Advertisement

அத்தியாயம் இருபத்தி எட்டு :
அவர்களின் ரூமின் உள் வந்ததுமே, “ஐ அம் சாரி ரொம்ப வலிக்குதா?” என்று அவளின் தலையில் அடிபட்ட இடத்தை தான் பார்த்தான்.
“வலிக்குது, ஆனா தாங்க முடியற அளவு தான்” 
“தேங்க்ஸ்” என்றான் சம்மந்தமேயில்லாமல்.
“எதுக்கு, வலிக்குது ஆனா தாங்க முடியுதுன்னு சொன்னதுக்கா?” என்று அவள் புன்னகையோடு கேட்க..
அவன் முகத்தில் புன்னகை என்ன, சிறு இளக்கம் கூட இல்லை, “இல்லை” என்பது போல தலையாட்டியவன், “உங்க அப்பாவோட போகாததுக்கு” என்றான்.
“அப்பா பேசினதை மைன்ட் பண்ண வேண்டாம். அவருக்கு எங்களை சரியா பார்க்காம விட்டுட்டோமோன்னு எப்பவுமே ஒரு உணர்வு. அதனால இன்னைக்கு ரொம்பவும் ப்ரொவோக் ஆகிட்டு பேசிட்டார்”
“சந்தோஷ் என்கிட்டே சொல்லியிருந்தா, நான் எல்லோர் முன்னமும் இந்த விஷயம் வராம தடுத்திருப்பேன் ஆனா அவன் சொல்லலை” என்று சொன்னவள்,
“நானும் சாரி கேட்கணும்” என்றாள் தயங்கி,
“எதுக்கு உங்கப்பா கிட்ட வீடு கேட்டதுக்கா?” என்றான் உடனே.
“இல்லை” என்பது போல தலையாட்டியவள், “வீடு கேட்கறது மூலமா நமக்குள்ள ஏதோ சரியில்லைன்னு காமிச்சு குடுத்ததுக்கு. சாரி!”
மாலை ஆறு மணி அப்போது.
ரவி எதுவும் சொல்லவில்லை, “கொஞ்சம் நேரம் படு, அசதியா தெரியற” என்றவன், “இந்த டைம் தூங்காத படுத்து மட்டும் இரு. சீக்கிரம் சாப்பிட்டு தூங்குவியாம்”
“ஐ அம் நாட் ஓகே” என்று வாய் மொழியாய் முதல் முறையாய் அவளிடம் சொன்னவன்,
“நான் கோவிலுக்கு போயிட்டு வர்றேன்” என்று சொல்லி சென்றான்.
அவனுக்கும் கடவுளுக்கும் உள்ள பந்தம் அவள் அறிந்தது தானே. “ம்ம், சரி” என்றவள் சொல் பேச்சு தட்டாதவளாய் சென்று படுத்துக் கொண்டாள். ஆனாலும் “ஐ அம் நாட் ஓகே” என்றவனின் வார்த்தைகள் மனதை ஏதோ செய்தது. இப்படி சட்டென்று ஒப்புக் கொடுப்பவன் அல்ல அவன்.
ரவி மீது அவனின் செய்கைகள் மீது அப்படி ஒரு கோபம் இருந்தாலும் அவனின் வருத்தம் ஷர்மிளாவை தாக்கியது.    
“கைல மொபைல் வெச்சுக்கோ, தலையில வலி எதுவும் அதிகமானா உடனே எனக்கு கால் பண்ணனும், யோசிக்க வேண்டாம், ஹாஸ்பிடல் போயிடலாம்” என்றான்.
“அச்சோ, எனக்கு ஒன்னுமில்லை, வலிக்குது, ஆனா சரியாகிடும். நீங்க போயிட்டு வாங்க” என்று புன்னகை முகமாகவே பதில் கொடுத்தாள்.
முகம் கழுவி வந்தவன் பார்த்தது படுத்திருந்த ஷர்மியை தான். அவளிடம் ஒரு தலையசைப்புடன் கோவிலுக்கு கிளம்பியவன், கீழே வர, தாத்தா விடம் “கோவிலுக்கு போறேன்” என்று சொல்லி சென்று விட்டான். சிறிது தூரம் என்றாலும் நடந்தே தான் சென்றான்.  
அவன் சென்றது புகழ் பெற்ற சிவஸ்தலமான ஆதிகும்பேஸ்வரர் சிவன் கோவில். மகாமகத்திற்கு பெயர் பெற்றது. உள்ளே சென்றதுமே மனதில் அப்படி ஒரு அமைதி. உடனேயே ஷர்மிக்கு அழைத்தான். “நான் இப்போதான் கோவிலுக்கு வந்தேன். கொஞ்சம் நேரம் இருந்துட்டு வர்றேன், எதுன்னாலும் கூப்பிடணும்” என்று.
அவனை அங்கே எல்லோருக்கும் தெரிந்திருந்தது. அவன் சென்னைக்கு போகும் முன் தினம் மாலை சிறுவனாய் இருந்த போதிருந்து வந்து போன இடம்.
சிவனின் முன் நிற்க மனதில் அப்படி ஒரு அமைதி! அந்த விபூதி வாசனையை கோவிலின் கற்பக்ரஹ சுகந்தத்தை இழுத்தவன் மனது பரிபூரண அமைதியை பெற்றது என்றால் மிகையல்ல.
ஆம்! ஷர்மி அவனுக்கு ஒரு அமைதியை கொடுத்திருக்க, சிவன் இன்னுமே கொடுத்தார்.
அவரிடம் தனி தனியாய் எதுவும் எப்போதும் வேண்ட மாட்டான். சிறு வயது பழக்கமாய் “என் வாழ்வில் எல்லாம் நன்றாக நடத்திக் கொடு” என்பதே அவன் வேண்டுதலாய் இருக்கும்.  
இந்த முறை தனி தனியாய் வணங்கினான். “என் வாழ்வில் நான் தெரிந்தும் தெரியாமலும் செய்த குற்றம் குறைகளை களைந்து கொடு” என்றது அவனின் பெரிய வேண்டுதலாய் இருந்தது.  
கேசவனின் பேச்சுக்கள் அவனின் அம்மாவின் பேச்சுக்கள் என்று சகலமும் கடவுள் முன் ஓடின. வெகு நேரம் நின்றிருந்தான் ஈசனை பார்த்து.    
வணங்கி முடித்தவன் சிறிது நேரம் தியானத்தில் அமர்ந்தான். மனதிற்குள் ஒரு தெளிவு. புதிய முடிவுகள் தோன்றியது, மனது அமைதியை உணர்ந்தது.       
யார் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அவனுக்கு தெரியும். அவனின் வெற்றிகள் சாதாரணம் அல்ல. ஈசனன்றி எதுவும் நடந்திருக்காது. வாழ்க்கையில் எல்லோரும் தான் உழைக்கின்றனர். இதில் பலர் அவனை விட புத்திசாலிகள், எல்லோருக்கும் எல்லாம் அமைந்து விடுகிறதா என்ன?
ஆனால் அவனுக்கு அமைந்திருக்கிறது, அவரின் அணுக்கரஹமே! என்ன என்னவோ நினைவுகள்.. “உன் பாதார விந்தமே துணை” என்று நினைத்தவன், “தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி”        
பின் சிவபுராணத்தை மனதில் ஜெபிக்க ஆரம்பித்தான்!
“நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க” என்று ஆரம்பித்து…
வெளியே வந்து கோபுரத்தை பார்த்து “திருச்சிற்றம்பலம்” முடித்த போது வீடு வந்திருக்க, அவனுள் ஒரு ஆழ்ந்த அமைதி!
“உன்னுடைய எண்ணம் வேறு! இலக்கு வேறு! நீ போக வேண்டிய தூரம் வேறு! சிறு சிறு விஷயங்களும் உன்னை பாதிக்க விடாதே! நீதான் கோபத்தை ஆள வேண்டும்! கோபம் உன்னை ஆளக் கூடாது!” என்று வெகுவாக மனதினை கட்டுக்குள் கொண்டு வந்தான்
இறை வணக்கம் என்பது மதங்களை மீறிய ஒரு விஷயம். அது எந்த மதமாயினும் மனிதனை நெறி படுத்தும் ஒரு விஷயம்.. சிறு வயதில் இருந்தே ரவி அதன் பிடியில் இருந்தான். அப்போது அந்த க்ஷணங்களில்  வெகுவாக ஒரு மன அமைதியை கொடுத்தது..
மதம் மதமாகி சில பேர்களை பீடிக்காவிடின் அது ஒரு சிறந்த நெறி! இங்கே நம்முள் பலருக்கும் அது தெரியும் புரியும்! அது எந்த மதமாகினும்!      
வீட்டின் உள் வந்தால் சீதாவை எல்லோரும் ரவுண்டு கட்டி திட்டிக் கொண்டிருக்க, முன்பிருந்த அலைபுருதல்கள் குற்ற உணர்ச்சி இவற்றில் இருந்து தெளிந்து இருந்தான்.   
அதனால் அவரை விட்டு மற்றவர்களை பிடி பிடியென்று பிடித்தான். யாரும் இதனை எதிர்பார்க்கவில்லை.
இவன் நல்லவனா கெட்டவனா என்பது போல பார்த்தனர்.
அவனின் பெரிய தங்கையை பார்த்தவன் “அவங்களை ஏன் நீ பேசற? அவங்க உன் கிட்ட பேசினாங்க சரி, நீ அதை தனியா இருக்கும் போது கேட்க முடியாதா? அதை எல்லோரும் இருக்கும் போது பேசணுமா?”
“சரி, நீ பேசின, இவங்க எல்லோரும் கூட சேர்ந்து பேசணுமா என்ன?  விஷேஷ வீடு யார் காதுலையாவது விழும்னு தெரிய வேண்டாம்!
“சந்தோஷ் காதுல விழுந்தது ப்ராப்ளம் பண்ணிட்டு போயிட்டான். இதுல இன்னும் எத்தனை பேர் காதுல விழுந்தது நமக்கு தெரியாது. அம்மாவை பத்தி தெரிஞ்சது தான். நீங்க ஏன் அதை பேசி பெருசாக்கினீங்க” என்று பேச, யாராலும் எதுவும் பதில் பேச முடியவில்லை.
அவ்வளவு பேசியவன் சீதாவிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
பேசி முடித்து, மாப்பிள்ளைகளை பொதுவாய் பார்த்தவன், “இன்னம் இருபது நாள் தான் இருக்கு, நான் அங்க சென்னைல இருப்பேன், இங்க அம்மா, அப்பா, சித்தப்பா, சித்தி அழைப்புக்கு போகவே சரியா இருக்கும். இங்க வேலை எல்லாம் நீங்க தான் பார்க்கணும்” என்றான். செய்கிறீர்களா என்று கேட்கவில்லை? செய்யுங்கள் என்று சொல்லி விட்டான்.  
“அதெல்லாம் ஒன்னும் பிரச்சனையில்லை, எல்லாம் நாங்க பார்த்துக்குவோம்” என்று அவர்கள் சொல்ல,
“உங்களை நம்பி தான் விடறேன். எந்த பிரச்சனையும் வரக் கூடாது. இங்க ஊர்ல மாப்பிள்ளை வீட்டுக்கும் சேர்த்து நீங்க தான் செய்யணும். ஏன்னா அது என்னோட வேலை, மாமாக்கு பெருசா இன்னும் தெரியாது. அதுவுமில்லாம அவங்களும் அங்கே இருந்து இங்க வர முடியாது. ரிசப்ஷன் வேலையெல்லாம் நான் பார்த்துக்கறேன்” என்று விட்டான்.
இப்படி பலதும் பேசி, யார் எந்த வேலை செய்ய வேண்டும் என்று பிரித்துக் கொடுத்து, எல்லாம் முடித்து மேலே வந்தால், ஃபோன் பார்த்துக் கொண்டு படுத்திருந்தாள் ஷர்மி.
இவன் வந்து கை கொடுத்து எழுப்பவும் தான் எழுந்து அமர்ந்தாள்.
அவளின் அடிபட்ட இடத்தை ஆராய, “அட ஒன்னுமில்லப்பா, ஆனா கொஞ்சம் வலிக்குது” என்றாள் சலுகையாக.
“சாரி” என்றவன், சிறு குழந்தைக்கு செய்வது போல அந்த இடத்தில் மென்மையாய் இதழோற்ற, “பத்து நாள் ஆச்சு நீ என்னை கிஸ் பண்ணி” என்று கணக்கு பேசினாள்.
“இதெல்லாமா கணக்கு வெச்சிருக்க?”  
“பின்ன, அதுவும் நான் வந்து பக்கம் படுத்ததால, அதுக்கு முன்ன செவென் டேஸ் முன்ன பண்ணின. அப்போவும் நான் தான் பக்கம் வந்தேன், நீயா என் பக்கம் வந்த?” என்று குறைபடுவது போல பேசினாள்.
“அப்போ எப்போ தான் நானா வந்து குடுத்தேன்?” என்று அவன் விசாரணை வைக்க,  
“நீயே யோசி, ஒன்ஸ் அபான் அ டைம் அப்படியும் சொல்லலாம் இல்லை  லாங் லாங் அகோ சோ லாங் அகோ இப்படியும் சொல்லலாம் என்று சொல்ல, அப்படி ஒரு உவகை அவனுள் பொங்க, சத்தமாய் சிரித்தான்.    
சிரிப்போடே “இந்த பத்து நாளா நீ தான் என் பக்கமே வரலை” என்றவனிடம்,
“நான் உன் பக்கம் வரலை ஓகே. ஆனா நான் உன்னை என் பக்கம் விடலையா என்ன? நீ ஏன் வரலை?” என்று மடக்கினான்.
“ம்ம், வரக் கூடாதுன்னு இல்லை” என்று அவன் இழுக்க,
“ம்ம், உன் திமிர் பிடிச்ச ஈகோ விட்டிருக்காது ரைட்!” என்று அவனை போலவே பேசினாள்.
“உங்க வீட்லயே புத்திசாலி நீ மட்டும் தாண்டி” என்று செல்லம் கொஞ்ச,
“அப்படியும் சொல்லலாம், எங்க வீட்லயே உன்னை பத்தி தெரிஞ்ச ஆள் நான் மட்டும் தான்னு சொல்லலாம்” என்று அவள் பகடி பேச,
அவனின் முகம் சற்று மாறியது போல தோன்ற, ஷர்மி தப்பாய் எடுத்துக் கொண்டானோ என்று கவனித்து பார்க்கும் போதே அவனின் முகம் இயல்பாய் மாறி விட்டது.     
“அண்ணா, சாப்பிட வரலையா?” என்று கீழே இருந்து குரல் வர, “தோ, வர்றேன்” என்று அங்கே இருந்தே குரல் கொடுத்தான்.
ரவியின் முக மாறுதலை கவனிக்காதது போல, “ம்ம், சாமியை பார்த்துட்டு வந்த பிறகு முகம் பளிச்னு ஆகிடுச்சு. என்ன வரம் குடுத்தார் உங்க சாமி?” என புன்னகையோடு கேட்டாள்.
“ஷ், சாமியை எல்லாம் கிண்டல் செய்வியா?” என்று அதட்டினான்.
இரண்டு கைகளாலும் காதினை பிடித்துக் கொண்டவள் “கிண்டல் எல்லாம் பண்ணலை, சீரியஸ். உங்க முகம் ரொம்ப நாளைக்கு பிறகு தெளிவா இருக்கு”
“என்னை நிறைய எல்லோரும் செய்ய வைக்கறீங்க, பேச வைக்கறீங்க, செஞ்சிடறேன், பேசிடறேன். அப்புறம் ஒரே ஃபீலிங்க்சா போகுது, என்ன பண்ண?”  
“இப்போ என்ன பண்ணுனீங்க பீலிங்க்ஸ் எல்லாம் போகற அளவுக்கு?”
“ம்ம்ம்ம், பெருசா ஒன்னுமில்லை. என்னவோ நீயே எல்லாம் பார்த்துக்கோன்னு அவர்கிட்ட சொல்லிட்டேன்” என்றவன் கைகள் ஷர்மியின் தலையை வருட “ஷ் ஆ வலிக்குது” என்றாள்.
வேகமாய் கை எடுத்தவன் “போய் ஐஸ் எடுத்துட்டு வரட்டுமா?”
“பசிக்குது”
“கீழ போகலாமா?”
“இல்லை, வேண்டாம், எனக்கு டையர்டா இருக்கு! சாப்பாடு குடுங்க சாப்பிட்டு தூங்கறேன்” என்று நன்றாய் சாய்ந்து அமர்ந்து கொண்டாள்.

Advertisement