Advertisement

ரவி வந்தவன் எல்லோரையும் வரவேற்று பின் ஒவ்வொருவரிடமும் பேசி, கௌசியிடம் வந்து நின்றவன், “எப்படி இருக்க கௌசி?” என்றான்.
“நல்லா இருக்கேன் அண்ணா..?” என்றாள்.
சந்தோஷ் விசாலி கேசவன் எல்லோரும் அங்கே தான்.
ஆம்!ஹயக்ரீவன் விசாலியிடம் மிக ஒற்றுதல். அவன் “நீங்க வாங்க விசாலிம்மா…” என்றிருக்க வந்திருந்தனர்.
இன்னும் யாரும் உண்ணவில்லை ரவிக்காகக் காத்திருக்க “வாங்க எல்லோரும் சாப்பிட்டு பேசலாம்…” என்று அனைவரையும் சீதா அழைக்க,
டைனிங் டேபிள் ஒதுங்க வைக்கப் பட்டு கீழே இலை போடப்பட்டு இருந்தது வரிசையாக. பெண்களும் பெண் பிள்ளைகளும் பயணத்தில் களைத்து வந்திருந்ததால் அவர்களை எந்த வேலையும் செய்ய சீதா விடவில்லை. அவர்களையும் அமர வைத்து இருந்தார்.
“நீங்க மேல உட்கார்ந்துக்கங்க அண்ணா…” என்று கேசவனை சீதா சொல்ல, வாசனும் “மேல உட்காருங்க..” என்றார்.
“இல்லை நான் இவங்களோடயே உட்கார்ந்துக்கிறேன்…” என்று பிள்ளைகளோடே அமர்ந்தார். ரவியும் அவர்களோடே அமர்ந்து கொண்டான். ஷர்மி அவளின் பெரியத்தையோடும் சின்னத்தையோடும் பரிமாற நிற்க,
“பாருங்க என் பேபி எவ்வளவு பொறுப்பா இருக்கா?” என்று ரவியிடம் சந்தோஷ் சொல்ல,
“பரிமாற நின்னா உங்க ஊர்ல பொறுப்பா?” என்று சந்தோஷிடம் ரவி கிண்டல் பேசினாலும், அவனுக்குத் தெரியும் ஷர்மி எவ்வளவு பொறுப்பாகி விட்டாள் என்று.
ரவிக்கு அலுவலக வேலை மட்டுமே, ஆனால் ஷர்மிக்கு அப்படி கிடையாது. முழு நேர அலுவலகம் கிடையாது என்றாலும் அவ்வப்போது அலுவலகம், உடன் பிள்ளைகளின் பொறுப்பு முழுவதும் அவளதே. வீட்டிலும் எல்லாம் அவள் சொல் கேட்டோ இல்லை சொல்லியோ இப்படித் தான்.
முன்பு ரவி பார்த்த வீட்டின் பொறுப்புகள் எல்லாம் தனதாக்கி கொண்டாள். ஒரே காரணம் ரவி ஓய்வின்றி உழைக்கிறான் அதில் இதுவும் வேண்டாம் என்று.
ஆம்! ரவியின் உயரம் வளர்ச்சி இப்போது இன்னுமே அதிகம். எல்லாம் அவனின் உழைப்பு புத்திசாலித்தனம் கொண்டு என்றாலும் அவனுக்கு சிறு மனஉளைச்சல், வீட்டுப் பொறுப்பு, பிள்ளைகளின் பொறுப்பு, குடும்ப சச்சரவு என்று எதுவும் கிடையாது. அதனால் தான் அவனால் கவலையின்றி உழைக்க முடிந்தது.
இது அவனின் வெற்றி மட்டுமே என்று சொல்ல முடியாமல் ஷர்மியின் பங்களிப்பு நிறைய நிறைய இருந்தது அவனுள்.
“பேபி, மாமா என்னவோ சொல்றார் பார் உன்னை. பரிமாற நின்னா எல்லாம் பொறுப்பில்லையாம்…” என்று சந்தோஷ் வம்பு வளர்க்க,
“மா, அப்போ நிக்காதீங்க உட்கார்ந்துகோங்க…” என்று ஆதி சொல்ல அங்கே ஒரு சிரிப்பலை.
ஷர்மி எதுவும் கண்டுக்கொள்ளவில்லை.
பின்பு சந்தோஷ் ரவியிடம் சொன்னான் “இந்த பதினஞ்சு நாளா இவ சிரிச்சு நான் பார்க்கலை. நீங்க ஊருக்குப் போனா இவ சிரிப்பையும் கொண்டு போயிடுறீங்களா என்ன?” என்று.
வீட்டினர் எல்லோரும் ஷர்மியைப் பார்க்க, அதுவும் அவளின் நாத்தனார்கள் குறுகுறுவென்றுப் பார்க்க, ஷர்மியின் முகம் மலர்ந்ததோ இல்லையோ ரவியின் முகம் மலர்ந்தது.   ரவி மனைவியை பார்த்தும் பாராமல் பார்க்க,
“அண்ணா டேய், நீ கௌசியை பார்க்க தினமும் வரலையா? வந்து என்னைத் தான் பார்த்துட்டு இருந்தியா?” என்றவள்,
“கௌசி, எங்கண்ணா செஞ்ச வேலையை பாரு, அவனை ரெண்டு மொத்து…” என்றாள்.
“ஹா..! ஹா..!” என்று கௌசி மலர்ந்து சிரித்தவள்
“அவருக்கு எத்தனை பேபி வந்தாலும் நீங்க தான் அண்ணி முதல் பேபி, அவர் உங்களைத் தான் பார்க்க வர்றார்ன்ற ரகசியம் எனக்குத் தெரியுமே…” என்றாள்.
சிறிதும் அதில் பொறாமை இல்லை.
“அத்தை கௌசியை திருஷ்டி எடுங்க…” என்று சொல்ல சீதா உடனே எடுத்தார்.
கேசவன் மகளைத் தான் பார்த்திருந்தார். சிறு விஷயமாகட்டும் பெரிய விஷயமாகட்டும் சட்டென்று உணர்ச்சி வசப்பட்டு உடனடியாக அதன் பிரதிபலிப்பைக் காண்பிக்கக் கூடியவள் ஷர்மி. இப்போது அந்த மாதிரி எதுவுமே இல்லை. அவளிடம் உள்ள ஒரு நிதானம், அவள் உறவுகள் இத்தனைப் பேரோடு அனுசரித்து பழகும் பாங்கு அவரை வியக்க வைத்தது.
ரவியுமே உணர்ந்தான், அவனுக்காக அவனுக்காக மட்டுமே அவனின் தங்கைகள் அத்தனைப் பேரோடும் ஒரு நல்லுறவை வளர்த்து வைத்திருக்கிறாள். யாரோடும் பழகுவது அவளின் இயல்பே கிடையாது. அவளின் இயல்பை மீறிய செய்கைகள் இது.  
மனைவியைத் தான் பார்த்தும் பாராமல் பார்த்து இருந்தான் என்றும் சொல்லலாம், சைட் அடித்து இருந்தான் என்றும் சொல்லலாம்.  இப்படியாக பேச்சும் சிரிப்புமாக உணவு நேரம் கழிய, பின்னர் சந்தோஷ் கேசவன் விசாலி விடை பெற்றுக் கொண்டனர்.
அப்போது வந்த ஹிட்டான ஒரு படத்தை ஹோம் தியேட்டரில் போட்டு மொத்தக் குடும்பமும் அதில் அடங்க, ஆதியும் விஸ்வாவும் அத்தைகளுடனும் அத்தை மக்களுடனும் ஐக்கியமாகினர். சீதாவும் அவரின் ஓரக்கத்தியும் கூட உணவை அங்கே எடுத்துக் கொண்டு சென்றனர்.
“இதென்ன ராத்திரி பத்து மணி, எப்போ படம் முடிய எப்போ தூங்குறது நாளைக்குப் பார்க்கலாம்…” என்று ரவி அவர்களிடம் சொல்ல,
“எல்லாம் நாங்க பார்த்துக்கிறோம் அண்ணா. நீங்க போய் தூங்குங்க…” என்று தங்கைகள் அனுப்ப, அப்போதும் கௌசியை “நீ போய் தூங்கு..” என்று அவளை அனுப்பிவிட்டே வந்தான்.
ஷர்மியைத் தேட, அவளோ கால் நீட்டிக் கீழே அமர்ந்திருந்தாள், “இவ்வளவு அவள் செய்வதே அதிகம் இனி அசைய மாட்டாள்…” என்று புரிந்தவன், உணவை எடுத்து அவளுக்குக் கொடுக்க “இன்னும் கை கழுவலை..” என்றாள்.
கை கழுவ ஒரு பௌவுலில் தண்ணீர் எடுத்துக் கொடுக்க, கை கழுவி அவள் உண்ணவும், சசிம்மாவிடம் சொல்லி எல்லோருக்கும் பால் விட்டு எடுத்து போகச் சொன்னான்.
ஆம்! தங்கைகள் வந்து விட்டால் அப்படி பார்த்துக் கொள்வான்.   ஒரு முறை ஷர்மி கூடக் கேட்டுவிட்டாள்.  
“நீங்க அப்படி ஒண்ணும் யாரோடயும் ரொம்ப க்ளோசா பேசுறதுக் கூட இல்லை. ஆனா எல்லாம் பார்த்து பார்த்து செய்றீங்க அவங்களுக்கு…” என்று.
“அது தங்கைங்கன்றது மட்டுமில்லாம, ஒரு நன்றி உணர்ச்சிக் கூட. இவங்கல்லாம் தான் என்னோட முன்னேற்றத்துக்குக் காரணம், இவங்க நாலு பேரையும் கரை சேர்க்கணும். நல்ல வாழ்க்கை அமைச்சுக் குடுக்கணும்னு தான் என்ன செய்யலாம் செய்யலாம்ன்னு யோசிக்க ஆரம்பிச்சேன். முன்னேற ஆரம்பிச்சேன். எப்போவும் அதைப் பத்தியே யோசிச்சேன். நீ சொன்ன மாதிரி மஞ்சப் பையை தூக்கிட்டு வந்த என்னோட நிலைமை இன்னைக்கு வேற லெவல் தான்…”
“இன்னைக்கு ரவீந்திரன்னா இந்த பிசினெஸ் வேர்ல்ட்ல ஒரு ப்ளேஸ் இருக்கு. என்னை எல்லோரும் மரியாதையாப் பார்க்கறாங்க, பேசறாங்க. இவங்க இல்லைன்னாலும் இது நடந்திருக்கும். ஆனா இவ்வளவு சின்ன வயசுல சந்தேகம் தான். என்னோட முன்னேற்றத்துக்கு அவங்களும் ஒரு காரணம்…” என்றிருந்தான்.
இந்த ரவியின் பார்வை ஷர்மியை வெகுவாய் ஆகர்ஷித்தது. இவன் அவர்களுக்கு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுத்திருக்கிறான் என்ற எண்ணம் இல்லாமல் எனக்கு அந்த உந்துதலை கொடுத்து என்னுடைய முன்னேற்றத்துக்கு அவர்களும் ஒரு காரணம் என்று அவன் சொல்வது, அவனை அவ்வளவு பிடிக்க வைத்தது.  
என்னிடம் மட்டும் தான் இவன் தப்பியது வேறு எங்கும் எதிலும் இல்லை என்ற எண்ணம் ஆழ் மனதில் பதிந்தது. 
அம்மாவிடம் சென்றவன் “மா பார்த்துக்கோ, நாங்க தூங்க போறோம்…” என்று சொல்லியவன் “விஸ்வா…” என மகளை அழைக்க,
“பா, நாங்க இன்னைக்கு இங்க தான் மேல வரமாட்டோம்…” என்றாள்.
அவளே சொல்லிவிட ஆதியை கேட்கவா வேண்டும், அவன் ஹயக்ரீவனுக்கு அது இதென்று ஒரு சண்டை காட்சியை விவரித்துக் கொண்டிருந்தான். பின்பு இவர்கள் இருவருக்கும் பாலை எடுத்துப் போய் வைத்து, பெட்டியை வைத்து என்று அவன் வேலைகளை முடித்த நேரம் அலுப்பில் உடை கூட மாற்றாமல் ஷர்மி நேராய் படுத்திருந்தாள் முதுகுவலியில்.
முகத்திலும் ஒரு அயர்வு!
இவன் குளித்து வந்தவன் பார்த்தது படுத்திருக்கும் ஷர்மியைத் தான். எப்போதும் போல அவனின் குட்டி ஷார்ட்ஸ் மட்டும் அணிந்து வர,
“என்ன பண்றீங்க?”
“இன்னைக்குப் பசங்க யாரும் வரமாட்டாங்க, எல்லோரும் கீழ இருக்காங்க. இன்னைக்காவது என் பெட்ரூம்ல என்னை ப்ரீயா இருக்க விடு…” என்றான் பாவம் போல.
அப்போதும் ரூமின் கதவு தாள் போட்டிருக்கிறதா என்று ஷர்மி படுத்தவாறே பார்க்க “முடியலைடி உன்னோட? என்னடி இந்த ட்ரெஸ்க்கு? என்னவோ டிரஸ்சே போடாம நான் சுத்தற மாதிரி பில்ட் அப், அதுவும் பசங்க இருந்தா ஃபுல் டைம் நான் வேஷ்டில தான் இருக்கேன்…”
“இப்போ இந்த ஒரு வருஷமா தான் அவங்க ரெண்டு பேரும் தனியாத் தூங்குறாங்க. நான் இந்த ட்ரெஸ்ல இருக்கேன். அதுவும் பாரு பாதி தொடைக்கு இருக்கு…” என்று அவன் நின்று காண்பிக்க,
“ம்ம், இந்த ட்ரெஸ்ல நீ செக்ஸியா இருக்கேன்னு உனக்கு நான் எத்தனை தடவை சொல்ல…” என்று ஷர்மி எரிந்து விழ,
“உன் முன்னாடி தானடி இருக்கேன். அப்படித் தான் இருப்பேன்…” என்று மல்லுக்கு நின்றான்.
“எப்படியோ போங்க நீங்க. வர வர ரொம்ப ஹேண்ட்சம் ஆகிட்டு வர்றீங்க…” என்று சலித்து அவள் கவிழ்ந்து படுத்தாள்.
சண்டையெல்லாம் விட்டவன் “என்ன பண்ணுது?” என்று மனைவியின் அருகில் வந்தான்.
“முதுகு வலிக்குது…”
“உனக்கு பழக்கமில்லாத வேலையை ஏன் செஞ்ச?”
ஆம்! கீழே எல்லோரும் அமர்ந்திருக்க அதிகம் பரிமாறியது ஷர்மி தான்.
“ஒரு ஆர்வத்துல செஞ்சிட்டேன் ஆனா வலிக்குது…” என்றாள் பரிதாபமாய்.
“நேரா படு, கொஞ்சம் நேரம் தூங்கி எழுந்தா சரியா போயிடும்…” என்றவன் அவளை ஆசையோடு பார்க்க,
அவனின் பார்வையை உணர்ந்தவள் “நோ நோ, எனக்கு முதுகு வலி ஒண்ணும் முடியாது…” என்றாள் அவசரமாக.
“என்ன பண்றாங்க உன்னை, உன்னை ஒண்ணும் பண்ணலை…” என்று அருகில் படுத்து அவளைப் பார்த்தவன், “ரியல்லி ஷர்மி, நீ ரொம்ப ரொம்ப மாறிட்ட. என்னை உனக்கு அவ்வளவு பிடிச்சிருக்கா என்ன?”என்றான்.
       
“ஆரம்பிச்சிட்டான்டா இவன்…” என்ற பார்வைத் தான் ஷர்மி கொடுத்தாள்.
“இப்போ என்ன உன்னைப் பிடிச்சிருக்கு சொல்லணுமா?”
“எஸ், எஸ், சொல்லணும்! உன்னை பிடிச்சிருக்கு சொல்லணும்! ஐ லவ் யு சொல்லணும்! உனக்காக தான் எல்லாம் செய்றேன்னு சொல்லணும்!” என்று அடுக்கினான்.
“அதெல்லாம் சொல்ல முடியாது…” என்று அவள் சொல்ல,
“நீ சொல்லலைன்னாலும் இந்த ஃபீல் நீ எனக்குக் குடுக்கறடி…” என்றான் நெகிழ்ச்சியாக.

Advertisement