Advertisement

“ஹேய், ஷர்மி கேட்டுட்டார் போல” என்று சந்தோஷின் தோழி சன்னக் குரலில் சொல்ல,
“கேட்டா கேட்டுட்டு போறான்” என்றாள் அதற்கும் அலட்சியமாய்..
அதனையும் ரவி கேட்டுக் கொண்டு தான் இருந்தான், சாவியை எடுத்துக் கொண்டு அவளின் புறம் சற்றும் திரும்பாமல் அவன் மீண்டும் வாயிலை நோக்கி நடந்து விட்டான்.
அவன் சென்ற பிறகு அவனின் முதுகை வெறித்தவள் “ரொம்ப பேசிட்டோமோ? திட்டுவானோ?” என நினைக்க..
அவன் அதைவிட பலதும் செய்ய போகிறான் என்று அவளுக்கு தெரியவில்லை..
ரவியின் மனம் கொதித்து கொண்டிருந்தது..
எப்போதும் அவள் பேசுவது தான், ஆனால் இன்று பேசியது மிக மிக அதிகம், கூடவே இன்னொரு பெண்ணிடம் கதைத்தது அவனால் தாள முடியவில்லை.
லாபிக்கு வெளியே இருந்த தோட்டவெளியில் சென்று நின்றவன் அங்கிருந்த ஹோட்டலின் ஆளிடம் ஒரு குளிச்சியான தண்ணீர் பாட்டில் வாங்கி வந்து கொடுக்க நூறு ரூபாயை நீட்டி, அவன் வாங்கி வந்ததும் அதன் சில்லறையை வைத்துக் கொள்ளச் சொல்லி, இரண்டு மடக்கு குடித்தவன் ..
மீதியை அப்படியே முகத்தினில் ஊற்ற, அது ஊசியாய் முகத்தினில் குத்தி உடலில் இறங்கியது.. பின்பு அந்த பாட்டிலை அப்படியே எரிந்து விட்டு அங்கேயே நின்று கொண்டான்.
ஒருவனை தேவையில்லாமல் தேவைக்கு அதிகமாய் சீண்டி விட்டு விட்டோம் என்று புரியாமல் ஷர்மி உணவை ரசித்து உண்டு சந்தோஷிடம் சொல்லி வெளியில் வந்து ரவியை தேட,
அவனை காணவில்லை!
அவனுக்கு அழைத்து “எங்க இருக்க?” என்றாள்.
“வெளில பார்க்கிங் வா” என்று அவளிடம் சொல்லி விட்டு அவனும் அங்கே வந்து விட..
அவனின் பைக் பார்த்தவள் “கார் எடுத்துட்டு வரலையா” என்றாள்.
அவளை ஒரு பார்வை பார்த்தவன் பதிலே பேசவில்லை, அதற்குள் அந்த ஹோட்டலின் கார் அவளின் அருகில் வந்து நிற்க..
“மேடம் கிட்ட அட்ரெஸ் கேட்டுட்டு வாங்க, நான் பின்ன தான் வர்றேன்” என்று டிரைவரிடம் சொல்லி அவனின் பைக்கை எடுத்தான்.
“ஓஹ், நம்ம கிட்ட பேச மாட்டாராமா.. போறான் பெரிய இவன்” என்று நினைத்துக் கொண்டே அவள் ஏறி அட்ரெஸ் சொல்ல..
அவள் வீடு வரும் வரை சீரான வேகத்தில் தொடர்ந்தவன்.. வீடு வந்ததும் ரமேஷிடம்.. “சந்தோஷ் வந்த பிறகு எனக்கு தகவல் சொல்லிட்டு தூங்க போங்க” என்று அவரிடம் சொல்லிவிட்டு இவனின் வீடு வந்து விட்டான்.
அவனின் மனது ஆறவேயில்லை.. என்ன முயன்றும்..
சில சமயம் கால நேரங்கள் நம்மை ஆட்டி வைக்கும், அப்படி ஒரு நேரம் இருவருக்குமே! ஷர்மிளாவிற்கும் ரவீந்திரனிற்கும்.
ஷர்மிளா திமிரான பெண்ணோ, மரியாதை தெரியாத பெண்ணோ, அடுத்தவரை அலட்சியமாய் நடத்தும் பெண்ணோ கிடையாது!
ஆனால் இது எல்லாம் ரவீந்திரனிடத்தில் மட்டும் இருக்கும்! என்னவோ அவனிடம் கள்ளத்தனம் இருப்பது போல!
ஆனால் அதற்கு பெயர் வியாபார தந்திரம் என்று சொல்லலாம், அல்லது கார்பரேட் யுக்தி என்று சொல்லலாம், அவர்களின் லாபம் மட்டுமே முக்கியம், நியாய தர்மம் கிடையாது. இதுவரை அப்படி தான் ரவீந்திரன் அதனால் தான் ஒற்றை பைசா இல்லாத அவனின் நிலை இன்று அபரிதமான வளர்ச்சியில் நின்றது.
அவர்களின் கொள்கையில் அடுத்தவர்களின் நலன் அவர்களின் பார்வையில் வராது. உனக்கு வேண்டுமாயின் உன் நலன் நீதான் பார்த்துக் கொள்ள வேண்டும்.
நாங்கள் உன்னை கெடுக்க வில்லை, ஆனால் நீ கெட்டு போனால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல!      
இதுவே அவன்!
இதுவரை ஷர்மிளாவை அவளின் பேச்சினை பெரிய விடயமாய் எடுத்திராத ரவீந்திரனிற்கு அன்று எல்லாம் பூதாகரமாய் கண் முன் ஜாலம் காட்டியது..
ஃபோன் எடுத்து அன்றைய இரவு பார்ட்டியின் முழு செலவையும் ஏற்றவன் உண்ணாமல் படுத்து கொண்டான்.
என்ன தான் அவனின் மனம் கொதித்து கொண்டிருந்த போதும், உறக்கம் உடனே வந்து விட்டது.. நாள் முழுவதும் உழைத்த உழைப்பு ஓய்வை தானாக எடுத்துக் கொண்டது..
அடுத்த நாள் காலையில் அவன் எழுந்ததே நேரம் கழித்து தான்.. அதனால் சமைக்கவெல்லாம் இல்லை..
குளித்து அவன் பங்களாவின் உள் வந்த போது எட்டரை மணி, ஷர்மி எழுந்து குளித்து உணவு உண்டு கொண்டிருந்தாள். சந்தோஷ் எழுந்த மாதிரியே தெரியவில்லை.
சசிகலா சமையல் அறையின் வாயிலில் நிற்பது, அவளுக்கு ஏதாவது தேவையா என்று அவளின் தட்டை பார்ப்பது, பின்பு உள்ளே போவது, சிறிது நேர்த்தில் வந்து எட்டி பார்ப்பது என்று இருந்தார்.
ஆம்! ஷர்மி உண்ணும்போது அவளின் முன் நின்றால் அவளுக்கு பிடிக்காது, “நீ வேலையாள், நான் கூப்பிட்டால் தான் நீ வரவேண்டும். உன் எல்லை அதுதான்” என்று நிறுத்தி விடுவாள். அதற்காக அவர்களை கீழாய் நடத்துவது என்றெல்லாம் இல்லை. அதுதான் அவள்.    
ரவியை பார்த்ததும் “அப்பா எப்போ வருவாங்க?” என்றாள்.
“எனக்கு தெரியாது, நீயே அவர் கிட்ட பேசிக்கோ”  
“எங்க போயிருக்கார்?”
“அவர் கிட்டயே கேட்டுக்கோ”
அவனை ஆத்திரமாய் முறைக்க, சற்றும் அசராமல் அலுவலக அறை நோக்கி சென்றான்.
ரவி உண்மையில் அவருடன் நேற்று முன் தினம் பேசியது.. நேற்று அவனுக்கும் பேச வேண்டும் என்ற ஞாபகமில்லை அவரும் அழைக்க வில்லை..
அவர் இந்த முறை சென்றிருந்தது ஆலப்புழாவில் உள்ள போட் ஹவுசிற்கு யாருடன் செல்கிறார் என்று அவர் எப்போதும் சொல்வதில்லை.
ஆனால் ஒரு வாரம் ஆகிற்று, நேற்று மகனின் பிறந்த நாள், அதற்கு வாழ்த்து சொல்லக் கூட அழைக்கவில்லை. அவனுக்கே சற்று எரிச்சலாய் இருந்தது என்ன மனிதரோ என்று?
ஒரு வகையில் ஷர்மிளாவின் இந்த வார்த்தை பிரயோகங்களுக்கு அவரும் ஒரு காரணம். அப்பாவை பற்றி நமக்கு எதுவும் தெரிவதில்லை இவனுக்கு மட்டும் தெரிகின்றது என்பது அவளுக்கு இன்னும் ரவியின் மேல் துவேஷத்தை கொடுத்திருந்தது.
அப்போது தான் சந்தோஷ் எழுந்து வந்தவன்.. “ஹாய் பேபி, குட் மார்னிங்” என்று உற்சாகமாக வந்தான்.
“என்னடா இன்னைக்கு அதிசயமா முகத்தை சுணங்காம எழுந்து வர்றடா அண்ணா.. நேத்து பார்ட்டியோட எதிரொலியா”
“எஸ் பேபி எஸ், நிஷா கிட்ட நான் ப்ரொபோஸ் பண்ணினேன், ஓகே சொல்லிட்டா”  
“ஏதாவது உன்னோட சேர்ந்து பீர் அடிசிருக்க போறா, அந்த மப்புல சொல்லியிருப்பா” என்று ஷர்மி பேச..
“அடி வாங்க போற நீ அவளை பத்தி அப்படி பேசினா, அவ குடிக்க எல்லாம் மாட்டா” என்று உடனே கோபப்பட்டான்.
சந்தோஷ் தீவிரமாய் தான் இருக்கிறான் என்று புரிந்தவள் “சரி விடு, நீயாச்சு அவங்களாச்சு” என்று சொன்னவள் மீண்டும் உண்பதில் கவனமாக,
சந்தோஷ் அலுவலக அறையில் ரவியை பார்த்தவன் அங்கே சென்று “தேங்க்ஸ், நீங்க நேத்து ஃபுல்லா பே பண்ணிட்டீங்களாமே.. நான் குடுத்திருந்த அட்வான்ஸ் கூட திரும்ப குடுத்துட்டாங்க” என்றான்.
“இட்ஸ் ஓகே” என்ற ரவி, “அப்புறம் படிப்பெல்லாம் எப்படி போகுது?” என்று அவனிடம் பேச ஆரம்பிக்க,
சந்தோஷிற்கு அப்படி ஒரு ஆச்சர்யம், “என்ன இவன் நம்மிடம் சிநேகமாய் பேசுகிறான்” என்பது போல..
இனி செய்ய போவது வில்லத்தனங்கள் என்பதால், நல்லவனாய் நடிக்க வேண்டிய கட்டாயம் வந்து விட்டது ரவீந்திரனிற்கு.
ரவியிடம் பேசி முடித்து வந்த சந்தோஷின் முகத்தினில் மகிழ்ச்சியின் சாயல்.. “என்ன சந்தோஷ் முகத்துல பல்ப் எரியுது, அப்பா கிட்ட பேசினியா” என்ற ஷர்மியிடம்,
“அப்பாவா இல்லையே” என்றான்.
பின் எதற்கு மகிழ்ச்சி என்பது போல பார்க்க,
“நேத்து பில் எல்லாம் ரவியே பே பண்ணிட்டார் .. உன்னோட ஒரு லட்சம் என்கிட்ட இருக்கு வாங்கிக்கோ”  
“எதுக்கு கட்டினான் அவன் உனக்கு, நேத்து ரெண்டு லட்சத்துக்கு அவ்வளவு என்னை பேச வெச்சு ஒரு லட்சம் குடுத்தான்”
“தெரியலை” என்று சந்தோஷ் தோளை குலுக்க,
“என்னவாய் இருக்கும்” என்று ஷர்மிளா அவனின் அலுவலக அறையை பார்க்க.. அதன் இருக்கையில் நன்றாய் சாய்ந்து அமர்ந்து அவளை தான் பார்த்திருந்தான் ரவீந்திரன்!
நாம் கெட்டவர்களா? சூழ்நிலை நம்மை அப்படி மாற்றுகிறதா?
விடை அறிய முடியாத கேள்வி!
ஆனால் எதுவாயினும் கெட்டவர்கள் கெட்டவர்கள் தானே!
சூழ்நிலையோ! சுழல் நிலையோ!      
                             
   
      

Advertisement