Advertisement

“எனக்கு சூடு சொரணையே இல்லையான்னு கேட்கற இல்லையா? உன்னை கல்யாணம் செய்யும் முன்ன ஏகத்துக்கும் இருந்தது. உன் வார்த்தை அந்த சூடு சொரணையை எனக்குள்ள ஏகத்துக்கும் கிளப்ப  அதனால தான் இந்த கல்யாணமே. இல்லைன்னா அப்போவே இவ ஒரு ஆளுன்னு பேசறா இதுக்கு போய் எல்லாம் இவளை கல்யாணம் பண்ணுவியான்னு எனக்கு நானே கேட்டுக்கிட்டு போடின்னு போயிருப்பேன். ஆனா போகலையே, ஏன்? ஏன்? ஒரு வேளை எனக்கு தெரியாம என் அடி மனசுல உன்னை கல்யாணம் பண்ணற எண்ணம் இருந்ததோ என்னவோ?”
“ஆனா உன்னை கல்யாணம் பண்ணின பிறகு சூடு சொரணை எல்லாம் இருக்கக் கூடாதுன்னு கல்யாணம் பண்ணனும்னு நினைச்சப்போவே முடிவு பண்ணிட்டேன். திஸ் இஸ் கால்ட் அஸ் ஐரணி ( IRONY ) ரைட். நீ என்ன வேணா சொல்லு ஐ அம் ஹேப்பி வித் யூ. உன்னோட நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். எனக்கு உன்னை பிடிச்சிருக்கு. ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு” என்றான் அவளை கடித்து தின்னும் பார்வையில் பாவனையில்.       
“அதனால இந்த சூடு சொரணை எல்லாம் பேசி என்னை உசுபேத்தி தள்ளி போக வைக்கணும்னு நினைக்காத. அது எதுக்கு நமக்குள்ள. அது வேண்டாம். எனக்கு நீ தான் வேணும்” என்றவன் அவளை அணைத்து முத்தமிட என்ன தள்ளியும் அவளால் நகர்த்த முடியவில்லை அவனாய் விடும் வரை.
சிறிது நேரம் முயன்றவள் பின் என்னவோ செய்து கொள் என்று விட்டு விட்டாள்.
அவனாய் விட்டவன், “அக்சுவல்லி இன்னும் என்ன என்னவோ பண்ணனும்னு தோணுது. ஆனா இப்போ வேண்டாம் இல்லையா?” என்றான் அந்த நொடிகளை அனுபவித்து இன்னும் முன்னேற முடியாததற்கு வருந்துவது போல.
அவனின் கண்களை நேருக்கு நேர் பார்த்தவள் “விளையாட்டில்லை ஐ அம் சீரியஸ் நமக்குள்ள என்ன இருக்குன்னு தான் எனக்கு தோணுது” என்றாள் நீ செய்வது எனக்கு பிடிக்கவில்லை என்ற பாவனையில்.  
“வா” என்று அவளின் கை பிடித்து அழைத்து வந்தவன், அவளை கட்டிலில் அமர்த்தி மண்டியிட்டு அவளின் முன்னே கீழே அமர்ந்தான்.
“நான் சந்தோஷமா இருக்கேன், ஆனா அதை விட நீ என்னோட சந்தோஷமா இருக்கணும்னு இஷ்டப்படறேன். என்ன கேட்கணுமோ கேளு? ஒரு வார்த்தைக் கூட மாத்தி சொல்ல மாட்டேன். என்ன நினைக்கறேனோ செய்யறேனோ அதை அப்படியே சொல்வேன்!” என்றான்.
“எனக்கு எதுவும் கேட்க வேண்டாம். நீங்க கேட்டு கேட்டு என்கிட்டே எதுவும் சொல்ல வேண்டாம்” என்று முகத்தை திருப்பினாள்.
பணக் கஷ்டத்தை அவளிடம் சொல்லாததற்கு மட்டுமே இந்த சுணக்கம் என்று புரிந்தவன் “கொஞ்சம் அகலக் கால் வெச்சிட்டேன், இப்போ கை கடிக்குது, அது தான் வீட்டை விற்க யோசிச்சேன்” என்றான்.
“அது பிரச்சனை கிடையாது, என் கிட்ட ஏன் சொல்லலை?”
“சொன்னா உன்கிட்ட இருக்குற நகை பணம் சொத்துன்னு எதையாவது யூஸ் பண்ண சொல்வ, அதுல எனக்கு இஷ்டமில்லை. அதனால சொல்லலை. மத்தபடி வீட்ல இருக்குற ஒரு பொண்ணு, அவளுக்கு எதுக்கு விஷயம் தெரியணும்னு அப்படின்ற எண்ணம் எல்லாம் கிடையாது. எனக்கு உன்னோட பணம் உபயோகிக்க கூடாது. அதனால சொல்லலை உன்கிட்ட” என்றான் தெளிவாய்.  
“ஏன் உபயோகிச்சா என்ன? நான் வேற நீங்க வேறையா? அப்போ நமக்குள்ள என்ன இருக்கு?” என்றாள் ஆற்றாமையான குரலில்.
“ஷர்மி நான் சொல்றதை நீ சரியா புரிஞ்சிக்கணும். வாழ்க்கையில திறமை இருக்குறவன் எல்லாம் முன்னுக்கு வர்றதில்லை. ஆனா நான் வந்தேன், ஏன்னா உங்கப்பா எனக்கு குடுத்த ஒரு வாய்ப்பு அதனால. ஆனா உங்கப்பா குடுத்தது ஒரு வாய்ப்பு மட்டும் தான், இன்னும் சொல்லப் போனா அந்த வாய்ப்பையும் நான் உருவாக்கினேன். அதுல அவர் லாபம் பார்த்தார். சோ. என்னை அனுமதிச்சார்”
“ரெண்டு பேருக்கும் லாபம் என்னால, இது தான் நிஜம். மத்தபடி நமக்கு நடந்த இந்த கல்யாணத்துல என்னோட இஷ்டம் மட்டும் தான். இதுல பணம் எங்கேயும் இல்லை. ஆனா பார்க்கறவங்களுக்கு நான் உன்னை பணத்துக்காக கல்யாணம் பண்ணினது போல தோன, அதுவும் எங்கம்மாவுக்கே தோன, எனக்குள்ள சில எதிர் மறை எண்ணங்கள். பணம்ற விஷயத்துக்கு எப்போவும் உங்க வீட்டு சொத்தை நான் உபயோகிக்க கூடாது”    
“இப்போ இந்த சூழல்ல பணம் வாங்கி திரும்ப கூட குடுத்துக்கலாம், ஆனா அவங்க சொன்னது மாதிரி தானே ஆகும். அதனால எனக்கு இஷ்டமில்லை. மத்தப்படி என்னோட விஷயங்கள் உனக்கு தெரியக் கூடாதுன்னோ இல்லை என்னோட கஷ்டம் தெரிஞ்சா நீ என்னை கீழ நினைப்பன்னோ கிடையாது. நான் சொல்ல வர்றது புரியுதா?”
“நான் நானே சொந்தமா நிக்கணும். நமக்குள்ள பணம் வரக் கூடாது. உன் பணத்தை உபயோகிக்க கூடாதுன்னு தாழ்வு மனப்பான்மை எல்லாம் கிடையாது. ஆனா இஷ்டமில்லை. சொன்னாலும் சொல்லலைன்னாலும் என்னோடது இன்னைக்கு இல்லைனாலும் நாளைக்கு ஒரு சாம்ராஜ்யம் தான். அதுல என்னோட உழைப்பு முயற்சி மட்டுமே இனி வேணும். நீ வா, உன்னோட உழைப்பை கொடு யோசனையை கொடு. ஆனா பணம் வேண்டாம். இது என்னோடது நம்மோடது அவ்வளவு தான். வேற யாரோடதும் வேண்டாம்”        
என்ன பதில் சொல்வது என்று இப்போது ஷர்மிக்கு தெரியவில்லை. “நீ என்னை மதிக்கவில்லை என்று சொல்லும் முன்னே அப்படி கிடையாது என்ற வாதம், உனக்கு தாழ்வு மனப்பான்மை என்று சொல்லும் முன்னே அப்படி கிடையாது என்ற வாதம், இதெல்லாம் இல்லை ஆனாலும் உன் பணம் எனக்கு வேண்டாம் என்ற வாதம்”
ரவி தேர்ந்த வியாபாரி தான், ஆனால் அதனை வாழ்க்கையில் காண்பிப்பது சலிப்பாய் தோன்ற…
“எனக்கு நீங்க புத்திசாலின்னு தெரியும். ஆனா என்கிட்டே அந்த புத்திசாலித்தனம் எல்லாம் காண்பிக்கறது என்னவோ என்னை தள்ளி நிறுத்தறது மாதிரி இருக்கு, உங்களோட செயல்களும் அப்படி தான் இருக்கு. நான் தெரியாம செஞ்சிட்டேன்னு சொல்ற ஆள் கிடையாது நீங்க. செய்யறது எல்லாம் தெரிஞ்சு தான்றப்போ, அதை கண்டுக்காம இருக்க பழகணும் நான்”
“இந்த கல்யாணம் நடக்கும் முன்ன எப்படியோ கல்யாணம் நடந்த பின்ன உங்களை பிடிக்கணும், உங்க வீட்டு பழக்க வழக்கம் பழகணும், உங்க ஆளுங்களோட பழகணும், அட்ஜஸ்ட் ஆகணும், இப்படி இப்போ வரை வாழ்க்கையை கொண்டு போறேன் அண்ட் அன்ஃபார்சுநேட்லி உங்களை விட்டுட்டு என்னால இருக்க முடியாது. இதெல்லாம் எனக்கு மட்டும் ஏன்னு தோணுது” என்றவள் அப்படியே படுத்துக் கொண்டாள்.
அவளையே பார்த்தவாறு வெகு நேரம் யோசனையில் இருந்தவன், அவனும் படுத்து அடுத்த நொடி அவளை அணைத்து இருந்தான், “நீ என்னை எவ்ளோ கேவலமா வேணா திட்டிக்கோ, சிலரெல்லாம் குடிப் பழக்கத்துக்கு போதைக்கு பொண்ணுங்களுக்கு இப்படி எதுக்கோ எதுக்கோ அடிமை. ஆனா எனக்கு நீ இல்லாம முடியாது. ஐ அம் அடிக்ட் டு யு, இட்ஸ் நாட் பிசிக்கல் இட்ஸ் பியுர்லி மெண்டல். மே பி இப்போ உனக்கு புரியாம இருக்கலாம். ஆனா லைஃப்ல ஏதோ ஒரு இடத்துல ஃபீல் பண்ணுவ” என்று சொல்ல,
அப்படியே அவளின் உடல் மொழியில் இறுக்கம்.
“அப்படியே என் தலையை பிடிச்சு ஆட்டி அந்த சுவர்ல முட்டணும்னு தோணுதோ” என்றான்.
உண்மையில் அப்படி தான் தோன்றியது அவளுக்கு.
“நீ இந்த மாதிரி பேசி, அப்படியே நீ வந்து கட்டி பிடிச்சா நான் அப்படியே உருகி கரைஞ்சு உனக்குள்ள புதைஞ்சிடுவேனா என்ன? போடா உன் மூஞ்சி” என்றாள்.
“எங்கடா ரொம்ப நாளா இந்த வார்த்தையை காணோமேன்னு பார்த்தேன்” என்றான் அசால்டாய் அவளை விட்டு விலகாமல் இன்னும் இறுக்கியபடி.
பின் அவள் பேச, இவன் பேச, இப்படி எப்போது பேச்சுக்கள் ஓய்ந்து உறக்கம் அணுகியது என்று இருவருக்குமே தெரியவில்லை.  
அதிலும் அந்த இரவில் ரவீந்திரன் சொன்ன சில விஷயங்கள் ஷர்மிளாவை யோசிக்க வைத்தன. “கல்யாணத்துக்கு அப்புறம் என்னை பிடிக்கணும்னு நீ ஏன் நினைச்ச, பிடித்தம்ன்றது தானா வர்றது. அந்த மாதிரி நினைக்கறதனால மட்டும் பிடித்தம் வந்துடாது. என் வீட்டோட உன்னை நான் அட்ஜஸ்ட் பண்ணனும்னு சொல்லவேயில்லை. நீ நீயா இருந்துக்கோ. எனக்காக நீ மாறணும்னு நான் எப்போ சொன்னேன். சொல்றது என்ன நான் நினைச்சது கூட இல்லை. எல்லாம் நீயா செஞ்சிட்டு எனக்காக எல்லாம் அட்ஜஸ்ட் பண்ணினேன்னு சொல்லாத. உனக்கு என்ன தோணியிருக்கோ அதை தான் செஞ்சிருக்க, ரைட்” என்றான்.     
“நீயெல்லாம் திருந்தாதா ஜென்மமடா” என்று திட்ட
அப்போதும் அவனிடம் எந்த மாற்றமும் இல்லை அவளின் திட்டை வாங்கியபடி உறங்க ஆரம்பித்தான்.
எஸ்! ஷர்மியின் பாஷையில் அவன் திருந்தவேயில்லை… ரவியின் பாஷையில் அவன் மாறவில்லை.
அவனது நான் என்ற எண்ணம், எனக்கு எல்லாம் தெரியும் என்ற எண்ணம், மனதிற்குள் ஸ்திரமாய் இருக்க, ஷர்மியால் ஒன்றுமே செய்ய இயலவில்லை.
அவனின் பதில்களில் பெரிதாய் திருப்தி கிடையாது என்ற போதும் இதற்கு மேல் அவன் சொல்ல மாட்டேன் என்று புரிந்து விட்டு விட்டாள்.
சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற வரையறைக்குள் ரவி வரவேயில்லை. எந்த நேரத்திலும் எப்போதும் நான் இப்படித் தான் என்றே இருந்தான்.
அவன் மாறிய ஒரே விஷயம் கிரீன் பாஷையில் சொல்லவேண்டுமென்றால் மனைவியிடம் அவன் வெட்கம் மானம் சூடு சுரணை என்ற எதையும் பார்க்கவில்லை. திட்டினாலும் சிரித்தபடியே கடந்து சென்றான், கோபப்பட்டாலும் அதை கடந்து எதுவும் நடக்காதது போல நடந்தான்.
வெளியில் மற்றவர்களிடம் காண்பிக்கும் கெத்தில் எந்த குறைவுமில்லை என்பது வேறு விஷயம்.   
“இவனை என்ன தாண்டா செய்ய?” என்று நொந்து கொண்டவளால் எதுவுமே செய்ய முடியவில்லை. அவளின் பணத்தை தொடுவதில்லை என்பதை தவிர வேறு பிணக்கு எதுவுமே இல்லை. முன்பில் ஒரு முன்னேற்றம் அவளின் பணத்தை தொடுவதில்லை என்று சொல்லிவிட்டதால் அவனின் கஷ்டங்களை பகிர்ந்து கொண்டான். என்ன செய்கிறான் என்ன செய்யப் போகிறான் என்று எல்லாம்.
அந்த பணக் கஷ்டத்தை சரி செய்ய ஏற்கனவே லோனில் இருந்த தொழிலை கொண்டே இன்னும் அதிக லோனிற்கு வைத்து ஓரளவிற்கு நிலைமையை சமாளித்து விட்டான்.
ஷர்மி அவளின் பணம் தொடாமல் வேறு ஆலோசனை சொன்னால் கேட்டுகொள்வது மட்டுமல்ல அதை செயல்படுத்தவும் செய்தான்.  
“ஆமா, நீங்க இப்படி இருந்தா உங்களை நல்லவன்னு சொல்வமோ?” என்று அவள் கிண்டல் செய்தால்…
“உன்கிட்ட இந்த ஜென்மத்துக்கு அந்த பட்டத்தை வாங்கற எண்ணமே எனக்கு கிடையாது, அதனால அந்த ஆசை எல்லாம் படாதே” என்பான்.
ஷர்மி தான் நதி போகும் போக்கில் சென்று கொண்டிருந்தவள், இப்போது நதி போகும் போக்கில் நீந்தவே ஆரம்பித்தாள். 
வாழ்க்கையை வாழ்ந்து தானே ஆகவேண்டும். அவளின் திருமணத்தில் ஆரம்பித்த கோட்பாடு, இப்போது வரையும் தொடர்ந்தது. ஆனால் அவளிடமும் ஒரு மாற்றம் முன்பிருந்த மனசஞ்சலம் இல்லை. அவன் எப்படி இருந்தாலும் அவனை பிடித்து தான் தொலைத்து.
மொத்தத்தில் ரவீந்திரனிடம் எந்த ஒரு மாற்றமும் இல்லை. அவன் நினைத்ததை மட்டுமே செய்தான். நான் இப்படித்தான் என்ற எண்ணம் அவனுள் ஸ்திரமாய் அமர்ந்திருப்பதை உணர்ந்த ஷர்மி அவனை அப்படியே ஏற்றுக் கொண்டாள்.
எல்லாம் மேலாக சில சமயங்களில் அவன் பிரச்சனைகள் சங்கடங்கள் சொல்லாத போதும், அது என்ன என்று கேட்காமலேயே நான் இருக்கிறேன் உன்னோடு என்ற உணர்வை கொடுத்தாள்.   
அது அவனின் முன்னேற்றத்திற்கு இன்னும் இன்னும் உதவியது என்றால் மிகையல்ல.  
எல்லாம் விட ஷர்மியின் செய்கையே நான் எனது மனது என்ற அவனின் கர்வத்தை அப்படியே நிலைக்க செய்தது.    

Advertisement