Advertisement

அத்தியாயம் முப்பத்தி நான்கு :
பத்து வயது விஷ்வாத்திகாவும் ஒன்பது வயது ஆதித்யனும் அம்மாவின் வரவிற்காக ஹாலில் காத்திருக்க, மதிய உணவு நேரம் கடந்து இருக்க “டேய், சாப்பிடுங்க கண்ணுங்களா பாட்டிங்களுக்குப் பசிக்குது…” என்றார் சீதா.
ஆம்! அன்று ஒரு விடுமுறை தினம். ஃபாக்டரி சென்ற ஷர்மிளா இன்னும் வரவில்லை. ஒரு ஒப்பந்தத்தின் காரணம் கொண்டு ரவீந்திரன் வெளிநாடு சென்றிருக்க, அதனால் ஷர்மிளா ஃபாக்டரி சென்றிருந்தாள். ரவிக்குப் பதினைந்து நாள் பயணம்.
“நீங்க சாப்பிடுங்க…” என்றான் பெரிய மனிதனாய் ஆதித்யன். ஆதி கும்பேஸ்வரரைக் கொண்டு மகனுக்கு ஆதித்யன் என்று ரவி பெயர் சூட்டியிருந்தான்.
“நீங்க சாப்பிட்டா தான் சாப்பிடுவோம்…” என்று இரண்டு பாட்டிகளும் அமர்ந்திருக்க, பிள்ளைகளும் அசையவில்லை.
சில நிமிடங்களில் ஷர்மி வந்து விட, “இவங்க ரெண்டு பேரும் இன்னும் சாப்பிடலை…” என்று சீதா புகார் வாசிக்க,
 “இவங்க ரெண்டு பேரும் இன்னும் சாப்பிடலை…” என்று விஸ்வாத்திகா அம்மாவிடம் சொன்னாள்.
“பாரேன் இவ்வளவு நேரம் வாய் திறக்கலை, நீ வரவும் தான் பேசுறா…” என்று சீதா மீண்டும் புகார் படிக்க,
இரண்டு பேர் புகாரையும் ஒதுக்கிய ஷர்மி, “ஏன் சாப்பிடலை?” என்றாள் நால்வரையும் பார்த்து. மணி அப்போதே மதியம் மூன்று.
“பிள்ளைங்க ரெண்டும் சாப்பிடாம உட்கார்ந்து இருக்குது. இதுல விட்டுட்டு நாங்க எங்க சாப்பிட…” என்றார்.
“இவங்க ரெண்டு பேரையும் தெரியாதா? சொன்னது சொன்னபடி செய்யணும். தப்பு என்னுது தான். நான் தான் சொன்னேன், மதியம் அம்மா கூடத் தான் ரெண்டு பேருக்கும் லஞ்ச்னு…” என்றாள்.
ஆம்! விடுமுறை தினம் தங்களோடு தான் இருக்க வேண்டும் என்று பிள்ளைகள் சொல்ல, ரவி இல்லாததால் சென்றதும் வந்து விடுகிறேன் என்று சொல்லிச் சென்றவள் லேட்டாய் வர, இந்த அக்கப் போர்!
இதற்கு மாமனார்கள் இரண்டு பேரும் பார்த்துக் கொள்கிறார்கள். ஆனாலும் ரவி இல்லாத போது சிறிது நேரமாவது இவளின் இருப்பு அங்கே வேண்டும்.  
“அம்மாக்குப் பசிக்குது…” என்றாள் உடனே ஷர்மி. இல்லையென்றால் இந்த பஞ்சாயத்து ஓயவே ஓயாது என்று தெரிந்தவளாக.
“வாங்க, வாங்க எல்லோரும் சாப்பிடுவோம்…” என்றான் ஆதித்யன் உடனே.
“அதுதானே இவ வீட்டுக்காரனை விட இவ பையன் பத்து மடங்கு இருக்கான் இவளைத் தாங்குறதுல…” என்று தன் ஓரக்கத்தியிடம் சீதா நொடிக்க,
அது ஷர்மியின் காதில் விழுந்தாலும் அப்படியே கடந்து சென்றாள். ஆம்! கூட்டுக் குடும்பம் எனும் போது இந்த சலசலப்புகள் சில சகஜம். ஷர்மி அதனை எந்த முக சுணக்கமும் இல்லாமல் கடந்து விடுவாள். அவர்கள் சொல்வதும் உண்மை தானே, ரவியை விடப் பத்து மடங்கு அவனின் அம்மாவை கவனிப்பான் ஆதித்யன். ஆனால் வீட்டினர் அனைவரும் கவனிப்பது விஸ்வாதிக்காவை. வீட்டின் செல்ல மகள். விஸ்வாத்திக்கா ஆதித்யனை விட ஒரு வயது பெரியவள் என்றாலும் ஆதித்யன் தான் பெரியவன் போலத் தோன்றும் பேச்சு செயல்கள் எல்லாவற்றிலும்.
அக்காவின் உயரமும் அவனின் உயரமும் சரியாக வேறு இருக்க, அவன் தான் பெரியவனாகிப் போனான். ஐந்து பேரும் அமர்ந்து உண்ண அங்கே சீதாவின் வாயும் ஆதித்யனின் வாயும் படாதபாடு பட்டது. இருவரும் பேசிக் கொண்டே உண்ண, சீதாவும் பேசுவதால் “பேசாம சாப்பிடு ஆதி…” என்று சொல்ல முடியாமல் ஷர்மி தயங்க, விஸ்வாத்திக்காவிற்கு அது போல எல்லாம் எதுவும் இல்லை.
“பேசாம சாப்பிடுங்க ரெண்டு பேரும்” என்று அதட்டலிட்டாள்.
ரவியின் சித்தி சிரிக்க, “என்ன சிரிப்பு இங்கே?” என்றபடி சந்தோஷ் வந்தான்.
“வாங்க மாப்பிள்ளை…” என்று அவசரமாக சீதாவும் அவரின் ஓரக்கத்தியும் எழ,
“அத்தை, அத்தை உட்காருங்க…” என்றவன், “நான் கௌசியைப் பார்த்துட்டு வர்றேன்…” என்றான்.
இல்லையென்றால் அவர்கள் அமர்ந்து உண்ண மாட்டார்கள் என்று தெரிந்து.
“மாமா, அத்தையை டிஸ்டர்ப் பண்ணாதீங்க அவங்க தூங்குறாங்க. இப்போ தான் ஹயக்ரீவனும் தூங்கினான், நீங்க போனா எழுப்பிடுவீங்க, இங்கேயே உட்காருங்க..” என்று அதித்யன் சொல்ல,
“இது வேறயாடா ஆதி…” என்று சொன்ன போதும் தப்பாமல் அங்கேயே இன்னொரு சேரில் அமர்ந்தான்.
ஆம்! பெரிய டைனிங் டேபிள் பன்னிரண்டு பேர் அமரக் கூடியது. ஆனாலும் பல சமயம் அதிலும் இடம் பத்தாது.
கௌசிக்கு ஆறு வயதில் ஹயக்ரீவன் என்று ஒரு மகன் இருக்க, இப்போது அவள் மீண்டும் நிறை மாத கர்ப்பம். இன்னும் நான்கைந்து நாட்களில் எப்போது வேண்டுமானாலும் குழந்தையை எதிர்பார்க்கலாம் என்ற நிலை தான்.
உண்டு முடித்ததும் “மா நம்ம போறோம் தானே…” என்றான் ஆதி ஷர்மியிடம்.
“அப்பாவே வந்துடுவார் டா கண்ணா…”
“நோ, நாம போகலாம்…” என்றான் பிடிவாதமானக் குரலில்.
“சரி போகலாம்” என்று விட்டாள் உடனே.
எங்கேயும் பெரிதாக பிள்ளைகளோடு அவர்கள் சேர்ந்து செல்வதில்லை. அதனால் இந்த மாதிரி சின்ன சின்ன விஷயங்கள் கேட்டால் ஒப்புக் கொண்டு விடுவாள்.
“நான் வரவா பேபி…” என்று சந்தோஷ் கேட்க, “நோடா அண்ணா, நான் மேனேஜ் பண்ணிக்குவேன்…” என்று மறுத்து விட்டாள். 
ஆறு மணிக்கு ரவியின் ஃபிளைட், அவனை அழைக்கப் போகலாம் என்று தான் ஆதி கேட்டான். இதோ ஆறு மணி ஃபிளைட் ஆறரைக்கு வரும் என்று சொல்லியிருக்க, ஷர்மிளா, விஸ்வாத்திகா ஆதித்யன் என்று மூவரும் அமர்ந்திருந்தனர்.
மனது ரவியை மிகவும் தேடியது. திருமணமான இத்தனை ஆண்டுகளில் அவர்களுக்குள் வரும் முதல் நீண்ட பிரிவு, பதினைந்து நாட்கள் அவனைப் பார்க்காமல். கண்கள் அவனைப் பார்க்க பூத்து தான் இருந்தன.   
ஃபிளைட் லேண்ட் ஆகி ரவி வெளியே வரவும், மக்கள் இருவரும் அவனிடம் விரைந்தனர். மக்கள் மட்டும் தான் விரைந்தனர் ஷர்மி அவளின் இடத்தில் அப்படியே அமர்ந்திருந்தாள் மூவரையும் பார்த்தபடி.
இவர்கள் வருவது ரவியிடம் சொல்லவில்லை. எதிர்பாராமல் மக்களைப் பார்த்ததும் அவனின் முகம் இந்த ஸ்வீட் சர்ப்ரைசில் மலர்ந்து விட, அதனை ரசித்தபடி அமர்ந்திருந்தாள். அவளும் ஓடிச் சென்று அணைத்துக் கொள்ள அப்படி ஒரு உந்துதல். சில நொடிகளில் மக்களை தாண்டி ரவியின் பார்வை ஷர்மியைத் தேட, அதனையும் பார்த்தபடி அமர்ந்திருந்தாள். ஆனாலும் எழவில்லை செல்லவில்லை.
பின்பு இருவரிடமும் பேசியபடி இவளைக் கண்களால் தேடிக் கண்டு இவளை நோக்கிப் பார்வையை செலுத்த, எப்போதும் போல சொக்கித்தான் போனாள்.
“வயசாக வயசாக இன்னும் தான் ஹேண்ட்சம் ஆகுறான் இவன்…” என்று பொறாமையோடு கணவனை பார்வை தழுவியது.
பின்னே அவள் அப்படியேத் தான் இருந்தாள் என்று சொல்வதை விட, சற்று உடல் பிடித்திருந்தது. முப்பத்தி நான்கு வயது, அந்த வயதிற்குரிய பொலிவு தான். ஆனால் நாற்பது வயதில் அவன் என்னவோ மிக இளமையாக இருந்தான்.
முகம் சுருக்கி கணவனைப் பார்த்திருக்க, “என்ன..?” என்று பார்வையால் வினவியபடி அருகில் வந்தவன், “ஏதோ பசங்க ரகளைப் பண்ணினாங்கன்னு பெரிய மனசுப் பண்ணி என்னைப் பார்க்க வந்துட்டப் போல…” என்று நொடிக்க,
“ஒஹ், உங்களைப் பார்த்ததும் ஓடி வந்து கட்டிப் பிடிச்சு முத்தம் கொடுக்கணுமோ?” என்றாள் சலுகையாய் அவளின் மனதில் தோன்றிய அவாவைக் கொண்டு.
“இங்க பண்ணலைன்னா போகுது ரூம்லயாவது பண்ணுடி…” என்றான் சன்ன சிரிப்போடு.
“அய்யடா..!” என்றவள் “போங்க போய் லக்கேஜ் எடுத்துட்டு வாங்க..” என, சில பல நிமிடங்கள் கடந்து எடுத்து வந்தான்.
 அதுவரையும் மக்கள் அம்மாவிடம் வளவளத்துக் கொண்டிருந்தனர். ஒரு பெட்டியோடு போனவன் இப்போது மூன்று பெட்டிகளோடு வந்தான்.
“பெரிய லிஸ்ட் குடுத்துட்ட, எனக்கு இதெல்லாம் வாங்கறதுக்குள்ள போதும்னு ஆகிடுச்சு…” என்று மனைவியிடம் குறைபட்டான்.
“இந்நேரத்துக்கு எல்லாம் வந்திருப்பாங்க. அப்போ நீங்க வந்தா மாமா என்ன வாங்கிட்டு வந்தாங்கன்னு பார்க்க மாட்டாங்களா?” என்றாள்.
ஆம்! விடுமுறைக்கு இன்று மாலை மற்ற மூன்று பெண்மக்களும் பிள்ளைகளுடன் வர இருந்தனர்.
“பின்னே மாமா அப்ராட் போயிருக்கீங்க, என்ன வாங்கிட்டு வருவீங்கன்னு கண்டிப்பா எதிர்பார்ப்பாங்க. உங்களுக்கு கிஃப்ட் வாங்கற பழக்கமே இல்லைன்னு எனக்குத் தெரியும் எல்லோருக்கும் தெரியாதே…” என்றாள்.
ஆம்! உண்மையில் அப்படி தான், ஷர்மி தான் ரவிக்கே பார்த்து பார்த்து வாங்க வேண்டும். ஷாப்பிங் என்ற ஒன்று அவன் செய்வது அரிது. ஷர்மி இதையெல்லாம் பெரிதாய் எதிர்பார்ப்பது இல்லை, ஆனாலும் ஆதங்கமாய் சில சமயம் வார்த்தைகள் வந்து விடும்.
உண்மையில் ரவிக்கேத் தெரியும், ஷர்மிளா அவனின் வாழ்க்கையில் வந்த வரம் என்று. பெரிதாக பரிசுகள் கொடுத்தது இல்லை, ஊர் சுற்றுவது இல்லை, அதிக நேரம் செலவழிப்பது இல்லை. ஆனால் கிடைக்கும் சில மணிநேர உடனிருப்பு மட்டுமே அவளுக்குப் போதும்.
என்ன தான் அவனின் உழைப்பு முன்னேற்றம் தாண்டி அவளுக்காக என்றும் இருக்கும் போதும், அவளுக்கான நேரம் கூட செலவழிக்காமல் இருப்பதையும் கடந்து அவனை குறை சொன்னதே இல்லை.
இதோ அவனின் கம்பெனி பப்ளிக் லிமிடட் செய்து விட்டான். வேறு சில தொழில்களில் காலூன்றி இருந்தான். அதற்கான வெளிநாட்டு ஒப்பந்தம் தான் இது. வீட்டில் அப்படி ஒரு நிம்மதி இருக்க, அவனால் முன்னேற்றத்தை நோக்கி ஓட முடிந்தது.  
“எங்கே போகணும் போகலாம் வா, என்ன வாங்கணும்? நெக்ஸ்ட் ஃபிளைட் பிடிச்சு திரும்ப அப்ராட் போறதுன்னாலும் ஓகே..” என்று அவன் சொல்ல,
“ம்ம், உன் மூஞ்சி கூட்டிட்டுப் போற ஆளைப் பாரு…” என்று சலுகையாய் கடிந்தாள்.
விஸ்வாவும் ஆதியும் தன்னைக் கவனிப்பதை உணர்ந்தவள் அமைதியாகிவிட “ஏன் ஷர்மி சோ ஹாட்..” என்று கிசுகிசுத்தான்.
“ம்ம், நீ ரொம்ப ஹாட்டா இருக்க, அதனால…” என்று அவனைப் போல கிசுகிசுக்க, ரவி முகத்தில் ஒரு ரகசியப் புன்னகை. பின் மக்களிடம் கவனம் திருப்பினான்.
ஆளுக்கு இரு பெட்டியாக தள்ளி பார்க்கிங் வந்து ஏற்றி வீடு வர, வீடு ஜெகஜோதியாக இருந்தது. நேரம் எட்டு மணியை நெருங்கி இருந்தது. 
“எல்லோரும் வாங்க…” என்ற படி ஷர்மி உள்ளே போக, “ஹேய்..!” என்று ஓடிச்சென்று விஸ்வாவும் ஆதியும் அத்தை மக்களிடம் ஹய் ஃபை கொடுத்தனர்.
இதில் ஆதித்யனும் ஹயக்ரீவனும் மட்டுமே ஆண்மக்கள். மற்ற எல்லோரும் பெண் மக்களே. அதிலும் அழகிகள் எல்லோரும். பாரம்பரிய உடையான பாவாடை சட்டை தாவணி என்றிருக்க பார்க்கவே அத்தனை பாந்தமாய் இருந்தது. ஷர்மி அவர்கள் வருகிறேன் என்று சொன்னதுமே ரவியின் உதவியாளரிடம் சொல்லி ட்ரெயினில் முதல் வகுப்பு ஏஸி யில் டிக்கெட் புக் செய்து அனுப்பியிருந்தாள். குடும்ப விஷயங்கள் எதையும் அவள் மறப்பது இல்லை. 

Advertisement