Advertisement

அத்தியாயம் இருபத்தி ஐந்து :
ரவி வீடு வந்தவன், ஷர்மிளாவிடம் இந்த விஷயங்களை எல்லாம் சொல்லலாம் என்று தேட, மீண்டும் ஹாஸ்பிடலில் இருந்தது போல ஒரு ஒதுக்கம், அவனின் பார்வையை சந்திக்க மறுத்தாள்.
“ஷ், இப்போ என்ன?” என்று மனதிற்குள் சலித்து கொண்டவன், என்ன என்று யோசனை செய்ய காலையில் அவன் பேசியது கொண்டு தான் எனப் புரிந்தது.
“நீ உன் வாயை அடக்கப் போவதில்லை. உன் வாழ்க்கை நிம்மதியாக இருக்கப் போவதில்லை” என்று அவனுக்கு அவனே நொந்து கொண்டான்.
“ஷர்மி உன்கிட்ட சந்தோஷ் கல்யாண விஷயமா பேசணும்” என்று அழுத்தமாய். அதன் பிறகு தான் ரூமின் உள் வந்தாள்.
“ஊர்ல சொல்லி ஜாதகம் பார்த்துட்டேன். ஆனா அது உன் அண்ணான்னு தெரியாது. பொருத்தம் நல்லா இருக்கு, கௌசி கிட்ட கேட்டேன், அவ எனக்கு ஓகே ன்னா ஓகே சொல்லிட்டா, உங்கப்பா கிட்ட பேசிட்டேன் அவருக்கும் ஓகே”
“இப்போ உன்கிட்ட சொல்லிட்டேன். இங்க அப்பாகிட்ட சொல்லிட்டு ஊர்ல பேசிடட்டுமா? அதுல ஒரு சிக்கல் இருக்கு, எங்கம்மா முட்டுக் கட்டை போடுவாங்க, விசாலி அத்தையை அவங்க கிட்ட பேச சொல்லலாமா?” என்றான்.
தேர்ந்த பிசினெஸ்மென் அல்லவா? எங்கே எந்த காயை நகர்த்தி சுமுகமாய் திருமணம் முடிக்கலாம் என்று பார்த்தான்.
அந்தோ பரிதாபம்! ஷர்மிளா ஒத்துக்கொள்ளவில்லை. “அப்பாவை பேச சொல்றேன். சந்தோஷ்க்கு தங்கையா நான் பேசறேன். அவ்வளவு தான் மேல யாரும் பேசக் கூடாது”
“அவசரப்பட வேண்டாம், யோசிக்கலாம்” என்றான். ரவி அவனின் மனதில் அவனே எல்லாம் எல்லாம் பேசிக் கொண்டாலும், சிறு பிசிறு, ஒரு அபஸ்வரம் இருந்தது. அது சந்தோஷின் அப்பா, அப்பாவை போல அவன் இருந்து விட்டால் கௌசியின் வாழ்க்கை நரகம் அல்லவா?  
“முதல்ல அப்பாகிட்ட பேசிட்டு, அப்புறம் தாத்தா பாட்டிகிட்ட பேசிட்டு அப்புறம் அவங்களே அம்மா கிட்ட சொல்லிக்கட்டும். இது தானே எப்பவும் வழக்கம்”
“என்னவோ சந்தோஷ் சொல்ற வரை தோணலை, அவன் சொன்ன பிறகு தோணினது, கௌசி அவன் வாழ்க்கைல வந்தா நல்லா இருப்பான். முதல்ல மாதிரி ஃபிரண்ட்ஸ் கூட சுத்தறதில்லை, பார்ட்டி பண்றதில்லை, செலவழிக்கறது இல்லை, இந்த மாதிரி இருந்த சில குறைகளும் இல்லை, என் அண்ணான்னு நான் சொல்லலை. அவன் ரொம்ப நல்ல பையன். நீங்க கௌசியை நம்பி கொடுக்கலாம், எங்கப்பா மாதிரி இல்லை” என்றாள்.
ரவி வியப்பாய் பார்க்க, “நீங்க குறையா நினைச்சா இது மட்டும் தான் நினைப்பீங்கன்னு தோணினது” என்றாள்.   
“நான் இதை யோசிச்சேன், ஆனா என்னவோ எனக்கு சந்தோஷ் மேல ஒரு நம்பிக்கை இருக்கு, என் மனசு எப்பவும் சரியாய் தான் சொல்லும். ஆனா அது இல்லை. எங்கம்மா இதை சொல்ல வாய்ப்பிருக்கு” என்றான்.
“ஒஹ்” என்றவள், “ஆனா எனக்கு யாரோடையும் சண்டை போட முடியும்னு தோணலை. எனக்கு ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆகுது. அதுவுமில்லாம அப்பா பக்கம் தப்பு இருக்கு. எனக்கே ஒப்பாத போது நான் அவரை சப்போர்ட் பண்ணி பேச முடியாது” என்றாள் என்ன செய்ய என்று புரியாத பாவனையில்.
“நீ ஒன்னும் பண்ண வேண்டியிருக்காது. தாத்தா முடிவு தான். தாத்தா என்கிட்டே கேட்பார் நான் சொல்லிக்குவேன், நான் சொல்றது இந்த பேச்சு எல்லாம் வரும்ன்னு. நீ கேட்கும் போது அப்செட் ஆகவோ ஃபீல் ஆகவோ கூடாது இல்லையா, அதான் முன்னமே சொன்னேன்” என்றான்.
“அப்பா சைட் எல்லாம் ஒத்தை பசங்க, அப்போ பெருசா க்ளோஸ் சர்க்கிள் ரிலேட்டிவ் இல்லை. அப்படி பார்த்தா அதிக பழக்கமில்லைனாலும் எங்க ரிலேட்டிவ்ன்னு பார்த்தா அம்மா வீட்டு சைட் இருக்குற உங்க வீடு தான்”
“என்ன இருந்தாலும் எங்க அம்மா உங்க வீட்டு பொண்ணு, சந்தோஷ்காக பொண்ணு கேட்கற உரிமை இருக்கு, மீறி குடுக்க மாட்டேன்னு சொன்னா வேற யோசிக்கலாம். விசாலிம்மா முடியவே முடியாது. எங்கப்பாவோட அவங்க கூட நிக்கறது எனக்கு பிரச்சனை கிடையாது. ஆனா நாங்க கேட்டு இல்லாதது அவங்க கேட்டு வேண்டாம். எப்படி அத்தை பொண்ணு குடுக்காம போறாங்கன்னு நான் பார்க்கறேன்” என்றாள் உறுதியான குரலில்.
“நீங்க மட்டும் என்னை கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணிக்கலாம். நாங்க பொண்ணு கேட்டா உங்கம்மா ஒத்துக்க மாட்டாங்களா, கௌசிகிட்ட நீங்க ஓகே சொல்லுங்க” என்றாள் உடனேயே.
அவளையறியாமல் மீண்டும் அவனை குற்றம் சாட்டினாள். ஷர்மிளா ரவியை குத்திக்காட்ட சொல்ல வேண்டும் என்று சொல்லவில்லை, நீங்கள் செய்யலாம் எங்களுக்கு மட்டும் இதெல்லாம் பார்ப்பீர்களா என்பது போல தான் பேசினாள்.
ஆனால் ரவியின் மனதில் முனுக்கென்று ஒரு கோபம் பிரவாகமாக பொங்கியது. அவனின் அம்மாவிடம் பெண் கேட்க சொன்னான் கேட்கவில்லை. அவனே சென்று கேசவனிடம் கேட்டான், அவரும் ஒத்துக்கொள்ளவில்லை, மகளின் விருப்பம் என்று தானே விட்டார்.
மரியாதையான மறுப்புக்கள் சீற்றம் கொடுக்காது, இவளினது எப்போதும் அலட்சியப் பார்வை தானே. அதுவே என்னோடு மட்டுமே உன் திருமணம் என்று செயல்பட வைத்தது.   
என்ன நான் குறைந்து விட்டேன் என்ற எண்ணம் தான் எப்போதும். இப்போது கூட இன்னும் இவளின் வீட்டில் வீட்டில் வேலை செய்தவன் என்ற நினைப்பு தான் போல, அது தான் மலையளவு என்மீது பிடித்தம் இருந்தாலும் எப்போதும் விட்டு கொடுத்து பேசுகிறாள் என்று தோன்ற
“நீ எதுவும் பேசிவிடாதே” என்று வெகுவாக தன்னை கட்டுப்படுத்திக் கொண்டான்.  
முயன்று சாதாரணமாக காண்பித்து “சாப்பிட்டியா?” என்றான்.
ஷர்மிளா அதற்கு பதில் சொல்லாமல் தலை தூக்கி நேரம் பார்க்க அது ஏழரை என்று காண்பித்தது.
குறிப்பறிந்து “எட்டு மணிக்கு தானே சாப்பிடுவ, ஒரு வால்க் போகலாமா?” என்றான்.
போகலாமா வேண்டாமா என்று வெகுவாக யோசனை, அவள் யோசித்து முடிக்கும் முன்னமே அவன் இலகுவான உடைக்கு மாறி இருந்தான், வேஷ்டி டீ ஷர்ட், கூடவே “கிளம்பு” என்று வார்த்தையோடு.
“நீ கூப்பிட்டா நான் வரணுமா? மாட்டேன்?” என்று மனம் முரண்டு பிடிக்க, “போயேண்டி” என்று ஒரு பக்கம் சொல்ல, அவளின் மாறிய பாவனைகளை பார்த்து அவளை மேலே யோசிக்க விடவில்லை, “போகலாம்” என்று  நடக்க ஆரம்பிக்க, பின்னால் நடந்தாள்.
அவர்களின் வீடு இருந்த வீதியில் தான் நடந்தார்கள், பெரிய வீதி, எல்லாம் பங்களா வீடு தான், ஆனால் கேசவனின் வீடு இன்னுமே பிரம்மாண்டம் தான். பரம்பரை சொத்து மிக முன்னம் வாங்கியது. அதனால் அண்ணா நகர் ஏரியாவாகட்டும், வீடு இருக்கும் பரப்பளவு ஆகட்டும் மிக அதிகம். அதுவே இன்றைய நிலைக்கு பல கோடி பெறுமானமுள்ளது.
இவர்களின் வீடும் அந்த பகுதி தான். ஆனால் சற்று தூரத்தில், வாடகை ரவி சொன்னதில்லை, மிக அதிகம் தான். அவனுமே சில மாதங்களாக இங்கே தான் இனி தொழில் என்றாகி விட்டது. வீடு வாங்கலாம் என்று நினைத்து தான் இருந்தான்.
ஷர்மிளா கேசவனிடமும் சந்தோஷிடமும் பேசியிருக்க, அவனின் எண்ணத்தை உடனே செயலாக்க முடிவு செய்து விட்டான் ஷர்மிளாவின் பெயரில்.     
மெதுவாக நடக்க ஆரம்பித்தவன் அவனாகவே “நமக்கு வீடு வாங்கலாம்னு இருக்கேன், எங்கே வாங்கலாம், எந்த மாதிரி வாங்கலாம், இல்லை இடம் வாங்கியோ இல்லை பழைய வீடு வாங்கியோ புதுசா கட்டலாமா?” என்றான்.  
“நீங்க வீடு வாங்க என்னை ஏன் கேட்கறீங்க?” என்றாள் அலட்சியமாய்.
“நாம சேர்ந்து வாழப் போற வீடு, அப்போ உன்னோட சாய்ஸ் படி வெச்சிக்கோ. எனக்கு பெருசா இப்படி அப்படி இருக்கணும்னு கிடையாது” என்றான் பொறுமையாகவே.
“உங்க வீடு நீங்க எப்படி வேணா வாங்குங்க, எப்போ வேணா நீங்க என்னை வெளில போக சொல்லலாம். இதுல நான் சொல்ல என்ன இருக்கு?” என்று முகத்திலடித்தார் போல சொல்ல,  
ரவி எதுவுமே பேசவில்லை மௌனமாகி விட்டான்.
“இல்லை அப்படி எல்லாம் சொல்ல மாட்டேன்” என்று சமாதானமும் சொல்லவில்லை, “நீ தான் வீடு எப்படி வேண்டும் என்று சொல்ல வேண்டும்” என்று கட்டாயப் படுத்தவும் இல்லை.
“என்னை நம்பு, நம்பு” என்றா சொல்ல முடியும், நம்பிக்கை தானாய் வர வேண்டும். இவளுக்கு எப்போதும் என் மீது வராது. உண்மையில் நம்பிக்கையின்மை தானே இந்த திருமணத்தின் அடிப்படை என்று தோன்ற ஒரு கசந்த முறுவல் தான். நான் செய்த சில செயல்கள் அப்படி என்றாலும் அதற்கு காரணமும் நம்பிக்கையின்மை தானே. இதே யோசனைகள் தான் அவனின் உள்.       
திட்டுவான் சண்டையிடுவான் கடுமையாகப் பேசுவான் என்று நினைத்தாள். ஆனால் அப்படி எதுவும் செய்யவில்லை. நிச்சயம் சமாதானம் செய்வான் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் எதுவுமே செய்யவில்லை.
அதன் பிறகு அரை மணி நேரம் நடந்தனர், எந்த பேச்சும் இல்லை..
வீடு அருகில் வந்து விட்டதும், “குழந்தை பிறந்த பிறகு அவங்க கல்யாண பேச்சு பேசலாமா, இல்லை இப்போ பேசலாமா?” என்று கேட்டான்.
“குழந்தைக்கும் கல்யாணத்துக்கும் என்ன சம்மந்தம்? அது சும்மா நான் ஒரு பேச்சுக்கு சொன்னேன். அவங்க நேரம் காலம் கூடி வந்தா நடக்கட்டும், என்னால, எனக்காக எதுவும் தள்ள வேண்டாம். முடிஞ்சவரை சீக்கிரம் பண்ணிடுங்க” என்றாள் ஸ்திரமாக.
“தனியா இருக்குற மாதிரி ஃபீல் ஆகுது” என்று சந்தோஷ் சொன்ன பிறகும் தனியாய் விட மனதில்லை. கௌசி இல்லையென்றால் “இங்கே வந்து இருடா” என்று சொல்லி இருப்பாள்.
இப்போது கௌசி இருப்பதால் அதுவும் சொல்லவில்லை.
சமையலை சசிம்மா பார்த்துக் கொள்வதால், வாசன், கௌசி, ஷர்மி, ரவி நால்வரும் ஒருங்கே அமர்ந்து தான் உண்டனர்.
கௌசி தான் பேச, வாசனும் ஷர்மியும் பதில் கொடுத்தனர். ரவி எதுவுமே பேசவில்லை, கேட்கவில்லை, எதுவும் செய்யவில்லை.
உணவுண்டு வாசன் அவரின் ரூம் போக, ரவி பின்னோடு சென்றான். திருமணம் குறித்து பேசப் போகிறான் என்று புரிய, உண்டவுடனே உறங்க வேண்டாம் என்று நினைத்து, டீ வியில் படம் போட்டு அமர்ந்து கொண்டாள். அது ஹோம் தியேட்டருடன் கூடிய தனி ரூம்.  
அது ஒரு பழைய படம், அலிபாபாவும் நாற்ப்பது திருடர்களும், இவளை தேடி கௌசி வந்தவள், “என்ன அண்ணி இது பார்க்கறீங்க?” என்றாள்.
“ம்ம், நான் நிறைய மாயாஜாலப் பழைய படம் பார்ப்பேன், பாதாள பைரவி தான் எடுத்தேன், இது மாறினது, சரி இதுவே பார்ப்போம்னு உட்கார்ந்துட்டேன். உனக்கு போர் அடிக்குதா வேற பார்க்கலாமா?” என்று கேட்க,
“வேண்டாம், வேண்டாம், இதுவே நானும் பார்க்கறேன்” என்று கௌசி அமர்ந்து கொண்டாள். ஆனால் அவளுக்கு பத்து மணிகெல்லாம் தூக்கம் சொக்க, “அண்ணி நான் தூங்க போறேன்” என்று சொல்லி சென்று விட்டாள்.
“மாசிலா உண்மை காதலே
மாறுமோ செல்வம் வந்த போதிலே”
என்று பானுமதியும் எம் ஜி ஆர் ரும் பாடிக் கொண்டிருக்க, இவளை காணாமல் தேடி ரவி வந்தான்.
இவளின் அருகில் அமர்ந்தவன், “அப்பா கிட்ட பேசிட்டேன், உங்கப்பாவையும் பேச வெச்சிட்டேன். இனி அவங்க பேசிப்பாங்க. எதுவும் ப்ராப்ளம்னா மட்டும் நாம பேசிக்கலாம்” என்று சொன்னவன், அங்கேயே சாய்ந்து அமர்ந்து கண்களை மூடிக் கொண்டான் உறக்கத்திற்காக.
“நீங்க போய் படுங்க நான் பார்த்துட்டு வர்றேன்” என்றாள்.
“இல்லை இங்கயே இருக்கேன்” என்றான், குரலிலும் சோர்வு உடல் மொழியிலும் சோர்வு, அது அவளால் உணர முடிந்தது.   
ரவியின் வேலையின் அளவும் பளுவும் தெரியும், அவனுக்கு உறக்கம் மிக அவசியம் என்று புரிந்தவள், அவனை தள்ளி நிறுத்த வேண்டும் தனியாய் செயல் பட வேண்டும் என்ற முடிவு தான், ஆனால் வருத்த வேண்டும் என்ற எண்ணம் இல்லையே. அவனின் சோர்வு தாக்க “தூங்க போகலாம்” என்று எழுந்து கொண்டாள்.
தான் அவனை தேடுவதை போல அவன் தன்னை தேடுவதில்லை என்பது தானே அவளின் தலையாய குறை. ரவி எவ்வளவு தேடுவான் என்பதை காண்பிக்கும் சந்தர்ப்பமே இல்லை என்பதை விட அவனுக்கு காண்பிக்க தெரியாது.
அவளை திருமணம் செய்ய முடிவெடுத்த நாளில் இருந்து அவளை தவிர வேறு பிரதான சிந்தனை கிடையாது. மற்றது எல்லாம் இரண்டாம் பட்சம் தான்.
இதோ ஷர்மிளா சென்று ஹாஸ்பிடலில் படுத்துக் கொண்டாள். ஆனால் அவள் இல்லாத வீட்டிற்கு வர பிடிக்காமல் ஃபாக்டரியில் தானே இருந்தான்.     
காலையில் இருந்து அதையும் இதையும் யோசித்து, நிறைய வேலைகள் செய்து என்று அவனுக்கு மிகுந்த சோர்வு, உணவு கூட சரியாய் உண்ணவில்லை. ஷர்மியின் முகத் திருப்பல் அவனை வெகுவாய் அழுத்தியது.   
எப்போதும் ஷர்மியை ரவி தான் கவனித்து கொள்வான், வீட்டையும் அவன் தான் கவனிப்பான், அலுவலகமும் அவன் தான். உண்மையில் பெண்கள் மல்டி டாஸ்கிங், ஆனால் ஆண்கள் பெரும்பாலும் அப்படி கிடையாது. இங்கே ரவி தான் எல்லாம். ஷர்மிக்கு பெரிதாய் எந்த பொறுப்புக்களும் கிடையாது, ரவியை கவனிப்பது உட்பட. அவனது எல்லாம் தன்னை போல நடக்கும், உணவு கூட சேர்ந்து தான் உண்பர். அவர்கள் அவர்களே எடுத்து போட்டுக் கொள்வர்.  
அவனுக்கு என்ன பிடிக்கும்? எவ்வளவு உண்பான் என்று கூட இத்தனை நாட்களில் ஷர்மிக்கு தெரியாது. அவள் பெரிதாய் கவனித்தது இல்லை. ஆனால் ரவிக்கு முன்பும் ஷர்மியை தெரியும், இப்போது இன்னும் அக்கு வேறு ஆணி வேறாய் தெரியும்.
இன்னம் ஷர்மிக்கு பெரிதாய் ரவியை தெரியாது என்பது தான் உண்மை… அவனின் பழக்க வழக்கங்கள் அவனின் எண்ணங்கள் அவனின் செயல்கள் இப்படி.  
அவள் தனக்கும் உண்மைக்கும் இடையில் போராட ரவியை கவனிப்பது எல்லாம் இல்லை. தனக்கு, அவனின் மீதான் பிடித்தம்! உண்மை, அவனின் செயல்கள்! இப்படி ஒரு போராட்டாம். இடையில் சில காலம் வேறு எதுவும் நினைவு வராதாபடி அவளின் வாழ்க்கை அவனோடு. அவர்களுள் ஃபிசிக்ஸ், கெமிஸ்டரி, பயாலாஜி, மேத்ஸ் என்று எல்லாம் ஒத்துப் போக, இவளோ அவளுள் தலை தூக்கும் ஹிஸ்டரி, ஜியாகரபி, சிவிக்ஸ் என்று ஆராய்ந்து கொண்டிருந்தாள்.    
உள்ளே சென்றவள் தளர்வான உடை அணிந்து படுக்க ஆயத்தமாக ரவியோ படுத்து கண்மூடி இருந்தான், தன்னை போல கைகள் தலையை அவ்வப் போது தலையை பிடித்து விட்டது.
“தலை வலிக்குதா?” என்றாள் அவளையும் மீறி.
“ம்ம்” என்ற சத்தம் மட்டும்.
“மாத்திரை இருக்கா? எங்க இருக்கு எடுக்கறேன்!” என்றாள்.
“இல்லை, வேண்டாம்”
“வாக்கிங் போனப்போ நல்லா தானே இருந்தீங்க? இப்ப ஏன் வலிக்குது?” என்று கேள்வி கேட்க,
“தெரியலை” என்றான் ஒற்றை வார்த்தையாக.
அதற்கு மேல் அவளும் பேசவில்லை அமைதியாய் சென்று படுத்துக் கொண்டாள், ஆனால் நல்ல இடைவெளி விட்டு.
ஆம்! தனியாய் பழக வேண்டும் என்றால் முதலில் தனியாய் படுத்து பழக வேண்டும் அல்லவா.
மனதிற்குள் ஒன்றிலிருந்து வரிசையாக எண்ண ஆரம்பித்தாள் உறக்கம் வருவதற்காக, அது இரண்டாயிரத்தை தாண்டிய போது உறக்கம் அவளையும் மீறி அணுகியிருந்தது.
ஆனால் பக்கத்தில் படுத்திருந்தவனோ தலைவலியின் உச்சத்தில் இருந்தான், உறக்கமும் அணுகவில்லை!  
நேற்றைக்கு போல ஷர்மி அருகில் அணைத்து படுத்திருந்தாள், அவனின் மனது சமன்பாட்டு தலைவேதனையும் குறைந்திருக்குமோ என்னவோ ஆனால் அவள் தான் தள்ளி படுத்திருந்தாளே!
ரவியாய் சென்று அணைக்க தயக்கம் எல்லாம் இல்லை, ஷர்மி நன்கு உறங்குகிறாள். இதில் தான் அருகில் சென்றாலும், அசைந்து கொண்டே இருக்க வாய்ப்பு அதிகம், அவளின் உறக்கம் கெடும் என்று விட்டம் வெறித்து பல மணிநேரதிற்கு பின் தான் உறங்க முடிந்தது.    

Advertisement