Advertisement

“நீ எப்படி நினைக்காத, நினைச்சா வந்துடும் நினைக்காத” என்றவன், அவனை அழைத்த தங்கை மகளை அழைத்தவன் “குட்டீஸ் எல்லாம் கூட்டிட்டு வா” என்றான்.
“எதுக்குடா?” என்று பாட்டி கேட்க,
“பாட்டி, இவ இவ்வளவு சாப்பிட மாட்டா” என்றவன், “அந்த ஸ்வீட் எல்லாம் கொஞ்சம் மட்டும் வெச்சிகிட்டு பாக்கி எல்லாம் உன் கையாள குழந்தைங்களுக்கு கொடு” என்றான்.
ரவி சொன்னது போல செய்தவள், அவர்கள் அதை வாங்கி நகர்ந்ததும், “முடிஞ்சவரை சாப்பிடு, மீதி நான் சாப்பிட்டுக்கறேன்” என்றான்.
“நீங்களா?” என்று விழி விரித்தாள்.
“பின்ன வேஸ்ட் பண்ணக் கூடாது. நிச்சயம் நீ இவ்வளவு சாப்பிட மாட்ட, முடிஞ்சவரை சாப்பிடு, மீதி நான் சாப்பிட்டுக்கறேன்”
“யாராவது ஏதாவது சொன்னா” என்றாள் அப்போதும் தயக்கமாய்.
“யார் என்ன சொன்னாலும் கவலையில்லை” என்று விட்டான் முடிவாய்.
ஊருக்கு வந்தால் யாரும் ஒரு சொல் சொல்லிவிடக் கூடாது என்று மிகவும் ஒதுங்கி தான் நிற்பான். மனைவியின் அருகில் கூட வரமாட்டான்.  ஏன் நேற்று ஊருக்கு வந்ததில் இருந்து அருகில் கூட அமரவில்லை. நிச்சய விருந்தில் கூட சந்தோஷ் கௌசியுடன் அமர்ந்து உண்டாள் ரவியுடன் அல்ல. இரவும் அவள் உறங்கிய பின் தான் உறங்க வந்தவன், அவள் எழும்முன்னே சென்றிருந்தான்.  
திருமண புடவை தான் உடுத்த வேண்டும் என்று சொல்லியிருக்க, அதை தனியாய் இந்த நிலையில் கட்டினால் ஏற்ற இறக்கமாய் வரும் வாய்ப்பு அதிகம் என்பதால் அதற்கு மட்டும் அலைபேசியில் அழைத்து அவன் ரூமின் உள் வர, “எனக்கு நீ தான் உதவ வேண்டும்” என்று சொல்லி கட்டிக் கொண்டாள்.
அத்தனை பெண்கள் இருந்தாலும் எல்லோரும் “அண்ணி, அண்ணி” என்று அவளை தாங்கினாலும், கௌசியுடன் சகஜமாய் பேசினாலும் வேறு யாரையும் உதவிக்கு கூப்பிடுவதில் எல்லாம் இஷ்டமில்லை.  
புடவை கட்டியதும் ஒரு நொடி கூட நிற்காமல் சென்றிருந்தான், வெளியில் ஒரு பட்டாளம் அவளுக்கு தலை அலங்காரம் செய்ய இருக்க, இவன் ஏதோ எடுப்பது போல உள்ளே வந்து அவளுக்கு உதவி செய்து விரைந்து சென்றிருந்தான்.     
திருமணம் முடிந்து எல்லோர் முன்னும் சொல்லாமல் கொள்ளாமல் விட்டு சென்று விட்டான் சாதாரணமாய் என்றால் அது மிகப் பெரிய விஷயமாய் தெரிந்திருக்காது. இவளை, அவனின் அறையை எல்லாம் அலங்காரம் செய்திருக்க. அவன் சென்றது, எல்லோரும் பரிதாபமாய் பார்த்தது, என்றுமே ஆறாத வடு தான்.    
இப்போது அவன் சொன்னதும் தானாய் முகம் மலர்ந்தது.
உண்ணும் போது வளையல் எல்லாம் உணவு, அது தான் தள்ளி விட இடமே இல்லையே, முடிந்த வரை திருப்தியாக உண்டவள் “போதும்” என்று விட்டாள்.
அவளின் அருகில் அமர்ந்தவன், இலையை அவன் புறம் தள்ளி உண்ண ஆரம்பித்தான் .
வளைகாப்பு நடந்தது ஷர்மிக்கு அவ்வளவு சந்தோஷமாய் இருக்க, இதில் அப்பா அப்படி செய்தது, எல்லோரும் பெருமை பேசியது ஒரு கர்வமாய் இருக்க, ரவியின் இந்த செயல் இன்னும் கர்வமாய் உணர செய்தது.
பணம் என்பதை விட பிறந்த வீட்டில் செய்யும் சீர், எப்போதும் விஷேஷம் தானே பெண்களுக்கு.
அவளால் உண்ண முடியவில்லை என்றதும், யார் என்ன நினைப்பார்கள் என்ற லஜ்ஜையின்றி இன்றைய அவளின் உணவு வீணாகக் கூடாது என்று அவள் மீதம் வைத்ததை உண்டு கொண்டிருந்தான்.
இருவருக்குள்ளும் அது ஒரு இதமும் இணக்கமும் பரப்பிக் கொண்டிருந்தது.   
எல்லாம் அருகே இருந்து பார்த்துக் கொண்டிருந்த பாட்டி எதுவும் சொல்லவில்லை. “பாருடா, மனைவியை எப்படி தாங்குகிறான்” என்ற எண்ணம் தான். அவருக்கு என்ன தெரியும்? உருட்டுக் கட்டையை எடுத்து அடித்து கொள்ளாதது தான் பாக்கி எனும் அளவிற்கு இருவருக்குள்ளும் மனஸ்தாபங்களும் வருத்தங்களும் இருப்பதை!
இதில் சீதா வேறு பெரிய மகளின் காதை கடித்தார், “பாருடி, வசதியான பெண்டாட்டின்னு உங்கண்ணா எப்படி தாங்கறான்னு”  
அம்மாவின் இந்த பேச்சில் அவளுக்கு சட்டென்று கோபம் பொங்கி விட்டது. “நீயெல்லாம் திருந்தவே மாட்டம்மா, என் வீட்டுக்காரர் எல்லாம் ரெண்டு குழந்தை பிறந்த பிறகும், என் பின்னவே இப்போ தான் எங்களுக்கு புதுசா கல்யாணமான மாதிரி இன்னும் சுத்தறார். அப்போ என் கிட்ட பணம் இருக்குன்னா சுத்துறார். ஏன் எல்லோரும் எங்களை கிண்டல் பண்ணுவாங்க. அப்போ மட்டும் உனக்கு பெருமையா இருக்குமா? உன் பொண்ணுங்க பின்னாடி உன்னோட மாப்பிள்ளைங்க சுத்தும் போது?”   
“நீ ஏன் இப்படி ஆகிட்ட. நேத்து இருந்து அண்ணி தனியா தான் உட்கார்ந்து இருக்காங்க. அண்ணா அவசியம்னா தான் அவங்க பக்கத்துல கூட போறார். நாங்க தான் போய் மாத்தி மாத்தி அவங்க தனியா உட்கார்ந்து இருக்காங்கன்னு பேசிட்டு இருக்கோம். நீ இப்படி எல்லாம் பேசினா அண்ணி நம்ம வீட்டோட ஒட்ட மாட்டாங்க எதுவும் செய்ய மாட்டாங்க”
“அதையும் விட அண்ணா மனசு கஷ்டப்படும். நீ திரும்ப திரும்ப அண்ணாவை வருத்தப் பட வைக்கற. எவ்வளவு வருமையில இருந்தோம் நாம, இப்போ எப்படி இருக்கோம் நாம, அதையும் விட இத்தனை பொண்ணுங்களை எப்படி கௌரவமா கரைசேர்த்து இருக்கீங்க. இந்த காலத்துல எத்தனை பசங்க இப்படி பண்றாங்க? உனக்கு மனசாட்சியும் இல்லை, பாசமும் இல்லை, நன்றியும் இல்லை”    
“இங்கே வீடு பக்கம் திரும்பியே பார்க்க மாட்டாங்க. வயசான காலத்துல உன்னால மத்த எல்லோரும் கஷ்டப்பட போறாங்க,  நீங்க எப்படியோ போங்க உங்களால அண்ணா எங்களையும் தள்ளி நிறுத்தப் போறான்” என்று படபட வென்று பொரிந்து தள்ளி விட்டாள்.
அவளின் சத்தம் வேறு அதிகமாய் வர, மகளை அடக்க முடியாது என்று புரிந்தவர், வேறு வேலை இருப்பது போல நகர்ந்து விட்டார்.
அதற்குள் அவளின் மற்ற தங்கைகள் வந்து “என்ன அக்கா?” என,
“ப்ச், இந்த அம்மாவை வெச்சிகிட்டு எனக்கே முடியலை, திரும்ப அண்ணா கிட்ட நல்லா வாங்க போறாங்க” என்று சலித்தபடி பேசினாள்.
இந்த பேச்சுக்கள் எதுவும் காதில் விழுந்திருந்தால், நிச்சயம் ரவி மிகுந்த கோபத்திற்கு ஆளாகியிருப்பான். கோபத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் எப்போதும் போல இன்னும் ஷர்மியிடம் இருந்து தள்ளி நிற்கவும் செய்திருப்பான்.
மீண்டும் இருவருக்கும் முட்டிக் கொண்டிருக்கும். ஆனால் அதிர்ஷ்ட வசமாய் அவனின் காதுகளுக்கு செல்லவில்லை. ஆனால் பெண்கள் அவளின் அம்மாவை பற்றி பேச அது அவர்களின் கணவன் மார் காதுகளிலும் விழ, அவர்கள் விவாதிக்க, அவர்கள் சந்தோஷை மறந்து போனர். அவன் இருப்பதை உணர்ந்து பேச்சை நிறுத்தும் போது அவனுக்கு விஷயம் புரிந்திருந்தது.
ஆனால் யாரிடமும் எதுவும் காண்பித்து கொள்ளவில்லை புரியாத மாதிரி இருந்து கொண்டான். எளிதில் கோபம் வராத சந்தோஷிற்கு அப்படி ஒரு கோபம் பொங்கியது.
ரவீந்திரனும் ஷர்மிளாவும் இது எதுவும் கவனத்தில் வராதவர்களாய் ஒரு இதமான மனநிலையில் இருந்தனர். ரவி ஷர்மி மீதம் வைத்ததை உண்டு முடிக்க.. மேலும் வைக்க வந்தவர்களிடம் “போதும்” என்று எழப் பார்க்க,
“இரு, இரு” என்ற பாட்டி இருவருக்கும் ஆலம் சுற்றி பின்னே எழுப்பினார்.
அவர்கள் எழுந்து கை கழுவி வரவும், ஷர்மி ஒரு இடத்தில் அமர்ந்து கொள்ள, ரவி பந்தியை பார்க்க சென்று விட, குட்டீஸ் தான் அத்தையை சுற்றி அமர்ந்து கொண்டிருந்தனர்.
பெண்கள் எல்லோரும் அவரவர் புகுந்த வீட்டு உறவுகளை, பார்க்கவும் பேசவும் அவர்களை உண்ண வைக்க அனுப்பவுமாய் இருக்க, உண்டு செல்பவர்கள் ஷர்மிளாவிடமும் வந்து சொல்லி தான் சென்றனர்.
புன்னகை முகமாய் அவள் தலையாட்டி கொண்டிருக்க, சந்தோஷ் வந்து அருகில் அமர்ந்து கொண்டான்.
“என்னடா அண்ணா முகம் ஒரு மாதிரி இருக்கு?” என்றாள் உடனே, அவளுக்கு தான் சந்தோஷின் சிறு வித்தியாசமும் தெரிந்திடுமே.
“ஒன்னுமில்லை” என்று தலையாட்டினான்.
யாரோ சொல்லிக் கொள்ள வர, “என்னவோ இருக்கு விடு, அப்புறம் சொல்லு” என்று விட்டாள். வந்தவர்கள் ஷர்மியிடம் சொல்லிக் கொள்ள, உடன் மாப்பிள்ளையாக வரப் போகிறவன் என்று சந்தோஷிடமும் சொல்லிக் கொள்ள, இப்படியாக நேரம் ஓடியது.
ஷர்மி மட்டுமல்ல கௌசியும் சந்தோஷின் முக சுணக்கத்தை கவனித்தாள். முகசுணக்கம் அதையும் விட, கௌசியின் பார்வையை சந்திக்க மறுத்தான்.
நேற்று நிச்சயம் முடிந்ததில் இருந்து கௌசி கண்ணில் படும் போதெல்லாம் சந்தோஷின் பார்வை உரிமையாய் தொடர்ந்திருக்க,  
இதோ அண்ணியின் வளைகாப்பில் அழகாய் பட்டுடுத்தி, அதி அழகியாய் கௌசல்யா வலம் வர, சந்தோஷின் கவனத்தை அவ்வப் போது சிதறடித்து இருக்க, இப்போ கண்களை சந்திக்க மறுக்க என்னவோ கௌசியின் மனம் கலவரமாக உணர்ந்தது.      
               
            
                           
          
       

Advertisement