Advertisement

அத்தியாயம் இருபத்தி ஒன்பது :
“நீ இப்படி எல்லாம் பண்ணினா பெண்டாட்டி தாசன் சொல்வாங்க” என்று ஷர்மி சிரித்தாள்.
“யாராவது சொல்றது இருக்கட்டும், நீ சொல்றியா? நீ ஃபீல் பண்றியா நான் என்னவும் செய்வேன் உனக்காகன்னு?” என்று அவன் கேட்க,
சில நொடிகள் யோசித்தவள் “அது தெரியலையே” என்றாள் உண்மையாய்.
“போடி” என்று முறைத்தவன் “இதையும் முடிஞ்சா கண்டுபிடி” என்று சொல்லி, “தூங்கு என்னை கடுப்படிக்காதே” என்றான் விறைப்பாய்.
“பாருடா, என்ன கடுப்படிக்கிறேன்? ஆமாம்ன்னு ஃபீல் பண்ணினா ஆமாம்ன்னு சொல்ல போறேன். இல்லைன்னு ஃபீல் பண்ணினா இல்லைன்னு சொல்ல போறேன். தெரியலைன்னா தெரியலைன்னு தானே சொல்வேன்” என்று சொன்னாள் கர்ம சிரத்தையாய்.
“சில சமயம் பொய் கூட சொல்லலாம் தப்பில்லை” என்றவன் சாலையில் கவனமாக.
ஏனோ தர்கிக்க விரும்பாமல், பிறகு ஷர்மியும் கண்களை மூடிக் கொண்டாள் உறங்க, உறங்கியும் விட்டாள்.
“எனக்குன்னு ஒரு அம்மா, ஒரு மனைவி, நீதி நேர்மை நியாயம் எல்லாம் இவங்க ரெண்டு பேரும் தான் உலகத்துலயே குத்தகை எடுத்த மாதிரி பேசுவாங்க, அதுவும் என்னை மட்டும் பேசுவாங்க இல்லை என்கிட்டே மட்டும் பேசுவாங்க” என்று நொந்து கொண்டான்.   
ஷர்மிக்கு நல்ல உறக்கம் கிட்ட தட்ட மூன்று மணி நேரத்திற்கு பிறகு விழிக்க, ஹை வேசில் கார் பறந்து கொண்டிருந்தது.
கண்விழித்தாலும் அசைவு கொடுக்காமல் கணவனை பார்த்திருந்தாள். எப்போதும் போல “செமயா இருக்கான்” என்று வண்டி ஓட்டும் அவனின் பக்கவாட்டு தோற்றத்தை, அவனின் புஜங்களை, அந்த வலிமையான கைகளை சைட் அடிக்க, ஒரு உள்ளுணர்வு உந்த திரும்பி பார்த்தவன்,
“என்ன பண்ற?” என்றான்.
“ம்ம், சைட் அடிக்கறேன்” என்று புன்னகையோடு சொல்ல,
“எப்போ இருந்து அடிக்கற?” என்று கேட்டான் இலகுவாக.
“கல்யாணம் முடிஞ்சு, இங்க சென்னை வந்த பிறகு என் முன்னாடி குட்டியா செக்சியா ட்ரெஸ் போட்டு சுத்துவல்ல அப்போ இருந்து” என்று சொல்லி கண்ணடிக்க,
ரவியின் முகத்தில் ஒரு உல்லாசப் புன்னகை.
“பரவாயில்லை பார்த்து பார்த்து நான் என் பாடியை, பெர்சனாலிட்டியை, டெவெலப் பண்ணினதை அட்லீஸ்ட் கல்யாணம் செஞ்சு குட்டி ட்ரெஸ்ல சுத்தின பிறகாவது சைட் அடிச்சியே” என்றான்.
“நக்கல் பண்றீங்களா?” என்று முகம் சுருக்கி கேட்டவளிடம்,
“இல்லையில்லை, நீ எப்போவுமே கொஞ்சம் கூட என்னை மதிக்க மாட்ட, அப்போ நீ கவனிக்கணும் என்னோட நடை உடை பாவனை பேச்சு எல்லாம் மாத்தினேன். ம்கூம்! நீ கவனிக்கவே இல்லை” என்றான்.
“நீங்க என்னை அட்ராக்ட் பண்ண நினைச்சீங்களா?” என்றாள் குதூகலமான குரலில். 
“இல்லை, இல்லை, ஒரு நொடியும் அங்கே உங்க வீட்ல இருந்த வரை இல்லை, ஏன் கல்யாணம் முடியும் வரை கூட உன்னை அட்ராக்ட் பண்ண நினைச்சதில்லை. அதே சமயம் நீயும் என்னை அட்ராக்ட் பண்ணினதில்லை. நீ பேசினா உன்னை விட பத்து மடங்கு திரும்ப குடுக்கணும் அது மட்டும் தான் என்னோட இன்டென்ஷனா இருக்கும்” என்றவன்
“ஆனா இவ ஏன் நம்மை மரியாதையா பார்க்கலைன்னு தோணியிருக்கு” என்றான் மனதை மறையாது.   
“அதுவும் உங்க அப்பா நடத்தைக்கு என்னை சொன்ன பாரு, அப்படியே உன்னை பேசுவியா பேசுவியான்னு அடிச்சு துவைக்கணும் போல ஒரு ஆத்திரம்” என்று சொன்ன போது இன்னும் குரலில் அந்த கோபம் தெரிந்தது.
இதற்கெல்லாம் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் ஷர்மி அமைதியாகிவிட்டாள்.
“எனக்கு தெரியும் சில கேள்விகளுக்கு நம்மகிட்ட பதில் கிடையாதுன்னு” என்று அவள் சார்பாய் அவனே பேசினான்.
“எனக்கு தெரியும் வண்டி ஓட்ட சிரமமாயிருக்கும்னு அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க” என்று சொன்னவள் அவன் புறம் நன்கு சாய்ந்து அவனின் புஜங்களை பற்றி அவனின் தோளில் சாய்ந்தாள்.
“ஷர்மி, நேரா உட்காரு எங்கேயும் பிடிச்சிக்க போகுது” என்றான் அக்கறையாக.
“நீங்க ரோட்டை பார்த்து ஓட்டுங்க” என்று அவள் குரல் உயர்த்த அதற்கு மேல் ரவி பேசவில்லை.
அவன் மேல் சாய்ந்து கண்மூடிக் கொண்டாள், பல நிமிடங்களுக்கு பிறகு “பசிக்குது” என்று கண் திறக்காமல் சொல்ல, இன்னும் சில நிமிட பயணத்திற்கு பிறகு ஒரு கிளைச்சாலையில் ஒரு மரநிழலில் நிறுத்தினான்.
அப்போதும் ஷர்மி அவனை விட்டு விலகாமல் கண் திறக்காமல் இருக்க, “என் கையை விட்டா தான் நான் டிஃபன் எடுக்க முடியும்” என்று சொன்ன பிறகு மனமேயில்லாமல் விலகினாள்.
வேகமாய் இறங்கி மனைவிக்கு எல்லாம் வைத்துக் கொடுத்து அவனும் உண்டு, அங்கே சாலையோரம் இருந்த ஒரு அடி பம்ப் வகை பைப்பில் அடித்து உண்ட பாத்திரம் கழுவி அதனை காரில் வைத்து என்று பலதும் செய்ய, ஷர்மி அவளின் இருக்கையை விட்டு கூட இறங்கி இருக்கவில்லை. கை கூட அவள் உண்ட தட்டத்தில் கழுவ சொல்லியிருந்தான்.
எல்லாம் வைத்த பிறகு, “கொஞ்சம் நேரம் இறங்கி நிக்கிறியா” என்றான்.
அது தான் அவர்கள் பேசியது அதுவரை ஒரு வார்த்தை கூட இல்லை. எல்லாம் தானாய் ஒரு உரிமையாய் நடந்தது. அந்த நிமிடங்களை இருவருமே ரசித்தனர் அனுபவித்தனர். அவர்கள் அலுவலகம் வீடு அது மட்டுமே உலகம். எங்கேயும் வெளியே போனதில்லை டூர் போல எல்லாம். போகலாம் என்று நினைத்த போது ஷர்மி கர்ப்பமாகி விட வாமிட் அதிகம் இருக்க பிறகு அதனை நினைக்கவில்லை. அதனால் இந்த தனிமையான பயணத்தை இருவருமே அனுபவித்தனர்.     
பின் அவன் கை கொடுக்க இறங்கி நின்றவள், “எனக்கு ஒன்னு கேட்கணும்” என்றாள்.
“என்ன, கேளு?” என்றான் சாதாரணமாய்.
“அது உங்களுக்கு என்னை பிடிக்குமா? எனக்கு உங்களை விட்டு இருக்கவே முடியாதுன்னு தோணும், அப்படி எல்லாம் உங்களுக்கு தோணுமா?” என்று கேட்டு,
“பொய் சொல்லக் கூடாது, உண்மையை தான் சொல்லணும்” என்றாள் கண்டிப்பான குரலில்.
“என்னடா கேள்வி இது, இவளுக்கு மட்டும் எப்படி தோணும். நான் இப்படியெல்லாம் நினைச்சதே இல்லையே” என்று மனதிற்குள் நினைத்தவன் அவளிடம்,   
“நான் இப்படி யோசிச்சதே இல்லை, ஏன்னா விட்டுட்டு இருக்கணும்னு நினைக்கறவங்க தான் அப்படி யோசிப்பாங்க, நான் உன்னை விட்டு இருக்கணும்னு யோசிச்சதே இல்லை. அப்புறம் எப்படி இப்படி யோசிப்பேன்” என்றான்.
உண்மையும் அது தான்!
“கல்யாணமான நாள் உன்னை விட்டு போய் பத்து நாள் இருந்தேன். அதுக்கப்புறம் சண்டை போட்டு இப்ப சமீபமா ரெண்டு நாள் இருந்தேன், வேற எப்போ நாம பிரிஞ்சு இருந்தோம். அப்படி நினைக்கற சூழ்நிலை கூட வரலை இல்லையா? ஆனா நீ யோசிச்சு இருக்க? ஏன் என் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா?” என்றான்.
“நீதானே என்னை போ சொன்ன, அப்புறம் நான் என்ன நினைப்பேன்?” என்று ஆரம்பிக்க…
“ப்ளீஸ் ஷர்மி இந்த பேச்சை விடு, எங்கம்மா ஒரு பக்கம் என்னை எப்பவும் தப்புன்ற மாதிரி சொல்றாங்க. நீயும் சொல்ற, என்னோட சக்தியெல்லாம் வடியுது என்ன பண்ணலாம்?” என்றவனின் குரல் அப்பட்டமாய் ஒரு சலிப்பு தெரிய.
அவனின் கை வளைவில் தன் கை விட்டு அவனோடு நெருங்கி நின்றவள் “ஐ டிட்ன்ட் மீன் டு ஹர்ட் யு” என்றாள்.
“முதல்ல இந்த யோசனை உனக்கு ஏன் வருது?” என்றவனின் குரலில் அதீத கோபம்.
“நீ போன, நான் போடின்னு சொன்னேன் அவ்வளவு தான். அதுல இன்னும் கொஞ்சம் ஹார்ஷ் வொர்ட்ஸ் சேர்ந்துடுச்சு, அதுவும் நீ வேற யாரையாவது கல்யாணம் செஞ்சிருந்தா நிம்மதியா இருந்திருப்பேன்னு சொன்ன வார்த்தை தான் கோபம் கொடுத்துச்சு, அப்போ நாம வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் என்னன்னு. எப்பவும் நீ என்னடா என்னை சொல்றது போடான்னு திரும்ப சொல்லிட்டு போவ, அது தானே உன்னோட இயல்பு. அதுல இருந்து மாறி நான் தனியா எப்படி இருப்பேன்? தனியா போக சொன்னா எனக்கு வீடு வேணும்? ஹவ் ஸ்டுபிட் யு ஆர்?” என்று கத்தினான்.
அதற்கும் ஷர்மி கோபிக்கவில்லை, பிடித்த கையயையும் விட வில்லை. என்ன திட்டினாலும் வாங்கிக் கொள்வேன் என்ற முடிவில் இருந்தாள் போல…
“ரெண்டு வருஷம் எத்தனை டென்ஷன், என்னை மீறி எவனோடவாவது உன் கல்யாணம் நடந்துட்டான்னு. எதையும் நான் மறைச்சு செய்யலை? ஏன் எங்கம்மா பொண்ணு கேட்கலைன்னு, நானே உங்கப்பா கிட்ட கேட்டேன். அவரும் குடுக்கலை. அப்புறம் என்ன பண்ணுவேன்? எங்கிருந்தாலும் வாழ்கன்னா போவேனா என்ன?”
“நீ பேசின பேச்சுக்கு ஒரு வீம்புல கல்யாணம் செய்ய நினைச்சாலும், கடைசியா என் மனசுல நின்னது உன்னை கல்யாணம் பண்ணனும் அது மட்டும் தான். எனக்கு ஏன் செஞ்சு குடுக்க மாட்டாங்க? எந்த வகையில நான் குறைவு? இது மட்டும் தான் எனக்கு. அதுக்காக எல்லாம் செஞ்சேன். அதை உன்கிட்ட மறைக்க நினைக்கலை. ஆனா நீ காது குடுத்து கேட்கலை” என்றான் ஆற்றாமையோடு.
“அது எனக்கு பயம். உன்னை எனக்கு ரொம்ப பிடிக்குது. அப்போ என்னோட மனசாட்சி என்னை கேட்குது எப்படி இவ்வளவு பண்ணினவனை நீ கல்யாணம் பண்ணி சந்தோஷமா இருக்கேன்னு?” என்று பதில் சொல்ல,
“பார்த்த நாள்ல இருந்து நீ என்னை அலட்சியமா பார்த்த. சோ, அதை விட  உன்னை அலட்சியமா நான் பார்த்தேன். நீ என்ன பேசினாலும் அதுக்கு பத்து மடங்கு பதில் கொடுப்பேன். ஏன்னா கல்யாணம் முடியறவரை நீ என்னை நல்ல விதமா பார்த்ததில்லை. பார்க்கணும்னு நினைச்சதில்லை”
“அதுக்கு அப்புறம் என்னை பார்த்த… நல்ல விதமா பார்த்த… என்னோட குணத்தை பார்த்த… என்னோட செயல்களை பார்த்த… இவனை எனக்கு பிடிக்குமான்னு பார்த்த.. இவனை எனக்கு பிடிக்கணுமேன்னு பார்த்த… இப்படி பல விதமா பார்த்த… அதுல நமக்கு மத்த விஷயம் எல்லாம் ஃபெர்பெக்ட் மேட்ச் ஆச்சு..” என்று புருவம் உயர்த்தியவன் முகத்தில் புன்னகை.. அது ஒரு தனி சோபையை கொடுக்க.. அவனையே ரசித்து பார்த்தாள் ஷர்மிளா.    
“அதையும் விட எனக்கும் உன்னை பிடிச்சது. எங்கேயோ நீ அதை கண்டிப்பா பீல் பண்ணியிருப்ப… இது எல்லாம் சேர்ந்து உனக்கு என்னை பிடிக்க வெச்சிடுச்சு. சோ, சிம்பிள்” என்றான் மலர்ந்த புன்னகையுடன். அது ஒரு தனி வசீகரம் கொடுக்க,   
“ம்ம், அப்படியா சொல்ற நீ” என்றாள் எதுவுமே தெரியாதவள் போல…  
“ம்ம், அப்படி தான் சொல்றேன்” என்றான் அவளை போல நக்கலாக.        
“சரி போ, பின்னே ஒரு நாள் நாம டிஸ்கஸ் பண்ணலாம்” என்று ஏதோ பெரிய மனது செய்து அவனின் கூற்றை ஒத்துக் கொண்டது போல அவள் பாவனை செய்து சொல்ல,
“என்ன டிஸ்கஷனா? மூச், இனி அதை பத்தி நீ நினைக்கவே கூடாது, நினைக்கலைன்னா பேச்சு எதுக்கு? சும்மா டென்ஷன் ஆகி என்னையும் டென்ஷன் பண்ணக் கூடாது” என்றவன்,
“ரொம்ப நேரமா நிக்கற உட்காரு” என்று அவளை காரின் சீட்டில் அமரவைத்தவன் ப்ளாஸ்க் எடுத்து குடிப்பதற்கு க்ளாசில் பால் விட்டான்.
அவனின் செய்கையை பார்த்தவள் மனதில் குடைந்து கொண்டிருக்கும் விஷயத்தை கேட்டுவிட நினைத்தது, “இன்னும் ஒன்னே ஒன்னு இருக்கு கேட்டுக்கவா?” என்றாள்.
“என்ன?” என்றான் ஸ்ட்ரிக்ட் ஆஃபிசராய்…
“உங்களுக்கு கோபம் வந்துட்டா?”
“வராதுன்னு எல்லாம் சொல்ல மாட்டேன், வந்தா தாங்கிக்கோ” என்றவனிடம்,
“உங்களுக்கு கோபம் வரும். எனக்கு தெரியும்”
“சும்மா பில்ட் அப் குடுக்காத சொல்லுடி” என்றான் எரிச்சலாய், இன்னும் என்ன சொல்லப் போகிறாளோ என்ற கடுப்பில்.
“ம்ம், அது எந்த வேலையும் நான் உங்களுக்கு செய்யறதில்லை. ஆனா நீங்க எல்லா வேலையும் எனக்கு பார்த்து பார்த்து செய்யறீங்க. இன்னும் நீங்க வேலை செய்யற ஃபீல்லா?” என
சில நொடிகள் ஆனது அவளின் கேள்வி புரிய, புரிந்ததும் அவளின் கேள்வியில் அசந்து நின்று விட்டான். பின் அப்படி ஒரு சிரிப்பு பொங்க சிரிக்க ஆரம்பித்தான்.  

Advertisement