Advertisement

அத்தியாயம் மூன்று :
ரவீந்திரன் தன்னை நடனமாட அழைத்த பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்த மும்முரத்தில் ஷர்மிளாவின் பார்வையை சந்திக்கவுமில்லை கவனிக்கவுமில்லை.
மெதுவாக சந்தோஷை நெருங்கி “அவன் வந்திருக்கான்” என்று ரவியை காண்பித்தாள்.
“நான் தான் உன்னை சீக்கிரமே வீட்டுக்கு போக சொல்லியிருந்தேனே, பாரு அவர் வந்துட்டார்” என சந்தோஷ் சஞ்சலப்பட்டான். பார்ட்டியில் எதுவும் பேசிவிடுவானோ என்ற கவலை அவனிற்கு.
எப்போது எப்படி நடந்து கொள்வான் ரவீந்திரன் என்று அனுமானிக்க முடியாது. பல சமயம் அதை உணர்ந்திருகின்றான் சந்தோஷ்.     
“நான் இருக்கேன் தானே, பயம் வேண்டாம். இங்க எல்லாம் அதட்ட மாட்டான். என்ன என்னை ஏன் லேட்ன்னு கேட்பான் விடு. யு என்ஜாய், நான் பார்த்துக்கறேன், கிளம்பும் போது சொல்றேன்”
“நீ சீக்கிரம் அவனை கூட்டிட்டு போ”
“நான் இன்னும் சாப்பிடலை” என்றாள் முறைப்பாய்.
“அவனையும் சாப்பிட வைச்சு கூட்டிட்டு போ”
“போ, நானெல்லாம் அவன் கிட்ட சொல்ல மாட்டேன்” என்றாள் சலுகையாய்.
“நான் சொல்றேன்” என்று சந்தோஷ் ரவியின் அருகில் சென்றவன், “வாங்க” என்று சிரித்தவன்.. “சாப்பிடுங்க” என்று உபசரித்தான்.
“சாப்பிட்டுட்டேன்” என்று உடனே மறுப்பு சொன்னான்.
“கொஞ்சமா சாப்பிடுங்க” என்று மீண்டும் சந்தோஷ் சொல்ல..  
“வேண்டாம்” என்ற மறுப்பு ஸ்திரமாய் வந்தது.. கூடவே “ஹேப்பி பர்த்டே” என்றான்.
உடனே சந்தோஷின் முகம் மலர்ந்து விட்டது.   
“என்னவோ இவன்கிட்ட அழகான பொண்ணு லவ் சொன்ன மாதிரி எங்கண்ணன் ஏன் எக்ஸ்ப்ரஷன் கொடுக்கறான். இதுல ரொம்ப தான் பண்றான் இவன், சாப்பிட்டா தான் என்ன?” என்று தோன்ற
“நீ போ சந்தோஷ், எல்லோரையும் பாரு, நான் பார்த்துக்கறேன்” என்று ஷர்மி சந்தோஷை அகற்றியவள்,
“ஏன் சொல்றான் தானே, ஒரு மரியாதைக்காக கொஞ்சமா டேஸ்ட் பண்ணினா என்ன?” என்று சற்று அதிகாரமாய் பேசினாள். சந்தோஷ் வெகு சில சமயம் ரவியை ஒருமையில் பேசுவான். ஆனால் பல சமயம் மரியாதையாய் தான் பேசுவான்.
ஆனால் ஷர்மி அப்படி கிடையாது ரவி வந்ததில் இருந்தே ஒருமையில் தான் அவளின் விளிப்பு. ரவி அதை உணர்ந்திருந்தாலும் அவன் வந்த புதிது வேலை மட்டுமே பிரதானமாய் இருக்க கண்டுகொள்ளவில்லை. இப்போது நெருடினாலும் இப்போது புதிதாய் “மரியாதையாய் என்னை கூப்பிடு” என்றா சொல்ல முடியும்.     
“நான் உன்னை கூட்டிட்டு போக வந்தேன். உங்கப்பா ஊர்ல இருந்தா எனக்கு இந்த தொல்லையே இல்லை, புரிஞ்சதா. மரியாதை பத்தி எல்லாம்                                       நீ பேசக் கூடாது. நீங்க என்னை கூப்பிட்டு நான் இந்த பார்ட்டிக்கு வரலை. அப்போ எப்படி சாப்பிட முடியும்” என்று சொல்ல,
“இவ்வளவு ரோஷம் தேவையில்லையே, எங்க கிட்ட தானே வேலை செய்யற, அப்போ நாங்க சொல்றதை செய்யணும் தானே”  
“நான் உங்க கிட்ட வேலை செய்யலை, உங்க அப்பா கிட்ட செய்யறேன். உங்க கிட்ட செய்யற மாதிரி சூழ்நிலை வந்தா, வேலையை விட்டு போயிட்டே இருப்பேன்” என்றான் சற்று திமிராகவே.
அந்த பதில் ஷர்மிளாவை கோபப் படுத்த, “ஓஹ், கும்பகோணத்துல இருந்து பி பி ஏ படிச்சிட்டு கொஞ்சம் கூட கம்யுனிகேஷன் ஸ்கில் இல்லாம மஞ்சப் பையை தூக்கிட்டு வந்த சர்க்கு வேலை கொடுக்க வரிசைல நிக்கறாங்களோ” என நக்கலாய் சொன்னாள்.
அவளின் இந்த நேரடியான நக்கலில் அலட்சிய பார்வையில் ஒரு புறம் மனம் அடிபட மறுபுறம் ரோஷமும் கோபமும் கிளம்பியது. அவனுக்கு சட்டென்று பதில் சொல்லக் கூட வரவில்லை. 
அன்று என்னவோ ஷர்மிளாவிர்க்கு ஆகிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். முக்கியமாய் அவளின் அப்பா எங்கே என்று அவளுக்கு தெரியவில்லை அவனுக்கு தெரியும் ஆனாலும் சொல்லவில்லை என்ற கோபம்.
இன்னைக்கு நீ மாறியிருக்கலாம் ஆனா அந்த மாற்றம் எங்க நாள் எங்க வீட்டு நாலா வேற எங்க நீ வேலைக்கு இருந்திருந்தாலும் உனக்கு இப்படி ஒரு லைப் இல்லை ப்ரீடம் இருக்காது.. நீ சொன்னாலும் சொல்லலைன்னாலும் எங்க கிட்டயும் தான் வேலை பார்க்கற இது பரம்பரை பிசினெஸ் என்கப்பாது கிடையாது நீ என்னவோ பண்ற ஆஅனா என்னன்னு எனக்கு தெரியலை.. ஆனா எதுவா இருந்தாலும் நாங்க உள்ள வர்ற வரைக்கும் தான் அதுக்கு அப்புறம் எங்கப்பாவை கைக்குள்ள போட்டு நீ இங்க அதிகாரம் பண்ண முடியாது என்று வார்த்தைகளை கடித்து துப்பினாள்.
பார்பவர்களுக்கு ஏதோ பேசிக் கொள்கிறார்கள் போல தான் தோன்றும். இருவருமே குரலை உயர்த்தவில்லை.       
ரவிக்கு அப்படியே ஷர்மியை அறைந்து தள்ளும் ஆத்திரம் கிளர்ந்தது. “ஒரு மடங்கு இருந்த சொத்தை அஞ்சு மடங்காக்கியிருக்கிறேன், இந்த பி பி ஏ படிச்ச, கம்யுனிகேஷன் ஸ்கில் இல்லாத, மஞ்ச பையை தூக்கிட்டு வந்தவன்” என்று கத்த வார்த்தைகள் தொண்டை குழியில் நின்ற போதும். அவன் ஒரு தேர்ந்த பிசினெஸ் மேன் ஆகி சில வருடங்கள் ஆகி விட்டதால், வார்த்தைகளை அங்கேயே நிறுத்திக் கொண்டவன்..   
“நான் வெளில நிக்கறேன், இன்னும் பதினஞ்சு நிமிஷத்துல சாப்பிட்டுட்டு வந்து சேர்ற” என்றவன் நொடியும் நில்லாமல் வேகமாய் சென்று விட்டான்.
அவர்களின் மீது ஒரு பார்வையை வைத்திருந்த சந்தோஷ் அவன் வேகமாய் வெளியே போவதை பார்த்ததும் ஷர்மியிடம் வர,
“நான் பார்த்துக்கறேன், யு என்ஜாய், கண்டிப்பா பணம் பத்தாது.. இருக்குறதை பே பண்ணிடு, பாக்கி நாளைக்கு கொடுத்துக்கலாம்.. சொல்லிடு” என்று பெரிய மனுஷியாய் அண்ணனிடம் சொல்லி சாப்பிட ஆரம்பித்தாள்.
சந்தோஷ் “இன்னொரு முறை நான் அவரை கூப்பிடட்டுமா?” என்று கேட்க,  
“ம்ம், அவரை, எவரை, துவரை, போடா அண்ணா, நான் பார்த்துக்கறேன் சொன்னேன் தானே. அப்பா மாதிரி தலையில தூக்கி வைக்காதே, வேலை செய்யறவங்களை எங்க வைக்கணுமோ அங்க தான் வைக்கணும்”
“பணம் பத்தலைன்னா அவர் கிட்ட தான் நிக்கணும்” என்று சந்தோஷ் காரணம் சொல்ல,  
“நின்னாலும் இனி குடுக்க மாட்டான், எதுன்னாலும் நான் பார்த்துக்கறேன், நீ உன்னோட நாளை என்ஜாய் பண்ணுடா அண்ணா” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது..
“இங்க இருந்த ஹேன்ட்சம் எங்க?” என்று சந்தோஷின் தோழி வந்தாள். ரவியை நடனமாட அழைத்தவள். ஷர்மிக்கு சந்தோஷின் தோழமைகள் அனைவரோடும் நன்கு பரிட்சயம் உண்டு,
“என்ன சைட்டா?” என்று சொல்லி, சந்தோஷ் சிரித்துக் கொண்டே அகன்று விட.. 
“ம்ம், சைட் இல்லை பிக் அப் பண்ணலாம்னு பார்க்கிறேன்” என்று அவளுமே புன்னகையோடு பதில் சொன்னாள்.
மனதில் இருப்பதை தான் அப்படியே பேசுவாளே ஷர்மிளா, இந்த முறையும் அப்படியே பேசினாள்.. அவளின் கெட்ட நேரம், ரவி தன் பைக் கீயை அவன் அமர்ந்திருந்த இடத்தில் வைத்திருக்க, அதனை எடுக்க உள்ளே வந்தான்.
“என்ன ரவீந்திரனை பிக் அப் பண்ண போறீங்களா?” என்று சொல்லி கட கட வென்று கிண்டலாய் சிரித்தாள் ஷர்மி.
கூடவே “உங்க டேஸ்ட் ஏன் இவ்வளவு மட்டமா இருக்கு, அவன் எங்க வீட்ல வேலை பார்க்கிறவன்” என்ற விமர்சனத்தை வேறு வைக்க,
அப்படி ஒரு கோபம் வந்து விட்டது ரவீந்திரனிற்கு.. அவளின் அலட்சியங்கள் கிண்டல் பேச்சுக்களுக்கு சில சமயம் பதில் கொடுப்பான், சில சமயம் மௌனமாய் கடந்து விடுவான்.
இன்று பேச்சுக்களே அளவில்லாமல் வந்திருக்க கூடவே இப்படி அடுத்தவரிடம் விமர்சிப்பது, அதுவும் தன்னை ஆர்வமாய் பார்க்கும் பெண்ணிடம் விமர்சிப்பது, அப்படி ஒரு துவேஷத்தை ஷர்மிளா மீது  கொடுத்தது. ஆண்மகனாய் இருந்திருந்தால் நிச்சயம் அடித்திருப்பான் அவனுக்கிருந்த ஆத்திரத்திற்கு.
ஷர்மியின் பேச்சிற்கு சற்றும் சளைக்காமல் சந்தோஷின் தோழி சிரித்துக் கொண்டே, “ஷர்மி அவர்கிட்ட வேலை செய்யறவர் லுக் எல்லாம் இல்லை, வேலை கொடுக்கிறவர் லுக் தான் இருக்கு.. கண்டிப்பா அவர் ஓகே ன்னா பிக் அப் க்கு சீரியஸா யோசிப்பேன் , உனக்கு எதுவும் ஐடியா வரலையா இப்படி ஒரு ஹேண்ட்சமை பார்த்துகிட்டே இருக்கும் போது”
அன்று என்னவோ ஷர்மியின் வாயினில் சனி தான் புகுந்து கொண்டது ..
“ம்ம்ம், இவனை கல்யாணம் பண்ணறதுக்கு நான் வாழ்க்கை முழுசும் கல்யாணம் பண்ணாமயே இருப்பேன்” என்று சொல்ல,
அந்த நொடி முடிவு செய்தான் ரவீந்திரன். “ஒன்று என்னை திருமணம் செய்வாய் இல்லை வாழ்க்கை முழுவதும் உனக்கு திருமணம் என்பது கிடையாது. பார்த்துக்கொள்ளலாம் போடி, நீயா? நானா?” என்று முடிவெடுத்து அவர்களை கடந்து அவனின் சாவியை எடுக்கச் சென்றான்.

Advertisement