாணம் செஞ்சிருக்கவே மாட்டேன். உங்களை மிஸ் பண்ணியிருப்பேன்…” என்றாள் உள்ளார்ந்து.
அவனின் கர்வம் வாடவே விடாத சொற்கள்!
அப்படியே அவனின் அகமும் புறமும் நிறைந்து மலர்ந்து விட, “நான் செஞ்ச தப்புக்கு இப்படி ஒரு பாராட்டா?” என்று சற்று குற்றவுணர்வு எட்டி பார்க்கும் குரலில் சொல்லியே விட்டான்.
அந்த சிறு குற்றவுணர்ச்சிக் குரலும் ஷர்மியை இடற உடனே “லவ் யு…” என்று ரவியை அணைத்துக் கொண்டாள்.
என்னவோ எந்த இடத்தில் ஆரம்பித்தது என்றுத் தெரியாமல் அத்தனை விருப்பம், காதல், ஆசை, எல்லாம் விட ஒரு முழு சரணாகதி அவனிடம்.       
காலம் காலமாய் கணவனோடு நம் பெண்களுக்கு இருக்கும் அடிமைத் தளை. இந்தத் தளை என்பது நாம் வாழும் வாழ்வைப் பொறுத்தது, விலங்காகவும் மாறும், பிணைத்தலாகவும் மாறும். எது என்பது நம்மைப் பொறுத்தது. விலங்கோ பிணையோ எதுவாகினும் இந்த தளை நம்மை விலக விடாது.
“யு மேட் மை லைஃப் ஷர்மி!” என்றான் அன்பு, காதல், நன்றி எல்லாம் சேர்ந்த ஒரு குரலில், ஒரு பாவனையில்.
வாழ்க்கையில் என்ன உயரங்கள் வந்தாலும், இந்த ஷர்மியின் சஞ்சலமில்லா அன்பு அவனின் செயல்களுக்குப் பிறகு கிடைப்பது மிக அரிது என்று உணர்ந்தவன் அவளை இறுக்கிக் கொண்டான். ரவீந்திரன் என்ற மனிதனின் வாழ்க்கையும் மனதும் ஷர்மிளாவால் நிறைந்து இருந்தது.  
                                     ( நிறைவுற்றது )

Advertisement